13 ஜூன், 2010

டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இல்லை - ப. சிதம்பரம்





டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பத்திரிகைகள் மூலம்தான் தமக்கு தெரிய வந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை சந்தித்துவிட்டு வெளியே வந்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவரை கைது செய்வதற்குப் பதிலாக அரசாங்க வரவேற்பு அளித்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்:

"டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் வழக்கு உள்ளது பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை. செய்தித்தாள்கள் மூலம்தான் இதுபற்றி அறிந்து கொண்டேன். இதுகுறித்த நீதிமன்ற தீர்ப்புகள் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்'' என்று அவர் கூறினார்.

விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டு வெடிப்பு தமக்கு அச்சுறுத்தலா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், அப்படிக் கருதவில்லை என்றும், எல்லா உயிர்களும் சமம்தான் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

முதல்வர் கருணாநிதி - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சந்திப்பு

முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்
சென்னை, ஜூன் 13: முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது.

இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதற்கு முன்பு இதேபோல இருவரின் சந்திப்பு நடந்தது. இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து இலங்கை குழுவிடம் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் சந்திப்பின் போது இதை வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.மேலும் ராஜபட்சவை சந்திக்க தமிழகத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவையும் அவர் அனுப்பி வைத்தார்.

அக்குழுவினர் ராஜபட்சவை சந்தித்து முதல்வரின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இந்திய அரசுடன் சில ஒப்பந்தங்களில் இலங்கை குழுவினர் கையெழுத்திட்டனர். அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தர இந்தியா நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் அதில் அடங்கும்.

ராஜபட்ச தலைமையில் வந்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு (ஜூன் 14) ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கை குழுவின் பயணம் நிறைவுற்று அனைவரும் கொழும்பு திரும்பிவிட்டனர்.

சிவகங்கை அருகே சனிக்கிழமை கல்லூரி விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்தியாவைப் போல இலங்கையிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாநிலம் உருவாக்கி, தமிழர்களுக்கு எல்லா அம்சங்களிலும் சம உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவில் ஆட்சியில் இருந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது என்று கூறினார். இப்போதும் அதே பாதையில் ஒரு தீர்வை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜபட்ச கொழும்பு திரும்பிவிட்ட நிலையில், அவரின் தலைமையிலான குழுவினருடன் இந்திய குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் கருணாநிதியுடன் பேசியதாகத் தெரிகிறது
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி.,யில் இன்று தரையிறங்குகிறது ஜப்பான் விண்கலம்: "இட்டோகவா' கிரகத்தின் மண் மாதிரியுடன் வருகிறது

பூமியில் இருந்து பல லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, "இட்டோகவா' என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் ஜப்பான் நாட்டு, "ஹயபுசா' விண்கலம், ஆஸ்திரேலியாவின், அடிலெய்டு நகர் அருகே இன்று இரவு தரையிறங்குகிறது. இந்த விண்கலம் கொண்டு வரும் மண் மாதிரியை சோதனை செய்வதன் மூலம், சூரிய குடும்பம் எவ்வாறு தோன்றியது என்ற ரகசியம் தெரியும் என்பதால், உலகெங்கும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆவலுடன் விண்கலத்தின் வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

ஜப்பான் விண்வெளி விஞ்ஞானிகள், சிறிய கிரகங்கள் குறித்தும், அங்கு நிலவும் வானிலை, கனிம வளம் குறித்தும் அறிந்து கொள்ள முடிவு செய்து, அதற்காக ஒரு விண்கலத்தை தயாரிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, "ஜப்பான் ஏரோ ஸ்பேஸ் எக்ஸ்புளோரேசன் ஏஜன்சி' (ஜக்சா) 2003ம் ஆண்டு, "ஹயபுசா' என்ற விண்கலத்தை பூமியில் இருந்து பல லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, "இட்டோகவா' என்ற சிறிய கிரகத்தில் இருந்து மண் மாதிரியை எடுத்து வர விண்ணில் ஏவியது. மொத்தம் 621 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், 2005ம் ஆண்டு இட்டோகவா கிரகத்தை அடைந்தது. அங்கு பல மாதங்கள் இருந்து, அந்த கிரகத்தின் தரையை குடைந்து மண் மாதிரியை எடுத்தது. தனது நீண்ட பயணத்தின் போது, பிரபஞ்சத்தின் பல்வேறு கிரகங்களை விண்கலம் படம் எடுத்து அனுப்பியது.

