5 டிசம்பர், 2010

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தென்னிந்திய திருச்சபையின்மேற்ரானியார் டானியல் தியாகராசா தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை பெண்கள் கல்வி அபிவிருத்தி மற்றும் ஆராய்சி நிலையத்தின் பணிப்பாளரும் பேராதனைப் பல் கலைக்கழக சமூகவியல்துறை விரிவுரையாளருமான திருமதி செல்வி திருச்செந்தூரன் கலந்து கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளான 2008, 2009 ம் அண்டுகளுக்கான மாணவாகளுக்கு பரிசளிப்பு நிகழ்வுகள் கல்வி விளையாட்டு ஓழுக்கம் மற்றும் மாகாண தேசிய மட்டங்களில் சிறங்த பெறுபேறுகளை பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றவாகள் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவாகள் என பலருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் கு‌ண்டு வெடி‌ப்பு : 6 பேர் பலி, 40 பேர் காயம்



தென்மேற்கு சீனாவின் குய்ஸு பகுதியில் உள்ள இணையத்தள மையத்தில் நிகழ்ந்த கு‌‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமுற்றுள்ளனர்.

குய்ஸு மாகாணத்தின் கைலி நகரத்தில் உள்ள இணையத்தள மையத்தி‌‌ல் சீன நேரப்படி நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு இந்த கு‌ண்டு வெடி‌ப்பு நிகழ்ந்துள்ளதாக அம்மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடி விபத்தில் இணையத்தள மையம் முற்றிலும் சேதமடைந்திருப்பதாகவும், 6 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்‌திரு‌ப்பதாகவு‌ம், 40 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெடி விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் பெருமழை; 25ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

வன்னிப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் 25000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். மீள்குடியேறிய மக்களின் வீடுகள் முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில் தறப்பாள் கூடாரங்களிலும் தற்காலிக வீடுகளிலும் த்ஙகியிருந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீண்டும் இவர்கள் அகதிகளாகியுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வான் பாய்கின்றன. இதனால் தாழ்ந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் வெள்ள அபாயத்துக்குள்ளாகியிருக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முரசுமோட்டை, மருதநகர், கல்மடு, மணியங்குளம், பாரதிபுரம் கிழக்கு, பொன்னகர், திருநகர் வடக்கு, புளியம் பொக்கணை, தருமபுரம் கிழக்கு, உழவனூர் மற்றும் பூநகரிப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பெரும்பகுதியும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைச்சிக்குடியிருப்பு, செல்வபுரம், மண வாளன்பட்டமுறிப்பு, கரும்புள்ளியான், பாண் டியன்குளம் மேற்கு, சிலாவத்தை போன்ற இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக் கின்றன. இதேபோல வவுனியா மாவட்டத் திலும் மன்னார் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி களிலும் மக்கள் வெள்ளப்பாதிப்புக்குட்பட் டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி களை அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் திடீர் ரத்து

இலங்கைக்கு மூன்றுநாள் விஜயமொன்ற மேற்கொண்டு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வருகை தரவிருந்த பிரித்தானிய வெளிவிகார (தெற்காசிய விவகாரங்கள்) அமைச்சர் அலிஸ்டெயார் பர்ட்டின் விஜயத்தை அந்நாட்டு அரசு இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இந்த வாரம் பங்களாதேஷ்,மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே அவர் தனது இலங்கைக்கான விஜயத்தை உடனடியாக இரத்துச் செய்துள்ளார். இதனை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் லண்டன் சென்றி ருந்த போது எழுந்திருந்த நிலைமைகள் மற்றும் இலங்கையில் பிரித்தானியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களையடுத்தே இவரின் விஜயம் இரத்துச் செய் யப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது. இலங்கைக்கான அவரின் விஜயத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் செல்லத் திட்ட மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தடுப்பிலுள்ள பதினோராயிரம் தமிழ் இளைஞர்களும் ஜெனிவா சாசனநடத்தப்பட வேண்டும்:வேர்னியா ஜுட்

இலங்கையில் அரச படைகளினால் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் 11,000 தமிழ் இளைஞர்கள் ஜெனீவா சாசனத்தின் அடிப்படையில் நடாத்தப்படுவதுடன் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து கொள்ளவேண்டும் என நான் கோருகிறேன்.

