30 டிசம்பர், 2010

மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

* 21 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 268 பிரதேச சபைகளுக்கு தேர்தல்.

* ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

* அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்.



நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் கலைக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யவென எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப் படும் எனவும் அமைச்சர் கூறினார்.

உத்தேச வட்டார முறைப்படி தேர்தலை நடாத்துவதற்குக் காலம் போதாதிருப்பதால் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைப்படியே தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவங்களை கட்சியின் தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை உத்தேச வட்டார முறைப்படி நடாத்துவதாயின் அதற்கு எல்லைகளை நிர்ணயிக்கவென குறைந்தது இரு வருடங்களாவது காலம் எடுக்கும். ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் கடந்த வருடம் முடிவுற்ற போதிலும் ஒரு வருட காலம் நீடிக்கப்பட்டது. அதனால் மேலும் காலத்தை நீடிக்காது தேர்தலை நடாத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

தற்போது நாட்டில் 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள், 270 பிரதேச சபைகள் உள்ளன. இதேவேளை ஹம்பாந்தோட்டை நகர சபையும், தம்புள்ள மற்றும் கடுவெல பிரதேச சபைகளும் மாநகர சபைகளாக தர முயர்த்தப்பட்டிருப்பதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வருடாந்தம் ரூ. 50 பில்லியன் அரசு மானியம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு







மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபா மானியம் வழங்குகிறது. இதனாலே 19.14 ரூபாவுக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் 14.95 ரூபாவுக்கு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது.

மின் கட்டண உயர்வு 90 அலகுகளில் இருந்து 120 அலகுகளாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட 400 மில்லியன் நஷ்டத்தையும் திறைசேரியே வழங்குவதாகவும் மேற்படி ஆணைக்குழு கூறியது. மின் கட்டண உயர்வு குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த போதே இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உயரதிகாரிகள் மேற்கண்டவாறு கூறினர். இது குறித்து ஆணைக்குழுத் தலைவர் ஜெயதிஸ்ஸ கொஸ்தா கூறியதாவது:-

2008 முதல் மின்கட்டணத்தில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்பொழுது கூட 120 அலகுகள் வரை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே போன்று சிறு, மத்திய கைத்தொழிலாளர்களின் மின் கட்டணங்களும் திருத்தப்படவில்லை.

பெரிய கைத்தொழிலாளர்கள், ஹோட்டல்கள் என்பவற்றின் கட்டணம் 8 வீதத்தினாலே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் முன்னர் ஹோட்டல்களுக்கு கூடதலான கட்டண உயர்வு மேற்கொள்ள சிபார்சு செய்யப்பட்டது.

கடந்த காலங்களின் முடிவு எடுக்கப்பட்ட பின்னரே மக்களின் கருத்து பெறப்படும். ஆனால் இம்முறை மக்களின் கருத்தைப் பெற்றே கட்டணத் திருத்தம் செய்யப்பட்டு ள்ளது. மக்களின் கருத்துக்களை அரசாங்கத்திற்கு முன்வைத்தோம்.

அதன்படி அரசாங்கம் கட்டண உயர்வு தொடர்பில் முடிவு செய்துள்ளது. பெரும்பாலான மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே 120 அலகுகளுக்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 85 வீதமான மக்களின் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது.

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கட்டண உயர்வுக்காக நியமிக்கப்பட்டதல்ல. கட்டணங்களை சீர்திருத்தவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் தமிக குமாரசிங்க கூறியதாவது:- தமது மின் கட்டண பட்டியல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என ஒவ்வொரு பாவனையாளரும் அறிந்து கொள்ள வேண்டும்.

பாவனையாளர்களிடம் இருந்து நியாயமான கட்டணம் அறவிடப்படுவதை உறுதி செய்யவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 6 மாதங்களுக்கே கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அடுத்த 6 மாத காலத்தில் புதிதாக மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படல், எரிபொருள் விலை குறைவு, நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு என்பன இடம் பெற்றால் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆஸ்பத்திரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் என்பவற்றின் கட்டணங்கள் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.

