எதிர்வரும் 24ம் திகதி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா பங்கேற்கும் பொதுக்கூட்டம் அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாகவும் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்களைப் பார்ப்பதற்கு நாட்டிற்கு வருகைதந்து ஒருமாத காலம் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பொலீஸ் நிலையங்களில் தம்மைப் பதிவுசெய்து கொள்வது அவசியமில்லையென பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரியவினால் சகல பொலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலீஸ் மாஅதிபரினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வுத்தரவு நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளவர்கள் நேற்றுமுதல் ஒருமாத காலத்திற்குமேல் நாட்டில் தங்கியிருப்பார்களானால் மாத்திரமே பதிவு செய்துகொள்ள வேண்டுமென பொலீஸ் மாஅதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலீஸ் மாஅதிபரினால் நேற்று சகல சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர்கள், பிரதிப் பொலீஸ் மாஅதிபர்கள் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலீஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பொலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு பயமுறுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாட்டை சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடம் இன்று தெரிவித்துள்ளார் குறித்த பாதுகாப்பு அதிகாரி இளைப்பாறிய இராணுவ அதிகாரி என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சரத் பொன்சேகா கடந்தவார இறுதியில் அம்பலாங்கொடையில் சில மணித்தியாலங்களாக தங்கியிருந்த வீடு ஒன்றை விசேட பொலிஸ் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இன்றுகாலை இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. இந்த சோதனை நடவடிக்கை நீதிமன்ற கட்டளையின்றியே இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின்போது எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் இடம்பெற்ற கலந்தாலோசனை இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாகவும், இந்நிலையில் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலான முடிவு எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இது குறித்து இறுதி முடிவெடுக்கும் கூட்டம் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பணியாளர்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கைப் பணியாளர் ஒருவர் தொழில் வாய்ப்புக்காக அபிவிருத்தியடைந்த நாட்டுக்கு செல்வது இலகுவான விடயமல்ல என பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்த வருடம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட தூதுக்குழுவினர் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளுக்கு விஜயம், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும்
பங்கேற்பு-
India assures it is with Sri Lanka 2-12-09 |
இதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபையிருடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதில் ஆலய பரிபாலன சபை சார்பில் அதன் தலைவர் நமசிவாயம், செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த ஆலயத்தில் இராஜகோபுரம் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை பரிபாலன சபையினர் முன்வைத்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் சிறப்பு தொடர்பிலும், அதனை மிகவும் சிறப்புற புனர்நிர்மாணம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு விளக்கியதுடன், இராஜகோபுரத்தைக் கட்டுவதற்கு உதவும்படியும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இதன்போது கருத்துரைத்த இந்தியத் தூதுவர், இவ்விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவதாகவும், இந்தியாவுடன் தொடர்புகொண்டு அங்கிருந்து சிற்பக் கலைஞர்களை வரவழைத்து இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மிகத் துரிதமாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியத் தூதுக்குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கச்சேரியில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட அரசஅதிபர் திரு.நீக்கிளாப்பிள்ளை தலைமை வகித்தார். இந்தக் கலந்துரையாடலில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், பிரஜைகள் குழுவினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் மற்றும் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தின்போது இந்தியத் தூதுவரிடம் இதில் கலந்து கொண்டிருந்தவர்கள் தற்போதைய நிலைமைகள், இடம்பெயர்வுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேள்விகளையும் கேட்டனர். இதற்கு பதிலளித்த இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, தாங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்கின்ற உதவிகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறியதுடன், இந்திய, இலங்கை மீனவர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இவ்வாறான தீர்வினைக் காண்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து புளொட் தலைவர் சித்தார்த்தன் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் சுட்டிக்காட்டி, இந்தியாவினுடைய உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சரியான நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதையும், இதற்கு இந்தியா தனது முழுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.