18 மே, 2010

நாடாளுமன்ற வளவில் வெள்ளம் : படகுச் சேவை ஏற்பாடு

அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் படகுச் சேவை மூலம் வெளியில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வில் இன்று பிரசன்னமாகியிருந்த அனைவரையும் 6 படகுச்சேவைகள் மூலம் அங்கிருந்து வெளியே அழைத்து வர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யுத்த வெற்றியின் போது ஜெனரல் சரத்தை சிறையில் வைத்திருப்பதா? : ரணில் கேள்வி

அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடும் இவ்வேளை, நாட்டுக்காகப் போராடிய ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?" என்று ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காலை, நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

"அரசாங்கத்தின் வரிவிதிப்புக்கள் மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையுயர்வு என்பன, அது பெற்றுள்ள கடனை அடைப்பதற்காகவே. அத்துடன் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகியும் மக்கள் இதுவரை கோழிக்கூண்டுக்குள்ளே அடைக்கப்பட்டு அகதிகளாகவே இருக்கிறார்கள்.

இவ்வேளை, அரசாங்கத்தின் யுத்த வெற்றி தேவைதானா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அரசாங்கத்தின் கொள்கைத்திட்டம் என்ன எனவும் அவர் கேட்டார்.

ரணில் எழுப்பிய இத்தகைய கேள்விகளால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

ஊடக சுதந்திரம் குறித்த சட்டத்தில் ஒபாமா கைச்சாத்து

ஊடக சுதந்திரம் தொடர்பான புதிய சட்டமொன்றில் அமெரிக்க ஜாதிபதி பரக் ஒபாமா கைச்சாத்திட்டுள்ளதாகத் அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.இச்சட்டத்திற்கு டெனியல் பெர்ல் ஊடக சுதந்திர சட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

2002 ம் ஆண்டு பாகிஸ்தானில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டெனியல் பெர்லிற்கு கௌரவமளிக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத இஸ்லாமிய குழுக்கள் தொடர்பில் வேல் ஸ்ட்ரீட் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போது டெனியல் பெர்ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த சட்டத்தின் மூலம் ஊடக சுதந்திரத்தை மீறும் நாடுகளுக்கு வலுவான ஓர் எச்சரிக்கையை அமெரிக்க அரசாங்கம் விடுப்பதாக பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பொருளாதார அபிவிருத்திக்காக கிராம மக்கள் நகரப் பிரதேசங்களுக்கு நகரவேண்டியதில்லை -ஜனாதிபதி



புதிய தொழில்களை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், பொருளாதார அநுகூலங்கள் பகிரப்படுவதில் நியாயத்தை உறுதிப்படுத்தல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தல் போன்றன மஹிந்த சிந்தனையில் இடம்பெற்றுள்ளன என்பதுடன், பொருளாதார அபிவிருத்திக்காக கிராம மக்கள் நகரப் பிரதேசங்களை நோக்கி நகரவேண்டியதில்லை. அந்தக் கொள்கையின் காரணமாக, தேர்தல்களில் பெரும்பான்மையானோர் எம்மை ஆதரித்தனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உலக நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், பொருளதார நெருக்கடிகளைத் தவிர்க்கவும், முடியுமான வரையில் சர்வதேச நிதி இயல்பை மறுசீரமைப்புச் செய்யவேண்டும் என்பதே எமது அவதானமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக திறந்த விரிவான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க கலந்துரையாடல்கள் அவசியமாகும் ஜி15 நாடுகள், ஜி8 நாடுகளுடன் நெருக்கமாக செயற்படவேண்டும் என்ற யோசனையையும் முன்வைக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.

ஈரானில் நேற்று நடைபெற்ற ஜி15 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜி15 நாடுகளின் தலைமைப் பதவி இம்முறை இலங்கைக்குக் கிடைக்கின்றமை எமக்குக் கிடைத்த வரப்பிரசாதமும், கௌரவமுமாகும். கடந்த 20 வருடங்களில் எமது குழுவினால் கூட்டுப் பொருளாதார செயற்பாட்டை மேற்கொள்ள முடிந்துள்ளது. ஆரம்பத்தில் ஜி8 குழுவுடன் ஒப்பிடுகையில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்த எங்களில் இன்று சில நாடுகள் வளர்ச்சி கண்டு, உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களை நோக்கமாகக் கொண்டே எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அமைந்துள்ளன. புதிய தொழில்களை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், பொருளாதார அனுகூலங்கள் பகிரப்படுவதில் நியாயத்தை உறுதிப்படுத்தல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தல் போன்றன இடம்பெற்றுள்ளன. எமது நாட்டின் ஜனநாயக நல்லாட்சி மற்றும் கலாசார அங்கங்களைப் பேணிய வண்ணமே இவற்றை மேற்கொள்கின்றோம்.

