9 ஜூன், 2011

வட பகுதியை விட தென்பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே தீர்வு: அரசாங்கம்

புலிகளால் கேட்கப்பட்டதற்கிணங்கவோ அல்லது வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலோ அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. அத்துடன் வட பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அல்ல. தென் பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே அரசியல் ரீதியிலான எந்தவொரு தீர்வையும் அரசாங்கத்தினால் வழங்க முடியும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.

தமிழக அரசாங்கம் எம்மீது எந்தவிதமான தீர்மானங்களை நிறைவேற்றினாலும் மத்திய அரசாங்கத்துடனான உறவு சுமுகமானதாகவே இருக்கின்றது. இந்தியா மட்டுமல்ல, அந்நாட்டு மக்களும் கூட இலங்கை அரசாங்கத்தைப் புரிந்து வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் பதிலளித்து பேசுகையிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்துக்குள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அங்கு இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யாரென்பதையும் அதன் தூண்களாக செயற்பட்டவர்கள் யாரென்பதையும் பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலைமைகளையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

தமிழக அரசாங்கம் எமது நாட்டின் மீது பிரேரணை நிறைவேற்றியிருப்பதாக ரவி கருணாநாயக்க எம்.பி. இங்கு கூறினார். தமிழக அரசாங்கம் இவ்வாறு பிரேரணை நிறைவேற்றுவது புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் 1000 பேரை திரட்டிக் கொண்டு இலங்கைக்கு வரப் போவதாக முன்னாள் அமைச்சர் நெடுமாறன் எமக்கு அச்சுறுத்தல் விடுத்தார். எனினும் அதனை அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியாவுடனான எமது அரசாங்கத்தின் உறவு மிகவும் சுமுகமானதாக அமைந்திருக்கின்றது. அதேபோல் அங்குள்ள மக்கள் எம்மைப் பற்றி புரிந்து வைத்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதளவில் அரசாங்கம் ஒன்றை அமைத்து அமைச்சர்களையும் நியமித்திருக்கின்றார்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. யுத்த வெற்றியை பெற்றுக் கொண்டதை போலவே இந்நாட்டில் நிலையான சமாதானத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளை புரிந்து செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் 23 ஆம்திகதி இடம்பெறவிருக்கின்றது. கூட்டமைப்புடனான இந்தப் பேச்சுவார்த்தையை நேர்மையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றது. அதேபோல் நிரந்தரமான சமாதானத்தையும் அரசியல் தீர்வையும் வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

எனினும் புலிகளால் கேட்கப்பட்டதற்கிணங்கவோ அல்லது வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஏற்பவோ எந்தவொரு தீர்வும் அமையாது. எமது நாட்டுக்கு ஏற்றவாறே எதனையும் வழங்க முடியும். அதேபோல் வட பகுதி மக்கள் மாத்திரம் மகிழ்ச்சியடையும் வகையில் தீர்வுகள் அமைய முடியாது. தென் பகுதி மக்களும் சந்தோசப்படும் விதத்திலேயே அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகள் அமையும்.

ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டிருக்கின்ற வேளையில் இவ்வாறான சவால்களை எதிர்கொள்வது இயல்பானதாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் நரக வேதனை அனுபவிக்கும் பெண்களின் துயரங்களை உணர்கிறேன்:அனோமா

கணவர்மார்களை இழந்து வடக்கில் வாழும் பெண்களின் துயரங்களை நானும் உணர்கின்றேன். ஜனநாயகம் எனக் கூறி எமது கணவன்மார்களை சிறை வைத்தும், கொலை செய்தும், காணாமல் செய்யும் இந்த நாட்டின் கலாசாரத்திற்கு எதிராக அனைத்து பெண்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று புதன் கிழமை லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையில் ஜனநாயகம் எங்கே இருக்கின்றது. வடக்கிலும் சரி தெற்கிலும் சரி பல்வேறு காரணங்ளுக்காக கணவர்மார்களையும் ஏனைய உறவினர்களையும் இழந்து எத்தனை பெண்கள் நரக வேதனையை அனுபவிக்கின்றார்கள். இதனைமாற்றியமைக்க வேண்டும். பெண்கள் தமது உறவுகளையும் உடமைகளையும் இனி வரும் காலங்களில் இழக்க கூடாது. வடக்கு பெண்களின் சொல்லொணாத் துயரத்தை இன்று நானும் உணர்கின்றேன் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கம் கே.பி.யை எந்தச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கின்றது?: ஐ.தே.க

யுத்த வெற்றியாளரான சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ள அரசாங்கம் சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் நபரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை எந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாத்து வருகிறதென ஐ.தே.கட்சி எம்.பி.யான ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று புதன்கிழமை சபையில் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் கே.பி.யை எவ்வாறு பாதுகாக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்நது உரையாற்றுகையில், அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிக்கும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒருவர்.

