24 ஜூன், 2010

சிகரெட் - மதுபான விலைகள் அதிகரிப்பு : அரசு அறிவிப்பு



சிகரெட் மற்றும் சகல மதுபான வகைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் சிகரட்டின் விலை ஒரு ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மதுபான லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மதுபானங்கள் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 50 தொடக்கம் ரூபா 80 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களுக்கான வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பே சிகரட் மற்றும் மதுபானங்களின் விலை உயர்வுக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களான சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

அத்தியாவசியப் பொருட்களான சமையல் வாயு, பால்மா, கோதுமை மா, பாண் போன்றவற்றின் விலைகள் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் வரவுசெலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் துண்டுவிழும் தொகையை ஈடு செய்வதற்காகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன எனப் பரவலாகக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சந்தேகத்தின் பேரில் கைதான எங்களை விடுவியுங்கள் : தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை



பல வருடங்களுக்கு மேலாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்பு செயலாளருக்குக் கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

"பல வருடங்களாக சந்தேகத்தின் பேரில் கைதாகி விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் தங்களுக்கு இம்மடலை வரைகின்றோம்.

எமது நாட்டில் தற்போது சுமுகமான சூழல் நிலவுகின்றது. இத்தகைய சூழலிலும் எங்களால் எமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ முடியாதுள்ளது. நீண்ட வருடங்களாக வழக்குப் பதிவு ஏதுமின்றி, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் இன்னும் எத்தனை வருடங்களுக்குச் சந்தேகம் எனும் பெயரில் தடுப்புக் காவலில் இருப்பது?

நாங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் எங்களது குடும்பத்தினர் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி அவர்கள், தற்போது கைதான பல விடுதலைப் புலி போராளிகளுக்கென சிறந்த செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவர்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கும் உள்ளத்துடன் அண்மையில் திருமணம் கூட நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை கைதிகளாகிய எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தாலும், கைதாகி பல வருடங்களாகியும் நாம் பிணையில் கூட செல்ல முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோமே, ஏன்?

அதுமட்டுமன்றி, தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் குறைந்தது ஐந்து வருடங்களில் இருந்து 17 வருடங்கள் வரை (1993 முதல் - இன்று வரை) சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குச் சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவீர்களா?

போராட்டங்களில் பலனில்லை

எத்தனை போராட்டங்கள், எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை கோரிக்கைக் கடிதங்கள் என பலவாறான நடவடிக்கைகள் எடுத்தும் எந்தப் பலனும் எமக்குக் கிடைக்கவில்லையே?

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகி விட்டது. இருப்பினும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்களை பிணையிலாவது செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களால் எங்களை விடுதலை செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ சிறுவயதில் தவறுகள் செய்திருக்கலாம். அதற்காக இத்தனை வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோமே?

பல நல்ல திட்டங்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் ஜனாதிபதி, எங்கள் மீதும் கரிசனை காட்ட வேண்டும் என்று கைதிகளாகிய நாங்கள் அனைவரும் கண்ணீருடன் கோருகின்றோம்.

எங்கள் அனைவரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்து சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். சிறு வயதில் கைதாகிய நாம் இளமைக்காலம் முழுவதையும், சிறைச்சாலைகளிலேயே கண்ணீருடனும் கவலையுடனும் கழிக்கின்றோம்.

எங்கள் விடுதலைக்காக இறுதியாக தங்களிடம் தாழ்மையுடன் கேட்கிறோம். பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பிணையிலாவது செல்ல எங்களை அனுமதியுங்கள்."

இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஹைகோப் நிதி மோசடி: 3வது சந்தேகநபர் பொன்சேகாவுக்கு 28ம் திகதி வரை விளக்கமறியல்

இராணுவத்துக்கு பொருட்கள் கொள்வனவு செய்ததில் ‘ஹைகோப்’ விலை மனுக்கள் நிதி மோசடி சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று (23) உத்தரவிட்டார்.

