3 டிசம்பர், 2009



திறந்த முகாம்களாக மாற்றப்பட்டபின் இதுவரை 17ஆயிரம்பேர் வெளியேறியதாக தகவல்-

வடபகுதி நலன்புரி முகாம்கள் திறந்த முகாம்களாக மாற்றப்பட்டதன் பின்னர் இதுவரையில் 17ஆயிரம்பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் அநேகமானோர் மீண்டும் தமது நலன்புரி முகாம்களுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் தேவைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நேற்று அப்பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற மக்களின் நலன்கருதி இன்றுமுதல் மேலும் 15பஸ்களை வழங்குவதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார். இம்மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து 7லட்சத்து 21ஆயிரத்து 359பேர் வாக்களிக்கத் தகுதி-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து 7லட்சத்து 21ஆயிரத்து 359பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியிலிருந்து 53,011பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியிலிருந்து 63,997பேரும், காங்கேசன்துறை தொகுதியிலிருந்து 69,082பேரும், மானிப்பாய் தொகுதியிலிருந்து 71,114பேரும், கோப்பாய் தொகுதியிலிருந்து 25,798பேரும், உடுப்பிட்டி தொகுதியிலிருந்து 56,524பேரும், பருத்தித்துறை தொகுதியிலிருந்து 48,613பேரும் சாவகச்சேரி தொகுதியிலிருந்து 65,141பேரும், நல்லூர் தொகுதியிலிருந்து 72,558பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.



ஜனாதிபதி தேர்தலுக்காக ஆறு அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆறு அரசியல் கட்சிகள் இதுவரை தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி ஐக்கிய சமாஜவாத கட்சி சார்பாக ஸ்ரீதுங்க ஜயசூரியவும், யாவரும் இந்நாட்டு மக்களே யாவரும் மன்னர்களே அமைப்பின் சார்பாக எம்.பி நெமினிமுல்லவும், இலங்கை முற்போக்கு முன்னணி சார்பாக ஜே.ஏ.பீற்றர் நெல்சன் பெரேராவும் தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். அத்துடன் புதிய சிஹல உறுமய கட்சியின் சார்பாக சனத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பாக அச்சல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி சார்பாக ப.Pரி.பி.எஸ்.ஏ.லியனகே ஆகியோர் தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளோ, சுயேட்சைக்குழுக்களோ தமது கட்டுப்பணத்தை இதுவரை செலுத்தவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


வத்தளையில் தேயிலை வர்த்தகர், உதவிப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நால்வரைக் காணவில்லை-

நீர்கொழும்பு வத்தளைப் பகுதியில் தேயிலை வர்த்தகர் ஒருவரும், அவரது நண்பரான உதவிப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்குபேரும் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொரளைப் பொலீசாருடன் இணைந்து இவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ராஜகிரியவுக்கு வருமாறு இந்த வர்த்தகருக்குக் கிடைக்கப்பெற்ற அழைப்பினைத் தொடர்ந்து குறிப்பிட்ட நால்வரும் நேற்றிரவு அங்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு 9மணிமுதல் அவர்கள் காணாமற் போயுள்ளதுடன், அவர்கள் சென்ற கெப்ரக வாகனம் ராஜகிரிய பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
உற்​றார் உற​வி​ன​ரைப் பார்க்க தமி​ழர்​க​ளுக்கு அனு​மதி

http://www.virakesari.lk/news/admin/images/keviliyamadu-300.jpg


இலங்​கை​யின் வடக்​கில் அரசு நடத்​தி​வ​ரும் பல்​வேறு முள்வேலி முகாம்​க​ளில் அடைத்து வைக்​கப்​பட்​டி​ருக்​கும் தமி​ழர்​க​ளுக்கு செவ்​வாய்க்​கி​ழமை புதிய சுதந்​தி​ரம் அளிக்​கப்​பட்​டது. அவர்​கள் விரும்​பி​னால் முகா​மில் உள்ள அலு​வ​ல​கத்​தில் தங்​க​ளு​டைய பெயர்,​ இருப்​பி​டம் உள்​ளிட்ட விவ​ரங்​க​ளைப் பதிவு செய்​து​கொண்டு முகா​மை​விட்டு வெளி​யேறி தங்​க​ளு​டைய உற்​றார் உற​வி​னர்​க​ளைச் சென்று பார்க்​க​லாம் என்​பதே அந்த சுதந்​தி​ரம் ஆகும்.​ இலங்​கை​யில் உள்ள முகாம்​க​ளில் இப்​போது அடை​பட்​டுக்​கி​டக்​கும் தமி​ழர்​க​ளுக்கு இது மிகப்​பெ​ரிய நிம்​ம​தி​யைத் தரும் என்று நம்​பப்​ப​டு​கி​றது. முகாம்​க​ளில் அடைத்து வைக்​கப்​பட்​டி​ருக்​கும் தமி​ழர்​க​ளின் மொத்த எண்​ணிக்கை எவ்​வ​ளவு என்று துல்​லி​ய​மா​கத் தெரி​ய​வில்லை.

