வவுனியா மனிக்
பாம் வலயம் 4இல் இருந்து வேறு முகாமுக்குச் செல்வதற்கு விரும்பாத மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவைகளை நிறுத்தி, அந்த மக்களைத் துன்புறுத்துவதாக அந்த மக்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாக வன்னி மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை சுகாதார சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதனால், அங்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
வவுனியா மனிக்பாம் முகாமின் வலயம் 4இல் இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 3700 பேர் வசிக்கின்றனர். இவர்களை இங்கிருந்த கதிர்காமர் முகாமிற்குச் செல்லுமாறு இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் இங்குள்ள மக்கள் கதிர்காமர் முகாமில் போதிய வசதிகள் இல்லையென்றும், ஒவ்வொரு முகாமாகத் தாங்கள் இடம் மாறுவதற்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்து, அவர்கள் அங்கேயே தொடர்ந்தும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து வலயம் 4இல் உள்ள மலசலகூடங்கள் நிறையாமல் இருப்பதற்காக அவற்றில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு கிரமமாக அனுப்பப்படுகின்ற கலி எம்டியர் என்ற வாகன சேவையை பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்திவிட்டனர். அத்துடன் குப்பைகளை அகற்றும் வாகனங்களும் அங்கு அனுப்பப்படுவதில்லை. இதற்கு முன்னர் இந்த வாகனங்கள் தினசரி இந்த முகாமுக்கு வந்து மலசல கூடங்களைச் சுத்தப்படுத்துவதிலும் குப்பைகளை எடுத்துச் செல்வதிலும் ஈடுபட்டிருந்தன. இப்படி திடீர் என இந்த வாகனங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பது அந்த மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த முகாமில் தங்கியிருப்பதனால், இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலசலகூடக் குழிகள் நிறைந்து வழிகின்றன. இதனால் இவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் புழுக்கள் நெளிகின்றன. தாங்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாக அங்குள்ள மக்கள் என்னிடம் முறையிட்டிருக்கின்றார்கள்.
தற்போது மழைகாலமானதால், கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து மக்கள் குடியிருப்புக்களுக்குள் செல்வதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் இங்கு ஏற்பட்டுள்ளது. முன்னர் இந்த முகாமுக்கு நடத்தப்பட்டு வந்த நடமாடும் வைத்திய சேவையும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கதிர்காமர் முகாமில் விறகு, தண்ணீர் போன்றவற்றிற்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன்காரணமாகவே வலயம் 4இல் உள்ள மக்கள் கதிர்காமர் முகாமுக்குச் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முகாமைவிட்டு வெளியேற மறுப்பதனால் அதிகாரிகள் இவ்வாறு தங்களைத் துன்புறுத்துவதாக அங்குள்ளவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். எனவே இந்த விடயத்திற்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தித் தருமாறு அந்த மக்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள்.
இது குறித்து உரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வலயம் 4ஐச் சேர்ந்த மக்களிடம் தெரிவித்துள்ளேன் என சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்