8 ஆகஸ்ட், 2010

இலங்கை அகதி முகாமில் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு குழந்தையை தூக்கி வீசிய கும்பல்





சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதி முகாம் உள்ளது.இங்கு இலங்கை அகதிகள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இவர்களில் சிலர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவார்களாம். அவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்குமாம்.அவர்களைக் கண்டு இன்னொரு கும்பல் பயப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 பேர் கொச்சி வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சி செய்தனர். அவர்களை கடற்படையினர் பிடித்து எச்சரித்து அனுப்பி விட்டனர். அவர்கள் பிடிபட அந்த அகதி முகாமை சேர்ந்த இன்னொரு தரப்பினர் தான் காரணம் என்று நினைத்த 15 பேர் கும்பலாக வந்து இன்னொரு தரப்பினரை தாக்கினார்கள்.

இதில் ஜேசுதாஸ்,அவரது மனைவி மேரி ஜெனீதா மற்றும் சாமி பிள்ளை ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஜேசுதாசின் குழந்தை தர்ஷிகாவை அந்தக்கும்பல் தூக்கி வீசியது. இதில் தர்ஷிகாவும் காயம் அடைந்தார். இந்த மோதலை தொடர்ந்து அகதி முகாமில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.இது தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீது “ஷீ” வீச்சு; கட்சி தொண்டர் ஆத்திரம்





பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார். இதற்கிடையே அங்கு தங்கியிருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் பிர்மிங்காம் நகரில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சர்தாரி கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று இருந்தனர்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர் அதிபர் சர்தாரி மீது தனது 2 “ஷீ”க்களை வீசினார். ஆனால், அவை அவர் பேசிய மேடையை சென்றடைய வில்லை.

இதனால் கூட்டத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந் தவர்கள் “ஷீ” வீசிய நபரை மடக்கி பிடித்து “தர்ம அடி” கொடுத்தனர்.

“ஷீ” வீசியது ஏன் என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு தீவிர வாதத்தை இறக்குமதி செய்கிறது என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து இருந்தார். இருந்தும், இங்கிலாந்து வந்து அவரை சந்தித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இது போன்று செய்வதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, அதிபர் சர்தாரியின் இங்கிலாந்து பயணத்துக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் குறித்து டேவிட் கேமரூன் விமர்சித்த பிறகும் இங்கிலாந்து சென்றது ஏன்? என கேட்கின்றனர்.

மேலும், பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவரது எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கிரீன்லாந்து நாட்டில் உருகும் ராட்சத பனிப்பாறை: வெள்ளப் பெருக்கு அபாயம்






வட அமெரிக்கா கண்டத்தில் கிரீன்லாந்து நாடு உள்ளது. இதன் பெரும்பகுதி பனிக்கட்டிகளால் சூழ்ந்துள்ளது. எனவே, இங்கு அதிக அளவில் மக்கள் வசிக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே உள்ளனர்.

தற்போது அங்குள்ள பீட்டர்மேன் என்ற பனிப்பாறை உடைந்துள்ளது. இதில் இருந்து பிரிந்த அந்த ராட்சதபாறை உருக தொடங்கியுள்ளது. அது 100 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அமெரிக்காவின் எம்பயர் கட்டிட அளவு உயரமாக உள்ளது

ஒரு குட்டி ஐஸ்தீவு போன்று இது காட்சி அளிக்கிறது. அமெரிக்காவின் மேன்காட்டன் நகரை போன்று 4 மடங்கு பெரியது. இதில் இருந்து உருகி ஓடி வரும் தண்ணீரினால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

ராட்சத பனிப்பாறை உடைந்து உருகுவதை நெலாவர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்ட்ரூவ் மியூன்கள் தெரிவித்தார். நாசா செயற்கை கோள்மூலமும் இது தெரியவந்தது.

கிரீன்லாந்து பனியாற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஐஸ்கட்டிகள் உருகு கின்றன. தற்போதுதான் ராட்சத அளவிலான பனிக்கட்டி உருகியுள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாதையோரம் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்

கட்டுகஸ்தோட்டையில் பாதையோரத்தில் குப்பைகளை கொட்டிய நான்கு பேருக்கு கண்டி பிரதான நீதவான் 2000 ரூபாய் அபராதம் விதித்தார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பேர் பாதை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டியதால் கைதுசெய்யப் பட்டு கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர்.