தமிழ் ​நாட்டி​லி​ருந்து நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் அடங்​கிய குழு சென்று திரும்​பிய பிறகு தமி​ழர்​கள் மீதான கட்​டுப்​பா​டு​கள் தளர்ந்து வரு​கின்​றன என்றே கருத இடம் இருக்​கி​றது. அவர்​களை அவர்​க​ளு​டைய வழக்​க​மான குடி​யி​ருப்​பு​க​ளில் குடி​ய​மர்த்த அரசு தரப்​பில் தீவிர நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​ப​டு​வ​தா​கத் தெரி​யா​விட்​டா​லும் இந்​தச் சலுகை அதை விரை​வு​ப​டுத்​தும் என்றே பார்​வை​யா​ளர்​கள் நம்​பு​கின்​ற​னர்.​ ஜன​வரி 31-க்குள் அத்​தனை முகாம்​களி​லி​ருந்​தும் தமி​ழர்​கள் வெளி​யேறி வடக்​கி​லும் கிழக்​கி​லும் தங்​க​ளு​டைய பாரம்​ப​ரி​யக் குடி​யி​ருப்​பு​க​ளுக்கே செல்ல அனு​ம​திக்​கப்​ப​டு​வார்​கள் என்று அரசு கூறி​வ​ரு​வது குறிப்​பி​டத்​தக்​கது.​

முகாம் ​களை விட்டு வெளி​யே​றும் தமி​ழர்​கள் எவ்​வ​ளவு காலம் வெளியே தங்​க​லாம்,​ மீண்​டும் எப்​போது முகா​முக்​குத் திரும்ப வேண்​டும் என்ற வரை​மு​றை​யெல்​லாம் இனி செவ்​வாய்க்​கி​ழமை முதல் கிடை​யாது என்று மறு​வாழ்​வ​ளித்​தல் துறை அமைச்​சர் ரிசாத் பதி​யு​தீன் திங்​கள்​கி​ழமை அறி​வித்​தி​ருந்​தார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​ தமி​ழர்​கள் அடைத்து வைக்​கப்​பட்​டி​ருந்த முகாம்​க​ளில் போதிய இட வசதி இல்லை,​ குடி​நீர்,​ கழிப்​பிட வசதி இல்லை,​ மருத்​துவ வச​தி​யும் போதாது என்று அதைப் பார்​வை​யிட்ட பலர் கருத்​து​க​ளைத் தெரி​வித்​தி​ருந்​த​னர். அத்​து​டன் உடல் ரீதி​யா​க​வும் உள்ள ரீதி​யா​க​வும் சோர்ந்​தி​ருந்த தமி​ழர்​க​ளுக்கு முகாம்​க​ளில் வழங்​கப்​பட்ட உணவு போதிய சத்​து​கள் நிரம்​பி​ய​தா​கவோ,​ போது​மா​ன​தா​கவோ இல்லை என்​றும் கூறப்​பட்​டது.

எல் ​லா​வற்​றுக்​கும் மேலாக முகாம்​க​ளி​லும் கூட குடும்​பங்​கள் ஒன்று சேர​வில்லை என்​றும் ஆதங்​கம் தெரி​விக்​கப்​பட்​டது.​ முகாம்​க​ளைப் பார்க்க உள்​நாட்டு நிரு​பர்​க​ளுக்​கும் சர்​வ​தேச நிரு​பர்​க​ளுக்​கும் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. அத்​து​டன் சர்​வ​தேச மனித உரி​மைக் குழு​வி​னர்​கள்,​ தன்​னார்​வத் தொண்டு நிறு​வன உறுப்​பி​னர்​கள் ஆகி​யோ​ரும் தங்​க​ளுக்கு இலங்கை அரசு அனு​மதி மறுப்​ப​தா​கத் தொடர்ந்து புகார்​க​ளைத் தெரி​வித்​து​வந்​தன. இந்த நிலை​யில் தமி​ழர்​களை முகாம்​களி​லி​ருந்தே வெளியே சென்​று​வர அனு​ம​தித்​தி​ருப்​ப​தால் தமி​ழர்​க​ளின் மன இறுக்​கம் குறைய வாய்ப்பு ஏற்​பட்​டி​ருக்​கி​றது.​