இந்நிலையில், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அந்த விண்கலம் பூமிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. ஏழு ஆண்டுகளில், 400 கோடி கி.மீ., தூரம் பயணித்துள்ள இந்த விண்கலம், இன்று இரவு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகர் அருகே தரையிறங்குகிறது. இட்டோகவா கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 100 கிராம் எடை கொண்ட மண் மாதிரி, ஹயபுசா விண்கலத்தில் உள்ள எளிதில் உருகாத, 18 கிலோ எடை கொண்ட உறுதியான உலோக உறைக்குள் (கேப்ஸ்யூல்) பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. ஹயபுசா விண்கலம், பூமிக்குள் நுழையும் போது, அது வெடித்துச் சிதறும். ஆனால், விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ள மண் மாதிரியுடன் கூடிய உலோக உறை, ஆஸ்திரேலியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வந்து விழும். இந்த உலோக உறையை சேகரிப்பதற்காக, அது விழும் இடத்திற்கு அருகே உள்ள ஊமரா என்ற நகரில் விஞ்ஞானிகள் முகாமிட்டுள்ளனர். மண் மாதிரியுடன் கூடிய உலோக உறை உடனடியாக சேகரிக்கப்பட்டு, ஆய்விற்காக ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இது குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இட்டோகவா கிரகத்தில் இருந்து எடுத்து வரப்படும் மண் மாதிரி, சூரிய குடும்பம் உருவானது குறித்த பல ரகசியங்களை தெரிந்து கொள்ள உதவும். எனவே, அதை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஹயபுசா விண்கலத்தின் இந்த ஏழு ஆண்டுகால பயணத்தில், பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. பயணத்தின் போது, விண்கலத்திற்கு எரிசக்தியை தரும் சோலார் செல்கள் பழுதடைந்துவிட்டன. எரிபொருள் கசிவு ஏற்பட்டது. பல நேரங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பூமியில் இருந்து அனுப்பும் சிக்னல்கள், விண்கலத்தை சேருவதற்கு மிகவும் தாமதமானது. மேலும், இட்டோகவா கிரகத்தில் இறங்க வேண்டிய இடத்திற்கு பதில், வேறு ஒரு இடத்தில் விண்கலத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இருப்பினும், வெற்றிகரமாக அந்த விண்கலம் அங்கு இறங்கி, "மினர்வா' என்ற ரோபாட் உதவியுடன் மண் மாதிரியை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகிறது. மண் மாதிரியுள்ள உலோக உறைக்குள் இட்டோகவா கிரகத்தில் காணப்படும் வாயுக்களும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கிரகத்தில் இருந்து மண் மாதிரி சேகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

கண்காணிக்கிறது நாசா விமானம்!: நாசாவின் எய்ம்ஸ் ஆராய்ச்சி மையம், இந்த விண்வெளி திட்டத்தில் பங்கெடுத்துள்ளது. எனவே, ஹயபுசா பூமிக்குள் நுழைவதை இம்மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கி வருகின்றனர். இதற்காக, 39 ஆயிரம் அடி உயரத்தில், நாசா டிசி-8 என்ற ஆராய்ச்சி விமானம் மூலம் ஹயபுசா விண்கலத்தை அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நாசா விஞ்ஞானி ஜென்னிஸ் கென்ஸ் கூறுகையில், "விண்கலம் பூமிக்கு திரும்புவது ஒரு நல்ல காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மண் மாதிரி கொண்ட உலோக உறை குறிப்பிட்ட இடத்தில் விழுவதற்கு ஏதுவாக விண்கலத்தை சரியான பாதையில் இயக்கும் பணி நடந்து வருகிறது. பூமியில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ஹயபுசா விண்கலம் வெடித்து சிதறும். இருப்பினும், மண் மாதிரியுள்ள உலோக உறை எவ்வித சேதமும் இல்லாமல், பூமியில் விழும்' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு


விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேற்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. டிரைவரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களின் மூலம், இந்தக் கொடூரத் திட்டம், புலி ஆதரவாளர்களின் கை வரிசையா என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (1064) விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டது. டிரைவர் சேகரன் ரயிலை ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி ரயில் நிலையத்தை கடந்து பேரணி ரயில் நிலையத்திற்கு முன் உள்ள சித்தணி கிராமம் அருகே சென்ற போது (சென்னையில் இருந்து 145வது கிலோ மீட்டரை அடுத்து 300வது மீட்டர் தூரம் அருகே) ரயில் பாதையில், அதிகாலை 2.10 மணிக்கு ரயில் இன்ஜின் அதிர்வுடன் செல்வதை உணர்ந்தார்.அடுத்த ரயில்வே ஸ்டேஷனான பேரணி ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ருத்திரபாண்டியிடம், தண்டவாளத்தில் அதிர்வு உள்ளதாகவும் அடுத்த ரயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும்படியும் கூறி விட்டுச்சென்றார். இதையடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் ருத்திரபாண்டி, ரயில்வே கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்திருந்தது. உடனே அதிகாரிகள் அடுத்ததாக உள்ள முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகாலை 2.20 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி இன்ஜின் டிரைவரிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்து பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.இதையடுத்து ராக்போர்ட் ரயில் இன்ஜின் டிரைவர் கோபிநாத் ராவ், ரயிலை மெதுவாக செலுத்தி தண்டவாளத்தை கூர்ந்து கவனித்து வந்தார். அதிகாலை 2.43 மணிக்கு எதிரே தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிந்து ரயிலைசமயோஜிதமாக நிறுத்தினார். பள்ளம் இருந்த இடத்திற்கு அருகே 15 மீட்டர் தூரத்தில் ரயில் நின்றது. டிரைவர் கோபிநாத்ராவ், உதவி டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் இறங்கி வந்து தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் 2,500 பயணிகள் உயிர் தப்பினர்.