ஆனால் இன்று எமது நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போதும் கே.பி. க்கு வசதிகளை வழங்கி அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. இந்த நாட்டை அழிப்பதற்கு பங்களிப்பை வழங்கிய கே.பி.யை பாதுகாக்கும் அரசாங்கம், பயங்கரவாதத்தை ஒழித்த சரத் பொன்சேகா இன்று அரைக்காற்சட்டையுடன் சிறைவாசம் அனுபவிக்கின்றார். அவர் செய்த தவறு என்ன?

ஆனால் சர்வதேச பொலிஸக்ஷிர் தேடும் கே.பி. அரச அனுசரணையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் நாட்டில் அவசரகாலச்சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சுதந்திரமாக வாழும் உரிமை இருக்வேண்டுமென்று ஜனாதிபதி கூறுகிறார். இவ்வாறான நிலைமையில் அவரது அரசாங்கத்தின் சில பிரிவுகளில் வேறு சில ஆட்சியதிகக்ஷிரங்கள் நடைபெறுகின்றன.

காலி, களனி, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் அமைச்சர்களது ஆட்சி நடைபெறுகிறது. கட்டுநாயக்கவில் இடம்பெற்ற சம்பவம் இம்மாதிரியான சம்பவம் தானா என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை தனியக்ஷிருக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு நாம் எதிர்ப்பல்ல.

எனினும் அரசு தற்போது கொண்டு வரப்படவுள்ள தனியார் ஓய்வூதிய சட்ட மூலத்தையே எதிர்க்கின்றோம். ஓய்வு பெறும்போது வாழக் கூடிய விதத்தில் சட்ட மூலமொன்றை கொண்டு வந்தால் நாம் அதற்கு ஆதரவளிப்போம்.

சகல அரசியல் கட்சிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்தச் சட்ட மூலம் கொணடு வரப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தியதை அரசு ஒருவித பொருட்டாகவும் கவனத்தில் கொள்ளவில்லை.

அன்று அவ்வாறு பேச்சுவார்த்தைகளை நடத்தி மேற்கொண்டிருந்தால் இன்று ஒரு இளைஞனின் உயிர் பலியாகி இருக்காது.

அது மடடுமல்லாது, இன்னும் நிறையப் பேர் இச் சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் ஏதேச்சதிகாரம் காரணமாகத்தான் இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.

அதற்காகத்தான் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கூறுகிறோம் என்றும் ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அபிவிருத்தியடையும் வரையில் சகல உதவிகளையும் வழங்க சீனா உறுதி: பிரதமர்

இலங்கை மீதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் சீனா மிகுந்த நம்பிக்கையும் மதிப்பையும் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இலங்கை அபிவிருத்தி அடையும் வரையில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்திருக்கின்றது என்று பிரதமர் தி.மு. ஜயரத்ன நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 30 வருட பயங்கரவாதம் இலங்கையில் முறியடிக்கப்பட்டு விட்டாலும் கூட சர்வதேச அளவில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மீண்டும் எழுவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன.

மேலும் புனர்வாழ்வு பெற்றுவரும் புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி வடக்கு கிழக்கில் தென்பகுதியிலும் கூட ஆயுதங்கள் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு தற்போது துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. கடந்த மாதத்தில் கொண்டாடப்பட்ட சம்புத்தத்துவ ஜயந்தியை கொண்டாடுவதில் மூவின மக்களும் இணைந்து கொண்டனர். 30 வருட பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின்னர் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் வடக்கு கிழக்கு அபிவிருத்தியடைந்து வருகின்றது என்பதை நிரூபிப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொக்காவில் கோபுரம் சிறந்த உதாரணமாகும்.

அண்மையில் நான் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு பல தலைவர்களை சந்தித்தேன். அவர்கள் எமது ஜனாதிபதியை புகழ்ந்து பேசுகின்றனர். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்.

