26 ஆகஸ்ட், 2010

ஈழத்தமிழர் நிலை: தாமே நேரில் செல்லவுள்ளதாக கிருஷ்ணா தெரிவிப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் நிலை குறித்து ஆராய தாமே அங்கு செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களின் மறுவாழ்வு குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார்.

"இதுவரை இலங்கை தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட நிதி மற்றும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததா? இல்லையா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போர் முடிந்து ஓராண்டாகியும் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, முகாம்களில் உள்ள தமிழர்கள் துன்புறுத்தப்பட்டே வருகிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில், கடந்த 1987ஆம் ஆண்டில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா இடையே ஏற்பட்ட அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம், இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கையில், தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக சம உரிமை அளிக்கப்படாமல், இரண்டாம் கட்ட மக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசு இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறது. 52 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அவதிப்பட்டு வாழ்கிறார்கள். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று பாலு கூறினார்.

நேற்றைய அமர்வின் போது, அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை, ம.தி.மு.க. உறுப்பினர் கணேசமூர்த்தி, பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்), பி.லிங்கம் (இந்திய கம்ஸினிஸ்ட்) ஆகியோரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசுகையில்,

"இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் குறித்து ஐ.நா. அமைப்பின் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கைக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைப்பதற்கு இது சரியான நேரமல்ல என்றே கருதுகிறேன்.

ஏற்கனவே இலங்கை சென்ற தமிழக எம்.பிக்கள் குழுவில் மற்ற கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இலங்கைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடலாம்.

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத இறுதியில் நானே நேரில் சென்று தமிழர்கள் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிட இருக்கிறேன். அதற்கு முன்பாக வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

இலங்கை அதிபர் சமீபத்தில் டில்லி வந்தபோது, தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு அவர்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தி இருந்தார்.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது பிரிவுக்குட்பட்டு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அகதிகள் முகாம்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும், இலங்கையின் வடக்குப்பகுதியில் ரயில்வே கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வழங்கிய ரூ.80 கோடி கடன் ரத்து செய்யப்படும் என்றும் இந்தியா சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்வே திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்.'
மேலும் இங்கே தொடர்க...

கடந்தகால தவறுகளுக்கு சகல தரப்பும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்:ஜயந்த தனபால



கடந்தகால தவறுகள் மற்றும் இன நெருக்கடிக்கு காரணமாகவிருந்த மோசமான ஆட்சி முறைகள் தொடர்பில் நாட்டின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான பொறுப்பு என்ற அடிப்படையில் நாட்டு மக்களிடம் ஒருமித்த மன் னிப்புக் கோரவேண்டும். இவ்வாறு மன்னிப்பு கோரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. காரணம் மோசமான ஆட்சி முறைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்புக் கூறவேண்டுபும். வெறுமனே ஒரு சமூகத்தை குறைகூற முடியாது. இதனை சர்வகட்சி குழுவின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ செய்ய முடியும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன் என முன்னாள் அரச சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த தனபால தெரிவித்தார்.

சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு அரசாங்கம் விரைவில் செல்லவேண்டும். இதன்மூலம் புலம்பெயர் மக்களை இணைத்துக்கொண்டு எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அத்துடன் குறுகிய காலத்தில் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு செல்வது மிகவும் முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே ஜயந்த தனபால மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் 2. மணியவில் நேற்றைய அமர்வு ஆரம்பமாகியது.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த ஜயந்த தனபால கூறியதாவது:

இந்த தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவானது ஒரு வருடம் தாமதித்து நியமிக்கப்பட்டுள்ளது என்று முதலில் கூறுகின்றேன். நாம் கடந்தகாலங்களில் இருந்து அதிகளவில் படிப்பினைகளை பெறக்கூடியதாகவுள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய பயங்கரவாத பிரச்சினைக்கு புலிகளின் செயற்பாடுகள் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. மாறாக கடந்தகாலங்களில் கொண்டுநடத்தப்பட்ட தவறான ஆட்சி முறைகளும் ஒரு காரணமாகும். தவறான ஆட்சி முறைமைகள் குழுக்கள் ஆயுதங்களை எடுப்பதற்கு காரணமாகியது.

