9 டிசம்பர், 2009

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்களே-

பி.அரியநேந்திரன் எம்.பி- தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பிட்ட கருத்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கின்ற தீhமானங்களை அதனை ஒரு முடிவாக சில ஊடகங்கள் மாற்றுவதுன் காரணத்தினால் தமிழ்க்கூட்டமைப்பு கவலையடைகின்றது. தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லையென்பதில் தெளிவாக இருக்கிறோம். தேர்தல் தொடர்பிலான முடிவினை தமிழ்க் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளது. அந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும்வரை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயென தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

இன்றையதினம் முற்பகல் முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இந்த வருடம் மேமாதத்தில் வன்னியில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இறுதிப் போர் இடம்பெற்ற பகுதி புதுமாத்தளன் பகுதியாகும். இப்பிரதேசத்தில் படையினருக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வினைத் தொடர்ந்து இறுதிப்போரில் பங்கு பற்றியிருந்த இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடலையும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். அத்துடன் மன்னாரின், மடு தேவாலயத்திற்கும் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் அகதிகள் முகாமிற்கும் ஜனாதிபதி விஜயம் செய்து நிலiமைகளை அவதானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை-

நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தற்சமயம் நாடளாவிய ரீதியாக 670அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் அனைவரது வழக்குகளும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் 46கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி மேலும் தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களின்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்-

எல்லைகளற்ற ஊடக அமைப்பு- அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதை அரசியல் கட்சிகளும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் உறுதிசெய்ய வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்தவார இறுதியில் நடைபெற்ற எதிர்க்கட்சியொன்றின் கூட்டத்தின்போது செய்திகளைச் சேகரிக்கச் சென்ற அரச ஊடகவியலாளர்கள்மீது நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்கு இந்தத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றபோதிலும் ஊடக சுதந்திரம் இல்லாவிட்டால் அவற்றை ஜனநாயகம் மிக்கதாக கருத முடியாதென எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளோம்-

ஜே.வி.பி- இலங்கை அரசியலில் காணப்படும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திற்காகவே பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் பல்வேறு விடயங்களில் தமது கட்சியினருக்கு முரண்பாடுகள் பல காணப்பட்டாலும் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே பொதுவேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துப்போவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியிலுள்ள அரசாங்கம் அரச ஊடகங்களையும் அரச சொத்துக்களையும், அரச ஊழியர்களையும் சட்டவிரோதமாக தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேசப்பற்று பற்றி பேசும் அரசாங்கம் சம்பூரில் பரம்பரையாக வாழ்ந்துவந்த தமிழ்மக்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களை திருமலையிலுள்ள ஐந்து முகாம்களில் தங்கவைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அவர்களது நிலங்களை இந்திய நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும்-மனோ கணேசன் எம்.பி-

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். வலிகாமம் வடக்கிலும் திருமலை சம்பூரிலும் அமைக்கப்ட்டுள்ள அதி உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேநேரம் யாழ்ப்பாணம் அனுராதபுரம், நீர்கொழும்பு, கண்டி சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


யாழ். பலாலிவீதி தபால்கட்டைச் சந்தியிலிருந்து படைவீரரின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் பலாலிவீதி தபால்கட்டைச் சந்திப்பகுதியிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்றுகாலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் இருந்த அதிகாலையில் குறித்த பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் அதனைத் தொடர்ந்து காலையில் சடலத்தைக் கண்ட பொதுமக்கள் பொலீசாருக்கு தகவல் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த பொலீசார் சடலத்தினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மீட்கப்பட்ட சடலம் இராணுவ சீருடையில் காணப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள் -அரசிடம் மனோ கணேசன் கோரிக்கை


யாழ். வலி-வடக்கிலும், திருகோணமலை சம்பூரிலும் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி ஆகிய சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


இவை இரண்டு விடயங்களையும் உடனடியாக அரசாங்கம் செய்தாகவேண்டும்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவருமான மனோ கணேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.


