15 மே, 2010

தமிழ் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும் படையினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பயங்கரவாத யுத்தத்தை வெற்றி கொண்டது போன்று தமிழ் மக்களின் மனதை வெல்வதுடன், அவர்களின் வளமான வாழ்வை அபிவிருத்தி செய் வதிலும் படையினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத் துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்று கையில், அழகான எமது இலங்கைத் தீவில் மீண்டும் அழகொளிரும் தருணம் ஏற்பட்டுள்ளதுடன் சமாதானப் பூக்களும் பூக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கையில், தற்போது பயங்கர வாதம் நீக்கப்பட்டு மூவின மக்களும் அச்சமின்றி வாழக்கூடியதொரு சூழல் தோன்றியுள்ளது. இவ்வளவு காலமும் நிலவி வந்த பயங் கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட் டுள்ளதுடன், உயிர் அச்சுறுத்தல் நீங்கப்பெற்று மக்கள் சந் தோஷமாகவும் அமைதியாகவும் வாழ் கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான தலைமையின் கீழ் மக்கள் இன்று நிம்மதிக் காற்றை சுவாசிக்கக் கூடிய வகையில் சூழ்நிலையை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதான முன்னெடுப்புக்களுக்காக அழைத்திருந்த போதும் அதனை மறுத்த புலித் தலைமை சமாதான முன்னெடுப்பு களை முறித்துக் கொண்டது.

இதனால் தமிழ் இளைஞர்கள் விரும் பியும் விரும்பாமலும் பலாத்காரமாகவும் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை க்குத் தள்ளப்பட்டனர். போரின் மீது எமது மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில் நலன்புரி முகாம்களில் அவல வாழ்வு வாழ வேண்டிய அவலம் தோன்றியது.

எனவே பயங்கரவாதத்தால் உயிரிழந்த அத்தனை பேரையும் இன்றைய நாளில் நினைவுகூரும் அதேவேளை கொடும் போரின் போது எமது மக்களுக்கு படையினர் வழங்கிய பல்வேறு உதவி வேலைத் திட்டங்களுக்காக நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.

பயங்கரவாத யுத்தத்தை படையினர் எப்படி வெற்றி கொண்டனரோ அதே போன்று உயிர், உடமைகளை இழந்த நிலையில் மீள்குடியேறி வரும் மக்களின் மனங்களை வெல்வதுடன் அவர்களது எதிர்கால வளமான வாழ்வின் அபிவிருத் திக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் இயக்கத்தின் சார்பில் கடந்தகால அழிவு யுத்தத்தில் பங்கேற்றிருந்த எமது இளைஞர், யுவதிகள் கூடிய விரைவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்படல் வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றங்கள் துரிதமாக முன் னெடுக்கப்படல் வேண்டும். புனர்வாழ் வளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் அவர் களது குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழும் நிலை விரைவாக ஏற்பட வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் சேலைன் உற்பத்தி பிரான்ஸ் உதவியுடன் பூர்வாங்க பணிகள்

இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடுமென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அடுத்த ஆறு மாத காலத்தினுள் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமென்றும் அமைச்சர் சிறிசேன தெரிவித்தார்.

சேலைன் உற்பத்திக்கென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 6.4 மில்லியன் யூரோ கடனாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதன்படி ஒரு வருடத்திற்குத் தேவையான 7.2 மில்லியன் சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும். இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்யவென வருடாந்தம் 260 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.

இதேவேளை அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென விமானப்படை விமானம் மூலம் 37 ஆயிரம் கிலோ சேலைன் இந்தியாவிலிருந்து தருவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த 17 ஏற்பு




ஈரானில் உச்சி மாநாடு 17 .ம் திகதி ஆரம்பம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் (17) ஆரம்பமாகும் ஜீ – 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பை ஏற்கின்றார்.

ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார்.

ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

ஜீ – 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஜீ – 15 அரச தலைவர்களின் 14 ஆவது உச்சி மாநாடு நாளை (17) ஆரம்பமாகிறது. நேற்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிரேட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய ஜீ - 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது இதன் நோக்கமாகும்.

