31 ஜனவரி, 2011

கூட்டமைப்பு - அரசிற்கு இடையில் வியாழனன்று மற்றுமொரு சுற்று பேச்சு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருதரப்பிற்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கின் மனிதாபிமான, மீள்கட்டமைப்பு பணிகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட இனங்காணப்பட்ட விவகாரங்களுக்கு சீரான வகையில் தீர்வுகாண்பதற்காக இருத்தரப்பும் தொடர்ந்தும் நல்லிணக்கத்துன் பேச்சுக்களை முன்னெடுப்பது தீர்மானித்தது.

இந்த சுற்றுப்பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தரப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் குழுவின் செயலாளருமான சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அச்சுவேலி விபத்தில் இளைஞன் பலி

அச்சுவேலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் மோட்டர் சைக்கிளும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞனே பலியாகியுள்ளார். படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளக்ஷிர். விபத்தில் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைச் சேர்ந்த இராசதுரை ரஜீவன் (வயது 21 என்பவரே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இராசதுரை யசிந்தன் என்பவரே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

வடமராட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வானும் வடமாரட்சியில் இருந்து நீர்வேலியை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கு இலக்கான இருவருக்கும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. வேட்பாளர் மீது பேருவளையில் தாக்குதல்


பேருவளை நகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஹசன் பாயிஸ் தாக்குதலுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ஒருவருடைய உறவுக்காரரும் பேருவளை நகர சபை முன்னாள் மேயர் மர்ஜான் பளீல் என்பவரே தன்னை தாக்கியதாக ஹசன் பாயிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பேருவளையில் இருந்த போது வாகனத்தில் வந்த முன்னாள் மேயர் இவரை சரமாரியாக தாக்கியுள்ளார். எனினும் அவருடன் வந்த மற்றவர்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈடுபட்ட நபருடைய மகன் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் தாக்குதலுக்குள்ளான குறித்த நபரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறப்பட்டதாம். அதனை மீறி செயற்பட்டதாலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்கியவர்கள் கூறிவிட்டுச் சென்றதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தனக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்த பேருவளை நகர சபையின் முன்னாள் மேயர் மர்ஜான் பளீல் எனக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருப்பின் அதற்கு முகம் கொடுப்பதற்கு நான் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு நகைச்சுவையானது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை நகைச்சுவையான செயற்பாடாகும். இது குறித்து பதிலளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் ஒரு நகைச்சுவையாளர். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள வழக்கானது மிகப்பெரிய நகைச்சுவையாகும். எனவே அவ்வாறான நகைச்சுவை ஒன்று தொடர்பில் நாங்கள் குழப்பமடைய தேவையுமில்லை என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமது உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளமைக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்கள் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் முப்பது மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறும், கோரப்பட்டுள்ளது.

கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில் : அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் ஒரு நகைச்சுவையாளர். அதனை அவ்வாறு குறிப்பிடலாம். எனவே அவரின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவோ குழப்பமடையவோ வேண்டிய அவசியம் இல்லை.

இதே வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு ஆக்கத்தை எழுதினார். அந்த கட்டுரையில் வடக்கு கிழக்கில் தனிநாடு அமையவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார். அந்தளவுக்கு புலிகளுக்கு ஆதரவாக அவர் செயற்பட்டுவருகின்றார்.

அந்த வகையில் இவர் நீண்டகாலமாக புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்தவர். இந்த வழக்கறிஞர் புலிகளுக்கு சார்பானவர் என்றும் ஒத்துழைப்பு வழங்குபவர் என்றும் சர்வதேச மட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.

எனவே இவ்வாறான புலிகளின் ஆதரவு செயற்பாட்டாளர் ஒருவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவோ குழப்பமடையவோ வேண்டிய தேவை இல்லை.

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு பதிலளித்து எமது காலத்தை வீணடிக்கவேண்டிய அவசியமும் இல்லை என்றார்.

இதேவேளை இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கையும் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் பந்துல ஜயசேகர ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அத். உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைவு பெ. வெங்காயம் 55/-, உ.கிழங்கு - 50/-


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவோ அல்லது தட்டுப்பாடு ஏற்படவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிழங்கு, செத்தல் மிளகாய், சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. இவற்றின் விலை அதிகரித் தால் சதொச மூலம் இறக்கு மதி செய்து பாவனையாளர் களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் முட்டை, கிழங்கு, வெங்காயம், கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையடுத்து அவற்றின் விலைகள் குறைந்தன என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் 135 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் நேற்று (30) கிலோ 55 ரூபாவாகவும், 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 முதல் 50 ரூபாவுக்கும் 195 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பருப்பு 135 ரூபாவுக்கும் 290 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 200 ரூபாவுக்கும் தற்போது விலை குறைந்துள்ளதாக மொத்த வர்த்தக சங்கம் கூறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வேண்டும்

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் முதலீடு செய்து
பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினால் நாடு பிரகாசிக்கும்

வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா

30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நாடு திரும்பி தமது நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்து கைத்தொழில் மற்றும் பசுமைப்புரட்சி ஒன்றை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் பிரதி அமைச்சர், இதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கியிருந்த 30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது நேர்மையான, பாரபட்சமற்ற ஆளுமையின் மூலம் நீக்கி, இன்று நாட்டில் பூரண சமாதானத்தையும் அமைதியையும் மக்களிடையே ஐக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, இன பேதமற்ற முறையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சி செய்யும் இன்னுமொரு பாரிய யுத்தத்தில் இறங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்களுக்குத் தங்களின் பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய அரசாங்கம், பெரும்பான்மை மக்களின் சமயமாகிய பெளத்தத்திற்கு அளித்துள்ள அதே மதிப்பையும், கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் மற்ற மதங்களுக்கும் வழங்கியிருக்கிறது. அதுபோன்றே, சிங்கள மொழிக்கு அளிக்கப்படும் மதிப்பும், அந்தஸ்தும் தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகிறது.

அரசாங்க சேவையில் தமிழ் கற்றறிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், சிறுபான்மை மக்களுக்கு தமிழ் மொழி மூலம் அரசாங்கத்தின் நிர்வாக சேவையை பெற்றுக் கொடுப்பதில் சில சந்தர்ப்பங்களில் ஆளணி பற்றாக்குறை காரணமாக அசெளகரியமாக இருந்தாலும், வெகுவிரைவில் நாம் தமிழ் மொழியையும் கற்றறிந்தவர்களையே அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளும் புதிய கொள்கையை நிறைவேற்ற இருக்கிறோம் என்றும், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வாழும் எங்கள் நாட்டின் புலம்பெயர்ந்த தமிழ் மற்றும் சிங்கள, முஸ்லிம் மக்கள் கூடிய விரைவில் தாயகம் திரும்பி, இங்கு தங்கள் அமைதியான வாழ்க்கையை தொடர்ந்தும் மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்காகவும் உழைக்கும் ஜனாதிபதி அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதியமைச்சர், இந்த கோரிக் கையை புலம்பெயர்ந்த மக்கள் நிறை வேற்றினால் இந்நாடு சுதந்திரம் பெறு வதற்கு முன்னர் இருந்த யுகத்திற்கு மீண்டும் மாறி, அனைத்து மக்களும் எவ்வித பேதமும் இன்றி, ஒருதாய் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழும் ஒரு யுகம் நிச்சயம் உருவாகும் என்று கூறினார்.

அரசாங்கம் சிங்கள மக்களுக்கு முன் னுரிமை வழங்கி சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் கொள்கையை என்றுமே கடைப் பிடிக்கப் போவதில்லை. இன்று நாட்டில் தோன்றியுள்ள அமைதியும், சமாதானமும், ஐக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார்.

இந்நாட்டு மக்கள் அனைவரும் எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக் காக தங்கள் முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கட்டியெழுப்பலாம் என்றும் நியோமல் பெரேரா சுட்டிக் காட்டினார்.

வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்கள் இங்கு வந்து, நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீடு செய்து, கைத்தொழில் மற்றும் பசுமைப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தினால், நாடு தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் பிரகாசிப்பதை எந்தவொரு சக்தியினாலும் தடுத்துவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சில தேசத்துரோக சக்திகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வந்த பொய்ப் பிரசாரங்களை நம்பி, பல வல்லரசுகள் எமது நாட்டை சந்தேகக் கண்ணோடு பார்த்து மறைமுகமாக பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் கொண்டுவந்த போதிலும், ஜனாதிபதி அவர்கள் அவற்றை பொருட்படுத்தாமல், நாட்டை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுத்து அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தியதனால், வெளிநாட்டு வல்லர சுகள் இலங்கைக்கு எதிராக தாங்கள் கடைப்பிடித்து வந்த தவறான கொள்கைகளை கைவிட்டு, இன்று எமது அரசாங்கத்துடன் நல்லுறவை வளர்த்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று நீட்டிவரும் நேசக்கரத்தை எமது அரசாங்கம் வலுவாக பற்றி, உலக அரங்கில் இலங் கைக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த அபகீர்த்தியை இல்லாமல் செய்வதில் வெற்றி கண்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நியோமல் பெரேரா, எமது நாட்டிற்கு அச்சுறுத்தல் தோன்றியிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எங்களுக்கு முழுமனதுடன் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வந்த, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நாம் என்றென்றும் நன்றியுணர் வுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வோம் என்றும் கூறினார்.

தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி, நாட்டை சகல துறைகளிலும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் இந்த அரசா ங்கத்தின் கரங்களை இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள எமது நாட்டு பிரஜைகள் அனைவரும் வலுப்படுத்தி, பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவு செயலர் கொழும்பு வருகை ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு


இந்திய வெளியுறவுச் செய லாளர் திருமதி நிருபமா ராவ் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார்.

நேற்றிரவு 7.30 மணியள வில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை வெளி விவகார அமைச்சின் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இன்றைய தினம் காலை இவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள துடன் அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கலைஞர் கரு ணாநிதியின் வேண்டு கோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வின் பிரதிநிதியாக திருமதி நிருபமா ராவ் இலங்கை வந்துள்ள தாக தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் அண்மைக் காலமாக எழுந்துள்ள நிலையில் இரு நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பதற்கான எல்லைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய சந்திப்புகளின் போது மீனவர்கள் தொடர்பான விட யங்களும் கலந்துரையாடப் படுமெனவும் தெரியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிராம சேவகர்களின் சம்பளம் அதிகரிப்பு


கிராம சேவையாளர்களின் சேவை தரத்தை உயர்த்தி அவர்களது சம் பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளது.

கடந்த டிசம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலதிக கொடுப்பனவுடன் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவிருப்ப தாகவும் இதன் மூலம் கிராம சேவகர்களுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப இதுவரை கிராம சேவகர் என்று கூறப்பட்ட பதவி இனி ‘நிர்வாக கிராம சேவகர்’ என்று மாற்றப்படுவதுடன் அவர் களது மூன்றாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 870 ரூபா வாலும் இரண்டாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 1765 ரூபா வினாலும் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 870 ரூபா வினாலும் சிரேஷ்ட தரத்தைச் சேர்ந் தவர்களின் சம்பளம் 365 ரூபா வாலும் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கிராம சேவகர்களின் கடமை நேரம், பதவியின் பொறுப்புகள், ஆகியவற்றை கணக்கில் எடுத்து இந்த சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்மோகன்- கருணாநிதி இன்று டில்லியில் சந்திப்பு
தமிழக முதல்வர் மு. கருணாநிதி நேற்று புதுடில்லி சென்றடைந்தார். புதுடில்லியில் நடைபெறவிருக்கும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற் பதற்காக புதுடில்லி சென்றிருக்கும் அவர், இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங்கை இன்று சந் தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள் ளார்.

இந்திய மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர் பில் மன்மோகன் சிங்குடனான சந்திப்பில் கலந்துரையாடவிருப்ப தாக தமிழக முதல்வர் தெரிவித் துள்ளார்.

அது மாத்திரமின்றி இந் திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் தமிழக முதல்வர் சந் திப்பதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் ‘நனோ கார்’; மூன்றரை இலட்சத்துக்கு விற்பனை
இந்தியாவின் டாடா மோட்டார் நிறுவனம் உலகில் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படும் முட்டையின் வடிவமைப்பைக் கொண்ட “நனோ கார்களை" தாய்லாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இவ்வாண்டின் முற்பகுதியில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

இப்பொழுது “நனோ கார்கள்" மாதத்திற்கு 8000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மும்பாயில் உள்ள இந்நிறுவனம் இன்று மாதமொன்றுக்கு 6000 முதல் 7 ஆயிரம் கார்களை விற்பனை செய்து வருகிறது.

டாடா மோட்டார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கால் பீட்டர் போஸ்டல் இந்த கார்களை இலங்கையிலும் மாதாந்த அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் செய்வதாக கூறினார்.

இந்த நிறுவனம் முதலாவது நனோ காரை 2009 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் சந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இந்த நனோ கார் புதுடில்லியில் ஒரு இலட்சத்து 37,555 இந்திய ரூபாவிற்கு விற்கப்படுகிறது. அமெரிக்க டொலரில் இது 3 ஆயிரம் டொலர்களாகும்.

இலங்கையில் இந்த நனோ கார்கள் 3 இலசத்தி 36 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். இக்கம்பனி இந்தியாவில் தங்களது பல்வேறு தொழிற்சாலைகளில் 2 இலட்சத்து 50 ஆயிரம் கார்களை ஒரு வருடத்தில் தயாரித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

30 ஜனவரி, 2011

இந்தியாவில் இலங்கை அகதி ஒருவர் தீக்குளித்து மரணம்இந்தியாவில் உள்ள இலங்கை அகதி ஒருவர் தீக்குளித்து மரணமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுரை கூடல்புத்தூர் முகாமில் தங்கிருந்த செல்வராஜ் என்ற நபரே தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் குடும்ப பிரச்சினை காரணமாகவே தீக்குளித்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் நிதி வழங்கப்பட்டு வருகின்ற அமைப்புகளின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் வழங்கிக்கொண்டிருக்க இலங்கை அரசாங்கத்திற்கு நேரமில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தியமை தொடர்பிலேயே ஜனாதிபதியின் புதிய ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி குறித்து சிந்திப்பதாகவும் அவற்றுக்கிடையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து கண்டுகொள்ள தேவையில்லை என பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

29 ஜனவரி, 2011

சிவாஜிலிங்கத்தை த.தே.கூ சேர்ப்பதற்கான பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை:த.தே.கூ
வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவே தவிர அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி எடுத்த முடிவு அல்ல என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் ஈ.பி.ஆர்.எல். எவ். கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும், ரெலோ பொதுச் செயலாளர் அ.செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதன் முழு விபரத்தை இங்கு தருகிறோம்.

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் பொருளாளர் திரு.குலநாயகம் அவர்களுக்கும் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டும், ஒப்பந்தமும் அவர்களுக்கிடையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கூட்டாகவே, தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு.மாவை சேனாதிராசா அவர்களால் கூறப்படுகின்றது.

திரு.சிவாஜிலிங்கம் அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்தப் பேச்சு வார்த்தைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓரிரு அமைப்புகள் உள்வாங்கப்பட்டதற்கு பெரும்பான்மையான த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இருந்த பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் கேட்டதற்கிணங்க அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டுப் பின்னர் அதனைப் பற்றி முடிவெடுப்பதாயிருந்தது.

ஆனால், அந்த முடிவுக்கு முரணாக, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில் அவர் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பட்டுள்ளார். இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக திரு.மாவை சேனாதிராசா அவர்கள் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்.

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கிளிநொச்சியிலும், வன்னியின் ஏனைய மாவட்டங்களிலும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னா அவர்களின் தலைமையிலான கட்சியில் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் தமிழத்; தேசிய கூட்டமைப்புக்கும் ஓர் பாடம் படிப்பிக்க இருப்பதாக இரு தினங்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வல்வெட்டித்துறையின் நகர சபைக்கு திரு.குலநாயகம் அவர்கள் 2 வருடமும் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் 2 வருடம் தலைவராக இருப்பது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியில் இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும், திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தானே முதன்மை வேட்பாளர் என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் எந்த ஓர் பட்டியலிலும் யாரும் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், திரு.சிவாஜலிங்கம் அவர்கள் தன்னைத்தானே முதன்மை வேட்பாளராக அறிவித்தது தவறானது என்பதையும், யார் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே பிரதேச, நகர சபைகளின் முதல்வர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதையும்; தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்படாததால் தமிழரசுக்கட்சி சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டியிருக்கின்றது. இதனைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்து பேசாமல் முடிவுகள் எடுப்பது தமிழ் மக்களின் உரிமைகளுக்கான காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வறிக்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் களைந்து, அதனை வலுவான ஒரு கட்சியாக மாற்றுவதற்கான ஓரு முயற்சியும் ஆகும். இதனைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு தமிழ் மக்களை ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

நூற்றுக்கும் மேற்ப்பட்ட இலங்கையர்கள் சவூதியில் நிர்கதிசவூதி அரேபியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நிர்கதி நிலைகுள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலமொன்றின் கீழ் இவர்கள் சரியான உணவோ மற்றும் அடிப்படை வசதிகளோ இன்றி இருக்கின்றனர். தம்மை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும் படியும் சிலர் தமது உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர்: ஜே.வி.பி.


யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் வடபகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஜே.வி.பி., பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். வடபகுதி மக்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் வாழவில்லை எனவும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையில் நேற்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில், சுதந்திரமான வாழ்க்கையே 30 வருடகால யுத்தத்திற்கு பின்னரான வடபகுதி மக்களின் முதலாவது எதிர்பார்ப்பாக இருந்தது. தமது பொருளாதார பிரச்சினை மற்றும் ஏனைய சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதனைப் போன்று சுதந்திரமாக நிம்மதிப்பெருமூச்சு விடக்கூடிய நிலைமையை உருவாக்குவதே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் இன்னமும் சிவில் நிர்வாகத்தின் கீழ் வடபகுதி மக்கள் வாழவில்லை. பெரும் அச்சத்துடனேயே வடக்கிலுள்ள பெரும் பாலான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போதும் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகளில் குறிப்பாக ஜே.வி.பி.யில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையின்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்த சவால்களுக்கு மத்தியிலேயே வடபகுதியில் நாம் இந்த தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வகையில் வடபகுதி மக்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமும் வடக்கு, தெற்கு, கிழக்கு என்ற பேதமின்றி தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்கள் இன்றி இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்ற செய்தியை வடக்கு, கிழக்கு மக்களுக்கு சொல்ல தயாராகவுள்ளோம். அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் ஆயத்தமாகவுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்து உரையாடியுள்ளார்.

கூட்டமைப்பு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி இச் சந்திப்பின்போது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

உயர் நீதிமன்றை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரை அது தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகி விளக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஜே.ஆர்.ஜயவர்த்தன தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.

பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதாக கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி பொலிஸ்மா அதிபர் நீதிமன்றில் உறுதியளித்ததாக அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த உறுதியை மீறி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் தன்னை மீண்டும் பணிநிறுத்தம் செய்துள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொலிஸ்மக்ஷி அதிபர் நீதிமன்றிற்கு வழங்கிய வாக்குறுதியை மீறிச் செயற்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த உயர் நீதி மன்றம் இது குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தூதரகம் நோக்கி பேரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

சென்னையில் இலங்கை தூதரகம் நோக்கி நேற்று பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அவர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்மை தொடர்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவும், தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கக் கோரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை இலங்கை தூதரகம் நோக்கி பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உட்பட 100 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

2047 வேட்புமனுக்களில் 1597 ஏற்பு மன்னாரை தவிர 300 சபைகளில் 450 நிராகரிப்பு


மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதுமாக 1597 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 1282 வேட்பு மனுக்களில் 1134 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 765 வேட்பு மனுக்களில் 463 ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல்கள் தலைமையகம் தெரிவித்தது.

அரசியல் கட்சிகளின் 148 மனுக்களும் சுயேச்சைக் குழுக்களின் 302 வேட்பு மனுக்களுமாக 450 வேட்பு மனுக்கள் நிரா கரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 301 உள்ளூ ராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டதுடன் அவற்றுள் 300 சபைகளி லும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மன்னாரில் மாத்திரம் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், கூடுதலானவை நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இங்கு 92 சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ததுடன் அரசியல் கட்சிகள் 72 மனுக்களையும் தாக்கல் செய்தன. சுயேச்சைக் குழுக்களின் 43 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், அரசியல் கட்சிகளின் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆகக் குறைந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சிகள் மாத்திரம் 15 மனுக்களைத் தாக்கல் செய்ததுடன் ஏழு நிராகரிக்கப்பட்டன.

எம்பிலிபிட்டி நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் யாழ்ப்பாணத்தில் 13 மனுக்களும் கிளிநொச்சியில் மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தவிரவும், நுவரெலியா, யட்டிநுவர, மொனறாகலை, சியம்பலாண்டுவ, ஹக்மீமன, பள்ளேவில, வில்கம, பொல்கஹவெல ஆகிய பிரதேச சபைகளினதும் லிந்துலை - தலவாக்கலை நகர சபைகளினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுக்களில் ஹோமாகம, வெலிகேபொல, வெலிக்கந்தை, பத்தேகம, ஹெலஹர பிரதேச சபைகளினதும் வரகாபொல நகர சபையினது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மினுவாங்கொடை, உக்குவளை, மாவத்தகம, அத்தனகல்ல ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

சிறு சிறு தவறுகள் காரணமாகவே தமது கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அதனால், நீதிமன்றத்தை அணுகி தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐ.ம.சு.மு.வின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கும் போது ஏற்பட்டுள்ள சொல் வித்தியாசமாகும். எனவே, அது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

சிறு சிறு தவறுகளால் இந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையால், அடுத்த வாரம் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

காலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் சில தினங்களுக்கு கனத்த மழை


இலங்கைக்கு அருகில் வீசும் காற்றின் சீரற்ற தன்மையால் காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானி லையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இம்மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கனத்த மழை பெய்யும் என்னும் அவர் கூறினார்.

நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி ரன்டம்பே நீரேந்து பகுதியில் 100.5 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது வடகீழ் பருவபெயர்ச்சி மழைக்கால நிலையே நிலவுகின்றது. என்றாலும் வடகிழக்காக நாட்டுக்குள் வருகின்ற காற்றில் சீரற்ற தன்மை திடீரென ஏற்பட்டிருகின்றது. இதன் விளைவாக கிழக்கு, தெற்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் இடையிடையே கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரம் பிற்பக லிலோ, மாலைவேளையிலோ சப்ர கமுவ, மேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்

இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேவேளை கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்கள் சிறிதளவில் கொந்தளிப்பாகக் காணப்படும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பதுளை, ஹந்தகெட்டியவில் 93.3 மி. மீ. மகியங்கனையில் 77.9 மி. மீ., ரந்தெனிகலயில் 74.5 மி. மீ. என்ற படி மழை பெய்துள்ளது என்றார்.

பட்டிப்பளை நிருபர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடி முழக்கத்துடன் கூடிய மழை பெய்து வருகினறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற கடந்த 45 மணி நேரத்தில் 68.5 மில்லி மீற்றர்மழை பெய்துள்ளதாகவும் இவ்வருடம் 2011 ஜனவரி மாதம் கடந்த 27 நாட்களில் 1342.1 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதகாவும் மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.

தற்போதைய மழையின் காரணமாக வெள்ளம் வடிந்து சூரிய ஒளியில் நிமிர்ந்த மரங்கள், மீண்டும் நீர் ஊற்றுக் காரணமாக நிலத்தில் சாய்கின்றன. ஈரலிப்பான மண் வீடுகள் விழுவதுடன், நுளம்புப் பெருக்கமும் அதிகமாயுள்ளது. எஞ்சிய மேட்டில் இருந்த வேளாண்மை அறுவடை முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.

கிராமங்களினுள் பாம்புகள், முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளன. பல கால்நடைகள் இறந்து வரும் நிலையில் நோய்களும் அதிகரித்து வருகின்றது.

தொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளதுடன் கடும் குளிரும் உணரப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கொள்கலனில் அடைக்கப்பட்ட நிலையில் 219 பேர் மீட்பு 6 இலங்கையரும் இருப்பதாக மெக்ஸிகோ தகவல்
இலங்கையர்கள் அறுவர் உட்பட சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் 219 பேரை மெக்ஸிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ‘ட்ரக்’ வண்டியொன்றில் ரகசியமான முறையில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். 177 ஆண்கள், 33 பெண்கள், ஒன்பது குழந்தைகள் அடங்கலாக இந்த 219 பேரில், குவாத்தமாலாவைச் சேர்ந்த 169 பேரும், எல்சல்வடோரைச் சேர்ந்த 22 பேரும், ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவதுடன் ஆறு இலங்கையர்களும் இருந்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த நால்வரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைச் சாவடியொ ன்றில் ‘ட்ரக்’ வண்டியை நிறுத்துமாறு விடுத்த அறி வித்தலை மீறி சாரதி சென் றதால், அதனைத் துரத்திச் சென்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதன்போதே 219 பேர் மிகவும் மோசமான முறையில் ஈவிரக்கமின்றி கொண்டு செல்லப்பட் டமை தெரியவந்துள்ளது.

பின்னர் இவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பேர் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை துறைமுகங்களுக்கு 500 கப்பல்களை வரவழைக்கும் திட்டம் கப்பல்களை திருத்துவதற்கும் விசேட பிரிவுகள்ஆசியாவின் கொள்கலன் கப்பல் போக்குவரத்து சேவையின் கேந்திர ஸ்தானமாக விளங்கி வரும் இலங்கையின் கப்பல் சேவைகளை வலுவூட்டும் எண்ணத்துடன் அரசாங்கம் மனித வளங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டு வருகிறது.

வணிக சட்டம் மற்றும் நடை முறையை அபிவிருத்தி செய்வதற்கான ஸ்தாபனம் (ஐஇகட) இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து கப்பல் போக்குவரத்து சட்டம் மற்றும் அதன் நடைமுறை பற்றிய பயிற்சி பாசறையை கடந்த 23 ஆம் திகதியன்று கொழும்பில் ஆரம்பித்து வைத்தது.

