22 டிசம்பர், 2010

அகதி முகாம்களில் உள்ள மக்கள் மழையினால் பெரும் அவலம்: மாவைசேனாதிராஜா

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அகதிமுகாம்களில் உள்ள மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை எதிர்நோக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜாவும் வடகிழக்கில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்க விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அவருடைய விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் தற்போது பெய்துவரும் கடும் மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் முகாம்களில் தங்கியுள்ள மக்களே அவலங்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் இவர்களுக்கான கூடாரங்களோ, தங்குமிட வசதிகளோ இல்லை. எனவே இதனைக் கருத்திற் கொண்டு மீள்குடியேற்ற அமைச்சிடம் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

இதனை அடுத்தே மீள்குடியேற்ற அமைச்சர் வடகிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார். எனினும் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் இன்னமும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே அரசாங்கம் இவற்றைக் கருத்திற் கொண்டு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாடசாலை மாணவியரை நிர்வாணமாகப் படம் எடுத்த வைத்தியர்

பாடசாலை மாணவியரை நிர்வானமாக்கி புகைப்படம் பிடித்த மாவனெல்லை, ஹெம்மாத்தகம வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் ஒருவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதவான் தள்ளுபடி செய்து இவ்வுத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

வடமத்திய மாகாணத்தில் உள்ளோர் மழைநீரை அருந்துவது சிறந்தது – ஆய்வில் தகவல்

சிறுநீரக வியாதியில் இருந்து தம்மைக்காத்துக் கொள்ள வடமத்திய மாகாணத்திலுள்ளோர் மழை நீரை அருந்துவது சிறந்தது எனத் திடுக்கிடும் தகவலை பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய குழுவொன்று கூறுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழக வைத்தியத்துறையைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட மற்றுமொரு ஆய்வின் மூலம் சிறுநீரக வியாதியை ஏற்படுத்துகின்ற பச்சை அல்கா எனும் தாவரத்தின் தாக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள கிணற்று நீரிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி தம்மிகா மெனிக்கே திசாநாயக்க தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வின் படி வடமத்திய மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் வளர்கின்ற நீலநிற பச்சை அல்காக்கள் (புலூகிறீன் அல்கா) உற்பத்தி செய்யும் ஒருவகை நச்சுப் பொருளே சிறு நீரகப் பாதிப் பிற்குக் காரணம் என ஏற்கனவே தெரிவித்தனர்.

இதே தாவரங்கள் கிணற்று நீரிலும் ஊடுறுவியுள்ளதாக அந்த ஆய்வில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விக்கிலீக்ஸ் விவகாரம் தொடர்பில் அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பேச்சு

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டேனிஸை நேற்று அழைத்து பேச்சு நடத்தியுள்ளார்.

விக்கிலீக்ஸ் விவகாரம் தொடர்பில் இந்த சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் ஹிலாரி கிளின்டனுக்கு அண்மையில் அனுப்பிய கடிதம் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. வெளிவிவார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் அனுப்பிய கடிதம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை அமைச்சர் அமெரிக்க தூதுவருக்கு விளக்கிக்கூறியுள்ளார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் கடந்தகால தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அந்த ஆணைக்குழு செய்யவுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் அமைச்சர் அமெரிக்க தூதுவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு கொழும்பில் 35 அமர்வுகளை நடத்தியுள்ளதாகவும் 85 பேர் சாட்சியமளித்துள்ளதாகவும் மேலும் வடக்கு கிழக்கிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடத்தப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் இடைக்கால பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைசச்ர் பீரிஸ் அமெரிக்க தூதுவருக்கு கூறியுள்ளார்.

மேலும் இவ்வருடம் மே மாதம் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்து தான் பேச்சு நடத்தியதையும் அதன்போது நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்த கருத்து தொடர்பிலும் அமைச்சர் தூதுவரிடம் நினைவுகூறினார்.

