12 ஜூலை, 2010

இலங்கைத் தூதரகங்களை இந்தியாவில் அகற்ற வேண்டும் : திருமாவளவன்

இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருமாவளவன் அங்கு பேசுகையில்,

"மீனவர் செல்லப்பன் சமீபத்தில் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த 5 வருட காலமாக தமிழக மீனவர்கள் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வருடன் கலந்து பேசித்தான் கையெழுத்திட வேண்டும்.

இதுவரை 7 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்னது. இதுபற்றி கலைஞரிடம் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகத்தை மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை எதிர்த்தும் இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

ஐ.நா. சபையையே எதிர்க்கும் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்முறையைத் தூண்டியதாக டைரக்டர் சீமான் சென்னையில் கைது

நாம் தமிழர் இயக்கத் தலைவர் டைரக்டர் சீமன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

இன்று காலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் பேராசிரியர் தீரன், தமிழ்முழக்கம் சாகுல்அமீது, தென்னரசு, திருச்சி வேலுசாமி ஆகியோர் நிருபர்களைச் சந்தித்து சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் டைரக்டர் சீமான்,

"தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்ந்தால் இங்கு படிக்கும் சிங்கள மாணவர்களை நடமாட விடமாட்டோம்" என்று எச்சரித்தார்.

இதுகுறித்து வடக்கு கடற்கரை பொலிசார் சீமான் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

சீமானைக் கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டிருந்தது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு டைரக்டர் சீமானும் வருவதாகக் கூறப்பட்டது. அங்கு வைத்து அவரை கைது செய்வதற்காக இன்று காலை 7.00 மணிக்கே நூற்றுக்கணக்கான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அங்கு வருவதற்கு 4 வாசல்கள் உள்ளன. 4 வாசல்களிலும் பொலிசார் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். ஹெல்மட் அணிந்து சென்ற பத்திரிகையாளர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

சீமான் கைது செய்யப்படுவதை படம் பிடிப்பதற்காக ஏராளமான புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் காலை 9.00 மணியில் இருந்தே குவிந்திருந்தனர்.

பொலிஸாருக்கு எதிராகக் கோஷம்

பகல் 11.30 மணியளவில் சீமான் வாலாஜா வீதி வழியாக சேப்பாக்கத்துக்கு வந்தார். அவரது வருகையை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் காத்திருந்தனர். காரிலிருந்து சீமான் இறங்கியதும் பொலிசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

சீமானைப் பொலிஸ் வாகனத்தில் ஏற்ற விடாமல் காரைச் சுற்றி சூழ்ந்து கொண்டனர். பத்திரிகையாளர்களும் அவரிடம் பேட்டி எடுப்பதற்காக முண்டியடித்தனர். இதனால் கலவரம் ஏற்பட்டது.

"சீமானை பேசவிடு..." என்று கூறி நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். சுமார் 15 நிமிட போராட்டதுக்கு பின் டைரக்டர் சீமானை பொலிசார் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் ஜோர்ஜ் டவுன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காகப் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்றனர்.

சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியினர் வாலாஜா வீதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 10 பேரை பொலிசார் கைது செய்தனர்.

சீமான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பொலிஸ் வாகனத்தைச் சுற்றி நின்று கொண்டு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

சீமானின் கடிதத்தில்.....

கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:

"உங்களைச் சந்திப்பதற்கு முன்பு நான் கைது செய்யப்பட்டால் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இந்த கடிதத்தைத் தருகிறேன்.

வன்முறை, பிரிவினையைத் தூண்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 561 பேரை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்தியது வன்முறையைத் தூண்டும் செயல் இல்லையா? எங்கள் மீனவர்கள் சுடப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக கருதி நான் பேசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டதா?

தி.மு.க. மீனவர் அணியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினார்களே, இது யாருக்கு எதிராக? ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரினைவாதம் என்றால் உலகத்தில் சுதந்திரம் என்ற சொல்லே இருந்திருக்காது.

இன்று கூட இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கிறது. இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?"