இவ்வாறு அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வேர்னியா ஜுட் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழு விபரமாவது:

எனது தேர்தல் தொகுதியிலுள்ள சிறிய ஆனால் பிரபலமான மக்கள் குழுமம் தொடர்பாக நான் பேசுகிறேன். சிட்னியின் ஸ்ரெயித்பில்ட் தேர்தல் தொகுதியிலுள்ள எனது சமூகத்திற்கு இந்தச் சிறிய மக்கள் குழுமம் அதிளவிலான பங்களிப்பினைச் செய்கிறது.

எனது இந்தத் தேர்தல் தொகுதியில் வசித்துவரும் தமிழர்கள் உறுதியான குடிமக்கள். கல்வி தொடர்பான காத்திரமான ஈடுபாடு, வேலையே கண்ணாயிருக்கும் பாங்கு, குடும்ப வாழ்வுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் தாம் வாழும் சூழலில் சிறந்த சமூகத்தினை உருவாக்குவது எனப் பல சிறந்த பண்புகளை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். எனது தேர்தல் தொகுதியிலுள்ள தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்விலும், கடமைகளிலும், தொழில் முனைப்புக்களிலும் ஏன் தங்களது சமூகம்சார் கட்டமைப்புக்களிலும் இந்தப் பண்புகளைத் திறம்படப் பிரயோகிப் பதை அவதானிக்க முடிகிறது. தங்களது பொருளாதார மற்றும் இதர தேவை களைப் பூர்த்திசெய்துகொண்டு தாம் வாழும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழுவதற்கு ஏதுவாக இவர்கள் அயராது உழைக்கிறார்கள். இவை தவிர இந்த மக்கள் பலதரப்பட்ட சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். மார் பகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நிதி திரட்ட லில் இவர்கள் அண்மையில் ஈடுபட்டிருந்த தையும் நான் அறிகிறேன். எனது தேர்தல் தொகுதியினைச் சேர்ந்த பிரசாந் செல்லத்துரை என்ற இளைஞன் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவுஸ்ரேலிய ஜிம்னாஸ்ரிக் அணியுடன் இணைந்து போட்டியிட்டிருக் கிறான். அணி சில்வர் பதக்கத்தினை வெல்லு வதற்கு பிரசாந் செல்லத்துரை முன்னின்று உழைத்திருக்கிறான் என்பதை நான் அறி கிறேன். அண்மையில் புதுடில்லியில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவின்போது இவன் இரண்டு தங்கப் பதங்கங்களைப் பெற்றிருக்கிறான்.

இந்தப் புறநிலையில் இந்தத் தமிழர்களின் தாயகமாம் இலங்கையில் இவர்களது உறவுகளுக்கு எதிரான போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை கடுந்துயருடன் நான் அறிந்து கொண்டேன். அத்துடன் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் இடம்பெயந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கின்ற போதும் கூரைகளற்ற வீடுகளில் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் நீதிமுறை போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள் என அறியமுடிகிறது.

போரின் இறுதி நாட்களில் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினது செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவினை அமைத்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மௌனம் காப்பது பற்றி அவுஸ்திரேலியத் தமிழர் அமைப்புக்களின் கூட்டமைப்பினது தலைவர் கலாநிதி விக்ரர் ராஜகுலேந்திரன் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழர் காங்கிரஸின் தலைவர் கலாநிதி சாம் பிறை ஆகியோர் என்னிடம் தங்களது அதிருப்தியினை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆதலினால் இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்புவிடுக்கப்படவேண்டும் என அழைப்பு விடுக்கும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து கொள்ளவேண்டும் என நான் கோருகிறேன்.

