கண்டி மாவட்ட தமிழ் மக்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதிகளில் தங்களுக்கென ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
கடந்த காலங்களில் அப்பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதில் பின்னடைவை ஏற்படுத்திய காரணிகள் மற்றும் பின்னடைவுகளை வெற்றி கொண்டு எவ்வாறு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்பது தொடர்பாக ஆராய்வது மிகவும் பொருத்தமானதாகும்.
இவ்வினாக்களுக்கான விடைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனுடனான நேர்காணலின் போது வினவினோம். இதன்போது, எமது இணையத்தளத்துக்கு அவர் தெரிவித்தவை :
கேள்வி: இம்முறைப் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடாது ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தமைக்கான காரணம் யாது?
"ஜனநாயக மக்கள் முன்னணி, வரலாற்று ரீதியாக ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டு அவ்வடிப்படையிலேயே போட்டியிடுகின்றது. மேலும் இன்று நிலவும் தேர்தல் திட்டங்களை விரிவாக ஆராய்ந்து பார்த்தால் பெரும்பான்மை கட்சி ஒன்றுடன் இணைந்து போட்டியிட வேண்டிய கட்டாயம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
தனித்துப் போட்டியிடல் என்பது சிறந்ததொரு கருத்து. எனினும் விரிவாக நோக்கினால், உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவு. மறுபுறத்தில் பெரும்பான்மை கட்சியுடன் இணைந்திருந்தாலும் எவ்விதத்திலும் தமிழர்களின் தனித்தவத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். இனவாதத்தை வெளிப்படுத்தும் எந்த செயற்பாடுகளுக்கும் எதிர்த்தே குரல் கொடுப்போம்."
கேள்வி: கடந்தமுறை நீங்கள் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தும் கூட, இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?
"கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் நான் எதுவித பிரசாரமும் இன்றி ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றிருப்பேன். ஆனால் இம்முறை கடமை அழைத்ததன் காரணத்தினால் கண்டி மாவட்டத்துக்கு வந்துள்ளேன். கண்டி எனது தந்தை வழி பூர்வீக மாவட்டம். மேலும் வடக்கு கிழக்குக்கு வெளியே நுவரெலியா, பதுளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் உறுப்புரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கண்டியில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின் எமது உறுப்புரிமையை உறுதி செய்ய முடியாதுள்ளது. இங்கு தெரிவு செய்யப்படும் 12 உறுப்பினர்களில் 9 பேர் சிங்களவர், மூவர் முஸ்லிம்கள். எந்தத் தமிழரும் இல்லை. இழக்கப்பட்ட, காணாமற் போயுள்ள தமிழ் உறுப்புரிமையை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே கண்டி வந்துள்ளேன்."
கேள்வி: நீண்ட காலமாக கண்டி மாவட்டத் தமிழ் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தமக்குத் தெரிவு செய்ய முடியாமைக்கான காரணம் யாது?
"மூன்று காரணிகள் உள்ளன. ஒன்று, தமிழ் மக்களில் குறிப்பிட்ட சில வீதத்தினர் தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாமை. இரண்டு, நாவலப்பிட்டி, புசல்லாவை, பன்வில போன்ற பிரதேச மக்கள் தேர்தல் தினத்தன்று பயமுறுத்தி தாக்கப்படுகின்றமை;. தமிழ் வேட்பாளர்கள் தோட்டப் பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்யவிடாது சில பேரினவாத சக்திகளால் தடுக்கப்படுகின்றமை.
மூன்றாவது, கடந்த காலங்களில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளின் போது தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைக்கு அப்பால் பெரும்பான்மை உறுப்பினருக்காகவே பிரசாரம் செய்தமை.
இவற்றினாலேயே எம்மால் வெற்றி பெற முடியாமல் போனது."
கேள்வி : தற்சமயம் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது?
"மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான உடனேயே மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தீர்மானித்து விட்டனர். தோட்ட, கிராம, நகர்ப்புறங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் எனது மக்கள் என்னைப் பலமாக ஆதரிக்கின்றனர். இந்நிலையானது, இம்முறை எப்படியாவது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்தே தீருவோம் என்ற மக்களின் எழுச்சியை வெளிப்படுத்துகின்றது."
கேள்வி : குறிப்பிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு காட்டியிருந்தனரே... அது தொடர்பாக...?
"எனக்கெதிராக ஜாதிக ஹெல உறுமய என்ற இனவாதக்கட்சி கண்டி மத்திய சந்தையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அக்கட்சியின் தலைவரிடம் நான் தொலைபேசியூடாக, "தயவு செய்து இவ்வார்ப்பாட்டங்களைக் கண்டி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளுங்கள். அது எனக்கு இலவச விளம்பரத்தைப் பெற்றுத்தரும்" எனக் கேட்டுக் கொண்டேன். அவர்களது போராட்டங்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒழியும் கோழைத் தமிழன் அல்லன் இந்த மனோ கணேசன் என்பதை அவர்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்."
கேள்வி : அவசர காலச் சட்ட நீடிப்புக்கான வாக்கெடுப்புத் தினத்தன்று நீங்கள் நாடாளுமன்றத்துக்குள் தனித்துப் போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தீர்கள்... அதன் உண்மை நிலையை விளக்க முடியுமா?
"அமைச்சர் ஒருவரின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே சபை நடுவே பதாதை ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தினேன். அத்துடன் எனது நாடாளுமன்ற உரையின் போதும் அது தொடர்பாக குறிப்பிட்டேன்.