இதேவேளை விக்கிலீக்ஸ் இணையதளம் ஊடாக அமெரிக்க தொடர்பு ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அமெரிக்க தூதுவரும் வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடியுள்ளனர். இரகசிய தகவல்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள் முடியாது என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் என்று இதன்போது பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விக்கிலீக்ஸ் இணையதயளத்தில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகளை அடிமைகளாக விற்றல் சிறுவர்கள் முகாம்களில் வேலை செய்ததாகவும் சிறுமிகள் விபசாரத்துக்காக அனுப்ப்பபட்டதாகவும் வெளிவந்த தகவல்கள் இலங்கையை மதிப்பிழக்க செய்வதற்கக்ஷிக புனையப்பட்டவை என்றும் அவை உண்மைக்கு அப்பாற்பட்டவையாகும் என்றும் தெரிவித்துள்ளார். இவை இராஜதந்திர றோக்கங்களுக்கு எதிரான தகவல்கள் என்றும் இதன்போது தெரிவிக்க்பபட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர்கள் குழுவை அழைத்து வருவதில் அரசுக்குள் குழப்பம்:ஐ.தே.கஇலங்கை விவகாரம் தொடர்பிலக்ஷின ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவை அழைத்து வருவதில் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. நிபுணர்கள் குழுவின் இலங்கை வருகைக்கு சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாக அறிவித்த வெளிவிவகார அமைச்சு தற்போது அந்த குழுவின் நோக்கத்தை வெளிநாடொன்றில் நிறைவேற்றவிருப்பதாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு கேம்பிரிஜ் டெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.தே.கவின் மேல்மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரின் சந்திப்பின்போதே லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு இலங்கை வரவிருப்பதான அறிவிப்பினையும் அதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அந்தக் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சே முன்னர் அறிவித்திருந்தது. ஆனாலும் இன்று (நேற்று) அதன் இணையத்தளத்தில் மேற்படி குழுவானது இலங்கை வராத அதேவேளை பிரிதொரு நாட்டுக்கு அழைக்கப்பட்டு அங்கு இலங்கை தொடர்பான அதன் எதிர்பார்ப்புகள் குறித்து பேச்சு நடத்தவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது நிபுணர் குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதா இல்லையா என்றும் பிறிதொரு நாட்டுக்கு அழைத்து வந்து பேச்சு நடத்துவதா என்பது தொடர்பிலும் தீர்மானங்களை எடுக்க முடியாத அளவில் அரசாங்கம் குழம்பிப் போய் நிற்கின்றது.

அரசாங்கத்தின் கூட்டுக் கட்சியினருக்கும் எதிர்த்தரப்பினருக்கும் பதில் கொடுக்க முடியாத நிலையில் அரசு இன்று தெளிவற்று காணப்படுவதை அறிய முடிகின்றது. போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் இந்நாட்டின் கௌரவத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கான ஒரே நபர்தான் யுத்த வீரனான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆவார். எனவே அவரை அந்த குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்றே நாம் கேட்கிறோம் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ.நா நிபுணர் குழுவிடம் போதிய சாட்சியங்கள்: சம்பிக்க ரணவக்க
போர் குற்றங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து சாட்சியங்களையும் ஐ.நா.வின் நிபுணர் குழு சேகரித்துவைத்துள்ளது.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலேயே தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை ஐ.நா. நிபுணர் குழு சந்திக்கவுள்ளது. ஐ.நா.வின் தேவைகளுக்காக சர்வதேசம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் எமது இராணுவத்தை சிக்க வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கழுத்தை வெட்ட வருபவனுக்கு யாராவது வாளை தீட்டிக்கொடுப்பார்களா? இவ்வாறான புத்தி சாதுரியமற்ற செயலையே அரசாங்கம் செய்துள்ளது. எனவே ஐ.நா. நிபுணர் குழு இலங்கை வந்தால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்க் கிழமை தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் யுத்தம் காணப்பட்ட காலப்பகுதியில் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா. உள்ளிட்ட பல நாடுகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டன. யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் புலிகளின் 47 தலைவர்களை பாதுகாக்க அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரத்தயார் நிலையில் இருந்தது. இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் அமெரி“க்க தூதுவராகயிருந்த ரொபட் ஒ பிளேக் ஆவார்.

