24 மார்ச், 2010

24.03.2010 தாயகக்குரல்.


உலக மனச்சட்சியை தட்டியெழுப்பி எமது தேசியம் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றுக்காக குரல் கொடுக்க, சர்வதேச அரங்கில் எமது விடையங்களை எடுத்துக் கூறத்தக்க தெளிந்த அரசியல் புலமையாளர்கள், கல்வியாளர்கள் தேவையென யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.


இவருடைய கருத்தை நோக்கும்போது இனப்பிரச்சினை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன்.அருணாசலம், சேர் பொன். இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயம் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட ஏனைய தலைவர்களும் அரசியல் புலமை இல்லாதவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினை இன்னமும் சர்வதேசத்தின் அங்கீகரத்தை பெறவில்லை. ஆகையால் இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணமுடியவில்லை என்று பேராசிரியா சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுகிற இனப்பிரச்சினையும் இந்திய வம்சாவழியினரான மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினையும் சமகாலத்தில் தோன்றியது . இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மொழிப்பிரச்சினை ஆரம்பித்திருந்த போதிலும் சுதந்திரத்திற்கு பின்னர்தான் அரசியல் அரங்கிற்கு வந்தது. ஆனால் மெத்தப் படிக்காத மலையக மக்களின் தலைவர்கள் தங்கள் மக்களின் குடியுரிமையை பறித்தவர்களிடமே திரும்ப பெற்றுள்ளனர்.


1948ல் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. ஆனால் அதே மக்களின் குடியுரிமையை வழங்கும் சட்டமூலம் 1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் 121 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களைக் கொண்டிருந்த மலையக மக்களின் தலைவர்கள் சிங்கள இனவாத அரசு என வர்ணிக்கப்படும் அரசாங்கத்தில் தங்கள் குடியுரிமையைப் பெறமுடியுமானால் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதிகளாக 60 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தியவர்கள் என்பது மாத்திரமல்ல எதிர்கட்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களால் ஏன் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாமல் போனது?


1978ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் தமிழீழ தனியரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதோடு சோமர்வில்லி நகரம் திருகோணமலையை தனது சகோதர நகரமாக பிரகடனம் செய்தது.


இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து அமெரிக்கா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வந்துவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களிடையே தம்பட்டம் அடித்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர் இந்தியாவின் தலையீடு, நோர்வேயின் தலையீடு, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு என்ற பெயரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலையீடு, சர்வதேச நாடுகளில் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் என்று சர்வதேசம் ஏதோ ஒருவகையில் இனப்பிரச்சினையில் தலையிட்டு கொண்டுதான் இருக்கின்றன.


1986ம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இலங்கைக்கு நிதிஉதவி எதுவும் வழங்கப் போவதில்லை என உதவி வழங்கும் நாடுகள் தெரிவித்துவிட்டதாக அப்போது நிதி அமைச்சராக இருந்த ரொனி டி.மெல் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடவேண்டும்


1986ல் இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா.சபை தனிக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் எனக் கூறியிருந்தது. எனவே புதிதாக இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியதில்லை.


இந்த நிலையில் இனப்பிரச்சினைபற்றி சர்வதேச சமூகத்திற்கு விளங்க வைக்க அரசியல் புலமை பெற்றவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றும் மக்களிடம் வருகிறது.


கடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஆணைகேட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை பிரதான நிகழ்ச்சி நிரலாக கொள்ளாததே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.


அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரஸ்தாபித்து வருகின்றன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுத் திட்டம் முனவைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்த தீர்வுத்திட்டம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் சிங்கள மக்கள் அங்கீகரிக்கக் கூடியதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கிறார்.


தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் எதுவும் இன்றைய நிலையில் சிங்கள மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அந்த நிலைக்கு சிங்கள மக்களை கொண்டுவந்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.


இனப்பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய நாள்வரை இனப்பிரச்சினை தீர்வுக்கு பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல பிரேரணைகள் முன்மொழியப்பட்டன.


அ) 1957; ல் பண்டா- செல்வா ஒப்பந்தம்.

ஆ.) 1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம்

இ) 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம்.

