20 ஆகஸ்ட், 2010

மேர்வின் சில்வா மீதான குற்றச்சாட்டு : இன்று ஆய்வு

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழு இன்று தனது முதலாவது அமர்வை மேற்கொள்ளவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாக, குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம் சஹீட் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கென, மூவரடங்கிய குழுவொன்றை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைத்தது.

அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயரத்ன வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக மகிந்த சமரவீரவும், உறுப்பினராக சட்டத்தரணி எச்.எம் சஹீடும் செயற்படுகின்றனர்.

சமுர்த்தி உத்தியோகஸ்தரை மரத்தில் கட்டியது தொடர்பிலான குற்றச்சாட்டே முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மீது சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவுமில்லை என்பதால் பொதுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

மூதூரில் 17 தொண்டர்கள் கொலை குறித்த விசாரணை இன்னுமில்லை:பிரான்ஸ்


ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் குச்னர் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஏ.சீ.எப். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் மூதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். இவர்களைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து இதுவரை விசாரணை எதுவும் நடத்தப்படவுமில்லை.

இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதெனத் தெரிவித்த குச்னர், இது குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் தாம் வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை விடயத்தில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை:கெஹெலிய


ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை விடயத்தில் ஒன்றியம் இம்முறை எமக்கு விதித்த நிபந்தனைகள் அந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புபடாதவையாக இருக்கின்றன.

எனவே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வரிச் சலுகை ரத்துச் செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய தேவையான முன்னேற்பாடுகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தொழிலாளர் உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் அவர்களுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை திட்டத்துடன் சரத் பொன்சேகா எம்.பி. விவகாரம் மற்றும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்? என்று அவர் கேள்வி யெழுப்பினார். கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது :

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராய தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்பதனை தெரிவிக்கவேண்டும்.

அதாவது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை கடந்த சில வருடங்களாக நாங்கள் அனுபவித்தோம். அப்போது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த ஒழுங்கு முறைமைகளுக்கு ஏற்ப பதில்களை வழங்கினோம்.

ஆனால் தற்போது ஒழுங்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பான விடயத்தில் தொழிலாளர்கள் உரிமை குறித்து பேசலாம். அதற்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

எனினும் அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தையும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் எவ்வாறு முன் வைக்கலாம்? அதற்கும் தொழிலாளர் சட்டங்களும் என்ன தொடர்பு உள்ளது?

எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திட்டத்துக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். துறைசார் முக்கியஸ்தர்களுடனும் உற்பத்தியாளர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளோம். மேலும அந்நிய செலாவணி விடயத்திலும் சில ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். கேள்வி: அரசியலமைப்பு திருத்த விவகாரங்கள் எந்த மட்டத்தில் உள்ளன?

பதில்: அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்கமளிக்கவுள்ளோம்.

கேள்வி: காலியில் ஆர்ப்பாட்டம் செய்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. க்கள் கைது செய்யப்பட்டனரே?

பதில்: அவர்கள் பொலிஸாரை தாக்கச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதே?

கேள்வி:ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க சென்றபோதுதான் குறித்த எம்.பி. க்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்: எனினும் மறு பக்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்துவது ஜே.வி.பி. க்கு பழக்கப்பட்ட விடயதமல்லவா?

கேள்வி:: எனினும் இவ்வாறான சம்பவங்கள் சரியானவையா?

பதில்:முறைப்பாடுகள் உள்ளனவே? மேலும் நாம் சட்டத்துக்கு உட்பட்டு அல்லவா? செயற்படவேண்டும்.? ஐந்து நட்சத்திர தரத்தில் ஜனநாயகம் உள்ள நாடுகளிலும் இவ்வாறு நடைபெறுகின்றது. ஆனால் அதற்கு பின்னர் என்ன நடக்கின்றது என்பதே முக்கியமான விடயமாகும். அதன் பின்னர் அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும்.

கேள்வி: அப்படியானால் முறைப்பாடு செய்யப்படாமல் மேர்வின் சில்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியா?

பதில்: அவர் மீது கட்சியே நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரரணை நடைபெறுகின்றது.

கேள்வி: குற்றம் நிரூபிக்கப்படாமல் பதவியை எடுக்கலாமா?