வடக்குக் கிழக்குப் பகுதியில் நிலவுகின்ற இராணுவமயப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதோடு அங்கு சட்டமும் ஒழுங்கும் மீளப்பெறப்படுவதற்கு வழிசெய்யவேண்டும், இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களில் குடிய மர்த்தப்படவேண்டும், இஸ்ரேலின் மேற்குக் கரைப் பாணியில மை ந்த சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதை உடன டியாக நிறுத்தவேண்டும், இலங்கையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதன் ஊடாக தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும், மற்றும் உண்மையான அமைதியும் இன நல்லிணக்கமும் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். இது போன்ற கோரிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கமும் மேற்குறித்த நாடுகளுடன் இணைந்து முன்வைக்கவேண்டும். சிறுபான்மை இனமொன்றுக்கான அடிப் படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நாடொன்றில் தங்களது தாயகத்தினை அமைப் பதற்கான போரின் மீது நம்பிக்கைவைத்துச் செயற்பட்டமைக்காக இந்த மக்கள் தண்டிக் கப்படுகிறார்கள்.

மிக மோசமாகத் தண்டிக்கப்படும் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு இந்த மக்கள் மேற்கினைக் கோருகிறார்கள். இந்த நிலையில் எங்களது ஆதரவினை வழங்குவதற்கு நாம் பின்னடிப்பது முறையற்றதல்ல. அப்பாவி மக்களைக் கொலைசெய்வது தவறென்றும் இந்தக் குற்றத்தினைப் புரிந்தவர்கள் யாரோ அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறுவதற்கும் நாங்கள் தயங்குகிறோம். தமிழர்கள் என்ற எங்களது நண்பர்களுக்கு நாங்கள் ஆபத்தில் உதவுவோம்.

நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்திருந்தால், சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கந்தான் தமிழ் மக்களுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பு என்பதை நான் முழுமையாக அறிந் திருந்தால், தமிழர்களது பரிதாப நிலை தொடர் பாக எதனையும் குறிப்பிடாமல் அந்த நாட்டி னது பிரதிநிதிகளுடன் கிரிக்கெட் விளையா டுவது முறையாகுமா என்ற கேள்வியினை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கேள்வி இந்த அவையிலுள்ள அனை வருக்குமானதே.

முடிவில் எங்களது பணிகளைத்தானே நாங் கள் செய்கிறோம் என எவரும் கூறிவிடமுடி யாது. விளையாட்டு, தொழில்துறை, வர்த்தகம் அல்லது அரசியல் என நாங்கள் எந்தத் தொழிலையும் செய்யலாம், அடிப்படையில் நாம் அனைவரும் மனிதர்களே.

அரசியலை அரசியல் வாதிகளிடம் மாத்திரம் நாங்கள் விட்டுவிடக்கூடாது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அரசியல் நிறைந்து கிடக்கிறது. ஆதலினால் எங்களது உறவு, கூட்டு மற்றும் வேலைத்தளம் ஆகியவற்றிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது.

ஆதலினால் தாம் விரும்பியதைத் தெரிவு செய்வதற்கான உரிமை மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு, அரச சேவைகள், நீதி மற்றும் பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்களில் நாட்டினது அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நான் இலங்கையின் ஆட்சியாளர்களைக் கோருகிறேன். முதன்மையான இந்த விடயத்தினை எனது கவனத்திற்குக் கொண்டு வந்த எனது தேர்தல் தொகுதியில் வசிக்கும் தமிழர்களின் சார்பாக எனது இந்தக் கோரிக் கைக்கு ஆதரவு வேண்டி அவுஸ்திரேலியப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு நான் நேரடியாகக் கடிதம் எழுதவுள் ளேன். இறுதியாக பிரசித்தி பெற்ற தமிழ் பழ மொழி ஒன்றைக் கூறி எனது இந்த வாதத்தினை நிறைவு செய்கிறேன். அதாவது 'கலகம் பிறந் தால் நியாயம் பிறக்கும்'. இலங்கைத் தமிழர் களது விடயத் திலும் இதுதான் நடக்கும் என நான் பிரார்த்திக்கிறேன்.
மேலும் இங்கே தொடர்க...

