11 டிசம்பர், 2009

சிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு


தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஒரு பகுதியினரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிடின், தான் சுயேட்சையாகக் களமிறங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார். அவரது கருத்துக்களின் வீடியோ காட்சியினை நாம் இணைத்திருந்தோம்.

இது தொடர்பாகப் பதில் கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"எமது கட்சியின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என இறுதியாக நடைபெற்ற எமது கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை திசை திருப்புவதற்காக ஒரு பகுதியினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார். அதற்காகவே தன்னிச்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதாக அவர் கூறி வருகிறார். எனினும் எமது கட்சியின் முடிவு அதுவல்ல" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
உள்நாட்டு-வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களை இணைத்து அரசியல் நகர்வு: த.ம.வி.பு


மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ்ப் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைவரையும் நினைவில் நிறுத்தி, எமது இன்றைய அரசியல் நிலைப்பாட்டை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

எமது முன்னோர் விட்ட தவறுகளாலும், தவறான கணிப்பீட்டாலும், மற்றும் துரோகங்களாலும் எமது மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பின்னடைந்து, இன்று எமது மக்கள் சொல்லில் அடங்காத துயரத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.

இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம்.

நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும், எமக்கான அரசியல் உரிமைக்காகவும் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்கான வழியாகவும் பயன்படுத்த வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும்.

இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்பிக்கை மாகாண சபை முறைமையாகும். ஆனாலும் இம்மாகாண சபைக்கென பரிந்துரை செய்யப்பட்ட குறைந்தபட்ச 13 ஆவது அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையிலேயே நாம் உள்ளோம்.

தமிழ் மக்களுக்கென கொண்டுவரப்பட்ட மாகாண சபை சுமார் 20 வருடங்களுக்கு பின்பே அம்மக்களினால் அனுபவிக்கக் கிடைத்தது. எனினும், அதற்கான முழுமையான அதிகாரங்கள் இல்லாமலும் சுயாதீனமாக செயற்பட முடியாத அதிகாரக் குறுக்கீடுகளும் உள்ள நிலையிலேயே மாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இழப்புக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

எனவே தான் இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு ராஜதந்திர ரீதியில் சிந்தித்து 13 ஆவது அரசியல் அதிகாரங்களை தாண்டிய இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எம்மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அதிகாரங்களுடனான அரசில் தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இதற்கான அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் எம்முடன் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கரு ஜயசூரிய இன்று மட்டக்களப்பு விஜயம்:த.தே.கூ உறுப்பினர்களுடனும் சந்திப்பு

தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.இவ்விஜயத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து அவர் ஆராய்ந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்ணம் சசிதரன் (மாகாண சபை உறுப்பினர்) இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே ,அலோசியஸ் மாசிலாமணி ,மாவட்ட பிரதி முகாமையாளர் எம்.எல்.அப்துல் லத்தீப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா தமது கட்சி முன் வைத்தமைக்கான காரணங்கள் குறித்து கரு ஜயசூரிய விளக்கமளித்தார்.

"தேர்தல் காலத்தில் ஆளும் கட்சியினரால் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சந்திக்க வேண்டி ஏற்படலாம். இதற்கெல்லாம் ஜனநாயக ரீதியில் நாம் முகம் கொடுக்க வேண்டும் " என்றும் இச்சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கட்சியின் பிரமுகர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமது கட்சி பிரமுகர்கள் ,ஆதரவாளர்களிடமிருந்து பெறும் கருத்துக்களை எதிர்வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தான் முன் வைக்கவிருப்பதாகவும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
இன்று கட்டுப்பணம் செலுத்தினார் ஜெனரல் பொன்சேகா









சார்பில்
பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது
12,000 அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? : விக்கிரமபாகு கேள்வி


"நாட்டில் தற்போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது? எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது எதுவும் எமக்குத் தெரியாது.

நாட்டை சிறைக்கூடமாக்கிவிட்டு ஒரு தேர்தல் அவசியம் தானா?" என இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பினார்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்கிரமபாகு மேலும் குறிப்பிடுகையில்,

"பெருந்தொகையான அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுடைய அடையாளங்களைக் காப்பதற்காக, தங்களுடைய உரிமைகளைப் பேணுவதற்காக குரல்கொடுத்தோரை எவ்வாறு கைது செய்ய முடியும்?

தமது மக்களுக்கு உணவில்லை, துயரத்துடன் இருக்கிறார்கள் என எழுதிய திஸ்ஸநாயகம் சிறை வைக்கப்பட்டார். என்னை விட குறைவான வார்த்தைகளே அவர் பேசினார். அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக விடுவிக்குமாறு நாம் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள் : மனித உரிமைத் தினத்தில் தாய்மார் வேண்டுகோள்


"எமது பிள்ளைகளின் படங்களை ஏந்திய வண்ணம் ஊர் ஊராகத் தேடுகிறோம். இறுதிக் கிரியைகள் செய்வதா, இறுதிவரை தேடுவதா என்று தெரியவில்லை. மனசாட்சியுள்ள உங்களை மன்றாடிக் கேட்கின்றோம். தயவு செய்து எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள்..." என காணாமல் போனோரின் தாய்மார் நேற்றுக் கதறியழுது வேண்டுகோள் விடுத்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று, காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினரால் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு ஹைட் பார்க் மைதானத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமானது.

தமது பிள்ளைகள், கணவன், பெற்றோர் என காணாமல்போன அனைவரினதும் உறவினர்கள் உட்பட பலர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் விசேட கண்காட்சியுடன், கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவினர்கள் கதறியழுத வண்ணம் தமது உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர்.

"மனித உரிமைகள் தினம் இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை வலியுறுத்தும் தினத்தில் நாம் எமது சொந்தங்களை இழந்து தவிக்கிறோம்.

எதற்காகக் கைது செய்தார்கள், எங்கே போனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றி எந்தவொரு செய்தியும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதை மட்டுமாவது உறுதிப்படுத்துங்கள்" என கலந்து கொண்டோர் மனமுருக கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேலிடமிருந்து 6 கப்பல்கள் அடுத்த வருடம் கொள்வனவு



சூழல் நிறைவடைந்த நிலையில், வேகமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய 6 கப்பல்களை அடுத்த வருடம் இஸ்ரேலிடமிருந்து கடற்படை கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகக் கடற்படை கொமாண்டர் வைஸ் அட்மிரல் திசேர சமரசிங்க இன்று காலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் ஊடுறுவதைத் தடுப்பதற்கேற்ற வகையில், பலத்த காவல் நடவடிக்கையில் இவை ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை இலங்கை மீனவர்கள் குழு ஒன்று இந்திய கரையோர காவல்துறையைச் சேர்ந்த இருவரைப் பணயம் வைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்திய கடற்பரப்புக்குள் பிரவேசித்த இந்த மீனவர்களை கரையோர காவல்துறையினர் கைதுசெய்ய முற்பட்டவேளை, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிய இலங்கை மீனவர்கள் அவர்களைப் பணயம் வைத்ததாக கடற்தொழில் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 7 படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அதில் உள்ளவர்களைக் கைதுசெய்ய முற்பட்ட இரண்டு கரையோர காவல்துறையினரை குறித்த படகுகள் சுற்றிவளைத்ததுடன் அவர்கள் இருவரையும் பணயம் வைத்ததாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனவர்கள் பின்னர் இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் இங்கே தொடர்க...