முறைப்பாட்டை விசாரித்த கண்டி நீதவான் லலித் ஏக்கநாயகா பாதை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டிய குற்றத்திற்காக நான்கு பேருக்கும் அபராதம் விதித்து தீர்பளித்தார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தலைமையிலான பொலிஸ் குழு முறைப் பாட்டை நெறிப் படுத்தியது.
மேலும் இங்கே தொடர்க...

தற்கொலை செய்து கொண்ட யுவதியின் உடல் இரு முறை பிரேத பரிசோதனை

தற்கொலை செய்துகொண்ட ஒரு யுவதியின் பூத உடலை இரு முறை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சம்பவம் கட்டுகஸ்தோட்டையில் இடம் பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியொருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸில் புகார் செய்யப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக பிரேத பதிசோதனையை கட்டுகஸ்தோட்டை மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி எஸ்.பாஸ்கரநாதன் நடாத்தி சாட்சியம் அளித்தார்.

இதன் பிரகாரம் அக்குறணை திடீர் மரண விசாரனை அதிகாரி பீ.ஏ.ஸீ.எம். றமீம் இது ஒரு தற்கொலையென தீர்ப்பளித்தார்.

உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் இம்மரணம் ஒரு கொலையாக இருக்கலாமென சந்தேகித்து கட்டுகஸ்தோட்டைப் பொலிஸில் மீண்டுமொரு புகார் கொடுத்ததை அடுத்து அதனை விசாரித்த கண்டி பிரதம நீதவான் லலித் ஏக்கநாயக்க மீண்டும் பிரேத பரிசோதனையொன்றை நடாத்துமாரு உத்தரவிட்டார்.

அதன்படி கண்டி போதனா வைத்திய சாலையின் சட்டமருத்துவ அதிகாரி ஏ.பீ. செனவிரத்ன இரண்டாவது பிரேத பரிசோதணையை நடாத்திய சாட்சியமளிக்ககையில் இது ஒரு தற்பொலையென்றே தெரிவித்தார்.

டாக்டர் எஸ்.பாஸ்கரனாதன் கருத்து இங்கு ஊர்ஜிதம் செய்யப்பட்டு அதே தீர்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா


வரலாற்றுப் புகழ் மிக்க மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று பகல் இடம் பெற்றது காலையில் இடம் பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி 10.40 மணியளவில் சுவாமி வெளி விதி வந்து தேரில் ஏறி வீதி உலா வரும் பவனி இடம் பெற்றது .

கடந்த பல வருடங்களாக ஆலயத்தில் திருப்பணி நடை பெறுவதினால் தற்போது நடைபெறும் உற்சவத்தை ஒட்டி சுவாமி ஒரு தேரில் மட்டும் விதி உலா வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய நிகழ்வில் சுமார் மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டார்கள் .பொது மக்களின் போக்கவரத்து ந3ன்மை கருதி காலை முதல் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்தும் மற்றும் இடங்களில் இருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் மாவிட்டபுரம் ஆலயம் வரை சேவையில் ஈடுபட்டதுடன் தனியார் மினி பஸ் சேவைகளும் இடம் பெற்றன.

ஆலயத்தில் அடியவாகள் தமது நேர்திக்கடன்களை நிறைவேற்றும் வகையில் கற்பூரச் சட்டி அங்கப்பிரதட்சை அடியடித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள் வீதிக்கு வீதி மாவைக் கந்தனுக்கு தேங்காய்கள் உடைத்தும் வழிபாடுகளை நிறைவேற்றினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ள பாதிப்புக்கு காரணம் இந்தியா


செனாப் நதியில் அளவுக்கு அதிகமாக வெள்ளநீரை இந்திய அதிகாரிகள் திறந்து விட்டதால் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி விட்டதாக அந் நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய எல்லையையொட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சாலை, ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாக மாறியுள்ளன.

செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இதற்கு முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஓடும் செனாப் நதியில் அளவுக்கு அதிகமான வெள்ளநீரை இந்திய அதிகாரிகள் திறந்து விட்டதால் சியாக்கோட் மாவட்டம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி விட்டதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந் நதியில் வெள்ளம் தொடர்ந்து நீடிப்பதால் குஜ்ரன்வாலா, குஜ்ராத், ஹாசியாபா உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இமாசல பிரதேசத்தில் உற்பத்தியாகும் செனாப் நதி, ஜம்மு-காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் செல்கிறது.