ஈ) 1988ல் ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு பிரேரணைகள்.

உ) 1992ல் மங்கள முனசிங்கா பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை.

ஊ) 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனத்தில அடங்கியுள்ள காமினி திசநாயக்காவின் பிரேரணைகள்,

எ) 2000ஆம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னணியின் அரசியல் அதிகாரப் பகிர்வு ஆலோசனை

ஏ) 2003ல் ஒஸ்லோ பிரகடனம்.

ஒ) 2006-2009 சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை.


இப்படி பல முயற்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. இந்த முயற்சிகளின் தோல்விகளுக்கு சிங்கள தலைவர்களின் தீவிரவாதப் போக்குமட்டும் காரணமல்ல. தமிழ் தலைவர்களின் தீவிரவாதப் போக்கும் ஒரு காரணமாகும். எப்படி இருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசாங்கத்துடன் பேசியே தீர்வு காணவேண்டும். அதை விடுத்து இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பக்கம் கையைக் காண்பிப்பது மக்களை தவறாக வழிநடத்துவதாகும். சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்;குள்ளேயே இனப்பிரச்சினையை அணுகிவந்தன.


ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவே இருந்துள்ளது. 1986ம் ஆண்டு இலங்கைத்தமிழர் பிரச்சினையை இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சியில் ஏகாதிபத்திய சக்திகள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்சிய தலைவர் மிக்கெய்ல் கோர்ப்பச் சேவ் குற்றம் சாடியிருந்தார். அப்போது, இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து ரஷ்சிய தலைவர் மிக்கெய்ல் கோர்ப்பச் சேவ் தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இலங்கை அரசு கோரியிருந்தது.


இன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின் எதிர் முகாம்களுடன்; குறிப்பாக ரஷ்சியா, சீனா,ஈராக்,லிபியா போன்ற நாடுகளுடன் நட்பை பேணுவதால் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு சில நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. ஆனாலும் இந்நாடுகள் இந்தியாவை மீறி இலங்கைப் பிரச்சினையில் தலையிடமாட்டாது என்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து மக்கள் படித்து விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இனி பாடம் படிக்கவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச்சென்ற கப்பல் தலைவருக்கு அபராதம் விதிப்பு

இலங்கையிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியா வழியாக 254அகதிகளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் கப்பல் தலைவர் இன்று இந்தோனேசிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்போது 3ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் 18மாதங்கள் நன்னடத்தைக் காலமாகவும் அறிவிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் அவர் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் அதேநேரம் நன்னடத்தை மாதங்களுக்குள் அவர் மீண்டும் தவறிழைத்தால் ஒருவருட சிறைத்தண்டனை வழங்கப்படுமென நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 2007ம் ஆண்டு இதே குற்றத்தின்கீழ் அவர் 20மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார். இந்நிலையில் கடந்தவருடமே அவர் விடுதலையாகியிருந்தார். இந்தோனேசிய சட்டத்தில் ஆட்கடத்தலுக்கு கூடிய தண்டனை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியான தகவல்படி குறித்தநபர் கடந்த 10ஆண்டுகளுள் 1500பேரை அவுஸ்திரேலியாவுக்குள் கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. ஆப்ரகாம் லூகனாபேசி என்ற பெயருடைய இந்தக் கப்பல் தலைவரால் அழைத்துச்செல்லப்பட்ட 250இலங்கை அகதிகளும் இந்தோனேசிய மெரக் துறைமுகத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க-பாகிஸ்தான் இராணுவப் பேச்சு





பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தளபதிகள்
பாகிஸ்தான் இராணுவத் தளபதி மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி
அமெரிக்கா பாகிஸ்தான் இடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன

பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கேந்திர மற்றும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவக் குழுக்களுக்கு இடையேயான ஒரு வாரகால பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கியானி அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தளபதியான அட்மிரல் மைக் முல்லனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

2013 ஆண்டு வாக்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் முகமான முன்னெடுப்புகளை பராக் ஒபாமா அவர்கள் செய்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறும் நிலையில் அதற்கு பாகிஸ்தான் எந்த வகையில் உதவ முடியும் என்றும் அதே நேரம் மிதவாத நோக்குடைய தாலிபான்களை கொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு ஆட்சியை அமைக்க முடியுமா என்பது போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் சுபா சந்திரன் கருத்து வெளியிடுகிறார்.

