26 ஜனவரி, 2011

சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்தரவிடவில்லை

சட்டரீதியாக பொறுப்பேற்று பராமரிக்குமாறே இராணுவத்துக்கு அறிவுறுத்தல்

வெள்ளைக் கொடி விவகார வழக்கில் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு தாம் உத்தரவிட்டதாக ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் வெளியாகி யிருந்த சரத் பொன்சேகாவின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (25) வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சாட்சியமளி க்கும் போது தெரிவித்தார்.

சரணடையவரும் புலிகளின் தலைவர்களையும் ஏனைய உறுப் பினர்களையும் சட்டத்தின் பிரகாரம் பொறுப்பேற்று, அவர்களை நன்றாகப் பராமரிக்குமாறு இராணு வத்திற்கு அறிவுறுத்தல் வழங்க ப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்தின் 11 ஆயிரத்து 968 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுள் ஐயாயிரம் பேர் புனர்வாழ்வு அளிக் கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள் ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகை யின் பிரதம ஆசிரியர் திருமதி பெட்ரிக்கா ஜான்ஸணுக்கு வழங்கிய பேட்டியில், இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை வழங்கி யமை மற்றும் அதனூடாக அரசாங் கத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர் ப்பலையை உருவாக்க முயற்சிப்பதற்காக வெள்ளைக் கொடி கதையைக் கூறியமை குறித்து சட்ட மா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நேற்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. இங்கு மேலும் சாட்சிய மளித்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, புலிகளின் தலைவர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த துடன் அவர்கள் இன்னமும் பாது காப்பாக உள்ளதாகவும் கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான சரத் பொன்சேகாவின் பேட்டியினால் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் சுமார் 10 இலட்சம் புலம் பெயர் தமிழர்க ளின் எதிர்ப்பு இலங்கை அரசுக்கும், தமக்கும் ஏற்பட்டதாகவும் பாது காப்புச் செயலாளர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பால்மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு விலையேற்றத்தை தவிர்க்க நடவடிக்கை


பால் மா விலையேற்றத்தைத் தவிர்ப் பதற்காக பால்மாவுக்கான இறக்குமதி வரியை 22.00 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிலோவுக்கு 50 ரூபாவாக இருக்கின்ற இறக்குமதி வரி ரூபா 28.00 வரை குறைக்கப்பட விருக்கின்றது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று 26 ஆம் திகதி அல்லது நாளை 27 ஆம் திகதி திறைசேரி வெளியிடும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.

ரூமி மர்ஷணுக் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை பால் மா விலையை அதிகரிக்க இடமளிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

உலக சந்தையில் பால் விலை அதிகரித்துள்ளதால் பால் மா இறக்குமதி நிறுவனங்கள் முகம் கொடுத்துள்ள நிலைமையை முன்வைத்து பால் மா விலையின் இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தி லிருந்து இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்ப ட்டுள்ளது.

மூன்று கட்டங்களைக் கொண்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அனல் மின் நிலையத் திட்டத்தின் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் ஊடகவியலாளர்கள் குழுவொன்றை நேற்று நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே சேவியர் மேற்கண்டவாறு கூறினார்.

நுரைசோலை அனல்மின் நிலையத்தின் முதற் கட்டத்தின் மூலம் முன்னூறு மெகாவோற் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர். இத்திட்டத்தின் மூன்று கட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தொளாயிரம் மெகாவோற் மின்சாரத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

சீனாவின் கடனுதவியுடன் இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தியை ஆரம்பித்தால் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதனால் மின் உற்பத்திக்கு ஏற்படும் பெருந்தொகையான செலவினத்தை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அனல்மின் நிலையத்தால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட சேவியர் மின் உற்பத்தியின் போது வெளியேறும் புகை சுத்திகரிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வெளியேற்றப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு இருபது ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் விவசாயத்திற்கு மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அநுராதபுரம் சிறைக்கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது கைதி, அதிகாரி மோதல் குறித்து விசாரணை நடத்த மூவர் குழு நியமனம்

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய உண்ணாவிரத போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் நேற்று அநுராதபுரத்திற்கு சென்று கைதிகளுடனும் அங்குள்ள அதிகாரிகளுடனும் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்தே இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்பொழுது அங்கு சுமுகநிலை நிலவுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அநுராதபுர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ரவீந்திரன் தலைமையில் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றும் அமைச்சரினால் நியமிக் கப்பட்டுள்ளதாக சதீஷ்குமுண்ர் மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் நடத்திய உண்ணாவிரதம் மற்றும் மோதல் தொடர்பில் ஆராயும் பொருட்டு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார், சிறைச் சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் அநுராத புரத்திற்கு நேற்று நேரில் சென்று நிலை மைகளை ஆராய்ந்தனர்.

கைதிகளுடனும், அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய உயர் மட்டக் குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களையும் சந்தித்து பேசியுள்ளனர்.

உணவு மற்றும் சுகாதார வசதிகள் உட்பட தங்களுக்கு தேவையான வற்றை செய்து தருமாறு கைதிகள் அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அமைச்சின் ஆலோசகர் தெரிவித்தார்.

மோதல் சம்பவம் தொடர்பான விசா ரணைகளை உரிய முறையில் நடத்தி ஒருவார காலத்திற்குள் தமக்கு அறக்கையாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விசாரணைக்காக நியமித்துள்ள குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் மாலை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் எட்டுப் பேர் அடங்குகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகவும் கொலை தொடர்பாகவும் விரிவான விசாரணை களை நடத்தவென பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரியவின் ஆலோ சனையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலேயே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முல்லை மாவட்டத்தில் துரிதம் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர் அரச அதிபர்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்து ள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இந்த மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மீளக்குடியமரத் திரும்பியுள்ள மக்களின் குடியேற்றத் துக்கான வீடுகள் அரச, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்க ளின் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன.

இதனைவிட, முல்லைத்தீவு மாவட்ட த்தில் மீளக்குடியேறி வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டு மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வீதிகள், பாலங்கள் புனரமைப்பு, உரக் களஞ்சியங்கள் அமை ப்பு மற்றும் பாடசாலைகள் புனரமைப்பு போன்ற வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவ தாகவும் முல்லைத்தீவு, மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் மேலும் தெரிவித்தார்.

இதேவதிளை, இன்னும் மீள்குடியேற்றத் துக்கு உட்படாது எஞ்சியுள்ளோரையும் மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...