பதினைந்து நாடுகளுடன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஈரான், அல்ஜீரியா, ஆர்ஜன்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஜெமெய்கா, மெக்ஸிகோ, கென்யா, நைஜீரியா, பேரு, செனகல், இலங்கை, வெனிசுலா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் உலக சனத்தொகையில் 1/3 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன் மசகு எண்ணெய் உற்பத்தியில் 25% இந்த நாடுகளால் மேற்கொள்ளப் படுகின்றன. நாளை ஆரம்பமாகும் 14 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் தெஹ்ரான் சென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசியக் கட்சியினுள் கொதிநிலை; ரணிலின் தலைமைக்கு எதிர்ப்பு உக்கிரம்




ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன.

கட்சியின் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளும் கருத்து முரண்பாடு களும் கொதிநிலையை அடைந்துள் ளதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியின் தலைமைப் பொறுப்பு உட்பட பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டுமென சிரேஷ்ட உறுப்பினர்கள் மறுசீரமைப்பு யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் கட்சித் தலைமைப்பீடம் மீது நிதி மோசடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின்போது வெளிநாட்டில் இருந்து வந்த 300 கோடி ரூபா பணத்தில் 200 கோடிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லையென உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். 100 கோடி ரூபா மாத்திரமே பிரசாரப் பணிகளுக்காக செலவிடப்பட்டதாகவும் மிகுதி 200 கோடி மாயமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் தலைமைப்பீடத்திடம் விசாரணை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் கட்சியின் உட்பூசல்கள் காரணமாக, நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்து சின்னாபின்னமாகும் நிலை ஏற்பட்டு ள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ‘வாரமஞ்சரி’யிடம் கவலை தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி உள்ளார். கட்சியை வழிநடத்தும் ஆளுமையையும், வல்லமையையும் தற்போது இழந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து மாற்றுவதற்கு மேற்கொண்டு வரும் சகல முயற்சிகளையும் முறியடித்து வருகிறார்.

பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பும்பட்சத்தில் தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாரென்று கூறுகிறார். ஆனால் கட்சியில் அனைவருமே அவர் விலக வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அவர்தான் விலக விரும்புகிறாரில்லை’ என்றும் அவர் கூறினார்.

தலைமை உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யவேண்டுமென கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும், இல்லையென்றும் இருவிதமான அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஒரு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக்கூட உரியவாறு வெளிப்படுத்த முடியாத ஓர் அரசியல் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேநேரம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிலிருந்து வந்தவுடன் மறுசீரமைப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அந்தச் சந்திப்பின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

சுமுக நிலை நோக்கி முன்னேறுவோம்

பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படை களிலும் கணிசமான தமிழர்கள் பணி யாற்றிய ஒரு காலம் இருந்தது. இன் றைய இளம் சந்ததியினருக்கு இது தெரியாது. தமிழர் கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற பிரசாரத்தை இவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்க் குழுக்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னரே பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படை களிலும் தமிழரின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலத்தில் இடம் பெற்ற ஊடுருவல்கள் காரணமாகப் பொலிஸ் சேவை யிலும் பாதுகாப்புப் படைகளிலும் தமிழர்களைச் சேர் த்துக்கொள்வது குறைந்தது. தமிழர்கள் இச் சேவைக ளில் சேர்வதும் குறைந்தது.

பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படைகளிலுமுள்ள தமிழர்கள் பலரைத் தமிழ் ஆயுதக் குழுக்கள் கொலை செய்த பின்ன ணியில் இச்சேவைகளில் சேர்வதற்குத் தமிழர்கள் முன் வரவில்லை.

பாதுகாப்புப் படைகளிலும் பார்க்கப் பொலிஸ் சேவை பொதுமக்களுடன் நேரடியான தொடர்பு கொண்டுள் ளது. பொதுமக்களின் மொழியில் அவர்களுக்குச் சேவை யாற்ற வேண்டிய கடப்பாடு பொலிஸ் சேவைக்கு உண்டு.

