7 அக்டோபர், 2010

அமைச்சர் பீரிஸுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளத் தவறியமை, சீனாவுக்கு சென்றிருந்த போது, குறித்த காலத்திற்கு மேல் அங்கு தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 6.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழப்பதற்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் நடவடிக்கைகளே காரணம் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைச்சர் பீரிஸ் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டுக்கு ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு பொன்சேகாவை விடுவிக்கவும்:கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் இந்நாட்டுக்கு ஆற்றப்பட்டுள்ள பாரிய சேவையைக் கருத்திற் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சம்மேளனத்தின் தலைவரும் பேராயருமான அதிவண. கலாநிதி மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பொதுச் செயலாளரும் அனுராதபுரம் மறை மாவட்டத்தின் ஆயருமான அதிவண. நோபர்ட் அந்தாதி ஆண்டகை ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் இந் நாட்டுக்காக ஆற்றிய விசேட தன்மைவாய்ந்த சேவை மற்றும் அதனால் அவருக்கு உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள வேதனை ஆகிய நிலைமைகளை அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே நாட்டுக்காக ஆற்றிய அவரது சேவையைக் கவனத்தில் கொண்டு அவரை சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி விரும்பினால் நிபந்தனையின்றி பொன்சேகாவை விடுவிப்பதற்கு முடியும்:ரணில்

ஜனாதிபதி விரும்பினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய முடியும். இதற்கான அதிகாரம் இராணுவ சட்டத்தில் 65ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னிப்பு கோரியதன் பின்னர் பரிசீலனை செய்வது என்பது காலையில் பல் துலக்கியதன் பின்னர் செய்ய வேண்டிய கருமங்களுக்காக ஆலோசனை பெறுவது போன்றதாகும். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பது எதிர்க்கட்சித் தலைவரான எனது கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்..

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், .

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தேன். மேற்படி கடிதத்தை நேற்று பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு வாசித்தும் காட்டினேன். அண்மையில் ஜனாதிபதி பொலனறுவையில் வைத்து சரத் பொன்சேகா முறைப்படி மன்னிப்புக் கேட்டால் அவரது விடுதலை தொடர்பாக ஆலோசிப்பதாக கூறியிருந்தார்..

சரத் பொன்சேகாவிற்கு இராணுவச் சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே சட்டத்தில் 65ஆவது சரத்தில் இராணுவச் சட்டத்தினால் தண்டனைப் பெற்ற ஒருவரை குறிப்பிட்ட அளவிலோ அல்லது முழு அளவிலோ அத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி யாரிடமும் ஆலோசனைப் பெற தேவையில்லை. நினைத்தால் செய்யக்கூடிய அதிகாரம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது..

சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் ஐ.தே.க. எல்லை மீறி செயற்படுவதாக அரச தரப்பினர் கூறி வருகின்றனர். பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் செயற்பட வேண்டியது எனது கடமையாகும். 1974ஆம் ஆண்டு அமெரிக்காவில் அப்போதைய ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தலின் போது மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பின்னர் தெரிவான ஜனாதிபதி கெரல் ஆர். போர்ட் தனது அதிகாரங்களை பயன்படுத்தி ரிச்சர்ட் நிக்சனை தண்டனையிலிருந்து விடுதலை செய்தார்..

எனவே, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் யார் வேண்டுமென்றாலும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விட முடியும். அமைச்சர் டிலான் பெரேரா போன்றவர்களுக்கு ஞாபக மறதி நோய் உள்ளது. கடந்த காலங்களில் ஐ.தே.க. பாராளுமன்றத்தில் பல்வேறு குற்றங்கள் காரணமாக சிறை வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்களின் விடுதலை தொடர்பில் பேசினோம். எனவே, சரத் பொன்சேகாவிற்காக மாத்திரம் ஐ.தே.க. குரல் கொடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய இரண்டு ஐ.தே.க. எம்.பி.க்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இடைக்காலத் தடை

