13 மே, 2010

ஏழு பேரடங்கிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு: அரசு தெரிவிப்பு

படித்த படிப்பினைகளை கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையை கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தீர்வினை எட்டாவிட்டால் அது நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக அமைந்து விடும் என்பதுடன் சமாதானமும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் முன்னெடுத்து செல்லப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிப்போரின் பெயர்கள் அடங்கிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதுடன் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான விடங்களை அக் குழு விரிவாக ஆராயும்.

பிரச்சினையின் அடிப்படையை கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தீர்வினை எட்டாவிடில் சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிரச்சினையை தோற்றுவித்து விடும். அது நாட்டில் வாழ்கின்ற ஒன்றரை கோடி மக்களுக்கும் பெரும் பிரச்சினையாகவே அமைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து 45 லட்சம் பெறுமதியான மருந்து கொள்வனவு

இந்தியாவிலிருந்து 45 லட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படையினருக்குச் சொந்தமான இ130 ரக விமானத்தினூடாக மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரத்மலானைக்கு இன்று மாலை 4.55 இற்கு முதல் கட்ட மருந்துப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 18 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய மருந்துப்பொருட்கள் முதல்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 3 தடவைகள் இந்தியாவிலிருந்து மருந்துகள் கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை விமானப் படையின் குரூப் கப்டன் ஜனக நாணயக்கார வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக அத்தியாவசிய மருந்துப்பொருட்களில் பாரியளவு தட்டுப்பாடு நிலவியது. இதனைக் கருத்திற்கொண்டு அவசரமாக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

2011 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜூலையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டிற்காக நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜுலை மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை அதனால் மூன்று மாத அரசாங்க செலவீனங்களுக்கான தொகையை ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்துகொண்டார்.

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான முதலாவது வாசிப்பு ஜுலை மாதம் இறுதியில் நிறைவுபெறும் என்பதுடன் முழுமையான வரவுசெலவுத்திட்டம் வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மின் நிலையம் ரூ.2.96 பில். செலவில் நிர்மாணம்



தமிழீழ விடுதலைப்புலிகளினால் தகர்த்தெறியப்பட்ட கிளிநொச்சி மின்சார நிலையத்தை ஜப்பான் நாட்டின் உதவியுடன் 2.96 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஊடாக தேசிய கல்விக்கொள்கையை நிறுவுவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மின்சார நிலையம் விடுதலைப்புலிகளினால் 1983 ஆம் ஆண்டு தகர்த்தெறியப்பட்டுள்ளது. அவற்றை மீள் நிர்மாணம் செய்வதற்கு ஜப்பான் 2.96 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக 1.17 பில்லியன் ரூபாவும் 1.79 பில்லியன் ரூபா இரண்டாவது கட்டமாகவும் பெற்றுக்கொள்ளப்படும். மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு மின்சாரம் 2011 ஆண்டில் தேசிய மின் தொகுதியில் இணைத்துக்கொள்ளப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பருத்தித்துறை இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம்

பருத்தித்துறை இராணுவமுகாமில் நேற்று மாலை குண்டு வெடிப்பும், துப்பாக்கி சத்தங்களும் தொடர்ந்து ஒலித்ததையடுத்து, வடமராட்சி பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி பருத்தித்துறையில் உள்ள 52 ஆவது படையணியின் 4 ஆவது பிரிகேட் தளத்தில்நேற்று மாலை 4.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அரை மணிநேரத்திற்கும் மேலாக துப்பாக்கி வேட்டு சத்தங்களும் கேட்டுள்ளன.

இராணுவத்தினரின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தே இதற்கு காரணம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வெடி விபத்துக்கு மின் ஒழுக்குத்தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இழப்புக்கள் தொடர்பான விபரங்களைப் படைத்தரப்பு வெளியிடவில்லை. நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு அதிகரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐதேக தலைவராக சஜித் பிரேமதாச?