வவு ​னியா மட்​டும் அன்றி முல்​லைத் தீவி​லும் தமி​ழர்​களை மீண்​டும் குடி​ய​மர்த்த அரசு தீர்​மா​னித்​தி​ருக்​கி​றது. துணுக்கை,​ பூந​கரி,​ மல்​லாவி பகு​தி​க​ளில் பத்​தா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட தமி​ழர்​கள் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வார்​கள். வவு​னி​யா​வின் வடக்​கில் மேலும் 18 ஆயி​ரம் தமி​ழர்​கள் அடுத்த சில நாள்​க​ளில் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று வடக்கு மாகாண கவர்​னர் ஜி.ஏ. சந்​தி​ர​சிறி திங்​கள்​கி​ழ​மையே தெரி​வித்​தி​ருந்​தார்.​ குடி​ய​மர்த்​தப்​ப​டும் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் வீட்​டுக்கு கூரை வேய 12 முதல் 18 கூரைத் தக​டு​கள் தரப்​ப​டு​கின்​றன. அத்​து​டன் 10 மூட்டை சிமென்ட் தரப்​ப​டு​கி​றது. அதி​லேயே அவர்​கள் வீட்​டை​யும் கட்​டிக்​கொண்டு வேலி​யும் அமைத்​துக் கொள்ள வேண்​டும்.​

சமை ​யல் பாத்​தி​ரங்​கள்,​ ஆறு மாதங்​க​ளுக்​குத் தேவைப்​ப​டும் உணவு தானி​யங்​கள் உள்​ளிட்ட ரேஷன் சாமான்​கள் தரப்​ப​டு​கின்​றன.​ அத்​து​டன் ஓர​ளவு சேதம் அடைந்த வீட்​டைப் பழு​து​பார்த்​துச் சீர​மைக்க இலங்கை நாண​ய​மான ரூபா​யில் 50 ஆயி​ரம் தரப்​ப​டு​கி​றது. வீடு முற்​றி​லும் சேதம் அடைந்​தி​ருந்​தால் 3.5 லட்ச ரூபாய் தரப்​ப​டு​கி​றது. இதை "டெய்லி நியூஸ்' என்ற அரசு செய்​திப்​பத்​தி​ரி​கைத் தெரி​விக்​கி​றது.​ தமி​ழர்​கள் குடி​ய​மர்த்​தப்​பட்ட ​ கிரா​மங்​கள் ஒவ்​வொன்​றுக்​கும் ஒரு 3 சக்​கர மோட்​டார் வாக​னம் தரப்​ப​டு​கி​றது. அவ​சர உத​விக்​குப் பயன்​ப​டுத்​திக்​கொள்ள இவை தரப்​ப​டு​கின்​றன.​ வடக்கு மாகாண கவுன்சி​லில் பணி​பு​ரி​யும் 146 அரசு அதி​கா​ரி​க​ளுக்கு சைக்​கிள்​கள் வழங்​கப்​பட்​டன. தமி​ழர்​கள் வசிக்​கும் கிரா​மங்​க​ளுக்​குச் சென்று அவர்​க​ளு​டைய பிரச்​னை​க​ளைக் கேட்​டுத் தீர்ப்​ப​தற்​காக இóவை வழங்​கப்​பட்​ட​தாக அரசு வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​
இடம்பெயர் மக்களின் சுதந்திர நடமாட்டம் : பிரிட்டன் பாராட்டு


முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்கு பிரிட்டன் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

வட பகுதியில் உள்ள, இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டதைப் பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் மைக் பொஸ்டர் வரவேற்றுள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்குத் திரும்புவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் தொடர்ந்து கூறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர் முகாம்களுக்கான போக்குவரத்து, மற்றும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது வீடுகளுக்குத் திரும்பும் வகையில் அவர்களது வாழ்கையை மீளமைத்துக் கொள்ளவும் பிரிட்டன் தொடர்ந்து உதவும் என்றும் பிரிட்டிஷ் அமைச்சர் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3ஆவது டெஸ்ட் தொடர் : முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 இல் ஆட்டமிழந்தது : இந்தியா 443/1

மும்பையில் நடந்து வரும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இலங்கை அணி 393 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

நேற்று 8 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்கள் எடுத்து முதல் நாள் ஆட்டத்தை முடித்திருந்த இலங்கை, இன்று காலை 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீதமிருந்த விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து ஆட்டமிழந்தது.