இதைத்தவிர புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க பான் கீ மூன் நேரடியாகவே இலங்கை வந்திருந்தார். இதைத் தவிர எத்தனையோ சர்வதேச நபர்கள் இலங்கை வந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அனை அனைத்தையும் இராணுவ வீரர்களும் இந்த நாட்டின் தேசப்பற்றுள்ள சத்திகளும் தோற்கடித்தனர். தற்போது போர்க் குற்றங்களின் அடிப்படையில் இலங்கையின் இராணுவ மற்றும் அரச தலைவர்களை கைது செய்ய ஐ.நா. உள்ளிட்ட பல தரப்புகள் செயற்படுகின்றன. இதுவரையில் ஆயிரத்து 100 சாட்சியங்களை இலங்கைக்கு எதிராக ஐ.நா. நிபுணர் குழு சேகரித்துக் கொண்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் மேற்படி நிபுணர் குழுவை இலங்கைக்கு அழைத்தமையானது ஏற்றுக்கொள்ளக் கூடிய தொன்றல்ல.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற உள்ள மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் மிக வலுவான இலங்கைக்கு எதிரான அறிக்கையினை பான் கீ மூனின் நிபுணர் குழு சமர்ப்பிக்கும். இதனால் இலங்கை தப்பிக்க முடியாத நிலையில் போர்க் குற்றச் சாட்டுக்கள் சிக்கிவிடும். இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் தற்போது எமக்கு உதவி செய்யும் நாடுகளால் உதவி செய்ய முடியாத நிலையே ஏற்படும்.

எனவே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினருடனான பான் கீ மூனின் நிபுணர் குழு சந்திப்பை உடனடியாக தடுத்து நிறுத்தி அக்குழுசார் உறுப்பினர்களை இலங்கைக்கு வர தடைவிதிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால். தேசப்பற்றுள்ள கட்சி என்ற வகையில் தீர்க்கமான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

பல தேவைகளுக்காக சர்வ÷ தசம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் சிக்க எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வையாளர்கள், காவலர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் சிறைக்குள் கைத்தொலைபேசிகளை எடுத்துச்செல்ல முற்றாக தடை


உடலுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட கைத்தொலைபேசிகள் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன - சிறைச்சாலை ஆணையாளர்
நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளுக்கும் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் முதல் சிறைக் காவலர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என எவரும் கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதனையடுத்து களுத்துறை, மாத்தறை சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.

சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி தடை செய்யப் பட்டிருந்தாலும் சில கைதிகள் தொலைபேசியை உடலுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வருவதால் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகக் கூறிய ஆணையாளர் நாயகம் சில்வா, அண்மையில் சில கைதிகளின் உடலில் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கையடக்கத் தொலைபேசிகளை அகற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தற்போது சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும்வரை மனிதாபிமான நடவடிக்கை

பயங்கரவாதம் ஏற்படுத்திய துயர் நீக்கப்படும் - ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும் வரை மனிதாபிமான நடவடிக் கைகள் தொடரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளும் மனிதாபிமான நடவடிக்கைகளே என குறிப்பிட்ட ஜனாதிபதி; அப்பிரதேச மக்கள் மனதிலிருந்து பயங்கரவாதத்தின் துயர நினைவுகள் நீங்கி பிரிவினைவாத எண்ணம் இல்லாதொழியும் வரை மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

நாம் யுத்தம் செய்யவில்லை, அவ்வாறு யுத்தம் செய்திருந்தால் பயங்கரவாதத் தலைவர் ஒழிக்கப்பட்ட போதே அது நிறைவு பெற்றிருக்கும். நாம் மனிதாபிமான நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். இந்த மனிதாபிமான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் அது தொடரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரியில் கெடட் பிரிவு உத்தியோகத்தர்களாக பயிற்சி பெற்ற 253 படை வீரர்கள் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் வெளியேறினர்.