பதில்:அது கட்சியின் தீர்மானம். தற்போது ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

கேள்வி: அப்படியானால் பம்பலப்பிட்டியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது எவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது? முறைப்பாடு செய்யப்படவில்லையே?

பதில்: சட்டத்தில் சிவில் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் சட்டக் கோவை என இரண்டு விடயங்கள் உள்ளன. சட்டம் குறித்து நாம் தர்க்கம் செய்யலாம். ஆனால் அதனைதான் நடைமுறைப்படுத்தவேண்டும்.

தற்போது ஊடகத்துறை சுதந்திரம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் வார இறுதி பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். ஜனாதிபதி தொடக்கம் அனைவர் தொட்டர்பிலும் பொய்யான தகவல்களையும் எழுதுகின்றனர். இது சரியானதா?
மேலும் இங்கே தொடர்க...

நல்லவிடயம் நடக்கும் என்று நம்புகின்றோம்:நீல்புனே

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எவ்வாறு அமையும் என்று தற்போது கூற முடியாது. காரணம் தற்போதுதான் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்னன.

எனினும் நல்ல விடயம் நடக்கும் என்று நம்புகின்றோம். இவ்வாறு நடைபெறுவது சிறந்ததாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புனே தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அரசாங்கம் கணிசமான வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுடன் நான் உரையாடியபோது அவர்கள் தமது வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும் என்றும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும் என்றும் விரும்புவதை அறிய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புனே மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது

சிறந்த சந்தர்ப்பம்

இடம்பெயர்ந்த மக்களில் 90 வீதமானோர் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். சிறந்த வகையிலான சமாதானத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கு தற்போது அரிய வாய்ப்பை நாடு பெற்றுள்ளது. முன்செல்லவேண்டியுள்ளது. சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சிறந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பல தடவைகள் மீள்குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளேன். கடந்த மாதமும் அப்பகுதிளுக்கு சென்றேன். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அனைவரும் சிறந்த முறையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அதிகளவான மக்களை மீள்குடியேற்றுவது என்பது இலகுவான விடயமல்ல.“ நிலக்கண்ணிவெடிகளை அகற்றவேண்டிய தேவையும் உள்ளது. எனினும் சிறப்பான வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடியேறியவுடன் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை பெற்றுக்கொடுப்பது சில நாடுகளில் தான் இடம்பெற்றுள்ளது. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அதிகளவான தேவைகள் உள்ளன.

உரையாடினேன்

அதிகமான இடம்பெயர்ந்த மக்களுடன் நான் உரையாடியுள்ளேன். அவர்கள் தமது வீடுகள் மீள அமைக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர். வாழ்க்கை தரம் முன்னேறவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். எவ்வாறெனினும் குறிப்பிட்டுக்கூறக்கூடிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூற முடியும்.

இலங்கையுடன் ஒத்துழைப்பு

கடந்த 50வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது. எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அதிகமாகவே செயற்படுகின்றோம். எமக்கு சிறிய வகிபாகமே இங்கு இருந்தாலும் விசேட மற்றும் குறிப்பிடக்கூடிய நிலைமைகளில் எங்களின் செற்பாடும் வகிபாகமும் அதிகரிக்கும்.

என்னுடன் தொடர்புபட்டதல்ல

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு நியமித்துள்ள ஆலோசனை சபையானது ஐ.நா.வின் தலைமை மற்றும் உயர்மட்ட செயற்பாடாகும். அது வெளிக்கள வேலைத்திட்டங்களுடன் தொடர்புபட்டதல்ல. எனவே நான் அவ்விடயம் குறித்து ஒன்றும் கூற முடியாது. தற்போது பொருளாதார ரீதியில் சிறந்த இடத்துக்கு செல்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் உள்ளது. கடந்த காலங்களில் யுத்தம் நிலவியபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தில் காணப்பட்டது. தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. நிலைமைகள் மாறியுள்ளன. எனவே சிறந்த இடத்துக்கு செல்ல முடியும்.

