28 ஆகஸ்ட், 2010

இலங்கை மாலுமிகள் கடத்தல் : ரமழான் முடிந்த பின்பே விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மாலுமிகளை ரமழான் நோன்பு முடிந்த பின்னரே விடுவிப்பது சாத்தியமாகும் என இலங்கை தொழில் வழங்குநர் முகவர் நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் மார்ச் மாதம் முதலாந் திகதி எம்.வி சவூதி அரேபிய கப்பலில் இருந்த இலங்கை மாலுமிகள் உட்பட கப்பல் பணியாளர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.

இலங்கை மாலுமிகளை விடுவிப்பதை துரிதப்படுத்தக் கோரி மகஜரொன்றை கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு மேற்படி மாலுமிகளின் குடும்பத்தினர் கையளித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அமெ.தூதரகம் மீது இன்று பாகிஸ்தானில் துப்பாக்கித் தாக்குதல்

பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகத்தை குறிவைத்து இன்று மர்ம நபர்கள் துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்டனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் கூடிய அந்தப் பகுதியில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், திடீரென அமெரிக்கத் துணை தூதரகத்தைச் நோக்கி சுட்டனர்.

தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

4 மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ம நபர்களைப் பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பெஷாவர் நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பார்வையற்றவரைக் கைது செய்தமை மனித உரிமை மீறல் : உயர் நீதிமன்றம்

விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தார் என்று கூறி, பார்வையற்ற ஒருவரைக் கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் என சிறீசெல்வன் ஜூட் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒழுங்குமுறையான விசாரணைகள் இன்றி பார்வையற்ற ஒருவரை விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் எனப் பொலிஸார் எவ்வாறு கைது செய்யமுடியும் என பிரதம நீதிபதி அசோக டீ சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜூட் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில்,

"புனர்வாழ்வு நிலையத்தில் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்"எனத் தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுதலை செய்வதற்கான சாதக நிலையை உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகள் உறவினருடன் இணைய கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு

கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் குடும்பங்களை இணைப்பதற்கான தொடர்பு ஒன்றை இலங்கை குடிவரவாளர்களுக்கு உருவாக்கியுள்ளது.

நேற்று கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் எம் விசன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் கனடாவில் வாழ்ந்து வரும் தங்களின் உறவுகளுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப தொலைத்தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்ப உறவுகளை மீளிணைத்தல் திட்டமானது, ஆயுதந்தாங்கிய போர்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இதர துயர்மிக்க சம்பவங்களினால் தங்களின் குடும்பங்களைப் பிரிய வேண்டியிருந்த குடும்ப அங்கத்தவர்களுக்கு இச்சலுகையை அளித்துள்ளது.

இதன்மூலம், கனடாவில் உள்ள தங்களின் உறவினர்களுடன் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள அகதிகளுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

முதல்நிலை தொடர்பாடல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைக் குடிவரவாளர்களுக்கும் கனடாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கும் முதல்நிலை தொடர்பாடல்களை ஏற்படுத்தும் விதமாக இந்த சேவையை கனடிய செஞ்சிலுவைச் சங்கம் பின்வரும் வழிகளில் விரிவாக்கியுள்ளது.

* எம்விசன்சீ கப்பலில் வந்தோரின் வேண்டுகோளின்படி கனடாவிலோ அல்லது வேறு நாட்டினிலோ வசிக்கும் குடும்ப அங்கத்தவர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

* கனடாவில் வசிப்பவர்கள், எம்விசன்சீ கப்பலில் வந்திறங்கிய தங்களின் உறவினர்கள் இருக்கக் கூடும் என நம்புமிடத்து அவர்களின் வேண்டுகோள்களை அறிந்து செயற்படுதல்.

* செஞ்சிலுவைச் சங்க செய்திப் பரிமாற்றம் மூலமாக கனடாவிலோ வேறு நாட்டிலோ ஆரம்பநிலை தொடர்பாடலை ஏற்படுத்துதல். இந்தச் செய்திப் பரிமாற்றம் கனடாவிலோ அல்லது வெகு தூரத்திலோ இருக்கும் உறவுகளின் உள்ளத்தில் சற்றேனும் அமைதியை ஏற்படுத்தும். ஒவ்வொரு வருடமும் கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் 500இலிருந்து 600 வரையிலான செஞ்சிலுவை செய்திப் பரிமாற்றங்களை அனுப்பவும், பெறவும் வழி செய்கிறது.