முதலாவது டெஸ்ட் சதத்தைப் போடும் ஆவலில் இருந்த இலங்கை வீரர் மாத்யூஸ், 99 ஓட்டங்களில் ரன் அவுட் ஆகி பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்தார்.

நேற்று இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்த பிரக்யான் ஓஜா இன்று மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையடுத்து இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. வழக்கம் போன்று அதிரடியாக ஆடி வருகிறார் ஷேவாக். முரளி கிருஷ்ணா ஆட்டமிழக்க ஷேவாக்குடன் இணைந்திருக்கின்றார் ட்ராவிட்.

இந்தியா ஒரு விக்கட்டை இழந்து 443 ஓட்டங்களை எடுத்துள்ளது. ஷேவாக் 284 ஓட்டங்களுடனும், ட்ராவிட் 62 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஒருநாள் போட்டியிலும் ஸ்ரீசாந்த் ...

இந்நிலையில் டெஸ்ட் போட்டித் தொடரில் இடம் பெற்ற வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டுவென்டி 20 தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டுவென்டி 20 போட்டிகளுக்கான இந்திய அணி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டுவென்டி 20 போட்டிகளிலும் ஹர்பஜன் சிங், ஜாகிர் கானுக்கு ஓய்வளிக்கப்படடுள்ளது. டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்த இரு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

ஒரு நாள் போட்டித் தொடரில் முனாப் படேலுக்குப் பதில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். அமீத் மிஸ்ராவுக்குப் பதில் பிரக்யான் ஓஜா இடம் பெறுகிறார்.

தமிழக அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஆர். அஸ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஐபிஎல் போட்டிகளிலும் அவர் அசத்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுதீப் தியாகிக்கு டுவென்டி 20 போட்டிகளில் ஆட இடம் கிடைத்துள்ளது.

மேற்கு வங்க பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கும் இடம் கொடுத்துள்ளனர். அதேசமயம் இர்பான் பதான் ஓரம் கட்டப்பட்டுள்ளார். பிரவீன்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

2 டுவென்டி 20 போட்டிளுக்கான அணி...

டோனி, ஷேவாக், கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ஆர்.அஸ்வின், இஷாந்த் சர்மா, ஆசிஷ் நேஹ்ரா, ஸ்ரீசாந்த், அசோக் தி்ண்டா, சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, ரோஹித் சர்மா.

2 ஒரு நாள் போட்டிளுக்கான அணி...

டோனி, சச்சின், ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், பிரவீன் குமார், ஆசிஷ் நேஹ்ரா, ஸ்ரீசாந்த், பிரக்யான் ஓஜா, சுதீப் தியாகி, விராத் கோலி.

தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் உயர்ந்த பண்பாடுள்ள சமூகம். - வரலாற்றியலாளர் டாயன்பீ

சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்றைக்குமான உண்மையாகி விடுவதில்லை. இன்று எல்லாமும் முடிந்துவிட்டதே இனி என்ன எழுத்தும் இலக்கியமும் என்ற அங்காலாய்ப்புக்கள்தான் எங்கும் விரவிநிற்கின்றன.

ஒரு வகையில் இந்த அங்கலாய்ப்பு இயல்பான ஒன்றுதான். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆற்றல், அறிவு வளங்கள் அனைத்தையும் தம்மை நோக்கி உள்வாங்கிக் கொண்டதொரு அமைப்பின் வீழ்ச்சி எந்தவொரு தமிழனுக்குமே அதிர்ச்சியையும் சோர்வையும்தான் கொடுக்கும். எனவே இந்தச் சூழலில் நாம் நமது பழைய கருத்துக்களை, நிலைப்பாடுகளை சற்று மீள்பரீசிலனை செய்து கொள்வது நல்லதுதானே. இது ஒரு வகையில் நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்ளுதல்தான். சுயவிமர்சனம் என்பது பெரும்பாலும் தற்கொலைக்கு ஒப்பானது என்றே சிலர் எண்ணுவதுண்டு, அதில் உண்மை இல்லாமலுமில்லை. தற்கொலை ஒரு மனிதனின் அதுவரையான இயக்கத்தை நிறுத்தும். சுயவிமர்சனமும் அதுவரைகால தவறுகளை விளங்கிக் கொண்டு புதியதொரு பாதையை வகுக்க உதவும்.

