20 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவும் ராஜினாமா




முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென தாம் வகித்து வந்த பதவியை அனோமா பொன்சேகா ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊனமுற்ற படைவீரர்களது குழந்தைகள் பராமரிப்பு நிதியத்தில் அனோமா வகித்து வந்த பதவி நீக்கப்பட்டதன் காரணமாகவே, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சி : அரசு மறுப்பு


கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுணுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான 'லங்கா புவத்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

"சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது.

அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
வடக்கு-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட மாணவர் தே.அ.அட்டை பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல்கள்


க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு பாடசாலை ஊடாக தோற்றவுள்ள தமிழ் மாணவர்கள் தத்தமது பாடசாலை ஊடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள போதிலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் மீளவும் பாடசாலைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகிழக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் கொண்டுள்ள மாணவர்கள் அதனை குறித்தப் பிரதேசத்தின் கிராமசேவகர் ஊடாக அத்தாட்சிப்படுத்தி அக்கடிதத்தையும் அதனுடன் இணைத்து அனுப்புமாறு கோரப்படுகின்றனர்.

அதேவேளை பாடசாலையூடாக, விண்ணப்பிக்கும் மாணவர் ஒருவர் குறித்த பாடசாலையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கல்வி கற்கும் பட்சத்தில் பாடசாலை அதிபரின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பித்து தமக்குரிய தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியுமென இது தொடர்பான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவை கவனத்திற் கொள்ளப்படாது குறித்த விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த.(சா/த) பரீட்சை நெருங்கிவரும் நிலையில், எவ்வாறு வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்று கிராமசேவகர்களிடம் தமது நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வதென மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பலர் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்திலிருந்தும் இடம்பெயர்ந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கொழும்பிலேயே வசித்து வருவதாகவும், இந்நிலையில் மீண்டும் வட பகுதிக்குச் சென்று தமது பகுதி கிராமசேவகர்களிடம் நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வது கடினமான காரியமெனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, சுற்றறிக்கைக்கு ஏற்ப பாடசாலை அதிபர்கள் உறுதி செய்யும் பட்சத்தில் தமக்கு தேசிய அடையாள அட்டையை வழங்க ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுகின்றனர்.

அதேவேளை, தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தனது பதிவை உறுதிப்படுத்தவேண்டும். வெளிமாவட்டங்களில் தற்காலிமாக வாழ்வோர் அம்மாவட்டத்திலிருந்து விண்ணப்பிப்பதாயின் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள கிராம சேவகரூடாக, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் உறுதிப்படுத்தியதன் பின்னரே அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
அரசியலமைப்பில் மாற்றம் அவசியம் -எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு



நல்லாட்சி மற்றும் பொருளாதார வளர் ச்சி உட்பட நாட்டின் முன்னுள்ள ஏனைய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அரசியலமைப்பிலும் நடைமுறை அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தகுதியற்றவர்களின் அரசியல் பிரவேசத்தினால் இலங்கை அரசியலில் தகுதியுடையவர்கள் கூட தகுதியற்றவர்களாகவே தெரிகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுதிய எதிர்கால சவால்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு வாறுகாராம விஹாரையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது. இக்காலப் பகுதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை பொருளாதாரம், சுகாதாரம் உட்பட ஏனைய துறைகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இலங்கை ஏனைய நாடுகளிடையே ஒப்பிடுகையில் பின்தள்ளப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்ற திட்டக் கொள்கை சரியாக அமைத்து செயற்படுத்தப்படாமையால் நாட்டின் பொருளாதாரம், கல்வி, நல்லாட்சிப் போன்றவை சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறினாலும் அந்த நாடுகளின் தேசிய கொள்கைகளில் என்றும் மாற்றம் ஏற்படுவதில்லை.

இவ்வாறானதொரு மாற்றமடையாத தேசியக் கொள்கை ஒன்று இலங்கைக்கு தற்போது தேவை. இலங்கையில் நல்லாட்சியை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும். ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை எவ்வாறு அடைவது என்பது தொடர்பாக புதிய கொள்கைகளை அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகளையே தற்போதைய அவசர தேவையாக கொண்டு பேசப்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகளை அமைக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...
ஐ.தே.மு. பொதுவேட்பாளர் பட்டியலில் ஜெனரல் சரத் உட்பட 9 பேரின் பெயர்கள் திகதியை அறிவித்தால் நாம் வேட்பாளரை அறிவிப்போம் என்கிறார் மங்கள



இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட 9 பேரின் பெயர்கள் இணைக்கப்பட்ட பொது வேட்பாளர் பட்டியல் ஐக்கிய தேசிய முன்னணியால் ஆராயப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகவோ அல்லது இராணுவ வீரராகவோ அல்லது சீருடை களைந்த பொது மகனாகவோ அதுவும் ஜனநாயக ரீதியில் மக்களின் ஆதரவுடனே அரசியலுக்குள் வருவதற்கு முயற்சிக்கின்றார். அவர் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.

ராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மங்கள எம்.பி. இங்கு மேலும் கூறுகையில் இராணுவத்தினரை தேர்தலில் அறிமுகப்படுத்தியதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுகம் தான். கடந்த காலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இராணுவத்தைச் சேர்ந்தோரை களத்தில் நிறுத்தியது அரசாங்கம். இதற்கு நான் அன்றும் இன்றும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன்.