தெற்காசிய பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து துறையில் முன்னணி நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இத்தகைய பயிற்சிகள் பேருதவியாக அமையும். திருகோணமலை, ஒலுவில், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு வளர்ச்சி அடைய செய்வதன் மூலம் மாதமொன்றுக்கு இலங்கை துறைமுகங்களில் தரித்து செல்லும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உலகிலுள்ள மிகப் பெரிய துறைமுகங்களான, ஜெர்மனியின் ஹெம்பர்க் துறைமுகம், ஹொங் கொங் துறைமுகம், சிங்கப்பூர் துறைமுகங்களை போன்று நவீன வசதிகளைக் கொண்ட பாரிய துறைமுகங்கள் போன்று கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் இப்பொழுது நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இவ் விரு துறைமுகங்களில் பழுதடைந்த கப்பல்களை திருத்துவதற்காக விசேட பிரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சென்னை மகாபோதி தாக்குதலுக்கு சர்வ மதத் தலைவர்கள் கண்டனம் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு நன்றி; பாராட்டு


சென்னை மகாபோதி விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலை பெளத்த, ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலை கட்டுப்படுத்தவும் மத ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து அவர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மகாபோதி விகாரை மீதான தாக்குதலை கண்டித்து தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மத அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளரும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் தலைவருமான வணபிதா சரத் ஹெட்டியாரச்சி கூறியதாவது:-

இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறு குழுவொன்றே இதனை செய்துள்ளது. இதன் பின்னணியில் பயங்கரவாத குழுக்கள் எதுவும் இல்லை. இந்தியாவுக்கு யாத்திரை செல்வதற்கு இலங்கை மக்கள் அஞ்சத் தேவையில்லை.

இந்திய அரசு உரிய பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்துள்ளது. மகாபோதி விகாரைக்கருகில் காவலரண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

30 வருட யுத்தம் முடிவடைந்து நாடு அமைதியாகவுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும். இவ்வாறான சதிகளை ஒழிக்க இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தம்மாஷ்மி மத்திய நிலையத் தலைவர் கலகம தர்ம ரஷ்மி தேரர் கூறியதாவது:-

இந்தத் தாக்குதலை இன, மத, பேதமின்றி கண்டிக்கிறோம். இதனால், இரு நாட்டுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச ஹிந்து மத அமைப்பின் செயலாளரும் ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கூறியதாவது:-

இந்தத் தாக்குதலினால் பெளத்த மக்களின் மட்டுமன்றி முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களின் மனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதிகள் யாரும் கிடையாது. இனி மேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தெவட்டகஹ ஜுஆ பள்ளி பிரதம பேஷ் இமாமும், தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மத கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ஸெய்யித் ஹஷன் மெளலானா கூறியதாவது:-

30 வருட யுத்தம் முடிவடைந்து அமைதி நிலை நாட்டில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மகா போதி மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனை கண்டிக்கிறோம்.

இதன் பின்னணியில் தீவிரவாதிகள் கிடையாது. இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலை கண்டிக்கிறோம். இன உறவை குழப்ப எடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.

மேலும் பலரும் கருத்துக் கூறினர்.
மேலும் இங்கே தொடர்க...

சுவரொட்டிகள் ஒட்டுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்ய உத்தரவு


தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுபவர்களை கட்சி பேதமின்றி கைது செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு ஆரம்பிக்க முன்னரே பல வேட்பாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் அபேட்சகர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்க தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கூடுதலான தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சுவரொட்டிகள் ஒட்டுவது சட்ட விரோதமானது என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அந்தந்த பொலிஸ் நிலையங்களினூடாக சுவரொட்டி ஒட்டுவோரை கைது செய்ய உள்ளதாக கூறினார்.

போஸ்டர்கள் ஒட்டப்பட்ட உடன் அவற்றை அகற்ற பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரணில் கட்சித் தலைவராக இருப்பதே ஐ.தே.க ஆதரவாளர்களின் விருப்பம்


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்பதே அதிக மான கட்சி ஆதரவா ளர்களின் விருப்பமாகு மென, ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார்.

ரணில் விக்கிரம சிங்க கட்சிக்கு பாரிய வளமாகக் காணப் படுவதாகவும், அவர் தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டுமெனவும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச செயற்குழுக் கூட்டத்திலே ஏற்றுக் கொண்டதாகவும் அத்தநாயக்க கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியானது ரணில் அணி, சஜித் அணி என இரண்டாகப் பிரிந்துள் ளதாகவும் அதில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல் லையெனவும் அவர் மேலும் கூறினார்.

கட்சி ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அனைவரும் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலின் போது அனை வரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடு படுவதாகவும் அவர் கூறினார்.

கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பா ட்டிற்குத் தீர்வுகாண்பதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பதுளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் போட்டி


பதுளை மாவட்டத்தின் இரு நகர சபைகளினதும் 15 பிரதேச சபைகளினதும் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

மாவட்டத்தின் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் தமிழ் வாக்காளர்களையும் 38 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களையும் மையப்படுத்தியே, மேற்கண்ட வேட் பாளர்கள், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளிலேயே, அதிகளவு தமிழ் வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிட மக்கள் விடுதலை முன்னணியும் கூடுதலான தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் கணி சமான தமிழ் வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பசறை, வெலிமடை, பண்டாரவளை பிரதேச சபைகளுக்கு கூடுதலான முஸ்லிம்களை களம் இறங்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக் கட்சியும் கணிசமான முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறத்தியிருக்கின்றது. லுனுகலையில் முஸ்லிம்களைக் கொண்ட சுயேச்சைக் குழுவொன்றும், லுனகலை பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றது.

இரு அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது, பதுளை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அத்தோடு 36 சுயேச்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிடவே கூடுதலான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் களம் இறங்கியுள்ளன. லுனுகலை பிரதேச சபை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபையென்பதும், குறிப்பிடத்தக்கது.

நடைபெறப் போகும் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பசறை, லுனுகலை, அப்புத்தளை, ஹாலி- எலை, ஊவாபரணகம, அல்துமுள்ளை, எல்ல அகிய பிரதேசங்களிலேயே தமிழ் வாக்காளர்கள் ஆகக் கூடுதலாக இருந்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

எதிராக நீதிமன்றம் செல்கிறது ஈ.பி.டி.பி


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஈ.டி.பி.பி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈ.பி.டி.பி.யின் முக்கிய பிரமுகரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டிருந்தவருமான சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் தகவல் வெளியிடுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயர் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறிய தவறு காரணமாகவே எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின பெயர் ஆங்கிலத்தில் சரியாக எழுதப்பட்டிருந்த போதும் தமிழில் தவறாக எழுதப்பட்டுள்ளதாகக் காரணம் காட்டியே யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அந்த வேட்புமனுவை ஏற்க மறுத்துள்ளார்.
தேர்தல் சட்டத்தின் படி இதுபோன்ற காரணங்களைக் காட்டி உதவித் தேர்தல் ஆணையாளர் வேட்புமனுவை நிராகரிக்க முடியாது. விரைவில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இதுபோன்ற சிறிய தவறுகள் காணப்பட்டன.
ஆனால் அந்த மனுக்கள் இன்னமும் நிராகரிக்கப்படவில்லை. நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால் எமது எதிர்ப்பை தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்து விட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்புமனுவில் ‘ஐக்கிய‘ என்ற சொல் விடுபட்டிருந்தது.
அதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். அதுபோலவே நாமும் சிறியதொரு தவறைத் தான் செய்துள்ளோம். அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை. எமது வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்தவும் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


யாழில் ஈபிடிபின் வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்தது கூட்டமைப்பு!
யாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதியில் யாழ்ப்பாணத்தில் 13 பிரதேசசபைகள் 3 நகரசபைக்கான வேட்புமனுத் தாக்கலின்போது 16 வேட்புப் பத்திரங்களின்படி 63 வேட்புப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 20 நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு உள்ளிட்ட 20 வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களுக்கான 19வேட்புமனுத் தாக்கல்கள் உதவித் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 3 நகரசபை, மற்றும் 13 பிரதேச சபைகளுக்கும், கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தேர்தல்த் திணைக்களத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட போதும் வேட்புமனுவில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என விண்ணப்பிக்கப்பட்டமையினால் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் சுட்டிக்காட்டியதையடுத்து யாழ் மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் வேட்புமனுக்களை நிராகரித்தார்.
இதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் யாழ்மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபையிலும் ஐ.தே.க. யானை சின்னத்தில் 16 சபைகளிலும் போட்டியிடுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பருத்தித்துறை நகரசபை, காரைநகர் பிரதேசசபை, வலிகிழக்கு பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை உள்ளிட்ட 4 சபைகளில் மணிச்சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
ஐக்கிய சோசலிச கட்சி சாவகச்சேரி நகரசபையில் ஓட்டோ சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தவிர 6 சுயேட்சைக் குழுக்களும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

28 ஜனவரி, 2011

சுவிற்சர்லாந்தில் மரணமடைந்தவரின் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள்

சுவிற்சர்லாந்தில் அண்மையில் மரணமடைந்த சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுவிற்சர்லாந்தை வதிவிடமாகக் கொண்ட இலங்கையரான சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவர் சுவிற்சர்லாந்து சூரிச்சிலுள்ள அவரது வசிப்பிடத்தில் 08.12.2010 அன்று இறந்த நிலையில் காணப்பட்டார் என சூரிச் பொலிஸ் ஜெனீவாவிலுள்ள எமது தூதராலயத்துக்கு அறிவித்துள்ளது.