ஈழ‌த் தமிழர்களின் யூதக் கனவு
நான் இங்கு சமீபகாலமாக நம்மிடம் நிலவிவந்த ஆனால் இன்று ஒரு நகைச்சுவைக்குரிய ஒன்றாக மாறிவிட்ட நமது யூதக் கனவு பற்றித்தான் சில அபிப்பிராயங்களைப் பதிவு செய்ய விழைகின்றேன். நாம் நம்மை யூதர்களாக எண்ணிக் கொள்ளுவதற்கு ஏதுவாக என்னனென்ன காரணங்கள் இருந்தன என்று யோசித்துப் பார்த்தேன். யூதர்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறி வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். நாங்களும் அவ்வாறு சிங்களத்தின் ஒடுக்குமுறையால் உலகின் பல பாகங்களிலும் வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம். (நம்மில் ஒரு பகுதியினர் வெளிநாட்டு மோகம் கொண்டு எத்தனை லட்சங்கள் கொடுத்தாவது லண்டனுக்கோ கனடாவுக்கோ போய்விட வேண்டுமென்ற தீரா ஆசையில் ஓடியதும் உண்டு. அதை எந்த யூதக் கணக்கில் சேர்ப்பது?) யூதப் பெயர்வின் போது அவர்கள் தம்மை உலகளாவிய ரீதியில் ஒருமுகப்படுத்துவதற்காக பயன்படுத்திய புலம்பெயர் சமூகம் (Diaspora) என்ற கருத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டோம். இதன் மூலம் நாம் யூதர்களுக்கு இணையானவர்கள் என்றதொரு கருத்து வளர்ந்தது. நாம் கல்வியில் மேலோங்கிய சமூகம். இப்படியெல்லாம்தான் எங்களது யூதக் கனவு வளர்ந்தது.

இந்த கருத்தின் பின்னால் எடுபட்டுப் போனவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால் இப்போது நாம் இருக்கும் நிலையிலிருந்து சற்று திரும்பிப் பார்க்கும்போது அது நாம் தகுதியற்று வளர்த்துக் கொண்டதொரு கற்பனையென்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் நம்மை யூதர்களாக கற்பனை செய்து கொள்வதற்கான எந்தவொரு தகுதியும் நம்மிடமில்லை. அடிப்படையிலேயே ஈழத் தமிழர் சமூகம் தனக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளை கௌரவமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டதொரு சமூகம். சக மணிதர்களையே பறையன், பள்ளன், வண்ணான் எனப் பிரித்தாளுவதில் பெருமை கொண்டவர்கள் நாம். பின்னர் சாதி ரீதியாக பிரிந்து வளர்ந்த சமூகத்தினுள் விடுதலை சார்ந்து இயக்கங்கள் தோன்றிய போதும் விடுதலை அரசியலிலும் ஒரு வகைத்தான தீண்டாமைதான் நிலவியது. ஆளையாள் ஓரங்கட்டுதல், பிரித்தாளுதல் அல்லது அழித்தொழித்தல் என்பதாகவே நமது விடுதலை அரசியல் சுருங்கியது. இன்று கற்பனைகள் கலைந்து நடு வீதியில் திசையற்றுக் கிடப்பது நமது அரசியல் மட்டுமல்ல நன்பர்களே நமது யூதக் கனவும்தான்.

