3 ஜூன், 2010

மன்னார் நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதி நியமனம்

மன்னார் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது முதல் அமர்வினை நடத்தியதாகவும் மன்னார் நீதிமன்றச் செயலாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட நீதிமன்றமும், நீதவான் நீதிமன்றமும் ஒரே நீதவான் கீழ் இயங்கி வந்தன. இந்நிலையில் தற்போது நீதவான் நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதியாக ஜனாப்.ஜ.பயாஸ் றஸாக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மன்னார் நீதிமன்றம் இனிமேல் இரு அமர்வுகளாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை அமர்வுகள் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையிலும் மாலை அமர்வுகள் நீதவான் நீதிபதி பயாஸ் றஸாக் முன்னிலையிலும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - செய்திச்சேவைக்கு விருது

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - 4 செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்நாள் திங்கட்கிழமை லண்டனில் நடைபெற்றது.

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விரிவான - சிறந்த - செய்தியை தொகுத்தளித்த சனல் - 4 செய்திச்சேவைக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சிறந்த செய்தி தொகுப்புக்கான விருதுக்கு மேலும் பல போட்டிகள் நிலவியது. தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தித்தொகுப்புக்களில் ஸ்கை செய்திச்சேவையின் ஒரு செய்தியும், சனல் - 4 செய்திச்சேவை தொகுத்தளித்த இன்னொரு செய்தியும், இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பான செய்தித்தொகுப்பும் கடைசி கட்ட போட்டிக்குள் நுழைந்தன.

இவற்றில், இலங்கை தொடர்பாக தொகுக்கப்பட்ட செய்திக்கே விருது வழங்கப்பட்டது. இந்த செய்தித்தொகுப்பில், இலங்கை அரசின் வவுனியா தடுப்பு முகாம் செய்தி, இலங்கை இராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி மற்றும் அந்த காணொளி ஐ.நாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட செய்தி ஆகியவை அடங்கியிருந்தன.

இந்த செய்திகளை தொகுத்தளித்த செய்திக்குழுவின் சார்பில் சனல் - 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டு செய்திகளுக்கான பிரதி ஆசிரியர் விருதினை பெற்றுக்கொண்டார். இந்த விருதுடன் சனல் - 4 செய்திச்சேவையின் இன்னொரு நிருபருக்கு வளர்ந்துவரும் திறமையான மனித உரிமைகள் விவகார செய்தி நிருபர் விருதும் கிடைக்கப்பெற்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக முதல்வருக்கு இன்று 87ஆவது பிறந்த தினம்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி‌யி‌ன் தனது 87ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு இன்று அதிகாலை தனது பெற்றோரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் சி.ஐ.டி.நகர் இல்லத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். இதையடுத்துப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, சற்குண பாண்டியன், கனிமொழி, அமைச்சர் பூங்கோதை, மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துக்களை கலைஞர் ஏற்றுக் கொண்டார். மாலை திருவான்மியூரில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கருணா‌நி‌தி பங்கேற்றுப் பேசுவா‌ர்.

கருணா‌‌நி‌தி‌யி‌ன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க.வின‌ர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து‌ள்ளன‌ர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை ஒழிப்போம் : கெஹலிய சவால்

இலங்கையில் போர் நிறைவடைந்துள்ள போதிலும் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் இயங்கி வருவதாகவும் அந்த வலைப்பின்னலை விரைவில் இல்லாதொழிப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முற்றாக இல்லாமல் செய்தோம். ஆனாலும் சர்வதேச ரீதியில் அவர்கள், கூட்டிணைப்பை ஏற்படுத்தி எமக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்.