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நியமிக்கப்படக் கூடும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வொன்றை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்றைய ஊடகவியலார் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கட்சியின் அடுத்த தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட முடியுமா என ஊடகவியளார் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"பெரும்பாலும் சஜித் பிரேமதாசவின் பெயரை மட்டுமே இப்போதைக்கு சொல்லக் கூடியதாக உள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அராலியில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் அராலிப் பகுதி வண்ணார்குளத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் அராலி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீ டெலோ உறுப்பினர் எரிகாயங்களுடன் மீட்பு


ஸ்ரீ ரெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பலத்த எரிகாயங்களுடன் மன்னார், தலைமன்னார் வீதியின் 2 ஆம் கட்ட சந்தியில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

. மேற்படி அமைப்பின் உறுப்பினர் சயந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் இவரை உயிருடன் மீட்டுள்ளனர். இவர் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ ரெலோ அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சயந்தன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியத் திரைப்பட விருது விழாவில் அமிதாப்பச்சன் குழுவினர் பங்கேற்பு

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், சாருக்கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபை தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் இயக்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் காரணமக, இந்தத் திரைப்பட விழாவில் மேற்படி இந்திய திரைப்பட நட்சத்திரகள் கலந்துகொள்ளவில்லை என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் தற்பொழுது அவர்கள் மூவரும் இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபையின் உயர் அதிகாரி ஒருவர், எமது இணையத் தளத்திற்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

விக்டோரியா மாநில அரசின் பல்லினக் கலாசாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க

விக்டோரியா மாநிலஅரசினால் இந்த ஆண்டின் (2010)ஆரம்பத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கான டிப்ளோமா புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குமுகமாக முதல் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான வகுப்புகள் மெல்பேர்ண் தஙஐப பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது நடைபெறுகின்றன.

வகுப்பில் கற்றுக் கொண்டிருப்போரை வாழ்த்தும் வைபவம் ஒன்றை அண்மையில் விக்டோரியா மாநில அரசு ஒழுங்கு செய்திருந்தது. விக்டோரியா பாராளுமன்றத்தின் ராணி மண்டபத்தில்(ணசீடீடீடூஙூ ஏஹங்ங்) இவ்வைபவம் நடைபெற்றது.

பல்லினக் கலாசார அமைச்சர் ஜேம்ஸ் மேர்ளினோ, மாணவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்கினார்.

பல்லினக் கலாசார சபைத் தலைவர் ஜோர்ஜ் லிகாகிஸ், விக்டோரியா பல்லினக் கலாசார சபை ஆலோசனைக்குழு உறுப்பினர் என்.ஆர். விக்கிரமசிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குடிவரவுத்திணைக்கள மாநில நிர்வாகத்தினர், தஙஐப பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

விஷம் கொடுத்து என்னைக் கொல்லச் சதி! நளினி புகார்!





ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும், நளினி, உணவில் விஷம் கலந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக புகார் கூறியுள்ளார்.

ஏப்ரல் 28 மற்றும் 30 தேதிகளில், சிறைத்துறை ஐஜிக்கு நளினி இரண்டு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்கள் நளினி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் வெளிவந்துள்ளது.

அந்தக் கடிதங்களில் நளினி கூறியிருப்பதாவது,

கடந்த 21.4.2010 முதல் புதுக்குற்றவாளி தொகுதியிலிருந்து எல்லா விசாரணை சிறைவாசிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர். தற்போது புது குற்றவாளி தொகுதிமுன் 2,3,4,5,6,7,8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் ஆறாம் தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன்.

எனக்கு ஏ வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் புது குற்றவாளி முழுவதும் கடந்த 21.4.2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான யூனிட் வார்டர் முதல் தளத்திற்கு வரவோ அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர காலை - மாலை என்று என்னுடனே சமையலறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27.4.2010 இரவு (செவ்வாய்கிழமை) வருகிறார்.

இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு.

வருங்காலத்திலாவது இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல் தடுக்கவும், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன் என்று நளினி கூறியுள்ளார்.

