23 பிப்ரவரி, 2011

ஆயுதங்கள் வைத்திருப்பதை பிணை வழங்க முடியாத குற்றமாக்க நடவடிக்கை




சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருப்பதை பிணை வழங்க முடியாத குற்றமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கேற்றவகையில் சட்டத்தில் புதிய சரத்துக்களைச் சேர்ப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பவர்க ளிடமிருந்து ஆயதங்களைக் களையும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. சட்டவிரோத ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் வைத்திப்பவர்கள் பிணையில் விடுதலை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

எனினும், ஆயுதச் சட்டத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவிருக்கும் இந்த விசேட சரத்து குறித்த காலத்திற்கு மாத்திரமே அமுலில் இருக்குமென்றும், சட்டவிரோத ஆயுதங்கள் களையப்படவேண்டுமென்ற இலக்கு பூர்த்திசெய்யப்படும்வரை இது அமுலில் இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டவுடன் அங்கிருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் காலவரையறை வழங்கியிருந்ததுடன், அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளித்திருந்தது.

நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாடு சாதாரண நிலைக்குத் திரும்பியிருக்கும் சூழ்நிலையில் கொள்ளைகள், கொலைகள் அதிகரித்திருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றச்சட்டத்தை முறையாகக் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொலிஸாருக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

குற்றச்சாட்டுகளுக்கு பயப்படும் அவசியம் எனக்குக் கிடையாது! ஜனாதிபதி




சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான சில கோஷ்டியினர் எமது நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய நோக்கத்துடன் தனக்கு எதிராக முப்பது மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைக்கோரி வழக்கொன்றை தொடர்ந்துள்ளார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், குற்றம் இழைத்தவர்கள் தான் குற்றச்சாட்டுக்களைப் பார்த்துப் பயப்பட வேண்டும். நான் குற்றமிழைக்கவில்லை. அவற்றைப் பொருட்படுத்தவுமில்லை என்றும் கூறினார்.

இவ்விதம் நாட்டுக்குத் துரோகமிழைக் கும் புலம் பெயர்ந்த எல். ரி. ரி. ஈ. யைச் சார்ந்தவர்களுக்கு எதிராக இப்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கனடா போன்ற நாடுகள் எல். ரி. ரி. ஈ.யின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன. எல். ரி. ரி. ஈ.யினர் இப்போது கனடாவுக்கு ஒரு பெரும் தலையிடியாக இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் எல். ரி. ரி. ஈ. யினர் இப்போது கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்யவோ அவற்றை குழப்பிவிடவோ எத்தனிக்கவில்லையென்று அறிவித்த ஜனாதிபதி அவர்கள், ஓரிரு சந்தர்ப்பங் களில் சிறு பிரச்சினைகள் ஏற்பட் டாலும் அரசாங்கம் எப்போதும் ஜன நாயக ரீதியிலான எதிர்க்கட்சியின் செற்பாடுகளை நிறுத்திவிட எத்தனிக்காது என்று கூறினார்.

சுதந்திரத்துக்குப் பலரும் பலவிதமான வியாக்கியானங்களை அளிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார். ‘சிலர் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதினத்தையே சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள். இன்னுமொரு சாரார் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை சுதந்திர தினமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வேறுசிலர் பெப்ரவரி 4ஆம் திகதியன்று சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள்.

எது எவ்விதமிருந்தாலும் எதிர்க் கட்சியினர் சுதந்திர தினத்தை மதித்து அதில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வதியம்மாள் பூதவுடல் நேற்று தகனம்






புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.நீண்ட நாட்களாக சுகவீனமுற்று வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்த பார்வதியம்மாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அன்னாரது பூதவுடல் நேற்றுப் பிற்பகல்வரை தீருவில் மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிற்பகல் 1.45 மணிக்கு ஆலயடியிலுள்ள அன்னாரின் வீட்டுக்குப் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து ஊரணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இலவச போக்குவரத்து ஏற்பாடு






இடம்பெயர்ந்த வன்னி மாவட்ட வாக்காளர்கள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக இலவச போக்குவரத்துச் சேவை நடத்தப்படவுள்ளது. இதற்காக 400க்கும் அதிகமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தினகரனுக்கு தெரிவித்தார்.

நேற்று தேர்தல் திணைக்களத்தில் கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடனான முக்கிய கூட்டம் ஒன்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலை மையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில்; இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்துவரும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர்; உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கொத்தணி வாக்கு சாவடிகளை அமைக்க சட்டத்தில் இடமில்லை என குறிப்பிட்டுள் ளார். இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யவும், இதற்கு ஏற்ப 400க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச போக்குவரத்துச் சேவையினை நடத்துவதற்காக சுமார் 400க்கும் அதிகமான வஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இதற்கான உறுதிமொழியினை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தமக்கு வழங்கியுள்ளார் எனவும் அவர் தினகரனுக்கு மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மேலும் 8 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்பு




மேலும் எட்டு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

திருகோணமலை நகரசபை, குளியாபிட்டி பிரதேச சபை, ருவன்வெல்ல பிரதேச சபை, கிரிபாவ பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, மெரிடைம்பற்று பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல்களையே தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே தேர்தல் திணைக்களம் 59 உள்ளூராட்சி சபை தேர்தல் களை ஒத்திவைத்திருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

இருதேச பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தம்




வெளிநாடுகளில் அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக பொய் பிரசாரம் செய்வதாக ஜனாதிபதி கவலைஇருதேச பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறையைத் தற்போது அரசாங்கம் இடை நிறுத்தி வைத்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சிலர் இந்த சலுகையைப் பயன்படுத்தி இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தே கம் எழுந்திருப்பத னால் இருதேச பிரஜாவுரிமை கோரி விண்ணப்பி ப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்க ளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார்.

