இலங்கையுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியம், இலங்கை மக்கள் தமது நாட்டுக்கு விஜயம் செய்வதையும் அங்கு கல்வியைத் தொடர்வதையும் பெரிதும் விரும்புகின்றது. இருந்தபோதிலும், சட்ட ரீதியற்ற முறையில் நாட்டுக்குள் நுழைவதையும் சட்டரீதியற்ற குடியேற்றத்தையும் தவிர்க்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளதோடு அவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்காக பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் தெரிவித்தார்.
இதன்பொருட்டு மாணவர் விசாக்கள் மற்றும் குறுங்கால விஜயத்திற்கான விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள அதேநேரம், வதிவிட விசா வழங்குவதற்கான நடைமுறைகளையும் அடுத்த வருடம் முதல் திருத்தியமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய இராச்சியத்திற்கான குடிவரவு நடைமுறைகள், விசா வழங்கல் நடவடிக்கைககள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு விளக்கமளிக்கும் போதே பிரதி தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையும் பிரித்தானியாவும் நீண்ட கால பொருளாதார, காலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்ட நாடுகளாகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இந்நாடுகளுக்கிடையில் பயணம் செய்யும் நடவடிக்கை இப்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
முதலாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன. இதனால் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமன்றி, இந்நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமுள்ளது.
இரண்டாவது, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி நிலை இப்போது சீரடைந்து விட்டது. இதன் காரணமாக எதிர்விளைவுகளைச் சந்தித்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரமும் மீட்சியடைந்து, மீளவும் முன்னேறிச் செல்கின்றது. இதனால் வர்த்தக முயற்சிகளை முன்கொண்டு செல்லும் நோக்கிலும், வேறு நோக்கங்களுக்காகவும் பிரித்தானியாவுக்கு சென்று வருவோரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது.
எனவே இவ்வாறான ஒரு காலகட்டத்தில், நல்ல நோக்கங்களுக்காக பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புகின்ற அனைவராலும் நேர்மையான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்ற விசா விண்ணப்பங்களை நாம் வரவேற்கின்றோம். ஆனால், போலியான அல்லது குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான விண்ணப்பங்கள் குறித்து இறுக்கமான சட்ட நடைமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இதற்காக குடிவரவு கொள்கைகள் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து பெருமளவானோர் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்; செல்கின்றனர். இப்போது சட்டரீதயிக்ஷிக அங்கு 2 இலட்சம் இலங்கையர் வாழ்கின்றனர். கடந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் 70 வீதமானவற்றுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 20 ஆயிரம் பேர் விசாவினைப் பெற்றுள்ளனர். இவர்களுள் 8000 பேர் குறுங்கால விஜய (விசிட்) விசாவையும் 7000 பேர் மாணவர்களுக்கான விசாவையும் பெற்றுள்ளனர்.
சாதாரணமாக 15 நாட்களுக்குள் விசா வழங்கப்படுகின்றது. அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணம் தெளிவாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுகின்றது. விசா ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து நடைமுறை தொடர்பிலும் எமது இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இதற்கென ஆலோசனை முகவர்களின் உதவி அத்தியாவசியமற்றது என்றே கருதுகின்றேன் என்றார்.
ஐக்கிய இராச்சியத்தின் கரையோர கண்காணிப்பு முகவரகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ் உக்பா விளக்கமளித்து உரையாற்றுகையில்,
தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களினால் பிரித்தானியா தனது குடிவரவு சட்ட விதிகளை இறுக்கமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத குவியேற்றத்தை தடுப்பதும் சட்டத்திற்கு முரணாக நாட்டில் தங்கியிருத்தலை கட்டுப்படுத்துவதுமே இப்புதிய நடைமுறைகளின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக உலக நாடுகளின் அரசங்கங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.
பிரித்தானியாவில் உயர்தரம் வாய்ந்த கல்வியகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் பலர் நேர்மையாக கல்வி நடவடிக்கைகளை தொடர்கின்றனர். ஆனால், இதனை சில உள்நாட்டு விண்ணப்பதாரிகளும் ஏன் குறைந்த தரத்திலான ஒரு சில பிரித்தானிய கல்வியகங்களும் துஷ்பிரயோகம் செய்கின்றமை தெரியவந்துள்ளது.
இலங்கையில் பிறந்த 2 இலட்சம் பேர் பிரித்தானியாவில் சட்டரீதியாக வசிக்கின்றனர் என்றாலும் சட்டத்திற்கு முரணாக எத்தனைபேர் அங்குள்ளனர் என்பது குறித்த மிகச் சரியான தரவுகள் எம்மிடம் இல்லை. நிச்சயமாக அத்தொகை மேற்குறிப்பிட்டதை விட கணிசமானளவு அதிகமாகவே இருக்கும். அவர்களுள் 26 பேரே அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையில் இருந்து விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுள் மாதத்திற்கு 200 விண்ணப்பங்கள் போலியான ஆவணங்களுடன் மோசடியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்படியாயின் நாளொன்றுக்கு சராசரியாக இவ்வாறான 10 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
பிரித்தானியாவுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 30ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வந்துள்ளனர். இலட்சக் கணக்கில் உள்ள குடியேற்றவாசிகளின் தொகையை ஆயிரக்கணக்காக குறைப்பதற்கு எமது அரசாங்கம் விரும்புகின்றது.
இதற்கமைய கொண்டுவரப்படும் புதிய விதிமுறைகளின் படி, கல்வியைத் தொடர்வதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், கூடியபட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்கும் கல்வி கற்கவும் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பியாக வேண்டும். அவர் மீண்டும் பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பின், அவர் விசாவுக்காக விண்ணப்பிக்கும் போது அவருக்கு இன்னுமொரு விசா வழங்குவதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும். காலாநிதி போன்ற பட்டப் படிப்புகளை தொடரும் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனினும் பொதுவாக இவ்விதி கடைப்பிடிக்கப்படும்.
பிரித்தானியாவில் கல்வியைத் தொடர விரும்பும் விண்ணப்பதாரி, பிரித்தனிய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றால் மட்டுமே பகுதிநேரமாக தொழில்புரிவதற்கு அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்படாத, தனியார் கல்வியகங்களில் கற்கைகளுக்காக பதிவு செய்யும் எவருக்கும் வேலை செய்வதற்கான அனுமதி கிடைக்காது.
இவ் விதி புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கே செல்லுபடியாகும். எவ்வாறிருந்த போதும், அவர்கள் இதற்குப்பிறகு வேறொரு கற்கை நெறிக்கு பதிவு செய்ய முற்படுகின்றபோதோ அல்லது தமது விசா காலத்தை புதுப்பிக்க முனையும் போதோ இப்புதிய நடைமுறைக்கு உள்வாங்கப்படுவர்.
அத்துடன் , பிரித்தானியாவில் பட்டப்படிப்பு ஒன்றை பூர்த்தி செய்யும் ஒருவர், தமது தகுதிக்கமைய தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை முறையாக பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இரு வருடங்கள் தொழில்நிமித்தம் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும்.
அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள மிக முக்கிய கம்பனிகளின் அதிகாரிகளுக்காக எக்ஸ்பிரஸ் சேர்விஸ் எனப்படும் விஷேட விசா நடைமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அது மட்டுமன்றி, சிலர் என்னென்ன காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். எனவே, மிகவும் சிறந்த, நேர்மையான பிரஜைகளுக்கு மட்டுமே வதிவிட விசாவை வழங்கும் வகையில் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் குடிவரவு விதிகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...