4 நவம்பர், 2010

போர்க் குற்றங்களுடன் தொடர்பு: இலங்கை அகதி கனடாவில் கைது

போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கைத் தமிழ் அகதியொருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து எம். வி. சன் சி கப்பல் மூலம் கனடாவின் வன்கூவர் நகரிற்கு சென்ற 492 இலங்கை அகதிகளில் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

தடுப்புமுகாமில் தற்போது வாழ்ந்துவரும் இவர் மீதான போர் குற்றங்கள் நீருபிக்கப்படுமாயின் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார்.

கனேடிய குடியியல் சட்டங்களுக்கமைய நபரொருவர் தீவிரவாத நடவடிக்கைகள் அல்லது போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவராக இனங்காணப்படின் அவருக்கு கனடாவில் அனுமதியளிக்கப்படுவதில்லை.

இது தொடர்பாகக் கருத்துக்கூற கனேடிய எல்லை பாதுகாப்புப் பிரிவு மறுத்துவிட்டது.

எனினும் இது தொடர்பாக கருத்துதெரிவித்த கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் கனடாவின் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்தி அதிகமான குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

எம்.வி. சன் சி கப்பல் மூலம் தாய்லாந்திலிருந்து கனடாவிற்கு வருவதற்காக ஒவ்வொரு தமிழரும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டொலர்கள் வரை செலுத்தியிருக்கின்றனர்.

இத்தகைய ஆட்கடத்தல் சம்பவங்களை தடைசெய்யும் பொருட்டு கனேடிய அரசு கூடிய புதிய சட்டமொன்றினை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இதன் பிரகாரம் கடத்தல்காரல்களுக்கு நீண்டகால சிறை , நாடுகடத்தப்படல் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவுள்ளன.

மேலும் இச்சட்டத்திற்கு அமைய நாட்டுக்குள் கடத்தப்படுபவர்களின் உண்மையான அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படும்வரை சுமார் 1 வருடகாலம் வரை தடுத்துவைக்கப்படுவர்.

கனடாவில் புகலிடம் தொடர்பான 80 அயிரம் வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதுடன் ஒவ்வொரு அகதிக்கும் வருடாந்தம் 30 ஆயிரம் டொலர்கள் செலவிடப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தீபாவளி : கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?






















தீபாவளி திருநாள். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான்.

ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை செய்தான்.நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்' என்று பெயர் பெற்றான். கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும் பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான் தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை அழிக்க கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான். அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா கவனித்தாள். தன் கணவரிடம், ""என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய் குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள் நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத் தந்தாள்.

சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நாளை அமாவாசையும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

குளிக்கும் முறை: நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும். குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி பதவியேற்பு : அக்குறணையில் விசேட நிகழ்வுகள்



அக்குறணையில் எதிர்வரும் 14ஆந் திகதி முதல் 22ஆந் திகதி வரை ஜனாதிபதி பதவி ஏற்பு தொடர்பாக விசேட வைபவங்கள் பல இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டு அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் இதனை முன்னிட்டு 15ஆம் திகதி ஆயிரம் மரக்கன்றுகளை 11 நிமிடத்தில் நாட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, பிரதேசத்தில் சிரமாதனப் பணிகள், பொது வேலைத் திட்டங்கள், மற்றும் பொது உடைமைகள் பலவற்றை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். நஸீர் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

சுற்றாடல்தறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்ஸான் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை உடலுக்குள் மறைத்து கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என சற்று முன்னர் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நாணயத்தாள்களின் பெறுமதி சுமார் 50 லட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபர் 45 வயதான இந்தியப் பிரஜை ஆவார்.