தற்போதைய நிலைமையில் நாட்டில் அரசியலமைப்பு திருத்தங்கள் விரைவாக முன்வைக்கப்படவேண்டும். அதாவது வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களை கருத்திற்கொண்டு இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கு உயர்ந்த முக்கியத்துவத்தை நாம் வழங்கவேண்டியுள்ளது. அந்த தேவை தற்போது அவசரமாகவுள்ளது. உங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதனை உடனடியாக முன்வைக்கவேண்டும். அதாவது அரசியலமைப்பு திருத்தங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக அமையவேண்டும். ஒருவேளை உணவு தேவையாக இருந்தாலும் சிறுவர் கல்வியாக இருந்தாலும் முரண்பாடாக இருந்தாலும் அவற்றுக்கானன தீர்வுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவேண்டும். அரசியலமைப்பு அனைத்து விடயங்களையும் உறுதிபடுத்தவேண்டும்.

மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை மக்கள் முன் வெளியிடப்படவேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் பட்சத்தில் அதனை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

எந்தவொரு மக்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் கல்வி செயற்பாடுகள் அமையவேண்டும். நாட்டின் கல்வி திட்டம் தொடர்பில் நாம் பாரிய வகையில் ஆராயவேண்டியுள்ளது. கடந்தகால பிரச்சினைகளுக்கு பல காரணங்களை முன்வைக்கலாம். ஆனால் சிறப்பான எண்ணக்கருக்கள் ஏற்படும் வகையில் கல்வி முறைமை அமையவேண்டும் என்பது முக்கியமாகும். மேலும் அனைத்து மொழிகளையும் அனைவரும் கற்கும் வகையில் கல்வி முறைமை அமையவேண்டும். இது தொடர்பில் என்னால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முடியும். இதற்கு முன்னரே இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் பல்வேறு மொழிகளை கொண்டுள்ளதை நாம் காண்கின்றோம். அவற்றை நாம் உதாரணமாக எடுக்க முடியும். புலமைப் பரிசில் கிடைக்குமிடத்து வெளிநாட்டு மொழிகளை கற்கின்றனர். எனவே அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். இது தொடர்பில் கற்பித்தலும் சிறப்பாக அமையவேண்டும்.

அடுத்ததாக புலம் பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது. முக்கியமாக பல்வேறு காரணங்களினால் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கும் அபிலாஷைகள் உள்ளன. அதாவது அநீதிகள் முரண்பாடுகள் பொருளாதார காரணங்கள் என்பவற்றினால் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அந்தக் காரணங்களை நாம் மதிக்கவேண்டும். எனவே அவர்களுடன் சிறப்பாக செயற்படுவது தொடர்பில் ஆராயவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களின் கணிப்பீடு தேவை

மேலும் சரியான மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் புலம் பெயர் மக்களுடன் சிறப்பான முறையில் இணைந்து செயற்படலாம் என்று நம்புகின்றேன். அவர்களை இந்த நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தூண்ட முடியும். இல்லாவிடின் தவறான புரிந்துகொள்ளல்கள் இடம்பெறலாம். மேலும் சர்வதேச ரீதியில் இலங்கை புலம் பெயர் மக்களின் எண்ணிக்கை தொடர்பில் கணிப்பீடு ஒன்று செய்யப்படவேண்டும். இது தொடர்பில் தூதுவர்கள் சிறப்பாக செயற்படவேண்டும். இந்தியா அமெரிக்காவில் தனது நாட்டு மக்கள் தொடர்பில் இவ்வாறு வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு அதிகளவில் நிதி தேவைப்படும்.