2

கல்வியில் நம்மை மிஞ்ச யாருண்டு என்ற யாழ்ப்பாண மத்தியதரவர்க்க செருக்கை உள்வாங்கி வளர்ந்த ஈழத் தமிழர்கள் கடந்த 60 வருடங்களாக சிங்கள இராஜதந்திரத்தின் முன்னால் படுதோல்வியடைந்திருப்பதே வரலாறு. மோட்டு சிங்களவர்கள் அவர்களுக்கு என்ன மசிரோ தெரியும் என்ற அரைவேக்காட்டுத்தனமான மத்தியதரவர்க்க மாயையில் நாம் காலத்தை கழித்திருக்கின்றோமே தவிர நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. சிங்கள இராஜதந்திரம் பற்றி நம்மில் சிலரே வியந்து எழுதியிருக்கின்றனர். இது பற்றி அடிக்கடி தனது எழுத்துக்களில் பதிவு செய்தவர் நமக்கு நன்கு பரிச்சயமான ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு. அவர் அவ்வப்போது பேராசிரியர் இந்திரபாலா குறித்துரைக்கும் ஒரு கருத்தை நினைவுபடுத்துவதுண்டு. இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பேணிப்பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு இராஜதந்திரம் தேவை. இராஜதந்திரம் இல்லாமல் அது ஓரு போதுமே சாத்தியப்படாது.

இன்று சிங்களம் தன்னை சுற்றி எழும் எத்தனையோ சவால்களை சமாளித்துக் கொண்டவாறு தன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் லலித் அத்துலத் முதலி சொல்லுவது போன்று எங்களிடம் எம் மூதாதையர்கள் வழி வந்த இராஜதந்திர ஆற்றல் என்னும் பொக்கிசம் இருக்கிறது. இதனைத்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கோல்டண்திரட் (Golden thread) என்று வர்ணித்தார். ஆனால் நாங்களோ உலகப் போக்குகளை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப சிந்திக்க, செயற்பட திராணியற்றவர்களாகவே இருந்திருக்கிறோம். உசுப்பிவிடும் அரசியல், அதற்கான சுலோகங்கள், பின்னர் அதனைச் சுற்றி விமர்சனமற்ற கற்பனைகள் இதுதான் எங்கள் அரசியல். இது குறித்து யாரையும் நோக்கி விரல் சுட்டுவதல்ல எனது நோக்கம். நம்மை நாம் கற்பனைகளற்று சரியாக அளவிட்டுக் கொள்ளும் பண்பு நமக்குத் தேவை என்பதையே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது. அவ்வாறு அடுத்தவரை நோக்கி விரல் சுட்டுவதன் மூலம் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலும் எழுத்துக்களை இந்தக் கட்டுரை விமர்சிக்க முயல்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நானும், என்னைப் போன்றவர்களுக்கும் இவ்வாறான கற்பனைகளை விமர்சனமற்று பரவ விட்டதில் பங்குண்டு என்னும் எழுத்து நேர்மையுடன்தான் எழுதுகின்றேன். பன்முக நோக்கில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்பது நம் மத்தியில் ஒரு பண்பாடாகவே வளர வேண்டியிருக்கிறது. வசை மற்றும் துதி பாடுவதில் திருப்தி, விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட வாழ்வை விவாதப் பொருளாக்கும் வக்கிரம் இவ்வாறான பண்புகளிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது.

நான் சமீபத்தில் சிறிலங்காவிற்கான முன்னைநாள் தூதராக இருந்த ஜெப்ரி லுன்ஸ்டேட் எழுதியிருந்த அறிக்கையொன்றைப் பார்த்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் இந்தத் தலைப்புடன் மிகவும் பொருந்தக் கூடிய ஒன்று. “அமெரிக்கா இலங்கை விடயத்தில் பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம், அமெரிக்க உள்ளக அரசியலில் (Domestic politics) செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு இலங்கை பிரஜைகள் அமெரிக்காவில் வலுவாக நிலைபெறவில்லை’. இதன் உள் அர்த்தம் அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள் அமெரிக்க அரசியல் நிலைப்பாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சக்திகளாக இல்லை என்பதாகும். இந்த வாதத்தை அப்படியே யூதர்களுக்கு திருப்பிப் போட்டுப் பார்த்தால் எங்கள் யூதக் கனவின் பின்னாலுள்ள மடைமை வெள்ளிடைமலையாகும்.

யூதர்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களே முதன்மையானவர்களாக இருக்கிறார்கள் அறிவிலும் செல்வத்திலும். இதன் காரணமாக அவர்கள் அந்தந்த நாட்டின் உள்ளக அரசியலை நிர்ணயிக்கக் கூடிய மாற்றும் (Change the polticle Agenda) சக்திகளாக தொழிற்படுகின்றனர். அவர்களது ஆற்றலும் அறிவும் தேவைப்படும் அந்த நாடுகள் அவர்களை தமது நேச சக்திகளாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கரிசனையும் பெருமையும் கொள்கின்றன. இன்று இஸ்ரவேல் அமெரிக்காவின் வரலாற்றுக் கூட்டாளியாக இருக்கும் யதார்த்தத்தை இந்த பின்புலத்தில் நின்றுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமே அல்லாது வெற்று கோஷ‌ங்களை எழுப்புவதிலிருந்தோ வெறும் கற்பனைகளை தலைமுறைகள் சார்ந்து பரப்புவதாலோ அல்ல.

