வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் மீண்டும் கனத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே வெள்ள நிலையும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அவல நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.
இம் மழை காரணமாக சுமார் 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சுமார் 29,500 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 30க்கும் மேற்பட்ட முகாம்க ளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
ஏற்பட்டுள்ள வெள்ளம், மண் சரிவு காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் காலநிலையில் மீண்டும் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அடுத்துவரும் இரண்டு, மூன்று தினங்களுக்கு மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா நேற்று தெரிவித்தார்.
இலங்கைக்கு அருகில் தென் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்க நிலையே இக்காலநிலைக்குக் காரணம். இதன் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடாக்கடல் பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். அதனால் இக்கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை அம்பாறையில் 217.1 மில்லி மீற்றர்கள் பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மண்சரிவு:
போக்குவரத்து பாதிப்பு
இதேவேளை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலிய அலுவலகப் பொறுப்பாளரான பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க குறிப்பிடுகையில், வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாவெவ மண்சரிவு செயற்படத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கீர்த்தி பண்டாரபுர மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஆறு குடும்பங்களும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதேநேரம் வெலிமடை, நுவரெலியா நெடுஞ்சாலையிலும், புஸ்ஸல்லாவ, நுவரெலியா நெடுஞ்சாலையிலும் நேற்றுக் காலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான போக்குவரத்து உடனடியாக ஸ்தம்பிதமடைந்தது. மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும், பொலிஸாருடன் இணைந்து உடனடியாக ஈடுபட்டனர்.
இதேவேளை பதுளை - கண்டி வீதியில் ரந்தெனிகலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு அருகில் ரஜ மாவத்தையில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நீர்த்தேக்க முகாமையாளர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் துரிதமாக செயற்பட்டு நீர் மட்டத்தைக் குறைத்துள்ளனர்.
இதேநேரம், இப்பாதை ஊடாக மண் ஏற்றும் லொறிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லுவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
வான் கதவுகள் திறப்பு
இவை இவ்வாறிருக்க அடை மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 58 குளங்கள் நிரம்பி வழிவதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.
அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், பதுளை, குருநாகல் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, அநுராதபுரம், ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும், 22 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.
அந்தந்த பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னரே குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.
திருகோணமலை
குச்சவெளி தினகரன் நிருபர்
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக 1361 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் டி. டி. ஆர். டி. சில்வா தெரிவித்திருக்கிறார்.
குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம், வெருகல், கோமரங்கடவல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 1361 பேர் 8 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நலன்களை அவ்வப்பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
குச்சவெளி வாழைப்யூற்றுக்கிராமம் சலப்பையாறு வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்ற இறக்கக்கண்டி கடற்படையினர் றைகம் உப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து பெக்கோ இயந்திரத்தின் மூலம் ஈடுபட்டு வருகின்றனர். காற்றுடன் கூடிய மழை குளிர்காற்றுடன் வீசுவதால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
தம்பலகாமம் நிருபர்
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் தம்பலகாமம் பத்தினிபுரத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் சித்திவிநாயகர் வித்தியாலயம், பத்தினிபுரம் முன்பள்ளி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் அதிகமாயிருப்பதால் கந்தளாய் குளத்தின் 9 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் திருகோணமலை கண்டி வீதியில் 96வது மைல்கல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருகிறது.
பல வயல் நிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின.
அனுராதபுரம்
மிஹிந்தலை தினகரன் நிருபர்
அனுராதபுரத்தில் பல பகுதிகளிலும் மீண்டும் பெய்துவரும் அடைமழையால் மல்வத்து ஓயா, கனந்தரவாவி பெருக்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ் ஆறுகளினது நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
அளுத்கமவிற்கும், கல்பொத்தேகமவிற்கும் குறுக்கே செல்லும் மல்வத்துஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தன் மூலம் பாலத்திற்கு மேல் சுமார் ஐந்து (05) அடியிலிருந்து நீர் குறுக்கறுத்து செல்கின்றது. நாளாந்தம் அவ்வழியாக நகரத்திற்கு பயணிக்கும் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் அசெளகரிகத்திற்குள்ளாகின்றனர்.