புதுக்குடியிருப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து படையினர் வெளியேற்றம்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து நேற்று வியாழக்கிழமை படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

கடந்த 30 வருடமாக விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைத்திருந்த காணி நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1990ஆம் தற்கொலை படைதாரியினால் குண்டு நிரப்பப்பட்ட வான் குறித்த முகாம் மோதப்பட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து முகாம் மீது தாக்குல் நடத்தின.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினரின் முகாம் மூடப்பட்டு அப்பகுதியில் கடமையில் இருந்த படையினர் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இந்திய பாகிஸ்தான் உறவுகள் ஒரு நேர் வெட்டுமுகம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு ராஜதந்திரி இந்திய வெளிநாட்டு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆவார். கடந்த மாதம் 25ம் திகதி கொழும்புக்கு வருகை தந்த இந்திய அமைச்சர் 27ம் திகதி கொழும்பை விட்டு புறப்பட்டார்.

அன்றைய தினமே, நான்கு நாள் விஜயமாக கொழும்பை வந்தடைந்தார் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி. அதாவது எமது ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர் முதலாவதாக இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு அரச தலைவர் இவரே.

வடக்குக்கான ரயில் பாதை நிர்மாணம், வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம், யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய ராஜதந்திர அலுவலகங்கள் திறப்பு, காங்கேசந்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி உட்பட பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் இந்திய அமைச்சரின் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்டன.

இவை தவிர இரு தரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பல்வேறு துறைசார் கூட்டு நடவடிக்கைகள் சார்பாகவும் முன் முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரமாம் ஆண்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பின்னரான 8 ஆண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக புரள்வு 5 மடங்காக அதிகரித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதியில் கடந்த வருடம் முதல் 50 சதவீத அதிகரிப்பு காணப்பட்டுள்ளதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு இந்தியா, இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு பாகிஸ்தான். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இந்திய உப கண்டத்தின் அங்கமாக விளங்கிய பாகிஸ்தான் 1947ல் தனி நாடாக சுதந்திரம் பெற்றது.

அன்றில் இருந்து இன்று வரை பாகிஸ்தானும் இந்தியாவும் கீரியும் பாம்பும் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தங்கள், மோதல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள், கண்டனங்கள், உளவு நடவடிக்கைகள் என்று எல்லாமே தாராளமாக இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் இடம்பெறுகின்றன. ஆனாலும் இந்த இரு நாடுகளின் முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவற்றுடன் நல்லுறவுகளை இலங்கை இப்போது பேணி வருகின்றது.

பாகிஸ்தான் ஜனாதிபதியின் அண்மைய விஜயத்தின் போது பாதுகாப்பு, ராஜதந்திரம், கலாசார, பொருளாதார, இருதரப்பு உறவுகளை கட்டி வளர்ப்பதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் செயற்படத் தொடங்கியது. இப்போது 350 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் இந்த வர்த்தகத்தை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா என்றுமே வலியுறுத்தி வந்திருக்கின்றது. 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு பொதியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் இந்திய அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தி இருக்கிறார்.

இலங்கையின் வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாரம்பரிய தொடர்புகளையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு சிங்கள தேசிய இயக்கங்களின் வயிற்றில் புளியைக் கரைத்து வார்த்து விட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள 6 1/2 கோடி தமிழ் மக்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் இன, மத, மொழி கலாசார தொடர்புகளை கொண்டுள்ளவர்கள்.

1983ம் ஆண்டு ஜே.ஆர். அரசின் அனுசரணையோடு இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிரான இன சங்காரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தமிழகமே கொதித்தெழுந்தது. எனவே தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கடப்பாடு ஒன்று இந்திய மத்திய அரசுக்கும் இருக்கின்றது.

இலங்கையின் இறுதியுத்தம் வெடித்த காலப்பகுதியில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கின. இந்தியா ராடர் கருவி போன்ற தாக்குதலுக்கு பயன்படுத்த முடியாத இராணுவத் தளபாடங்களை வழங்கியது.

இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை தொடர்பான இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இந்தியாவின் கோடிப்புறத்தில் இருப்பது இலங்கை. அங்கு தனித்தமிஸழப் போராட்டம் வெற்றி பெற்றால் அது தமிழ் நாட்டில் உள்ள பிரிவினைச் சக்திகளுக்கு உந்து சக்தியாக அமையும் என்பது இந்தியாவுக்கு தெரியாதது அல்ல.