கொழும்பில் இன்று மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் குழுவின் செயலாளர் ஜயலத் ஜயவர்தன எம்பி, முஜிபர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து மனோ கணேசன் கலந்து கொண்டார்.


அங்கு அவர் மேலும் கூறுகையில்,இன்று உயர் பாதுகாப்பு வலயங்கள் எதற்கு? "இன்று யாழ்ப்பாணத்தில் மழைபெய்தால் கொழும்பிலே சிலர் குடைபிடிக்கிறார்கள். யாழ்ப்பாண மக்கள் மழையில் நனைந்தால் இங்கே சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. இத்தகைய விசித்திரங்களுக்கு காரணம் ஒன்றும் பரம இரகசியம் கிடையாது.


நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலே தமிழ் மக்களின் வாக்குகளை வாங்குவதற்கு தென்னிலங்கையிலே போட்டாபோட்டி நடந்து கொண்டிருக்கின்றது. நான் இன்று யாழ்ப்பாணம் சென்று அங்கு நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளேன்.


எனக்கு அடிக்கடி யாழ்ப்பாணம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற மக்களுக்காக நாங்கள் இடைவிடாது குரல்கொடுத்துப் போராடி வருகின்றோம். எனவே நான் யாழ்ப்பாணத்திலே ஒரு அரசியல் விருந்தினர் அல்லர். யாழ் மக்களின் உணர்வுகள் எங்கள் உயிருடன் எப்பொழுதும் கலந்திருக்கின்றது.


போர் நடைபெறும் பொழுது விடுதலைபுலிகளின் பீரங்கி தாக்குதல் எல்லைக்குள் இராணுவ முகாம்கள் இருந்த காரணங்களை காட்டி அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலங்களை அமைத்தது. இன்று போர் இல்லை. விடுதலை புலிகளின் பீரங்கிகளும் இல்லை.


எனவே எந்த அடிப்படையில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என இந்த அரசாங்கத்தை நான் கேட்கின்றேன். வலிகாமம் வடக்கிலே சுமார் 3800 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.


எங்கள் மக்களின் வீடு, வாசல், நிலம் ஆகியவை மாத்திரம் அல்ல, எங்கள் இனத்தின் வரலாறும் சுற்றி வளைக்கப்பட்டிருகின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் அதேபோல் இன்று இன்னொரு எரியும் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையாகும்.


இந்த ஊடக சந்திப்பு நடைபெறும் இந்நேரத்திலே யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி ஆகிய சிறைச்சாலைகளிலே தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாநோன்பை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். போர் முடிந்து நாடு விடுதலை பெற்றுவிட்டதாக கூறுகின்ற இந்த அரசாங்கத்திற்குப் பல்லாண்டுகளாக சிறைவாழ்க்கை வாழ்ந்து தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தொலைத்துவிட்ட இவர்களுக்கு விடுதலை அளிக்கவேண்டும் எனத் தோன்றவில்லையா? கடந்த பல மாதங்களாக அமைச்சர் மிலிந்த மொரகொட தமிழ்க் கைதிகள் தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும், உறுதிமொழிகளையும் அள்ளிவீசி கொண்டிருக்கின்றார்.


இனிமேல் எங்களுக்கு உறுதிமொழிகள் தேவையில்லை. பொது மன்னிப்பு அல்லது சட்ட ரீதியான பிணை அல்லது புனருத்தாபன திட்டங்களில் சேர்த்துக்கொள்ளல் ஆகிய ஏதாவது ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். கைதிகளின் இத்தகைய உணர்வுகளை நான் அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றேன். நாளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளைச் சந்திப்பதற்கும் விரும்புகின்றேன்.


கிழக்கில் புதிய ஆயுதக்குழு கிழக்கிலே இன்று புதிதாக மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு தோன்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது அரசாங்கத்தின் சதிவேலை என்றே நாம் சந்தேகிக்கின்றோம். எதிர்வரும் தேர்தல் காலத்தில் ஜனநாயக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களைக் கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டப்படுகின்றதா என இந்த அரசைக் கேட்க விரும்புகின்றேன்.