நட்ட ஈடுகள்

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கூறுவதற்கு இது ஆரம்பம் அதிகம் என்று கருதுகின்றோம். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் தற்போது ஆரம்பித்துள்ளன. அந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகளை வழங்குவது தொடர்பிலும் ஆராய்வதாக தெரிகின்றது. இது சிறந்த விடயமாகும். எனினும் தற்போது ஆரம்பமாகியுள்ளது இறுதி முடிவை எம்மால் எதிர்வு கூற முடியாது. தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது இறுதி வரை எதிர்வு கூற முடியாதிருந்தது. இலங்கையின் ஆணைக்குழு சிறப்பான முடிவை தரும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நாவுடன் இணைந்து பணியாறுவதற்கு தயார்-அமைச்சர் பசில்


இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்கும் செயற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் என்பனவற்றில் ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன பாரிய பங்களிப்பை வழங்கின. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையுடன் வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவிகள் கிடைத்திருக்காவிடின் வெற்றி பெற்றிருக்க முடியாது. வேறுபாடுகள் காணப்பட்டாலும் அனைவரினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச மனித நேய தினம் நேற்று நினைகூரப்பட்டதை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஐ.நா.வின் இலங்கை அலுவகலத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன எமக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

முக்கியமாக எமது நாடு சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டபோதும் மேலும் அதிகளவான மக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தபோதும் இந்த நிறுவனங்கள் எமக்கு உதவி புரிந்துள்ளன. எனவே இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் சார்பில் முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித நேய நிறுவனங்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

அதாவது ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைத்திருக்காவிடின் நாங்கள் இன்று பெற்றுக்கொண்டுள்ள சாதனையை அடைந்திருக்க முடியாது.

இடம்பெயர்ந்தோர் விடயத்தில் நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு அதிக மக்களை மீள்குடியேற்றியுள்ளோம். இன்னும் செய்வதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன. முக்கியமாக பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவேண்டியவர்களாகவுள்ளனர். இங்கு அமர்ந்திருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் 19 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ளார். எனவே இது தொடர்பில் நாங்கள் செய்யவேண்டிய திட்டங்கள் உள்ளன. இது இலகுவான விடயமல்ல. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கின்றேன்.

ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றுடன் அரசாங்கத்துக்கு சில வேறுபாடுகள் இருந்தன. எனினும் நாம் எங்கு பயணிக்கவேண்டும் என்ற இலக்கு தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு காணப்பட்டது. அனைவரும் பாதிக்கப்பட்ட மற்றும் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்ற இலக்கையே கொண்டிருந்தனர். அது தொடர்பில் தெளிவு இருந்தது.

ஆனால் அதனை நாங்கள் எவ்வாறு செய்யப்போகின்றோம் என்பதிலேயே வேறுபாடுகள் காணப்பட்டன. கடந்த காலங்களில் பல சவால்கள் கஷ்டங்கள் என்பனவற்றுக்கு நாம் முகம்கொடுத்தோம். அதாவது மெனிக் பாம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உறுதியான வீடுகளை அமைத்தபோது பல விமர்சனங்களை நாங்கள் எதர்கொண்டோம். அதாவது அந்த மக்களை நீண்ட காலத்துக்கு மீள்குடியேற்றாமல் இருப்பதற்கு அரசாங்கம் கருதுவதாக பொய்யான விமர்சனத்தை முன்வைத்துடன் குப்பைத் தொட்டி ஒன்றைக் கூட உதவியாக வழங்காத சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும் தற்போது அனைவருக்கும் உண்மைகள் புரிந்திருக்கும்.

மனிதநேய செயற்பாடுகளின்போது நாங்கள் பலவற்றை இழந்தோம். உயிர்களை இழந்தோம். அண்மையில்க்கூட நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட சமயத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் எங்களுக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அதனை இந்த சந்தர்ப்பத்தில் வருத்தத்துடன் நினைவுகூருகின்றேன்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையானது செயற்பாட்டு உறுப்பினராக அங்கம் வகிக்கின்றது. எனவே உங்களுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். வேறுபாடுகள் காணப்பட்டாலும் எமது இலக்கை அடைந்து கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம். அனைவரும் சகல வசதிகளுடனும் சௌகரியத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே எமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பு சிறைத்தண்டனையாகவும் இருக்கலாம்:சரத் பொன்சேகா

பதவிகள், பதக்கங்கள் மற்றும் ஒய்வூ தியம் ஆகியவை என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தையிட்டு நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை.