மேலும் எமது நாடு முழுமையான அபிவிருத்தி அடையும் வரையில் தேவையான அனைத்து வகையிலான உதவிகளையும் செய்வதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எமக்கு உறுதியளித்திருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கொச்சியில் விடுதியில் தங்கியிருந்த இரு பெண்களுட்பட 9 இலங்கையர் கைது

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியில் உள்ள விடுதி ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட 9 இலங்கையர்கள் சட்ட விரோதமாக வேறொரு நாட்டுக்குச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆட்களைக் கடத்தும் கும்பலால் வேறொரு நாட்டுக்கு அனுப்புவதற்காக அவர்கள் இங்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் எதையும் கூற மறுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் கொல்லம் நகரில் இதே போல் விடுதி ஒன்றில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி தங்கியிருந்த 39 இலங்கை நாட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் உள்ளூர் முகவர் ஒருவரின் உதவியுடன் அவுஸ்திரே லியாவு க்கு செல்ல முயன்றது விசாரணையில் தெரி யவந்தது.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது



பாதுகாப்புப் பிரிவின் 33 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று விசேட சேவைக்கான விருதுகளை வழங்கினார்.

அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

25 வருட காலம் தொடர்ச்சியாக சேவையாற்றிய மற்றும் நன்னடத்தை உள்ள, முப்படைக்கு சிறப்பான சேவையாற்றிய அதிகாரிகளுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இடமாற்றப்பட்டுள்ளனர்

கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலை மாணவர் தலைமைத்துவ பயிற்சி முதற்கட்டம் பூர்த்தி 2ம் கட்டம் 17ம் திகதி ஆரம்பம்


பல்கலைக்கழக மாணவர்க ளுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் முதற் கட்டம் வெற்றிகரமாக முடிவுற்றுள்ள துடன் இரண்டாம் கட்டப் பயிற்சி எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பமாகுமென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

முதற்கட்டப் பயிற்சிகள் 28 மத்திய நிலையங்களில் நடைபெற்றதுடன் உயர் கல்வியமைச்சின் கேள்விக்கமைய 85 சதவீதமான மாணவர்கள் பயிற்சிகளில் பங்கேற்றனர் என தெரிவித்துள்ள அவர், இரண்டாம் கட்டப் பயிற்சியில் 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டப் பயிற்சிகளுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து ள்ளதாகவும், மதவாச்சி கடற்படைப் பயிற்சி மத்திய நிலையத்திலும், சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அகடமியிலும், இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை தலைமைத்துவப் பயிற்சிகளுக்கு 6000 மாணவர்களையும் 4000 மாணவிகளையும் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

கடிதம் கிடைக்காத மாணவர்கள் உயர்கல்வியமைச்சின் (சூசூசூ.ஙிச்கீடீ.கிச்சு.ங்கூ) இணையத்தளத்தினூடாக அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முதற்கட்டமாக தலைமைத்துவப் பயிற்சி இம்மாதம் 11ம் திகதி நிறைவடை வதுடன் அதில் பங்குபற்றிய மாணவர்கள் தமது ஊர்களுக்கு திரும்ப வசதியாக போக்குவரத்து அமைச்சின் மூலம் பஸ் வண்டிகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய மாணவர்களுக்கு மடிக்கணனிகள்

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மூன்று வாரகால தலைமை த்துவப் பயிற்சி நிறைவு பெற்றவுடன் அடுத்த நடவடிக்கையாக இவர்களுக்கு ஆங்கில அறிவு, கணனி மற்றும் பயிற்சி செயலமர்வு மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி. கணேகல தெரிவித்தார்.

இந்த பயிற்சிகள் நடந்த பின்னர் பல்கலைக்கழக கல்வியை ஆரம்பிக்கும் இந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் மடிக்கணனி களையும் அன்பளிப்புச் செய்யும். இவர்கள் பட்டம் பெற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி தொழில் செய்யும் போது இந்த மடிக்கணனிகளுக்கான செலவுத் தொகையை சிறிது சிறிதாக அரசாங்கத்திற்கு திரும்ப செலுத்துவதற்கும் வகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மாணவ, மாணவியர் நல் ஒழுக்கத்துடன் பல்கலைக்கழக கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் இதற்கான செலவை அறவிடாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்குமென்று உயர்கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் அரசியல் நடத்துவதற்கு பதில் முழுமையாக கல்வியில் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகங்களின் அமைதியையும், கெளரவத்தையும் இந்த மாணவர்கள் கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையும் தங்களுக்கு இருக்கிறதென்றும் இவர்கள் பல்கலைக்கழங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ள பகிடிவதை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, இவ்விதம் தலைமைத்துவ பயிற்சியைப் பெறும் பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இப்போது கடமை, கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூடிய வகையில் அவர்களின் மனோ நிலை மாற்றமடைந்திருக்கிறதென்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் சர்வதேச செயற்பாடு தளம் இலங்கையில் மீண்டும் மோதலை தூண்டுகிறது மக்களையும், நாட்டையும் பாதுகாக்கவே அவசர காலச்சட்டம்





