21 ஜூன், 2010

எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு



எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.

கிறிஸ்துவுக்கு முன் 1664 - 1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்வை மேற்கொண்ட, அவுஸ்திரேலிய வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், தலைநகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே எமது நோக்கம் என்கின்றனர்.

டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள் , கோயில்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன.

ஆஸி. ஆய்வாளர்கள் குழு 1975 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் பெண் போராளிகளுக்கு இன்று முதல் வேலைவாய்ப்பு



புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக் கொண்ட முன்னாள் பெண் புலிப் போராளிகள் 400 பேருக்கு இன்று முதல் ஆடை தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் உள்ள இரண்டு புனர்வாழ்வு முகாம்களில் இவர்கள் பயிற்சிகளை முடித்துள்ளனர். இவர்கள் நேற்று பஸ்களில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலைகளில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு படையினரின் தடுப்புக் காவலில் இருந்து இவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு மாதாந்தம் 12 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கவும் குறித்த தொழிற்சாலை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

400 பெண் போராளிகளும் பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் தங்க வைக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கணினி, அழகுக் கலை, மின்சார தொழிற்நுட்பம், கட்டிட நிர்மாணம் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதமாக 200 இலங்கையர் ஆஸி.நோக்கி பயணம்:இலங்கை அரசு

சட்டவிரோதமாக 200 இலங்கையர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த இலங்கையர்கள் பல நாட்களாக இவர்கள் பயணித்து வருவதாகவும், படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் சேனக வெல்கம்பொல, அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

'சன் சீ' என்ற படகில் 200 இலங்கையர்கள் சென்றிருந்ததாகத் தகவல் கிடைத்திருந்த போதிலும், எந்த நாட்டுக் கொடியுடன் குறித்த படகு பயணித்திருந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரிய வரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படகொன்றில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கனடாவை நோக்கிப் பயணித்திருப்பதாகவும், பின்னர் குறித்த படகு அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் ஆஸி. ஊடகமொன்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள்-நளினியை விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள்-நளினியை    விடுதலை செய்ய வேண்டும்:    திருமாவளவன் அறிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தாய்த் தமிழை வழக்கு மொழியாக்கிட வலியுறுத்தி உயர்நீதிமன் வழக்கறிஞர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாகும்வரை உண்ணாவிரத அறப்போர் நடத்தி வருகின்றனர். தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவையில் 3 ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பாக இந்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.

இந் நிலையில் தான் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வற்புறுத்தி தமது உயிரைப்பணயம் வைத்து களமிறங்கியுள்ளனர்.

இளமையும், மூப்பும், புதுமையும், பழமையும் ஒருங்கே பெற்ற உயர் தனிச் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு உலகரங்கில் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் கலைஞரின் அளப்பரிய முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடை பெறுகிறது.

தமிழை உயர்நீதி மன்றத்தின் அலுவல் மற்றும் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என தமிழக அரசையும், விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.

அவ்வாறு செம்மொழியாம் தமிழ் மொழியை வழக்கு மொழியாக வென்றெடுப்பது கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றியாக அமையும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் தமது சாதனைப்பட்டியல் வரிசையில் தமிழ்மொழியை வழக்கு மொழியாக்கிய சாதனையையும் இணைத்துக் கொள்ளும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இம் மாநாட்டையொட்டி நீண்ட காலமாக விசாரணை இல்லாமல் செங்கல்பட்டு மற்றும் பூந்த மல்லி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு ஈழத் தமிழர்களையும், ஆயுள் காலத்தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறைப்பட்டிருக்கும் நளினி, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளான இஸ்லாமிய இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

செம்மொழி மாநாட்டையொட்டி சென்னை பெரு நகரத்தில் கடைகளில் விளம்பர பலகைகள், தமிழில் எழுதப்பட வேண்டுமென சென்னை பெருநகர மேயர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. ஆனால் இந்த அறிவிப்புக்கு மதிப்பளித்து விளம்பரப் பலகைகள் முழுவதுமாக இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

எனவே எழுத்து மாற்றமாக அமையாமல் சொற்கள் மாற்றமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், சென்னை பெருநகரத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு மத்திய அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு







இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் கொலை, மிரட்டல், கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 1990-ம் ஆண்டு கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலையானார்.