இறந்தவர் பிறந்த திகதி: 20.07.1968 என்றும் கடவுச்சீட்டு இலக்கம்: ஆ 2176054 எனவும் மனைவியின் பெயர்: சத்தியசோதி குறிஞ்சிக்குமரன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை முகவரி: கைதடி மேற்கு, கைதடி, யாழ்ப்பாணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் பற்றிய விபரங்களை அறிய வெளிநாட்டு அமைச்சின் கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு பெருமுயற்சி எடுத்துவருகின்றது. இன்றுவரைக்கும் இறந்தவரது உறவினர்கள் எவரும் அவரது பூதவுடலைக் கோரி வரவில்லை என்பதுடன் எம்முடன் தொடர்புகொள்ளவும் இல்லை.

இறந்த குறிஞ்சிக்குமரனின் பூதவுடலை அடையாளம் காண்பதற்காக, அவரது உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு மக்களின் உதவியை நாடுகின்றது. இறந்தவரின் உறவினர் பற்றிய விபரங்களை தெரிந்தவர்கள் எங்களுடன் தொலைபேசியூடாக உடனடியாகத் தொடர்புகொண்டு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, இல.14, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01. என்ற முகவரி ஊடாக அல்லது 0112437635 மற்றும் 0114718972 ஆகிய தொலை பேசி இலக்கங்கள் ஊடாகவோ அறிவிக்குமாறு கோருகின்றோம். மேலும் 0112473899 தொலைநகல் இலக்கம் ஊடாகவும் அறிவிக்கலாம்.
மேலும் இங்கே தொடர்க...

301 உள்ஃராட்சி சபைகளுக்கு மார்ச் 17ம் திகதி தேர்தல்


வேட்புமனுக்கள் ஏற்பு நேற்றுடன் நிறைவு; ஐ.தே.க, ஐ.ம.சு.மு., தமிழரசுக்கட்சி, மு.கா, ஜே.வி.பி உட்பட முக்கிய கட்சிகளின் மனுக்கள் நிராகரிப்பு


301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று அறிவித்தார். 4 மாநகர சபைகள், 39 நகர சபைகள் மற்றும் 258 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்தலின் மூலம் 3931 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ம் திகதி ஆரம்பமாகி நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க., தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. உட்பட பிரதான கட்சிகள் பலவற்றின் கூடுதலான வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் வேட்புமனு தொடர்பான இறுதிப் பட்டியல் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை. உத்தியோகபூர்வ இறுதி வேட்புமனுப்பட்டியல் இன்று வெளியாகுமென தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.

பிரதான கட்சிகள் மற்றும் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் நேற்றே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தன. வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மாவட்ட செயலகங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ். மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த 16 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இது தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் 3 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

காலி மாவட்டத்தில் அக்மீமன பிரதேச சபை, இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகர சபை, மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை மற்றும் சியம்பலதுவ பிரதேச சபைகள் குருநாகலை மாவட்டத்தில் பொல்கஹவல பிரதேச சபை, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ மற்றும் பல்லேபொல பிரதேச சபைகள் கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பிரதேச, சபை நுவரெலிய மாவட்டத்தில் லிந்துல- தலவாக்கலை நகர சபை, நுவரெலிய பிரதேச சபைகள் என்பவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.

ஐ.தே.க.வின் மனுக்களும் கூடுதலாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகமவிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி சபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகர சபையிலும் ஐ.தே.க. வின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காலி மாவட்டத்தில் பத்தேகம பிரதேச சபை, கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல பிரதேச சபை, மட் டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபை என்பவற்றின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள தாக அறிய வருகிறது.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மாவட்டத்தில் அத்தன கல்ல பிரதேச சபைக்கும் மினுவாங் கொடை நகர சபைக்கும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பிரதேச சபைக்கும் கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேச சபைக்கும் சமர்ப்பித்த வேட்பு மனுக்கள். நிராக ரிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டா ரங்கள் கூறின.

ஜே.வி.பி. மாத்தளை மாவட்டத் தில் வில்கமுவ பிரதேச சபை, புத்த ளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய பிரதேச சபை என்பவற்றிற்கு தாக் கல் செய்த வேட்பு மனுக்களும் தமிழ ரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட த்தில் பூநகரி, பச்சிலைப் பள்ளி பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட் டுள்ளதாக தேர்தல் செயலக வட் டாரங்கள் கூறின.

பிரஜைகள் முன்னணி, துணுக்காய் பிரதேச சபைக்குத் தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள் ளதாக மாவட்ட செயலக வட்டாரங் கள் கூறின.

இது தவிர நவசமசமாஜ கட்சி, ஜனசெத்த முன்னணி உட்பட மேலும் சில கட்சிகளினதும் பெரும் பாலான சுயேச்சைக் குழுக்களினது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப் பட்டதாக தேர்தல் செயலக வட் டாரங்கள் கூறின. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஆட்சேமித்து வழக்குத் தொடரப் போவதாக பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன.

இம்முறை தேர்தலில் 14, 315,417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 4 உள்ளூராட்சி சபைகளுக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சை க்குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு அரசியல் கட்சியினதும் ஒரு சுயேச்சைக்குழுவினதும் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச சபைக்கு பிர ஜைகள் முன்னணி தாக்கல் செய்தி ருந்த வேட்புமனுவும் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு முஸ்தபா ஜெஸ்லி தலைமையில் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவும் நிராக ரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட ஐ. ம. சு. மு., ஐ. தே. க., ஜே. வி. பி. உட்பட 10 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐ. ம. சு. முன்னணியின் வேட்புமனுக் களை ஐ. ம. சு. மு. செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோர் தாக்கல் செய்தனர்.

பதுளை பதுளை தினகரன் விசேட நிருபர்

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் அங்கீகரிக்கப்பட்ட இரு அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

லங்கா சம சமாஜக்கட்சி மற்றும் ஜனசெத்த பெரமுன ஆகிய அரசியல் கட்சிகளும் பன்னிரெண்டு சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டவைக ளாகும்.

எட்டு அரசியல் கட்சிகளினதும் 24 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட னவாகும்.

வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்ட தில் ஏற்பட்ட குளறுபடிகள், அபேட் சகர்களின் வயது, வேட்பு மனுவில் கையெழுத்திடாமை, முறையாக தயாரிக்கப்படாமை ஆகிய தவறுகளி னாலேயே மேற்படி வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை அம்பாறை மத்திய குறூப்

அம்பாறை மாவட்டத்தில் அரசி யல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 164 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 5 கட்சிகளினதும் 43 சுயேச் சைக் குழுக்களினதும் வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சி சம்மாந்துறை பிரதேச சபைக்குத் தாக்கல் செய்தி ருந்த வேட்புமனுவும் ஈழவர் ஜனநாயகக் கட்சியின் மூன்று வேட்புமனுக்களும் ஜனசெத முன்ன ணியின் ஒரு வேட்புமனுவும் நிராகரி க்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட் டத்தில் ஐ. ம. சு. மு, ஐ. தே. க., ஜே. வி. பி., மு. கா., தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

திருகோணமலை

திருணேமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர் தல் நடைபெறுகிறது. இங்கு ஐ. ம. சு. மு. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், நவச மசமாஜக் கட்சி, ஐ. தே. கட்சி, ஜே. வி. பி. அடங்கலான கட்சிக ளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டி யிடுகின்றன.

குச்சவெளி பிரதேச சபைக்கு ஐ. ம. சு. மு., மு. கா. இணைந்து முன்னாள் ஐ. தே. க. பிரதேச சபைத் தலைவர் ஆதம்பாவா தெளபீக் தலைமையில் போட்டியி டுகிறது. ஐ. தே. கட்சி தமிழரசுக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவும் களம் இறங்கியுள்ளது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு 12 பேர் கொண்ட பெண்கள் அணியினரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். லிபரல் கட்சி கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, பட்டணமும் சூழல் பிரதேச சபையில் போட்டியிடுவதாக அக்கட்சியின் கி. மா. அமைப்பாளர் ஜே. காசிம் தெரிவித்தார்.

