20 ஜனவரி, 2011

பாகிஸ்தான் இராணுவத் தளபதி- ஜகத் ஜயசூரிய சந்திப்பு


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயான் இன்று வியாழக்கிழமை காலை இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவை சந்தித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்தளபதி மற்றும் அவருடன் வருகை தந்துள்ள ஆறு பாகிஸ்தான் நாட்டு உயரதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்துகொண்டனர்.



மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவரும் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடன் ஊடகவியலாளர் நேர்காணல்,


ஊடகவியலாளர்: வணக்கம் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களே!
த.சித்தார்த்தன் : வணக்கம் குருபரன் அவர்களே!

கேள்வி: அண்மைய நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் அரங்கத்தில் இடம்பெறுகின்ற கட்சிகளிடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. அதன் ஒரு கட்டமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி

தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும், உங்கள் தலைமையில் இருக்கின்ற புளொட் அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒரு அணியின்கீழ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான முழுமையான உடன்பாடொன்று எட்டப்பட்டிருப்பதாக எமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்திருக்கின்ற நேயர்களுக்கு விளக்கங்களை கூறுவீர்களா?

பதில்: தமிழ் அரங்கு என்பது தமிழ் மக்களுடைய பிரச்சினை சம்பந்தமாக, அரசியல் தீர்வு சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அரங்கு. அந்த அரங்கு ஒரு அரசியலமைப்பு அல்ல. தேர்தலிலே நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அரங்கும் அல்ல. நாங்கள் அந்த அரங்கிலே ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம். அந்த அரங்கிலே சில சிவில் அமைப்புக்களும் உள்ளன. அந்த அரங்கிலே அங்கம் வகிக்கக்கூடிய தமிழ்க் கட்சிகள் தாங்கள் விரும்பியவர்களுடன் கூட்டாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் கூடியோ தேர்தலில் நிற்கலாம் என்ற ஒரு தீர்மானத்தை எடுத்துத்தான் அந்த அரங்கத்தை அமைத்திருந்தோம். அதன்படி இன்று சில கட்சிகள் வெள்வேறு நிலைப்பாடுகளில் உள்ளன. எங்களைப் பொறுத்தமட்டில் எங்களுடைய கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று பிரத்தியேகமாக இன்று வடகிழக்கில் இன்று இருக்கின்ற நிலைமைகள், வடகிழக்கிலே மக்களுடைய பாதிப்புகள் மாத்திரமல்ல, அந்த நில அபகரிப்புகள், சட்ட ரீதியாகவும் சட்டரீதியற்ற நிலையிலும் காணிகளை வாங்குகின்ற, அல்லது கிளிநொச்சியிலே கடைகளை வாங்குகின்ற நிலைமைகள், யாழ்ப்பாணத்திலே காணிகளை வாங்குகின்ற நிலைமைகளைப் பார்க்கின்றபோது இது ஒரு திட்டமிட்ட செயலாக, ஒரு தனிநபர் ஒரு காணியினை வாங்குவதை எவருமே எதிர்க்க முடியாது. ஆனால் இது ஒரு திட்டமிட்டு அந்தப் பகுதிகளிலே தமிழ் மக்களின் குடிப்பரம்பலைக் குழப்ப வேண்டுமென்ற நோக்கத்திலே நடைபெறுகின்ற விஷயங்கள், இவைகளைப் பார்க்கின்றபோது நிச்சயமாக தமிழ் மக்கள் மத்தியிலே, தமிழ்க் கட்சிகள் மத்தியிலே ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டுமென்பதிலே நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம். இன்றும்கூட இருக்கின்றோம். இதன் அடிப்படையிலே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தோம் இந்தத் தேர்தலிலே பங்குபற்றுவது சம்பந்தமாக. இதிலே தமிழர் விடுதலைக் கூட்டணியும், எங்களுடைய அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். நாங்கள் அதிலே போட்டியிடுவதாக. திரு. சம்பந்தர் அவர்கள் கூட இந்தியாவிலிருந்து தொலைபேசியின் என்னுடன் கதைத்தார். கதைக்கின்றபோது, சேர்ந்து போட்டியிட எடுத்த முடிவானது நல்ல முடிவென்று தெரிவித்தார். இதிலே ஒரு சிறு குழப்பம் இருக்கின்றதாக கருதப்படுகிறது ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு திரு.சிவாஜிலிங்கமும், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அமைப்பும் முயற்சிகள் எடுத்தபோதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே சில கருத்து முரண்பாடுகள் இருந்துகொண்டு இருக்கின்றன அந்தக் கட்சிகளுடன். ஆகவே அதை ஒரு காரணமாக வைத்து நாங்கள் இருவரும் அதில் இணைவதிலிருந்து தவிர்த்துவிட வேண்டாமென்று சம்பந்தண்ணை என்னிடம் கூறியிருந்தார். அதிலிருந்து நாங்கள் நிச்சயமாக விலத்தப்போவதில்லையென்று நான் அவருக்கு தெளிவாகக் கூறியிருந்தேன். நாங்கள் அனைவருமாக சேர்ந்து வேறு எந்த ஒரு நிபந்தனையுமின்றி இடப்பங்கீடுகூட எங்களுக்கொரு பிரச்சினையல்ல. அதைக்கூட நாங்கள் பெரியளவில் வலியுறுத்தப் போவதில்லை. சேர்ந்து கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் என்பதைக் கூறியிருக்கின்றேன். ஆகவே அந்த ரீதியில் நாங்கள் போட்டியிடுவோம் என்ற ஒரு கருத்து இப்போது எங்கள் மத்தியிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

 

கேள்வி: ஏற்கனவே நீங்கள் கடந்தகால தேர்தல்களிலே குறிப்பாக சுகு என்கின்ற சிறீதரன் செயலாளராக இருக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியுடனும், அதுபோல் ஏனைய சில அமைப்புகளோடும் உங்களுக்கு உறவுகள் இருந்தது. பொதுவான அடிப்படையில் இருந்தீர்கள். அவர்களுக்கிடையில் இந்த கூட்டமைப்பிலே சில முரண்பாடுகள் இருக்கின்றபொழுது நீங்கள் இருவரும், திரு.வீ.ஆனந்தசங்கரியும், நீங்களும் இக்கட்சியுடன் இணைவது தொடர்பாக அவர்கள் தங்களுடைய அதிருப்திகளையோ அல்லது தங்களுடைய கருத்துக்களையோ உங்களுக்கு கூறவில்லையா?