இவர்கள் தமக்கான பதவி நிலையை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் பாதுகாப்பமைச்சரும் முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே. ஜயசூரிய உட்பட உயர்மட்ட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கெடட் பிரிவின் 68, 69, 71, 68 பீ. எஸ்.சி. 18 தொண்டர் படை மற்றும் கெடட் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களும் தமக்கான பதவி நிலையை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி; தோல்வியுற்ற பயங்கரவாதிகள் இன்றும் பல சர்வதேச நாடுகளில் முகாமிட்டுள்ளனர். இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு, நிராயுதபாணியான மக்களை எமது படையினர் கொலை செய்தனர் என்று கூறப்படும் குற்றச் சாட்டே நவீன ஆயுதமாகவுள்ளது. அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம்.

படையினர் மட்டும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இந்த நாட்டு மக்களும் பயங்கரவாதத்துக்கு எதிராக அணிதிரண்டனர். கடந்த 30 வருட காலம் அவர்கள் பயங்கரவாதத்தின் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து சளைக்காது பூரண பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கையில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியாமையே நாம் அவர்களுக்குச் செய்யும் உயர் கெளரவமாகும்.

பயிற்சிகளை முடித்துக் கொண்டு இன்று வெளியேறும் இந்த இளைஞர்கள் நாட்டில் பயங்கரவாதம் உக்கிரமடைந்திருந்த போது பயிற்சியில் இணைந்தவர்கள். அதேபோன்று நாடு பற்றிய தீர்க்கமான சிந்தனையுடன் அவர்களது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை படைக்கு அனுப்பி தியாகங்களைப் புரிந்துள்ளனர்.

அவர்களுக்கு நாட்டு மக்களின் சார்பில் எனது கெளரவம் உரித்தாகட்டும்.

தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரி வரலாற்றில் இடம்பிடித்த ஒன்றாகும். நாட்டைப் பாதுகாப்பதற்காக இக் கல்லூரி வழங்கியுள்ள பங்களிப்பு மிக உயர்வானதும் பாராட்டுக்குரியதுமாகும். இதுவரை இங்கு பயிற்சி பெற்றோர் மூன்று இராணுவத் தளபதிகளும் பாதுகாப்புச் செயலாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

தமது இறுதி சொட்டு இரத்தத்தையும் தாய் நாட்டுக்காக ஈந்த படைவீரர்களினால் தான் இன்று நம் நாடு உலகின் பாராட்டுக்களை பெறும் நாடாகியுள்ளது. அவர்களின் அளப்பெரிய அர்ப்பணிப்பை புதிய படை வீரர்கள் மதிக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டை நேசித்தனர். நீங்களும் இந்த நாட்டை நேசிக்க வேண்டும்.

நாட்டை நேசிக்காத ஒருவர் எத்தகைய திறமைகளைக் கொண்டிருப் பினும் பயனில்லை.

பிரிவினை வாதத்தைத் தோற்கடிக்க புறப்பட்டுள்ள நீங்கள் 60களில் ஆரம்பமான பிரிவினை வாதத்தையும் 70 களில் ஆரம்பமான பயங்கர வாதத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதைபற்றிய தெளிவு உங்களுக்கு மிக அவசியம். நாட்டுக்காக மனதால் மட்டுமன்றி அறிவுத் திறனையும் உச்சளவில் நீங்கள் உபயோகிக்க வேண்டும்.

திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம். பல்வேறு விடயங்களைப் போன்று தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழியறிவும் முக்கியமானதாகும். படை வீரர்களுக்கு ஒழுக்கமே தலை சிறந்ததாகும். ஜனநாயகத்தை மதித்து செயற்படும் ஆசியாவின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை யாகும். பாதுகாப்புப் படையினரிடம் காணப்பட்ட ஒழுக்கமே எமது ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க உதவியது.

நாட்டின் சம்பிரதாயங்கள், கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு நீங்கள் தயாராக வேண்டும்.

அத்துடன் பெற்றோரை மதித்து அவர்களின் எதிர்பார்ப்பையும் ஈடேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு.