செனாப் நதி வெள்ளம் காரணமாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோரை காணவில்லை
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டனுடன் கருத்து வேறுபாடு நீங்கியது: ஜர்தாரி


பிரிட்டனுடன் அனைத்து கருத்து வேறுபாடுகளும் நீங்கி விட்டதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியா வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜிகாதி அமைப்புகள் மூலம் ஆப்கானிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு தீவிரவாதம் பரவுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டேவிட் கேமரூனின் கருத்துகள் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும் நிலையும் உருவானது.

இந் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ நினைவாக அவரது நண்பரான பிரிட்டிஷ் அமைச்சர் ஆலன் டன்கன், பிரின்சஸ் ரிஸ்போரோ நகரில் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடத்தினார். இதில், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சியின்போது ஜர்தாரியும், டேவிட் கேமரூனும் சந்தித்து நீண்ட நேரம் பேசினர். இது குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு ஜர்தாரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிரிட்டிஷ் பிரதமருடன் நேரடியாக மனம்விட்டு பேசியதின் மூலம் இருவரும் இப்போது நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். பிரிட்டனும், பாகிஸ்தானும் இன்று, நேற்றல்ல, நீண்டகால நட்பு நாடுகள்.

ஜிகாதி விவகாரம் தொடர்பாக பிரதமர் கேமரூனிடம் விரிவாக விளக்கமளித்துள்ளேன். அதை அவர் புரிந்துக் கொண்டார்.

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து போரிட்டு வருகிறது. அந்தப் போரில் எனது மனைவி பேநசீர் புட்டோ உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இழந்து விட்டோம்.

தீவிரவாதத்தை ஒழிக்க முழுமூச்சோடு செயல்பட்டு வருகிறோம். அதை பிரதமர் டேவிட் கேமரூனும், பிரிட்டிஷ் மக்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் தீவிரவாதம் தாக்குதல் நடைபெறுகிறது என்ற கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது சந்திப்பின் மூலம் பிரிட்டனுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேலும் மேம்படும் என்றார் ஜர்தாரி.

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அல்லல்படும்போது வெளிநாடுகளில் ஜர்தாரி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதை அந் நாட்டு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பணக்காரரான ஜர்தாரிக்கு ஏழைகளின் துயரம் தெரிவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

இது குறித்து கேட்டபோது, அபுதாபி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டி வருவதாக ஜர்தாரி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வேலையற்ற பட்டதாரிகளின் கூட்டம் பாதுகாப்புத் தரப்பினரால் தடுக்கப்பட்டது



யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று பகல் 10.00 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் எற்பாடு செய்து இருந்த கூட்டம் பொலிஸ் இராணுவத்தினரின் தலையீட்டின் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் வேலையற்று இருக்கும் பட்டதாரிகள் இன்ற காலையில் ஒன்ற கூடி தமது கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படடு இருந்தது இந் நிலையில் இன்று காலை முதல் நல்லூர் ஆலய சுற்றாடல் மற்றும் கோவில் வீதி இராசாவின்தோட்ட வீதி பருத்தித்துறை விதி சிவன் வீதி அத்தியடி கோவில் வீதி உட்பட அந்த சுற்றாடலில் உள்ள அனைத்’து வீதிகளிலும் பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.

இளம் வயதினர் வீதியில் மறிக்கப்பட்டு படையினராலும் பொலிசாராலும் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் படி கூறி திருப்பி விடப்பட்டார்கள்.