இவர் உடலின் வயிற்றுப்பகுதி மற்றும் கால்களில் நாணயத் தாள்களைக் கட்டிக்கொண்டு கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சம்பந்தனுடன் தமிழ்க் கட்சி அரங்கம் சந்திப்பு: எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தியதாக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இது குறித்துத் தொடர்பு கொண்டு கேட்ட போதே, சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"நானும், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈழ மக்கள் விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் தலைவர் சிறிதரன் ஆகியோரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்று கொழும்பில் மாலை 5.00 மணியளவில் சந்தித்து கலந்துரையாடினோம்.

இதன் போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்று கொடுக்க ஒருமித்தவாறு பதில் அளித்தாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். ஆனால், சம்பந்தன் வெளிநாட்டில் இருந்தமையால் எமக்குப் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

தற்பொழுது அவர் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை மீண்டும் வழங்கியுள்ளோம். இது தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களுடன் கலந்துரையாடி தமது தீர்மானத்தைத் தெரிவிப்பதாக சம்பந்தன் கூறியிருக்கின்றார்.

மேலும் நேற்றைய அரங்கத்தின் கூட்டத் தொடரில், வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குயேற்றம், காணிப் பிரச்சினை, போர் கைதிகளின் விடுதலை என பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இந்நிலையில் மக்களின் பிரச்சினை தொடர்பில் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டு 19, 20 ஆம் திகதிகளில் ஜனாதிபதியைச் சந்தித்து, மகஜர் ஒன்றைக் கையளித்து அவருடன் கலந்துரையாட உள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்து தருவார்.

அத்துடன், நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை இணைப்பது பற்றியும் நாம் ஆராய்ந்துள்ளாம்" என்று தெரிவித்தார்.

நேற்றைய அரங்கக் கூட்டத்தொடரில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி, ஆனந்தசங்கரி தலையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட 10 தமிழ் அரசியல்கட்சிகள் கலந்து கொண்டன
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேர் கைது

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மாத்தகிராமம் ஆகிய கிராமங்களில் பதுக்கிவைத்து வேட்டைக்கு பயன் படுத்தி வந்த சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தயாரித்த இடியன் என அழைக்கப்படும் வேட்டைத் துப்பாக்கிகள் 21 ஐ மன்னார் பொலிஸார் பரிமுதல் செய்ததோடு அதனை தன்வசம் வைத்திருந்த 20 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வன்னிக்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னா நானயக்காரவின் வேண்டுகோளுக்கமைவாக மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி சி.கொடிதுவக்கு வின் ஆலோசனைக்கமைவாக மன்னார் பொலிஸார் மேற்படி கிராமங்களில் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் மடுப்பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதனைப் பார்வையிட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். நிலைமை குறித்து இராணுவத்தளபதி - அங்கஜன் கலந்துரையாடல்




யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலைமை குறித்தும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை கொழும்பில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வலிவடக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் என்னைச் சந்தித்து தாங்கள் எப்போது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்குகி கொண்டு வந்து துரிதப்படுத்தித் தருமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நான் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத்ஜெயசூரியாவை சந்தித்து கலந்துரையாடினேன்.

இதுகுறித்து அவர் என்னிடம் தெரிவிக்கையில்,

"வலிவடக்கு பிரதேச மக்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியமர ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பகுதிகள் மீண்டும் கண்ணிவெடி அகற்றிய பரிசோதகர்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்படுகின்றன.

இது வெகுவிரைவில் முடிவடைந்து விடும். அதன்பின் அந்த மக்கள் தமது சொந்த இடத்தில் இருந்து கொண்டு மற்றவர்களைப் போல தமது அன்றாட பணிகளைச் சுதந்திரமாக செய்ய தான் வழிவகைகளைச் செய்யலாம்" எனத் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளில் தற்போது திருட்டுக்கள் அதிகரித்து வருவதாகவும் பகல் வேளைகளிலும் திருட்டு இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இது குறித்து நான் இராணுவத்தளபதியிடம் தெரிவித்தபோது, பொலிஸார் மிகவும் விழிப்பாகச் செயற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பொலிஸாருக்கு உடனடியாகத் திருட்டுக் குறித்த தகவல்களைத் தெரியப்படுத்தினால் அவர்களால் உடனடியாகச் செயற்பட முடியும் எனவும் பொலிஸாருக்கு பொதுமக்கள் தம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதனை பொதுமக்களுக்குக் கூறுமாறும் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மேற்படி விடயம் குறித்தும் வடமாகாண இராணுவக் கூட்டுப்படைச் சிறப்புத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவை வெகுவிரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் கத்தோலிக்க பேராயர்கள் சாட்சியம்






இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று கத்தோலிக்க பேராயர்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் வலியுறுத்தினர்.

கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பேராயர் அதி வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபையினர் நேற்று (03) நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சிய மளித்தனர்.

வன்முறைகளுக்கான மூல காரணத்தையும் இனங்களுக் கிடையே அமைதியின்மை யையும், சந்தேகத்தையும், நம்பிக் கையீனத்தையும் இல்லாதொழிப்ப தற்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சகல பாடசாலைகளிலும் மூன்று மொழிக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென்று குறிப்பிட்ட பேராயர், அதன் மூலம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுமென்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், சிங்களமும் தமிழும் உத்தியோக பூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் அரசியலமைப்பில் பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் பேராயர் குறிப்பிட்டார். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சாட்சியமளிக்கையில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் மலையகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாகவும் ஆயர் சுட்டிக்காட்டினார். தேவேளை மக்கள் இழந்துவிட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிய வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளால்

கொல்லப்ப ட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த சட்டத்தரணி சமில் பெரேரா சாட்சியமளிக் கையில், புலிகள் இயக்கம் தோற்கடிக்கப் பட்டுள்ளதால் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கிவிடலாமென்று ஆலோசனை தெரிவித்தார். வடக்கு, கிழக்குப் பதிகளில் சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி சாட்சியமளிக்கையில், வடபகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அந்தக் காணிகளை உரிய பொதுமக்களிடம் கையளிகக் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். உயர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தியிருப்பதால், பெறுமதியான விவசாய நிலங்கள் வீணாகுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். முல்லைத்தீவு, நந்திக் கடல் பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

சம்பூர் மக்கள் அவர்களின் சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியதுடன் இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு அவர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘வன்னி மக்கள் தமக்கே உரிய தனித்துவமான வாழ்வியலைக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறே வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

அருட்தந்தை ரஞ்சித் மதுராவல சாட்சியமளிக்கையில், வட பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சீராக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் களையப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

சாட்சியத்தின் நிறைவில் குறுக்கு விசாரணை செய்த ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உடனடியாக நீக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் கூறியதோடு, அது தொடர்பில் சட்த்தரணி சமில் பெரேராவின் கருத்தினைக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த அவர், நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சட்டங்களை நீடிப்பதற்கான அவசியம் இல்லை எனக் கருதுவதாகக் கூறினார். நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கான முதற்படியாக குறைந்தது அவசரகாலச் சட்டத்தையாவது நீக்க வேண்டுமென்றார்.

நிறைவாகக் கருத்துரைத்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பிரிவினையை ஒருபோதும் நாம் ஆதரித்ததில்லை. இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வதற்கு ஆரம்பம் முதலே முயற்சித்தோம். ஆனால், அடிப்படையில் இரு தரப்பிற்கும் நம்பிக்கை இல்லாததால் அது பலனளிக்கவில்லை’ என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் பொறுப்பில் காஸ் உரிமையையும் முகாமையையும் அரசாங்கம் நேற்று பொறுப்பேற்றது


ஷெல் காஸ் சமையல் எரி வாயு கம்பனியின் 51 வீத பங்குகளையும், ஷெல் டேர்மினல் லங்கா கம்பனியின் 100 வீத பங்குகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும் ஷெல் காஸ் நிறுவனமும் நேற்று கொழும்பில் கைச்சாத்திட்டன.

நிதியமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தரவும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைவருமான காமினி செனரத்தும் ஷெல் காஸ் கம்ப னியின் சார்பில் பிரதி பொது முகாமையாளர் அன்ரூ க்ரொவ்வும் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இதன்படி, அரசாங்கத்தின் உரிமை மற்றும் முகாமைத்துவத்துடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் நேற்று முதல் செயற்படுகின்ற லிற்றோ கம்பனியின் கீழ் எதிர்வரும் நாட்களில் எல். பி. காஸ் இறக்குமதி, விநியோகம், களஞ்சியப்படுத்தல் என்பன இடம் பெறுமென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்தது.

ஷெல் காஸ் சமையல் எரிவாயு எதிர் வரும் நாட்களில் “லிற்றோ காஸ்” என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட விருக்கின்றது.

அமைச்சரவை கடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, ஷெல்காஸ் கம்பனியின் 51% பங்குகளையும், ஷெல் டேர்மினல் லங்கா கம்பனியின் நூறு வீத பங்குகளையும் கொள்வனவு செய்யத் தீர்மானித்ததற்கு ஏற்ப இந்த உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது. “லிற்றோ கம்பனியின் தலைவராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும், பிரதம நிறைவேற்று பணிப்பாளராக பியதாச குடாவலகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் அடுத்து வரும் 15 நாட்களுக்குள் இக் கம்பனிக்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.

இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்ட கலாநிதி பி. பி. ஜயசுந்தர, எல். பி. காஸ் சமையல் எரிவாயு வியாபார நடவடிக்கையை புதிய கம்பனியின் கீழ் மேலும் விரிவுபடுத்த முடியும் எனவும் அதன்படி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார்.

இந் நிறுவனத்தைப் பொறுப்பெடுக்கும் உடன்படிக்கையின் பயனாக இலங்கைக்கு எல். பி. காஸ் விநியோகத்தை குறைந்த செலவுடன் உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்திருப்ப தாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

‘லக் ச.தொ.ச’ கடைகளில் 25 ரூபாவுக்கு தேங்காய் உணவுப் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு



கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் லக் சதொச மற்றும் கூட்டுறவு கடைகள் ஊடாகத் தேங்காயை ரூபா 25.00 படி நேற்று முதல் சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் கூடிய உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான கமிட்டியின் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேங்காயின் சில்லறை விலை சந்தையில் அசாதாரணமான முறையில் அதிகரித்துச் செல்லுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்தல் மேம்பாட்டு அமைச்சு அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட கம்பனியி டமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பங்களிப்புடன் தேங்காயை நேரடியாகக் கொள்வனவு செய்து சந்தைப்படுத்துவதென இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலத்தின் நிமித்தம் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலையை சந்தையில் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது. இவ்வரிச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எதிர்வரும் நாட்களில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை 6000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குப் போதுமான அளவு அரிசி அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளது. சந்தையில் அரிசி விலை உயரும் சாத்தியம் ஏதாவது தென்பட்டால் உடனடியாக அரசின் கையிருப்பில் உள்ள அரிசியை சந்தைக்கு விடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கூட்டத்தின் போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அதேநேரம், அரிசி தயாரிப்பு தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு வழங்கியுள்ள வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்

இதேவேளை, மரக்கறி விலை குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “மரக்கறி விலைகளை நிர்ணயிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் இடைத்தரகர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அத்தோடு மரக்கறி விலைகளை ஏற்றி இறக்கும் போக்குவரத்து நடவடிக்கையின் போது அவற்றைப் பாதுகாப்பாகப் பொதி செய்வதைக் கட்டாயப்படுத்துவதற்கு ஏற்றவகையிலான யோசனையை துரித கதியில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சருக்கு ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது அறிவுரை வழங்கினார்.

