பழைய கதை இன்றும் தொடர்கிறது
ஒன்றுபட்ட போராட்டத்துக்கென வெளிக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவுபட்டு நிற்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட முடிவின் விளைவே இது.
பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவுக்குக் கூட்டமைப்பைத் தள்ளியவர்கள் இரண்டு முன்னாள் பிரமுகர்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. இவர்களில் ஒருவர் பல்கலைக் கழகத்துடனும் மற்றவர் நீதித் துறையுடனும் சம்பந்தப்பட்டவர்கள். வெற்றிக் காற்று மற்றப் பக்கம் வீசுகின்றது என்று கூட்டமைப்புத் தலைமையை இவர்கள் நம்ப வைத்திருக்கின்றார்கள்.
இந்த முடிவினால் கூட்டமைப்பு மூன்றாகப் பிளவுபட்டுவிட்டது. இந்தப் பிளவு பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது எனக் கூற முடியாது.
முன்னாள் பிரமுகர்கள் பிழையாக வழிநடத்தும் அளவுக்குக் கூட்டமைப்புத் தலைமை தடுமாற்றத்தில் இருந்ததா எனச் சிலர் கேட்கலாம். ஏமாற்றம் தடுமாற்றத்துக்கு வழிவகுப்பது வழமை. இவர்கள் புலிகளை முழுக்க முழுக்க நம்பினார்கள். புலிகள் தனிநாடு பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் சங்கமம் ஆகினார்கள். அதில் பலத்த ஏமாற்றம்.
அந்த ஏமாற்றத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தில் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தங்கள் கொள்கை என்ன என்பதை இன்னும் அவர்களால் கூற முடியவில்லை. கொள்கைத் திட்டம் தயாராகின்றது என்பதையே இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு இருண்ட காலம் எனக் கூறலாம். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கையில் கூடுதலானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இதனால் தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று அவர்கள் உரிமை கோருகின்றார்கள். முன்பெல்லாம் தமிழ் மக்களுக்குத் தலைமை வகித்தவர்கள் சரியாகவோ பிழையாகவோ இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஒரு கொள்கையை முன்வைத்தார்கள். இப்போது தலைமை வகிப்பதாக உரிமை கோரும் கூட்டமைப்பிடம் கொள்கை இல்லை. கொள்கை இல்லாத தலைமையின் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லலாம் தானே.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸரூடன் கூட்டுச் சேர்வது பற்றி இப்போது சம்பந்தன் பேசுகின்றார். முஸ்லிம் காங்கிரஸிடமும் இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை இல்லை.
இரண்டு கட்சிகளும் கூட்டுச் சேர்வதால் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இந்தக் கூட்டினால் ஆகப் போவது எதுவுமில்லை. கொள்கை இல்லாத கூட்டினால் எதைச் சாதிக்க முடியும்?
கூட்டமைப்புத் தலைவர்களைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற ஆசனங்கள் எல்லாவற்றிலும் முக்கியமானவை. இனப் பிரச்சினையைக் காட்டிக் காட்டியே பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாத்திருக்கின்றார்கள். பிரச்சினையின் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை.
இப்போதும் அதே கதை தான்.
தீர்வற்ற சூன்ய நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது தலைமைப் பண்பாகாது
தமிழ் அரசுவழிச் சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை முக்கிய இடம் வகிக்கின்றது. காலங்காலமாகத் தமிழ் மக்கள் கூட்டாக முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது தேசிய இனப் பிரச்சினையே. தமிழ் மக்களின் அரசியல் சிந்தனை இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டதாக இருப்பதால், இப்பிரச்சினை பற்றிப் பேசும் அரசியல் தலைவர்களே தமிழ் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றனர். இவ்வாறு நிலைத்து நிற்பவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்கு இனப் பிரச்சினை அத்தியாவசியமானது எனக் கருதுவதனாலோ என்னவோ, பிரச்சினையின் தீர்வுக்காக ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை. இத் தலைவர்களின் தவறுகளே பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதற்குப் பிரதான காரணம் எனக் கூறினால் அது தவறாகாது.
இனப் பிரச்சினையின் தீர்வை முன்னெடுப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்தத் தவறியமை பற்றி ஏற்கனவே பல கட்டுரைகளில் விலாவாரியாகச் சொல்லப்பட்டிருப்பதால் மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திக் கூற வேண்டிய அவசியமில்லை. ஒரு விடயத்தை வலியுறுத்திச் சொல்லலாம். தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தமிழ்த் தலைவர்கள் நிரந்தரமான ஒரு கொள்கையைக் கொண்டிருக்காததையும் தீர்வுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை ஏதேனுமொரு காரணம் கூறி நிராகரித்ததையும் போல வேறெந்த நாட்டிலும் எந்தவொரு பிரச்சினைக்கும் நடந்திருக்காது.