கனேடிய செஞ்சிலுவைச் சங்க குடும்ப இணைப்புத் தொடர்பு இலக்கம் 1-888-893-1300 ஆகும்.

கனேடிய எல்லைச் சேவைகள் முகவத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி, கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் 1999ஆம் ஆண்டு தொடக்கம் குடிவரவு தடுப்பு மையங்களைப் பார்வையிட்டு வந்துள்ளது.

அங்குள்ள நிலைமைகள் உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தரத்துடன் ஒப்பிட்டு கண்காணிக்கப்படும். தடுப்பு மையங்களுக்குச் செல்லும்போது கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் பின்வருவனவற்றைக் கண்காணிக்கும்:

* தடுப்பு நிலைமைகள்

* சட்டரீதியான பாதுகாப்பு முறைகள்
* குடும்ப அங்கத்தவர்களுடனான தொடர்பு
பயிற்றுவிக்கப்பட்ட அணிகளாக செயற்படும் பணியாளர்களினாலும் அர்ப்பணிப்பு நிறைந்த தொண்டர்களினாலும் தடுப்பு மையங்கள் பார்வையிடப்படுகின்றன.

கனேடிய செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கம் ஆகியவற்றின் அங்கத்துவ அமைப்பாகும்.

இதனுள் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனம் மற்றும் செம்பிறை சமூகங்கள், சர்வதேச செஞ்சிலுவைக் குழு மற்றும் 185க்கும் அதிகமான தேசிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறைக் குழுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கனடாவிலும் உலகம் முழுவதிலும் மனிதாபிமான வலுவை ஒன்றுசேர்த்து பாதிப்புக்குட்படும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளிமுள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு



முல்லைதீவு வெள்ளிமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளும் பெருந்தொகையான ஆயுதங்களும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் நேற்றுமுன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளன என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார்.

அவர் மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில்,

"குண்டை வெடிக்கச் செய்யக்கூடிய டெடனேடர் 258, எம்.ஜீ.எம்.ஜீ வகை துப்பாக்கி 2696, கைக்குண்டு 306, மோட்டார் குண்டு 35 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மழை நிவாரணத்துக்கு நிதி திரட்ட இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: கபில்தேவ் யோசனை



.



பலத்த மழையினால் பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சர்வதேச நாடுகள் பாகிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவும்- பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி இதற்கு நிதி திரட்டி தர வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனியார் டி.வி. ஒன்றுக்கு கபில்தேவ் அளித்த போட்டியில் கூறியதாவது:-

மழையினால் பாகிஸ்தானில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மக்கள் பெரும் இழப்புகளை சந்தித்து உள்ளனர். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் உதவ வேண்டியது அவசியம்.

இதற்காக இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் கிரிக்கெட் விளையாடி நிதி திரட்ட வேண்டும். இந்த போட்டி இந்தியா அல்லது பாகிஸ்தான் மண்ணில் நடக்க வேண்டும். 2 நாட்டுக்கும் பொதுவான இடத்தில் போட்டியை நடத்தினால் அது எடுபடாது.

இது சம்பந்தமாக நான் இந்திய கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கமும் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் இஜாஸ்பட் சர்வதேச கிரிக்கெட் சங்கத்திடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லவில்லை. அதே போல் பாகிஸ்தான் அணியும் இந்தியா வரவில்லை.

மழை நிவாரணத்துக்காக இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடத்தப்பட்டால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கோ அல்லது இந்திய அணி பாகிஸ்தானுக்கோ செல்லும் நிலை ஏற்படும்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் பொம்மைகளுடன் சேர்த்து புலிக்குட்டியை கடத்த முயற்சி






தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஈராக் செல்ல ஒரு பெண் விமான நிலையத்துக்கு வந்து இருந்தார். அவரது பொருட்களை எக்ஸ்ரே மூலம் விமான நிலைய ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த மொம்மைகளுடன் ஒரு புலிக்குட்டியும் இருந்தது தெரியவந்தது. உடனே காட்டு இலாகாவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த புலிக்குட்டியை பறிமுதல் செய்தனர். அது பிறந்து 2 மாதமே ஆன குட்டியாகும்.