எமது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் யாதெனில், பொருளாதார அபிவிருத்திக்காக கிராமப்புற மக்கள் நகரப் பிரதேசங்களுக்கு நகரவேண்டியதில்லை என்பதாகும். இருப்பிடம், நீர், சுகாதாரம் போன்ற விடயங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற மக்கள் நகரப் பகுதிகளை நோக்கி நகர்வதற்குப் பதிலாக, கிராப் புறங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என்பதே எனது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் காரணமக்ஷிக, அண்மையில் நடந்த தேர்தலில் எனது அரசாங்கத்திற்கு கிராமப்புறங்களில் அதிகளவில் வாக்குகள் கிடைத்தன. வறுமையைக் குறைப்பதற்கு உதவும் வகையிலான முதலீடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் நிதிக்கொள்கையில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையையும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன். அதேபோன்று, அரச வங்கிகள் ஊடாக கிராமப்புறங்களுக்கு அதிகளவில் நிதி வசதிகளை அளிக்கவும், அதனூடாக வங்கிகளுக்கு இடையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி, கிராமிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டுள்ளோம். வாஷிங்டன் இணக்கப்பாட்டின் பாதக விளைவுகள் குறித்தும், இந்த நாடுகளின் அபிவிருத்திக்கு உதவும் அமைப்புக்கள் தொடர்பிலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் குரல் எழுப்பினாலும், அதில் பயன் கிடைக்கவில்லை. எனினும், தற்போது விதிகளைத் தளர்த்தல் போன்ற மேற்குலக பொருளாதாரத்திலும் சிறப்பான கொள்கை மாற்றங்களை காணமுடிகின்றது.

எமது நாடுகளின் மனித வளத்தின் முக்கியத்துவம் தொடர்பில் ஜி15 நாடுகள் கவனம் செலுத்தவேண்டும். அபிவிருத்தியின் அனைத்துக் கட்டங்களிலும் நிர்மாண ரீதியான விடயங்களை உருவாக்க ஜி15 நாடுகள், ஜி8 நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்று யோசனையை முன்வைக்கின்றேன். ஜி15 நாடுகள் மற்றும் ஜி8 நாடுகளுக்கு இடையிலக்ஷின விடயங்ளை யதார்த்தமாக்குவதற்கு தெளிவான பேச்சு முறைமை ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். பொருளாதார நிதி, விஞ்ஞான மற்றும் கலாசாரம் போன்ற அனைத்து விடங்களிலும் நெருங்கிய உறவுகளைப் பேணுவதற்காக எமது அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுபம் மிக்க உறுப்பினர்களைக் கொண்ட செயலணி ஒன்றை உருவாக்கவேண்டும் என்று யோசனையை முன்வைக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பதவியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி ,ஐவர் காயம்



பதவியாவில் மின்னல் தாக்கி ஒருவர்பலியானதுடன் இன்னும் ஐவர்காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் குளக்கரையில் இருந்த சமயம் மின்னலினால் தாக்கப் பட்டதாகத் தெரிகிறது.கடந்த சிலவாரங்களாக மின்னல் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் பலவும் சம்பவித்துள்ளன. இவ்வருடம் இதுவரை 12 பேர் நாடலாவிய ரீதியில் மரணத்தை தழுவியுள்ளனா
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளாக தமிழர்கள் வாழும்போது வெற்றிவிழா தேவைதானா- ஜயலத் ஜெயவர்த்தன

யுத்த வெற்றிக்கு முதலிடம் வழங்கிக் கொண்டாட்டம் நடத்தும் அரசாங்கம் இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதைக் கைவிட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன தெரிவித்தார்.

நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சுதந்திரமாக, அச்சமின்றி வாழும் சூழலிலேயே வெற்றி விழா கொண்டாடப்பட வேண்டும். ஆனால், தமிழ் மக்கள் அகதிகளாக வாழும் போது இவ்விழா தேவைதானா என்று கேள்வியும் எழுப்பினார். அரசாங்கத்தின் யுத்த வெற்றி விழா தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ வெற்றி ஒரு புறம். ஆனால், மறுபுறம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிர்க்கதியாகி அகதிகளாக வாழும் நிலைமை காணப்படுகிறது. இன்றைய மோசமான காலநிலையிலும் 75000 மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் தகரக்கூடுகளில் வாழ்கின்றனர். மேலும் இரண்டு இலட்சத்திற்கு மேலான மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் 4 தகரங்கள் வழங்கப்பட்டு எதுவிதமான அடிப்படை வசதிகளும் வழங்கப்படாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் யுத்தத்தால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் பாதிக்கப்பட்ட மக்களும் எமது நாட்டு பிரஜைகளேயாவர். எனவே, அம்மக்களுக்கு வசதிகளை வழங்கி அச்சமின்றி சுதந்திரமாக வாழும் நிலைமையை உருவாக்கி கொடுப்பதோடு அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஐ.தே.கட்சி என்றும் மனித உரிமைகள், ஜனநாயக சுதந்திரத்தை மதிக்கும் கட்சியாகும். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்ததை வரவேற்கின்றோம். ஆனால், அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மனிதாபிமானமாக நோக்க வேண்டும். யுத்தத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் வெற்றி மறுபக்கம் மனிதாபிமானம் என்றும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவர்- டி.எம்.ஜயரட்ன

அவசரகால சட்டத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்க படும் சந்தேக நபர்களை விடுதலை செய்யாது தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவர் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1,900 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்னர். இந்நிலையில் தற்போது அவசரகாலச் சட்டத்தில் சில விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ள போதும் நாட்டின் பாதுகாப்பு கருதி இவர்கள் அனைவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அடை மழை காரணமாக இராணுவ வெற்றி நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளது

அடை மழை காரணமாக இராணுவ வெற்றி நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளது
பெய்து வரும் அடை மழையால் கொழும்பில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ ஒத்திகை நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளது .

கடந்த காலத்தில் காணப்பட்ட பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாட இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் பெய்து வரும் அடை மழை காரணமாக பிற்போடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றன
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்கு ​காஷ்மீரைப் போல சுயாட்சி தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்



தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு,​​ காஷ்மீர் மாநிலத்தைப் போல சுயாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.​ ​

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் பா.ம.க.​ சார்பில் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.​ ​

​ சென்னை,​​ சின்னமலைப் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.​ கட்சி நிறுவனர் ராமதாஸ்,​​ தலைவர் ஜி.கே.​ மணி,​​ முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.​ மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பா.ம.க.வினர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று,​​ மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலி செலுத்தினர்.​ ​

​ அந்நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:​ ​

​ இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.​ ஆனால்,​​ தமிழினம் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.​ தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற எழுச்சி உலகெங்கும் உள்ள பல கோடி தமிழர்களிடம் இப்போது காணப்படுகிறது.​ எனவே,​​ தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகியே தீரும்.​ ​

​ இப்போது உடனடித் தேவையாக இலங்கையின் வடக்கு,​​ கிழக்குப் பகுதிகளை ஒன்றிணைத்து,​​ சுயாட்சி அதிகாரம் பெற்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும்.​ அந்த சுயாட்சி என்பது இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தைப் போன்றதாக இருக்க வேண்டும்.​ இதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்.​ ​

​ சுயாட்சி பெற்ற மாநிலம் என்பது தாற்காலிக ஏற்பாடாகவே இருக்க வேண்டும்.​ இனி இலங்கையில் சிங்களர்களும்,​​ தமிழர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை.​ எனவே,​​ தனித் தமிழ் ஈழமே இறுதித் தீர்வாக அமையும்.​​ இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக,​​ பா.ம.க.​ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தன் கடமையைச் செய்து வந்துள்ளது.​ அந்தக் கடமை இனியும் தொடரும் என்றார் ராமதாஸ்.
மேலும் இங்கே தொடர்க...