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் பணவீக்கம் கட்டம், கட்டமாகக் குறைவடைந்து அதனை இப்போது 6 சதவீதமாகப் பேண அரசினால் முடிந்துள்ளது.

உணவு உற்பத்தியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதற்காக அரச வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தும் போது, அரச காணிகளையும், ஏனைய வளங்களையும் முறையாக முகாமை செய்து பயன்படுத்துமாறும், எந்த உணவு உற்பத்திக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பதை இனம் கண்டு செயற்படும் போது அதிக பலாபலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது கூறியுள்ளார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்களான ரத்னசிறி விக்கிரமநாயக்கா, ஆறுமுகன் தொண்டமான், மஹிந்த சமரசிங்க, டொக்டர் ராஜித சேனாரட்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொக்குகே, பிரதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

மேல்கொத்மலை நீர்மின்திட்ட சுரங்கப் பாதை இன்று திறப்பு அமுல்படுத்தினால் அலகுக்கு ரூ. 5 அடிப்படையில் மின் விநியோகம்


மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தை அமுல்படுத்தும் பட்சத்தில் ஒரு அலகுக்கு ஐந்து ரூபா என்ற அடிப்படையில் மின்சாரம் விநியோகிக்க முடியும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார்.

இதன் மூலம், வருடமொன்றுக்கு 8 பில்லியன் ரூபா எஞ்சுவதாக தெரிவித்த அவர், 1985ம் ஆண்டு திட்டமிட்ட படியே இந்த திட்டத்தை ஆரம்பித்திருந்தால் சுமார் 200 பில்லியன் ரூபாவை மீதப்படுத்தியிருக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் கொத்மலை நீர்மின் நிலையத்திற்கு நீரை எடுத்துவரும் பிரதான சுரங்கப் பாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று 4ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட வுள்ளது.

மேல் கொத்மலை நீர் மின் திட்டம் மற்றும் பிரதான சுரங்கப் பாதை ஆரம்ப வைபவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

சுமார் நான்கு தசாப்தங்களாக பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்த இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சுமார் மூன்று ஆண்டு காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்துள்ளது.

44 பில்லியன் ரூபா செலவில் இந்த பாரிய நீர்மின்திட்டம் விநியோக செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென இலங்கை அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜப்பான் அரசாங்கம் 34 பில்லியன் ரூபாவை கடனாக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

ந்த நீர் மின் நிலையத்திற்கு நீரை எடுத்து வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள 12.9 கிலோ மீட்டர் நீளமான இந்த பிரதான சுரங்கப்பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து அதன் நிர்மாண பணிகளை பார்வையிடவுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இது போன்ற சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நீர் மின் திட்டம் விநியோகிக்கப்படவுள்ளதால் சுரங்கப் பாதையில் தண்ணீர் நிரப்புவதற்கு முன்னர் பொது மக்களுக்கும் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை 5ம் திகதி முதல் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பார்வையிட முடியும் என்றார். இதற்கான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இது ஒரு நெடுஞ்சாலை அல்ல, சுரங்கப் பாதை என்பதை கருத்திற் கொண்டு பார்வையிட வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

150 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேற்படி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாண பணிகள் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

2006ம் ஆண்டு ஆரம்பமான மேல் கொத்மலை மின் நிலைய பணிகள் ஐந்து கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.

தற்பொழுது எரிபொருள் மூலமே மின் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்த அமைச்சர் ஒரு அலகுக்கு தற்பொழுது 17/50 சதம் செலவாகுவதாக குறிப்பிட்டார். இந்நிலையில் நீர் மின் திட்டத்தினை அமுல்படுத்தும் பட்சத்தில் ஒரு அலகுக்கு ஐந்து ரூபாவே செலவாகுவதாக தெரிவித்த அமைச்சர் இதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய நன்மைகளை இந்த நாட்டு மக்கள் அடையவுள்ளனர் என்று தெரிவித்தார்.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பேர்டினன்டோ, இலங்கை மின்சார சபைத் தலைவர் வித்யா அமரபால, ஆரிய ரூபசிங்க ஆகியோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி

நீண்டகால போர் சூழலில் இருந்து விடுதலைபெற்ற வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இம்முறை தீபாவளிப் பண்டிகை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட இடங்களில் தீபாவளிப் பண்டிகை களைகட்டியுள்ளது. பண்டிகைக்கால வியாபாரங்கள் சூடுபிடித்துள்ளன. சிறப்பான கொண் டாட்டங்கள் விழாக்கள் என்பன பிரதேச மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவதற்காக விசேட நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் பின்பு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வீடுகள் வளவுகள் அலங்காரம் செய்வதிலும் துணிமணிகள் வாங்குவதிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் ஏறி இறங்குவதையும், வெளி இடங்களில் தொழிலுக்குச் சென்றவர்கள் விடுமுறையில் வந்துகொண்டிருப்பதையும், பிரதான வீதிக்கரைகளில் துணி வகைகளும் ஏனைய பொருட்களும் விற்பனைக்கு குவித்துவைக்கப்பட்டிருப்பதும் காண முடிகிறது.

பல்வேறு இந்து அமைப்புகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கையினால் இந்த வருட தீபாவளி “மதுபானம் இல்லாத தீபாவளி”யாக அமைய வேண்டுமென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் சுவரொட்டிகளும் முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள எல்லா முருகன் ஆலயங்களிலும் கந்தசஷ்டி விரதம் 6ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவிருக்கின்றது.

அம்பாறை மாவட்ட திருப்பணிச் சபை உகந்தமலை முருகன் ஆலயத்தில் விரதத்தையும், அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும், தீர்த்தமும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் இம்முறை தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு உடு துணிகளை விற்பனை செய்யும் தென்னிலங்கை சிங்கள முஸ்லிம் நடைபாதை வியாபாரிகள் படையெடுத்திருப் பதால், உடுதுணிகளை மக்கள் வாங்கு வதற்காக முனீஸ்வரன் வீதி முற்றவெளிப் பக்கம் பெரும்கூட்டம் காணப்படுகின்றது.

இம்முறை தீபாவளி சகல இன மக்களும் குதூகலிக்கும் விழாவாக அமைவதால் பெரும் எண்ணிக்கையான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளனர்.

இம்முறை தீபாவளி வெள்ளிக்கிழமை வருவதாலும், மறுநாள் கந்தசஸ்டி விரதம் ஆரம்பமாகவிருப்பதாலும் மதுபானக்கடைகளில் வியாபாரம் சோபை இழந்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் சகல ஆலயங்களிலும் விசேட அபிஷேகங்கள், யாகங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள், மகேஸ்வர பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டம் நகர் பகுதியில் அதிகரித்திருப்பதையடுத்து கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் இலங்கைப் போக்குவரத்துச்சபை டிப்போக்கள் சகல பாதை மார்க்கங்களிலும் கூடுதலான பஸ் சேவைகளை நடாதிவருகின்றன.

யுத்தம் நீங்கி முழுமையான சமாதான சூழலில் மலரவிருக்கும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மட்டக்களப்பு வாழ் இந்து மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பகுதிகள் உட்பட சகல பகுதிகளிலும் தீபாவளிக்கென பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி, மட்டக்களப்பு, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, செங்கலடி உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் ஜவுளி மற்றும் பாதணிகள் உட்பட பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இம்முறை தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவிலான தென்னிலங்கை வர்த்தகர்களும் கிழக்கு மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதேபோல, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் தீபாவளிப் பண்டிகைக்கான ஏற்பாடுகளும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ளது. கிளிநொச்சி நகரில் ஏ 9 வீதி மற்றும் பஸ் டிப்போ வீதி உட்பட அம்பாள் குளத்தில் அமைந்துள்ள புதிய சந்தை பளை நகரம் ஆகியவற்றில் கடந்த இரு தினங்களாக வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

கிளிநொச்சி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. பஸ் டிப்போ சந்தி கனகபுரம் வீதியில் புதிதாக நடைபாதை வியாபாரிகள் நூற்றுக் கணக்கில் புடவை வியாபாரம் உட்பட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த யுத்தத்திற்கு பின்னர் அதிக அளவில் மீளக்குடியேற்றம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இம்முறை தீபாவளிப் பண்டிகையை சிறப்புற கொண்டாட விரிவான ஏற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது.

முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு நகரம் முதலானவற்றில் தீபாவளி பண்டிகை கால வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பவனிக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு






ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாந்தோட்டையை நோக்கி புறப்பட்ட சர்வமத பவனி நேற்று காலை கிளிநொச்சி நகரை வந்தடைந்த போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ஆயிரக் கணக்கானோர் கூடி வரவேற்பளித்ததுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இதன்போது கிளிநொச்சி நகர் பாதுகாப்பு படையினரின் சிவில் அதிகாரி உட்பட அரச அதிகாரிகள், ஆலயங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். மாண்புமிகு ஜனாதிபதி யின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இந்து, கிறிஸ்தவ, பெளத்த கடவுளர்களது திருவுருவப் படம் மற்றும் திருவுருவ சிலைகளும் இப்பவனியில் இடம்பெற்றன.

இதேவேளை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தினை முன்னிட்டு மக்களின் வாழ்த்துக்களையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாந் தோட்டைக்கான இந்த பவனி நேற்று முன்தினம் காலை யாழ்ப்பாணம் ஸ்ரீநாக விகாரை முன்பாக பெளத்த, இந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்ப மாகியது.

இப்பவனியின் முன்னால் அழகிய முத்துப்பல்லக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் ஜனாதிபதியின் உருவப் படம் சகல இன மக்களுக்கும் வணக்கம் கூறுவதாக கட்டப்பட்டிருந்தது. இரண்டாவது வாகனத்தில் மத நல்லிணக்கத்தை சித்தரிக் கும் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டி ருந்தது. மற்றுமொரு வாகனமும் அலங்கார ஊர்தியாக பவனியில் இடம்பெற்றுள்ளது.

இந்த பவனி குழுவினர் யாழ். மக்களின் செய்தியை 19 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதியிடம் கையளிப்பர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த பதினொரு இந்திய மீனவர்கள் கடற் படையினரால் மீட்பு

வடக்கு கடற் பரப்பில் தத்தளித்த பதினொரு இந்திய மீனவர்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டி ருந்த இலங்கை கடற் படையினர் காப்பாற்றியதாக கடற்படைப் பேச் சாளர் கப்டன் அதுல செனரத் கூறி னார்.

இவர்களைப் பாதுகாப்பாக தமிழ் நாட்டுக்கு திருப்பி அனுப்ப நட வடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நெடுந்தீவுக்கு வட மேற்கே பய ணம் செய்த 4 ஆழ் கடல் படகுகள் இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டன. இதில் பயணித்த மீனவர்கள் நெடுந் தீவுக்கு அழைத்து வரப்பட்டதோடு படகுகளும் கடற்படையினரால் இழுத்து வரப்பட்டதாக கடற் படைப் பேச்சாளர் கூறினார்.

படகுகள் கடற் படையினரால் திருத்தப்பட்டுள்ளதோடு மீட்கப் பட்ட மீனவர்கள் குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறிவி த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் இந் திய மீனவர்களை துன்புறுத்துவதா கக் கூறப்படும். குற்றச்சாட்டுகள் பொய் என்பது இதன் மூலம் உறுதி யாவதாகவும் பேச்சாளர் குறிப்பிட் டார்
மேலும் இங்கே தொடர்க...

ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பலத்த அடி

திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பலத்த அடி விழுந்தது. பிரதிநிதிகள் சபை முழுவதையும், செனட்சபையில் முக்கிய இடங்களையும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி கைப்பற்றியது.