சர்வதேச ரீதியிலும் சிலர் அதற்குத் துணை போகிறார்கள். இதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைள் நல்ல உதாரணங்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

திடீர் பரிசோதனைக் குழு


கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்துவைக்கும் வகையில் திடீர் பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எம். சுபைர் இந்தக்குழுவை நியமித்துள்ளார். இதன் தலைவராக மாகாண வைத்திய அத்தியட்சகர் டொக்டர். குணாலன் பணியாற்றுவார். அமைச்சின் மேலதிகச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் இதில் பணிபுரிவர். நாளை முதல் மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்ளும் இந்தக் குழு அவற்றின் குறைபாடுகளை அமைச்சரின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டுவரும்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா, அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை

இந்தியா, அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை முதல் முறையாக இன்று துவங்குகிறது. இதில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் சூழல், பயங்கரவாதத் தடுப்புக்கான ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய இடம் வகிக்கும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேற்று முன்தினம் வாஷிங்டன் வந்தடைந்தார். அங்கு, இருதரப்பு உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு இடையில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன. இதில், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பிருத்விராஜ் சவுகான், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், உள்நாட்டுப் பாதுகாப்புக்கான சிறப்புச் செயலர் யு.கே.பன்சால், சுற்றுச்சூழல் செயலர் விஜய் சர்மா மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் கிருஷ்ணா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வெளியுறவுக் கொள்கைகள் குறித்து நிருபமா ராவ், அமெரிக்க அரசியல் விவகார இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் இருவரும் ஆலோசிக்க உள்ளனர். இந்திய - அமெரிக்க விவசாயம் குறித்து, யு.எஸ்.ஏ.ஐ.டி., அதிகாரி ராஜ் ஷா மற்றும் அமெரிக்க மேலாண்மை இணையமைச்சர் ராபர்ட் டி.ஹார்மட்ஸ் இருவரும் பேசுகின்றனர். இதுகுறித்து அமெரிக்க அரசியல் விவகார இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில்,"இந்தப் பேச்சுவார்த்தைகள், இந்தியாவை உலகளாவிய அளவில்
மேலும் இங்கே தொடர்க...

2ஆம் உலகப் போரின் போது வெடிக்காத குண்டு இன்று வெடித்ததில் மூவர் பலி





இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியின் மீது வீசப்பட்டும், வெடிக்காத குண்டு ஒன்று இன்று வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர். அறுவர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் மத்திய ஜேர்மனியில் உள்ள கோயெட்டி ஜென் நகரில் இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி குண்டு அங்கு கிடந்தமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. 500 கிலோ எடையுள்ள அந்தக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

' சொந்தப் பணத்தில் வெளிநாடு செல்லுங்கள் ' : ஜனாதிபதி அதிரடி பணிப்புரை



பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என மாகாண,பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

தமது செயலாளரூடாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இப்பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படுவதாகவும் அதனை அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளுக்கு அரச செலவில் செல்லவிருந்த 27 பேரின் விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு பிரச்சினைக்குத் தீர்வல்ல:ஐ.தே.க

சர்வதேசத்தை ஏமாற்றவும் காலத்தைக் கடத்துவதற்காகவுமே அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்துள்ளதே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக அல்ல. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையை தனிமைப்படுத்துவதாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஏற்கனவே திருகோணமலையில் இடம்பெற்ற கொலைகளை ஆராய நியமிக்கப்பட்ட உதாலகம ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவுமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. இந்நிலையில் இந்த ஆணைக்குழுவும் வெறும் கண்துடைப்பு வித்தையாகும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மேலெழுந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காகவே முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அத்தோடு வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அமெரிக்காவுக்கான விஜயமும் இதற்குக் காரணமாக அமைந்தது. இதேபோன்று 2007 ஆம் ஆண்டிலும் திருகோணமலையில் இடம்பெற்ற 8 மாணவர்களின் கொலை மற்றும் பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உதாலகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை. அத்தோடு விசாரணை அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவும் இல்லை. குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. வெறுமனே காலத்தைக் கடத்தி மக்களின் பணத்தை வீணாக்கி சர்வதேசத்தை ஏமாற்றியது.

இன்று தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட "" உண்மையை கண்டறியும் ஆணைக்குழு''வைப் போன்று தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவில் நெல்சன் மண்டேலா கலந்து கொண்டு கறுப்பினத்தவருக்கான போராட்டத்தின் போது தன்னால் சில பிழைகளும் இடம்பெற்றதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினார்.