இவ்வாறு அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே டைரக்டர் சீமான் தனது வக்கீல் சதா சந்திரசேகரன் மூலமாக சென்னை ஜோர்ஜ்டவுன் நீதிமன்றில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சீமானைக் கைது செய்த போது ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர்கள் 4 பேர் தாக்கப்பட்டனர். தாக்கியவர்கள் மப்டியில் இருந்த பொலிசார்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கிய பொலிசார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் எதிரில் பத்திரிகையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக் கண்ணன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் மறியலை கைவிடவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளவத்தையில் தமிழர் மட்டும் பதிவு : மனோ கணேசன் கண்டனம்

வெள்ளவத்தையிலுள்ள தமிழர்கள் மட்டும் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை பிரதேச தமிழர்கள் மட்டும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்தே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை மட்டும் பதிவு செய்யும் இத்தகைய நடவடிக்கை மூலம் இன ஐக்கியத்திற்குப் பங்கம் ஏற்படக் கூடுமென மனோ கணேசன் கடிதம் ஒன்றின் மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத் பொன்சேகாவின் விளக்கமறியல் 26ஆம் திகதி வரை நீடிப்பு


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விளக்கமறியலை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நீடிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவிலுள்ள தனது மகளுடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்குமாறு சரத் பொன்சேகா விடுத்திருந்த வேண்டுகோளையும் கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.

அதேவேளை, ஜெனரல் பொன்சேகாவின் உடல்நலன் கருதி சிறைக்கூடத்துக்கு வெளியே நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கு அவரை அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க உதவியுடன் கிழக்கில் விவசாயத்துறை அபிவிருத்தி

அமெரிக்க அரசாங்கத்தின் யு.எஸ்.எயிட் நிறுவன நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் தனியார் துறையினரின் உதவியுடன் விவசாயத்துறையைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட மாநாடு மட்டக்களப்பு 'கோப் இன்' விடுதியில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

அமெரிக்க யு.எஸ்.எயிட் நிறுவன திட்ட முகாமையாளர் டி.சில்வா, மாவட்ட திட்டப் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், விவசாயத்துறை சார்ந்த நிபுணர்கள் உட்பட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அனுசரணையுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர் மீது தாக்குதல் : இலங்கைக் கடற்படை மறுப்பு


கடற்றொழிலில் இந்திய மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து இலங்கைக் கடற்படையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய மீன்பிடித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

எனினும் இந்தத் தகவல்களைக் கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் மறுத்துள்ளார்.

இந்தியக் கடற்பகுதியில் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் நடமாடியதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களைக் கண்டால் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வதென்பது குறித்து கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பெருந்தொகை சுனாமி நிவாரண நிதியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வீணடித்துவிட்டன

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக பெற்றுக் கொண்ட பெரும் தொகைப் பணத்தை வீணடித்து விட்டன என்று ஆர்எம்ஐரி என்ற ஆய்வு நிலையம் மற்றும் மெல்போர்ன் மொனாஷ் பல்கலைக்கழகங்கள், இலங்கையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழகம், இந்தியாவிலுள்ள சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒஸ்எயிட் எனும் அவுஸ்திரேலிய அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் மட்டும் 500 க்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்கள் செயல்பட்டன எனற போதிலும் 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிப் பேரழிவு போன்ற பாரிய அழிவுகளின் போது மீட்புப் பணியை மேற்கொள்ளக் கூடிய அனுபவம் பல நிறுவனங்களுக்கு இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்ட சில புகலிடங்களில் நான்கு வருடங்கள் வரை குடும்பங்கள் வாழ்ந்து வந்ததால் தற்காலிக வீடுகளை கட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்று இந்த 385 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சுனாமியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை முழுமையாக கிரகித்து வைத்திருக்காவிட்டால் மீண்டும் அதே தவறை புரிந்து ஏராளமான உலக உதவிப் பணத்தை வீணடித்து விடும் என்று ஆர்எம்ஐரியின் உலகளாவிய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மார்ட்டின் முலிகனும் அறிக்கையின் இணை ஆசிரியை யசோ நடராஜாவும் தமதுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச தன்னக்ஷிவ நிறுவனங்களின் உதவித் தொகைகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் சமுதாயக் குழுக்களுடன் உறுதியாக இணைந்து செயல்பட்டதையும் இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளக்ஷிர்கள். ஆனால் பல உதவி நிறுவனங்கள் அவசர அவசரமாகவும் ஒன்றோடொன்று போட்டியாகவும் செயல்பட்டதால் பெரும் தொகையான சுனாமி உதவிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். தரம் குறைந்த நிர்மாணப் பணிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பல நிறுவனங்கள் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்தன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தென்னிந்திய நடிகை அசின் யாழ் விஜயம்