ஆப்கானிஸ்தானின் அரசியல் விடயத்தில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

திருடர்களைத் துரத்திப் பிடித்த பொது மக்கள் : ஏழாலையில் சம்பவம்



ஏழாலைப் பகுதியில் கத்தி முனையில் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற திருடர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆலயத்திற்குச் சென்று விட்டுத் தனிமையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கத்திமுனையில் பயமுறுத்தி சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.

பெண்மணி கூக்குரலிட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் திருடன் சென்ற பாதையை நோக்கிச் சென்றனர். சிலர் தமது சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர்.

திருடர்கள் சென்ற பாதை, ஒரு வீட்டுடன் முடிந்த நிலையில், இவர்கள் தமது பாதையை மாற்றிச்செல்ல முயன்ற போது, பின் தொடர்ந்து வந்த மக்கள் திருடர்களைக் கண்டுபிடித்தனர். அவ்வேளை, திருடர்கள் தம்மைப் பிடிக்க வந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் தாக்கியும் உள்ளனர்.

பொது மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து சென்று திருடர்கள் இருவரையும் பிடித்து, சுன்னாகம் பொலிசில் ஒப்படைத்தனர். சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்ணார்பண்ணை ஆலயத்தில் திருட்டு

அதேவேளை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள வண்ணார்பண்ணை நாச்சிமார் ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நுழைந்த திருடர்கள் அங்கிருந்து பெறுமதியான நகைகள் மற்றும் பல பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

தற்போது அங்கு துர்க்கையம்மனுக்கான ஆலயம் கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளுக்காக விடப்பட்ட பாதைகள் ஊடாக ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நகைககள், பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

விசாரணையின்றி சிறையிலிருந்த 461பேர் இதுவரை விடுதலை : புத்திரசிகாமணி





வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பில் 11 சட்டத்தரணிகளை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருகின்றது. அவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசியமில்லாதவர்கள் விடுவிக்கப்படுவர்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பங்களாதேஷ் இராணுவத் தூதுக்குழு இலங்கை வருகை




பங்களாதேஷ் இராணுவ தூதுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய இக்குழு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நிலையில், இது தொடர்பாக இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.

பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.

சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இதன்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் உடன் இருந்தார்.

இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து, இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து இக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்




எதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகிறது. நளையும் நாளை மறுதினமும் நடைபெறும் இந்த வாக்களிப்பைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி ஒன்றில் இடம்பெறும் வாக்களிபபைப் போலவே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு நடைபெறும் சகல அரச அலுவலகங்களும் நாளை 25 ஆம் திகதியும், 26 ஆம் திகதியும் தேர்தல் வாக்குச் சாவடிகள் போன்று இயங்கும் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படும் திணைக்களத் தலைவர் மற்றும் அவரது செயலணியினர், வாக்களிக்க தகுதி பெற்றவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எவரும் வாக்களிப்பு நிலையத்தினுள் இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

எனினும் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதி ஒருவர், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் (சீ. எம். ஈ. வீ) பிரதிநிதி ஒருவர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி சுயேச்சைக் குழு சார்பில் தலா இருவருக்குமே வாக்களிப்பு நிலையத்தில் கண்காணிப்புக்காக அனுமதி வழங்கப்படும். தேர்தல் கண்காணிப்பில் தெரிவத்தாட்சி அலுவலரால் பெயர் குறிப்பிடும் நபர் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளாக இயங்கும் அரச அலுவலகத்தினுள் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். வேறு எந்த அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கோ அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கோ தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கோ வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இது தொடர்பாக தபால் மூல வாக்குப் பதிவுகள் நடைபெறும் அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் இடத்திற்கு வெளியில் அல்லது உள்ளே அரசியல் கட்சியின் சுயேச்சைக் குழுவின் சுரொட்டிகள், 'கட்அவுட்' கள், கொடிகள் என எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது. இவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கவும் அனுமதி இல்லை.

வாக்களிப்பு நிலையத்தில்....