 

பதில்: இல்லை, அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களும் மிகவும் ஒரு தெளிவான பார்வையிலே இருக்கின்றார்கள். தாங்கள் இந்தக் கூட்டமைப்பில் சேர்வதற்கு விரும்பினாலும், தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய சில கருத்துமுரண்பாடுகள் என்பவற்றால் அதில் இணைய முடியாவிட்டாலும் கூட, நாங்களோ, தமிழர் விடுதலைக் கூட்டணியோ அதில் இணைவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென்பது மாத்திரமல்ல, அதைக் கட்டாயமாக செய்யவேண்டுமென்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள். இந்தியாவில் தற்போது இருக்கும் தோழர் சுகுவுடன் நான் தொலைபேசியில் கதைத்தபோதுகூட அவர் மிகத் தெளிவாகக் கூறினார், இதில் எந்தவிதமான மனக்கசப்புக்கோ, எதற்குமே இடமில்லை, நீங்கள் நிச்சயமாக அவர்களுடன் சேர்ந்து கேளுங்கள், நீங்கள் கேட்கின்றபோது நாங்கள் தேர்தலில்கூட பங்குபற்றாமல் விடுவோமென்பதை அவர் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அதேபோல சிவாஜிலிங்கமும் என்னிடம் நேரடியாகக் கதைக்கின்றபோது பலமுறை கூறியிருக்கின்றார். எங்களுக்கு நீங்கள் அவர்களுடன் சேர்வதில் ஆர்வமிருக்கின்றது. நீங்கள் சேருங்கள், அது எங்களுடைய பிரச்சினை, நாங்கள் அவர்களுடன் தீர்த்துக் கொள்ளுவோமென மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார். ஆகவே அதிலே ஒரு பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

கேள்வி: பிரதேச சபைகளுடைய முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதாக இருந்தால் இயன்றளவு வெளியில் இருக்கின்ற அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒரு அணியின்கீழ் கொண்டு வருவதுதான் சிறந்தது. மூன்று அணிகளாக பிரிகின்றபொழுது, அரசாங்க சார்பு ஒரு அணியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது சார்ந்த அணி ஒரு அணியாகவும், இதற்குப் புறம்பாக இன்னுமொரு அணி தனியாக தேர்தலிலே போட்டியிடுகின்ற பொழுது வாக்குகள் பிரிக்கப்பட்டு அது அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற தமிழ்க்கட்சிகள் இணைந்திருக்கின்ற அந்தக் கூட்டுக்கு ஆசனங்கள் அதிகமாக செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே நீங்களும், வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர முற்படுகின்ற அதேவேளை இவர்களுக்கே இருக்கின்ற சிறுசிறு சலசலப்புகள், முரண்பாடுகள் என்பவற்றைக் களைந்து வெளியில் நிற்கின்ற இயன்றளவு இந்த அமைப்புகளோடு இணையக் கூடியவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள்?

 

பதில்: இதற்கான பேச்சுவார்த்தைகள், இதற்கான முன்னெடுப்புகள் நடத்தப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. நான் மாத்திரமல்ல, திரு.ஆனந்தசங்கரி அவர்களும்கூட இது சம்பந்தமாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றார். ஆனால் சில விஷயங்களிலே அவர்கள் தாங்கள் எடுத்து வைத்திருக்கின்ற அந்த முடிவுகளை, அவர்களுக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை அவர்கள் விட்டுக்கொடுப்பதற்கு அல்லது அவர்களுக்கு விட்டுகொடுப்பதற்கு முடியாத நிலைமைகள்கூட இருக்கலாம். எனினும் தனிப்பட்ட ரீதியிலே இதுபற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் கூறியதுபோல நாங்கள் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்ற ஒரு முடிவெடுப்பதற்கு முக்கியமான காரணமே வடக்கிலே கூட பல இடங்களிலே நாங்கள் வெல்லுவோமென்று கூறவில்லை, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு மூன்றாவது அணியாக நாங்கள் போட்டியிலே ஈடுபட்டால் நிச்சயமாக அரச கட்சிக்கு அது ஒரு வாய்ப்பாகிவிடும். அரசகட்சி வெல்லுகின்றபோது, நீங்கள் கூறியதுபோல அதிலும் தமிழர்கள்தான் வெல்லுவார்கள். இருந்தாலும் அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் அது தமிழ் மக்கள் தங்களுக்கு தந்த ஒரு ஆணையாக எடுத்து உலகத்திற்கு காட்டுவது மாத்திரமல்ல, இன்று அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலே இனப்பிரச்சினை சம்பந்தமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற பேச்சுவார்த்தைகளிலே கூட தடங்கல் ஏற்படலாம். அவர்கள் கூறுவார்கள் இப்போது நாங்கள் ஏன் பேசவேண்டும். எங்களுக்கு மக்கள் ஆணை தந்திருக்கிறார்கள், நாங்கள் ஏன் உங்களுடன் பேசவேண்டுமென்ற ஒரு நிலைப்பாட்டைக்கூட எடுக்கலாம். ஒரு அதிகாரப் பரவலாக்கலில் கூட எங்களுடைய கட்சியின் நிலைப்பாட்டைத் தானே மக்கள் ஆதரவளிக்கின்றார்கள், இனியென்ன அதிகாரப்பரவலாக்கல் என்றுகூட கேட்கலாம். இந்த நிலைகளைத் தவிர்க்க வேண்டும், இப்படியான ஒருநிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் மிகத் தீவிரமாக எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் அந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து ஒன்றுபட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகூட அவர்களுக்கும் எங்களுக்கும் சிலவேளை கடந்தகாலங்களில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து சேரவேண்டுமென்பதில் அவர்களும்கூட மிகுந்த ஆர்வத்தை காட்டக்கூடியதை நான் பார்க்கின்றேன். ஏனென்றால் ஒரு சிறுசிறு பிரச்சினைகளுக்காக நாங்கள் பிரிந்துநின்று தமிழ் மக்களுடைய அந்த ஒட்டுமொத்தப் பிரச்சினையையுமே அழித்துவிடக் கூடாதென்பதில் நாங்கள் மிகக் கவனமாகவே இருக்கின்றோம்.

 

கேள்வி: எதிர்வருகின்ற பிரதேசசபை உள்ளுராட்சிசபைத் தேர்தலிலே அரசாங்கமும், அரசாங்கத்தோடு நின்கின்ற கட்சிகளுக்கும் ஒரு பாரிய வெற்றியை கிராம மட்டங்களில் பெற்றுக்கொள்ளும். அவ்வாறு கிராம மட்டக்களில் அந்த வெற்றியை நாம் பெற்றுக்கொள்வோமாக இருந்தால், தமிழர்கள் தங்களது ஆதரவை தங்களது தீர்ப்பை அரசாங்க கட்சிக்கும் அதனோடு இருக்கின்ற தமிழ்க் கட்சிக்கும் தந்தால் பின்பு தமிழ்க் கூட்டமைப்போ அல்லது ஏனைய கட்சிகள் எதற்கு என்ற கேள்வியை உலகத்தில் நாங்கள் எழுப்புவோமென அண்மையில் அரச தரப்பின் உயர்மட்டத்தின் ஒருவரோ நான் கதைத்தபோது தெரிவித்திருந்தார். அத்துடன் எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலை நாம் அவ்வாறுதான் பார்க்கப் போகிறோம். வடக்கு கிழக்கிலே எல்லாப் பிரதேசங்களிலுமே எங்களோடு இணைந்திருக்கின்ற தமிழ்க் கட்சிகளினுடைய பிரதிநிதிகளை நிறுத்தி அரசாங்கம் வெற்றி பெறுவதற்கான ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம். அதனால்தான் எங்களோடு இருக்கின்ற சில கட்சிகளுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து, தனித்து தமிழரங்கத்துடனோ அல்லது வேறு பிரிவினரோடோ செல்லமுடியாது என்பதை தெளிவாக அவர்களுக்கு கூறியிருக்கிறோம் என்பதை தெரிவித்திருந்தார். எனவே இந்த நிலைமை உங்களுக்குக்கூட சிலவேளை ஏற்படலாம் அதாவது நீங்கள் சேர முற்படுகின்றபோது உங்களுக்குக்கூட சில அழுத்தங்களை அல்லது சில எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டால், அந்த இடத்திலே உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