தமிழ் மக்களின் முறைப்பாடுகளைப் பொலிஸ் நிலையத்தில் தமிழில் பதிவு செய்வதற்கு இயலாதிரு ப்பது பற்றிக் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியதை யடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பல பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதிவு செய்யப் படும் நடைமுறை தொடங்கியது.

பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் சேவையில் தமிழர்களை சேர்த்துக்கொள்ளும் நடைமுறையை இப்போது ஆர ம்பித்திருக்கின்றது. பொலிஸ் சேவையில் சேர்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஆறாயிரத்துக்கு மேற் பட்டோர் விண்ணப்பித்திருந்த போதிலும் நேர்முகப் பரீட்சையில் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட் டமாக 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல் லூரியில் பயிற்சி பெறுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஆறாயிரம் பேர் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்ததும் 500 பேர் தேர்ந்தெடு க்கப்பட்டதும் சாதாரண விடயமல்ல.

ஆயுதக் குழுக் களுக்குப் பயந்து பொலிஸ் சேவையில் சேர்வதைத் தவிர்த்து வந்த தமிழ் மக்களிடமிருந்து ஆறாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதும் பொலிஸ் திணை க்களம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 500 பேரைச் சேவைக்குச் சேர்த்திருப்பதும் நாடு முன்னைய சுமுக நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது என்பதற் கான அறிகுறிகள். இந்த வளர்ச்சிப்போக்கை முன் னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆட்சியாள ர்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் உண்டு.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் போல, சுமுக நிலையும் ஒரே நாளில் ஏற்படுத்தப்பட முடி யாதது. படிப்படியான செயற்பாடுகளுக்கூடாகவே அது சாத்தியமாகும்.

ஒரு கசப்பான காலகட்டத்தை நாங்கள் கடந்து வந்திருக்கின்றோம். இதற்கு இரு சாராருமே பொறுப்பாளிகள். ஏராளம் இழப்புகளை யும் அழிவுகளையும் சந்தித்துவிட்டோம். அந்தக் கச ப்பான காலகட்டத்தை மறந்துவிடுவோம்.

இதயசுத்தியுடன் முயற்சிப்போமாயின் நாங்கள் கடந்து வந்த சுமுக நிலையை அடைய முடியும். அதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது நிலவுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான பிரபாகரன் தம்பிதுரைக்கு 6 மாத சிறை





விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான பிரபாகரன் தம்பிதுரைக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரன் தம்பித்துரை (46) என்னும் அவர் புலிகளுக்கு நிதி அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2008 மார்ச் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

கனடா உச்சநீமன்றத்தில் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது என்றும், இதில், தம்பித்துரைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி ராபர்ட் பவர்ஸ் உத்தரவு பிறப்பித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பசியால் வாடுகின்ற மக்களுக்கு தனது கணவர் உதவியதற்காகவே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் விரைவில் உண்மையை உணரும் என்று தம்பித்துரையின் மனைவி கருத்துத் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

ஆயுள் முழுக்க எலும்பு வலிமை




சிறுவயதில் போதுமான கால்சியத்தை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகளை பாதுகாப்பதுடன் ஆயுள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் 18 நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. அதுகுறித்து ஆய்வுக் குழு பேராசிரியர் சாத் ஸ்டல் கூறியது:
வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்கச் செய்வதில் கால்சியத்தின் பங்கு பற்றி ஆராயப்பட்டது. பன்றிக் குட்டிகளை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினோம். 24 பன்றிக் குட்டிகள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒரு குழுவின் உணவில் கால்சியம் கூடுதலாக சேர்க்கப்பட்டது.
மற்றொரு குழுவில் இருந்த பன்றிக் குட்டிகளுக்கு கால்சியம் குறைவான உணவுகள் அளிக்கப்பட்டன. 18 நாட்களுக்குப் பிறகு 24 பன்றிக் குட்டிகளின் எலும்பு ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது. கால்சியம் அதிகம் கொண்ட உணவைச் சாப்பிட்டவற்றை விட குறைவாக சாப்பிட்ட குட்டிகளின் எலும்பு அடர்த்தி குறைவாக இருந்தது.
அத்துடன், எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் கொழுப்பாக மாறி இருந்தன. கால்சியம் செறிந்த உணவு சாப்பிட்ட குட்டிகளின் எலும்பு மஜ்ஜைகள், எலும்பை உறுதியாக்கும் செல்களாக மாறியிருந்தன. எனினும், பெரியவர்களின் ரத்தத்தில் கால்சியத்தை முறைப்படுத்தும் விட்டமின் டியின் ஹார்மோன்கள் குறித்து இரண்டு குழுக்களின் ரத்தப் பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
குழந்தை பிறந்ததில் இருந்து கால்சியம், மினரல்கள் உடலில் சேர்ந்தால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்க உதவும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது என சாத் ஸ்டல் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போலீஸ் காவலில் இருந்த போது நித்யானந்தாவிடம் விசாரணை நடத்திய “வீடியோ” காட்சிகள் திருட்டு: தொழில்நுட்ப நிபுணர் கைது





நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியானதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த நித்யானந்தா சாமியாரை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெங்களூர் சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்கள்.

நித்யானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக பொதுப்பணித்துறையினர் சி.ஐ.டி. அலுவலகத்தில் தனி அறை ஒன்றை உருவாக்கி கொடுத்து இருந்தனர்.

அந்த தனி அறையில் நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும்போது, அந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் உரிமையை பொதுப்பணித்துறையிடம் சி.ஐ.டி போலீசார் ஒப்படைத்து இருந்தனர்.

பொதுப்பணித்துறையினர் இந்த வீடியோ காட்சிகளை பதியும் பொறுப்பை தனியார் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்து இருந்தனர். அதன்படி, அந்த நிறுவனம் நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையை நேரடியாக வீடியோவில் பதிவு செய்தார்கள்.

வீடியோ காட்சிகள் அனுமதியின்றி பென் டிரைவ் மற்றும் சி.டி.க்களில் காப்பி செய்யப்பட்டு திருடப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விசாரணையின் போது வீடியோ காட்சிகளை பதிவு செய்த தொழில் நுட்ப நிபுணர் சுரேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். அப்போது ஜெயநகரில் உள்ள சிஞ்சனா மீடியா என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மோகன் என்பவர் உள்பட மேலும் சிலர், நித்யானந்தாவிடம் நடைபெறும் விசாரணையின்போது பதிவு செய்யும் வீடியோ காட்சிகளை திருடி கொடுக்கும்படி சுரேஷிடம் கூறி இருக்கிறார்கள்.

அதன்படி, சுரேஷ்தான் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சிலவற்றை சி.டி.யிலும், பென் டிரைவிலும் பதிவு செய்து சிஞ்சனா மீடியா நிறுவனத்திடம் கொடுத்ததாக போலீசாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் சுரேஷை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, சுரேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிஞ்சனா மீடியா நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கம்ப்யூட்டர்களில் நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிஞ்சனா மீடியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த மோகன் மற்றும் சிலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

இந்த வீடியோ காட்சிகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி சி.ஐ.டி. போலீசார், சிஞ்சனா மீடியா நிறுவனத்திற்கு நோட்டீசு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணை காட்சிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மெக்ஸிக்கோ கடலின் எண்ணெய்க் கசிவினால் அழியும் உயிரினங்களை

10 மில்லியன் டொலர் தேவை
மெக்ஸிக்கோ கடலின் எண்ணெய்க் கசிவினால் அழியும் உயிரினங்களை பாதுகாக்க 10 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என அமெரிக்காவின் வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

மெக்ஸிக்கோ வளைகுடா கடற் பரப்பின் லூசியானா மாகாணக் கரையோரங்களில் தொடர்ந்து படிந்து வரும் எண்ணெய் கசிவினால் பல நூற்றுக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இவற்றை பாதுக்க 10 மில்லியன் அமெரிக்க டொலர் வீதமாகும். இந்நிலையில் இச் செயற்திட்டத்தை செயற்படுத்தினால் உலகலாவிய ரீதியி பாரிய நிதி நெருக்கடி ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, படர்ந்து வரும் எண்ணெய் தற்போது மெக்ஸிக்கோவின் மேற்குக் கரையோரத்தில் இருந்து தென் பகுதி கடற்பரப்பு நோக்கிப் படர்ந்து வருகின்றது.