கடந்த காலங்களில்

கடந்த காலங்களில் இனப்பிரச்சினையின் தீர்வுக்காகச் சாத்வீக வழியிலும் ஆயுதப் போராட்டமாகவும் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், பிரச் சினையின் தீர்வுக்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழலாம். இரண்டு முயற்சிகளினதும் தோல்விக்கான காரண த்தை விளங்கிக்கொண்டால் தீர்வுக்கான வழி தெரியும்.

நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கையை வலியுறுத்தியதும் யதார்த்தத்துக்கு முரணான அணுகுமுறையைப் பின்பற்றியதும் தோல்விக்கான பிரதான காரணங்கள்.

இனப்பிரச்சினை ஆறு தசாப்தங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்காலப்பகுதியில் இடம்பெற்ற பல நிகழ்வுகள் இனங்களுக் கிடையிலான உறவை வெகுவாகச் சீரழித்துவிட்டன. இதனால் பரஸ்பர சந்தேகம் வளர்ந்திருக்கின்றது.

நிலையில், முழு மையான தீர்வைத் தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு யதார்த்தத்துக்கு முரணானது. இந்த நிலைப்பாடு பயனளிக்காதென்பது மாத்திரமன்றி, தீர்வு முயற்சியை வெகுவாகப் பின்தள்ளக்கூடியது என்பதையும் அனுபவத்தில் பார்த்துவிட்டோம்.

தனிநாடு நடைமுறைச் சாத்தியறமற்றது. சாத்வீக வழியிலோ ஆயு தப் போராட்டத்தின் மூலமோ அடைய முடியாதது. தனிநாட் டுக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் எவ்வளவு அழிவு கரமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததற்குப் பின்னரே தமிழ் மக்கள் தங்கள் வாழ்புலங்களிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களை இப்போராட் டம் அநியாயமாகப் பலிகொடுத்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் மரணத்துக்கு இதுவே காரணம். பெருவாரியான தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடையும் நிலையைத் தோற்றுவித்ததும் இப்போராட்டமே.

இந்த அவலங்களைத்தான் ஆயுதப் போராட்டம் தமிழ் மக்க ளுக்குத் தந்தது. எந்தவொரு நன்மையையும் தரவில்லை. அரசியல் தீர்வு முயற்சிகள் அனைத்தையும் அச்சுறுத்தல் மூலம் திசை திருப்பினார்கள்.

இன்று அவர்கள் உள்ளூர் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ஆக்கபூர்வ மான முறையில் அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப் பதற்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகின்ற நேரத்தில் பிரிவினைவாதிகளிடமிருந்து நாடுகடந்த அரசாங்கம் என்ற குரல் ஒலிக்கின்றது. இது முப்பது வருடங்கள் முயன்று தோற்றுப் போன தனிநாட்டு முயற்சியின் இன்னொரு வடிவம்.

முப்பது வருடங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் அவலங்களுக்கும் இன்று நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுபவர்களும் பொறுப்பாளிகள். புலிக ளுக்கு இவர்கள் வழங்கிய நிதி இலங்கையில் தமிழ் மக்க ளுக்குப் பாதகமான முறையில் பயன்பட்டிருக்கின்றது.

ஒரு நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அப் போராட்டத்தை அந்நாட்டில் தொடர முடியாத நிலையில் வேறொரு நாட்டுக்குச் சென்று கரந்துறை அரசொன்றை அமைத்துத் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதே இதுவரை உலகம் அறிந்த நாடுகடந்த அரசாங்கம்.

இலங்கையில் ஆயு தப் போராட்டம் நடத்திய பிரிவினைவாதிகள் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். இன்று நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுபவர்கள் வெகு காலத்துக்கு முன் இலங்கை யிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு உலக நாடுகளில் தங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக்கொண்டவர்கள். இவர் கள் எந்தக் காலத்திலும் இலங்கைக்குத் திரும்பி வரப் போவதில்லை.

நாடுகடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் பலன் தரப்போவதில்லை. இது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைத் திசை திருப்புவதற்கான ஒரு ஏற்பாடு.