அடுத்த இராணுவ நீதிமன்றத்தில் எனக்கு எதிரான தீர்ப்பானது சில வேளைகளில் சிறைத்தண்டனையாகக்கூட அமையலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா எம்.பி.நேற்று தெரிவித்தார்.

எனக்கெதிராக அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்ற மானது போலியானதும் பித்தலாட்டமானதுமாகும் என்றும் அதன் தீர்ப்புக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் முன்னரே கூறியிருத்தேன்.

அதனையே இப்போதும் கூறிக்கொள்கிறேன். இந்த தீர்ப்பு தொடர்பில் நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை நிதானமாக ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சரத் பொன்சேகா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

இராணுவ நீதிமன்றத்தினால் எனக்கெதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது எனக்கு மட்டுமே பொதுவானதல்ல.

இவ்வாறான அநீதி நாட்டு மக்களுக்கும் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கிறேன்.

எனது சேவையின் போது நான் பட்டம், பதவிகளையோ அல்லது பதக்கங்களையோ எதிர்ப்பார்த்து நான் புலிகளையும் அவர்களது பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்ட செயற்பட்டதில்லை.

மேலும் எனக்கு கிடைக்கப் பெற்றுவந்த 50 ஆயிரம் ரூபா ஓய்வூதியத்தை அநாதைகளுக்காக ஒதுக்குவதற்கு தீர்மானித்திருந்தேன்.

அது இப்போது கொள்ளையிடப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விடயம்.ஆனாலும் பதவிகள் பட்டங்கள் மற்றும் பதக்கங்களைப் பறித்தமையையிட்டு நான் கவலையடையப்போவதில்லை.

எந்த நாட்டிலுமே நடைபெறாத ஒன்றுதான் இங்கு நடந்துள்ளது. இந்நாட்டில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை.

இராணுவ சம்பிரதாயங்கள் இங்கு முற்று முழு தாக உடைத்தெறியப்பட்டுள்ளன.எனது அர்ப்பணிப்புடனான சேவை குறித்து நாட்டு மக்கள் நன்கறிவர். இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இல்லாவிட்டால் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு சிலரே இங்கு இருக்கின்றனர்.

நான் எம்.பி பதவி இழக்கப்பட்டாலும் கூட நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய தூரநோக்கு கொண்ட பாரிய சேவைகள் உள்ளன. அந்த இலக்கிலேயே செயற்பட்டு வருகின்றேன்.

மேலும் எனக்கிழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென தற்கால சட்ட வரைவுகளை ஆராய்ந்து வருகின்றோம்.

யுத்தம் உக்கிரமடைந்த காலம் பகுதியுட்பட சுமார் நான்கு வருட காலங்கள் ஜனாதிபதியுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனும் நெருங்கிப் பழகியுள்ளேன். இந்நிலையில் எனக்கெதிரான அடுத்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பானது ஒருவேளை சிறைத் தண்டனையாகக் கூட இருக்கலாம். அவ்வாறு அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் என் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பு குறித்து முறையிடுவோம்: ஐ.தே.க

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இலங்கை இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவர்த்தைகளை நடத்தி வருகின்றார் என்று கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தீர்ப்பை எதிர்த்து ஜெனீவாவிலுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவத் தீர்ப்பு நியாயமற்றது. இதனை ஐ.தே. கட்சி கடுமையாகக் கண்டிக்கின்றது. இத்தீர்ப்பில் எமக்கு திருப்தியில்லை. இராணுவ நீதிமன்றத்தால் இலங்கையின் சட்ட வரையறைக்கு சமாந்தரமான எதுவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

இத்தீர்ப்பினால் சரத் பொன்சேகாவின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது வாழ்வாதாரமான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பிழையான செயற்பாடாகும். ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் அக்குடும்பத்தினரது வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுள்ளது.

எனவே இத்தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஜே.வி.பி. கட்சி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இது தொடர்பாக எமது தலைவர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். அதன் பின்னர் கூட்டாக ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம். சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்குவதற்காகவே இராணுவ நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.