அப்படியொரு நிலை ஏற்பட்டால் இந்தியாவின் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாட்டுக்கு குந்தகத்தை ஏற்படுத்தக் கூடிய சக்திகள் தமிழ்நாட்டில் வலுப்பெறும். எனவே புலிகளின் தனிநாட்டு போராட்டத்தை தடுக்க வேண்டிய கடப்பாடு பாரதத்துக்கு உள்ளது.

அதே வேளை இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கு முறை மற்றும் பாரபட்ச நடவடிக்கைகளை நீக்க வேண்டிய கடப்பாடும் அதற்கு உண்டு. ஆயுதப் போராட்டத்துக்கு அடிக்காரணிகளாக அமைந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், வேலை வாய்ப்பில் பாரபட்சம், சிங்களம் மட்டும் சட்டம், தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமையைப் பாதித்தமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

எனவேதான் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இலங்கை வாழ் தேசிய சிறுபான்மை இனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகின்றது. இல்லையேல் மீண்டும் பிரபாகரன்கள் உயிர் பெறக்கூடிய ஆபத்துக்கள் நிறையவே இருக்கின்றன.

இந்தியாதான் தமிஸழ இயக்கங்களுக்கு உதவியதாக ஒரு குற்றச்சாட்டினை சிலர் முன்வைக்கிறார்கள். அதில் உண்மையும் இருக்கின்றது. 1960, 1970, 1980 களில் இரண்டு மேலாதிக்க சக்திகள் உலகில் தமது செல்வாக்கு பிராந்தியங்களை ஏற்படுத்தும் பனிப்போரில் ஈடுபட்டிருந்தன.

அவை அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஆகும். இந்திய எல்லையில் அமைந்திருந்த பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக விளங்கியது. சோவியத் யூனியன் கூட்டுக்குள் இந்தியா இருந்தது. அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கும் சோவியத் யூனியனுடன் இந்தியாவுக்கும் இராணுவ ஒப்பந்தங்கள் கூட இருந்தன.

1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன இந்திய எதிர்ப்பு மற்றும் அமெரிக்க இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டினை எடுத்தார். இலங்கையில் இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு, வொயிஸ் ஒப் அமெரிக்க வானொலி நிலையம் போன்றவை அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் தமது பிரதேச ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்காக ஜே.ஆரின் ஆட்சிக்கு தலையிடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதற்கு அப்போது ஆட்சியில் இருந்த சுதந்திரக் கட்சி அரசுகள் சீனா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து நாடுகளினதும் வெளிநாட்டு கொள்கைகள் தத்தமது சொந்த நலன்களைக் கவனத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு இந்தியாவோ பாகிஸ்தானோ அல்லது இலங்கையோ கூட விதிவிலக்கல்ல. அந்த கட்டத்திலும் இலங்கையில் தனித் தமிழ்நாடு உருவாவதை இந்தியா ஆதரிக்கவில்லை. சீக்கியகாலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டவர் இந்திரா காந்தி.

புலிப் பிரிவினைவாதிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலியானவர் ராஜிவ் காந்தி. ராஜிவ் 1991 தேர்தலில் வெற்றி பெற்றால் தமக்கு ஆபத்து நேரும் என்பதாலேயே புலிகள் அவரைக் கொன்றனர்.

1994 ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா இலங்கை- இந்திய உறவுகளை சீர் செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் ஒருபடி முன்னேறி பயங்கரவாத சக்திகளை அழித்து ஒழிப்பதற்கான ஆயுத உதவிகளை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடமிருந்தும் தார்மீக உதவிகளை இந்தியாவிடமிருந்தும் பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் இருக்கும் புலிச்சார்பு, பிரவினைவாத சக்திகள் தமிழக மாநில அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் எத்தனையோ நெருக்குதல்களைக் கொடுக்க முனைந் துள்ளன. இவற்றையெல்லாம் மிகக் கெட்டித்தனமாகவும் புத்தி சாதுரியத்துடனும் ஜனாதிபதி மஹிந்த கையண்டார். இதுவே தீர்க்கமான வெற்றியை பெற்றுத் தருவதற்கு உதவியுள்ளது.