 

பதில்: நிச்சயமாக இப்படியான அழுத்தங்கள் வருமென்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. உங்களுக்குத் தெரியும் கடைசியாக நடைபெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தல் அதாவது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில்கூட இந்த அழுத்தம் மிகப்பெரிய அளவிலே எங்கள்மீது பிரயோகிக்கப்பட்டது. அப்போதுகூட நாங்கள் மிகத்தெளிவான ஒரு நிலைப்பாட்டையே எடுத்திருந்தோம். எந்த சந்தர்ப்பத்திலும் அரச கட்சியுடன் சேர்ந்து எங்களால் கேட்கமுடியாது என்பதை மிக அழுத்தம் திருத்தமாக அவர்களுக்கு கூறியது மாத்திரமல்ல நாங்கள் தனித்தே போட்டியிட்டோம். அந்த நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் என்றுமே மாறமுடியாது. மாறவும் மாட்டோம், ஏனென்றால் நாங்கள் இன்று நேற்று இந்தப் போராட்டத்திற்கு வந்தவர்களுமல்ல, எங்கள் கட்சியில் இருக்கின்றவர்களோ கட்சியைச் சேர்ந்தவர்களோ அப்படியல்ல, எங்களுடைய கட்சிக்கொரு பாரம்பரியம் இருக்கின்றது. போராட்ட காலங்களில் இருந்திருக்கின்றது. சில வேளைகளில் சிலர் நினைக்கலாம், அன்று எங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இருந்த பிரச்சினைகளால் நாங்கள் ஏதோ தமிழ் மக்களுடைய தமிழ் தேசியத்தினுடைய எதிரிகளாக ஒரு பிரசாரத்தை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் நான் அன்றும் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். இன்றும் சொல்லுகின்றேன், வேறு எவருக்கும் நாங்கள் குறைந்தவர்களல்ல, தமிழ் மக்களுடைய பிரச்சினையை அணுகுவதிலேயோ, தமிழ்த் தேசியத்திலேயோ என்பதை மிகத் தெளிவாக பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

 

கேள்வி: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு எத்தகைய நம்பகத்தன்மையைக் கொண்டது? அங்கு நீங்கள் சாட்சியமளித்தீர்கள், அதுபற்றிய விடயங்களைக் கூற முடியுமா?

 