18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐ.தே.க. வின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை கட்சியிலிருந்து நீக்குவதை தடுக்கக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான உபேஷா சுவர்ணமாலி, காலி மாவட்ட எம்.பி.யான மனுஷ நாணயக்கார ஆகியோரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தம்மை விலக்குவது மக்கள் தெரிவையும் தமக்கு மக்கள் அளித்த ஆணையையும் மறுதலிப்பதாக அமையும் என்று அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் கட்டாயத்தின் பேரில் திகதியிடாத கடிதத்தில் கையொப்பமிட்டதாகவும், இதனால் இக்கடிதங்கள் சட்டவலுவற்றவை என்றும் இவர்கள் தமது வழக்கில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்ட நீதிவான் டபிள்யூ. ஆர்.எம். வதுகல வழக்கு விசாரணை முடியும் வரை மனுதாரர்களை ஐ.தே.க.வில் இருந்து நீக்குவதற்கு தடை விதித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வட மாகாணத்தில் ரூ.190 கோடியில் சுகாதார திட்டம் ஐந்து மாவட்டங்களிலும் 1250 சுகாதார உதவியாளர்களை நியமிக்கவும் தீர்மானம்


வட மாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 19 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சேவையாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகாதார உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எய்ட்ஸ், காசம், மலேரியா ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் உலகளாவிய நிதியம் (மிபிதிஹிணி) என்ற திட்டத்தின் ஊடாக இதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதி ஐந்து முக்கிய திட்டங்களில் செலவு செய்யப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வி. ரவீந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட பகுதியிலுள்ள 25 வைத்தியசாலை கள் புதிதாக நிர்மாணிக்கப்பட வுள்ளதுடன், ஆளணி பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“வரும் முன் காப்போம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்களுடன் இணைந்து சேவை யாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகா தார உதவியாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 570 பேருக்கு நவம்பர் மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது அம்சத்தின் கீழ் 175 மருத்துவ மாதுகளும், 50 பொது சுகாதார அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்குத் தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது அம்சத்தின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்க புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு, ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 8 கெப் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.

மூன்றாவது அம்சத்தின் கீழ் 56 மருத்துவ பரிசோதனை நிலையங்களை அமைப்பதற்கு அல்லது விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. சுமார் 85 மருத்துவ ஆய்வுக் கூட உதவியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

நான்காவது அம்சத்தின் கீழ் உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

வட மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன் நிதி ஒதுக்கீடுளையும் செய்துள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடுமுழுவதும் 2066 கிராமசேவகர் வெற்றிடங்கள் போட்டிப் பரீட்சை மூலம் நிரப்ப முடிவுநாட்டில் 2066 கிராம உத்தியோக த்தர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டபிள்யூ. ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம். பி. தயாசிறி ஜயசேகரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்: நாடெங்கிலும் 2066 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக இப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப் படும். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியையும், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியையும் பெற்றிருப்பவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் தகுதி பெற்றவர்களாவர்.
மேலும் இங்கே தொடர்க...

உலக சந்தை விலைகளைவிட குறைந்த விலைக்கு எரிபொருள் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை


உலக சந்தை விலைகளை விட குறைந்த விலைக்கு எரிபொருள் பெறுவது தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். இந்த முயற்சி பலனளித்தால் பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுமென பெட்ரோலிய தொழில்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார்.

வாய்மூல விடைக்காக ஐ. தே. க. எம். பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு, கிழக்கில் உள்ள எரிபொருள் நிலையங்கள் குறித்து ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 156 பெற்றோல் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் 147ம் இந்திய எண்ணெய் கம்பனியின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 9ம் அடங்கும்.

இந்த வருட ஜனவரி மாதத்தின் பின் வடக்கில் துணுக்காய் பகுதியில் ஒன்றும் கிழக்கில் கிண்ணியாவிலும், பொத்துவிலிலும் தலா ஒவ்வொரு நிரப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

டக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிரப்பு நிலையங்களினூடாக விற்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரித்துள்ளது.

2008 வரவு செலவுத் திட்ட யோசனையின்படி மின்சார சபைக்கு 25 ரூபா படி மசகு எண்ணெய் ஜனவரி மாதம் முதல் நாம் கொள்வனவு செய்யும் அதே விலைக்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு மசகு எண்ணெய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு இந்திய எண்ணெய்க் கம்பனி அனுமதி கேட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிப்போருக்கு தொடர்ந்து வீடமைப்பு நிதி

இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழும் வட பகுதி மக்கள் மீளக் குடியேறிய போதிலும் அவர்களுக்கு உலக வங்கியினூடாக வழங்கப்படும் வீடமைப்புக்கான நிதி உதவி தொடர்ந்தும் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கூறினார். இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வாய்மூல விடைக்காக நூர்தீன் மசூர் எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள மக்களுக்காக உலக வங்கி வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 4460 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் 2218 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 778 வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. அதில் 314 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

புதிதாக வீடு கட்ட 3,25,000 ரூபாவும் வீடுகளை திருத்தியமைக்க ஒரு இலட்சமும் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது.