2006ல் மாவிலாறில் புலிகள் ஆரம்பித்த இறுதி யுத்தம்தான் 2009 மேயில் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு அழிவை ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியில் புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த எட்டு கப்பல்கள் கடலில் வைத்தே மூழ்கடிக்கப்பட்டன. இந்தியா வழங்கிய உளவுத் தகவல்கள்தான் இதற்குக் காரணம்.

“இலங்கை அரசு எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்பது இலங்கையைப் பொறுத்த விடயம். எந்த நாட்டுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் அது இலங்கை இந்திய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று கொழும்பில் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

இதேவேளை “சில நாடுகளைப் போன்று வெறுமனே வந்து போகும் ஒரு நாடல்ல பாகிஸ்தான். இலங்கையின் நன்மை தீமையான சந்தர்ப்பங்களில் என்றுமே ஒரு விசுவாச நண்பனாக பாகிஸ்தான் இருந்து வந்துள்ளது” என்று அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இருவரின் கூற்றுக்களும் எங்கோ உதைக்கின்றதல்லவா?

ஏட்டிக்குப் போட்டியான நாடுகளை கூட அரவணைத்துச் செல்லும் ஜனாதிபதியின் வழி நடத்தல் பாராட்டுக்குரியதே.
மேலும் இங்கே தொடர்க...

நாடு முழுவதும் தொடர் மழை: நீர்த்தேக்கங்கள் நிரம்பின விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் நேற்று அதிகாலை திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொடர்பாடல் அதிகாரி

பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். 2005ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக நேற்று விக்டோரியா நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன. மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தினை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவர் தினகரனுக்கு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக 13 ஆயிரத்து 440 குடும்பங்களைச் சேர்ந்த 57,890 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்த 6047 பேர் 46 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பலர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.

மேல் மாகாணத்தில் காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இந்தியாவின் தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளபோதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்தி, வடமேற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்வதுடன் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அஸ்வர் சபையில் பாராட்டு

லேக் ஹவுஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை. மாறாக அந்நிறுவனம் அதன் தலைவர் பந்துல பத்மகுமார தலைமையில் இலாபமீட்டும் நிறுவனமாக இயங்குகிறது. கடந்த வருடம் மட்டும் மூன்று மில்லியன் ரூபாவை இலாபமாக இந்நிறுவனம் பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் சபையில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். சீலரட்ண செனரத், மஹிந்த அபேசிங்க, தில்லைநாதன், செந்தில்வேலவர் போன்ற திறமையா னவர்களால் அந்நிறுவனம் புத்தெழுச்சி பெற்றுவருகிறது. பத்திரிகைகளின் தரம், விற்பனை என்பன உயர்வடைந்துள்ளது.

எனவே லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பாக குற்றம் சாட்டவோ அல்லது விமர்சனம் செய்யவோ எதிர்க்கட்சியினருக்கு அருகதை கிடையாது என்றும் அஸ்வர் எம்.பி. தனதுரையில் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதியைத் தொலைத்துவிடாதீர்கள் புலம்பெயர் தமிழருக்கு பிரபா, திகா வேண்டுகோள்


பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபா கணேஷன் மற்றும் பீ. திகாம்பரம் ஆகியோர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தனர்.

புலம்பெயர் தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக இருந்தால், வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டுமென்று நேற்று (04) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரித்தானியாவின் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்றிருந்த ஜனாதிபதிக்கு எதிராக புலம் பெயர்ந்தவர்களில் ஒரு சிலராலும் சில சிங்கள அமைப்புகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் தெரிவித்தார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில்:

இன்றைய யுத்தத்திற்கு பின்பான காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிப்படைவது இலங்கை நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழ்மக்களேயாகும். இதனை உணர்ந்து இப்படியான செயல்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்துவது ஆரோக்கியமானதாகும்.

