:
இப்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மூல காரணமான நிதித்துறை சீர்குலைவைத் தடுக்க அத்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது உடனடித் தேவை என்றார் அதிபர் பராக் ஒபாமா.
நாட்டு மக்களுக்கு வானொலியில் ஆற்றிய உரையில் இதை அவர் வலியுறுத்தினார். அமெரிக்கப் பொருளாதாரம் என்றாலே தடையற்ற முதலாளித்துவம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அத்தகைய கடிவாளம் இல்லாத முதலாளித்துவக் கொள்கையால் நாட்டு நலனுக்கே பெருத்த ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது என்பதை உணர்ந்திருப்பதால் நிதித்துறையில் கட்டுப்பாடுகளை விதிக்க முற்பட்டிருக்கிறார் ஒபாமா. அவருடைய பேச்சில் இதை பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார்.
ஒபாமா பேசியதன் சுருக்கம் வருமாறு:
"நிதித்துறையில் சீர்திருத்தம் அவசியம். நுகர்வோரைப் பாதுகாக்கும் முகமையை ஏற்படுத்தவேண்டும். அது நிதித்துறை அளிக்கும் சேவைகளையும் இதர திட்டங்களையும் பரிசீலித்து நன்மை, தீமைகள் குறித்து நுகர்வோருக்கு தகுந்த ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் அளிக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அனைவரும் முன்கூட்டியே உணர முடியும்.
இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் வேண்டாம், இத்தனை ஆண்டுகளாக இருந்த அதே நிலைமை நீடிக்கட்டும் என்று ஆதிக்க சக்திகள் நெருக்குதல் தரும், அவற்றையெல்லாம் அமெரிக்க செனட் (நாடாளுமன்ற) உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்.
நம்முடைய நிதிச் சந்தைகளும் பங்குச் சந்தைகளும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். அதற்குத் தேவைப்படும் எளிமையான, வெளிப்படையான நடைமுறை விதிகளை உருவாக்குவது அவசியம்.
நிதித்துறையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நமக்குப் பொருளாதார நெருக்கடியே ஏற்பட்டது.
பணம் திரும்ப கிடைக்குமா? என்பதை அறியாமல், அதைப்பற்றிக் கவலைப் படாமல் பல வங்கிகள் கேட்டவர்களுக்கெல்லாம் கடன்களை அள்ளி வழங்கின. கடனைத் திருப்பித்தரும் சக்தி அவர்களுக்கு இல்லை, தொழில், வர்த்தகத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டது என்றதும் வங்கித்துறையில் பெருத்த சரிவு ஏற்பட்டது. பல வங்கிகள் திவாலாயின.
பல நிறுவனங்கள் தங்களுடைய திட்டங்கள் என்ன, கடன்களுக்கான நிபந்தனைகள் என்ன என்பதையெல்லாம் வெளிப்படையாக அறிவிக்காமலேயே கடன்களைத் தாராளமாக வழங்கின.
மிகக் குறுகிய காலத்திலேயே தங்களுடைய திட்டங்களில் நிறையப் பேர் சேர வேண்டும்,தங்களுக்குக் குறுகிய காலத்தில் நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல நிதி நிறுவனங்கள் திட்டங்களைச் சகட்டுமேனிக்கு அறிவித்து நுகர்வோர்களைச் சிக்கலில் தள்ளிவிட்டன. கடன் வாங்கியவர்கள் வேலை இழந்து, வருவாய் குறைந்து அவதிப்பட்டதால் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் இல்லை.
இதனால் வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய வட்டியும் அசலும் கிடைக்காமல் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதிலிருந்து மீளும் வழி இல்லாததால் திவால் ஆனது. தடைகளற்ற சுதந்திரமான சந்தை அவசியம் என்பதை நான் எப்போதுமே ஆதரித்து வந்துள்ளேன். சுதந்திரமான சந்தை என்பதற்கும் கட்டுப்பாடுகளற்ற சந்தை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தொழில் முனைவோர்கள், விற்பனையாளர்கள்,வியாபாரிகள் ஆகியோரின் நலன்களைப் போலவே நுகர்வோர்களின் நலன்களும் முக்கியம். எனவே நிதித்துறை வலுவாகவும் துடிப்பாகவும் ஆபத்துகளில் சிக்காமலும் இருப்பது அவசியம்.
பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களின் நலன்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட துணை நிறுவனங்களின் முதலீட்டைக்கூட சிறிதும் முன் யோசனையின்றி சந்தையில் செலவிட்டிருப்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.
இனி இப்படியொரு நிலைமை ஏற்படாதிருக்க தகுந்த வழிமுறைகளை செனட்டர் கிறிஸ் டோட் தலைமையிலான குழு உருவாக்கி வருகிறது. இது சீர்திருத்த மசோதாவில் இடம் பெறும். எந்தவித முன் யோசனையும் இல்லாமல் பங்குச்சந்தை, நிதித்துறை போன்றவற்றில் ஊக பேரம் நடைபெறுவதை இந்த மசோதா தடுக்கும்.
நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பெற வேண்டிய ஊதியம், போனஸ் ஆகியவற்றை பங்குதாரர்களே நிர்ணயிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். நிறுவனங்களின் நிதியைத் தவறாகப்பயன்படுத்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
நுகர்வோர் தங்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், சலுகைகள் ஆகியவற்றின் பின்னணியில் இருப்பவை என்ன என்பதை மூன்றாவது தரப்பாக நிதி பாதுகாப்பு முகமையிடமிருந்து அறிந்து கொள்ள இந்த மசோதா வழி வகுக்கும்.
வங்கித்துறை, நிதித்துறை சீர்திருத்தம் என்பது அவற்றின் சுதந்திரமான நடவடிக்கைகளில் தலையிடுவதாக இருக்காது, அதே சமயம் குறுகிய கால லாபத்துக்காக ஆபத்தான முடிவுகளை எடுக்காமல் தடுக்கும்' என்றார் ஒபாமா.
மேலும் இங்கே தொடர்க...