2015 இல் மின்சார சபை நஷ்டமின்றி இயங்கும் நிலை ஏற்படுத்துவது எமது நோக்கமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு


இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்கள் கடற் படையினரால் காப்பாற்றப்பட்டுள் ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய மீனவர்கள் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் செயலிழந்துள் ளது.

உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கடற்படையினர் இந்திய மீனவர்க ளைக் காப்பாற்றிக் கரைக்கு அழை த்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாதகல் மேற்கை அண்மித்த ஆழ்கடல் பகுதியிலேயே இவ் இந்திய மீனவர்கள் மீட்கப் பட்டதாக கடற்படையினர் அறிவித் துள்ளனர்.

இதற்கு முன்னரும் பல தட வைகள் நடுக்கடலில் தத்தளித்த இந் திய மீனவர்களைக் காப்பாற்றியிரு ப்பதாகத் தெரிவித்திருக்கும் கடற் படையினர், நவம்பர் 2 ஆம் திகதி யும் 11 இந்திய மீனவர்களைக் காப் பாற்றியிருப்பதாகவும் கூறினர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கியிருப்பதுடன் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பிய னுப்ப நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும், அவர்களின் படகு திருத்தப் பட்டிருப்பதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் இன்று 800 பேர் மீள்குடியமர்வு


உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

கரைதுறைப் பற்றில் உள்ள 33 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, இதுவரை இங்கு மீள்குடியேற்றப்படாதவ ர்களே இன்று மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைதீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார். மழை காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமாகியுள்ள தாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடி யேற்றப் பணிகள் பெருமளவு நிறைவடை ந்துள்ளதோடு, மேலும் 28 கிராம சேவகர் பிரிவுகளிலே மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

கரைதுறைப்பற்றில் 13 கிராம சேவகர் பிரிவுகளிலும், புதுக்குடியிருப்பில் 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒட்டுச்சுட்டானில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் ஏழு நட்சத்திர ஹோட்டல்

கொழும்பில் ஏழு நட்சத்திர ஹோட்ட லொன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட சங்கிரிலா நிறுவனக் குழுமம் கைச்சாத்திட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் அனுமதியுடன் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது. காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள அரசாங்கக் காணியில் நட்சத்திர விடுதியை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கப் பிரதி நிதிகளும், சங்கரி-லா நிறுவனப் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.

இத்திட்டத்துக்கு 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இதுவரை 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு சங்கிரி-லா நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்த ஹோட்டல் 500 அறைகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சங்கிரி-லா ஹோட்டல் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து சென்றிருந்தார்.

1971ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன் முதலில் சங்கிரி-லா உல்லாச நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, நேபால், ஓமான், தாய்வான், மலேசியா, மாலைதீவுகள் உட்பட பல நாடுகளில் 66 ஹோட்டல்களை சங்கிரி-லா நிறுவனம் அமைத்துள்ளது. ஆசியாவில் சங்கிரி-லா நிறுவனம் முன்னணி நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்டதொரு நிறுவனமாகக் காணப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்


வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை யிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கைதியை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டும் என கோரி கைதிகளில் ஒரு தொகையினர் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதம் அனுஷ்டித்து வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய கைதிகள் உணவு பரிமாறுவ தினை உண்ணாவிரதிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறைச்சாலையில் 86 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து விளக்கமறியலுக்கு கொண்டுவரப்பட்ட பாதிரியார் மீது தாக்குதலை நடத்தியமைக்காக குறித்த கைதி அனுராதபுரம் விளக்கமறியல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அனர்த்தங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுமாறு ஜனாதிபதி பணிப்பு


மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில்

இடம்பெறும் நிர்மாணப்பணிகள் உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பில்



மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகள் யாவும் அவ்வப்பகுதி உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தேசிய சபை அலரி மாளிகையில் கூடிய போதே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.

அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் மக்களுக்கு அறிவூட்டுவதற்கென ஒழுங்கு முறையான வேலைத்திட்டமொன்றைத் துரிதமாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

“காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக வானிலை அவதான நிலையம் மிகவும் விழிப்பாக செயற்படுவது அவசியம்" எனவும் ஜனாதிபதி அவர்கள் இக்கூட்டத்தின் போது வலியுறுத்தினார்.