பதில்: அதன் செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை என்பதல்ல, அவர்கள் பல இடங்களில் சென்று விசாரணைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் நல்ல அறிக்கைகளைக் கொடுக்கலாம். ஆனால் அந்த அறிக்கை கொடுக்கப்பட்ட பின்பு அந்த அறிக்கைக்கு என்ன நடக்கப்போகின்றது, பழைய கொமிஷன்ஸ் அறிக்கைகள் மாதிரியே முடிந்துவிடுமா என்ற ஒரு ஐயப்பாடுதான் மக்கள் மத்தியிலே இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக அவர்களுக்கு கூறிவிட்டுத்தான் நான் எனது சாட்சியத்தை ஆரம்பித்தேன். அப்போது அவர்களுக்கு நான் கூறினேன். ஆரம்பத்தில் இந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது ஒருபகுதி மக்கள் யுத்தம் முடிந்துவிட்டதென நிம்மதியாக இருக்கலாம், முக்கியமாக தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஒருபகுதி மக்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இவர்கள் கவலையடைந்தார்கள். எது எப்படியாயினாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது சம்பந்தமாக ஒட்டுமொத்தமாக மிகவும் பயப்பட்ட நிலையிலே இருந்தார்கள். யுத்தம் முடிந்துவிட்டது. எங்களுடைய போராட்டத்தின் அர்ப்பணிப்புக்கள் எல்லாம் வீண் விரயமாகிவிட்டது, எந்தவிதமான ஒரு முடிவுமில்லாமல் இந்த யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அரசியல் ரீதியான தீர்வு ஒன்றும் இல்லாமல் முடிந்துவிட்டது என்பதையும் இந்த யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்கள் முடிந்துவிட்டது, தீர்வு சம்பந்தமாக எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீர்வு சம்பந்தமாக ஒரு நிலைப்பாடுகூட கண்ணுக்குத் தெரியவில்லை என்ற ஒரு கவலை அனைவருக்குமே இருந்துகொண்டு இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாகக் கூறினேன். அது மாத்திரமல்ல ஒரு தீர்வு ஒன்று வரக்கூடிய நிலைமைகளை எங்களால் பார்க்க முடியவில்லை. இன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுகளில் இருந்த பகுதிகளிலே முக்கியமாக வன்னிப் பகுதிகளிலே நடைபெறுகின்ற விஷயங்களைப் பார்க்கின்றபொழுது அந்தப்பயம் இன்னமும் மக்களுக்கு கூடிக்கொண்டுதான் வருகின்றது. ஏனென்றால் அங்கு பல காணிகள் சிங்கள முதலாளிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது. அங்கு அவர்கள் வியாபாரத் தளங்களும், முதலீடுகளையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கையர் என்ற ரீதியிலே எவருக்கும் ஒரு உரிமை இருக்கிறது, அதாவது எந்தப் பகுதியிலுமே எவருமே தங்களுடைய தொழிலை ஆரம்பிப்பதற்கு நிச்சயமாக அந்த உரிமை இருக்கின்றது. அதை நான் மறுக்கவில்லை. இருந்தாலும் இன்று வன்னிப் பகுதியிலே யுத்தத்தினால் சகலவற்றையும், உயிரைத்தவிர அனைத்தையுமே இழந்திருக்கின்ற இந்த மக்கள் மத்தியில் இவர்கள் பணபலம் மிக்கவர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், இராணுவத்தின் பின்பலமுள்ளவர்கள், இவர்கள் சென்று அங்கு தங்களுடைய தொழில்களை ஆரம்பிக்கின்றபோது போட்டியை கொடுக்கக்கூடிய நிலைமை அங்கிருக்கின்ற மக்களிடமில்லை. ஆகவே இது தவறு. முதலில் அங்கிருக்கின்ற மக்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான முழுமையான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவேண்டும். அது மாத்திரமல்ல, புத்தகோயில்கள் இன்று கட்டப்படுவதற்கு முக்கியமாக முல்லைத்தீவு நகரத்தின் வட்டுவாகல் சந்தி என்று சொல்லப்படுகின்ற பகுதியில் கூட்டுறவு ஸ்தாபனத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட ஒரு நிலத்தில், இன்று அந்த வேலையை நிற்பாட்டி ஒரு புத்தகோயில் கட்டுவதற்காக அது வழங்கப்பட்டிருக்கின்றது. நான் அங்கு கூறினேன், அங்கு பௌத்த மக்கள் எவருமே இல்லை. ஆகவே பௌத்த கோயில் ஒன்று கட்டுவதற்கு ஒரு காரணமும் இருப்பதாக தெரியவில்லை. ஒரேயொரு காரணத்தைத்தான் அந்த மக்கள் ஐம்மிச்சப்படுகின்றார்கள். கோயிலைக் கட்டிவிட்டு அந்தக் கோயிலுக்காக பௌத்த மக்களைக் கொண்டுவந்து குடியேற்றுகின்ற திட்டமொன்று இருக்கிறதோ என்ற ஐம்மிச்சம் எங்களுக்கு இருக்கிறதாக, அதேபோல மன்னார், பண்டிவிரிச்சானில் அங்கு ஒரு தனிநபருடைய காணியிலே ஒரு இராணுவமுகாமொன்று இருந்தது. அந்த முகாமில் இருந்தவர்கள் வணங்குவதற்காக அங்கு ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டது. அந்தக் காணி உரிமையாளர் குடும்பம் இன்று மீண்டும் வந்திருக்கிறார்கள். அந்த குடும்பஸ்தர் எங்களிடம் நேரடியாக கூறியிருந்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை என்று, ஏனென்றால் ஒரு விசயம், இப்போது இராணுவத்தினர் தனிப்பட்ட நிலங்களில் இருந்து விலத்தி காடுகளுக்குள் தங்களுடைய முகாம்களை அமைப்பதற்கு அல்லது அரசகாணிகளில் முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மிகவும் மும்முரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை, நானும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். அண்மையில்கூட வன்னிக்குச் சென்று வந்தபோது பார்த்தேன். அவர்கள் அதற்கான ஒரு நடவடிக்கையை எடுக்கின்றார்கள், அங்கு முருகண்டியில் இருக்கின்ற ஒரு ஆமி உத்தியோகத்தர் என்னிடம் கூறினார், தாங்கள்கூட வேறிடத்திற்கு அதாவது காட்டுக்குள் போவதற்கான ஆயத்தங்களை செய்யத் துவங்கிவிட்டோம் என்று. அப்படி நடக்கின்றபோது அங்கு கட்டப்படுகின்ற பௌத்த கோயில்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. ஏனென்றால் அவை தனிப்பட்ட நபர்களுடைய நிலங்களிலே இருக்கின்றது. அவர்கள் அந்த நிலங்களை திரும்ப வந்து எடுப்பதுதான் கஷ்டமான விஷயங்களாக இருக்கும் என்ற அந்த விஷயத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினது மாத்திரமல்ல, யாழ்ப்பாணம் வலிகாமத்திலே பலாலியைச் சுற்றிய பகுதி மக்களை மீளக் குடியேற்ற வேண்டிய விஷயங்கள் சம்பந்தமாகவும் கூறினேன். அதன் பிறகு அவர்கள் பல கேள்விகளை கேட்டார்கள், முக்கியமாக அதிகாரப் பரவலாக்கல், அதாவது ஒரு தீர்வு சம்பந்தமாக 13வது தீர்வு சம்பந்தமாக இப்போது பேசப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு ஒரு விஷயத்தை நான் ஞாபகப்படுத்தினேன், என்னவென்றால் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தமட்டில் அனைத்துக் கட்சிகளுமே 13வது திருத்தம் ஒரு முடிவான தீர்வு அல்ல, ஆரம்பமாக இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றோம். இது தமிழ்க் கட்சிகள் மாத்திரமல்ல, இந்த நாட்டை மாறிமாறி ஆளுகின்ற இரண்டு கட்சிகளுமே தங்களுடைய செய்கைகளால் அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக ஜனாதிபதி பிறேமதாச பதவியேற்றவுடன், மங்கள முனசிங்க பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்தார், அனைத்துக்கட்சி மகாநாட்டை வைத்தார், அதன்மூலமே அவர் 13வது திருத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை, அதைவிட வேறுஒரு தீர்வுதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அதேபோல சந்திரிகா ஜனாதிபதியாக வந்தபோதுகூட ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலே ஒரு தெரிவுக்குழு, அது மாத்திரமல்ல ஒரு தீர்வைக்கூட பாராளுமன்றத்திலே வைத்தார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒஸ்லோவில் சமஷ்டி அமைப்பின் கீழ்த்தான் ஒரு சரியான தீர்வு வரவேண்டுமென்று விரிவுரையாளர் பீரிஸ் அவர்களும், அன்ரன் பாலசிங்கம் அவர்களும் கையெழுத்துப்போட்டு ஒரு டெக்லரேசனையே போட்டார்கள். அது மாத்திரமல்ல இன்று இருக்கின்ற ஜனாதிபதி அவர்கள்கூட, ஏ.பி.சி, ஏ.பி.ஆர்.சி இவைகளை அமைத்து 13வது திருத்தத்தை விட்டு வேறுஒரு தீர்வை நோக்கித்தான் செல்லவேண்டுமென்பதை அதாவது அதைவிட முன்னேற்றமான ஒரு தீர்வை நோக்கி செல்ல வேண்டுமென்பதை மாத்திரமல்ல, விடுதலைப் புலிகளுடன்கூட ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆகவே இந்த 13வது திருத்தம் போதுமென்று நிச்சயமாக இந்த நாட்டிலே இருக்கின்ற அனைவருமே கருதவில்லை. ஆகவே ஒரு சரியான அரசியல்தீர்வு எங்களுடைய பகுதிகளிலே நாங்களே எங்களுடைய பிரச்சினைகளை விஷயங்களைப் பார்க்கக்கூடிய விதமான அதிகாரப்பரவலாக்கல் ஒன்று நிச்சயமாகத் தரவேண்டும் என்பதை மிக அழுத்தமாக எடுத்துக் கூறியிருந்தோம். அப்போது அந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர் ஒருவர் கேட்டார், டிஸ்ட்ரிக்ட் டெவலொப்மென்ட் கவுன்சில் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று, நான் சொன்னேன் டிஸ்ட்ரிக்ட் டெவலொப்மென்ட் கவுன்சிலைப் பொறுத்தமட்டில் அதை நாங்கள் மறுதலிப்பது மாத்திரமல்ல அதிலே ஒரு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல்கூட அதில் இல்லை. அது மிகச்சிறிய அலகாக இருக்கும். இதிலே எந்தவித அர்த்தமும் இருக்கமுடியாது என்பதை மிகத் தெளிவாக அவருக்கு விளங்கப்படுத்திக் கூறினேன். இப்படி பலவிடங்களை அவர்கள் கேட்டார்கள், இன்றிருக்கின்ற காணிப்பிரச்சினைகள் சம்பந்தமாக, அவர்களும் பலவற்றை ஆராய்ந்து வைத்திருக்கின்றார்கள், ஏனென்றால் முக்கியமாக வன்னியிலே இருக்கின்ற அநேகமான காணிகள் பேர்மிட் காணிகள், அங்கு உறுதிகள் கிடையாது, பேர்மிட்தான், இதிலே பல சிக்கல்கள் அங்கே இருக்கின்றன. பலர் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார்கள், ஏனென்றால் கடந்த காலங்களில் உத்தியோகத்தர்களுக்காக கொடுக்கப்பட்ட பத்து ஏக்கர் இருபது ஏக்கர் திட்டங்கள் என்றெல்லாம் அங்கு இருக்கின்றது. அந்தக் காணிகளிலே இப்போது மக்கள் இருக்கின்றார்கள். சில இடங்களிலே அதனுடைய முந்தைய உரிமையாளர்கள் வந்து அந்தக்காணி தன்னுடையதென்று கேட்கின்ற நிலைமைகள் இருக்கின்றது. இப்படியான நிலைமைகளுக்கு என்ன செய்யலாம் என்று அவர்கள் கேட்டார்கள், அதாவது அந்த பேர்மிட்களை இரத்துச் செய்துவிட்டு இப்போது இருப்பவர்களுக்கு பேர்மிட் கொடுப்பது என்பது பற்றி, நான் கூறினேன், பேர்மிட்டை இரத்துச் செய்வதென்று கதைக்கின்றபோது. அங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு பயமொன்று உருவாகின்றது என்னவென்றால் இவற்றை இரத்துச் செய்துவிட்டு வெளிமாகாண, வெளிமாவட்டங்களிலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி விடுவார்களோ என்ற பயமொன்று இருக்கின்றது. அவர் சொன்னார் தன்னைப் பொறுத்தமட்டில் அவ்வாறு செய்யக்கூடாதென்பதில் தான் மிகத் தெளிவாக இருப்பதாக கூறினார். முதலில் அங்கிருக்கின்ற மக்களுக்கு அந்தக் காணிகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார். இதையெல்லாம் அவர்கள் கூறமுடியும், ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதுதானே முக்கியம்.