இந்த புலிக்குட்டியை கடத்த அப்பெண் முயற்சி செய்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே அவரிடம் விசாரணை நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

பார்வையற்றோருக்கு செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை





கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டேக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார்.

பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெற செய்தார். இது மருத்துவ உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை
மேலும் இங்கே தொடர்க...

விமானத்துக்கு ஆபத்து என்ற அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி





நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்துக்கு ஆபத்து என்ற அறிவிப்பு ஒலித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானி தவறான பட்டனை அழுத்தியதே இதற்கு காரணம்.

பொதுவாக விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலோ பயணிகளை எச்சரிக்கும் விதமாக, அவசர எச்சரிக்கை அறிவிப்பு பட்டன் ஒன்று பைலட்கள் கையாளும் வகையில் விமானத்தில் இருக்கும். அந்த பட்டனை அழுத்தினால் "விமானம் இப்போது ஆபத்தில் உள்ளது' என பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும். லண்டனில் ஹேத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை புறப்பட்டது. அதில் 275 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, விமானி கை தவறி எச்சரிக்கை பட்டனை அழுத்தி விட்டார்.

இதனால் "பயணிகள் கவனத்திற்கு...அவசர அறிவிப்பு...இப்போது விமானம் ஆபத்தில் உள்ளது' என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் கடலில் விழுந்து இறக்கப் போகிறோம் என்ற அச்சத்தில் செய்வதறியாது கண்கலங்கினர். தவறான பட்டனை பைலட் அழுத்தியதால் தவறு ஏற்பட்டுவிட்டது என்பதை விமானப் பணியாளர்கள் உணர்ந்தனர்.

இதை அடுத்து விமானப் பணியாளர்கள், பயணிகள் அமர்ந்திருந்த இருக்கை நோக்கி ஓடினர். ஒவ்வொரு இருக்கையாகச் சென்று பயணிகளிடம் விமானத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும், தவறுதலாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது என்றும் விளக்கம் அளித்தனர். இதை அடுத்து பயணிகளின் பயம் தெளிந்தது. அவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

பயணிகள் மனதில் பீதியை உண்டாக்கியதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இது குறித்து பயணிகள் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.

இது தவறான அறிவிப்பு என்று விமானப் பணியாளர்கள் கூறிய பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்' என்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம். கிருஷ்ணா





மீனவர்கள் மீதான இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், 20 மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் கிடைத்த தகவலையடுத்து இந்திய அரசு இலங்கை ராணுவத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு போடப்பட்ட கடலோர எல்லை குறித்த ஒப்பந்தத்தின்படியே தமிழக மீனவர்கள் செயல்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். இதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வில் கவனம் செலுத்த வேண்டும்





இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன் பங்கேற்று பேசியது:

உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவும் பாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டதால் பாதிப்பு ஒரு வரையறைக்குள் இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த நெருக்கடிகளிலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்ற எண்ணத்தோடு, இந்த நெருக்கடிக்கு காரணமான தாராளமய கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுடன் எப்படியாவது நீண்ட கால உறவினை ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு துடிக்கிறது. இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அணு உலை விபத்து இழப்பீடு மசோதா ஆகியவை இந்திய மக்களின் நலன்களுக்கு எதிரானது மட்டுமல்ல; நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் நடவடிக்கைகளாகும்.

எங்கள் கட்சியை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த முயற்சிகளை எதிர்த்தும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் எங்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்குவதாக அரசியல் தீர்வு இருக்க வேண்டும்.

அது இலங்கையின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டினையும் வலுப்படுத்தும் என நாங்கள் உணர்கிறோம். அரசியல் தீர்வுக்கு உழைக்கும்போதே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாகப் பார்ப்பதில்லை; வேறுபடுத்தித்தான் பார்க்கிறது.