இந்த இடைத்தேர்தலில் ஒபாமாவின் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது அவரது பொருளாதாரக்கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையே காட்டுகிறது எனக் கருதப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீட்சி பெற வழிவகுக்கும் எனக் கருதப்பட்ட அந்த கொள்கைகளை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

435 இடங்கள் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் அனைத்து இடங்கள், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையின் 37 இடங்கள், 37 மாகாண கவர்னர் பதவிகள் மற்றும் எண்ணற்ற மாகாண, உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தலில் அமெரிக்காவைச் சேர்ந்த கோடானகோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இதில், ஜனநாயகக்கட்சி முன்பைவிட சற்று குறைவான பெரும்பான்மைப் பெற்று செனட் சபையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.

தேர்தலுக்கு முந்தைய நிலவரப்படி, மக்கள்பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 235, குடியரசுக்கட்சிக்கு 178 உறுப்பினர்களும் இருந்தனர். 2 இடங்கள் காலியாக இருந்தன. 100 இடங்கள் கொண்ட செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு 59, குடியரசுக்கட்சிக்கு 41 இடங்கள் இருந்தன.

இன்னும் பல இடங்களிலிருந்து வாக்குப்பதிவு விவரங்கள் வரவேண்டிய நிலையில், மக்கள் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சிக்கு (கூடுதலாக 57 இடங்களுடன்) 230 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு வெறும் 164 இடங்கள்மட்டுமே கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 100 இடங்கள் கொண்ட செனட் சபையை 51 இடங்களைப் பிடிப்பதன் மூலம் ஜனநாயக கட்சி எப்படியும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடும். அதில் ஜனநாயக கட்சியின் 6 இடங்களை பறிப்பதுடன் குடியரசுக்கட்சி 46 இடங்களைமட்டுமே கைப்பற்ற முடியும் எனவும் கவர்னர் பதவிகளுக்கான 37 இடங்களில் ஜனநாயகக் கட்சி 9 இடங்களை இழந்து 14 இடங்களையும், குடியரசுக்கட்சி கூடுதலாக 8 மாகாணங்களை வென்று 27 இடங்களையும் பிடிக்கும் என கணிக்கப்பட்டது. தெற்கு கரோலினை மாகாணத்தில் நிக்கி ஹேலி வெற்றி பெறுவார் எனவும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட மற்ற இந்தியா வம்சாவளியினர் 6 பேர் தோல்வியடைந்தனர்.

தேர்தல் முடிவு எபப்படியிருக்கும் என ஒரளவுக்குத் தெரிந்துவிட்டதால் அதிபர் பராக் ஒபாமா செனட் சபை மைனாரிட்டி தலைவர் மிச் நெகானால், அடுத்த அவைத்தலைவராக வரக்கூடியவர் எனக் கருதப்படும் ஜான் போனர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசினார்.

போனருடன் ஒபாமா இனிமையாகப் பேசினார். இதற்காக ஒபாமாவுக்கு போனர் நன்றி தெரிவித்தார் என போனரின் உதவியாளர் கூறினார். மக்கள் பிரதிநிதிகள் சபையில் மெஜாரிட்டி பெற்ற கட்சியைச் சேர்ந்த ஸ்டெனி ஹோயரிடமும், அவைத்தலைவர் நான்சி பெலோசியுடனும் அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் பேசினார்.

அமெரிக்கர்களின் முன்னேற்றத்திற்காக எதிர்க்கட்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து பணியாற்ற விரும்புவதாக ஒபாமா தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனநாயக கட்சியைப் பொருத்தவரை, முன்பு ஒபாமாவிடமிருந்த இலினாய்ஸ்ட் தொகுதியை கைப்பற்றியது ஒபாமாவுக்கு தோல்வியைக் கொடுத்ததுபோலாகும்.
மேலும் இங்கே தொடர்க...