 

கேள்வி: மக்கள் குடியிருப்புக்கள், மக்கள் வாழுகின்ற பகுதிகளிலே இராணுவத்தினருடைய அதிக பிரசன்னம் இருப்பது மற்றும் அரச அதிகாரிகள்கூட இராணுவத்தின் அனுமதி பெறும் நிலைமை குறித்து நீங்கள் கூறியிருந்தீர்களா அங்கே?

 

பதில்: நான் என்ன கூறினேன் என்றால், இராணுவத்தைப் பொறுத்தமட்டில் இப்போது 80களின் இராணுவமல்ல. மக்களுடன் நன்றாக பழகுகிறார்கள். ஆனாலும் அங்கு ஒரு இராணுவ ஆட்சிதான் நடக்கின்றது. அங்கு எந்த ஒரு சிறு விடயமாக இருந்தாலும் எவருமே இராணுவத்திடம்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அரசாங்க அதிபர்கள்கூட ஏதாவது செய்வதென்றால் இராணுவத்தின் அனுமதியுடன்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அது மாத்திரமல்ல பொலீசார்கூட இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கின்றார்கள். ஆகவே அங்கு ஒரு சிவில் நிர்வாகம் நிச்சயமாக கொண்டுவரப்பட வேண்டும். இராணுவ நிர்வாகமாக நிச்சயமாக இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது, சிவில் நிர்வாகத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக, இராணுவத்தினர் மக்களுடன் நன்றாக பழகுகிறார்கள் என்பதற்காக அங்கு இராணுவ நிர்வாகம் இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது என்பதை எடுத்துக் கூறியிருந்தேன்.

 

கேள்வி: நீங்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முன்பு இருந்தவர் என்ற வகையிலும், வவுனியாவோடு உங்கள் அமைப்பு கூடுதலாக நகரசபை எதிர்க்கட்சியாக இருக்கின்றது என்ற வகையிலும், வன்னியில் பல்வேறு வேலைகளை நீங்கள் ஆரம்பித்திருக்கின்ற வகையிலும் ஒரு விடயத்தைக் கேட்கவேண்டியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உழவு இயந்திரங்கள் வழங்கியமை தொடர்பாக ஊடகங்களிலே பாரிய சர்ச்சைகள் கிளப்பப்பட்டிருக்கின்றன. அதாவது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரி அழுவதனைக்கூட படங்களாக எல்லா ஊடகங்களிலும் வந்திருக்கின்றது, அதாவது அவர் கொடுத்த பட்டியலை விட்டு அரசாங்கத் தரப்பினரால் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, சிறீரங்கா போன்றோர் அங்கு சென்று இந்த உழவு இயந்திரங்களை ஒரு தரப்பினருக்கு வழங்கியிருப்பதாக ஊடகங்களிலே குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. எனவே வன்னியைக் கூடுதலாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிப்படையிலே இந்தத் தகவல்கள் குறித்து நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?

 

பதில்: உண்மையாக சரியான விபரங்களை என்னால் கூறமுடியாது. ஆனால் இப்படியான விடயமொன்று நடந்திருக்கிறது. அதாவது ஐ.சீ.ஆர்.சி கொடுத்த பட்டியலை விடுத்து அவர்கள் ஒரு புதிய பட்டியலை தயாரித்து கொடுத்தது என்ற விஷயமும், அந்த பெண் அதிகாரி அழுது கொண்டிருக்கின்ற விடயமும் மக்கள் மத்தியிலே ஏனென்றால் ஆரம்பத்திலே வேறு சிலரை தெரிவுசெய்துவிட்டு இப்போது வேறு சிலருக்கு கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பங்களை அறிந்தேன், ஏனென்றால் அங்கு அரச தரப்பால் நடத்தப்படுகின்ற விஷயங்கள் முழுக்க எங்களுக்கு தெரிவதில்லை. இப்படியான நிலையில் இதுபற்றி மிகப் பெரிதாக எதையும் கூறமுடியாதுள்ளது?

 

கேள்வி: கனகாம்பிகைக் குளத்திலிருந்து சிறுவனின் சடலமொன்று மீட்கப்பட்டதாகவும், சிறுவனின் வாயிலிருந்த இரத்தம் வடிந்து கொண்டிருப்பதாகவும் எனவே சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக வவுனியாவிற்கு அந்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. எனவே இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றபொழுது விசுவமடுவில் ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்று அந்தப் படையினர் பிணையிலே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஊடகங்களிலெல்லாம் வந்தது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தில் அரசாங்கத்தோடு ஒரு புரிந்துணர்வோடு செயற்பட்ட தமிழ்க் கட்சி என்ற அடிப்படையிலே என்ன அழுத்தங்களை அரசாங்கத்திற்கு நீங்கள் வழங்கக் கூடியதாக இருக்கின்றது? அல்லது இது தொடர்பான விடயங்களை நீங்கள் அரச அதிகாரிகளுடன், அல்லது படைத்தரப்பினருடன் நீங்கள் பேசக்கூடியதாக இருக்கின்றதா?

 

பதில்: ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியான அங்கீகாரங்கள் எங்களுக்கு இப்போது இல்லாதபடியால் சில விஷயங்களிலே நேரடியாக தலையிடுவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. நாம் நம்புகின்றேன் அங்கு இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள் என்னவாறான நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த விடயங்களில் எங்களால் மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய அளவிலே எங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லாதபடியால் எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் சில விஷயங்களைக் கையாள்வது மிகவும் கஷ்ரமாகத்தான் இருக்கின்றது.

 

கேள்வி: இறுதியாக எல்லோரும் எல்லாக் காலங்களிலும் எதிர்பார்க்கின்ற தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை குறித்து என்ன கூறுகிறீர்கள்? அதாவது இப்பொழுது நீங்கள் அங்கம் வகிக்கின்ற பல கட்சிகள் சேர்ந்து கூட்டமைத்திருக்கின்ற தமிழ் கட்சிகளின் அரங்கம் கூறியிருக்கிறது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்போகிறோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைவர் சம்பந்தன் அவர்களும் சொல்லியிருக்கிறார், அழைப்பு விடுத்தால் நாங்கள் இதுபற்றி நிச்சயம் பரிசீலிப்போம் என்று. எனவே இவ்வாறு இன்னும் பல தரப்புகளாக, குழுக்களாக, உதிரிகளாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் தரப்புக்கள் சிங்கள தேசியத்தின் ஒற்றுமையைக் கண்டாவது ஒற்றுமைப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா?