தமிழ்த் தலைமை முதலில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் செயற்படவில்லை. சமஷ்டித் தீர்வைப் பெறுவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியமானது. கட்சிக்குத் தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்தார்கள். இது சமஷ்டிக் கோரிக்கை பற்றிய சந்தேகத்தை ஆரம்பத்திலேயே சிங்கள மக்களிடம் தோற்றுவித்தது. பின்னர் சத்தியாக்கிரகத்தின் போது தனியான தபால் சேவை ஆரம்பித்து முத்திரையும் வெளியிட்டார்கள். அதுபோதாதென்று காணிக் கச்சேரியும் நடத்தினார்கள். சமஷ்டிக் கோரிக்கைக்குப் பின்னால் தனிநாட்டுச் சிந்தனை இருக்கின்றதென்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே தோன்றிய சந்தேகம் இச் செயல்களால் மேலும் வலுவடைந்தது.
சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தவர்களே அதை வென்றெடுப்பதற்குச் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும் வகையில் செயற்பட்டதைப் பார்க்கும் போது, கருத்தீடுபாடு இல்லாமல் ஏனோதானோவென்று அக் கோரிக்கையை முன்வைத்தார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காட்சி.
அதன் பின் தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றியே வந்திருக்கின்றார்கள். தனிநாடு, மாவட்ட சபை, பிராந்திய சுயாட்சி, மீண்டும் தனிநாடு என்று காலத்துக்குக் காலம் அவர்களின் நிலைப்பாடு மாறியது.
புலிகளுடன் சேர்ந்து தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் இப்போது அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே அலகாக இணைக்கப்பட வேண்டும் என்பதும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்பதும் அரசியல் தீர்வுக்கு இவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள். இத்தலைவர்கள் அரசியல் தீர்வுக்குத் தயாராக இல்லை என்பதையே இந்த நிபந்தனைகள் புலப்படுத்துகின்றன.
ஒவ்வொரு கட்டத்திலும் முன்வைக்கப்பட்ட தீர்வு ஆலோசனைகளைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்தார்கள். அந்த ஆலோசனைகளிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரத்தை வலியுறுத்தியே அவற்றை நிராகரித்தார்கள். அன்றைய யதார்த்தத்தின் படி எது சாத்தியமில்லையோ அதைப் பிரதான கோரிக்கையாக வலியுறுத்தி ஆலோசனைகளை நிராகரித்த நடைமுறை மேலோட்டமான பார்வைக்கு இனப் பற்றின் வெளிப்பாடாகத் தோன்றினாலும் உண்மையில் தீர்வைத் தவிர்ப்பதற்கான தந்திரோபாயமே. படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெறுவதற்கு முயற்சிப்பது என்ற அடிப்படையில் அவ்வாலோசனைகளை ஏற்றிருந்தால் தமிழ் மக்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட பல பாதிப்புகளைத் தவிர்க்க முடிந்திருக்கும். கூடுதலான அதிகாரங்களைப் பெறுவதற்குச் சாதகமான சூழ்நிலையும் உருவாகியிருக்கும். பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையையும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளையும் உதாரணமாகக் கூறலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வும் உடனடியாக நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த நிலை உருவாகியதற்குத் தமிழ்த் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். இவர்களின் புத்திசாலித்தனமற்ற செயற்பாடுகள் தமிழர் தரப்புக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையைத் தோற்றுவித்தன.
வடக்கு, கிழக்கின் இணைப்பை வலியுறுத்தும் தலைவர்கள் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதில் தங்களுக்குள்ள பொறுப்பை மறைக்கப் பார்க்கின்றனர். இரண்டு மாகாணங்களினதும் இணைப்பு சட்டரீதியாகத் தற்காலிகமானது. வருடா வருடம் விசேட பிரகடனத்தின் மூலம் நீடிக்கப்பட வேண்டியது. இந்த இணைப்பு மாகாண சபையுடன் தொடர்புபட்டது. மாகாண சபை இல்லாத நிலையில் இணைப்புக்கு எதிரான சிந்தனை வளர்வதற்கு இடமுண்டு என்பதைத் தமிழ்த் தலைவர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்பட்டிருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த வகையில், இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டதில் தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பும் உண்டு.
பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்க முடியாது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி யதார்த்தபூர்வமாகப் பார்ப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. ஆதரித்தார்கள். இத் தலைவர்கள் மீண்டும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு இந்த ஒப்பந்தமே வழிவகுத்தது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமும் அதன் கீழான மாகாண சபை முறையும் இந்த ஒப்பந்தத்தின் உருவாக்கங்கள்.