அனர்த்தங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவது தொடர்பாகவும், திடீர் அனர்த்தங்களின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கும், வாகன சாரதிகளுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அறிவூட்டும் வேலைத்திட்டம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ். மரினா முஹம்மத் இக்கூட்டத்தின் போது குறிப்பிட்டார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் என்பவற்றின் பாடவிதானங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கற்கையை ஒரு அம்சமாக சேர்த்துக்கொள்ளுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேசிய பொருளாதாரத்திற்கு ஆறு பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இக்கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன உட்பட பல அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கெமரா ஊடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணி ஆரம்பித்து வைப்பு



சகல நடவடிக்கைகளையும் துல்லியமாக படம்பிடிக்கும் (சி. சி. ரி. வி) கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை முழுமையாகக் கண்காணிக்கும் பணிகள் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புறக்கோட்டை யிலுள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத் தொகுதியில் அமைக்கப் பட்டுள்ள சி. சி. ரி. வி. கட்டுப்பாட்டு அறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த பாதுகாப்புச் செயலாளர்:

கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட கெமராக்களின் ஊடாக பிடிக்கப்படும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரைகள் ஊடாக சுமார் ஒரு மணித்தி யாலமாக இருந்து பாதுகாப்புச் செயலாளர் அவதானித்தார்.

பல்வேறு கேணங்களில் துல்லியமாக படம்பிடித்த காட்சிகளை திரைகளின் ஊடாக பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர், அவற்றை தானே இயக்கி பார்வையிட்ட துடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண, பொலிஸ் தகவல் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெர்னாண்டோ ஆகியோர் சி. சி. ரி. வி. கெமராக்களின் செயற்பாடுகள் மற்றும் கண்காணிக்கும் விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

23 கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் இந்த சி. சி. ரி. வி கெமரா பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டு ள்ளது.

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் சிறந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2007ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது 228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு நகரிலுள்ள பிரதான இடங்களில் சுமார் 108 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அவற்றை 28 திரைகள் ஊடாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணிநேரமும் பொலிஸ் சி. சி. ரி. வி. கண்காணிப்பு பிரிவினர் அவதானித்து வருகின்றனர்.

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளை கைது செய்கின்ற போது குற்றவாளிகளை பின்தொடர்தல், வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை இந்த கெமராக்கள் மூலமாக துல்லியமாக அவதானிக்க முடியும் என்றார்.

ஜனாதிபதி அவர்களினது ஆலோசனைக் கமைய, பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இந்தத் திட்டம் பொது மக்களுக்கு பாரிய நன்மைகளை அளிக்கும்.

புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், வாகன நெரிசல்களை அவதானித்தல் போன்றவற்றையும் இதன்மூலம் மேற்கொள்ள முடியும் என்றார்.

பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தை கொழும்பு நகரில் உருவாக்குவதற்காக, மெட்ரோ பொலிடன் நிறுவனமும் மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பொறியியல் பிரிவும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு


5000 கோடி ரூபா அரசுக்கு மேலதிக செலவு

தொழில் அதிகாரி - ரூ. 4000 வரை

வைத்திய அதிகாரி - ரூ. 5600 வரை

பல்கலை விரிவுரையாளர் - ரூ. 21000 வரை

அலுவலக உதவியாளர் - ரூ. 2500 வரை

கிராம உத்தியோகத்தர் - ரூ. 3000 வரை

முகாமைத்துவ உதவியாளர் - ரூ. 3050 வரை

வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வின்படி அலுவலக உதவியாளர் முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர் வரையில் 2,500 முதல் 21,000 ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது. இதற்கென 5,000 கோடி ரூபாவை அரசாங்கம் மேலதிகமாக செலவிடவுள்ளது என சம்பள மற்றும் ஊழியர் ஆணைக்குழு வின் இணைத் தலைவர் எம். என். ஜுனைத் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் ஊடாக 13 இலட்சம் அரச ஊழியர்கள் நன்மையடையவுள்ளனர். சுமார் 4 1/2 இலட்சம் ஓய்வூதியக்காரர் களுக்கும் நன்மை கிடைக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