3

இந்தக் கட்டுரை எழுதத் தொடங்கியதும் சிறிது யூத வரலாறு அவர்களின் ஆளுமை குறித்து அறியும் நோக்கில் இணையத்தளங்களில் தேடினேன். யூதக் கனவில் திளைத்த நாம் யூத ஆளுமை, அறிவு பற்றியெல்லாம் எவ்வளவு தூரம் அறிய முற்பட்டிருந்தோம் என்பது வேறு விடயம். ஒரு வேளை அறிந்திருந்தால் தகுதி மீறிய கனவும் வளர்ந்திருக்காதோ என்னவோ! இன்று உலகின் மிகப் பெரும் ஆளுமைகளாக சிலாகிக்கப்படும் பலர் குறிப்பாக மார்க்ஸ் உட்பட பலரும் யூதர்கள் என்பது பலர் அறியாத ஒன்று. லூயிஸ் ரிகன்ஸ்டின் (Lewis Regenstein) என்பவர் எழுதிய யூதர்கள் ஏன் இவ்வளவு செழிப்பாக இருக்கின்றனர் (Why Are Jews So Smart?) கட்டுரையொன்றைப் பார்த்தேன். உலக சனத்தொகையில் மிகச் சிறிய வீதத்தைத் கொண்ட யூதர்கள் 21ஆம் நூற்றாண்டின் அறிவாற்றலில் எத்தகைய இடத்தை பெற்றிருக்கின்றனர் என்பதை சிறப்பாக குறிப்பிடுகின்றார். மிகச் சிறிய தொகையினரான யூதர்கள் நோபல் பரிசின் 32 வீதத்தை கைப்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை நமது கனவுடன் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். (Jews constitute only about two-tenths of one percent of the world’s population; Jews won 29 percent of the Nobel Prizes in literature, medicine, physics and chemistry in the second half of the 20th century. So far this century, the figure is 32 percent) - http://www.jewishmag.com/115mag/smartjews/smartjews.htm - (மேலதிகமாக அறிய இந்த இணையத்தைப் பார்க்கலாம்)

ஏன் இந்த விடய‌த்தைக் குறிப்பிடுகிறேன் என்றால் கனவு காண்பது பிழையல்ல. ஆனால் அந்தக் கனவை காண்பதற்கு நமக்கு தகுதியிருக்கின்றதா என்பதுதான் இங்கு பிரச்சனை. போலிப் பெருமைகளிலும், அர்த்தமற்ற சடங்குகளிலும், ஒழுக்கக் கோவைகளிலும் (இதிலும் போலித்தனம்தான் அதிகம்) காலத்தை கழிக்கும் நாம் எவ்வாறு யூதர்களுக்கு இணையாவது? அதிலும் வல்வெட்டித்துறை, உரும்பிராய் அளவெட்டி வந்தாறுமுலை கதைகள் அர்த்தமற்ற குலப் பெருமைகள். இப்படி அசிங்கங்களை பெருமையாக சுவைத்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன தகுதியிருக்கிறது இப்படியான கனவிற்கு?

1983களில் இருந்தே ஈழத் தமிழர்கள் பல்வேறு ஜரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயரத் தொடங்கிவிட்டனர். இன்று கிட்டத்தட்ட 25 வருடங்களைக் கடந்துவிட்டது நமது புலம்பெயர் வாழ்வு. இந்தச் சூழலில் அந்தந்த நாட்டின் சிந்தனைச் சூழலில், நமது சிந்தனைச் சூழல் விரிவு கொண்டிருக்கிறதா என்றால் நான் அறிந்தவரை அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கனவு மட்டும் அளவுக்கதிகமாகவே நம்மிடம் நிரம்பி வழிகிறது. இன்றும் அந்தந்த நாட்டின் அரசியல் சக்திகளுடனோ அல்லது சிந்தனையாளர்கள் மத்தியிலோ தாக்கம் செலுத்தக் கூடியவர்கள் உருவாகியிருக்கிறார்களா என்றால் இல்லையென்ற பதிலைத் தவிர எதுவுமே இல்லை. இப்போதுதான் ஏதோ ஞானோதோயம் பிறந்தது போல் சில அசைவுகள் தெரிகின்றன.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இப்படியான இடங்களில் இருக்கும் உயர் இலக்கியவாதிகள், சிந்தனையாளர், அறிஞர்களோடு ஒரு உரையாடலையாவது எங்களால் செய்ய முடிந்திருக்கிறதா? பின்னர் எதற்கு இந்த வீண் கனவு நமக்கு?