அடுத்த விடயமாக எமது நாட்டின் இராஜதந்திர சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு பல பொறுப்புகள் உள்ளன. வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் அனைத்து மொழிகளிலும் இடம்பெறவேண்டும். அனைத்து மொழி பேசுபவர்களும் இந்த சேவையில் உள்ளடக்கப்படவேண்டும். எமது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு இராஜதந்திர சேவை ஊடாக தெளிவுபடுத்தவேண்டும். இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்களில் ஈடுபடவேண்டும். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தவேண்டும். ஏற்கனவே அரசாங்கத்தினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அதாவது சர்வதேசத்துக்கு சிறந்த முறையில் விளக்கமளிப்புகள் வழங்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி அரசியல் தீர்வு விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேசத்துக்கு அறிவிக்கவேண்டும்.

மனித உரிமை விடயம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேசத்துடன் நாம் செயற்படுகையில் மனித உரிமை விடயம் என்பது மிகவும் முக்கியமாகும். அதாவது சர்வதேச ரீதியில் பல உடன்படிக்கைகளில் நாங்கள் கைச்சாத்திட்டுள்ளோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் உரிமையை நாம் மதிக்கவேண்டும். மேலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஆராயவேண்டும்.

அடுத்த விடயமாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் குறித்து நாம் ஆராய்கின்றோம். அதாவது கடந்தகாலங்களில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பை தோற்கடித்துள்ளோம். இந்நிலையில் சிவிலியன்களின் பாதுகாப்பு குறித்தே சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்றன. இந்த சட்டங்களின் நோக்கம் இதுவாகும். பயங்கரவாத அமைப்பானது சிறுவர் போராளிகளை இணைத்துக்கொள்ளும் சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தும். சொத்துக்களை அழிக்கும் உயிர்களை அழிக்கும். அவ்வாறான ஒரு அமைப்பை அரசாங்கம் ஒன்றின் இராணுவம் எவ்வாறு தோற்கடிக்கவேண்டும் என்று சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்றன.

மனிதாபிமான சட்டங்களில் மீளாய்வு தேவை

இந்நிலையில் இவ்வாறான நிலைகளில் அரசாங்க இராணுவம் எவ்வக்ஷிறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் மீள ஆராயவேண்டியுள்ளது. அதாவது எமது நாட்டில் சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றோர் உள்ளனர். அவர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து சில யோசனைகளை தயாரித்து முன்வைக்கலாம். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் எமது இராணுவத்தினர் சுமார் மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்தனர். அதாவது மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட மக்களை இராணுவத்தினர் காப்பாற்றினர். இராணுவத்தினர் பல்வேறு தியாகங்களை செய்தே இந்த பணியை மேற்கொண்டனர். இதனை சர்வதேசத்துக்கு காட்டியிருக்கவேண்டும். அதன்போது சர்வதேச அபிப்பிராயத்தை சிறந்ததாக கொண்டுவந்திருக்கலாம். எமது இராணுவத்தினர் சிவிலியன் இழப்புக்களை குறைத்தனர். இந்நிலையில் கிளர்ச்சிக் குழுக்களுடன் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் புதிய கட்டமைப்பை ஒன்றை உருவாக்கவேண்டும். எனவே சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் நாம் ஆராயவேண்டும். எவ்வாறெனினும் சிவிலின்களை பாதுகாப்பது எமது கடமையாகும்.

சிவிலியன்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது தற்போது எமக்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் தனித்துவ சந்தர்ப்பம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளோம். அதாவது ஆயுதமற்ற சமூகத்தை நாம் உருவாக்கவேண்டும். புலிகளின் கிளர்ச்சி மற்றும் 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி எமக்கு அனுபவங்களை தந்துள்ளன.