கரையோரத்தில் இருந்து 70 தொடக்கம் 130 மைல் வரை படர்ந்துள்ள மெக்ஸிக்கோ எண்ணெயை முழுமையாக நிறுத்துவதற்கு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதனை உறுதி செய்ய முடியாதுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழாய் ஒன்று உடைந்ததைத் தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் பீப்பாய்கள் வரை எண்ணெய் கடலில் கசிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடலடியில் இருந்து எண்ணெய் தோண்டி எடுக்கும் இயந்திர மேடை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெடித்துக் கடலில் மூழ்கியதையடுத்தே, மேற்படி அபாயம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

மேற்படி வெடிப்புச் சம்பவத்தின் போது, 11 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியாவில் கடும் சட்டம் * 20 ஆண்டுகள் கடூழிய சிறை அல்லது 2,20,000 டொலர் அபராதம்

* கடத்தல் காரரின் வலையமைப்பை கண்டறிய புலனாய்வு பிரிவு

தமது நாட்டுக்கு ஆட்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கென ‘ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான சட்டமூலம் 2010’ அறிமுகப் படுத்தப்படுகிறது.

இதன்மூலம், ஆட்களைக் கடத்தும் சம்பவங்களைப் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கையா ள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய சட்ட மா அதிபர் றொபர்ட் மெக்கலண்ட் எம்.பி, குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் கிறிஸ் ஈவன்ஸ், உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ ‘ கொனர் எம்.பி. ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்து வதற்கான சட்ட மூலத்தை விபரித்துள்ளனர்.

புதிய சட்ட மூலத்தின் பிரகாரம், அவுஸ் திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுத் துறை யினருக்கு, ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

தவிரவும், ஆட்கடத்தலுக்கு நிதியுதவி அளிப்பது ஆதரவளிப்பதும் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும்.

அவ்வாறு உதவிபுரிந்து குற்றவாளியாகக் காணப் படுபவருக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையோ அல்லது 110,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டு தண் டனையுமோ விதிக்கப்படும்.

கடத்தலில் ஈடுபடுவதுடன் அவர்களிடம் பணம் பரித்தல் உயிராபத்தை ஏற்படுத்தல் அல்லது கடுமையான பாதிப்புகளை உண்டுபண்ணுவோருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 2,20,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்
மேலும் இங்கே தொடர்க...

வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் பக்தர்கள் சென்றுவர பாதுகாப்பு அனுமதி



முல்லைத்தீவு, வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் வைபவத்தினை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் பூசைகள் நடைபெறும்.

எதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை பொங்கல் உற்சவம் வற்றாப்பளையில் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கு முல் லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலய பொங்கல் வைபவம் வன்னி பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கமாகும்.

கடலில் தீர்த்தம் எடுத்து வந்து எதிர்வரும் 17ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சூறாவளி ஒருவர் பலி, வீடுகள் சேதம்


நுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சூறாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன.

இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவுகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கனத்த மழை; கடும் காற்று; பேரிடி; மின்னல் தாக்கம்; ஒருவர் பலி: கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்


கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது.

சனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டது டன், இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்த ம்பித நிலை நீடித்தது.

கொழும்பில், கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. மாவத்தை, ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை, புலுமெண் டல் வீதி, ஜம்பட்டா வீதி, கிராண் ட்பாஸ், தெமட்டகொட பேஸ் லைன் வீதி, தர்மராஜ வீதி, கிருலப் பனை பொலிஸ் நிலையம் முன் பாக உள்ள பகுதி, கறுவாத்தோட்ட பகுதியில் பல்கலைக்கழக வீதி, தேஸ்டன் கல்லூரி வீதி, பிளவர் வீதி, ஹோர்டன் வீதி, உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன. இத னால் காலை வேளையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களுத்துறை பகுதியில் கொழும்பு- மத்துகம வீதி, வெலிபென், ஹொரன, பன்னல, அளுத்கம- மதுகம வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா, காலி ஆகிய பகுதிகளிலும் பல வீதிகள் நீரில் முழ்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. மாலபே- கண்டி வீதி பியகம வீதி என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் ஓரிரு தினங்கள் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் மழையை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது.