இதே வேளை காலையில் நல்லார் ஆரயத்திற்க்கு வந்து கூடிய ஒரு தொகுதி வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் படையினரும் பொலிசாரும் விடுத்த வேண்டுதலைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

ஆனாலும் கூட கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் இக் கூட்டத்தை நடத்தும் முகமாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணம் கட்ட முன் கூட்டியே அனுமதி பெற்று இருந்த போதிலும் குறிப்பிட்ட மண்டபம் பகல் 11.00 மணிவரையிலும் திறக்கப்படாத நிலையில் இக் கூட்டத்தை ஒழுங்கமைப்புச் செய்த ஒருங்கினைந்த தோழில் வாயப்பற்ற பட்டதாரிகள் சங்கம் கூட்டத்தை நல்லூர் நாவலர் கலாசார வளாகத்தில் நடத்தி முடித்தார்கள். நாவலர் கலாசார மண்டபத்தின் வெளியாலும் நூற்றுக் கணக்கான பொலிசாரும் மற்றும் இராணுவத்தினருடன் கலகம் அடக்கும் பொலிசாரும் வாகணங்களில் காணப்பட்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

அச்சுவேலி – தொண்டமனாறு வீதி திறப்பு



தொண்டமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு அச்சுவேலி – தொண்டமனாறு வீதி பல வருடங்களுக்குப் பின்னர் நேற்று காலை திறக்கப்பட்டது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இவ்வருடத் திருவிழாவிற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலினை நீக்குவதற்காக இவ்வீதி திறந்து விடப்பட்டுள்ளது.

தொண்டமானாறு – தம்பாளை - இடைக்காடு – அச்சுவேலி ஊடான பாதையே திறக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சிறிய கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இராணுவ அதிகாரிகளிடம் மேற்படி விடயம் தொடர்பாக விடுத்த வேண்டுகோளையடுத்து பாதை இன்று காலையில் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்தி என்ற போர்வையில் மற்றொரு முள்ளிவாய்க்கால் போர் திணிக்கப்படுவதாகவே தமிழர்கள் கருதுகின்றனர்


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு முழு நாடும் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் முள்ளிவாய்க்கால் போர் போன்று முழு வீச்சில் ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பும் பாரம்பரிய நிலமும் கலை கலாசாரங்களும் கபளீகரம் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் மிக ஆழமாக உணரத் தொடங்கி விட்டனர் என்று பேராசிரியரும் யாழ்.சிந்தனைக் கூடத்தின் அமைப்பாளருமான இரா.சிவச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத கால கட்டத்தில் தமிழ் மக்கள் வாய் மூடி மௌனிகளாக்கப்பட்டனர். சுதந்திரம் இழந்திருந்தனர்.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாதிருந்தனர் என்றே தென்னிலங்கை கூறுகின்றது .

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வழி சமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்துள்ளது. தமிழ் மக்கள் தமது மௌன விரதத்தைக் கலைக்கவும் வழி பிறந்துள்ளது என்றும் தென்னிலங்கை கூறுகின்றது. இப்போது போர் முடிந்து ஒருவருடம் கழிந்து விட்டது. முள்ளிவாய்க்கால் போரும், மனிதாபிமானத்துக்கான போரும் அவை நடத்தப்பட்டதற்கான இலக்கை எட்டி விட்டனவா? என்ற கேள்வியை வட பகுதி மக்களிடம் கேட்பீர்களாக இருந்தால் அவர்கள் இல்லை என்றே பதில் கூறுவார்கள் என்று தெரிவித்த அவரிடம் கேள்விகளைத் தொடுத்தபோது,

கேள்வி: போர் முற்றுப்பெற்றுவிட்டது. போருக்குப் பிந்திய நிலையை தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்.குடா நாட்டு மக்கள் எவ்வாறு நோக்குகின்றனர்? மக்கள் எத்தகைய மன நிலையில் உள்ளனர்?

பதில்: மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று கூறப்பட்ட போதும் அவர்கள் முழுமையாகப் பீதிக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று கூறுவது தான் பொருந்தும். அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் போர் அபிவிருத்தி என்ற போர்வையிலும் உல்லாசப் பயணிகள் என்றபோர்வையிலும் அரங்கேறி வருகின்றது.

கேள்வி: வடபகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போரின் காரணமாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் உணரவில்லையா?

பதில்: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பற்றி இப்பகுதி மக்களை அரசாங்கம் கலந்தாலோசித்ததா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே வரும். அபிவிருத்தி என்பது எமது பிரதேசத்திற்குரிய அபிவிருத்தியாக இருக்க வேண்டும். மக்களின் கருத்துகள் கேட்கப்படவேண்டும்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அபிவிருத்தி செய்யப் போவதாக கூறுகிறார்கள். இங்கிருக்கும் வளங்கள் இங்குள்ள மக்களுக்கே போதாமல் இருக்கும் போது பல்தேசிய கம்பனிகள் மூலம் உலகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு முயன்றால் வட பகுதியிலுள்ள சுண்ணாம்புக் கற்பாறைகள் தோண்டப்பட்டு சுண்ணாம்புக் கல் இருப்பு விரைவில் தீர்ந்து விடும்.