யுத்தத்திற்கு முன் தமிழர்களை சிங்கள மக்கள் சந்தேக கண்ணோட்டத்தில்தான் நோக்கினார்கள். அனைத்து தமிழர்களையும் புலிகளாகவே நோக்கினார்கள். இதனால் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் மிகவும் இன்னலுக்குள்ளானார்கள். இதனை இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் அனுபவித்துள்ளோம்.

இன்று யுத்தம் நிறைவுற்று விடுதலைப் புலிகள் முற்றாக வீழ்ச்சியடைந்து போயுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் யுத்தத்திற்கு பின்னரான கடந்த ஒரு வருட காலத்தில் தமிழ் மக்களை சகோதர மனப்பான்மையுடன் சிங்கள மக்கள் பார்க்க தொடங்கியுள்ளார்கள். இரு இனங்களுக்கிடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகின்றது. இலங்கையர் நாங்கள் என்ற நிலைப்பாட்டில் அபிவிருத்தி நோக்கி நாம் அனைவரும் கைகோர்த்து செல்ல தேவையேற்பட்டுள்ள இந்த தருணத்தில் புலம் பெயர்ந்த ஒரு சிலரது செயல்பாட்டினால் மீண்டும் சிங் கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதி ரான நிலைப்பாட்டை இது ஏற்படுத்துகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் உடன் பிறப்புகளுக்கு நாம் விடுக்கும் அன்பான வேண்டுகோள், தயவு செய்து எமது இன்றைய அரசியல் கள நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். உண்மையிலே எமது இலங்கை மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பாட சாலைகளை கட்டியெழுப்ப வேண்டும். அங்கு வீடுகள் இன்றி வசிப்பவர்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி அப்பகுதிகளில் தமது முதலீடுகளை செய்து பொருளாதார அபிவிருத்திகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் எமது பிரச் சினை எமது ஜனாதிபதி மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு சக்திகள் எமக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. எவ்விதமான தீர்வோ, அபிவிருத்தியோ எமது ஜனாதிபதி அவர்களுடன் பேசியே தீர்க்க வேண்டும் என்பது இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இதனை புலம் பெயர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

திகாம்பரம் எம்.பி.

நாடாளுமன்ற உறுப்பினர் பீ. திகாம்பரம் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய நிலையில் எத்தனையோ இழப்புக்களையும் சோகங்களையும் தாண்டி யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறி விக்கப்பட்டுள்ளது. ஆனாலும், யுத்தம் தொடர்பான தரப்பினர் இன்னும் சந்தேகக் கண்களோடுதான் ஒருவரை ஒருவர் பார்த்து வருகின்ற நிலைமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அவசர கால சட்டம் ஓரேடியாக நீக்கப்படாது படிப்படியாக சரத்துக்கள் நீக்கப்பட்டு வருகின்றன. நாமும் அதனை வலியுறுத்தி எமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம்.

வடக்கு, கிழக்கு நோக்கி இலங்கை அரச இயந்திரம் செயற்பட ஆரம்பித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற மீள்கட்டுமாண வேலைத்திட்டங்கள் விமர்சனங்களுக்கு மத்தியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறைந்த பட்சம் முகாம், கூடாரங்களில் இருந்து வெளியேறி தமது சொந்த காணிகளில் சொந்த மண்ணில் தமது வாழ்வை ஆரம்பிக்கும் நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.

வடக்கு, கிழக்கு மக்களை பொறுத்த அளவில் அவர்கள் அரச தரப்பினருக்கு ஆதரவாகவுள்ள அரசியல் கட்சிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசியல் கட்சிக்கும் வாக்களித்துள்ளார்கள். இலங்கையின் ஏனைய சிறுபான்மை கட்சிகளான மலையக கட்சிகளாகிய நாங்களும் முஸ்லிம் கட்சிகளுமே இன்று அரசாங்கத்துடன் நல்லிணக்கப் போக்குடன் செயற்படுவதற்கு முடிவெடுத்து செயற்பட்டு வருகிறோம்.