தமிழ் மக்களின் நியாயமான தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அதேநேரத்தில் விடுதலைப் புலிகளின் அதிதீவிர நடவடிக்கைகளுக்கு எங்கள் எதிர்ப்பினையும் காட்டியிருக்கிறோம்.

போர் முடிந்துள்ள நிலையில், போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் பிரதான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் டி.கே.ரங்கராஜன்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மாவட்ட பட்டதாரிகள் 30 பேருக்கு நேற்று அரச நியமனம் றிஷாட், சந்திரசிறியால் வழங்கி வைப்பு



வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பட்டதாரிகளுக்கு நேற்று சிறுவர் நன் னடத்தை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கைத்தொழில் வாணிப அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, ஹுசைன் பாரூக் எம்.பி., ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் றிஷாட் பதியுதீன் எடுத்துக் கொண்ட துரித முயற்சி யின் பலனாக, வட மாகாண ஆளுநரின் அனுசரணையின் கீழ் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இன, மத பேதம் துறந்து, சமத்துவமாக சகலரும் வாழ வேண்டும் என்ற ஜனாதி பதியின் உறுதியான நிலைப்பாட்டை முன்னெடுக்க நாம் அனைவரும் அணி திரள வேண்டு மென அமைச்சர் றிஷாட் நிகழ்வில் உரையாற்றும்போது கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆசியாவிலேயே வலுவான நாடாக இலங்கை ஜனாதிபதி






ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் தெரிவித்தார்.

“நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். நீங்கள் மக்கள் சேவைக்காக நியமனம் பெற்றிருக்கும் பிரதிநிதிகள். நாமெல்லோரும் மக்கள் சேவையாளர் களன்றி பொது மக்களை நிர்வகிக்கும் அதிகாரிகளல்லர் என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கத்தின் 28 வது வருடாந்த பொதுக் கூட்டம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாம் மூன்றிலிரண்டு பெரும் பான்மை கொண்ட அரசாங்கத்தை அமைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.

நீங்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக கடமையாற்றக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம். அதற்குரிய சக்தியும் உங்களிடமுள்ளது. அதே நேரம் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டம் பொது மக்களையே இலக்காகக் கொண்டிருக்கின்றது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கம் ஒரு பக்கமும், அரச சேவை மற்றொரு பக்கமும் இருக்க முடியாது. அரசாங்கமும், அரச துறையும் இரண்டாக செயற்பட முடியாது. நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது அரச சேவையை சுயாதீனமாக்கி விட்டு சும்மா இருக்கவும் முடியாது. நாமெல்லோரும் பொது மக்களுக்காக சேவை செய்ய இருப்பவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து செயற்பட முடியாது. பொது மக்களின் சேவையாளர்கள் என்ற வகையில் உங்களிடம் பொறுப்பு உள்ளது.

நாட்டை ஆட்சி செய்யும் போது எம்முடன் மிகவும் நெருங்கி கடமையாற்றும் பிரிவினர் தான் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளாவர். இந் நாட்டில் அரசியல் தலைமைத்துவத்திற்கும், மக்களுக்கும் மிகவும் முக்கிய தரப்பினராக இருப்பவர்களே நிர்வாக அதிகாரிகள்.

அன்று அரசாங்க அதிபர்கள் கடிதங்களை எழுதி கையெழுத்திடும் போது கீழ்ப் பணிந்த சேவையாளர்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள் இது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் இன்று மாவட்ட செயலாளர்களோ, பிரதேச செயலாளர்களோ இவ்வாறு கையெழுத்திடு வதை நான் காணவில்லை. நீங்கள் மக்கள் சேவையாளர்கள் என்ற நிலையிலிரு ந்து இப்போது விலகி விட்டீர்களா என்பதையும் நானறியேன். நீங்கள் அவ்வாறு குறிப்பிட்டு கையெழுத்திடாவிட் டாலும் நீங்கள் மக்கள் சேவையாளர்களாகவே இருக்கின்ஹர்கள்.

அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் பொது மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியவர்கள். அரச நிர்வாக சேவை மிகவும் பொறுப்பானது. உங்களிடம் சேவை பெறவருக்கின்ற பொது மக்கள் மீது நீங்கள் அன்பு காட்ட வேண்டும். அவர்களோடு கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களது பதிலில் அவர்கள் திருப்தியோடு திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும்.

கடந்த முப்பது வருடங்களாக அரச சேவை கணக்கில் எடுக்கப்படாத ஒரு துறையாக இருந்தது. உலகில் ஏற்பட்ட வெவ்வேறு வளர்ச்சிகளின் காரணமாக அபிவிருத்தியின் முக்கிய பங்காளியாக தனியார்துறையே கருதப்பட்டது. இதனால் அரசதுறை தனியார் துறைக்கு பலியிடப்பட்டது. பிரதேச செயலகங்களின் நிர்வாக செயற்பாடுகளை கூட தனியார் துறையினரிடம் வழங்கப்பட வேண்டும் என்ற அபிப்பிராயமும் ஒரு காலத்தில் நிலவியது.

முழு உலகமும் ஒரு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது நாம் 2005 ஆம் ஆண்டில் முதற்தடவையாக எமது பயணத்தை நாட்டைக் கருத்தில் கொண்டு மாற்றியமைத்தோம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசதுறை வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை மஹிந்த சிந்தனையில் தெளிவாக குறிப்பிட்டோம். அதன் படி 2005 ம் ஆண்டு முதல் அரச சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இப்போது அரசதுறை வலுவான துறையாக விளங்குகின்றது.

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பெரும் தடையாக இருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டியுள்ளோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்று கடந்த மூன்று நான்கு வருடங்களில் லட்சக்கணக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை கிராம மட்டத்தில் செயற்படுத்தியுள்ளோம்.

இன்று அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவென 250 பில்லியன் ரூபாவையும் ஓய்வூதியம் வழங்கவென 100 பில்லியன் ரூபாவையும் நாம் செலவிடுகின்றோம். இதனை இந் நாட்டு மக்களுக்காக நாம் செலவிடுகின்றோம்.

சுனாமி, வெள்ளம், சுறாவளி அனர்த்தங்களின் போதும், புலிகளின் பிடியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தேடி தப்பி வந்த போதும் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். இதனை நாம் மறந்து விடவில்லை. தப்பி வந்த மக்களில் ஒருவர் கூட ஒரு வேளையும் உணவின்றி இருக்க இவர்கள் இடமளிக்கவில்லை.

தொலை தொடர்பு சாதனங்கள் பாரிய வளர்ச்சி பெற்றிருக்கும் ஒரு நாட்டில் கடிதமொன்றுக்கு பதிலளிப்பதற்கு 14 நாட்கள் எடுக்கப்படுவது நாட்டை முன்னேற்றுவதற்கா அல்லது பின்னோக்கி தள்ளுவதற்கா இந்த நிலைமை தொடர இடமளிக்க முடியாது. நாட்டின் துரித அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார். இந் நிகழ்வில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா, திறைசேரி செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்கா உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை பணிப்பெண் சித்திரவதை விவகாரம்: எஜமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை



சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள் ளாக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட் டமா அதிபரிடம் சட்ட ஆலோசனையை கோரியுள்ளது.

பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மேற்படி பெண் தொடர்பான ஆவணங்களை சட்ட மா அதிபரிடம் நேற்று கையளித்தார்.

இதேவேளை சவூதியிலுள்ள எஜமானர் களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் நேரடியாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் சவூதி அர சின் ஊடாக இதனை எவ்வாறு கையாள லாம் என்பது பற்றியும் பணியகம் ஆரா ய்ந்து வருகிறது.

இலங்கைப் பெண்ணுக்கு மிக மோசமான முறையில் சித்திரவதை நடந்துள்ளமை பற்றி சவூதியிலுள்ள இலங்கை தூதுவர் தனது அதிருப்தியையும் சவூதி அரசுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை வெளிநாட்டமைச்சு கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் மேற்படி பெண்ணின் மருத்துவ அறிக்கையையும் கோரியுள்ளது.

சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதற்கான மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே மற்றும் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆணிகளின் விபரங்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கு பணியகத்தின் மாத்தறை கிளை அதிகாரிகள் நேற்று கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர்.

சவூதியில் இவ்வாறு வீடுகளில் துன்புறுத்தப்படுதல், சித்திரவதைக்குள்ளாக் கப்படுதல் போன்ற சம்பவங்கள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக் குமானால் உடனடியாக இலங்கை தூத ரகத்துக்கு அறிவிக்குமாறு சவூதியிலுள்ள உள்ளூர் பத்திரிகைகள் மூலம் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஆணிகளால் குத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணும் பலமுறை தனது உறவினர்களோடு பேசியுள்ள போதும் பல முறை இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போதும் தனக்கு இவ்வாறான சித்திரவதை நடைபெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.

அச்சம் காரணமாகவே இவர் இவ்வாறு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் எவரும் அச்சமின்றி இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

சவூதி எஜமானர்களிடமிருந்து நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க பணி யகம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறா? : சீமான் கேள்வி

மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறென்றால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வேன் என்றார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

சிறையிலுள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுரைக் கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, செய்தியாளர் மத்தியில் இவ்வாறு கூறினார்.

தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்துவதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுரைக் கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விளக்கம் கூறிய பிறகு வெளியே வந்த சீமான், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை?

நான் பேசியது தவறு என்றால் இந்த குற்றத்தைத் தூண்டி விட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது யார் ? சீமானை சிறையில் அடைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தமிழக அரசு பகல் கனவு காண்கிறது.

மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறு என்றால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தைத் தொடங்கவுமில்லை. தமிழர் வாழ்வுரிமையைக் காப்பதுதான் எமது நோக்கம்.

இந்திய அரசியல் சாசன சட்டம் 21ன் படி தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது தமிழனுக்கு மட்டும் கிடையாதா?" என்றார் .
மேலும் இங்கே தொடர்க...

யாழில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் தாய் ஒருவர் காயம்

யாழ் கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 42 வயதுடைய தாய் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் நகர பாடசாலையில் கல்வி கற்கும் இந்தப் பெண்ணின் சிறிய மகள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்துச் சென்று வீட்டின் அடுப்பில் போட்டதாகவும் அந்தப் பொருள் வெடித்ததனால் 42 வயதுடைய சிவரட்ணேஸ்வரி என்ற தாய் கடும் காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது யுத்தகாலத்தில் பண்ணைப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளாக இருக்கலாம் எனத் தெரிவிக்கும் காவற்துறையினர் மேலதிக விசாரனைகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் மீன்பிடிக்குச் சென்ற மூவரைக் கானவில்லை

மட்டக்களப்பு வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து மீன்படிக்காக கடலுக்குச் சென்ற மூவரைக்காணவில்லை என கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம்திகதி மீன்பிடிக்குச் சென்ற 53வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராஜ், 20 வயதுடைய சிவராஜ் ஜீவராஜ், 41 வயதுடைய செல்லப்பா மனோகரன் ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் தமிழ் தேசியக:கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர்.

அவர் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய குணவர்த்தனாவுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அத்துடன் மீன்பிடி அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ணவுக்கும் இக் காணாமல் போனமை குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப:புலிகள் அமைப்பின் உறுப்பினருமான பி.சகாயமணி காணாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வீதி விபத்தில் 16 வயது மாணவி பலி

மட்டக்களப்பு நகரில் இடம் பெற்ற வீதி விபத்தில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு புதிய பாலச்சந்தியால் துவிச்சக்கரவண்டியில் இன்று காலை 8 மணியளவில் குறித்த மாணவி வந்து கொண்டிருந்தபோது டிப்பர் வாகீனம் மோதியே பலியாகியுள்ளார். சாரதியும் நடத்துனரும் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரி மாணவியான 16 வயதுடைய பற்குனம் கோகிலா எனபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாண்டு க.பொ.த. சா.தரப்பரிட்சைக்குத் தோற்ற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...