ஐ. தே. கட்சி, ஜே. வி. பி., ஐ. ம. சு. மு. அனைத்துப் பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி கந்தளாய், ஹோமரங்கடவல தவிர ஏனைய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

மீன்பிடி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. குணவர்த்தனா (பா. உ) எம். எஸ். தெளபீக், ஜே. வி. பி. சார்பாக கி. மா. சபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ, ஐ. தே. க. சார்பாக திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் டொக்டர் அனுர சிரிசேன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள இரண்டு நகர சபைக ளுக்கும் ஒரு பிரதேச சபைக்குமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 27 உறுப்பினர்களை தெரிவு செய்வதற் காக 564 உறுப்பினர்கள் போட்டியிடு கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து அரசியல் கட்சிக ளும் 42 சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐ. தே. க. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடு தலை முன்னணி, எல்லோரும் பிர ஜைகள் எல்லோரும் மன்னர்கள் ஆகிய ஐந்து அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றது.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய் வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் அமை ச்சர் எம். எஸ். அமீரலி, பிரதி அமை ச்சர் மகளிர் விவகார எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர், மாகாண சபை உறுப்பினர் களான பூ. பிரஷாந்தன், பீரதீப் மாஸ்டர் ஆகியோர்கள் வருகை தந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதியமைச்சர் படுர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பி னர் யூ. எல். எம். முபீன் உள்ளி ட்டோரும் வருகை தந்திருந்தனர்.

நிராகரிப்பு புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு வேட்புமனு பத்திரம் உட்பட 8 வேட்பு மனுப் பத்திரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, நகர சபை, மற்றும் ஏறாவூர் நகர சபை ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குமாக 49 வேட்பு மனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் 8 வேட்பு மனுப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏறாவூர் நகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுப்பத்திரம், மற்றும் ஐந்து சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுப்பத்திரங்கள் காத்தான்குடி நகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட எல்லோரும் பிரஜைகள் எல்லோரும் மன்னர்கள் கட்சியினதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வவுனியா வவுனியா விசேட நிருபர்

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் மூன்று சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல் அலுவலகம் தெரிவிக்கின்றது. வவுனியாவில் ஐந்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேச்சைக் குழுவுமே போட்டியிடவுள்ளன. இதனை வவுனியா தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஏ. எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

உரிய வகையில் வேட்பு மனு பூர்த்தி செய்யப்படாததினால் மூன்று சுயேச்சைக் குழுவினது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை

மாத்தறை மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் எட்டு அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், லிபரல் கட்சி, பூமிபுத்ர கட்சி, ஜனவிமுக்தி கட்சி, எக்ஸத் ஸமாஜவாத் கட்சி ஆகிய கட்சிகள் போடியிடுகின்றன.

மாத்தறை மாவட்டத்தில் 22 சுயேச்சை குழுக்கள் போட்டிக்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் 10 சுயேச்சைக் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கம்பஹா நீர்கொழும்பு தினகரன் நிருபர்

எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்ட அத்தனகல்லப் பிரதேச சபை மற்றும் மினுவாங்கொடப் பட்டின சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக நேற்று (28) கம்பஹா மாவட்ட தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தது.

மேற்படி உள்ளூராட்சி மன்றங்க ளினதும் வேட்பு மனுக்கள் கம்பஹா மாவட்ட தேர்தல் செயலாகத்தினால் நிராரிக்கப்பட்டதென மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் தெரிவித்தார்.

வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டதற்கான கார ணங்கள் பற்றி தேர்தல் செயலக அதிகாரிகளிடம் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் வினவிய போது தேர்தல் ஆணை யாளர் எழுத்து மூலம் இதுபற்றி அறிவிப்பார் என கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் தெரி வித்தார்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்ன த்தில் கம்பஹா மாவட்ட பியகம பிரதேச சபைக்கான வேட்புமனுக் கள் மாவட்ட தேர்தல் செயகலத் தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி


மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணிகளாகவும், சுயேச்சைகளாகவும் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடுகின்றது. ஏறாவூர், காத்தான்குடி நகர சபைகள், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றில் இந்தக் கட்சி இணைந்து போட்டியிடுவதாக அதன் தலைவர்களுள் ஒருவரான பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஓட்டமாவடி பிரதேச சபையில் தனித்தும், ஏறாவூர் நகர சபையில் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை களம் இறக்கியிருப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் அரசாங்க கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வவு னியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் நேற்று வியாழக்கிழமை வேட்பு மனுவை வவுனியா தேர்தல் காரியா லயத்தில் தாக்கல் செய்தது.

ன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறூக் வேட்பு மனுவை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனுவை நேற்றுக் காலை கையளித்துள்ளது.

முக்கியமான தேர்தலாக இது அமைந்துள்ளதினால் அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்டு நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் சனநாயகக் கட்சி, ஈரோஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடைய பிரதிநிதிகள் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்ட பாறூக் எம்.பி. இன ஐக்கியமும் ஜனநாயகமும் கட்டியெழுப்ப முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு இந்த அரசாங்கத்தின் மீது மக் கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என் பதினை தேர்தல் பெறுபேறுகள் எடுத்துக் காட்டும் எனவும் சொன்னார். அதேநேரத்தில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வவுனியா தமிழ் பிரதேச சபைகளுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுலை முன்னணி ஆகியனவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் வே. இராதாகிருஷ்ணன் எம்.பீ. தொழிலாளர் தேசிய முன்னணியின் பீ. திகாம்பரம் எம்.பீ, முன்னாள் எம்.பீக்கள் வீ. புத்திர சிகாமணி, எஸ். அருள்சாமி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு அம்பகமுவ, கொத் மலை பிரதேச சபைகளுக்கு மயில் சின் னத்திலும், ஏனையவற்றுக்கு மண்வெட்டிச் சின்னத்திலும் போட்டி யிடுகின்றது.

இது இவ்வாறிருக்க நுவரெலியா, லிந்துலை, தலவாக்கலை பிரதேச சபைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வேட்பாளர்களை நிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸணுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி அக்கரைப்பற்று மாநகர சபைக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கும் மாத்திரம் தனித்துப் போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கு ஐ. ம. சு. மு. உடன் இணைந்து போட்டியிடுகின்றது. தனித்துவத்தை காக்கும் வகையில் தமது கட்சி இரு உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு யாழ். கோப்பாய் பகுதியில் 9 சந்தேக நபர்கள் கைது

யாழ். நகரில் வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்ட போதே ஏனைய எட்டுப் பேரும் யாழ்.

குருநகர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட தாக யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

யாழ். கோப்பாய் பகுதியில் வீடுடைப்பு சம்பவம் தொடர்பாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவத் தினர் இரவு சந்தேக நபரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரின் தீவிர விசாரணையின் பின்னர் இவர்களிடமிருந்து 100 பவுண் நகைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ். நகரில் ஆங்காங்கே நடைபெற்ற வீடுடைப்பு, வழிப்பறி, சங்கிலி அறுப்பு போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சுமார் 500 க்கும் மேற்ப ட்ட பவுண் தங்கநகைகளை மீட்க முடியும் எனவும் பொலிஸார் தெரி விக்கின்றனர்.

இந்த ஒன்பது பேருடன் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக யாழ். நகரில் கொள்ளை, வழிப்பறி, வீடுடைத்தல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரு க்கின்றனர்.

பொலிஸாரும் தீவிர கண்கா ணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். திடீர் வீதிச் சோதனைகள் ரோந்து நடவ டிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள் ளனர்.

யாழ்.குடா நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் தலைமையில் நடைபெற்ற மாநாடொன்றின்போது கலந்துகொண்ட யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையும், இராணுவத்தினரின் திடீர் வீதிச் சோதனைகள், ரோந்து நடவடிக்கைகள் குறித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அதிகாரமளிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த வேறு எவரேனும் ஆயுதங்கள் வைத் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நீதி, நேர்மையான தேர்தலுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்
நீதியும், அமைதியுமான தேர்தலை நடத்துவதற்கு சகல அரசியல்வாதி களும் கட்சித் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரட்ன கேட்டுக்கொண்டார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் விருப்பத்திற்கு இடமளித்து வன்முறை, ஊழல் மோசடியற்ற தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் பிரதமர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமோக வெற்றியீட்டுவது உறுதி எனவும் பிரதமர் தெரிவித்தார்.

கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்ட போதும் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் அதனால் ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்ட அவர், கண்டியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் பிரதியமைச்சர் அப்துல் காதர் போன்றோரின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைப்பது நிச்சயம். குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளில் எந்த குறையும் இருக்காது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்., கிளிநொச்சி மாவட்டம் பிரதான கட்சிகளின் கூடுதல் மனுக்கள் நிராகரிப்பு

யாழ். மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியி டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தன. பத்தொன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த போதும் இரண்டு சுயேச்சைக் குழுக்கள் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஜே. பி. வி. நான்கு உள்ளூராட்சி சபைக ளுக்கு வேட்புமனுவை முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலை மையில் தாக்கல் செய்தது.நவசமசமாஜக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்த வேட்புமனு ஆரம்பநிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவும் எம். சுமந்திரனும் தாக்கல் செய்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சமர்ப்பித்திருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சமர்ப்பித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 16 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன, கட்சியின் பெயரில் “முன்னணி" என்பதற்கு பதிலாக “கூட்டமைப்பு" என எழுதப்பட்டிருந்தமையால் இங்கு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஐ. தே. க. ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 உள்ளூராட்சி சபைகளுக்காக 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஐ.ம.சு. முன்னணியின் 3 வேட்பு மனுக்களும் ஐ.தே.க.வின் ஒரு வேட்பு மனுவும் தமிழரசுக் கட்சியின் இரு வேட்பு மனுக்களும் நவசம சமாஜக் கட்சியின் ஒரு வேட்பு மனுவுமாக 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இங்கு முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., தமிழரசுக் கட்சி, நவசமசமாஜ கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன போட்டியிடுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

குச்சவெளி நீர்க்கசிவுகள் பூகம்பத்தின் அறிகுறியல்ல பூகற்பவியலாளர்கள் அறிவிப்பு


குச்சவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட பூகம்பமோ, எரிமலை வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல என்று புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக பூகற்பவியலாளர்கள் நேற்று அறிவித்தனர்.

நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு காரணமாக உருவான அமுக்கத்தின் விளைவாகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்ட பிரதேசத்தின் 50 முதல் 100 மீற்றர்கள் வரையான பகுதிக்கு தற்காலிகமாக செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதேசவாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட் பட்ட சலப்பை ஆற்றுக்கு அண்மையிலுள்ள சேற்று நிலத்தில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் திடீரென சாம்பல் நிற மண்ணுடன் சுமார் 18 நீர்க்கசிவுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக பிரதேசவாசிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பீடம் என்பவற்றின் பேராசிரியர்களும், பூகற்பவியலாளர்களும் ஸ்தலத்திற்கு சென்று ஆய்வுகளையும், அவதானிப்புக்களையும் மேற்கொண்டனர்.

புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக பூகற்பவியலாளர்கள் இந்நீர்க் கசிவுகள் தொடர்பாக விரிவான அடிப் படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பணியகத்தின் சிரேஷ்ட பூகற்பவியலாளர் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ தலைமையில் பூகற்பவியலாளர் மஹிந்த செனவிரட்ன, பிராந்திய சுரங்க பொறியியலாளர் வசந்த விமலரட்ண, தொழில்நுட்ப உத்தியோகத்தர் பத்மசிறி ஆகியோர் பிரதேசவாசிகளின் ஒத்து ழைப்புடன் மேற்கொண்ட இந்த ஆய் வுக்கு தேவையான கருவிகளும் கொழு ம்பிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நீர்க் கசிவுகள் தொடர்பாக மூன்று நாட்கள் தொடராக மேற்கொண்ட ஆய்வுகளை நேற்று நிறைவு செய்த இப்பூகற்பவியலாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இந்நீர்க்கசிவுக்கான காரணம் குறித்து கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ குறிப்பிடுகையில், இந்நீர்க்கசிவுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக ஐந்து இடங்களில் வெவ்வேறு மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டோம். நிலத்தின் மேல் மட்டத்திலிருந்து இருபது அடிகள் ஆழம் வரையும் வெவ்வேறு மட்டங்களில் இருந்து மணல், களி போன்றவற்றை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

இவ்வாய்வின் படி இந்த நீர்க்கசிவுக்கு பூகம்பமோ, நிலநடுக்கமோ, எரிமலை வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல. மாறாக இப்பகுதி ஊடாக ஓடுகின்ற நிலத்தடி நீரின் நீர்மட்டம் உயர்ந்ததன் விளைவாகவே இக்கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அதாவது இப்பகுதியில் சுமார் நான்கு, ஐந்து மீற்றர்களுக்குக் கீழாக நிலத்தடி நீரோட்டம் உள்ளது. இதில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக அழுத்தம் உரு வாகியுள்ளது. இதனால் இந்நீரோட்டத்திற்கு மேலாக உள்ள இலகு மண் படை அமுக்கத்திற்கு உள்ளாகி வண்டல் படி வம் ஊடாக நீர்க்கசிவுகள் ஏற்பட்டி ருக்கின்றன.

இப்பகுதி ஊடான நிலத்தடி நீரோட் டத்திற்கு மேலாகக் காணப்படுகின்ற இலகு மண் படை கடந்த 3000 - 4000 வருட காலப்பகுதியில் படிந்திருக்க வேண் டும். இவ்வாறான இலகு மண்படை சிலாபம், மாதம்பை பகுதியிலும் உள்ளது. இருப்பினும் அங்கு நிலத்தடி நீரோட்டம் இல்லாததால் பிரச்சினை இல்லாதுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

2050 உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா?

உலகில் அதிகரித்துவரும் சனத்தொகையை ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டுமாயின் உலக நாடுகள் உலக உணவு உற்பத்தி குறித்து அடிப்ப டை மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் என்றும் இல்லையெனில், 2050 ம் ஆண்டில் பசியும், பட்டினியும் தழைத்தோங்கும் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

உலக நாடுகளின் அரசாங் கங்கள் மக்களின் உணவு உட்கொள்ளும் பழக்கத் தில் மாற்றம் செய்ய வேண்டு மென்றும், உணவு விரயமாவதை தடுக்கவும், உணவுக்காக வழங்கும் மானியத்தை குறைக்க வேண்டும் என்றும், குறைந்த அளவில் கூடுதலான போஷாக் குடைய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடையே பிரபல்யப்படுத்த வேண்டும் எனவும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விஞ்ஞான விவகார ஆலோசகரான பேராசிரியர் ஜோன் பெடிங்டன் தலைமையிலான குழு தனது, அதிகரித்து வரும் உலக சனத்தொகை பற்றிய தீர்க்க தரிசனம் கூறும் ஆய்வறிக்கையில், இன்னும் 40 ஆண்டுகளில் உலகின் சனத்தொகை 9 பில்லியனாக அதிகரிக்குமென்றும் இப்பொழுது இருந்தே இவர்களுக்கு உணவை பெற்றுக்கொடுப்பதற்கான நெறியான திட்டங்களை தயாரிக்க தவறினால், உணவு பஞ்சத்தால் உலக நாடுகளில் மக்களிடையே கலவரங்களும், இரத்த கலரியும் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

உலகின் சத்தொகை பெருக்கத்திற்கு ஈடுசெய்யும் முகமாக அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய உணவுத் தானியங்களை விஞ்ஞானிகள் ஆய்வுகளை செய்து தயாரிக்க வேண்டுமென்றும், காலநிலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்றும் மேலும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

குரங்கிற்கும் கைத்தொலைபேசி ஆசை


குரங்கு கையடக்கத் தொலைபேசி மீதான ஆசையினால் ஆசிரியர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை பறிகொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நோட்டனில் இடம்பெற்றுள்ளது. நோட்டன் கணபதி வித்தியாலய ஆசிரியவர் ஒருவரே தனது கைத்தொலைபேசியை குரங்கிடம் பறிகொடுத்துள்ளார்.

நோட்டன் பிரிட்ஜ் வனப் பகுதிகளில் வாழும் குரங்குகளின் அதிகரிப்பினால் கணபதி பாடசாலை பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதும் இக்குரங்குகள் பாடசாலை மாணவர்களின் மதிய போசனம், பாட புத்தகங்கள் என்பனவற்றை வகுப்பறைக்குள் புகுந்து நாசம் செய்வதாக தெரிய வருகிறது. அத்தோடு, அண்மையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியையும் குரங்கு எடுத்து சென்றுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏதும் விபரீதம் ஏற்படுமோ என பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

27 ஜனவரி, 2011

யாழ். மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிப்புயாழ். மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சற்று முன்னர் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மார்ச் 17இல் உள்ளூராட்சி சபைத்தேர்தல்
உள்ளூராட்சி சபைத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத்தாக்கல் இன்று நண்பகல் 12மணியுடன் முடிவடைந்த பின்னேரே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம் நாட்டின் பிரதான கட்சிகளான ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பன தமது வேட்புமனுக்களை மாவட்ட காரியாலயங்களில் இன்று தாக்கல் செய்தன.