இது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இருதேச பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

பத்திரிகை ஆசிரியர்கள், வானொலி, தொலைக்காட்சி பொறுப்பதிகாரிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களை இலங்கைக்குத் திரும்பி இங்கு குடியிருங்கள் என்று நாம் திறந்த மனத்துடன் அவர்களை அழைக்கிறோம். ஆனால், அவர்கள் அதற்குச் செவிமடுக்கத் தயங்கி வெளிநாடுகளிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் எதிராக போலிப் பிரசாரங்களை செய்து வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியை இலங்கைக் கடற்படையினர் 70 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என்று ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டி இதன் உண்மை நிலை என்னவென்று வினவினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், செய்மதி புகைப்படங்களிலிருந்து கூட இதற்கான எவ்வித ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை. இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியே புகார் கிடைத்துள்ளது என்றும் அதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் கூறினார்.

இப்போது இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. இதனால் தேர்தல் தந்திரமாக இத்தகைய போலி வதந்திகளை சிலர் கிளப்பிவிடுவதைப் பார்த்து நாம் அநாவசியமாக பதற்றமடைவது அவசியமில்லையென்று ஜனாதிபதி அவர்கள் பதிலளித்தார்.

இன்னுமொரு பத்திரிகை ஆசிரியர், லங்கா ஈ-நியூஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பி இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதாகவும், ‘பூத்தையா’ தான் (பேய்) இதனை செய்ததாகப் புலன்விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது. இந்த பூத்தையாவுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு இப்போது ஓரளவுக்குத் தெரியும்.

அவர்கள் யார் என்பதை நான் இப்போது இங்கு வெளியிட்டால் பத்திரிகை சுதந்திரத்தில் நான் தலையிடுகிறேன் என்று சிலர் குறை கூறுவார்கள் அதனால் மெளனமாக இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன் என்று ஜனாதிபதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு திட்டவட்டமாக மறுப்பு






நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

வெள்ளம் காரணமாக 14 வீதமான வயல் நிலங்கள் சேதமடைந்த போதும் வடக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டயாரில் புதிதாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதால் அந்த நிலை சரிசெய்யப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்; அரசியல் லாபம் பெறுவதற்காக நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றன.

ஆனால் 2 மாதங்களுக்குத் தேவையான நெல் கையிருப்பில் உள்ளது. அவை நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் போகத்தில் வடக்கில் புதிதாக பயிரிடப்பட்ட வயல்களில் இருந்து அதிக அறுவடை எதிர்பார்க்கப் படுகிறது. இதன் முலம் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சரிக்கட்டப்படும். அரசாங்கம் உள்நாட்டு பொருளாதாரத்தை நாசமாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

உள்நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது இறக்குமதி செய்யப்படும். உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தாலும் குற்றஞ்சாட்டுகின்றனர். உணவுத் தட்டுப்பாட்டின் போது பொருட்கள் இறக்குமதி செய்வது உள்நாட்டு உற்பத்தியை ஒழிப்பதாக ஆகாது.

கிழங்கு விலை குறைந்துள்ளதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த நிலையில் கிழங்கு இறக்குமதிக்கு 20 ரூபா வரி இடப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தயார்


கூட்டமைப்புடன் மார்ச் 1இல் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பேச்சு
வட பகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் ஏனைய தமிழ்க் கட்சியினருடனும் நடாத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மார்ச் முதலாம் திகதி இரண்டாவது தடவையாகப் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

அதேநேரம் வடபகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வி. ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் கட்சிகளுடனும் பேச்சுவார்த் தைகள் நடாத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களின் பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் போன்றோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரிமாளிகையில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சமயமே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து இன்று நாட்டில் பூரண அமைதி நிலவிவருகிறது.

எனது அரசாங்கம் கடந்த காலத்தில் உரிமைகளை இழந்து துன்பத்தில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வீதித்தடைகளும், சோதனைகளும் நடத்தப்படுவதில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டு, அப்பிரதேசங்களில் சென்று மக்கள் குடியேறவும் எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாம் சகல தமிழ் கட்சிகளுடன் நாட்டில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கும், இனங்களிடையே ஒற்றுமை பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், இதர தமிழ் கட்சியினருடனும் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் முன்வைத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் தயா ராகவில்லை.

யுத்தம் முடிவடைந்த கால கட்டத்தில் எல்.ரி.ரி.ஈயின் கொடுமையிலிருந்து இராணுவத்தினர் மீட்டெடுத்த பிரதே சங்களுக்கு வந்து முகாம்களில் தங்கியிருந்த மக்களின் குறைபாடுகள் பலவற்றை எனது அரசாங்கம் இப்போது தீர்த்துவைத்து விட்டது.

நான் அவர்களை சமீபத்தில் சந்தித்த போது “ஜனாதிபதி அவர்களே, நாங்கள் இன்று நிம்மதியாக பூரண உரி மைகளுடன் இருக்கின்றோம். தயவுசெய்து எங்களை எங்கள் சொந்த இடங்களில் சென்று குடியமர்த்துங்கள். அதற்காக அங்கு எல்.ரி.ரி.ஈயினர் நாட்டிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றிவிட்டு எங்கள் வீடுகளை மீள் நிர்மாணம் செய்து அங்கு அனுப்பிவையுங்கள்" என்று கேட்கிறார்கள்.

மற்றவர்கள் கமத்தொழில் செய்வதற்கு விதைநெல், உரப்பசளை, உழவு இயந்திரங்களைப் பெற்றுத்தாருங்கள் என்று விடுத்த வேண்டுகோளுக்கு செவிமடுத்த எனது அரசாங்கம், அவர்களுக்கு இலகு கடனடிப்படையில் இலங்கை வங்கி மூலம் இதற்கான பண உதவியைச் செய்துள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...