அதேபோன்று வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக சில பிழைகள் இடம்பெற்றதாக ஆட்சியாளன் மன்னிப்பு கேட்டான். இந்த ஆணைக்குழுவில் டெஸ்மன்ட் டுட்டூ போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்றவர்கள் அங்கம் வகித்தனர்.ஆனால், இன்று அரசாங்கம் அமைத்துள்ள ஆணைக்குழுவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நியாயமானது, ஜனநாயக ரீதியானதென சர்வதேச ரீதியில் விவாதம் நடத்தியவர்களே அங்கம் வகிக்கின்றனர்.

எனவே புதிய ஆணைக்குழுக்களை அமைத்து சர்வதேசத்தை ஏமாற்றுவதால் எமக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும். சர்வதேசத்திலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும்.இன்று எமது நாட்டில் நீதி நியாயம் இல்லை. எனவே பொது மக்கள் வெளிநாட்டு தூதரகங்களையும் அரச சார்பற்ற நிறவனங்களையும் ஐ.நா.வையும் நாடிச் சென்று முறைப்பாடுகளை முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது.எனவே புதிய ஆணைக்குழுக்களை நியமித்து மக்களின் பணத்தை வீணாக்காமல் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

360 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் நேற்று முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் முள்ளியவளையில் நாளை 710 பேர் மீள் குடியமர்வு


முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் நேற்று (2) கனிக்கேணி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பா ணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த தாகவும் விசேட பஸ்கள் மூலம் இவர்கள் நேற்று சொந்த இடங் களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், தற்காலிக வீடுகள் அமைப்பதற் கான கூரைத் தகடுகள், உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது சமுகமளிக்காத ஒரு தொகுதியினரும் நேற்று தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முள்ளியவளை, வடக்கு பகுதியில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 710 பேர் நாளை (4) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் திட்டப் பணிப்பாளர் கூறினார். இவர்கள் வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இருந்து விசேட பஸ் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள இரு கிராமசேவகர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு இங்கும் விரைவில் மீள்குடியேற்றம் இடம்பெற உள்ளது
மேலும் இங்கே தொடர்க...

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு





சீனாவில் ஹணூனான் மாநிலத்தில் யாங்ஷவ் என்ற நகரில் உள்ள நீதிமன்றத்துக்குள் கையில் 3 துப்பாக்கிகளுடன் வந்த ஒரு நபர், அங்கு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த 3 நீதிபதிகளை சுட்டுக் கொன்றார்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த நபரின் பெயர் சூ ஜுன் (வயது 46) என்றும் வங்கி ஒன்றில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சூ ஜுன்னின் விவாகரத்து வழக்கு அந்த நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் அவருக் கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. விவாகரத்து தீர்ப் பில் சொத்து பங்கீட்டில் தனக்கு பாதகம் ஏற்பட்டுவிட்டதாக கருதி சூ ஜுன் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இங்கே தொடர்க...

மக்களுக்கு துரித சேவை வழங்கும் வகையில் அரச சேவையை மறுசீரமைக்க தீர்மானம்

தேசிய மறுசீரமைப்பு சபையின் முதலாவது கூட்டத்தில் உரை
பொது மக்களுக்கு மிகவும் இலகுவானதும், துரிதமானதுமான சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச சேவையை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்து துரிதப்படுத்துமாறு அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தேசிய நிர்வாக மறுசீரமைப்பு சபைக்கு நேற்று (02) ஆலோசனை வழங்கினார். மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கில் கூறப்பட்டுள்ள விடயங்களை முழுமைப்படுத்தும் வகையில் இந்த அரச சேவையை பயனுள்ள வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் நியமிக்கப்பட்ட தேசிய நிர்வாக மறுசீரமைப்பு சபையின் முதலாவது கூட்டம் அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் கூடியது.

இதில், ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சக்திமிக்க அரச சேவை ஒன்றை உருவாக்குவதே இந்த மறுசீரமைப்பின் பிரதான நோக்கமாகும்.