எனது முதலாவது தெரிவும் இரண்டாவது தெரிவும் மூன்றாவது தெரிவும் எனது தாய் நாடே. அதே போன்று நீங்களும் தாய்நாட்டின் மீது கெளரவமும் அன்பும் செலுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கமராக்கள் மூலம் கொழும்பை கண்காணிக்கும் பணி 29ல் ஆரம்பம்


பாதுகாப்பு கமராக்களினூடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணிகள் எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டு வரும் சி.சி.சி.வி. கெமராக்களினூடாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட ஏற்பாடாகியிருந்தது. ஆனால் மேற்படி திட்டம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி கூறினார்.

முதலில் இந்த திட்டம் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட உள்ளதோடு அடுத்து ஏனைய சகல பிரதான நகரங்களில் கமராக்களை பொருத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு நகரில் உள்ள பிரதான இடங்களில் கமராக்கள் பொருத்தப்பட்டு அதனை கவனிக்க விசேட பொலிஸ் குழு வொன்றும் நியமிக்கப்படவுள்ளது. குற்றச் செயல்கள் விபத்து என்பவற்றை கண்காணிக்கும் நோக்குடனே கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கிளி., முல்லை., மக்களுக்கு வெள்ள நிவாரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு


மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சகல வேலைத் திட்டங்களுக்கும் தமிழ்த் தேசிய கூட் டமைப்பு ஒத்து ழைப்பு வழங் கும் என யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா நேற்று கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் உதவிகள் குறித்தும் அவர் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வைபவம் நேற்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனின் தலைமையில் நடைபெற்றது. சுமார் 5242 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டன. துணுக்காய் பிரதேச மக்களுக்கு நிவாரண உதவிகள் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் கூறியதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்காக நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சரும், பிரதி அமைச்சரும் உதவி அளித்து வருகின்றனர். இது குறித்து எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 30 வருட யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசம் 30 வருடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளது. யுத்தத்தினால் முல்லைத்தீவு மக்கள் ஓரிரு தடவைகள் மட்டுமன்றி பல தடவைகள் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பது குறித்து நானும், செல்வம் அடைக்களநாதனும் அமைச்சருக்கு அறிவித்தோம்.

அமைச்சர் இது குறித்து ஜனாதிபதியுடன் பேசி 45 மில்லியன் பெறுமதியான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

முல்லைத்தீவு அரச அதிபர் என் வேதநாயகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 4500 ரூபாய் பெறுமதி வாய்ந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் வைபவம் செட்டிகுளத்தில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாக தூத்துக்குடியிலிருந்து பிரதான நகரங்களுக்கு ரயில் சேவை

இலங்கை - இந்திய அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைஇலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாகத் தொடர் ரயில் சேவைகளையும் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர் ரயில் சேவைகளை நடத்துவது பற்றி இலங்கை - இந்திய அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.

கோபியோ (வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கான அமைப்பு) பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கமைய இந்திய உயர் ஸ்தானிகர் இதற்கான உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தினகரனுக்கு தெரிவித்தார்.

கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கான ரயில் சேவையையும் இணைத்து நடத்த வேண்டுமென்றும் அங்கு ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கு இலங்கையிலேயே ஆசனங்களைப் பதிவுசெய்து பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கண்டியிலிருந்து கொழும்பு வந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வழியாக சென்னை செல்ல விரும்பும் ஒருவர், சென்னை வரையிலான கப்பல், ரயில் பயணங்களுக்கான பயணச் சீட்டைக் கண்டியிலேயே பெற்றுக் கொள்ள வசதிசெய்ய வேண்டு மெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

இதற்கமைய நடவடிக்கை எடுப் பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக பிரபா கணேசன் எம்.பி. கூறினார்.

இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற ‘கோபியோ’ சந்திப் பில் பிரதியமைச்சர் முத்து சிவ லிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் கள் பிரபா கணேசன், வீ. இராதா கிருஷ்ணன், முன்னாள் பிரதி அமை ச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன் னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், குமார் நடேசன், திருமதி சாந்தினி சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...