முதலில் தகுதியை வளர்த்துக் கொள்வது பற்றி சிந்திப்போம். பின்னர் கனவுகளைக் காண்போம்.

நன்றி - யதீந்திரா

கிழக்கில் 9,95,612 பேர் வாக்களிக்கத் தகுதி


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்தில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 612 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

திருகோணமலை மாவட்டம் திருகோணமலைத் தொகுதி - 86 ஆயிரத்து 685 பேர் ,சேருவில தொகுதி -69 ஆயிரத்து 47 பேர் ,மூதூர் தொகுதி - 85 ஆயிரத்து 401 என 2 லட்சத்து 41 ஆயிரத்து 133 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அம்பாறைத் தொகுதியில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 479 பேர்,பொத்துவில் தொகுதி -ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 779 பேர், கல்முனைத் தொகுதி - 66 ஆயிரத்து 135 பேர்,சம்மாந்துறைத் தொகுதி - 71 ஆயிரத்து 442 பேர் என 4 லட்சத்து 20 ஆயிரத்து 835 பேர் வாக்களிகத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தொகுதி - ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 135 பேர் .பட்டிருப்புத் தொகுதி 80 ஆயிரத்து 972 பேர் ,கல்குடாத் தொகுதி 97 ஆயிரத்து 537 பேர் என மொத்தம் 3 லட்சதது 33 ஆயிரத்து 644 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக விசா வழங்கும் பிரிவு இடமாற்றம்






கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவான ரிரி சேவிஸ் லங்கா பிறைவேட் லிமிடட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி முதல் இவ்வலுவலகம் இல.51ஏ , தர்மபால மாவத்தை கொழும்பு 07 இல் (முன்னைய எச்.எஸ்.பி.சி அலுவலகம்) செயற்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. எனினும் தொலைபேசி மற்றும் பெக்ஸ்(FAX)இலக்கம் போன்றவற்றில் மாற்றம் இல்லை எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை www.ttsusvisas.lk இணையத்தள முகவரியூடாகவும் 2437840/2437841 என்ற தொலைபேசி இலக்கம், பெக்ஸ் இலக்கம் 2437844 மற்றும் info@ttsusvisas.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியுமென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது
புலிகளின் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றன 600 வங்கிக் கணக்குகளையும் அரசுடைமையாக்க நடவடிக்கை- அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு உரித்துடையவை. அவற்றை அரச உடைமையாக்கிக் கொள்வதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருகின்றது என்று தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அந்த வகையில் புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தொடர்பாளரும், புதிய தலைவருமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள கே. பி.என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கிக் கொண்டுவரப்படுகின்றன.

அத்துடன் அவர் சர்வதேச ரீதியில் சுமார் 600 வங்கிக் கணக்குகளைப் பேணி வந்துள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளர் கே.பிக்குச் சொந்தமாக ஐந்து கப்பல்கள் உள்ளன என்று பாதுகாப்பு தரப்பினரால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்த கப்பல்களில் மூன்று சர்வதேச கடற்பரப்பிலிருந்து இலங்கையை நோக்கி கொண்டுவரப்படுகின்றன. சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த கப்பல்கள் எடுத்து வரப்படும் அதேவேளை கே.பி.க்குச் சொந்தமான ஏனைய இரண்டு கப்பல்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை கே.பி.யினால் சர்வதேச ரீதியில் பேணப்பட்டு வந்த சுமார் 600 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அவற்றில் உள்ள பணத்தை அரச உடமையாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் சொத்துக்கள் உடமைகளையும் அரச உடைமையாக்கிக் கொள்வதற்கான சர்வதேச ரீதியிலான சட்ட ஆலோசனைகள் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய நடைமுறைகளின் பிரகாரம் அவை வெகு விரைவில் அரச உடைமைகளாக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...