இதே வேளை அஸரிகமவிற்கும், உடும்புகலவிற்கும் குறுக்கே செல்லும் கனந்தரவாவியின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்திருப்பதன் மூலம் பல ஏக்கர் நெல் வயல்கள் பாதிப்படையும் அவல நிலை தோன்றியுள்ளது.
வவுனியா
வவுனியா விசேட நிருபர்
வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளம் காரணமாக 3005 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செட்டிக்குளம் பிரதேச செயலாளர் எஸ். கமலதாஸ் தெரிவித்தார்.
பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதினால் வெளியேறும் நீரினால் கந்தசாமி நகர் தட்டான்குளம் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச செயலாளர் பூவரசன்குளம்- செட்டிகுளம் வீதியும், நெளுக்குளம்- நேரியகுளம் வீதியும் போக்குவரத்திற்கு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 20 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் நண்பர்கள், உறவினர் வீடுகளில் உள்ளனர். பொது இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 289 குடும்பங்களைச் சேர்ந்த 1238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செக்கடிப்பிளவு, சாளம்பைக்குளம், மூன்று முறிப்பு, தாண்டிக்குளம் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான மழையின் காரணமாக மரக்கறி செய்கை 200 ஏக்கர் வவுனியா மாவட்டத்தில் அழிவடைந்துள்ளது என மாவட்ட விவசாய விரிவாக்கல் உதவிப்பணிப்பாளர் திருமதி ஜே. ஜெகநாதன் தெரிவத்தார்.
சுமார் 4500 ஏக்கர் நெல் வேளாண்மை, மூவாயிரம் ஏக்கருக்கு மேல், உழுந்து, பயறு, கெளபீ, மிளகாய் தலா 100 ஏக்கர் முற்றாகவே அழிவடைந்துள்ளது. சோளமும் பப்பாசி செய்கையும் அழிந்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
அறுவடை நேரத்தில் மழை வந்தமையினால் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளைந்த நெல் வேளாண்மைகள் நீரில் மிதக்கின்றது. உழுந்து பயறு போன்ற தானிய வகைகள் முளைக்கத் தொடங்கிவிட்டது.
விவாயிகள் அனைவருமே வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளதினால் நிவாரணங்கள் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விவசாய பணிப்பாளர் ஊடாக அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
மலையகம்
மஸ்கெலியா குறூப் நிருபர்
கடந்த இரு தினங்களாக இரவும் -பகலும் இடைவிடாது, மஸ்கெலிய, சாமிமலை, பொகவந்தலாவை, நோர்வூட், அட்டன், டிக்கோயா பகுதிகளில் உள்ள மின்சார உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ள நீர் அணைக்கட்டுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வழிந்தோடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியாவை அடுத்துள்ள மெளசாக்கெல்லை நீர் தேக்கக்குளம், டிக்கோயாவைச் சேர்ந்த காசல்ரீ நீர்த்தேக்கக்குளம், அப்புகஸ்தலையைச் சேர்ந்த கென்யன் நீர்த்தேக்கக் குளம், நோர்ட்டன் பிரிட்ஜைச் சேர்ந்த லக்ஷபான நீர்த்தேக்கக்குளம் ஆகியவற்றில் நீர் பெருகி கரைகளில் மேலால் ரிழிந்தோடுகிறது.
அது அவ்வாறிருக்க, தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களால் சிறுதோட்டங்களில் பயிர் செய்த மரக்கறி செடிகள், கன்றுகள் பழுதாகியுள்ளன. தோட்டங்களில் தேயிலை நேர்சரிஸ் கடும் பாதிக்கப்பட்டுள்ளன. பல தோட்டங்களில் சிறிய, சிறிய மண் சரிவுகள் இடம்பெற்றுள்ளன.
மாத்தளை சுழற்சி நிருபர்
மாத்தளை மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதன் காரணமாக ஏற்கனவே வெள்ள அபாயம் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் அவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இயற்கை அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் குடியிருப்பவர்கள் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களில் குடியிருப்பது அவசியம் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் பொறுப்பதிகாரி ஐ. கே. ரணவீர தெரிவித்தார்.