அரச துறையின் துரித மேம்பாட்டுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள் மிகவும் முக்கியமானதொன்றாகும். தொழில் நுட்பத்தை ஒதுக்கிவிட்டு இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச இந்திய திரைப்படவிழா இன்று கோலாகல ஆரம்பம்

கொழும்பில் விஷேட பாதுகாப்பு:110 நாடுகளில் 600 மில்லியன் மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுபல மாதங்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. இந்தியத் திரைப்படக் கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கெளரவிக்கும் முகமாக வருடா வருடம் நடத்தப்படும் இவ்விழாவை நடத்துவதற்கென இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது.

11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவதற்கு தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

இன்று இலங்கையில் ஆரம்பமாகும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நாளை மறுதினம் 5ஆம் திகதி விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைகின்றது.

இன்று மாலை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி நடைபெறுகின்றது. இலங்கையின் டைமக்ஸ் கார்மென்ஸின் ‘அவராத்தி’ படைப்புகள் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன.

ஏனைய நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி க்களில் போல ல்லாமல் இந்தியாவின் பிரபல இசை இரட்டையர்களான சலீம் சுலைமான் ஆகியோர் இதற்கு நேரடியாக இசை வழங்குகின்றனர்.

பிரபல நட்சத்திரங்களான விவேக் ஒபரோய், தியா மிர்ஸா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு நாளை காலை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்த் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் உட்படப் பலர் இதில் உரையாற்றவுள்ளனர்.

சினிமாத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்காக சினிமா தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று நாளை காலை கொழும்பு சிலோன் கொண்டின ன்டல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் பிரபல இயக்குனரான ஆர். பல்கி, நடிகர் அனுபம்கீர், நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இதில் பங்குபற்றுவர்.

இந்தியத் திரை நட்சத்திரங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிடையிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் எனும் தொனிப் பொருளிலான கிரிக்கெட் போட்டி நாளை மதியம் எஸ். எஸ். ஸி. மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தியத் திரை நட்சத்திரங்கள் இரு அணிகளாக, ஹிர்திக் ரோஷன் மற்றும் சுனில் ஷெட்டி தலைமையில் மோதவுள்ளன. இதில் சில இந்தியக் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்குவார். இதன் மூலம் கிடைக்கும் நிதி சிறுவர் போராளி களின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படும்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் விழா நாளை மறுதினம் சனிக்கிழமை, சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. ஹிர்திக் ரோஷன், சயிப் அலிகான், கரீனா கபூர், பிபாஷா பாஸணு, ரிதீஷ் தேஹ்முக், விவேக் ஒபரோய், இலங்கையின் ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அன்றைய தினம் விழாவை அலங்கரிக்கவுள்ளன.

சிறந்த திரைப்படத்துக்கான ‘த்ரீ இடியட்ஸ் வோன்டட்’, ‘டெவ்டி’, ‘காமினி’, ‘பா’ ஆகிய திரைப்படங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

‘த்ரீ இடியட்ஸ்’ திரைப்படம் இத் திரைப்பட விழாவில் முக்கிய 13 விருதுகளில் 12 விருதுகளுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வழங்கப்படும் 8 விருதுகள் ஏற்கனவே இத்திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விருது வழங்கும் விழா ஸ்டார் தொலைக்காட்சி சேவையில் எதிர்வரும் ஜுலை மாதம் 11 ஆம் திகதி ஒளிபரப்பப்படவிருக்கின்றது. சுமார், 110 நாடுகளில் 600 மில்லியன் ரசிகர்கள் இத்திரைப்பட விழாவை ஸ்டார் தொலைக்காட்சியினூடாகக் கண்டு களிப்பர்.

இந்தியாவில் இருந்து மட்டும் 2000 விருந்தினர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களும், இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 600 பேரும் இவ் விழாவில் கலந்து கொள்ள வருகின்றார்கள்.

இலங்கையில் உள்ள ஹோட்டல்களில் 2650 அறைகள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகததாஸ உள்ளக அரங்கு 400 மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் அந்நாட்டுக்கு 56 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்தது. அதிலும் பார்க்கக் கூடுதல் வருமானம் இம்முறை இலங்கையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...