இந்நிலையில் சகல குழுக்களிடமிருந்தும் ஆயுதங்கள் அகற்றப்படவேண்டும். அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை வைத்திருக்கலாம். மாறாக ஏனையவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படவேண்டும். யுத்த காலத்தில் பல இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். அந்த ஆயுதங்கள் தொடர்பில் ஆராயவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதைக்கு முற்றுப்புள்ளி என்று ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். எனவே தற்போதைய நிலைமையில் ஆயுதங்களுக்கு முற்றுப்புள்ளி என்று ஒரு வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவேண்டும். அது எமது சர்வதேச கடமையாகவுள்ளது. எனவே அதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் தேசிய பிரசாரம் செய்யப்படவேண்டும். இன மற்றும் மத சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதன் மூலம் நிறுவனம் ஒன்று அமைக்கப்படவேண்டும். அதனூடாக இனம் மதம் ஆகியவற்றின் உரிமைகள் உறுதிபடுத்தப்படவேண்டும். யாருக்கும் அநீதிகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.

அடுத்த விடயமாக உடனடியாக நாட்டில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெறவேண்டும். பாதுகாப்பு படைகளில் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள் இடம்பெறவேண்டும். ஏற்கனவே பொலிஸ் துறையில் இவ்வாறு இடம்பெறுகின்றது என்பதனை அறிவேன். ஆனால் பாதுகாப்பு படைகளிலும் இந்த விடயம் கொண்டுவரப்படவேண்டும்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்வுகளில் தமிழில் பேசுவது சிறப்பான விடயமாகும். இது ஏனைய மொழிகளை மதிப்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றது.“ இதனை ஏனைய அமைச்சர்கள் பின்பற்றவேண்டும். அரசியல்வாதிளும் பின்பற்றவேண்டும். கடந்தகால தவறுகள் மற்றும் இனப் நெருக்கடிக்கு காரணமாகவிருந்த ஆட்சி முறைகள் தொடர்பில் நாட்டின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான பொறுப்பு என்ற அடிப்படையில் ஒருமித்த மன்னிப்புக் கோரவேண்டும். இவ்வாறு மன்னிப்பு கோரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. வெறுமனே ஒரு சமூகத்தை குறைகூற முடியாது. இதனை சர்வகட்சி குழுவின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ செய்ய முடியும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன். கடந்த கால தவறுகளுக்கு ஆட்சி முறைமைகளே காரணமாகும்.

இங்கு ஒரு விடயத்தை முன்வைக்கின்றேன். அதாவது 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்றதும் அப்போதைய பேராயராக இருந்த லக்ஷ்மன் விஜேசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதாவது சிங்கள மக்கள் சார்பாக தான் மனிப்புக் கோருவதாக அவர் அதில் தெரிவித்திருந்தார். அவ்வாறான விடயம் இங்கு அவசியம் என்று நான் கருதுகின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

மாத்தளையில் ஆசிரியரை கடத்த முயற்சித்த நால்வர் கைது

மாத்தளையில் ஆசிரியர் ஒருவரைக் கடத்துவதற்கான முயற்சி தோல்வி அடைந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப் பட்டுள்ளவர்களில் இருவர் உக்குவலை இரானுவ முகாமில் கடடுயாற்றும் இரு இராணுவ சிப்பாய்கள் எனக் கூறப்படுகிறது.

மேற்படி சந்தேக நபர்கள் பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப் பட்டதுடன் நன்கு அடி உதை கொடுத்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள வத்துகாமத்தில் தொண்டர் குழுக்கள் நியமனம்



டெங்கு ஒழிப்பு வாரத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள வத்துகாமம், பாத்ததும்பறைப் பிரதேச சபை 68 தொண்டர் குழுக்களை அமைத்துள்ளது.

டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி விசேட செயலணியின் ஆலோசனைப்படி இத்தொண்டர் அமைப்பு வீடு வீடாகச் சென்று பொது மக்களை அறிவுறுத்துவதுடன் இன்னும் பல பணிகளை மேற்கொள்வர்.
மேலும் இங்கே தொடர்க...

ஹோட்டலில் காசு கொடுக்காமல் ஏமாற்றிய அவுஸ்திரேலியர் கைது

தம்புள்ளை கண்டலம சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்துவிட்டு 7 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாவுக்கான ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் சென்ற அவுஸ்திரேலியர் ஒருவர் காலியில் சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த போது, தம்புள்ளை உதவி பொலிஸ் அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்றி னால் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கண்டலம ஹோட்டலில் தங்கியிருந்தபோது ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் சென்றிருந்தார்.

அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் ஒரு முறை சுற்றுலாப் பயணத்துக்காக இலங்கைக்கு வந்திருக்கலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர். இது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஜயந்த தனபால சாட்சியம்


இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைப் பொறுத்தவரையில், நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிக ளென்றும் இந்தக் கட்சிகள் இதற்கான தார்மீக பொறுப்பை ஏற்று வெளிப்படையாகக் கூட்டு மன்னிப்பைக் கோரும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட பிரதான உந்துதலைக் கொடுக்குமென்றும் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் இராஜதந்திரியுமான ஜயந்த தனபால தெரிவித்தார்.

அதேநேரம் இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை இயற்ற வேண்டுமென்றும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (25) சாட்சியமளிக்கையில் அவர் பரிந்துரைத்தார்.

இந்த நாட்டின் பிரச்சினைக்குப் பிரபாகரன் மட்டும் காரணம் அல்ல. இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள்தான் பொறுப்புக் கூற வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் துரிதமாக மாற்றங்களைச் செய்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த ஆணைக்குழு விசாரணை முடியும்வரை இதற்கு காத்திருக்கக்கூடாது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தமிழில் உரையாற்றுவதைப் போல் எதிர்க்கட்சியினரும் பின்பற்றினால் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான ஓர் ஆரம்பமாக அமையுமென்றும் ஜயந்த தனபால குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர்,

மனித உரிமைகளைப் பேணி இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இன மற்றும் மத நல்லுறவுச் சட்டமொன்றை உருவாக்க வேண்டும். இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஜனாதிபதியின் செயல் திட்டம் வெற்றியளித்திருக்கிறது. அதுபோல் ஆயுதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், அரச படைகளைத் தவிர எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது என்ற சட்டம் இருந்தது.

அதுபோல், பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட அரச பாதுகாப்புப் பிரிவினரைத் தவிர வேறு அமைப்புகள், தனி நபர்கள் ஆயுதம் வைத்திருப்பது மக்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்காது. அதேவேளை, பொலிஸ் சேவைக்குத் தமிழர்களைச் சேர் த்துக் கொள்வதைப் போன்று முப்படையிலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அரசியலமைப்பில் மக்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஒரு சிறு குழு சேர்ந்து அரசியலமைப்பை உருவாக்குவதைவிட கிராமிய மட்டத்தில் மக்களின் கருத்துகளும் அறியப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயக விழுமியத்தைச் சரியாகப் பேண முடியும்.

சர்வதேச சமூகத்துடன் செயலாற்றுவது சவால் மிக்க விடயமாகும். முரண்பட்டுக்கொண்டு நாம் செயற்பட முடியாது. இலங்கையின் நிலவரத்தை அறிவதற்கு அவர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். இராஜதந்திர மட்டச் செயற்பாட்டை இன்னும் விளைதிறன் மிக்கதாக மேம்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களைக் கவர்வதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் இலங்கையர்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் என்பதைப் பற்றிய தரவுகளைத் திரட்ட வேண்டும். அதற்கு நமது வெளிநாட்டுத் தூதுவர்களை, இலங்கையர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தொடர்பில் அந்நாடு சிறந்த பணியை ஆற்றுகிறது.

அதேபோல நாமும் நமது பணிகளை விரிவாக்க வேண்டும்.

உயிரிழந்த புலி உறுப்பினர்களின் மயானங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சென்று அவர்களுக்கு கெளரவம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ.எஸ்.பி. சலுகையை நீக்கியதால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை


ஜீ. எஸ். பி. சலுகையை ஐரோப்பிய யூனியன் மீளப் பெற்றுக்கொண்டமை இலங்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தொழிற்சாலையாவது மூடப்படவில்லை என்பதுடன் ஒரு தொழிற்சாலை ஊழியராவது வேலையை இழக்கவும் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஒரு சில தொழிற்சாலைகள் அண்மைக் காலத்தில் மூடப்பட்டன. அதிக சம்பள பிரச்சினை, கடுமையான தொழில் சட்டம், முகாமைத்துவத்தின் பிணக்குகள் காரணமாகவே அவை மூடப்பட்டதேயொழிய ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக அல்ல என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலீட்டு சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தற்போது உள்ள 7400 வேலை வாய்ப்புகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக ஆடைக் கைத்தொழில் துறையில் ஈடுபட்டிருந்த சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கூறப்படுவதை பிரதி அமைச்சர் நிராகரித்தார்.

