23 டிசம்பர், 2010

தொடர் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க யாழில். கூட்டு ரோந்து

பொலிஸார் - இராணுவம் இணைந்து நடவடிக்கையாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவத்தின ரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் பொதுமக்களும் இது குறித்து விழிப்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்களால் இப்பகுதி மக்கள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாமலும், பகலில் குறிப்பாகப் பெண்கள் தயக்கமின்றி நடமாட முடியாமலும் திண்டாடுகின்றார்கள்.

இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடுவில் தெற்கு மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் மிரட்டி பதிவுத் திருமணம் செய்த இளம் பெண் உட்பட அங்கிருந்த ஏனைய பெண்களும் அணிந்திருந்த சுமார் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

அதே தினத்தில் மானிப்பாய் ஆனந்தன் வீதியிலுள்ள வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் கைத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஆறு பவுன் எடையு ள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் சங்கு வேலியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் ஆயுதங் களைக் காட்டி பயமுறுத்தி ஆசிரி யரும் அவரின் தாயாரும் அணிந்தி ருந்த 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் கள்.

மேலும் பட்டப் பகலில் சண்டிலிப்பாய்ப் பகுதியில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய கொள்ளையர், அப்பகுதி இளைஞர்களினால் துரத்திப் பிடிக்கப் பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார்.

இதேபோல் சுதுமலையிலுள்ள மாப்பியன் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றுள் ளனர்.

கடந்த வாரம் சங்கானையிலுள்ள அந்தனர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற கொள்ளையர் அங்கிருந்த வர்களைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் கென்றுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் சங்கானைப் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்ற கொள்ளையர், அங்கிருந்தவர்களைத் துப்பாக்கி முனையில் பயமுறுத்திப் 15 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்புக்கு ஜப்பான் முதலீடு

பாராளுமன்ற பிரதிநிதிகள் நிலைமையை நேரில் ஆராய்வு
வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பானிய நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யவுள்ளன.

இலங்கையின் தற்போதைய அமைதிச் சூழலை எடுத்துரைத்து ஜப்பானிய கம்பனிகளின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதாக ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்தது.

ஜப்பான் - இலங்கை நட்புறவு பாராளுமன்ற ஒன்றியத்தின் சார்பில் இலங்கை வந்துள்ள ஜப்பானிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே நேற்று (22) இதனைத்தெரிவித்தது.

ஜப்பானிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஹிரோபியுமி ஹிரானோ தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட குழு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த இந்தக் குழு நேற்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இலங்கையின் முதலீட்டுத் துறை தொடர்பில் அறிந்துகொண்டதாகவும் வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த வேண்டுமென்றும் கூறிய ஹிரானோ, கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் தற்போதைய சுமுக உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது விஜயத்தின் நோக்கமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கருத்துத் தெரிவிக்கையில்,

ஜப்பானின் புதிய முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள தாகவும் சுற்றுலாத் துறை, கைத்தொழில் துறை ஆகியவற்றில் கூடுதல் முதலீடுகள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார். இந்த வருடம் ஆறு இலட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்ததாகவும் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாகவே எதிர்பார்த்த இலக்கை அடைந்துவிட்டதாக வும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் யாப்பா, அடுத்த ஆண்டு ஏழு இலட்சம் பேரை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஆசியாவின் சிறந்த முதலீட்டு மையமாக இலங்கை விளங்குவதால் ஜப்பானிய கம்பனிகள் கூடுதலான முதலீடுகளைச் செய்யுமெனத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட எந்தப் பாகத்திற் கும் ஜப்பானிய பிரஜைகள் செல்ல முடியும் என அனுமதி வழங்கப்பட்டு ள்ளதா கவும் அவர் குறிப்பிட்டார்.நேற்றைய நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கொய்னோ டக்காஷியும் கலந்துகொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் இருந்து தேங்காய்:பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அத். பொருட்கள் இறக்குமதி

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை அப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் நிவர்த்தி செய்யவிருப்பதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