அதன் பிறகு இந்த வழக்குகளின் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் குற்றவாளியாக சென்னை கோர்ட்டு அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு வந்தார். அப்போது சென்னை யைச் சேர்ந்த வக்கீல் புகழேந்தி ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டடக்ளஸ் தேவானந்தா இலங்கை மந்திரியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை போலீஸ் தரப்பில் மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்ப தாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி இதில் பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத் துக்கு நீதிபதிகள் ஒத்தி
வைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சூரியன் புறப்பகுதியில் ரம்மியமான இசை






லண்டன்: சூரியனின் வெளிபுறத்தில் உள்ள காந்தப் புலத்தில் தீ ஜுவாலைகளால் ஏற்படும் அசைவுகளிலிருந்து ரம்மியமான இசை உருவாவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிரிட்டனின் ஷெப்பீல்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரியனை பற்றி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ராபர்டஸ் ஒன் பே என்ற விஞ்ஞானி தலைமையிலான குழு, சூரிய காந்தப் புலத்தில் தீச்சுடர்களின் அசைவுகளால், கிடார் கருவியிலிருந்து எழும் இசையை போன்றும், புல்லாங்குழல் போன்ற காற்று கருவிகளிலிருந்து வரும் இசையை போன்ற ஒலி எழுவதாக கண்டறிந்துள்ளனர். இந்த ஓசையை வைத்து சூரியனில் நெருப்பு சுடர்கள் உருவான விதத்தையும் கண்டறிய முடியும் என இந்த விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சூரியனின் தீ ஜுவாலைகள் 60 ஆயிரம் மைல் நீளமுள்ளவையாக இருக்கும், என கூறும் இந்த விஞ்ஞானிகள், தீ ஜுவாலைகளின் அதிர்வுகளிலிருந்து அழகான இசை பிறப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படி அதிர்வுகளில் இருந்து எழும்பும் ஓசை இருக்குமோ அதுபோல இந்த ஓசை இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

செம்மொழி மாநாடுக்கு புலிகள் ஆதரவு: பாராட்டுகிறார் முதல்வர்





சென்னை: "தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள, விடுதலைப்புலிகளின் அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதாக' முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகள், "திடீர்' அறிக்கை வெளியிட்டுள்ளனர். புலிகளின் இந்த அறிக்கை, நேற்றைய, "தினமலர்' நாளிதழில் வெளியானது. புலிகளின் இந்த திடீர் அறிக்கை, உலகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "இந்த அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களைப் பாராட்டுவதாகவும்' முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி, அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகிற இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு, செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். "தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்கு எங்கள் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு, வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா' என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துக்களில் எள்ளளவும் வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

"இலங்கையில் நடந்த அவலத்தை, அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்து விடுமோ என்று அஞ்சுகிறேன். சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, "அவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல' என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினர், இன்னமும் குலவிக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.

இந்த நேரத்தில், மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கிவிடாது; ஒரு காலத்தில் உதறிக்கொண்டு, எழுந்து பேசத்தான் போகிறது. இதற்கிடையே, எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போல பதறித் துடித்து, ராமாயணத்து கூனி போல பாட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போது, "இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு' என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எங்கள் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்' என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அறிக்கையை வரவேற்று, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் எந்த இடத்திலும், "விடுதலைப்புலிகள்' என்ற வாசகத்தை பயன்படுத்தாமல், "அமைப்பு' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...





கிளிநொச்சி, முல் லைத்தீவு மாவட்டங்களில் மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்துவதற்கு ஏதுவாக காணிக்கச் சேரிகளை உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படவு ள்ளதாக மீள்குடியேற்ற பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தினுள் உடனடியாக காணிக் கச்சேரியை அமைக்குமாறு பிரதியமைச்சர் கருணா, யாழ். அரச அதிபர் கே. கணேஷிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகு மாரிடமும் வேண்டுகோள் விடுக்கவுள்ள தாகவும் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அனைவருக்கும் அவர்களது சொந் தக் காணியில் மீளக்குடியமர அனுமதி வழங்கப்படும். அதற்கு அவர்கள் காணிக் குரிய உறுதியை சமர்ப்பிக்க முடியும். உறுதியை பெற்றுக் கொள்வதற்காகவே காணிக் கச்சேரிகள் அமைக்கப்படவுள்ளன.