ஐரோப்பிய யூனியன் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கப்போவதில்லை என்று கூறிய பிரதி அமைச்சர், ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தைத்த ஆடைகளில் 70 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜீ. எஸ். பி. சலுகை மீளப்பெறப்பட்டதால் எமது நாடு மட்டுமே பாதிக்கப்படும் என்று கூறுவது சரியல்ல. எமது உற்பத்திகளை வாங்குவோர் அவற்றுக்கான விலைகளை கொடுக்கும்போது அவர்களும் மோசமாக பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மீளப்பெறப்பட்ட ஜீ.எஸ்.பி. சலுகையை மீண்டும் பெறுவதற்கான பேச்சுவார்த் தைகளை அரசாங்கம்
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் விமான விபத்து: 43 பேர் பலி


சீனாவில் செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
÷இந்த விபத்து ஹெய்லோங்ஜியாங் மாகாணம் இசுங் நகரில் உள்ள லிண்டு விமான நிலையத்தில் நடந்தது.
÷ஹர்பின் நகரிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், இசுங் நகரில் உள்ள லிண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பனிமூட்டம் காரணமாக ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நேரிட்ட போது விமானத்தில் 91 பயணிகள் இருந்தனர்.
÷விபத்துக்குள்ளான விமானம் ஹேனான் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த விமான நிறுவனம் சீனாவின் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

தஞ்சம் கோரிய தமிழ் அகதிகளை சிறையில் அடைக்க கனடா உத்தரவு






அடைக்கலம் கோரி கனடாவில் தஞ்சமடைந்த 443 இலங்கைத் தமிழர்களை சிறையிலேயே வைத்திருக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி எம்.வி. சன் சீ எனும் சரக்குக் கப்பலில் சென்ற இலங்கைத் தமிழர்களை கனடா மற்றும் அமெரிக்க கடற்படை கண்டுபிடித்தது. இவர்கள் அனைவரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 380 பேர் ஆண்கள், 63 பேர் பெண்கள், 49 பேர் குழந்தைகளாவர்.
தங்களுக்கு கனடாவில் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கனடாவின் குடியேற்ற மற்றும் அகதிகள் வாரியம் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
அகதிகளாக வந்தவர்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அகதிகள் குறித்த ஆவணங்களை அளிக்க கால அவகாசம் தேவை என குடியேற்ற துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகச் சிறிய குழந்தைகள் பெற்றோர்களுடன் சிறையிலும், கொஞ்சம் பெரிய குழந்தைகள் காப்பகங்களிலும் பராமரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா நாட்டு சட்டப்படி அகதிகளாக தஞ்சம் கோருவோர் முதலில் சிறையில் அடைக்கப்படுவர். பின்னர் குடியேற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி, தஞ்சம் கோருவோரைப் பற்றிய தகவலைத் திரட்டுவர். இதன் பிறகே அகதிகளாக தஞ்சம் அளிக்கலாமா என்பது தீர்மானிக்கப்படும்.
சன் சீ சரக்குக் கப்பல் 90 நாள் பயணமாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளது. இறுதியில் கடனா கடல் எல்லையில் பயணிக்கும்போது கடற்படையினர் இடைமறித்து இந்த கப்பலை பரிசோதித்ததில், கப்பலில் பயணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கனடாவுக்கு கடந்த ஓராண்டில் வந்துசேரும் இரண்டாவது அகதிகள் கப்பல் இதுவாகும். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து பலர் வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...