நாடுமுழுவதும் உள்ள 301 பிரதேச சபைகள் அனைத்துக்கும் ஓரே நாளில் தேர்தல் இடம் பெறவிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் அரசாங்கம் போட்டியிடாமை கூட்டமைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி: சிவசக்தி ஆனந்தன்
முல்லைத்தீவில் அரசாங்கம் தனது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் சிறீரங்காவின் பிரஜைகள் முன்னணியின் பின்னால் ஒளிந்துகொண்டு போட்டியிடுவதே எமக்குக் கிடைத்த முதல் வெற்றியென்றும் இதன் மூலம் வடக்கு-கிழக்கில் அனைத்து இடங்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது என்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நேற்று வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெருங்கல் செட்டிகுளம் ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தபின்னர் வேட்பாளர்களின் மத்தியில் உரையாற்றிய போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து அதற்கான அங்கீகாரத்தைக் கேட்டிருந்தோம். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு எமக்கு வாக்களித்தனர். அதனைப்போன்று இத்தேர்தலிலும் நாம் எமக்கு என்ன தேவை என்பதையும் எமது அரசியல் தீர்வு தொடர்பான யோசனைகளையும் முன்வைத்து மக்களிடம் கேட்கப்போகின்றோம். அதற்கும் எமது மக்கள் தமது பூரண ஆதரவினைத் தருவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் இழந்தவைகளுக்கு ஈடாக எமக்கு ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு இத்தேர்தல் எமக்கு ஒரு கருவியாகப் பயன்படவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் கட்சிகளை மறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு உழைத்து எமது இலட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் தீவிரமாகக் கடமையாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் தேர்தல் ஜனநாயக முறையில் இடம்பெறுமா?: சந்திரசேகரன்யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலைக் முன்னணியின் உறுப்பினர் சந்திரசேகரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஜே.வி.பி இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது. இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் தற்போது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே ஜனநாயக முறையிலான தேர்தல் இடம்பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் ஒரு மாற்றம் ஏற்பட தற்போது நடைபெறும் இந்த சிறிய தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்


வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெங்கல செட்டிகுளம் ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நேற்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன்; வவுனியா மாவட்ட தேர்தல்கள் காரியாலயத்தில் கையளித்தார்.

இவருடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் நகரபிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் டேவிட் நாதன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவு

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தாவை தலைவராகவும் முன்னாள்

எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கத்தை செயலாளராகவும் கொண்டு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இயங்கிவருகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபை தலைமைவேட்பாளராக எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடவுள்ளார். ஏனைய சபைகளிலும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் நவசமாஜயக்கட்சியுடன் இணைந்து மேசை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்தது. இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவரகளுடன் பேச்சவார்த்தை இடம்பெற்றது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

26 ஜனவரி, 2011

சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்தரவிடவில்லை

சட்டரீதியாக பொறுப்பேற்று பராமரிக்குமாறே இராணுவத்துக்கு அறிவுறுத்தல்

வெள்ளைக் கொடி விவகார வழக்கில் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு தாம் உத்தரவிட்டதாக ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் வெளியாகி யிருந்த சரத் பொன்சேகாவின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (25) வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சாட்சியமளி க்கும் போது தெரிவித்தார்.

சரணடையவரும் புலிகளின் தலைவர்களையும் ஏனைய உறுப் பினர்களையும் சட்டத்தின் பிரகாரம் பொறுப்பேற்று, அவர்களை நன்றாகப் பராமரிக்குமாறு இராணு வத்திற்கு அறிவுறுத்தல் வழங்க ப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்தின் 11 ஆயிரத்து 968 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுள் ஐயாயிரம் பேர் புனர்வாழ்வு அளிக் கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள் ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகை யின் பிரதம ஆசிரியர் திருமதி பெட்ரிக்கா ஜான்ஸணுக்கு வழங்கிய பேட்டியில், இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை வழங்கி யமை மற்றும் அதனூடாக அரசாங் கத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர் ப்பலையை உருவாக்க முயற்சிப்பதற்காக வெள்ளைக் கொடி கதையைக் கூறியமை குறித்து சட்ட மா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நேற்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. இங்கு மேலும் சாட்சிய மளித்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, புலிகளின் தலைவர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த துடன் அவர்கள் இன்னமும் பாது காப்பாக உள்ளதாகவும் கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான சரத் பொன்சேகாவின் பேட்டியினால் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் சுமார் 10 இலட்சம் புலம் பெயர் தமிழர்க ளின் எதிர்ப்பு இலங்கை அரசுக்கும், தமக்கும் ஏற்பட்டதாகவும் பாது காப்புச் செயலாளர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பால்மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு விலையேற்றத்தை தவிர்க்க நடவடிக்கை


பால் மா விலையேற்றத்தைத் தவிர்ப் பதற்காக பால்மாவுக்கான இறக்குமதி வரியை 22.00 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிலோவுக்கு 50 ரூபாவாக இருக்கின்ற இறக்குமதி வரி ரூபா 28.00 வரை குறைக்கப்பட விருக்கின்றது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று 26 ஆம் திகதி அல்லது நாளை 27 ஆம் திகதி திறைசேரி வெளியிடும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.

ரூமி மர்ஷணுக் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை பால் மா விலையை அதிகரிக்க இடமளிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

உலக சந்தையில் பால் விலை அதிகரித்துள்ளதால் பால் மா இறக்குமதி நிறுவனங்கள் முகம் கொடுத்துள்ள நிலைமையை முன்வைத்து பால் மா விலையின் இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தி லிருந்து இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்ப ட்டுள்ளது.

மூன்று கட்டங்களைக் கொண்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அனல் மின் நிலையத் திட்டத்தின் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் ஊடகவியலாளர்கள் குழுவொன்றை நேற்று நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே சேவியர் மேற்கண்டவாறு கூறினார்.

நுரைசோலை அனல்மின் நிலையத்தின் முதற் கட்டத்தின் மூலம் முன்னூறு மெகாவோற் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர். இத்திட்டத்தின் மூன்று கட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தொளாயிரம் மெகாவோற் மின்சாரத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

சீனாவின் கடனுதவியுடன் இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தியை ஆரம்பித்தால் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதனால் மின் உற்பத்திக்கு ஏற்படும் பெருந்தொகையான செலவினத்தை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அனல்மின் நிலையத்தால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட சேவியர் மின் உற்பத்தியின் போது வெளியேறும் புகை சுத்திகரிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வெளியேற்றப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு இருபது ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் விவசாயத்திற்கு மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அநுராதபுரம் சிறைக்கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது கைதி, அதிகாரி மோதல் குறித்து விசாரணை நடத்த மூவர் குழு நியமனம்

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய உண்ணாவிரத போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் நேற்று அநுராதபுரத்திற்கு சென்று கைதிகளுடனும் அங்குள்ள அதிகாரிகளுடனும் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்தே இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்பொழுது அங்கு சுமுகநிலை நிலவுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அநுராதபுர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ரவீந்திரன் தலைமையில் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றும் அமைச்சரினால் நியமிக் கப்பட்டுள்ளதாக சதீஷ்குமுண்ர் மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் நடத்திய உண்ணாவிரதம் மற்றும் மோதல் தொடர்பில் ஆராயும் பொருட்டு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார், சிறைச் சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் அநுராத புரத்திற்கு நேற்று நேரில் சென்று நிலை மைகளை ஆராய்ந்தனர்.

கைதிகளுடனும், அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய உயர் மட்டக் குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களையும் சந்தித்து பேசியுள்ளனர்.

உணவு மற்றும் சுகாதார வசதிகள் உட்பட தங்களுக்கு தேவையான வற்றை செய்து தருமாறு கைதிகள் அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அமைச்சின் ஆலோசகர் தெரிவித்தார்.

மோதல் சம்பவம் தொடர்பான விசா ரணைகளை உரிய முறையில் நடத்தி ஒருவார காலத்திற்குள் தமக்கு அறக்கையாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விசாரணைக்காக நியமித்துள்ள குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் மாலை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் எட்டுப் பேர் அடங்குகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகவும் கொலை தொடர்பாகவும் விரிவான விசாரணை களை நடத்தவென பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரியவின் ஆலோ சனையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலேயே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முல்லை மாவட்டத்தில் துரிதம் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர் அரச அதிபர்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்து ள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இந்த மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மீளக்குடியமரத் திரும்பியுள்ள மக்களின் குடியேற்றத் துக்கான வீடுகள் அரச, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்க ளின் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன.

இதனைவிட, முல்லைத்தீவு மாவட்ட த்தில் மீளக்குடியேறி வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டு மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வீதிகள், பாலங்கள் புனரமைப்பு, உரக் களஞ்சியங்கள் அமை ப்பு மற்றும் பாடசாலைகள் புனரமைப்பு போன்ற வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவ தாகவும் முல்லைத்தீவு, மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் மேலும் தெரிவித்தார்.

இதேவதிளை, இன்னும் மீள்குடியேற்றத் துக்கு உட்படாது எஞ்சியுள்ளோரையும் மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

25 ஜனவரி, 2011

தாய்லாந்துக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் கைது
இலங்கையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சந்தேக நபரிடமிருந்து 15 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர் இருவர் சென்னையில் கைதுசென்னையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல இருந்த இலங்கையர்கள் இருவர் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 30) மற்றும் வவுனியாவைச் சேர்ந்த சுதேசிகரன் (வயது 23) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இந்தியாவிலிருந்து புதிதாக 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோசனையின் பிரகாரமே இந்த பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் பந்துசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனையின் கீழ் 100 பஸ்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ் ஒன்றின் பெறுமதி 40 இலட்சமாகும். இதற்கான செலவு இலங்கை போக்குவரத்துச் சபையினால் ஈடுசெய்யப்படும் என்பதுடன், இந்த பஸ்கள் தூரப்பிரதேசங்களுக்கான சேவைகளில் ஈடுபடுத்தப்படும்.
மேலும் இங்கே தொடர்க...