அந்த வகையில் ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொறுத்தமட்டில் தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் சீருடையை களைந்துவிட்டே மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்குள் நுழைவதற்கு முயற்சிக்கின்றார்.எதிர்க்கட்சிகளின் பொதுகூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளர் பட்டியலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற விடயத்தை சுதந்திரக்கட்சி மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறிய ஜனாதிபதி அதனை இன்று வரையில் அறிவிக்கவில்லை.அந்தளவுக்கு அச்சம் அவரை ஆட்கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணிக்கு எந்தவிதமான நெருக்குதலும் இல்லை. எமக்குப் பயமும் இல்லை பீதியும் இல்லை.எனவே ஜனாதிபதி தேர்தலைத்தான் முதலில் நடத்துவது என்று ஜனாதிபதி மஹிந்த நினைப்பாரேயானால் அதற்கான திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்ததும் உடனடியாக ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம். எமது பொதுவேட்பாளர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பவராகவும் வடக்கிலே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பவராகவுமே இருப்பார்.

1000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் உருவம் பொறித்த ஆயிரம் ரூபா நாணயத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது எந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றாகும். அரச தலைவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னரே அவரது உருவம் பொறித்த முத்திரைகள் கூட வெளியிட முடியும். எஸ். டபிள்யூ, ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மரணம் சம்பவித்து பல வருடங்களின் பின்னரே அவரது முகம் பதித்த நாணயத்தாள் வெளியிடப்பட்டது ஆனால் தற்போது நடைபெற்றிருப்பது அப்பட்டமான தேர்தல் பிரசாரமாகும்.

ஆணையாளருக்கு கடிதம்

கடந்த காலங்களில் அரச சொத்துக்கள், அரச ஊழியர்களை தேர்தல் பிரசாரத்துக்காக பாவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மத்திய வங்கியை பாவித்துள்ளார். இது பாரதூரமான விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவிருக்கின்றேன்.ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரையில் இந்த நாணயத்தாள் பாவனையில் விடப்படக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம். இவ்வாறு முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரக்கட்சி மாநாட்டை காட்டி எம்மை அச்சுறுத்துவதற்கும் அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கும் ஜனாதிபதியினால் தீட்டப்பட்ட திட்டம் நிறைவேறவில்லை என்றதும் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை பல்வேறு கோணங்களில் முன்னெடுத்து வருகிறார் எதற்கும் நாம் அஞ்சிவிடப்போவதில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

180 நாட்கள் தொடர் பணி புரிந்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

தற்காலிக, சமயாசமய, ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவோர் தகுதி

25,000 பேர் நன்மையடைவர்

180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ள தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு அரசாங்க துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்கள் அரச மற்றும் மாகாண பொதுச் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்படுவார்கள்.

அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 25 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நன்மை அடையவுள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாது உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி திட்டமிடல் அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (19) கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இது குறித்து மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அவற்றில் சில ஆட்சேர்ப்புகள் திறைசேரியின் முழுமை யான அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே தற்காலிக சமயாசமய, மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கும் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினூடாக சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படும்.

இதன்படி, 2009 ஒக்டோபர் 31ம் திகதியாகும்போது தொடர்ச்சியாக 180 நாட்கள் பணிபுரிந்த, குறித்த பதவிக்குரிய தகைமைகளைக் கொண்ட 45 வயதுக்கு குறைவான ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

குறித்த நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படும். எதிர்வரும் காலங்களில் ஏற்படும் வெற்றி டங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு நியமனம் வழங்கி, மேலதிகமாக உள்ள ஊழியர் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் என்பவற்றில் பணிபுரியும் தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப் படையிலான ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான அதிகாரம் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, இனிமேல் திரைசேறியின் உரிய அனுமதியின்றி தற்காலிக, சமயாசமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழி யர்களை நியமிப்பதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் நெருங்குவதால் அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர் களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவோ அல்லது கொடுப்பனவுகளை அதிக ரிக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசாங்க அத்தியாவசிய தேவைகளுக்காக சேர்க்கப் பட்ட ஊழியர்களுக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது வழமையானது. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். (ரு)



மேலும் இங்கே தொடர்க...
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை

Front page news and headlines today


ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் , இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இந்திய கடலோர பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு 15 காஸ் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்தனர். சிலர் சுதாரித்து தப்பினர். கையில் சிக்கியவர்களை ஆடைகளை கழற்ற கூறி, இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்துள்ளனர். ""மீன்பிடிக்க வந்தால் இனிமேல் உங்களை அடிக்க போவதில்லை, இது போல நிர்வாண தண்டனை தான்'' எனக்கூறி சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.

மீனவர் மாசிலாமணி(70) கதறியவாறு கூறுகையில், ""சுற்றி வளைத்த இலங்கை கடற்படை எங்களிடம் இருந்தபொருட்களை எல்லாம் பறித்து கொண்டது. எனது 190 ரூபாய், செருப்பு, டார்ச் லைட் ஆகியவை பறிபோனது. எங்களிடம் உறவு முறைகளை கேட்டனர். பின் பாலியல் கொடுமை செய்தனர். வயது வித்தியாசம் கூடபார்க்கவில்லை,'' என்றார்.

படகின் டிரைவர் அலெக்சாண்டர் கூறுகையில், ""இந்திய கடற்பகுதியில் தான் மீன்பிடித்து கொண்டிருந்தோம். அவர்களது நாட்டில் வருவது போல இலங்கை கடற்படை வந்து அட்டகாசம் செய்கின்றனர்,'' என்றார்.

மேலும் இங்கே தொடர்க...