பயங்கரவாத செயற்பாடுகள் இலங்கையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சர்வதேசத் திலுள்ள தொடர்புகளின் ஊடாக அவர்களது செயற்பாடுகள் முடிவடையவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள புலிகளின் ஆதரவு அமைப்புகளும் மீண்டும் புலிகளை செயற்பட வைப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன என பிரதமர் டி. எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று புதன்கிழமை பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் தி. மு. ஜயரட்ண அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார்.

பிரதமர் தொடர்ந்து பேசும் போது 2600 ஆம் ஆண்டு சம்புத்த ஜயந்தி மற்றும் படையினரின் வெற்றி விழா என்பன கொண்டாடப்பட்டதை நினைவு கூர்ந்து பேசினார். தொடர்ந்தும் பிரதமர் பேசும் போது:-

வடக்கு கிழக்கு இன்று துரித அபிவிருத்தியை கண்டு வருகிறது. இதற்கு ஒரு உதாரணமாக கொக்காவில் கோபுரம் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வசதிகள் யாவும் 35 வருடங்களின் பின்னர் இம்மக்களுக்குக் கிடைத்துள்ளது.

இதற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களையும் நினைவு கூர வேண்டும்.

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் எனக் கருதப்படுவர்கள் கூட இன்று புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். படிப்படியாக புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலிகள் விடுதலை பெற்று வருகின்றனர். இதுவரை 6924 பேர் விடுதலையாகியுள்ளனர்.

விடுதலையானவர்களை சமூகத்தில் நல்ல பிரஜையாக மிளிரச் செய்வதே அரசின் அடுத்தகட்ட செயற்பாடாகவுள்ளது.

இதே வேளை வெளிநாட்டில் செயற்பட்டு வரும் புலிகள் அமைப்பும், சில அரச விரோத சக்திகளும் ஒன்றிணைந்து இவர்களை மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளுக்குள் இழுக்க முற்படுகிறார்கள்.

புலிகளினால் மறைத்து வைக்கப் பட்டுள்ள வெடிபொருட்கள் ஆயுதங்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. புனர்வாழ்வு பெறும் புலி உறுப்பினர்களினூடாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

இதே போன்று மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்தை கைவிட்டு தென்பகுதிக்கு தப்பி வந்த புலிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் முக்கியஸ்தர்களை கைது செய்தல் வெடிபொருட்களை மீட்டல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் பாதுகாப்புக்காகவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் இதை நாம் செய்ய வேண்டியது எமது பொறுப்பு என்பதை எமது அரசு உணர்ந்து செயற்படுகிறது.

சர்வதேச ரீதியில் கிடைத்த நிதியின் ஊடாகத்தான் புலிகள் அமைப்பு இயங்கி வந்தது. புலிகளுக்கு ஆதரவாக சர்வதேச மட்டத்தில் வலையமைப்புகள் இயங்கின. இதனூடாக மீண்டும் புலிகளை பலம் பெற வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

அத்துடன் சீனாவுக்கு விஜயம் செய்த போது சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி வழங்க முன்வருவதாக உறுதியளித்தாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்





இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளை ஒடுக்க வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கடந்த மாதத்தில் நாம் பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தினோம்.

கண்ணிவெடி அகற்றுதல், முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகமயமாக்கல், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை குறைத்தல், தமிழ் பேசும் பொலிஸாரை நியமித்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் நாம் சர்வதேச சமூகத்தை தெளிவு படுத்தினோம்.

எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஜனாதிபதியின் பங்களாதேஷ் விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. ஓமான் அரசுடனும் பேச்சு நடத்தினோம். குவைத், பஹ்ரைன், எமிரேட் போன்ற நாடுகளுடன் மட்டுமன்றி இந்திய தலைவர்களுடன் பேசினோம்.