இதன் விசாரணைகள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை அனைத்தும் இரகசியமாகவே உள்ளது. ஓய்வு பெற்ற பின்னர் தமக்குத் தேவையான தொழிலை எவராலும் தேர்ந்தெடுக்க முடியும். இதற்கு தடை விதிக்க முடியாது. இராணுவ நீதிமன்றத்தில் சாட்சியமளித்த எமது கட்சி எம்.பி. யான லக்ஷ்மன் செனவிரத்ன, ஓய்வு பெற்ற பின்பு அரசியலில் ஈடுபட தயாரென சரத் பொன்சேகா கூறியதாகவே சாட்சியமளித்துள்ளார். இதனை அவர் எமது பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

இன்று அரச அதிகாரிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தேர்தல் காலங்களில் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் பகிரங்கமாக மேடைகளில் உரையாற்றினார்கள். அப்படியென்றால் இதுவும் பிழையான செயற்பாடு அல்லவா. ஏன் அப்படியென்றால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றார்
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டம் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஸ்கந்தபுரம், காந்திநகர், கோணாவில், அக்கரையான்குளம், ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே இந்த மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ளன.

அதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி உருத்திரபுரம் வடக்கு, கிழக்கு, மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சிவநகர், ஜெயந்தி நகர், கனகபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி திருநகர் வடக்கு, திருநகர் தெற்கு, கணேசபுரம், பெரிய பரந்தன், அம்பாள் நகர் ஆகிய பகுதி களிலும் மீள்குடியேற்றம் நடை பெறவுள்ளன.

இவ்வாறு மீள் குடியேற்றப்பட வுள்ளவர்கள் அனைவரும் நலன் புரி முகாமில் இல்லாது தங்களினது உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் வீடுகளில் தங்கியிருப்பவர்களே இந்த மீள்குடியேற்ற அமர்வில் இடம் பெறவுள்ளனர் எனவும் தெரி விக்கப்படுகின்றன.

கடந்த 16 ஆம் திகதி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருவையாறு மேற்கு, பாரதிபுரம், மனையாளபுரம், பொன்னகர், ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய இடங்களில் மீள்குடியேற்றம் இடம் பெற்றிருந்தன.

கிளிநொச்சியில் உள்ள மத்திய கல்லூரியே மீள் குடியமர்வுக்கான இடைத் தங்கல் முகாமாகவும் மீளக் குடியேற்றப்படுபவர்களினது விபரங் களை பதிவு செய்யும் அலுவலக மாகவும் தற்பொழுது இயங்கி வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - தமிழக கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை: இலங்கை பிரதிநிதிகள் முன் 26 மீனவர்கள் விடுவிப்பு

தமிழ்நாடு, இராமேஸ்வரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து வள்ளங்களும் மீனவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற கடற்றொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையிலிருந்து சென்ற குழுவினர் நேற்று முன்தினம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.

நீர்கொழும்பு, கல்பிட்டி, திருமலை, மதுரன்குளி போன்ற பகுதி மீனவர்கள் மூன்று மாதத்துக்கு முன்னர் தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் தடுத்து வைக்கப்பட்டி ருந்தனர். திருமலையைச் சேர்ந்த கபில புதா, தனுஷ்க புதா, ரன்திலினி துவ என்ற வள்ளங்களும், விதஷேன் புதா என்ற நீர்கொழும்பு வள்ளமும், சந்துனி துவ என்ற மாத்தறை வள்ளமும் விடுவிக்கப்பட்டது. இவர்கள் 26 பேரும் தமது வள்ளங்கள் மூலமே இலங்கைக்கு வருகை தந்தனர்.

இலங்கை மீனவர் சங்க குழுவினர் நேற்று நாகபட்டினம் இழுவைப் படகுகள் துறைமுகத்தில் இழுவைப் படகு உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை மீனவர் சங்க குழுவினர் பட்டுக் கோட்டையருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் தமிழக மீனவர்களை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யாழ்ப்பாண மீனவர்கள் சங்கத் தலைவர் சூரிய குமார்.

இலங்கைக் கடல் பகுதியில் மீன்கள் அதிகம் இருப்பதாலேயே இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிக்கு வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடும் அதேநேரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கும் நேரிடுகிறது.