 

பதில்: நான் நம்புகின்றேன். தனிப்பட்ட ரீதியிலே இந்தக் கட்சிகளின் தலைவர்கள் அல்லது கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் கதைக்கின்றபோது அனைவருமே அதை உணர்ந்ததுபோல கதைக்கின்றார்கள். தமிழ் அரங்கத்தைப் பொறுத்தமட்டில் அதில் இருக்கக்கூடியவர்கள் அதை உணர்ந்து கதைக்கின்றார்கள், அதில் யாராவது உள்நோக்கங்களுடன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இல்லையென்றுதான் நான் கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் கதைக்கின்றபோது அவர்கள் மிகவும் நியாகமாக நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்ற தேவையைப் பற்றிக் கூறுகின்றார்கள். அது மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கதைக்க வேண்டிய தேவைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து, ஏனென்றால் இன்று வடகிழக்கைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் ஒரு பலமாக அமைப்பாக இருக்கின்றது, 14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு ஒற்றுமையாக மற்றைய கட்சிகளுடன் வராத பட்சத்தில் அதுஒரு பலமான கூட்டாக இருக்கமுடியாது. ஆகவே எல்லாருமாக வரவேண்டிய தேவையை அனைவரும் உணர்கின்றார்கள் உணர்கின்றோம். இது தேர்தல் ஒன்று வராத பட்சத்தில் நிச்சயமாக இந்தக் கூட்டமைப்பு ஒரு சக்தி வாய்ந்ததாக இருக்குமென்று நான் நம்புகின்றேன்.

 
நன்றி
மேலும் இங்கே தொடர்க...

கஞ்சா கடத்தும் புறா மெக்சிகோவில் சிக்கியது




சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு புறாவின் மூலம் கஞ்சா போதைப் பொருளினை அனுப்பும் நடவடிக்கையினை கொலம்பிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது பிடிப்பட்ட புறாவின் உடலில் சுமார் 1.5 அவுன்ஸ் அளவிலான கஞ்சா பொதியொன்று கட்டப்பட்டிருந்துள்ளது.

இப்பொதியின் நிறையை தாங்க முடியாத புறா இடை நடுவே நின்றுள்ளது.

சிறைச்சாலைக்கு அருகில் புறா பறக்க முடியாமல் திணறிக் கொண்டு இருப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதனை பரிசோதித்த போதே இவ்விடயம் அம்பலமாகியுள்ளது.

கொலம்பிய போதைப் பொருள் கும்பல்கள் கடத்தல்களுக்கு பல புதிய உத்திகளை கையாளுவதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மக்களின் சுதந்திரமான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு



வட பகுதியில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களின் சுதந்திரமான வாழ்க்கை முறைமையை உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதனை யார் மீதும் சுமத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை. ஆனால், வட பகுதி மக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நீலிக்கண்ணீர் வடிப்பது நகைச்சுவையாக உள்ளது.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு நடந்து கொண்டது என்று எங்களுக்கு தெரியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்து தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டதும் அங்கு ஒரு நாள் தங்கியிருந்ததும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் மக்களின் வாழ்க்கை நிலைமை வழமைக்கு திரும்பவில்லை என்றும் அங்கு பல அசம்பாவிதங்கள் அண்மைக்காலத்தில் இட்ம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் அங்கு ஜனநாயகத்தை நிறுவி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் டலஸ் இந்த விடயத்தை கூறினார்.

வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் அகதி முகாம்களில் எஞ்சியுள்ளவர்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது ஜனநாயகம் பற்றி ஐக்கிய தேசிய கட்சி பேசுகின்றமை நகைச்சுவைக்குரிய விடயமாகும். 1983 ஆண்டில் வடக்கில் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடத்தப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு நடந்துகொண்டது என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி தற்போது ஜனநாயகத்தை நம்புவது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.

அண்மையில் ஜனாதிபதி வடக்கின் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஒருநாள் தங்கியிருந்தார். மேலும் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி வடக்கிலோ தெற்கிலோ எப்பகுதியிலும் பாதாள உலகக் கோஷ்டியினர் செயற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

இங்கு நாங்கள் இரண்டு முக்கிய விடயங்களை பார்க்கவேண்டியுள்ளது. அதாவது நாங்கள் தற்போது யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில் இருக்கின்றோம். 30 வருடகால யுத்தம் முடிவுற்று ஒன்றரை வருடங்களே கடந்துள்ளன.

வியட்னாம் யுத்தம் முடிந்து 20 வருடங்களின் பின்னரே அந்த நாடு மீண்டு வந்தது. கொரிய யுத்தம் முடிந்து 30 வருடங்களின் பின்னரே அந்த நாடு எழுந்துவந்தது. அழிவடைந்த ஜப்பான் தனது சொந்த அர்ப்பணிப்பினாலேயே பல வருடங்களுக்கு பின்னரே மீட்சியடைந்தது. இரண்டாவது விடயமாக நாட்டின் தென் பகுதியில் இடம்பெறும் தன்மையிலான குற்றச் செயல்களே அண்மைக்காலங்களில் வடக்கிலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த காரணங்களை நாங்கள் பார்க்கவேண்டும்.

அதற்காக வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களை நான் நியாயப்படுத்தவில்லை. வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி அப்பகுதி மக்களின் சுதந்திரமான வாழ்க்கை முறைமையை உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதனை யார் மீதும் சுமத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அதனை நாங்கள் செய்துவருகின்றோம். வடக்கை அபிவிருத்தி செய்துவருகின்றோம். உட்கட்டமைப்பு வசதிகளையும் நிர்மாணிக்கின்றோம்.

அப்பகுதியில் ஜனநாயகத்தை நிறுவவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தற்போது பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து அதிகமான தமிழ் பேசுபவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இது வரலாற்றில் இடம்பெறாத விடயமாகும்.

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கற்பிக்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. வரலாற்றில் இவ்வாறான ஆரோக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
மேலும் இங்கே தொடர்க...

கொலை,கொள்ளை குடாநாட்டு விவகாரம் தொடர்பில் நாலரை மணிநேரம் ஒத்திவைப்பு வேளை விவாதம்


யாழ். குடாநாட்டு நிலைவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாலரை மணிநேரம் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவிருக்கின்றது.

அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற கொலை,கொள்ளை மற்றும் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்படவிருக்கின்றது.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு கூடும்.

சபையின் பிரதான நடவடிக்கைகள் மற்றும் வாய்மூல விடைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் பிற்பகல் 2 மணியிலிருந்து 6.30 மணிவரை நாலரை மணிநேரம் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும்.

இதேவேளை குடாநாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் கடந்த 04 ஆம் திகதி அமைச்சின் கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார்.