நளினி வக்கீல் புகழேந்தி கூறியதாவது, நளினியை அவர் சந்தித்த போது, வழக்கமாக காலை 5 முதல் 5.30 மணிக்கு எழுந்து விடுவதுதான் அவர் வழக்கம் என்றும், சமீப காலமாக காலை 8.30 மணிக்கு கூட தன்னால் எழுந்திருக்க முடியாமல் மயக்கமாக இருக்கிறது என்றும், உடல் உபாதைகளுக்காக எவ்வித மருந்துகளும் எடுத்துக் கொள்ளாத நிலையில், திடீரென்று, காலையில் இவ்வாறு மயக்கம் ஏற்படுவது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நளினி தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் கூட்டணி ஆட்சி: புதிய பிரதமர் கேமரூன்



பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு எண். 10, டெüனிங் தெருவில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் பொதுமக்களின் வாழ்த்துகளை ஏற்கிறார் டேவிட் கேமரூன்.
லண்டன், மே 12: பிரிட்டிஷ் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றுக் கொண்டார். துணைப் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக் இருப்பார். பிரிட்டனில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் கார்டன் பிரெüன், அரண்மனைக்குச் சென்று ராணியிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு இரண்டாம் எலிசபெத் ராணி, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கேமரூனுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். கட்சிக்கு ஆதரவு தரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் மேலும் 4 உறுப்பினர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் வில்லியம் ஹாக், வெளியுறவு அமைச்சராகவும், ஜார்ஜ் ஆஸ்பர்ன் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பாதுகாப்பு அமைச்சர் பதவி லியாம் ஃபாக்ஸிற்கு வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சராக ஆண்ட்ரூ லான்ஸ்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

200 ஆண்டுகளில் மிக இளம் வயதில் பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்கும் இரண்டாமவர் என்ற பெருமையும் கேமரூனைச் சாரும். இதற்கு முன்பு லார்ட் லிவர்பூல் தனது 42-வது வயதில் பிரிட்டிஷ் பிரதமரானார்.

கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த 5 நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியது. பெரும்பான்மையைப் பெறுவதற்காக தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியுடன் பேச்சு நடத்தின.

இதையடுத்து 13 ஆண்டுகளாக பதவியில் இருந்த தொழிலாளர் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போதுதான் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது உலகப் போரை முன்னிட்டு கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

நாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்கு மே 6-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையைப் பிடிக்கவில்லை. கன்சர்வேடிவ் கட்சி 306 இடங்களையும், தொழிலாளர் கட்சி 258 இடங்களையும், லிபரல் டெமாக்ரடிக் 57 இடங்களையும் பிடித்தன. தற்போது லிபரல் டெமாக்ரடிக் கூட்டணியுடன் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியமைத்துள்ளது.

கேமரூன் வாழ்க்கை வரலாறு: பங்குச் சந்தை வர்த்தகர் இயான் டொனால்ட் கேமரூன், மேரி ஃபிளெயுர் மவுண்ட் தம்பதியருக்கு 1966-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி மகனாகப் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவரது முன்னோர்கள் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நான்காம் மன்னர் வில்லியம் (1765-1837), ராணி விக்டோரியாவின் மாமா இவரது முன்னோர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவம்,அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 1988-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை கன்சர்வேடிவ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார்.

அரசியல் மாற்றம்: பிரதமராக தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் முதலில் நிகழ்த்திய உரையில், பிரிட்டனின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதுதான் தனது முதல் பணி என்று கேமரூன் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன்...: பிரிட்டன்-இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாக புதிய பிரதமர் கேமரூன் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற போது அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு பிரிட்டன் ஆதரவு தெரிவிக்கும் என்று கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுக்கப் போவதாக கேமரூன் குறிப்பிட்டார். அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவ முயற்சிகள் எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கட்சித் தலைவர் பதவி: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த கார்டன் பிரெüன், கட்சித் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தாற்காலிகத் தலைவராக ஹரீயெட் ஹார்மன் பொறுப்பேற்றார்.

2007-ம் ஆண்டு டோனி பிளேரைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றார் கார்டன் பிரெüன். பொதுமக்களுக்குப் பணியாற்றுவது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக, அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...