2006 ஆய்வுகளின்படி நலன்புரி நிலையங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக 50 ஆயிரம் ரூபாவும் 2ஆம் கட்டமாக 60 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதன் போது குறுக்கீடு செய்த நூர்தீன் மசூர் எம். பி. புத்தளத்தில் உள்ள வடபகுதி மக்கள் மன்னாரில் மீள்குடியேறி வருவதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து வீட்டு உதவி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வடபகுதி மக்கள் மீள்குடியேறிய போதும் அவர்களுக்கு வீட்டுக்கடன் தொடர்ந்து வழங்கப்படுமென அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சென்னையில் பாரிய கொள்ளைகள்: கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு இலங்கைவாசி குணராஜா தேடப்படுகிறார்
சென்னை புறநகர் பகுதிகளில் 54 வழக்குகளில் திருட்டுப் போன 237 பவுண் தங்க நகைகள், 8 டாட்டா சுமோ கார்கள் மற்றும் ரூ. 39.5 இலட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்புள்ள பொருட்களை பொலிசார் மீட்டனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஜயசிங்கம் உள்ளிட்ட 16 பேரை புறநகர் பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக சென்னை புறநகர் பொலிஸ் உயரதிகாரி ஆர். ஜாங்கிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அண்மையில் சேலையூர், மடிப்பாக்கம், தாம்பரம், பட்டாபிராம், மதுரவாயல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு சென்னை, புறநகர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, வாகன திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்றன.

இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த பொலிஸ் தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு 54 வழக்குகளில் திருட்டுபோன ரூ. 1 கோடியே 5 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர். அவற்றுள் 237 பவுண் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், 8 கார்கள், ரூ 39 இலட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவையும் அடங்கும்.

இந்த 54 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜயசிங்கம் என்ற இலங்கை ஆசாமியும் அடங்குவார். அவருடைய கூட்டாளி இலங்கையைச் சேர்ந்த குணராஜா என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் கந்தசாமி, சீனிவாசன், மாரிமுத்து ஆகிய 3 பேரிடம் இருந்தும் ரூ. 10 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. அண்மையில் அம்பத்தூரில் ரூ. 70 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதில் பொலிஸார் விரைந்து செயல்பட்டு இரண்டே நாட்களில் ரூ. 40 இலட்சத்தை மீட்டனர். எஞ்சிய தொகையையும் விரைவில் பொலிஸார் மீட்டு விடுவார்கள் என பொலிஸ் உயரதிகாரி ஜாங்கிட் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கைஉலகில் அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 8000 அரசியல் கைதிகள் அடங்குவதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜூரிகள் பேரவையினால் இந்தப் புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவிதமான பிடிவிராந்தோ அல்லது வேறும் சட்ட ரீதியான பின்னணியோ இன்றி ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

காதல் ஜோடிகளை அச்சுறுத்தி கையடக்க தொலைபேசிகளை பறித்து வந்த பொலிஸார் இருவர் கைதுகண்டி நகரில் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பறித்து செல்லும் நான்கு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த கண்டி பொலிஸார் கடமையாற்றும் பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஒருவரையும், சார்ஜன்ட் ஒருவரையும் இன்று கைது செய்துள்ளனர்.

பொலிஸ் சீருடையில் சென்று நகரில் நடமாடும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்க தொலை பேசிகளை கண்டூ பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஒருவர் பறித்து வருவதாக நான்கு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இம் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்யுமாறு சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்தன விசடிட குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஆலோசனை வழங்கிருந்தார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இன்று காலை இன்ஸ் பெக்டர் ஒருவரையும் சார்ஜன் ஒருவரையும் கைது செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இந்நிலையில் நீதவான் குறித்த இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சிசுவை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தாய் கைதுபிறந்து சில மணிநேரத்துக்குள் சிசுவொன்றை குத்திக்கொலை செய்து சடலத்தை வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த சம்பவம் ஒன்று இன்று காலை சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரிய வருவதாவது, வயிற்றுவலியென கூறி குறித்த பெண் (37 வயது) கழிவரைக்குச் சென்று குழந்தையை பெற்றெடுத்து குத்தி கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததாகவும் அங்கு படிந்திருந்த இரத்தக் கறையைக் கண்ட கணவர் சந்தேகம் கொண்டு இது தொடர்பாக பொலிஸில் முறையிட்டுள்ளார்.

உடன் செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதோடு மேலதிக சிகிச்சைக்காக பெண்ணை ராகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...