இதேவேளை மின்னல் தாக்கியதில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் ஒரு பகுதி கூரை சேதமாகியுள்ளது.

கட்டானை குருகே பகுதியில் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மினுவாங்கொடை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மரமொன்று வீழ்ந்ததில் வீடு சேதமானது.

நேற்று பிற்பகலாகும் போது பல வீதிகளில் நீர் வடிந்திருந்ததாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியது.

களுத்துறையில்

களுத்துறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இப் பிரதேச வரலாற்றில் என்றுமி ல்லாதவாறு கடும் மழையுடன் இடி, மின்னலும், காற்றும் காணப் பட்டது.

மழை காரணமாக தோட்டங்க ளில் இறப்பர் பால் சேகரிக்கும் பணி, சீவல் தொழில் என்பன முற் றாகவே ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் தோட்டங்களில் பணிபுரி யும் தொழிலாளர்கள் பெரிதும் பாதி க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்புடனான பேச்சு மஹிந்த சிந்தனை அடிப்படையில்... : சம்பிக்க ரணவக்க

அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்கள் மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக்கொண்டதாகவே அமையவேண்டும். மேலும் அரசியலமைப்பு திருத்தங்களின்போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் யோசனைகளைப் பெறவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் மின்சக்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறிவருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இது தொடர்பில் மேலும் கூறியதாவது :

"அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களிடமும் யோசனைகளைப் பெறவேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதாயின் அது மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமையவே இடம்பெறவேண்டும். அதனை மீறி எதுவும் இடம்பெறக் கூடாது.

அதேவேளை, நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

முக்கியமாக அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜி - 15 இன் தலைமை ஜனாதிபதி வசம்

தெஹ்ரானில் திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜி15 நாடுகளின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதினியாட்டிமிருந்து பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜி -15 நாடுகள் உலகின் மூன்றிலொரு சனத்தொகையைக் கொண்டுள்ளதுடன் இது உலகின் பெரும் பொருளாதாரங்கள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளது. இதில் ஆஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரானிய இஸ்லாமியக் குடியரசு, யமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசூலா மற்றும் சிம்பாப்வே ஆகிய 17 வளர்முக நாடுகளைக் அங்கத்துவம் வகிக்கின்றன.

1989 செப்டெம்பர் மாதம் பெல்கிறேட்டில் 9ஆவது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டின்போது இக்குழு ஸ்தாபிக்கப்பட்டதுடன் வளர்முக நாடுகளிடையே வலுவானதும் பரஸ்பர நன்மை பயக்கக் கூடியதுமான மேம்பாட்டிற்கான குறிக்கோளைக் கொண்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மன்னார், தலைமன்னார் பிரதான வீதியின் இரண்டாம் கட்டை சந்தியில் கடந்த புதன் கிழமை மாலை எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் இன்று மாலை 5.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை 2ஆம் கட்டை வீதியில் எரிக்கப்பட்ட வீதியில் காணப்பட்ட நபர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

செனட்சபை தலைவர் வி,ஜே.மு ?

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளுகின்ற போது செனட் சபையொன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம் அந்த செனட் சபையின் தலைவராக முன்னாள் சபாநாயகரும் சப்ரகமுவ மாகாண ஆளுநருமான வி.ஜே.மு. லொக்குபண்டாரவை நியமிப்பதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அந்த மாகாண சபையும் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரே செனட் சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் தலா இரண்டு உறுப்பினர்கள் வீதம் இந்த சபைக்கு தெரிவு செய்யப்படவிருக்கின்றனர்.

மாகாண சபைகளுடன் சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அது செனட் சபையிலும் விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இருவர் இந்த சபைக்குள் உள்வாங்கப்படவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...