தென்னிந்திய நடிகை அசின் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவருடன் நடிகை அசினும் விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னிந்திய திரைப்படச் சங்கங்கள் அனைத்தும் நடிகை அசினின் திரைப்படத்திற்கு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி இலங்கையில் இடம்பெறுகின்ற படப்பிடிப்பிற்காக இந்தி நடிகர் சகிதம் அசின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் பாரியார் சகிதம் யாழ் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் நடிகை விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. நிபுணர்கள் குழுவைக் கலைக்க அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பு பெறத் திட்டம்

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கு அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கு அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தக் கடிதத்தின் ஊடாக எதிர்பார்த்தளவு வெற்றி கிட்டவில்லை எனவும் இதனால் இலங்கை அரசாங்கம் மீண்டும் அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அமைப்பில் அங்கம் வகிக்கும் 118 உறுப்பு நாடுகளையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, மனித உரிமை பேரவை மற்றும் இலங்கையின் அனுமதியின்றி நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அணி சேரா நாடுகள் குற்றம் சுமத்தியிருந்தன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடுமாறு அணி சேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் இலங்கை மீண்டும் கடிதம் மூலம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பாலித கொஹண இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் திருத்தங்களையும் ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகள் மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஆக்டோபஸ்' கணிப்பு பலித்தது: உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின்




ஜோகனஸ்பர்க்: உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பால் "ஆக்டோபஸ்' கணிப்பு மீண்டும் ஒரு முறை பலித்து உள்ளது. நெதர்லாந்து வெற்றி பெறும் என்ற சிங்கப்பூர் கிளியின் கணிப்பு பொய்யாகிப் போனது.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த பைனலில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், நெதர் லாந்தை(4வது இடம்) எதிர் கொண்டது. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.

ஸ்பெயின் ஆதிக்கம்: துவக்கத்தில் "யூரோ' சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார். ஆனால், நெதர்லாந்து கோல் கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர் லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார். பின் நெதர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். நெதர் லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர்.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர் லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாவது பாதியிலும் "அடிதடி' ஆட்டம் தொடர்ந் தது. 54வது நிமிடத்தில் "பவுல்' செய்த நெதர்லாந்து கேப்டன் பிரான்க்ஹார்ஸ்ட் "எல்லோ கார்டு' பெற்றார். 62வது நிமிடத் தில் நெதர்லாந்தின் ராபன், பந்தை மின்னல் வேகத்தில் கடத்தி வந்து "ஷாட்' அடித்தார். ஆனால், ஸ்பெயின் கீப்பரும் கேப்டனுமான கேசில்லாஸ் சாதுர்யமாக தடுக்க, பொன் னான வாய்ப்பு வீணானது.

டேவிட் ஏமாற்றம்: இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார். பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது. எங்கே ஸ்னைடர்: ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ராபன் அசுர வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது ஸ்பெயின் வீரர் புயோல் தடுக்க, வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து நடுவருடன் வாதாடினார் ராபன். இதற்காக ராபனும் "எல்லோ கார்டு' பெற்றார். இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை. இவர் இருக்கும் திசையில் பந்து வருவதே அரிதாக இருந்தது. இரு பாதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

"ரெட் கார்டு' சோகம்: இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத்தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப் பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது.

ஸ்பெயின் கோ...ல்:ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது. கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர் லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.

ரூ. 142 கோடி பரிசு: உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. 2ம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.

முரட்டு ஆட்டம்: இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டம் ஆடியதால் "எல்லோ கார்டு' மயமாக இருந்தது. இதில் இரு முறை "எல்லோ கார்டு' பெற்ற நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' சோகத்தை சந்தித்தார். நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் "எல்லோ கார்டு' பெற்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிங்கப்பூரில் ரயிலில் கிறுக்கியவருக்கு பிரம்படி தண்டனை


சிங்கப்பூர் : பாதாள ரயில் பெட்டி மீது பெயின்ட் தெளித்து அலங்கோலப்படுத்திய வெளிநாட்டு இளைஞருக்கு, சிங்கப்பூர் கோர்ட் பிரம்படியும், சிறை தண்டனையும் விதித்தது.