உலகத்திலேயே சிறந்த இராணுவம் நமது நாட்டு இராணுவம் என மார்தட்டும் இந்த அரசாங்கம், தனது படைப்பிரிவை அனுப்பி வைத்து இந்த சட்டவிரோத ஆயுதக்குழுவைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாதா? எனது பாதுகாப்புக்கு தொடர் ஜீப் அணியை வழங்கியது இந்த அரசாங்கம் அல்ல. அது நீதி மன்றத்தால் வழங்கப்பட்டதாகும். ஆனால் அந்த நீதி மன்ற உத்தரவையும் இந்த அரசாங்கம் இன்று மீறுகின்றது.


எனக்கு தருவதற்கு மேலதிக வாகனம் இல்லை என்று கூறுகின்ற பொலிஸ் திணைக்களம் நேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத தனிநபர்களுக்கூட பாதுகாப்பு வாகனங்களையும், அதிகாரிகளையும் வழங்கியுள்ளது. இது அரச வளங்களைத் தமது கட்சி அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் செயலாகும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை "என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
பிளேக் நேற்று சஜனாதிபதி - ரொபட் ஒந்திப்



இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளேக் நேற்று ஜனதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தார்.


அமைச்சர் ரோகித போகொல்லகம, ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுச் செயலாளர் சி.ஆர். ஜெயசிங்க ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
விடுதலை செய்யக்கோரி கைதிகள் உண்ணாவிரதம்


தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 பேரும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 பேரும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் கைதிகளான தமக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


இதேவேளை தடுத்து வைக்கப்பட்டள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள மனித உரிமை ஆனைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அமைதிப் போராட்டம் இடம் பெறவுள்ளது. மனித உரிமை ஆனைக்குழுவிற்கு முன்னால் கூடும் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமைதிப் பேரணியாக வவுனியா செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
புலிகள் என் மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் உண்டு-சரத் பொன்சேகா


விடுதலைப் புலிகள் என் மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் உள்ளது என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அச்சம் வெளியிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் இடம்பெயர் மக்களுடன் சேர்ந்திருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு, விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதிலும், சில தற்கொலை குண்டுதாரிகள் எஞ்சியிருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் உறுதியாகவே காணப்படுகின்றது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. யுத்த வெற்றிக்கு நாமே காரணம் என படையினரும், பொலிஸாரும் நம்புகின்றனர். கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
திருமலையில் இராணுவ மயமாக்கல் இந்துக் கோயில்கள் இடித்து அழிப்பு-இரா.சம்பந்தன்


திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இராணுவமயமாக்கல் நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படவேண்டும். வரலாற்றுப் பழைமை வாய்ந்த இந்துக்கோயில்கள் திருமலையில் இடித்து அழிக்கப்படுகின்றன. அதனையும் அரசு நிறுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் அரசிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.


நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களை வற்புறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:திருகோணமலை மாவட்டம் இராணுவ மயமாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அங்குள்ள வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் திட்டமிடப்பட்ட முறையில் இடித்து அழிக்கப்படுகின்றன. மூதூர் சங்குவேலிப் பகுதியில் உள்ள சிவன்கோவிலின் சிவலிங்கம் இடிக்கப்பட்டுள்ளது.பௌத்த நாடு என்ற அடிப்படையில் ஆட்சி பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே இங்கு ஆட்சி நடைபெறுகின்றது. இங்கு மற்ற மதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.


இச்செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடியே மேற்கொள்ளப்படுகின்றன.திருகோணமலையில் சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்காகவே இவ்வாறு வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்துக் கோயில்கள் இடித்து அழிக்கப்படுகின்றன. இராணுவ மயமாக்கலை மேற்கொண்டே இந்த நாசகாரச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.


அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படல் வேண்டும்.இந்த இராணுவமயமாக்கலை மிக இலகுவாக முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் அரச அதிபர்களாகவும், மாகாண ஆளுநர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்தப்போக்கு முதலில் நிறுத்தப்படவேண்டும். இராணுவமயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி, இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்றார் சம்பந்தன்.
மேலும் இங்கே தொடர்க...