அந்த நாடுகளுக்கு எமது நாடு தொடர்பில் நல்ல அபிப்பிராயமே உள்ளது. வெளிநாட்டு உறவின் போது தோஷங்களுக்கு மட்டும் மட்டுப்படாது அந்த நாடுகளுடனான நல்லுறவின் மூலமே பயன்பெற வேண்டும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான உறவு சிறந்த மட்டத்தில் உள்ளது. ரயில் பாதை அபிவிருத்தி, விவசாய முன்னேற்றம் என்பனவற்றுக்கு இந்தியா உதவி வருகிறது.

சீன விஜயத்தின் போது எமக்குக் கிடைத்த ஒத்துழைப்பு ஊக்கமளிக்கக் கூடியதாக உள்ளது. தமது பிரச்சினையை தாமே தீர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தினாலும் மக்களினாலும் மட்டுமே முடியும் என சீனப் பிரதமர் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாட்டுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எமது நாட்டின் பொருளாதார செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் உதவி வருகிறது. எமது நாட்டுக்கு தொடர்ந்து உதவ சீனா இணங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் நடந்த பொதுநலவாய வெளிநாட்டமைச்சர்களின் மாநாட்டில் பல நாடுகளுடன் பேசினோம்.

சிங்கப்பூர் விஜயத்தின் போது இந்துசமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு பற்றி பேசினோம். இலங்கை முகம் கொடுக்கும் பாதுகாப்பு பிரச்சினை குறித்து அறிவூட்டினோம். பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் லியம் பொக்ஸ், ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர், அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் போன்றோரையும் சந்தித்து இலங்கை நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினோம்.

அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் ஸ்ரீபன் ஹசினை இன்று (9) சந்திக்க உள்ளேன்.

சர்வதேச சமூகத்துடன் சிறப்பான முறையில் இலங்கை செயற்படுகிறது. எமது நிலைப்பாட்டை தெளிவாக உலகிற்கு எடுத்துக்கூறி வருகிறோம். இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக செயற்பட சர்வதேச சமூகம் தரும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரிவினைவாத கருத்துணர்வு ஒழியும் வரை அவசரகாலச் சட்டம் அவசியம் பாராளுமன்றத்தில் 442 வது தடவை நீடிப்பு: அமைச்சர் டளஸ்


442 ஆவது தடவையாக அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் நடைபெறுகிறது. பிரிவினைவாத கருத்துணர்வு முழுமையாக ஒழிக்கப்படும் வரை அவசரகாலச் சட்டம் குறிப்பிட்டளவில் அமுலில் இருக்க வேண்டும். அது வரை கட்டம் கட்டமாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:-

1953 ஆம் ஆண்டு ஐ. தே. க. அரசு முதன் முதலில் அவசரகாலச் சட்டம் குறித்து சபையில் விவாதித்தது. 1979 முதல் வடக்கில் உருவான பயங்கரவாதத்தை தடுக்க அவசரகால சட்டத்தை நீடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜனநாயக நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்துவது பொறுத்தமற்றது என்பதே அனைவரதும் நிலைப்பாடு.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போதும் பிரிவினைவாத கருத்துகளும் அதற்கு உதவும் குழுக்களும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இன்னும் காணப்படுகிறது. இதனால் அவசரகாலச் சட்டத்தின் சில சரத்துகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் மரணம் என்பது சாதாரண சம்பவமாக இருந்தது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் மரணத்துக்கு பெறுமதி ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க சம்பவத்தில் அது புலனானது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தொழிலதிபரின் மனைவி, 2 மகள்கள் சென்னையில் தீக்குளித்து மரணம்




சென்னை சேத்துப்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இலங்கை தொழிலதிபரும் அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் உள்ள லாமக் அவென்யுவில், ராயல் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 7 வீடுகள் இருக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பெங்களூரில் வசிக்கிறார். இந்தக் குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் ஆடம்பரமானவை ஆகும்.