வெகு தொலைவில் இருந்து கொண்டு ஒரு நாள் எதிர்ப்பை தெரிவித்து பகைமையை வெளிப்படுத்துவதனால் இங்கு சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் வன்னி மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மை என்ன? ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு மக்கள் அனைவரினதும் எண்ணங்களைத்தான் லண்டன் எதிர்ப்பு வெளிப்படுத்தியதா? இந்த எதிர்ப்புகளினால் அடையப்பட எத்தணிக்கும் இலக்குகள் எவை?

ஏற்கனவே அரசுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து செயற்பட வடக்கு, கிழக்கு அரசியல் அமைப்புகள் முன்வந்திருக்கும் நிலையில் அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியை விடவும் மக்கள் விடுதலை முன்னணியினரை விடவும் கடுமையான எதிரணியாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசுடனான எதிர்கால புரிந்துணர்வு செயற்பாட்டுக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கும் இன்றை அரசியல் சூழ்நிலையில் இந்த லண்டன் எதிர்ப்பு போராட்டமானது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆனால் தமது சுயலாபங்களை அடையும் நிகழ்ச்சித் திட்டத்தில் செயற்படும் எந்த சர்வதேசமும் பாதிப்புற்ற மக்களுக்காக முன்வரவில்லை என்கின்ற கசப்பான பாடத்தை நாம் கற்றுக்கொண்டுள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு: முல்லை, கிளிநொச்சியில் மக்கள் கண்டனப் பேரணி கடைகள் பூட்டு: நகரெங்கும் கறுப்புக்கொடிகள் சமாதானத்தை குலைக்காதேயென






பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர் குழுவொன்றினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அசெளகரியம் ஏற்படுத்தியமைக்கு எதிராக வடக்கில் பல இடங்களில் நேற்று (04) தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். புலம்பெயர்ந்த ஒரு பிரிவு தமிழர்களின் செயலைக் கண்டித்து வர்த்தக நிலையங்களை மூடியும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டும் வடக்கில் தமிழர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் கொடும்பாவிகளையும் மக்கள் எரித்துள்ளனர்.

“பயங்கரவாதம் வேண்டாம்? நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கெடுக்காதீர்கள்! எமக்கு சமாதானமே வேண்டும்” என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

கிளிநொச்சியில் நேற்றுக்காலை 10 மணிமுதல் கடைகள் பூட்டப்பட்டன. நகரெங்கும் கறுப்புக் கொடிகள், பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. சந்தைப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து தண்ணீர்த் தாங்கி அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புலம்பெயர் தமிழர்கள் சிலரின் செய்கைக்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் எழுச்சியொன்றை

காணக் கூடியதாக இருந்தது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை நேற்று ஸ்தம்பிதமடைந்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, வள்ளுவர்புரம், ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு செயலகத்திற்கு முன்பாகக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர் தமிழர்களின் செயலைக் கண்டித்துக் கோஷமெழுப்பினர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். சிலர் அவ்விருவரின் உருவப் பொம்மைகளுக்குத் தடியால் தாக்குதல் நடத்தினர்.

நேற்றைய மக்கள் எழுச்சியில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர் குழுவொன்றினால் ஜனாதிபதியின் லண்டன் விஜயத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி அரசியல் வாதிகள் மத்தியிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதாக இருந்தால், அவர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வந்து வீடுகளையும் பாட சாலைகளையும் மீளக் கட்டியெழுப்பலாம். பாதைகளைப் புனரமைக்கலாம்.

அதனை விடுத்து தமிழ் மக்களுக்கு மேலும் நெரு க்கடிகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பி. திகாம்பரம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

புலம்பெயர் தமிழர்கள் சிலரின் செயற்பாடுகள், அபிவிருத்தியைச் சீர்குலைக்குமென்றும், மீளக்கட்டியெழுப் பப்பட்டு வரும் தமிழ், சிங்கள நல்லுறவைப் பாதிக்குமென்றும் சுட்டிக்காட்டிய அவர் கள், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வாழ் தமிழர்கள் தொடர்பில் இனியாவது தீர்க்கதரிசனத்துடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.

தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் பிறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...