தற்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதையடுத்து பள்ளேபொல பிரதேச செயலாளர் பிரிவில் நாகன கிராமத்தில் ஆறு குடும்பங்களும் யடவத்த பிரதேச செயலாளர் பிரிவில் செலகம தோட்டத்தில் 15 குடும்பங்களும் பாதுகாப்புக் கருதி அவர்களின் உறவினர்களில் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இடர்முகாமைத்துவ அமைச்சினால் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாத்தளை, யடவத்த, உக்குவளை, இரத்தோட்டை, அம்பங்கங்க கோறளை ஆகிய ஐந்து பிரதேச பிரிவுகளில் வெள்ளம், மண்சரிவு ஏற்படும் பிரதேசமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊவா சுழற்சி நிருபர்
மலையகத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதி போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்திலுள்ள பல பாடசாலைகள் இன்று 12 மணிக்கு மூடப்பட்டுள்ளது.
பதுளை, ஹாலி எல்லை, பண்டாரவளை, தியத்தலாவை, பொறலந்தை, வெலிமடை பிரதேச பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் மண் சரிவும், வெள்ள அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 32 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்திற்குட்பட்டு அனர்த்த இடைத்தங்கல் முகாமிலுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
வெள்ளம் வடிந்த பகுதிகளில்
மீண்டும் வெள்ளம்
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்
கிழக்கு மாகாணத்தில் மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்து காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிறான் மற்றும் வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி ஆகிய பகுதிகள் உட்பட ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீண்டும் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1346.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதியன்று 331.2 மில்லி மீற்றர் ஒருநாளுக்கான அதிக மழை வீழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
சமைத்த உணவு வழங்க நிதி ஒதுக்கீடு
களுவாஞ்சிகுடி குறூப் நிருபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 850 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
275 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 42295 குடும்பங்களைச் சேர்ந்த 165491 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.
அதேவேளை மக்கள் இடம்பெயர்வின் போது ஏற்பட்ட அவசர செலவுகளுக்காக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.
அம்பாறை
அம்பாறை தினகரன் நிருபர், மருதமுனை தினகரன் நிருபர்
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பாரிய வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 40 ஆயரம் ஏக்கர் வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் மழையினால் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம், திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் அடங்கலான அனைத்து பிரதேசங்களிலும் மமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
அத்துடன் பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பன நேரகாலத்துடன் மூடப்பட்டன.
அம்பாறை சுழற்சி நிருபர்
அம்பாறையில் தொடரும் மழையால் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மழை காரணமாக அலுவலகங்களுக்குச் செல்லும் அரச தனியார் உத்தியோகத்தர்களும், பாடசாலை, மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது இம்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்.
மழை காரணமாக அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மீண்டும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் அதிகமான மழை நீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
10500 குடும்பங்கள்
பொத்துவிலில் பாதிப்பு
பொத்துவில் தினகரன் நிருபர்
தொடர்ந்து பெய்யும் அடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பொத்துவில் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள 27 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 10500 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் யு. எல். நியாஸ் தெரிவித்தார்.
இதேவேளை பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவிற்குட்பட்டதும் லகுகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டதுமான ஹுலநுகயில் சோளன் சேனையில் பாதுகாப்பு பரனில் இருந்த நான்கு பேர் ஹெட்ஓயா, கள்ளமுனை ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர். இதில் திருமணமாகி இரு மாதங்கள் ஆன புதுமணத் தம்பதியர் இருவராவார்.
பொத்துவில், வானிலை அவதான நிலைய அறிக்கையின்படி நேற்றிலிருந்து இன்று (2) 24 மணித்தியாலத்தில் 190.5 மில்லி மீற்றராகும். அக்கரைப்பற்றில் 144.4 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளதாக வானிலை அவதான நிலயைப் பொறுப்பாளர் எம். ஐ. ஏ நஹீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை மேற்கு தினகரன் நிருபர்
கட்டார் செரிட்டி அமைப்பின் நிதி உதவியுடன் சிறிலங்கா முஸ்லிம் எயிட் அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் செறிந்து வாழும் சம்மாந்துறை – 10 கிராம மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கிராம சேவை உத்தியோகத்தர் எம். இப்ரலெப்பை தலைமையில் நடைபெற்றது.
இந்நிவாரணப் பொதிகள் ஒவ்வொன்றும் 2500 ரூபா பெறுமதி வாய்ந்த அரிசி, சீனி பருப்பு, உட்பட பால் உணவு வகைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.