எனவே இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை தடுக்க இன்று தொடங்க உள்ள சென்னை மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

கே. பி. தொடர்பான பொன்சேகாவின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பு அமைச்சர் கெஹலிய





கே. பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. எமது உளவுப் பிரிவு அதிகாரிகள் இருவரே கைது செய்து அழைத்து வந்தனரென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அவர் கைதாகும் தினத்திலிருந்து சுமார் மூன்று மாத காலத்துக்கு முன்னர் இருந்தே ஆரம்பமானது.

குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக எனக்கு சகல விபரங்களும் தெரியும். ஆனால் அதை நான் இங்கு குறிப்பிட விரும்ப வில்லை. எனினும் அவர் தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களை நான் முற்றாக மறுக்கிறேன்; அவை உண்மையல்ல என்றார்.

குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரும் வரை பாதுகாப்பு செயலாளருக்கும் தெரியாது. இது முற்றிலும் வெளிநாட்டு உளவுத்துறையினரின் முயற்சிதான் என சரத் பொன்சேகா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கே.பி. இப்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரிடம் கேட்ட போது,

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவ பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தினமொன்றுக்கு 40,000 பீப்பாய் மசகு எண்ணெய் இறக்குமதி இலங்கை - ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலம் நீடிப்பு





ஈரானிலிருந்து தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இலங்கை - ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஈரான் தேசிய எண்ணெய்க் கம்பனி (சஐஞஇ) யுடன் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை (வருடாந்தம் 2 மில்லியன் மெற்றித் தொன்) கொள்வனவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

சுமார் ஒரு மாத காலம் வட்டியில்லா கடன் அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகை 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் ஈரான் விஜயத்தின் பயனாக 4 மாத வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு எண்ணெ ய்யை வழங்க ஈரானிய கம்பனி இணக்கம் தெரிவித்தது.

இவ்வாறு ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் ஒரு வருட காலத்துக்கு தற்போது பெற்றுக் கொள்ளும் அதே அடிப்படையில் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சவூதி அரேபியாவிலிருந்தும் 1,35,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை கொள்முதல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 30 நாட்கள் வட்டியில்லா கடன் அடிப்படையில் சவூதி எண்ணெய்க் கம்பனியிலிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.

ஈரானிய தேசிய எண்ணெய்க் கம்பனியுடனான ஒப்பந்தத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செப்டம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது.

பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

நெல் கொள்வனவுக்கு ரூ.3.5 பில்.ஒதுக்கீடு 13 இலட்சம் மெ.தொ. நெல் அறுவடை எதிர்பார்ப்பு






நெல் கொள்வனவுக்கென அரசாங்கம் 3.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்தியாவின் உதவியுடன்
தற்காலிக களஞ்சியங்கள்
அமைக்கத் தீர்மானம்

இவ்வருடம் 13 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை அறுவடை செய்ய முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்திய தொழில் நுட்பத்தைப் பெற்று தற்காலிக களஞ்சிய சாலைகளை அமைக்கவும், நெல்கொள்வனவை தொடர்ந்தும் மேற்கொள்ளவும் தீர்மானித்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது நெல் கொள்வனவுக்கென நாட்டில் 46 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் இந்நிலையங்களை மேலும் ஆரம்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான அனுர குமார திஸாநாயக்க நெல் கொள்வனவு தொடர்பாக எழுப்பிய சிறப்புரிமைக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

நெல் கொள்வனவுக்கென நாம் 46 மத்திய நிலையங்களை ஏற்கனவே அமைத்திருக் கின்றோம். இந்நிலையங்கள் பொலன்னறு வை மாவட்டத்தில் 8, வடமேல் மாகாணத்தில் -10, கிழக்கு மாகாணத்தில் -10, அநுராதபுரம் பிராந்தியத்தில் -9, தெற்கில்- 9 என்றபடி இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையங்கள் ஊடாக இற்றைவரையும் 77 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவ் வருடம் 13 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சலை எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை களஞ்சியப் படுத்தக்கூடிய களஞ்சிய வசதியே எம்மிடம் உள்ளது. அதனால், உலக உணவு திட்டத்தின் களஞ்சியசாலையைப் பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றுள்ளோம். அவற்றில் 7 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைத் தான் களஞ்சியப்படுத்த முடியும்.
மேலும் இங்கே தொடர்க...