ஏழு வீடுகளில் 4 வீடுகளுக்கு மட்டும் மாதம் ரூ. 50 ஆயிரம் வாடகை கொடுத்து 4 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். மற்ற 3 வீடுகள் காலியாக உள்ளன. இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானச்சந்திரன் (வயது 55) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்து குடியேறினார். இவரது மனைவி ஜெயா (வயது 50). இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூத்த மகள் பெயர் சவுமியா (வயது 15), கடைசி 2 மகள்களும் எட்டு வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகள் ஆவார்கள். இலங்கை தமிழர்களான இவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து இங்கு குடியேறியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் தொழிலதிபர் ஞானச்சந்திரன் வீட்டில் இருந்து பயங்கர புகை கிளம்பியது. இதைப் பார்த்து பக்கத்து 3 வீடுகளில் வசிப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே ஓடிவந்தனர். அந்தத் தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் பங்களாவாசிகள் ஆவார்கள். சத்தம் கேட்டு அனைவரும் தெருவில் கூடினார்கள்.

இது குறித்து தீயணைப்புத் துறைக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு அதிகாரிகள் பிரியா, லோகநாதன் ஆகியோர் தலைமையில் இரண்டு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொலிஸ் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பவானீஸ்வரி, சேத்துப்பட்டு பொலிஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் பொலிஸ் படையோடு விரைந்து வந்தார்கள்.

தீப்பிடித்து எரிந்த தொழிலதிபர் ஞானச்சந்திரனின் வீட்டுக் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்தக் கதவை உடைத்து வீட்டுக்குள் போக முயன்றனர். ஆனால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக இருந்தது. பயங்கர அனல் அடித்ததால் யாரும் உள்ளே போக முடியவில்லை. அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அப்போது, தொழிலதிபர் ஞானச்சந்திரன் தீக்காயங்களுடன் வெளியே வந்தார். அவரது மகள் சவுமியா உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் நிர்வாண கோலத்தோடு வெளியே ஓடிவந்தார். எதுவும் உடனடியாக தெரியவில்லை. ஞானச்சந்திரனையும், சவுமியாவையும் உடனடியாக அப்பலோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

வீட்டுக்குள் 3 படுக்கை அறைகள். பெரிய வரவேற்பு அறை, சமையலறை, பூஜை அறை என பல அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தபோது, ஒரு படுக்கை அறைக்குள் ஜெயாவும், ஒரு மகளும் தீயில் எரிந்து கரிக்கட்டைகளாக பிணமாகக் கிடந்தனர். இன்னொரு மகள் குளியலறைக்குள் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டை கோலத்தில் பிணமாகக் கிடந்தார்.

அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தபோதும் இவர்களைப் பற்றிய பெயர், விவரங்கள் கூட தெரியவில்லை. அவர்கள் வீட்டில் வேலை செய்த பாப்பாத்தி என்ற பெண் மட்டும் ஒரு சில விபரங்களை மட்டும் கூறினார். பின்னர் படிப்படியாக, பொலிசார் தகவல்களை சேகரித்தனர். இவர்கள் குடும்பத்தோடு தீக்குளித்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை மூலம் கருதுவதாக தீயணைப்பு படையினரும், பொலிசாரும் கூறினார்கள்.

சமையல் எரிவாயுவை திறந்துவிட்டு தீவைத்துக் கொண்டார்களா? அல்லது மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும், தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இரவு 10.30 மணிக்கு மேல் தான் பிணமான கிடந்த 3 பேரின் உடல்களையும் பொலிஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொழிலதிபர் ஞானச்சந்திரனின் மனைவி, மகள்களை தீவைத்து எரித்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஏனென்றால், அவருக்கு தீயினால் அதிக காயம் ஏற்படவில்லை.

வேலைக்காரப் பெண் பாப்பாத்தியிடம் விசாரித்தபோது, அவர்கள் அதிகமாக யாரிடமும் பேசமாட்டார்கள். எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர்களிடமும் கூட எதுவும் பேசுவதில்லை. எப்போதும் கதவைப் பூட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஏதாவது வேலை சொன்னால் மட்டும் நான் செய்வேன் என்று சுருக்கமாகக் கூறினார்.

பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, தொழிலதிபர் ஞானச்சந்திரனிடம் ஆஸ்பத்திரியில் விசாரணை நடந்து வருகிறது. ஞானச்சந்திரன் மட்டுமே பேசக்கூடிய நிலையில் இருப்பதால், அவர் மூலம் உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜிழிலி மாமா ரி.எம். வி. பி. உறுப்பினரல்ல: செய்திக்கு மறுப்பு

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை (ரி. எம். வி. பி.) தொடர்புபடுத்தி வெளியான செய்தியை அக்கட்சி மறுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ சி. கைலேஸ் வரராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தையும் மக்களுக்கான அபிவிருத்தியினையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது செய்துவரும் இத்தருணத்தில், அக்கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையைக் கூட பெற்றிராதவர் சந்திவெளி மாமா எனப்படும் வடிவேல் மகேந்திரன்.