அதாவது சில தினங்களுக்கு முன் எனது பிரசார வாகனத்தைச் சேதப்படுத்தியதுடன் எனது ஆதரவாளர்கள் மூவரையும் தாக்கியுள்ளனர். அச்செயற்பாட்டை சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இது எனது வெற்றியை மேலும் பலப்படுத்துகின்றது. இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டு பணிந்து செல்லாது அதற்கெதிராக, ஜனநாயக ரீதியில் போராட நாம் தீர்மானித்துள்ளோம்."
கேள்வி : ஆளும் தரப்பில், மக்களைக் கவரும் விதத்தில் செயற்படும் வேட்பாளர்கள் ஒரு பக்கம், வாக்கு சிதறடிப்பதற்கான உத்திமுறைகள் மறுபக்கம் - இவற்றுக்கு மத்தியில் தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?
"இவ்வாறு சிதறடிக்கும் வகையில் செயற்படுபவர்களை மக்கள் நன்கு அறிந்தே உள்ளனர். பெரும்பான்மை மக்களின் மாயாஜால வார்த்தைகளில் மதிமயங்கி வாக்களிக்கும் காலம் மலையேறி விட்டது. இன்று தமிழ் மக்கள் தங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிகத்தெளிவாகவே உள்ளனர்.
அரசாங்கம், எதிர்க்கட்சி என்று கூறமுடியாது. நாம் விழிப்பாக இல்லாவிட்டால் இரண்டுமே எதிர்க்கட்சிகள் தான். எமது நாட்டின் தமிழ் மக்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆக முடியாது.
இந்தியா போன்று திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நாடுகளில் தான் அது சாத்தியம். இனவாத தன்மையுடைய எமது நாட்டில் அது சாத்தியமில்லை. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஜனநாயக மக்கள் முன்னணியின் நோக்கம்."
கேள்வி : ஆளும் தரப்பினர் தேர்தல் வெற்றி என்ற நிலைக்கு அப்பால் சென்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான தேர்தல் என்றே பிரசாரம் செய்கின்றனர். அது தொடர்பாக உங்களது கருத்து யாது?
"பெரும்பான்மைப் பெறல் என்பது ஒரு கனவு. இன்றைய தேர்தல் முறையின் பிரகாரம் தலைகீழாக நின்றாலும் அது நடக்காது. பெரும்பான்மையைப் பெற்று அதன் மூலமாக அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தமிழ், முஸ்லிம் மக்களை இல்லாது ஒழித்து எமது நாட்டை முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றிவிடலாம் என அரசு கனவு காண்கின்றது.
தமிழ், முஸ்லிம் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களும் அதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டுமென்றால் தமிழ், முஸ்லிம் மக்ககளின் ஆதரவு தேவை. அதுவன்றி எதுவும் செய்ய முடியாது. இந்நிலையில் தமிழ் மக்கள் மிகவும் ஆழமாகவும் மிகத்தெளிவாகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். பேரினவாதிகளுக்குத் துணை போகக்கூடிய அநியாயக்காரர்களையும் கொள்ளையர்களையும் தமிழ் மக்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்து விடக்கூடாது."
கேள்வி : ஐக்கியத் தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இம்முறை ஆட்சி அமைப்பதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றனவா?
"இந்நாட்டில் ஐ.தே.க. மற்றும் சு.க தலைமையிலான கூட்டணிகள் மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. இவ்விரு கட்சிகள் மட்டுமே ஆட்சியமைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன. இம்முறைத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் நிலை உறுதியாகியுள்ளது."
கேள்வி : ஐக்கியத் தேசியக் கட்சியினர் எதிர்காலத்தில் எவ்வாறான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மனித்துள்ளனர்? "அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ற வகையில் ஐக்கியத் தேசியக் கட்சி தெளிவாகவுள்ளது. பொருளாதார அபிவிருத்தியில் ஐ.தே.கட்சி பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஐ.தே.கட்சியின் பொருளாதார திட்டமிடல்களை மையமாகக் கொண்டே இன்றைய அரசாங்கம் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது."
கேள்வி : கண்டி மாவட்டத்தில், தேசிய ரீதியாக வாழும் தமிழ் மக்களுக்காக என்ன செய்தியை வெளியிட விரும்புகின்றீர்கள்?
"உங்களை நம்பி கண்டிக்கு வந்துள்ளேன். மனோ கணேசனின் வெற்றி ஒட்டு மொத்த கண்டி மாவட்ட தமிழ் மக்களின் வெற்றியாகும். நான் போட்டியிடும் முன்னர், கொழும்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. மாறாக ஏதோ ஒரு காரணத்தினால் உறுப்பினர் ஒருவரின் வெற்றிடமாகும் பட்சத்தில் மட்டுமே தமிழர் நியமிக்கப்பட்டனர். மக்களின் ஆணையைப் பெற்று நாங்கள் அந்நிலையை மாற்றியமைத்தோம்.
கொழும்பின் முன்னைய நிலையே தற்சமயம் கண்டியில் காணப்படுகின்றது. எனவே கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஒருமுகமாக இணைந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது இனவாதமல்ல, இன உரிமை. இவ்விதம் வாக்களித்து என்னை வெற்றியடையச் செய்வது தனிப்பட்ட மனோ கணேசனின் வெற்றியல்ல. தமிழ் மக்களின் மகத்தான வெற்றியாகும்.
மேலும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு நான்கு மாகாணங்களிலும் போட்டியிடும் கட்சி என்ற வகையில், தமிழ் மக்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் மிகத் தெளிவாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்."
மேலும் இங்கே தொடர்க...