அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த இரு மீன்பிடிப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் தென்பகுதி மிரிஸ்ஸ ஆழ்கடலில் வைத்து நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர். இதன்போது படகுகளிலிருந்து 60பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் அத்துலத் சேனாரத் தெரிவித்துள்ளார். இவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தைச் செலுத்தி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை இன்றுஅதிகாலை மேலும் இரு படகுகளில் சுமார் 40பேர்வரை தென்பகுதி கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும் இந்தவகையில் இருநாட்களில் 100பேர் வரையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
24 நவம்பர், 2009
இலங்கையில் இறுதியானதும், நிரந்தரமானதுமான சமாதானத்தை எதிர்பார்ப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபாண்ட் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு முன்மாதிரியான அரசியல் முன்னெடுப்புக்கள் அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதித்த இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பானது வரவேற்கத்தக்க விடயமெனத் தெரிவித்த அவர், இலங்கையில் நிரந்தரத் தீர்வே தமக்குத் தேவையென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன்படி கொழும்பு மாவட்டத்திற்காக தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20இலிருந்து 19ஆக குறைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திற்கான எண்ணிக்கை 08இலிருந்து 09ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்ட உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கம்பஹாவிலிருந்து 18உறுப்பினர்களும், களுத்துறையிலிருந்து 10பேரும், கண்டியிலிருந்து 12பேரும், மாத்தளையிலிருந்து 05பேரும், நுவரெலியாவிலிருந்து 07பேரும், காலியிலிருந்து 10பேரும், மாத்தறையிலிருந்து 08பேரும், அம்பாந்தோட்டையிலிருந்து 07பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து 09பேரும், வன்னியிலிருந்து 06பேரும், மட்டக்களப்பிலிருந்து 05பேரும், திகாமடுல்லயிலிருந்து 07பேரும், திருமலையிலிருந்து 04பேரும், குருநாகலிலிருந்து 15பேரும், புத்தளத்திலிருந்து 08பேரும், பொலநறுவையிலிருந்து 05பேரும், பதுளையிலிருந்து 08பேரும், மொனறாகலையிலிருந்து 05பேரும், இரத்தினபுரியிலிருந்து 10பேரும், கேகாலையிலிருந்து 09பேரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சரத் பொன்சேகா மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர் இல்லை. எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்த பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை விட கட்சி சாராத ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். அதற்காகப் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
நாட்டு மக்கள் நேசிக்கக் கூடிய, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளராக சரத் பொன்சேகா விளங்குகின்றார்.
அதனால்தான் நாம் அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். நாம் அவருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.இறுதியாக நேற்றிரவு கூட பேசினோம்.
அவர் எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்" எனத் தெரிவித்தார்.
மாகாண கல்வி அமைச்சினால் முறைகேடான முறையில் சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஐ.தே.க., ஸ்ரீல.மு.கா, ஈ.பி.ஆர்.எல்.(பத்மநாபா அணி),ஜே.வி.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே வெளி நடப்புச் செய்தனர்.
கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.
சபை முதல்வர் கே.எம்.எம். பாயிஸ் தலைமையில் இன்று சபை கூடிய போது கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா தமது அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத்திட்டத்தை குழுநிலை விவாதத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அமைச்சர் உரையாற்றிய பின்பு எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம்,
"நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சினால் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சிற்றூழியர்கள், காவலாளிகள் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள நியமனங்கள் அரச நியமன விதிமுறைகளுக்கு புறம்பானது" என ஆட்சேபனை தெரிவித்தார்.
நேற்று இது தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது அப்படி நியமனம் வழங்கப்படவில்லை என அமைச்சர் கூறி விட்டு இப்படி நியமனம் வழங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
இந்நியமனம் விதிமுறைகளுக்கு மாறாக வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து தாம் வெளிநடப்புச் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் இரா.துரைரத்தினம் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்
பொதுநலவாய அமைப்பின் 21 ஆவது மாநாடு டிரினிடாட்டொபாகோவில் இன்று ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இவர்கள் இருவரும் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர் போகொல்லாகம இன்று காலை மேற்கிந்தியதீவுக்கு புறப்பட்டுச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.
பொதுநலவாய அமைப்பின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான இறுதி மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வாரென்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது
சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ள அவர்,
"எந்தவொரு ஜனாதிபதியும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்க்கும் வகையில் தீர்வினை முன் வைக்கப் போவதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்,
"இன்று தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் எமது பிரச்சினையில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெற்றதாக இல்லை.
தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை சரியான நிலைப்பாட்டை எடுத்து பலமான சக்தியாக மாறினால் தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நிலைப்பாடு பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்படுகின்றது.
இந்நிலையில் தான் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ளோம். எமக்கிடையில் சில உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ்ச் சமூகம் பலவீனப்பட்டுள்ளதை சகலரும் அறிவர். இதனைக் கருத்தில் கொண்டு எமது சமூகம் பயனடைய தமிழ்ப் பேசும் கட்சிகள் இணைந்து உரிய தீர்வினை முன் வைக்க வேண்டும்" என்றார்.
சென்னை : "ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன' என முதல்வர் கருணாநிதி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அவரது கேள்வி - பதில் அறிக்கை:"மவுன வலி' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கடிதத்தை ஒரு சிலர் ஏற்காமல், விமர்சனம் செய்கின்றனரே?
ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன. அதே நேரத்தில், இளந்தலைவர் ராஜிவும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரன், முகுந்தன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, யோதீஸ்வரன் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது, அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையா?புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைந்த போது, ஓர் இரங்கல் கவிதை எழுதினேன். மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல், "புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பிருக்கிறது' என்றவர் தான் அவர்.அப்படி அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல துணிவு இல்லாமல் என் மீது பாய்கின்றனரே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதை விட காரணங்கள் இருக்க முடியுமா?
ஜெயலலிதா உட்பட சிலர், நீங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதிவிட்டதைப் போல அறிக்கை விட்டுள்ளனரே?
பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல; கடிதம் அல்ல; அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், "இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்தவர் தான், நான் நல்லதை எண்ணி, நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். "பிரபாகரனை என்றைக்கும் ஆதரிப்பேன்' என சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்குத் துணை போய், நம்மைத் தாக்கி அறிக்கை விடுகின்றனர்.
துரோகிகளுக்கு நீங்கள் பாராட்டுப் பத்திரம் வழங்குவதாக ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?
உண்மை தான். துரோகிகள் யார் எனத் தெரியாமல், அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்.
இலங்கைத் தமிழர் முகாம்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதற்கும், முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டு, 20ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. 37 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கான திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது.இதுதவிர, நலத் திட்டங்களான - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் "டிவி' வழங்குதல், திருமண நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்றவை, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நிறைவேற்றவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாயில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்து, புதிய கான்கிரீட் வீடுகள், ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டுவதற்கு, தனியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
விலைவாசி உயர்வைத் தடுக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து?
தமிழக அரசு 2007ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் சிறப்பு வினியோகத் திட்டத்தின் மூலமாக, பொதுமக்களுக்கு சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற பொருட்கள், சலுகை விலையில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வினியோகிக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தைக் காணும் போது, இத்திட்டத்தால் பொதுமக்கள் எந்த அளவு பயன் பெறுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம்.ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான விலைவாசியைக் குறைக்க, தமிழக அரசு எடுத்த முக்கிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.