உண்மை இவ்வாறிருக்க நேற்று புதன்கிழமை தினகரன் பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளியான செய்தியில் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின், முக்கியஸ்தர் என்று இன்ரப்போல் பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் வடிவேல் மகேந்திரனை குறிப்பிட்டிருப்பதை எமது கட்சியின் உயர்பீடம் மறுத்துரைக்கின்றது.

இன்ரப்போல் தேடப்படும் பீ. எல். ஓ. மாமா தற்போது சந்திவெளிப் பகுதியில் மறைந்து இருக்கலாம் என்றும், இவர் வேறு ஒரு ஆயுதக் குழுவைச் சேர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஆதலால், இன்ரப்போலால் தேடப்படும் சந்திவெளி மாமா எனப்படும் வடிவேல் மகேந்திரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் என்ற அந்தஸ்தைக் கூடப் பெற்றிராத நிலையில், குறித்த நபரை எமது கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர் என்று குறிப்பிட்டிருப்பது வேடிக்கைக்குரியது. இந்நிலையில், குறித்த பி. எல். ஓ. மாமாவை எமது கட்சியோடு தொடர்புபடுத்தி செய்தி வெளிப்பட்டதை எமது கட்சி மிக வன்மையாக மறுத்துரைக் கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க கோரிக்கை


போராட்டத்தில் பங்குகொண்டோர்
காணாமல் போயுள்ளவர்களைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதோடு அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் இலங்கையர் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிவிட்டபோதிலும், யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவ்வாறு விடுதலை செய்யப்படாதவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டும் என்பதுடன், அவர்களை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டு வலியுறுத்தினர்.

இலங்கையில் சுமார் 12 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அரச தரப்பினால் இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசக்தி டிலானி



சிவசக்தி டிலானி

சிவசக்தி டிலானி என்ற 15 வயது சிறுமியும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார். தனது சகோதரன் சுற்றிவளைப்பு ஒன்றின்போது கொல்லப்பட்டதாகவும், தனது தந்தை கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போய் 4 வருடங்களாகிவிட்டதாகவும், அவரைப் பற்றிய தகவல் எதுவும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அழுத வண்ணம் தெரிவித்தார்.

தாங்கள் எவருக்கும் எதுவும் செய்யாத போதிலும், தங்களுக்கு இந்தத் துயரம் நேர்ந்திருப்பதாகவும் பாடசாலை செல்ல வேண்டிய நேரத்தில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு வரநேர்ந்திருப்பதாகவும் அந்தச் சிறுமி கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது பொருளாதாரத் தடை" ஜெ ஜெயலலிதா



இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகைகள் காணப்படும் வரையில் இலங்கை அரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டும் எனக்கோரும் தீர்மானம் ஒன்று இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட்து.

விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டங்களில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஐ.நா நிபுணர் குழுவே கூறியிருக்கும் பின்னணியில், அத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் அவையினை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அத்தீர்மானம் மேலும் கோருகிறது.

தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டும் எனவும் அத்தீர்மானம் வற்புறுத்துகிறது.

மீனவர்கள் நலன்

கடந்த ஜூன் 3ம் தேதி மோசமான வானிலையால் இலங்கைக் கடற்பகுதிக்குள் தவறுதலாக சென்று கைதான தமிழக மீனவர்கள் 4 பேரை விடுவிக்குமாறு இலங்கையை வலியுறுத்தக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஜெயகுமார், பிரபாத், சுந்தர், மாரிமுத்து ஆகிய நால்வரும் புயலில் சிக்கி நைனாத் தீவுப் பகுதியில் கரை சேர்ந்தனர். அவர்கள் 3ம் தேதி ஊர்காவற்துறை போலீஸ் சோதனைச் சாவடியில் பின்னர் சரணடைந்தனர். ஜூன் 17ம் தேதிவரை அவர்கள் போலீஸ் காவலில் இருக்கவேண்டும் என் நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அவர்கள் குறித்து இலங்கை அரசிடம் தகவல் அளித்து, அந்த 4 மீனவர்களையும் உடனடியாக தமிழகத்துக்கு மீட்டு வர இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...