இதனிடையே எழுந்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நிலைவரம் தொடர்பில் நேரடியாக கண்டறிவதற்கு சபாநக்ஷியகர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அங்கு அனுப்பிவைக்கவேண்டும் என கோரிநின்றார். எதிர்க்கட்சி தலைவரின் அந்த கோரிக்கையை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்து விட்டது.

இந்நிலையில் தமிழ் தேசிக்கூட்டமைப்பின் எம்.பி.யான மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் ஜனவரி 05 ஆம் திகதி புதன்கிழமை குடாநாட்டு நிலைவரம் தொடர்பில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

கவனயீர்ப்பு பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை நன்கு ஆராய்ந்து பதிலளிக்கவேண்டி இருப்பதனால் அதற்கு உடனடியாகவே பதிலளிப்பதற்கு மறுப்பு தெரிவித்த சபைமுதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா முழுநாள் விவாதமொன்றை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இன்றைய முழுநாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.

அத்துடன் நாளைவெள்ளிக்கிழமை முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் (திருத்தச்), மத்தியஸ்த சபைகள் (திருத்தச்) ஆகிய சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதம் நடத்தப்படும். அன்றையதினம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கின்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதமும் நடத்தப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி இனவாதத்தின் தூண்டுதலாக அமையக்கூடாது ஜாதிக ஹெல உறுமய

தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தல்களில் போட்டியிடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் அவ் உரிமைகள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவோ இனவாத போராட்டத்திற்கு தூண்டுதலாகவோ அமைந்துவிடக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

தேர்தல் மேடைகளில் பிரிவினைவாதம் பேசி வாக்குகளுக்காக நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ண தமிழ் கட்சிகள் முயற்சிக்குமேயானால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க நேற்று புதன்கிழமை கூறுகையில், தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் கூட்டணியமைத்து போட்டியிடுவது சாதாரண விடயமாகும்.

தேர்தல் சூழலுக்கு ஏற்ற வகையில் யாருடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் அந்த கட்சிகளின் ஜனநாயக உரிமை. இதற்கு அமைவாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் மற்றும் எதிர் தரப்புகள் பல்வேறு கூட்டணியமைத்து தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளன. இவற்றுள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புளொட் உட்பட ஏனைய சில தமிழ் அரசியல் கட்சிகள் தனிக் கூட்டணியமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ள உரிமைகளை வெளிப்படுத்துகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மைகளாக உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அமைத்துக் கொள்ளப்படும் மேற்படி கூட்டணி நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலோ இனவாதத்தை தூண்டும் வகையிலோ அமைந்துவிடக் கூடாது. குறிப்பாக தேர்தல் மேடைகளில் பிரிவினைவாத கருத்துக்களை தெரிவிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே தமிழ் கட்சிகளின் கூட்டணி நாட்டின் இறையாண்மையையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கக் கூடியதாக அமைய வேண்டும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அழிவுற்றுள்ள வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடு கூரைத் தகடுகளும் வழங்க ஏற்பாடு


வெள்ளம் காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளுக்கு ஐம்பதினாயிரம் (50,000) ரூபாப்படி நஷ்டஈடு வழங்கப்படவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

அதேநேரம் வெள்ளம் காரணமாக அழிவுற்றுள்ள வீடுகளுக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கூரைத் தகடுகள் வழங்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 5781 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளன. 23 ஆயிரத்து 19 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்துள்ளன. இவற்றில் முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாப்படி நாம் நஷ்டஈடு வழங்கவுள்ளோம். பகுதியாக சேதமடைந்துள்ள வீடுகளுக்கு அவற்றை மதிப்பீடு செய்து அதற்கேற்ப நஷ்டஈடு வழங்கப்படும். தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

12 ஏக்கர் கஞ்சா சேனை ‘தீ’ வைத்து எரிப்பு




தனமல்வில மற்றும் செல்லகதிர்காமம் பகுதிகளில் 12 ஏக்கர் கஞ்சா சேனையை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தீ வைத்து அழித்துள்ளனர்.

ஒன்பது அடி உயரமுடைய 44 ஆயிரம் கஞ்சா செடிகள் மேற்படி சேனையில் செய்கை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. எம். எல். சரத்சந்திர தெரிவித்தார்.

அழிக்கப்பட்ட சேனைகளிலிருந்து சுமார் 19 கிலோ எடையுள்ள கஞ்சாக்களை அதிரடிப் படையினர் இந்த விசேட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றியுள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனமல்வில மற்றும் செல்லக் கதிர்காமம் பகுதிகளிலுள்ள தேசிய வனப் பூங்கா பகுதிகளிலேயே இந்த கஞ்சாச்சேனை செய்கை செய்யப்பட்டுள்ளது.

தனமல்வில சேனையிலிருந்து ஒரு கிலோ எடையுள்ள பொதி செய்யப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாக்களை மேலதிக விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டு ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கில் கால்நடைகளுக்கு கொலரா; வாய்ப்புண்


கொழும்பிலிருந்து மருத்துவ குழுக்கள் விரைவு;
அழிவினை மதிப்பீடு செய்யுமாறு அமைச்சர் தொண்டா உத்தரவுகிழக்கில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பிரதேசங்களில் கால்நடைகளுக்குக் கொலரா மற்றும் வாய்ப்புண் நோய் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சைகளை அளிக்க கொழும்பிலிருந்து விசேட மருத்துவ குழுக்கள் கிழக்கு மாகாணத்திற்கு விரைந்துள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோண மலை மாவட்டங்களுக்கு, கொழும்பு பண்ணைவிலங்கு திணைக்களத்தின் மருத்துவ குழுக்கள் மூன்று அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. ஏனைய பண்ணை விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்க இவர்கள் அவசர சிகிச்சைகளை அளிப்பார்க ளென்று பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பண்ணை விலங்கு அபிவிருத்தி மற்றும் கிராமிய சமுதாய அபிவி ருத்தி அமைச்சர்ஆறுமுகன் தொண்ட மான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகப் பிரதியமைச்சர் கூறினார்.

இதேவேளை, வெள்ளத்தின் காரணமாகப் பண்ணை விலங்குத் துறைக்கு ஏற்பட்ட முழுமையான அழிவினை மதிப்பீடு செய்து எதிர்வரும் 24ஆம் திகதிகளுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமை ச்சர் தொண்டமான் அதிகாரிகளுக்கு நேற்று (19) பணிப்புரை விடுத்துள் ளார்.

கால்நடைத் துறையை மீளமைப்ப தற்கு 50% மானியம் வழங்குவதாக வும், கடன் அடிப்படையில் மாடு களைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், கோழிப்பண்ணைத் தொழிலை மீளக்கட்டியெழுப்பு முக மாக 55 ரூபாவிற்குக் கோழிக் குஞ்சு களைப் பெற்றுத் தருவதாக உறுதிய ளித்த அமைச்சர் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உடனடியாக 25 ஆயிரம் கோழிக் குஞ்சுகளைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குளிர் தாங்க முடியாமல் இரண்டு இலட்ச த்திற்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்ததுடன் 44 ஆயிரம் ஆடுகளும் மரணித்துள்ளன. குளங் கள் உடைப்பெடுத்ததால் ஏழாயிரத் திற்கும் அதிகமான மாடுகள் உயிரி ழந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளப் பாதிப்பு: 51 மில்லியன் ரூபா உடனடித் தேவை

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரப் பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரண இணைப்பதிகாரியுமான காத்தரின் ப்ரகங் பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி ஆராய்ந்த பின்னரே ஐ.நா. இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், இதனை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சமூக நலன் தொடர்பில் சிந்திக்கும் நாடுகளில் இலங்கை 8வது இடத்தில் இந்தியாவுக்கு 48 வது இடம்


சமூக நலன் தொடர்பாக சிந்திக்கும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கல்அப் எனும் அமைப்பு 130 நாடுகளில் இது தொடர்பான கணக்கெடுப்பொன்றை நடத்தியுள்ளது.