வாக்களிப்பு நிலையத்தினுள் வேட்பாளரின் அல்லது அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்குமானால் அவை நீக்கப்பட வேண்டும். அல்லது மறைக்கப்பட வேண்டும்.

வாக்களிப்பு நடைபெறும் இடத்திற்கு கையடக்கத் தொலைபேசிகள், ஆயுதங்கள், கெமராக்கள் கொண்டு செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பு நடைபெறுவதைப் புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் தனது வாக்கை மிக இரகசியமாகப் பதிவு செய்வதற்கான வசதிகளும் வாக்குச் சாவடியில் செய்து கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சகல தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வாக்காளர் வாக்குப் பதிவை முடித்த பின்னர் கவனமாக மடித்து தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் உறையினுள் இடவேண்டும். உறையைச் சீல் செய்து, அதனை அதற்குரிய ஆவணத்துடன் மற்றுமொரு உறையினுள் இட்டு, அன்றைய தினமே காப்புறுதி செய்யப்பட்ட தபாலில் தேர்தல் ஆணையாளருக்குக் கிடைக்கும் விதத்தில் தபால் திணைக்களத்திடம் தெரிவத்தாட்சி அலுவலர் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் தனது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டைக் காண்பிப்பது குற்றம்

பதிவு செய்த வாக்குச் சீட்டை வாக்காளர் பிறருக்குக் காண்பிப்பதோ காண்பிக்கும்படி கூறுவதோ பாரதூரமான தவறு என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டைகள்

வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் எதையேனும் வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

அந்த அடையாள அட்டைகளுள் ஒன்றேனும் வாக்காளர்களிடம் இல்லாவிட்டால் அல்லது கைவசமிருக்கும் அடையாள அட்டை தெளிவில்லாது இருக்குமாயின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையொன்றை உடனடியாகப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

வேறு எந்தவிதமான அடையாள அட்டையோ ஆவணமொன்றோ வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டுக் கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வணக்கத்துக்குரியவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினாலும் ஆட் பதிவூத் திணைக்களத்தினாலும் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ,தேர்தல்கள் திணைக்களத்தினால் நாடாளுமன்றத் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, கடந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும். எனினும் கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்காக 2008 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை இந்தத் தேர்தலின் போது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றப்படாத கிராம மக்கள் இன்று மன்னாரில் போராட்டம்





மாந்தை எள்ளுப்பிட்டி, பெரிய நாவற்குளம் கிராம மக்களை மீள் குடியமர்த்துமாறு கோரி, மன்னார் அரச செயலகத்திற்கு முன்னால் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தினர். மன்னர் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, மன்னர் பகுதிகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அயலிலுள்ள திருக்கேதீஸ்வரத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

அடம்பன், பாப்பமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும் தாம் இதுவரை மீள்குடியேற்றப்படாமை குறித்தே மேற்படி போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் நடந்த காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு



உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மன்னார் நகர மண்டபத்தில், 'காசநோயைக் கட்டுப்படுத்தும் வேகத்தை புதிய அணுகு முறை மூலம் துரிதப்படுத்துவோம்' எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.

மன்னார் சர்வோதயத்தின் அனுசரணையில், மாவட்ட காச நோய்த் தடுப்பு பிரிவு மேற்படி விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.றொபர்ட், பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் அரவிந்தன், மாவட்ட காச நோய்த் தடுப்புப் பிரிவு அதிகாரி டாக்டர் யூட் பச்சைக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். காசநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கலை நிகழ்வும் அங்கு இடம்பெற்றது.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர் மக்கள் வாக்களிக்க விசேட கரும பீடம் : வன்னி தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை





வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற இடம்பெயர்ந்தவர்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வவுனியாவில் விசேட கருமபீடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

2008ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இலவச போக்குவரத்து மற்றும் இவ்விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படும்.