விழுப்புரம் டி.ஐ.ஜி.,மாசானமுத்து, எஸ்.பி.,பகலவன் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். ரயில் தண்டவாளம் மற்றும் சிலிப்பர் கட்டைகள் டெட்டனேட் டரை பயன்படுத்தி வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. தண்டவாளத்தைத் தகர்க்க சதிகாரர்கள், அருகிலுள்ள சித்தணியை சேர்ந்த சீனுவாசன் மகன் செந்தாமரைக் கண்ணன் என்பவரது நிலத்திலுள்ள விவசாய மின் இணைப்பு பெட்டியின் பூட்டை உடைத்து பியூஸ் கேரியரை கழற்றி மின்சார ஒயர் மூலம் டெட்டனேட்டரை வெடித்திருப்பது தெரிய வந்தது. டெட்டனேட்டர் வெடித்தவுடன் தண்டவாளம் 3.5 அடி நீளத்திற்கு நான்கு துண்டுகளாக வெடித்துச் சிதறி அருகே 500 மீட்டர் தூரத்தில் கிடந்தது. சிமென்ட் சிலிப்பர் கட்டைகள் இரண்டு பாதியளவிற்கு உடைந்து சிதறி கருங்கற்கள் நிலத்தில் கிடந்தன. ரயில்வே மின் கம்பியும் சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே வெள்ளைத் தாளில் பேனாவால் எழுதப்பட்டிருந்த கடிதம் கிடந்தது. அதில் "இந்திய அரசே,ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜபக்ஷே இந்திய வருகையை கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணை போன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழா, இனியும் மவுனம் காத்தால் புரியாது நமது மவுன வலி. இவண் மேதகு பிரபாகரன் தம்பிகள்' என எழுதப்பட்டிருந்தன.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர் இலங்கை தமிழர்கள் விசுவாசமாக நடக்கின்றனர்:பா.சிதம்பரம்

புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் அந்நாடுகளுக்கு விசுவாசமாக நடக்கின்றனர் எனவும் அந்நாடுகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்றார்கள் எனவும் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.

காரைக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளார் பெண்கள் கல்வியல் கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஈழத் தமிழ்ர் பிரச்சினை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசிடமிருந்து இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கின்றன. இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் அகதிகளை சம உரிமைகளுடன் சொந்த இடங்களில் ஆறு மாதங்களுக்குள் தமிழ் அகதிகள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு உறுதிமொழி தந்துள்ளார்.

இலங்கையின் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளவும் தமது இடங்களில் குடியேறியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கையில் 1984 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட இனப்பிரச்சினைக்கு அன்று முதல் இன்று வரை இலங்கையின் ஐக்கியத்துக்கும், இறைமைக்கும் குந்தகம் நேராத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய அரசுகள் வலியுறுத்தி வந்துள்ளன.

இலங்கை அரசு அரசமைப்பில் மாற்றம் செய்தும் சம அதிகாரங்களை தமிழ் பிரதேசங்களுக்கு வழங்க முடியும். இந்த யோசனையின் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தற்போது நிரந்தர தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் 53 முன்னாள் புலிப் போராளி ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான நிகழ்வு இன்று வவுனியா பம்பைமடுவில் இடம்பெற்றது.

யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் சுயதொழில் பயிற்சிகளும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த ஒரு தொகுதியினருக்கு இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய நடிகர் விவேக் ஒப்ராய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ,கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியூதின் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கம்பளை – நுவரெலியா பிரதான பாதையின் தவலந்தனை பகுதியில் மண்சரிவு அபாயம்

கம்பளை – நுவரெலியா பிரதான பாதையின் தவலந்தென்ன நகரிலிருந்து றம்பொடை இடையிலான வாகனப்போக்குவரத்துக்களுக்கு இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை தடைவித்திக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ அறிவித்துள்ளார்.

றம்பொடை கெரன்டிஹெல நீர் வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மண்சரிவு அபாயமொன்று ஏற்பட்டுள்ளதாலேயே இவ்வாறு வாகனப்போக்குவரத்துகளுக்குத் தடை வித்திக்கப்பட்டுள்ளது.

கம்பளையிலிருந்து நுவரெலியாவுக்குச்செல்லூகின்ற வாகனங்கள் அனைத்தும் தற்போது தவலந்தென்ன சந்தியிலிருந்து நவநகர பாதை ஊடாக பூண்டு லோயா டன்சினன் வழியாகவும் தலவாக்கலை வழியாகவும் இடம் பெறுகின்றமைக்குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை :காலநிலை அவதான நிலையம்



இந்து சமுத்திரத்தின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை சற்று முன்னர் தகர்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு , கல்முனை , அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சுனாமி அப்பிரதேசங்களில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் கொழும்பு, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கொழும்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...