திறந்த சந்தையில் சில பொருட்களின் விலைகள் அதிகரித்தி ருப்பதால் அப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைக ளையும் அரசாங்கம் முன்னெடுத் துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோச மான காலநிலை போன்ற காரணங் களால் பெரிய வெங்காயத்திற்குத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் பாகிஸ்தானி லிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதை அந்நாடு தடை செய்திருப்பதால், பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேங்காய்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யவுள்ளோம். இதனமூலம் உள்ளகச் சந்தையில் தேங்காயொன்றின் விலையை 30 ரூபாவாகக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு எதிராக எதிர்க் கட்சி பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அப்பாவி நுகர்வோரைப் பாதிப்படையச் செய்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேடிக்கொள்வதற்கு எதிர்க்கட்சி முயற்சிக்கிறது.

கோழி இறைச்சிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்வதென அரசாங்கம் தீர்மானித்தபோதும் இவ்வாறான போராட்டங்களையே எதிர்க்கட்சி முன்னெடுத்தது. ஆனால் அது தோல்வியிலேயே முடிவடைந்தது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. நா. நிபுணர் குழு வந்தால் சாட்சியங்களை பதிவு செய்ய தயார் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு வர அரசாங்கம் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாயின் சாதாரண நடைமுறைக்கமைய ஐ.நா. நிபுணர்கள் குழுவின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்குத் தயாரென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா. நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்து அதற்கான வசதிகளைச் செய்துகொடுக் குமாயின் அக்குழுவின் வாக்குமூலங்களை நமது சாதாரண நடைமுறைக்கமைய பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆஜராகத் தயார் என்று கூறியிருந்தது. உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கத் தயார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சும் அறிவித்திருந்தது.

அதேநேரம், ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை வருவது பற்றியோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பது பற்றியோ நிச்சயமாகக் கூற முடியாதென ஐ.நா. பேச்சாளரே கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரசை வீழ்த்த முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

தேர்தல்கள் மூலம் தோல்விகளை அனுபவிக்கும் கட்சிகள், அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு சிறந்த பணிகளுக்கு குழப்பம் விளைவிப்பதையோ அல்லது குறித்த அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென அஸ்கிரிய மகாநாயக்க சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் நேற்று (22) தெரிவித்தார்.

ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பொன்றின்போது அஸ்கிரிய தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சிகளுக்கிடையிலான போட்டிகளும் பொறாமைகளும் தேர்தல் காலங்களில் மாத்திரம் அன்று வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனைய காலங்களில் அரசுடன் இணைந்து நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தமது பூரண ஆதரவுகளை நல்க வேண்டும். அரசின் நல்ல சிறந்த விடயங்களை ஆதரிக்க வேண்டும். அதுபோன்று அரசினால் ஏதும் தவறுகள், பிழைகள் முன்னெடுக்கப்படுமிடத்து அதனை சுட்டிக்காட்டி திருத்துவதற்கான ஆலோசனைகளைக் கூற வேண்டும்.

ஐ.தே. க எம்.பி. சஜித் பிரேமதாசவினது நேற்றைய கண்டி விஜயத்தின்போது மல்வத்த மகாநாயக்க சங்கைக்குரிய திப்பிட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்தவேளை தெரிவித்ததாவது:-

இனம், மதம், நிரம், கட்சி போன்ற பேதங்களை மறந்து நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கும் பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன அவசிய தேவைகளை உணர்ந்து தாம் பூரண ஒத்துழைப்புகளை அரசுக்கு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது. அரசு முன்னெடுத்துவரும் அனைத்து விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்காமல் நல்ல விடயங்களுக்கு எதிர்க் கட்சியினர் தமது ஆதரவுகளை காட்டவேண்டும்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால் கட்சியொன்று அவசியமில்லை. வடக்கு, கிழக்கு மக்களையும் நாம் இணைத்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையான பணிகளை கட்சி பேதமின்றி ஒன்றிணைத்து செயற்படுத்த முன்வரவேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மத்திய மாகாண சபை உறுப்பினர் சானக்க அயிலப்பெரும கம்பளை நகர பிதா காமினி ஹெட்டியாராச்சி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி இந்திய துணை தூதரக அலுவல்களை இலகுபடுத்த நடவடிக்கை


கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பணிகளை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘கோபியோ’ (வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக் கான அமைப்பு) பிரதிநிதிகள் குழு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி துணைத் தூதரகத்திற்கு அலுவல்களுக்காகச் செல்லும் பொது மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகுவதாக ‘கோபியோ’ பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து துணைத் தூதரகத்தின் செயல்பாடுகளை வினைதிறன்மிக்கதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். வீசா பெற்றுக்கொள்ள முடியாமலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளை எதிர்நோக்குவோரின் பிரச்சினையை ‘கோபியோ’ அமைப்பின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் காணப்பட்டு ள்ளது.

வீசாவைப் பெறுவதற்கான நியாயமாக காரணம் உள்ளதாக ‘கோபியோ’ பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை


யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை யொன்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துமுகமாகவே இந்தப் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளதாகவும், நிர்மாணப் பணிகள் வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படு மென்றும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

யாழ்ப்பாண கோட்டையில் இருந்த சிறைச்சாலை 1985 ஆம் ஆண்டு சேதமானது. பின்னர் 1996 இல் இரண்டு தனியார் வீடுகளில் தொழிற்பட்டது. தற்போது சொந்தக் காணியில் சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதென்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.யாழ்ப்பா ணத்தில் சுமார் 225 கைதிகள் சிறைவைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியில் இரு அநாமதேய உரக் கப்பல்கள் உடன் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு


கொழும்பு துறைமுகத்துக்கு வெளியில் இரண்டு உரக்கப்பல்கள் அநாமதேயமாக வந்திருப்பது குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கமநல சேவைகள் மற்றும் வனஜீவிகள் அமைச்சர் எஸ். எம். சந்திர சேனவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வத்தளை ஹுனுப்பிட்டியில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட லங்கா உரக்கம்பனியில் புதிதாக அறிமுகப்படுத்திய வீட்டுத்தோட்ட பயிர்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சிறிய உர பக்கற்றுக்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இலங்கை ஒரு விவசாய நாடு. விவசாயத்தின் மூலம் நாட்டில் தன்னிறைவை ஏற்படுத்த முடியும்.

இலங்கையில் பல்லாண்டு காலமாக இரசாயன பசளைகளையே பயன்படுத்தி வருகின்றனர். சேதனப் பசளைகளை பயன்படுத்துவது மிகவும் குறைவு. இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் காணப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி கொம்போஸ் உரங்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

மஹிந்த சிந்தனை 2 ஆம் பாகத்தின் மூலம் இந்த ஆறு ஆண்டு காலத்திற்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு முன் உள்ள சவால்களை முழுமையாக வெற்றி பெறுவதற்கு பல தீய சக்திகள் பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் வெளிப்பாடே கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு உரக் கப்பல்கள் வந்துள்ளன. எமக்கும், அமைச்சுக்கும், இதில் எவ்வித உடன்பாடும் இல்லை. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் நாம் இதற்கு சகல வழிகளிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்நிகழ்வில் அமைச்சர் சந்தைக்கு உர வகைகளை அறிமுகம் செய்து வைத்தார். நகரத்தில் உள்ள மக்கள் சிறு தோட்டங்களை செய்வதற்கும், சிறு பயிர்களை வளர்க்கும் நோக்கில் இந்த உர வகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நகரத்தில் உள்ள மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் மரக்கறிகள், பழங்களை வீட்டின் முற்றத்தில் நடுகை செய்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.

இவர்களுக்கு பெரியளவில் உரத்திற்கு முதலீடு செய்ய முடியாது. இதன் காரணமாகவே நாம் இத்தகைய உரங்களை அறிமுகம் செய்துள்ளோம். 500 கிராம் பைக்கற் சந்தையில் 70 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு வீட்டு முற்றத்தை அலங்கரிப்பதற்காக பூக்களை வளர்க்கும் வீடுகளுக்கும் சிறியளவிலான பைக்கற் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...