முறைப்பாட்டு தரப்பில் தோன்றிய அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி, தமித் தொடவத்தை கேட்டுக்கொண்ட பேரில், தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட சந்தேக நபரான சரத் பொன்சேகாவை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கடற்படை தலைமையகத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தடுப்புக் காவலில் ஏனைய சந்தேக நபர்களுடன் தடுத்து வைக்கப்பட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் கடற்படையின் பொறுப்பிலேயே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவேண்டுமென சட்டத்தரணி தமித் தொடவத்த நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

அரச சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று நீதிமன்றத்தில் கூறியதற்காக சரத் பொன்சேகா சார்பாக வாதாடிய அவரது சட்டத்தரணி நளின் லடுவாஹெட்டி நன்றி தெரிவித்தார்.

தடுப்புக்காவலில் இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினரான சந்தேக நபரை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அமர்வு நாட்களில் அந்த அமர்வுகளுக்கும் அவர் அங்கத்துவம் வகிக்கும் தெரிவுக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் மற்றும் கட்சித் தலைவர் கூட்டங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற அமர்வுகளின்போது குறிப்பிட்ட நாட்களில் அவரை பங்குபெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸாருக்கும் உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பாணின் விலை 4 ரூபாவினால் அதிகரிப்பு

பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.

மேற்படி சங்கத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடியபோதே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்தார்.

கோதுமையின் இறக்குமதி தீர்வை, மீண்டும் அமுல்படுத்தப் பட்டுள்ளதையடுத்து மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள தாலேயே பாணின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாணின் விலை அதிகரிக்கப்பட்ட தைப் போன்றே கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் ஏனைய உணவு வகைகளின் விலையும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்தி புரட்சிக்கு ஊறுவிளைவிக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை


ஜனாதிபதி முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தி புரட்சிக்கு ஊறுவிளைவிக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல எந்தவொரு நபருமே இவ்வாறான எண்ணத்தில் செயற்படுவார்களேயானால் அவற்றுக்கு எதிராக அரசில் அங்கம் வசிக்கும் பிரதி அமைச்சர் என்ற வகையிலும், களனி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற வகையிலும் மக்களுடன் அணிதிரளுவேன் என பிரதியமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆதரிக்க வேண்டியது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கடமையும் பொறுப்புமாகும் என்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஜனாதிபதி அவரது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள நிலையில் தற்போது பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க கடமைப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் படி நாட்டின் இறைமை மக்களில் தங்கியுள்ளது. பாரா ளுமன்றம் இறைமையை பிரதிநிதித்துவம் செய்கிறது. நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடைமுறைக்கேற்ப அரசியலமைப்பை திருத்தும் பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு உள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்த வொரு ஜனாதிபதியும் இரு தடவைகளுக்கு மேல் அப்பதவியில் இருப்பதற்கு வகை செய்யும் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கும் நேரத்தில், சில அரச சார்பற்ற தொண்டர் அமைப்பு களும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில நபர்களும் மக்களை தவறாக வழி நடத்தி, உத்தேச சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சதியில் ஈடுபடுகின்றனர்.

ரணிலின் மாமனாறான ஜே. ஆர். மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது, ரணிலும் அவரது கையாட்களும் கோழைகளைப் போல் அவரிடம் ராஜினாமா கடிதங்களை கையளித்தனர். அதே ரணிலும் அவரது கையாட்களும்தான் இப்போது வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் இரு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாதிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களும் இரு தடவைகளுக்கு மேல் பதவியில் இருக்க முடியாது. அத்துடன் பல தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ தொடர முடியாது.

ரணில் மற்றும் அவரது கையாட்களின் இந்த பைத்தியக்காரத்தனமானது ஜனாதிபதியின் பாரிய அபிவிருத்தி முயற்சிகளையும் சமாதான நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிடும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியாகும். அதன் மூலம் வெளிநாட்டிலிருந்தும், புலிகளுக்கு நிதி உதவி வழங்கும் அரச சார்பற்ற அமைப்புகளில் இருந்தும் பணத்தை பெற்றுக்கொள்ளவே அவர்கள் இதனை செய்கின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

புறக்கோட்டை பகுதியில் கிரனைட் தாக்குதல்



கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியக் கடலில் மற்றுமொரு அகதிகள் கப்பல்





அவுஸ்திரேலியக் கடலில் வைத்து மற்றுமொரு அகதிகள் கப்பல் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட இந்தப் படகில் 51 பேர் இருந்ததாகச் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய எந்த விபரங்களை அவுஸ்திரேலியக் கடலோரக் காவற் படையினர் தெரிவிக்கவில்லை.

இந்த அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...