புலிகளால் பலாத்காரமாக வெளியேற் றப்பட்டு, உரியவர்கள் அல்லாத சிலரிடம் காணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவங் களும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவுடன் சென்று நிலைமை களை நேரில் கண்டு ஆராய்ந் ததுடன் துரித மீள்குடியேற்ற விடயத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்தித்து பேசவுள்ளதாகவும் கருணா அம்மான் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவில் இடம்பெயர்ந்தவர்கள் 100 குடும்பங்கள் இருப்பின் அவர்கள் இப்போது 125 குடும்பங்களாக பெருக்க மடைந்து குறிப்பிட்ட 125 குடும்பங் களுக்குமே காணி தேவையெனக் கூறும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறிய பிரதி யமைச்சர் முரளிதரன், அவ்வாறு காணிகள் வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

100 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பின் அந்த 100 குடும்பங்களுக்குரிய காணிகள் வழங்கப்படும். அதற்குரிய தாய் காணி உறுதிகளை அவர்கள் காண்பிக்க வேண்டும். காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளத்தில் அதிவலு மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாணவன் பலி






அதி வலு மின்சார மின் கம்பி யொன்று அறுந்து விழுந்ததில் புத்தளம் நகரில் உயர்தரமாணவ ரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந் துள்ளார். அம்மாணவரின் சகோதரி யும், அவரது கணவரும் இச்சம் பவத்தில் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சகோதரி கர்ப்பிணிப் பெண்ணெனத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு 7.40 மணியள வில் புத்தளம் நகரில் ஐந்தாம் குறுக்குத் தெருவிலுள்ள ஜே. பி. லேனில் இடம்பெற்றதாக பொலி ஸார் கூறினர். தொலைக் காட்சி அண்டனாவைச் சரிசெய்யும் போது மின் கம்பியில் விழுந்ததால் இச்சம் பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

என்றாலும் இது ஊர்ஜிதப்படுத்தப் படவில்லை. இச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பவர் புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி பயிலும் அப்துல் ஜப்பார் முஹம் மத் ஆஷிக் (வயது 19) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சகோதரியான பாத்திமா ரிஸானாவும் (வயது 23), அவரது கணவரான முஹம்மத் பெளமி (வயது 28) யுமே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத் திலிருந்த தென்னை மரமொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

பதினொராயிரம் வோர்ல்ட் அதிவலு கொண்ட மின்சார கம்பியொன்று அறுந்து விழுந்ததன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான புலன் விசாரணை களைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இம்மின்கம்பி தானாக அறுந்து விழுந்ததா, அல்லது தொலைக்காட்சி அன்டனாவை சரிசெய்யும் போது அது மின்கம்பி மீது விழுந்ததால் அறுந்ததா? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

3 வயது, 5 வயது, 8 வயது: ஒரே குடும்பம் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகள் கண்டுபிடிப்பு





குடும்பஸ்தர்களினால் கைவிடப்ப ட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளை ரங்கலை பொலிஸா ரினால் நேற்று கண்டெடு க்கப்பட்டு ள்ளன. தெல்தெனிய பொலிஸ் பிரிவிலுள்ள தெல்தெனிய - தங்கபுவ எனும் பிரதேசத்தில் வைத்து இக்குழந்தை கள் மூவரும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்ப ட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று குழந்தைகளும் ஒற்றரை நாகளாக பசியுடன் இருந்த நிலை யிலே பொலிஸார் கண்டெடுத்திருப் பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3, 5, 8 வயதுகளைக் கொண்டு ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தைகளுமே தமது பெற் றோரினால் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு; கோவை நகரம் விழாக்கோலம்






உச்சக் கட்டப் பாதுகாப்பு; முதல்வர் கருணாநிதி இன்று நேரில் சென்று ஆராய்வு

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை கோவையில் நடைபெறுகிறது.

இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்து மாநாட்டில் எராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

23ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமமையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவை போய்ச் சேர்ந்ததும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு கருணாநிதி சென்று ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். முதலமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார். மாநாட்டுக்காக கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர்அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப் பட்டுள்ளது. அரண்மனை போன்ற தோற்றத்தில் பனை ஓலை வேலைப்பாடுகளுடன் பந்தலின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் நடுப்பகுதி மன்னர்கள் காலத்து தர்பார் பண்டபம் போல் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.

மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இந்தப் பந்தலில் 6,400 சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேடையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் கர்ஜித்சிங் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுப்பதற்காக தனித்தனி அறைகளும் கட்டப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி சிற்ப வேலைப்பாடு கள், அழகிய நுழைவு வாயில்களுடன் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆய்வ ரங்கம் நடைபெறுகிறது. இதற்காக கொடிசியா ஹாலில் 21 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் தலா 120 பேர் அமரக்கூடிய வகையில் இடவசதி உள்ளது. 21 ஆய்வரங்கங்களுக்கும் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கங்களின் தொடக்க விழா நடை பெறும் முகப்பரங்கம் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இணையத்தளத்தில் தமிழ் பயன்பாடு பற்றி மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழ் இணைய கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் தொடக்க நாளன்று முக் கிய நிகழ்ச்சியான பேரணி நடைபெறுகிறது. பேரணியில் கொண்டு செல்வதற்காக இனியவை நாற்பது என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. புதுப்பிக் கப்பட்ட சாலைகள் வண்ண ஓவியங்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என்று கோவை நகரமே ஜொலிக்கிறது.

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளைத் தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலைத் தடுக்க, அதிநவீன தொழில் நுட்ப சாத னங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கோவை வந்துள்ளனர்.

முக்கிய தகவல்கள், வெளிநாட்டு விருந் தினர் தங்குமிடங்கள், மாநாட்டு வளாகம் மற்றும் அலங்கார அணிவகுப்பில் பங் கேற்கும் வாகனங்களை முன்கூட்டியே வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டு பாது காப்பு மற்றும் வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணிக்காக 333 எஸ். பி.க் களைக் கொண்ட பாதுகாப்புப் படை ஏற் படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் தலை மையில் 10 ஆயிரம் பொலிஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.




































மேலும் இங்கே தொடர்க...

இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா.தலையிடக் கூடாது ‘இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் வழங்க முடியும் ’



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்க உத்தேசித்துள்ள குழுவானது இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் வழங்க முடியும். எனினும் உள்நாட்டு விவகாரங்களில் அது (ஐ.நா) தலையிடக்கூடாதென இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஸி அகாஸி தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படவுள்ள இத்தகைய குழு பிரயோசனம் உள்ளதாக இருக்க முடியுமெனக் குறிப்பிட்ட அவர், அக்குழு இலங்கையின் அபிவிருத்தி மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த ஆலோசனைகளை முன்வைக்க முடியுமெனவும் தெரிவித்தார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர்.

இம்முறை நாம் மேற்கொண்டிருந்த இலங்கை விஜயத்தின்போது பல சாதகமான மாறுதல்களை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் குறித்த தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறான கண்ணோட்டத்தில் நோக்கும் சில நாடுகள் அதனை நேரில் கண்டு உண்மை நிலையைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வடபகுதிக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று நாடுதிரும்ப முன்னர் அவர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி இங்கு மேலும் குறிப்பிடுகையில்;

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கென நியமிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான குழு இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள நல்லிணக்கக் குழுவிற்கு தமது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்க முடியும். எனினும் அந்த நல்லிணக்கக் குழுவின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது.

இம்முறை விஜயத்தின்போது நான் தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அரசியல் தீர்வொன்று சம்பந்த மாகவும் இதன்போது கலந்துரையாடப் பட்டது.

வடக்கில் மீள்குடியேற்றம் மீள் குடி யேற்றப்பட்டுள்ள மக்களின் உணவு மற் றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் சம்பந் தமாக அவர்கள் தெளிவுபடுத்தினர். குறிப்பாக வடக்கில் பெருமளவு இராணு வத்தினர் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் சகல இன, மத மக்களும் சுபீட்சமாகவும் அமைதியாகவும் நல்லிணக் கத்துடனும் வாழும் இலங்கை யொன்றைக் கட்டியெழுப்ப முடியும் என நான் நம்பு கின்றேன்.

இலங்கையில் தற்போது பல சாதகமான மாற்றங்களைக் காண முடிகிறது. அபிவி ருத்தி உட்பட பல முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் அதற்கான உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின் றன. ஜப்பானும் இத்தகைய நடவடிக்கை களுக்குத் தமது பூரண ஆதரவினையும் ஒத்துழைப்புகளையும் தொடர்ந்தும் வழங்கும்.