தீர்வு முயற்சிகளைப் புலிகள் திசை திருப்பியதால் ஏற்பட்ட அவலங்களிலும் பின்னடைவு களிலுமிருந்து விடுபட்டுத் தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற நேரத்தில், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தும் புலி ஆதரவாளர்கள் மீண்டும் திசை திருப்பல் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

எட்டு மாவட்டங்களில் பெரும் மழை; வெள்ளம் சுமார் 2 இலட்சம் பேர் நிர்க்கதி; 6 பேர் பலி


16 பேர் காயம்; 65 வீடுகள் சேதம்
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நேற்று பெய்த மின்னலுடன் கூடிய அடை மழை காரணமாக அறுவர் உயிரி ழந்திருப்பதுடன் 16 பேர் காயமடைந் திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

எட்டு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 75 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 908 பேர் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் பெய்த அடை மழை வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளா கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே நேற்றைய மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டங்களிலுள்ள 18 வீடுகள் முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அடை மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மின்னல் தாக்கியதில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 11 பேர் மழையினாலும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

இம்மழை காரணமாக மேல் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மழையினால் மேல் மாகாணத் திலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். அதனால் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் துரிதமாக வழிந்தோடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இக்கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 15 ஆயிரத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள குடுப்பிட்டிய ஓயா பெருக்கெடுத்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிடுகையில், இம்மழை காரணமாக கம்பஹா - மினுவாங்கொட, கம்பஹா - ஜாஎல, கம்பஹா - உருதொட்ட, பெலும்மகஹா - வெலிவேரிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

கொழும்பு மாவட்ட இணைப்பாளர் கூறுகையில், மழை காரணமாக 1913 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவக்குபிட்டிய ஓய உட்பட இப்பிரதேசத்திலுள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இம்மாவட்டத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

இதேவேளை களுத்துறை, பண்டாரகம, பாணந்துறை பகுதிகளில் வெள்ளத்தினால் 2720 குடும்பங்களைச் சேர்ந்த 13316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் வெள்ளத்தினால் ஒரு வீடு முற்றாகச் சேதமுற்றுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன.

குகுலே கங்கை மின்சார திட்டத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறையில் 1406 குடும்பங்களைச் சேர்ந்த 6890 பேரும், பாணந்துறையில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 6370 பேரும், பண்டாரகமையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக களுத்துறை பிரதேச செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்தார்.

களுகங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆயிரம் இளைஞர் யாழ். நகரில் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு






புனர்வாழ்வு நிலையங்களில் வசிக்கும் ஆயிரம் இளைஞர் யுவதிகள் இன்று 18ம் திகதி செவ்வாய்க்கிழமை பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த ஓராண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளு மாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் அனேகர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ-15 நாடுகளின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ




ஜீ-15 நாடுகளின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும் ஜீ-15 நாடுகளின் 14வது உச்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஜீ-15 நாடுகளின் 15வது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

தலைமைப் பொறுப்பைக் கையேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ; ஜீ- 15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்குத் தாம் வழிவகை செய்வதாக உறுதியளித்துள்ளார். இச்செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்புக் கிட்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜீ-15 மாநாட்டின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உயர் சம்பிரதாயங்களை கட்டிக்காத்த முன்னாள் தலைவரான ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நெஜாத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு






நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களான பெய்து வரும் கடும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜி-15 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு இப் பணிப்புரையை வழங்கி யுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக அம் மாவட்டங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. அதேநேரம் தாழ் நிலங்களிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில் இம்மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பத்து இலட்சம் ரூபா படி நிதியொதுக்கீடு மேற்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய எடுக்கப்பட்டிருக்கும் துரித நடவடிக்கைகளின் ஓரங்கமாக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்நிதி அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் மாத்திரமல்லாமல் தேவைப்படும் பட்சத் தில் தற்காலிகமான தங்குமிட வசதிகளை செய்து கொடுக்குமாறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிதி யொதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் துரித மாக நிவாரணம் பெற்றுக் கொடுப்பதுடன் வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தலை குறைப்பதற்காக தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர் வழிந்தோடவென கால்வாய் வசதியை ஏற்படுத்தவென மூன்று மாவட்ட செயலாளர்களுக்கு மேலும் ஒன்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சீரற்ற கால நிலையை கருத்தில் கொண்டு மக்களுக்கு துரித நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் அவசர ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...