அது மாத்திரமல்ல யாழ். குடாநாட்டில் சுண்ணாம்புக் கல் அகழ்வதை தீவிரப்படுத்தினால் கடல் உட்புகும் அபாயமும் உள்ளது. கடந்த 30 வருடங்களாக போர் நடைபெற்றது. காங்கேசன்துறை தொழிற்சாலை செயலிழந்து கிடப்பதாக கூறப்பட்டது.ஆனால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அப்பகுதிகளிலுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளில் சுண்ணாம்புக்கல் அகழ்வு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அது தற்போதே தெரியவந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் மிக ஆழமாக தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கல் அகழப்பட்டுள்ளன. சில இடங்களில் 50 அடி ஆழத்திலும் தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கல் அகழப்பட்டுள்ளன.

வட பகுதி கரையோரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 அடி உயரத்திலேயே உள்ளது. இவ்வாறான நிலையில் 50 அடி ஆழத்தில் சுண்ணாம்புக்கல் அகழப்படுமாக இருந்தால் கடல் நீர் உட்புகுவது மாத்திரமல்ல வட பகுதியில் உள்ள தரைக்கீழ் நீரும் உப்பாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே இத்தகைய அபிவிருத்தியை பல்தேசியக் கம்பனிகளும் செய்யுமாயின் பாரதூரமான விளைவையே கொண்டுவரும்.

வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளன. ஆனால் இது பற்றி எந்தவிதமான ஆலோசனையும் வடபகுதி மக்களிடம் கேட்கப்படவில்லை. காணிகளைச் சுவீகரிக்காமலும் கட்டடங்களை இடிக்காமலும் மாற்றுத்திட்டம் பற்றி யோசிக்கலாம். மாற்றுத்திட்டம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு நிறையவே வழிவகைகள் உள்ளன.

எவ்வித இடர்களையும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இலகுவாக யாழ்.குடாநாட்டில் பெருந்தெருக்களை அமைக்க முடியும். ஆனால், இதுபற்றி எவரிடமும் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்கப்படவில்லை.

பண்ணையில் அமைந்துள்ள கண்ணாபத்தை பறவைகள் சரணாலயம் பாதுகாப்பு கருதி முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டது. வடபகுதிக்கே உரிய மீன்வளம் முற்றாக சூறையாடும் அபாயம் உள்ளது.

மொத்தத்தில் போருக்குப் பிந்திய நிலையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சூழல், வளங்கள் கலாசார விழுமியங்கள் என்பன சூறையாடப்படுவதாகவே வட பகுதி மக்கள் கருதுகின்றனர்.

வடபகுதி அபிவிருத்தி என்பது அந்த மண்ணுக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். கொழும்பின் நலன்களுக்கேற்ப செய்யப்படக் கூடாது.

எனவே அரசாங்கமோ அல்லது வேறு எவருமோ கூறுகின்ற அபிவிருத்தி என்பது தமிழர்களுக்கு நன்மை அளிக்கப்போவதில்லை என்ற கருத்து தமிழ் மக்களிடையே நிலவுகின்றது. போருக்குப் பிந்திய சூழ்நிலையில் வடபகுதியில் அமைக்கப்படவுள்ள இராணுவ முகாம்கள் பற்றி மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இராணுவ முகாம்களும் குடியேற்றங்களும் தம்மை தமது பாரம்பரிய மண்ணில் சிறுபான்மையினராக ஆக்கி சிதறடித்துவிடும் என்ற அச்சமும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

மொத்தத்தில் வட பகுதி மக்கள் மௌனிகளாக இருப்பதும், அமைதியாக இருப்பதும் என்பது அரசாங்கம் கூறுகின்ற அபிவிருத்தியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் அல்லது அங்கீகரித்துள்ளார்கள் என்பது அர்த்தம் அல்ல. சுதந்திரமாக கருத்துக்களை கூற முடியாத நிலையிலேயே அவர்கள் மௌனமாக இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...