சிங்கப்பூரில் பொது இடங்களில் தூய்மையை கடைபிடிக்கவும்,பொது சொத்துக்களை பாதுகாக்கவும் அந்நாட்டு அரசு கடும் நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. சிறிய குற்றங்களுக்கு கூட, கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. அங்குள்ள பாதாள ரயில் டெப்போவிற்குள் இளைஞர் ஒருவர் சமீபத்தில் கூட்டாளி ஒருவரின் உதவியுடன், அத்துமீறி நுழைந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு ரயில் பெட்டிகள் மீது பெயின்ட்டை தெளித்து, கிறுக்கி அலங்கோலப்படுத்தினார். இதை கண்ட டெப்போ ஊழியர்கள், அந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒலிவர் பிரிக்கர்(32)என தெரியவந்தது.இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒலிவர், திட்டமிட்டு குற்றம் புரிந்துள்ளார். எனவே கடும் தண்டனை வழங்க வேண்டும்' என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுச்சொத்தை சேதப்படுத்திய ஒலிவருக்கு, மூன்று பிரம்படி தண்டனையும், ஐந்து மாத சிறை தண்டனையும் விதித்தார்.பின்னர் அவர் பிணையத் தொகை செலுத்தி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.ஒலிவருக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக அதிகம்; தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என, அவர் வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மூன்று முதல் எட்டு பிரம்படி தண்டனை வழங்க, அந்நாட்டு சட்டத்தில் வழிவகையுண்டு.மேலும், அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க இயலும்.இதுபோன்ற, கடுமையான சட்டங்களால் சர்வதேச அளவில் சிங்கப்பூரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை, மிகமிக குறைவு.மேலும், சமூக பாதுகாப்பு மிக்க நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.

சிங்கப்பூரில், கடந்த 1994 ம் ஆண்டு பொது இடத்தில் தகராறு செய்த மைக்கேல் பே என்ற அமெரிக்க இளைஞருக்கு ஆறு பிரம்படியும், நான்கு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்க அப்போதைய அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் பரிந்துரை செய்தும், அதை ஏற்க, சிங்கப்பூர் அரசு மறுத்துவிட்டது. மேலும் சிங்கப்பூரில் போதைபொருள் தொடர்பான குற்றங்களுக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் விதிக்கப்படும் தண்டனைகளை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடிவு





இலங்கையில் பிரதமருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடர்பாக அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அதிபருக்கு உள்ள அதிகாரங்களிலிருந்து எவற்றையெல்லாம் பிரதமருக்கு அளிப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதுகுறித்து பேசித் தீர்க்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் தற்போது பிரதமரைவிட அதிபருக்குதான் கூடுதல் அதிகாரம் உள்ளது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியை வகிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக அதிபருக்கு உள்ள அதிகாரத்தை மாற்றி பிரதமருக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச முடிவு செய்தார். தற்போது அதிபருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பிரதமருக்கு அளிக்க ராஜபட்ச விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் மாகாணங்கள் அனைத்தும் பிரதமரின் அதிகாரத்துக்குள்பட்டதாக இருக்க அவர் விரும்புகிறார். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜபட்ச அவருடன் பேச்சு நடத்தி உள்ளார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அதன் ஷரத்துகளில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாலும், மீண்டும் திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருவரும் திட்டமிட்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க மூத்த அமைச்சர்களுக்கும் ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை சமர்ப்பிக்க ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு பெறவேண்டியுள்ளதால் கருத்தொற்றுமை காண அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பிரதமர் பதவியைப் பிடிக்க ராஜபட்ச திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குள் பிரவேசிக்க முனைந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்ற பயணிகள் விமானத்தில் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன் போது அவர்களில் கிலியோன் (சாந்தயோகி -வயது35) என்பவரும் வந்திருந்தார்.

இவர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதால் சாந்தயோகியை இந்தியாவுக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். பின்னர் விமான நிலைய ஓய்வறையில் அவர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று பகல் 12.15 மணிக்கு கொழும்பு வந்ந விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினார்கள். இதனால் இன்று காலையில் சென்னை விமான நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

விமலின் நகைச்சுவை நாடகத்தை தயாரிப்பாளரான ஜனாதிபதி நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளார்- கயந்த

விமல் வீரவன்சவை வைத்து அழகாக நகைச்சுவை நாடகத்தை தயாரித்த தயாரிப்பாளரான ஜனாதிபதி மஹிந்த அதனை நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கயன்த இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கயன்த, ஏற்கனவே சகல மக்களும் எதிர்பார்த்தப்படியே ஜனாதிபதி நடத்திய நாடகத்தின் முடிவு அமைந்துள்ளதாக குறிப்பிடும் அவர், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினார்.