இந்திய - இலங்கை ஒப்பந்தமோ பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமோ இலங்கையின் இனப் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வல்ல. எனினும் அரசியல் தீர்வுக்குக் காத்திரமான ஆரம்பம் என்ற வகையிலேயே தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தத்தை வரவேற்றார்கள். மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்று இதே காரணத்துக்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்த் தலைவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதற்கும் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்கும் எது காரணமாக அமைந்ததோ அதே காரணத்துக்காகப் பதின்மூன்றாவது திருத்தத்தை இப்போது ஏற்கலாம். அதாவது இனப்பிரச்சினைக்குப் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையான தீர்வல்லவெனினும் அரசியல் தீர்வுக்குக் காத்திரமான ஆரம்பம் என்ற வகையில் ஏற்கலாம்.
பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிக்கும் தமிழ்த் தலைவர்கள் அதனிலும் மேலானதாகத் தாங்கள் முன்வைக்கும் தீர்வையும் அதை வென்றெடுப்பதற்கான வழிவகைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இப்போது தீர்வுத் திட்டம் எதுவும் இல்லை. அரசியல் தீர்வைப் பெறுவதற்காக அரசாங்கத்துடனோ தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகளுடனோ இணைந்து செயற்படும் நோக்கமும் இல்லை. இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருப்பது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உதவும் நிலைப்பாடல்ல.
தென்னிலங்கையின் சமகால யதார்த்தம் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குச் சாதகமானதாக இல்லை என்பதை மேலே கூறினோம். எனவே, பதின் மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது எவ்வித தீர்வுமற்ற இன்றைய நிலை தொடர்வதற்கே வழிவகுக்கும். தீர்வை நோக்கிச் செல்லாமல் தீர்வற்ற சூன்ய நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது சிறந்த தலைமைப் பண்பாகாது.
உடனடித் தீர்வாகப் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதால் தமிழ் மக்கள் பல விதத்தில் நன்மை அடைவர். மக்களின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்கள் மாகாண சபைக்குக் கிடைக்கும். இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இட ங்களில் குடியேற முடியும். கொழு ம்பை எதிர்பார்த்திராமல் மாகாண மட்டத்திலேயே பல கருமங்களை நிறைவேற்றலாம்.
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்டு முழுமையான தீர்வை நோக்கி முன்னேறிச் செல்லலாம். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்திருக்கின்றார். அதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் அக்கறையுடன் தமிழ்த் தலைவர்கள் செயற்படுவார்களேயானால் முழுமையான தீர்வை அடைவது சிரமமானதாக இருக்காது.
தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி
பல்லின நாடொன்றில் சிறுபான்மையினரின் இருப்பை உறுதிப்படுத்தும் காரணிகளுள் அபிவிருத்தியும் பிர தான இடம் வகிக்கின்றது. சிறுபான்மையினரின் மொழி க்கான அங்கீகாரம், வாழ்புல உத்தரவாதம் போன்ற வேறு காரணிகளும் உள்ளன. சிறுபான்மையினர் சார்பில் இனத் துவ அரசியலை மேற்கொண்டிருப்பவர்கள் என்றாலென்ன, இன ஐக்கியத்தில் விசுவாசமான பற்றுறுதியுடன் தேசிய அர சியலில் ஈடுபடுபவர்களாக இருந்தாலென்ன இவ்விடயங்க ளில் அக்கறை செலுத்தாதிருக்க முடியாது. விசேடமாக சிறு பான்மையினக் கட்சிகளுக்கு இதில் விசேட பொறுப்பு உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தனித்துவமான பிரதிநிதி என உரிமை கோருகின்றது. ஆனால் மேலே குறி ப்பிட்ட விடயங்களில் செயலீடுபாட்டுடன் இதுவரை எது வும் செய்ததாக இல்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இது வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை. தீர்வுக்கான சந் தர்ப்பங்களைச் சாட்டுகள் கூறித் தட்டிக் கழித்திருக்கின்றார் கள் என்பதைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின் றோம். தமிழ் மக்களின் வாழ்புல உத்தரவாதம் இனப் பிரச்சி னையின் தீர்விலேயே தங்கியுள்ளது.
தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் தமிழ்த் தலைவர் கள் அக்கறை செலுத்துவதில்லை. நாடு சுதந்திரமடைந்த கால த்திலிருந்து தமிழ்ப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத் திய தமிழ்க் கட்சிகள் அபிவிருத்தியில் சிறிதளவேனும் அக் கறை செலுத்தவில்லை. ஜீ. ஜி. பொன்னம்பலம் கைத் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கில் காங்கே சன் சிமெந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந் தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் கிழக்கில் வாழைச் சேனை காகித ஆலை என்பன அமைந்ததன் பின் தமிழ்க் கட்சிகள் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. இத் தொழிற்சாலைகள் அவ்வப் பிரதேசத்தில் ஏராளம் குடும்பங் களின் வாழ்வாதாரமாக இருந்ததைப் பார்க்கையில் அபிவி ருத்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அபிவிருத்தியும் சமாதானமும் என்ற தொனிப் பொருளுடன் இன்றைய அரசாங்கம் செயற்படுகின்றது. கிழக்கு மாகாணத் தில் கணிசமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அம் மாகாணத்தில் வளர்முக மாற்றத்தை உணர முடிகின்றது. அரசாங்கம் இப்போது வட மாகாணத்தில் அபி விருத்தியை ஆரம்பித்திருக்கின்றது. புலிகளின் தோல்விக் குப் பின் வடக்கில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்குத் தடை எதுவும் இல்லை. வட மாகாணத்தில் தங்களுக்குக் கூடுதலான ஆதரவு இருப்பதாக உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவ டிக்கைகளுக்குக் கைகொடுக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை மேற்கொண்ட முடிவுகளும் நடத்திய போராட்டங்களும் இனப் பிரச்சினை வளர்வதற்கு மாத்திரமன்றித் தமிழ்ப் பிர தேசங்கள் அபிவிருத்தியில் பின்னடைவு காண்பதற்கும் கார ணமாக இருந்துள்ளன. இந்த நிலை இனியும் தொடரக்கூ டாது. தமிழ்ப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழ்த் தலை வர்கள் அதை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட வேண் டும். தமிழ்ப் பிரதேச அபிவிருத்தியும் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததென்பதை இத் தலைவர்கள் விளங்கிக்கொள் வார்கள் என நம்புகின்றோம்.
இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்
பிரி. உதயா பிரதம களப்பொறியியலாளர்
பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்க ப்பட்டுள்ளார்.
நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள் ளார்.
இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இரா ணுவத்தின் பிரதம களப் பொறியி யலாளராக (இகுகூக்கி ஊகூக்ஙீக்ஷ உஙூகீகூஙூக்க்சு) நியமிக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.
முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசக ராக நியமிக்கப்பட்டிருந்தார். லண் டனில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் ஏற்பட்ட வெற்றிட த்திற்கே பிரிகேடியர் உதய நாணய க்கார இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமி க்ஞை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார்.
தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இராணுவப் பேச்சாளர் நியமனமும் வழங்கப்ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு;
இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து
இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து
ரஷ்ய நட்புறவு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். மொஸ்கோ வினுகோஆ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு வரவேற்பளி க்கப்பட்டது. ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாடொ ன்றின் தலைவர் ரஷ்யாவுக்குச் செல்வது முதற் தடவை என்பதால், ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. ரஷ்ய குடியரசுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மொஸ்கோவிலுள்ள வினுகோஆ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூச்செண்டு கொடுத்து வரவேற்கப்படுகிறார். முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, ஜீ. எல். பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச எம். பி. மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் காணப்படுகின்றனர். (படம்; சுதத் சில்வா) ஜனாதிபதிக்கு ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தினால் நேற்று மாலை கெளரவ டொக்டர் பட்டம் வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. உலக சமாதானத்தைப் பேணி வருவதற்காகவும், பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரமான செயற்பாட்டுக்காகவும் ஜனாதிபதிக்குக் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வீ. லெவ்றோவ் விடுத்திருந்த அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருக்கிறார். மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி திமித்றி மெத்வதேவின் சார்பிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு டொக்டர் பட்டங்களை வழங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விஞ்ஞான துறைகளில் சிறந்த இலக்குகளை எய்தியோருக்கும் உலக சமாதானத்தைப் பேணி வரும் உலகத் தலைவர்களுக்கும் இதுவரை பட்டங்களை வழங்கியுள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் ஐந்து ஜனாதிபதிகளும் இரண்டு பிரதமர்களும் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷ வுக்கு சிறப்பு டொக்டர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபற்றவென சுமார் 100 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து 6000 இற்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளார்கள். இன்று (07) பிற்பகல் மூன்று மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, மாலை 3.30 இற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார். நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு ரஷ்ய ஜனாதிபதி திமித்றி மெத்வதேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார். அதேவேளை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், சர்வதேச வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கைத்தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு மற் றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஜனா திபதியுடன் ரஷ்யா சென்றுள்ளனர்.
காங்கேயன் வீதி புனரமைப்பு : அழிவுறும் ஆலயங்கள் குறித்து ஆளுநரிடம் கோரிக்கை
.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியைக் கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியைக் கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.