பிறரின் வாழ்க்கைத்தர உயர்வுக்குத் தமது நேரத்தை செலவு செய்தல் மற்றும் பிறருக்குத் தாமாக முன்வந்து உதவுதல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியா 48 வது இடத்தில் இருக்கும் அதேநேரம் இலங்கையின் அயல் நாடுகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முறையே 27 மற்றும் 40 வது இடங்களை அடைந்துள்ளன.

60 புள்ளிகளைப் பெற்றிருக்கும் அமெரிக்கா இப்பட்டியலில் முதலாவது இடத்திலும் அதற்கு அடுத்ததாக அயர்லாந்தும், அவுஸ்திரேலியா 59 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

கல்அப் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தாம் வாழும் சமூகத்தில் சமூக நலனுடன் செயற்பட்டு வருவது கண்டறியப் பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 130 நாடுகளில் அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள இளவயதினர் சமூக நலன் செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

நலன்புரி அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்குதல், அவ்வமைப்புக்களுடன் நேரத்தை செலவு செய்தல், தெரியாதவர்களுக்கு உதவி செய்தல் போன்ற சமூக நலச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மு.கா. அரசுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட தீர்மானம்


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் 10 உள்ளூராட்சி மன்றங்களிலும் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு அடிப்படையில் இவ்வாறு போட்டியிட மு.கா. முடிவு செய்துள்ளதாக கட்சிச் செயலாளர் எம்.ரீ. ஹஸன் அலி கூறினார்.

ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் மு.கா. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் எனவும் அவர் கூறினார். கட்சித் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சி செயலாளர் ஹஸன் அலி, தவிசாளர் பிரதி அமைச்சர் படுர் சேகுதாவூத் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் மாவட்ட குழு மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பீட உறுப்பினர்கள் கூடி முதலில் ஆராய்ந்தனர். பின் ஐ.ம.சுமு. செயலாளருடன் மு.கா. பேச்சு நடத்தியது.

அரசுடன் இணைந்து போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டால் கட்சியின் வியூகத்தை மாற்ற நேரிடும் எனவும் ஹஸன் அலி கூறினார். கட்சி அதியுயர் பீடமே இறுதித் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேசசபை, சம்மாந்துறை பிரதேசசபை ஆகியவற்றிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும், நாவிதன்வெளி, இறக்காமம், பொத்துவில், அட்டாளைச்சேனை, காரைதீவு, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் தனித்தும் போட்டியிட உள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு மரச்சின்னத்தில் தனித்தும் ஏறாவூர், காத்தான்குடி நகர சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத் தில் மன்னார், முசலி, மாந்தை ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் தனித்தும், ஏனையவற்றிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட வுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்தில் வென்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கு மரச்சின்னத்தில் தனித்தும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மரித்திமேபற்று பிரதேசசபைக்கு தனித்தும் போட்டியிடவுள்ள தாகவும், இம் மாவட்டங்களில் சில சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து போட்டியிடவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் ஹஸன் அலி கூறினார்.

வடகிழக்கிற்கு வெளியே களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை பிரதேசபை பேருவளை பிரதேசசபை ஆகியவற்றிற்கும், கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்லை பிரதேச சபைக்கும், கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேசசபை, உடுநுவர பிரதேசசபை ஆகியவற்றிற்கும், மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேசசபைக்கும், மாத்தறை மாவட்டத்தில் வெலிகம நகரசபைக்கும், குருணாகலை மாவட்டத்தில் குளியாப்பிட்டிய பிரதேச சபைக்கும், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகரசபைக்கும், பதுளை மாவட்டத்தில் வெளிமடை பிரதேசசபைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் தனித்தும் ஏனையவற்றிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்பு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்கப்படுகின்றன. இதற்கான சகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிரி கூறினார்.

வேட்பு மனுக்கள் ஏற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு வேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் வரை வேட்பு மனுக்கள் ஏற் கப்படவுள்ளதோடு சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு 26 ஆம் திகதி வரை காலம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு ஏற்கப்படுவதையொட்டி மாவட்ட செயலகங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுமனசிரி கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் பொலிஸாருக்கு உரிய ஆலோசனை வழங்கியுள்ளார். 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மார்ச் நடுப்பகுதியில் தேர்தல் கள் நடத்தப்படவுள்ளன. தேர்தல் நடைபெறும் திகதி 27 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

எஞ்சிய முகாம்களை நலன்புரி நிலையங்களாக பேண பணிப்பு மட்டு மாவட்டத்தில் 11 முகாம்களில் 2,000 பேர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு முழுமையான வசதிகளைப் பெற்றுக் கொடுத்து, சுமார் ஒருமாத காலத்திற்கு நலன்புரி நிலையங்களாகப் பேணுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் வெள்ள நீர் வடிவதற்கு ஒரு மாத காலம் வரை செல்லுமென்பதால் அந்த மக்களுக்குத் தேவையான சகல நிவாரண உதவிகளையும் செய்துகொடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற விசேட கூட்டத்தில் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டதாகப் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் 11 முகாம்களில் 600 குடும்பங்களைச் சேர்ந்த 2107 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீளப்பெறப்பட்டிருப்பதுடன் தற்போது வேறு அரச கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்முனை தெற்கு, கொக்கட்டிச்சோலை, ஏறாவூர், செங்கலடி, போரத்தீவுப்பற்று, வவுணதீவு, வாகரை, ஓட்டமாவடி ஆகிய இடங்களில் 11 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் இலுப்படிச்சேனை, கொத்தியவளை கரவெட்டி ஆகிய இடங்களில் 186 குடும்பங்கள் தங்கியுள்ளன. மேலும் மகிழவட்டுவான் தேவாலயத்தில் 84 குடும்பங்களும், கண்டவெளி நெற்களஞ்சியசாலையில் 15 குடும்பங்களும் தங்கியுள்ளன.

இவர்கள் தங்கியிருப்பவை தற்காலிக முகாம்கள் என்றாலும் அவற்றில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நலன்புரி நிலையங்களாகப் பராமரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இவர்களின் சொந்தக் கிராமங்களில் நீர் முற்றாக வடிவதற்கு ஒரு மாதம்வரை செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். முகாம்களில் உள்ளவர்களுக்கு மூன்று வேளை சமைத்த உணவு வழங்கப்படுவதுடன், சொந்த வீடுகளுக்குத் திரும்பியவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உலருணவு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் முகாம்களாகப் பயன்படுத்தப்பட்ட சகல பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் கிரமமாக இயங்குமென்றும் பிரதியமைச்சர் கூறினார். பாடசாலைக் கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைப் புனரமைப்பதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...