1200 ரூபா முதல் 6000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்புகள் ஜனவரி மாதம் முதல் அமுலாகிறது. 6000 ரூபா முதல் 21,000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பு ஜுலை மாதம் முதல் அமுலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

முகாமைத்துவ உதவியாளரின் அடிப்படை சம்பள படி வரிசையில் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு ஊழியரின் சம்பளம் 1,300 ரூபாவினால் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும். அந்த சம்பள படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ள ஊழியரின் சம்பளம் 3050 ரூபாவினால் அதிகரிக்கும்.

தொழில் அதிகாரி முதல் சம்பள படி வரிசையில் உள்ளவரின் சம்பளம் 1450 ரூபாவினாலும் உச்ச மட்டத்தில் இருப்பவரின் சம்பளம் 4000 ரூபாவினாலும் அதிகரிக்கும்.

அரசாங்க சேவை அதியுயர் தரத்தின் ஆரம்ப சம்பள படி வரிசையில் உள்ள ஒருவரின் சம்பளம் 1620 ரூபாவினால் அதிகரிக்கும். அந்த படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ளவரின் சம்பளம் 4,700 ரூபாவினால் அதிகரிக்கும்.

அரசாங்க சேவையில் தொழில் சார் பிரிவின் கடமைகளின் சிறப்பம்சங்களை முறையாக நடத்திச் செல்லப்படுவதை ஊக்குவிப்பது அத்தியாவசியமானது என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் ஆய்வு நிறுவனங்களிலும் உள்ள உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நீதி மற்றும் விசேடத்துவ முகாமைத்துவ துறைகளில் உள்ளவர்களின் சம்பள அதிகரிப்பு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளதை ஜுனைத் சுட்டிக்காட்டுகிறார்.

அரசாங்க சேவையில் நாடு முழுவதும் பணியாற்றும் ஒருவரின் சம்பளம் 1,750 ரூபாவினால் அதிகரிக்கும். அந்த தரத்தில் உச்ச சம்பள படி வரிசையில் இருப்பரின் சம்பளம் 3,300 ரூபாவினால் அதிகரிக்கும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் சம்பளம் 12,720 ரூபாவில் இருந்து 21,000 ரூபா என்ற ரீதியில் அதிகரிக்கும். இவ்வாறு எதிர்வரும் ஜனவரி மாத சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்துக்கு 5,000 கோடி ரூபாவை மேலதிகமாக செலவிட நேரிட்டுள்ளது.

13 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் இந்த சம்பள அதிகரிப்பின் மூலம் நன்மையடைவார்கள்.

தற்போது 5,250 ரூபா என்ற மட்டத்தில் உள்ள உத்தியோக ரீதியில் இல்லாத அசாங்க மற்றும் பாதுகாப்பு படைகளில் சேவையாற்றுவோருக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப 5,850 ரூபாவுடனான கொடுப்பனவை அவர்கள் பெறலாம். இதேவேளை நிறைவேற்று தரத்துக்குரிய ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வருடம் ஜுலை மாதம் முதல் வழங்கப்படும்.

இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 300 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. அதற்கேற்ப 2,375 ரூபாவாக உள்ள கொடுப்பனவு 2,675 ரூபாவாக அதிகரிக்கும்.

ஓய்வூதிய சம்பளத்தில் இடம்பெறும் முரண்பாடுகளை நீக்குவதற்காக 2003க்கு முன்னர் ஓய்வுபெற்றோரின் ஓய்வூதிய கொடுப்பனவு மாதாந்தம் 750 ரூபாவினாலும் 2003 க்கும் 2006ம் இடையே ஓய்வு பெற்றோரின் ஓய்வூதிய கொடுப்பனவு 250 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டத்தில் யோசனையொன்றை சமர்ப்பித்திருந்தார்.

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பின் மூலம் ஓய்வூதியம் பெறும் நான்கரை லட்சம் பேர் நன்மையடைவர்.
மேலும் இங்கே தொடர்க...