இந்த நாடகத்தின் மூலம் விமல் வீரவன்ச தான் விடுத்த சவாலில் தோல்வி கண்டுள்ளதுடன், இந்த நாடகத்தினால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு இப்படி பொய்யான முறையில் தீர்வுகாண முற்படுவதைத் தவிர்த்து இராஜதந்திர ரீதியல் தீர்வு காணமுற்பட வேண்டும் எனவும், இலங்கை அரசு அவ்வாறு இராஜதந்திர ரீதியல் தீர்வு காண முற்படுமாயின் அதற்று ஐக்கிய தேசியக் கட்சி தமது முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முந்திரிக் காணியில் கடற்படை முகாம்

 கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது


கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது
முந்திரிக் காணி கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்திலுள்ள அரசாங்க முந்திரி பண்ணைக்குரிய 1200 ஏக்கர் காணி கடற்படை முகாமொன்று அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டு, அதற்கான அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் கூறுகின்றார்

இது தொடர்பாக தனது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முந்திரி செய்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்

அமைச்சரிடம் கோரியும் பலனில்லை

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் நேரடியாக இந்தத் தீர்மானத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அமைச்சர் அதனை நிராகரித்து விட்டதாக இரா.துரைரட்ணம் கூறுகின்றார்.

கடந்த இரண்டரை வருடங்களாக குறித்த பண்ணையில் எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக இக் காணி அடையாளம் காணப்பட்டதாக அமைச்சர் தனது பதிலில் கூறியதாகவும் பி.பி.சி தமிழேசையிடம் பேசிய இரா.துரைரத்தினம் குறிப்பிட்டார்.

அரசாங்கம் திட்டமிட்டு கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் அமைப்பதற்கு காணிகளை சுவீகரித்து வருவதாக இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்துகின்றார்.

வடக்கிலும் இராணுவத் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிப்பு

இதேவேளை, வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை அங்குள்ள மக்களை பெரிதும் கவலையடையச் செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கையகப்படுத்தப்படும் காணிகளுக்காக நட்டஈடு வழங்கப்படுமென அறிவிக்கும் சுற்றறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பொதுமக்களின் காணிகள் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடாது என தமது கட்சி அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ள போதிலும் அந்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பான் கீ மூனை எதிர்க்கிறோம்’-பிரதமர்

இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண
இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண
தனி மனிதராகிய ஐ.நா தலைமைச் செயலர் பான் கீ மூன் இறைமையுள்ள இலங்கைக்கு எதிராக போர்க்குற்றம் பற்றிப் பேச முடியாது என்று இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கூறியுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வடக்கே வவுனியாவுக்கு சென்றிருந்த டி.எம்.ஜயரத்ன, அரச செயலகத்தில் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

‘ஆயிரக்கணக்கான வருடங்கள் வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு தனி மனிதர் எவ்வாறு பேசமுடியும், அவர் நாளை அமெரிக்காவுக்கு எதிராக கூட பேசக் கூடும்’ என்றும் இலங்கைப் பிரதமர் கூறியுள்ளார்.

உயிரிழப்பு இல்லாமல் யுத்தம் செய்ய முடியாது எனவும் என்ஜிஓ காரர்கள் தான் இவ்வாறான விசாரணைகளைக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் ஐநாவை எதிர்க்கவில்லையெனவும் பான் கீ மூன் என்ற தனி மனிதரையே எதிர்ப்பதாகவும் இலங்கையின் பிரதமரும் பௌத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சருமாகிய டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

த.தே.கூ மீது மு.காங்கிரஸ் குற்றச்சாட்டு

த.தே.கூ-மு.காங்கிரஸ் தலைவர்கள்


த.தே.கூ-மு.காங்கிரஸ் தலைவர்கள்
தமது கட்சியுடன் கலந்தாலோசிக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி இந்தியாவுடன் பேசியது தவறு என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமது கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி இப்போதைக்கு பேசாமல் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இருதரப்பு சந்திப்பின்போது உடன்பாடு காணப்பட்டதாகவும் ஹாரிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியே சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

மேற்குலக நாடுகளின் நெருக்குதல்கள் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் அரசியல் தீர்வு திட்ட முயற்சிகளில் இந்தியா செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய தலைவர்களுடனான சந்திப்பை கவனத்தில் எடுக்காமல் விட முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...