ஜப்பானிய அரசாங்கம் இவ்வருடத்திற் கென 39 பில்லியன் யென்களை இலங் கைக்கு நிதியுதவியாக வழங்குகிறது. நாட்டின் தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இந்நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நான்கு முக்கிய செயற்திட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன. கிழக்கு மத்திய மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களின் குடிநீர்த்திட்டங்கள், யாழ். போதனா வைத்தியசாலை புனரமைப்பு மற்றும் மேல் கொத்மலை திட்டங்களின் புனரமைப்புக்கும் இந்நிதி செலவிடப்படவுள்ளன.

இலங்கை பல முக்கிய சவால்களை எதிர்கொண்டு தற்போது முன்னேற்றகர மானதும் சாத்தியமானதுமான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அர சாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை வெறுமனே விமர்சிப்பது முறையல்ல. இடம்பெற்று வரும் மாறுதல்களை நேரில் கண்டு அவை பற்றி பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது நிலவும் சிறந்த சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடு விப்பது தொடர்பில் ஜப்பான் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அகாஸி; இவ்விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்படுகிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வருவதனால் அதனூடாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். நிலைமைகள் சீரடைந்து வருவ தால் அரசாங்கம் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச அகதிகள் தினம் நேற்றுப் பிரகடனம்




2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா.சபை ஜூன் 20ஆந் திகதியை சர்வதேச அகதிகள் தினமாகப் பிரகடனப்படுத்தியது. இது 2001 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் பல நாடுகளிலும் அகதிகள் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. முழு உலகிலும் மொத்தம் 40 கோடி மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 10 கோடிமக்கள் அகதிகளாக வாழ்வதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அகதிகள் தின நினைவுச் சின்னமாக வீடு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொருத்தவரை, குறிப்பாக வடபகுதியில் 2,93,000இற்கும் மேற்பட்ட அகதிகள் வாழ்கிறார்கள். மெனிக் பாம், செட்டிக்குளம் போன்ற பகுதிகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 33,000 பேர்வரை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இது தவிர எமது அயல் நாடான இந்தியாவிலும் பெருந்தொகையான அகதிகள் உள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை அகதி வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

இவர்களுக்காக 1117 சிறிய முகாம்கள் உள்ளன. இவை தவிர கேரளாவிலும் 700 குடும்பங்கள் வரை அகதிகளாக வாழ்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சரத் அளித்த பேட்டி:ஊடகவியலாளர் குறிப்பேடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுடனான பேட்டியின் போது கூறப்பட்ட விடயங்களைப் பதிவு செய்த குறிப்பேட்டை 'சண்டே லீடர்' பத்திரிகை ஆசிரியர் பெற்றிகா ஜெனஸ் இன்று நீதிமன்றத்தில் கையளித்தார்.

இறுதிக்கட்ட போரின் போது வெள்ளைகொடியேந்தி சரணடைய வந்த புலி உறுப்பினர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் தனக்கு உத்தரவிட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது பிரத்தியேகப் பேட்டியில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக, பேட்டியின்போது பயன்படுத்திய குறிப்பேட்டினை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் சம்பா ஜானகி பெரேரா உத்தரவிட்டிருந்தார்.

அதன்பிரகாரம் 89 பக்க குறிப்பேட்டை பெற்றிகா ஜெனஸ் நீதிமன்றத்தில் இன்று கையளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான் விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகளின் கெடுபிடிகளை அரசு தளர்த்த வேண்டும் : ஆஸி. கிரீன் கட்சி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தொடர்பான கெடுபிடிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் தளர்த்த வேண்டுமென அதன் க்ரீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் க்ரீன் கட்சி இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கைகளை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளினால் ஏற்படக் கூடிய விளைவுகள் உணரப்பட வேண்டுமென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் கால வரையறையின்றி பாலைவனச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் , இதனால் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரிய உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை மக்களை துன்பப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென அவுஸ்திரேலிய க்ரீன் கட்சியின் செனட்டர் சாரா ஹென்சன் யொங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் 96 வீதமானவர்கள் உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதவி தேவைப்படும் மக்களை தற்போதைய அரசாங்கம் நடத்தும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...