எனினும் இடம்பெயர்ந்தவர்களுள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மக்களுக்கும் விசேட வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கவும் வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி வவுனியா மெனிக்பாம், செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலும் தனித்தனியே விசேட கருமபீடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா அரச அதிபர் அலுவலகத்திலும் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் செலவிலேயே லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம்



பிரித்தானிய நடாளுமன்ற உறுப்பினர் லியாம் பொக்ஸின் இலங்கைக்கான சில விஜயங்களின் போது இலங்கை அரசாங்கமே இவருடைய விஜயத்திற்கான செலவுகளை செய்திருந்ததாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது 2007ஆம், 2008ஆம், 2009ஆம் ஆண்டுகளில் லியாம் பொக்ஸ் 5 தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாகவும், இவ் விஜயங்களின் போது இலங்கை அரசே இதற்கான செலவுகளை மேற்கொண்டதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-​ இஸ்ரேல் முடிவு




ஜெருசலேம், ​​ மார்ச் 23: கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும்,​​ இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.

​ இஸ்ரேலுக்கு 3 நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவாண்,​​ திங்கள்கிழமை அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியலை சந்தித்துப் பேசினார்.

​ இந்தச் சந்திப்பின் போது,​​ அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் இரு நாடுகளிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.​ நானோடெக்னாலஜி,​​ உயிரிதொழில்நுட்பம்,​​ நீர்மேலாண்மை,​​ கணிதம்,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய 5 துறைகளிலும் ஒத்துழைப்பை மிகுதிப்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

​ ​ முக்கியமாக வரும் ஆண்டுகளில் கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

​ ""கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் இந்தியாவும்,​​ இஸ்ரேலும் திறன்மிக்க நாடுகளாக உள்ளன.​ இதைக் கருத்தில் கொண்டே இவ்விரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளோம்'' என்று இஸ்ரேல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியல் தெரிவித்தார்.​​ இதுகுறித்து பிருதிவிராஜ் சவாண் கூறுகையில்,​​ கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.​ இரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக கபில் சிபல் அறிவியல் அமைச்சராக இருந்தபோதே பொது நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

​ பிருதிவிராஜ் சவாண் இஸ்ரேலில் உள்ள பல்வேறு முக்கிய கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.​ அங்கு 40-க்கு மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றும் வெஸ்மான் அறிவியல் மையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

​ இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,​​ இஸ்ரேலில் உள்ள ஏராளமான அறிவியல் மையங்கள் இந்திய ஐஐடிகளுடன் இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள பெரிதும் விரும்புகின்றன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நான் அப்பாவி: வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நித்யானந்தா மனு




தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகர்நாடகா, பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தாவுக்கு எதிராக, அவரிடம் சீடராக இருந்த தர்மானந்தா என்பவர், தமிழக போலீசாரிடம் புகார் அளித்தார். பிடதி ஆசிரமம் கர்நாடகாவில் இருப்பதால், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. நித்யானந்தா மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும்படி, நித்யானந்தா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், 'நான் ஒரு அப்பாவி. எனக்கும், ஆசிரமத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி: நித்யானந்தாவின் முன் ஜாமீன் மனுவை, கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. 'தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று நித்யானந்தா, கர்நாடக ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவில், பிடதி போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே சட்டப்படி புகார் பதிவு செய்யலாம். மூன்றாவது நபர், என் பெயருக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் புகார் செய்துள்ளார். முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி அரளு நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சாமியார் நித்யானந்தா முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த, பிடதி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்கள் விஜயம்




வன்னியில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வ.திருவருட்செல்வன் (மூர்த்தி) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இன்றுமுற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி, ஆனந்தப்புளியங்குளம், ஒலுமடு, சின்னப் பூவரசன்குளம், மதியாமடு போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெடுங்கேணி நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றது. இங்கு புளொட் தலைவர். த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), முன்னார் எம்.பி வை.பாலச்சந்திரன், வ.திருவருட்செல்வன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உரையாற்றினர். இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் யாவருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான தேவைகளும், பிரச்சினைகளும், கஸ்ரங்களுமே காணப்படுகின்றன. இம்மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்தும் இம்மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை பெற்றுத்தருமாறு பெற்றோர் எம்மிடம் விடுத்திருக்கும் வேண்டுகோள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். எனினும் இன்னும் பலர் சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களை விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவோம். எனவே எமது கட்சி மேற்கொண்டுவரும் சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...