12 நவம்பர், 2010

எழுத்துமூல ஆவணங்களை டிசம்பர் 31 வரை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவுள்ளது

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியங்கள் தொடர்பான எழுத்துமூல ஆவணங்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த எழுத்துமூல சாட்சியங்கள் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற போது நாட்டை விட்டு வெளியேறியவர்களிடமும் சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆணைக்குழுவின் அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த வருடம் மே மாதம் 16 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அமர்வுகள் இம்மாதம் 15ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் -பாதுகாப்பு அமைச்சு




சகல கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பயன்படுத்தும் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

"இதுதொடர்பான சுற்று நிருபம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் சகல கையடக்கத் தொலைபேசி இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என ஆணைக்குழுவின் தலைவர் அனுஷா பெல்பிட தெரிவித்தார்.

டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சிம் அட்டைகளை பதிவு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்களினது இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் பிரகாரம் ஒரு தனிநபர் 5 சிம் அட்டைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சோனியா காந்தியின் மனிதாபிமான வழிகாட்டலை இலங்கை தமிழர் மறந்நிருக்க மாட்டார்கள்: கே.வி.தங்கபாலு

இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால் இலங்கைவாழ் தமிழர்கள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

கே.வி. தங்கபாலு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2009-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பிலும், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8, 9-ந் திகதிகளில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில் மத்திய அரசு 800 டன் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 4-11-2008 அன்றும், 9-3-2009 அன்று 25 டன் மருந்து பொருட்களுடன் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட இந்திய மருத்துவக்குழு இலங்கை போர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இலங்கை தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போர்க்காலத்தில் அங்கு உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு சோனியா காந்தியின் ஆணைகேற்ப கடந்த 16-4-2009 அன்று அரிசி, பருப்பு, மருந்து மற்றும் துணிமணிகள் ஆகிய நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அங்கு போர் நிறுத்தம் வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரிலும், மீண்டும் தொலைபேசி மூலமும் இரண்டுமுறை பேசினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு நேரடியாக சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, ஹஇலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று வலியுறுத்தினார். அதையொட்டி 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று 12-2-2009 அன்று பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரதீபாபட்டீல் வலியுறுத்தி பேசினார்.

இலங்கையில் அமைதி நிலை உருவாக வேண்டும், அதற்கிடையே போரில் அல்லல்படும் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்த ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே நினைவுபடுத்தியுள்ளேன்.

அதைத்தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டு அங்கு அமைதி சூழல் உருவான நிலையில் அங்குள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது என்பதை நாடறியும்.

வீடிழந்து, உணவின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் பணி விரைவில் தொடங்கும் என்ற செய்தி அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போர்க்காலம் தொடங்கி, அது நின்றதற்கு பின்பு இதுவரை மனிதாபிமான உணர்வோடு மத்திய அரசால் நடைபெற்று வரும் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்கள் அபரிமிதமாக தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அங்கு விடுதலைப்புலிகளின் பிரச்சனை உக்கிரம் அடைந்த கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பிரதமர் நரசிம்மராவ் ஆகிய தலைவர்களின் காலங்களில் இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரும் பணிகளில் உலகளாவிய அளவில் எத்தனை எத்தனை நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தார்கள் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத அத்தியாயங்கள்-சாதனைகள்.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை தமிழர்கள் வாழ்வை பாதுகாக்கும் அரணாக உருவாக்கப்பட்டது. ஆனால் வைகோவின் பிதாமகன்களான விடுதலைப்புலிகளின் தடையால் அது நிறைவேறாமல் போனது.

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய விலைமதிக்க முடியாத தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை தமிழின துரோகிகளால் பறிகொடுத்தோம். இன்றைக்கு சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார்.

இந்நிலையில் அறிக்கைவிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன?

அரசியல் நடத்த வேறு வழியோ, கொள்கையோ இல்லாத நிலையில் இலங்கை தமிழர் ஒன்றை மட்டுமே வைத்து தமிழின மக்களுக்கு விரோதமாகவும், எஞ்சியிருக்கும் தமிழர்களை காப்பாற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பேசி செயல்படுகிற வைகோவுக்கு சோனியா காந்தியை பற்றி பேச எவ்வித அருகதையும் கிடையாது.

தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும் செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சவேந்திரவை சாட்சியமளிப்பதற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பவும்: பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை

58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அடுத்ததாக சாட்சியமளிப்பதற்கு வருகைதருமாறு நோட்டீஸ் அனுப்புவதற்கு பணிக்கவேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நீதிபதிகளிடம் நேற்று வியாழக்கிழமை கேட்டுக்கொண்டார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் முதலாவது சாட்சியான சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்ரிகா ஜான்ஸ் 12 நாட்களாக குறுக்கு விசாரணைக்கு சாட்சியமளித்ததுடன் நேற்றைய மீள் விசாரணையிலும் சாட்சியமளித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் மீள் விசாரணையின் நிறைவிலேயே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் முதலாவது சாட்சியின் மீள் விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேற்படி வழக்கின் இரண்டாவது சாட்சியை அடுத்தப்படியாக அழைக்காமல் சவேந்திர சில்வாவை இரண்டாவதாக அழைப்பதற்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை குடியேற்றவாசிகளின் மேன்முறையீட்டுக்கு ஆதரவாக ஆஸி, நீதிமன்றம் தீர்ப்பு

அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்கள் நீதியற்றவை எனத் தெரிவித்து இரு இலங்கையர்கள் செய்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா அதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியா அரசாங்கமானது வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக அந்நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகளை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதியிலான பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக மேற்படி சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் இரு இலங்கையர்களால் செய்யப்பட்ட மேற்படி முறைப்பாட்டுக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய உயர் மட்ட சட்ட குழுவொன்று இலவசமாக தமது சேவையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக குடிவருபவர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் போது அவர்களை தடுப்பு நிலையங்களில் வைக்கவும் அவர்களை இது தொடர்பில் நீதிமன்றங்களில் மேன் முறையீடு செய்வதை தடை செய்யவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

படகுகளில் வரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தடுப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களது அகதி அந்தஸ்து குறித்து அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் மதிப்பீடு செய்வர். இந்நிலையில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படும் குடியேற்ற வாசிகளுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு இன்று வரை உரிமை வழங்கப்படவில்லை.

அதே சமயம் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதில்லை. இத்தகையவர்கள் தங்களுக்கான புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யும் உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த பாரபட்சமான நடைமுறையானது நீதியற்றது என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தை சேர்ந்த 7 நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த எம்61 மற்றும் எம்69 என சுருக்கமாக அழைக்கப்படும் இரு இலங்கைத் தமிழர்களுக்குமான மேன்முறையீடு செய்வதற்கான உரிமை நிராகரிக்கப்பட்டது செயல்முறையாக நீதியற்றது என் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அமுலிலுள்ள சட்டங்களும் கொள்கைகளும் மாற்றமொன்றுக்கு உட்பட வேண்டியுள்ளதுடன் கவனமாக பரீசிலிக்கப்படவும் வேண்டியுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்ற கட்டடத்தொகுதி வெள்ளக்காடு; நீர்நிரம்பிய நிலையிலும் 7 நிமிடம் அமர்வு


தியவன்னா ஓயா பெருக்கெடுப்பு; எம்.பிக்கள், அமைச்சர்கள் படகுகள், கவச வாகனங்கள் மூலம் பயணம்
தியவன்னாஓயா பெருக்கெடுத்து பாராளுமன்ற கட்டத்தினுள் புகுந்து வீதிகள் அனைத்தும் நீரினால் நிரம்பி வழிந்த நிலையிலும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சபை அமர்வுகள் (ரிசீலீஙுகிலீடூணீஞி ங்டுகிகீசி) அவசர மின் விளக்குகளின் துணையுடன் சபை அமர்வுகள் சுமார் 7 நிமிட நேரம் நடைபெற்றது. சபை மண்டபத்தினுள் மின்சார விளக்குகள் எதுவும் இயங்கவில்லை. ஒளிப்பதிவு கருவிகளும் இயங்கவில்லை.

ஒலிவாங்கி கருவிகளும் இயங்கவில்லை. எனினும் ஹன்சாட் பதிவுக்கென எதிர்க் கட்சி மற்றும் ஆளும் கட்சி முன் ஆசனப் பகுதிகளில் ஒலிப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. நேற்று பகல் ஒரு மணி 03 நிமிடமளவில் பாராளு மன்றம் கூடியது. நேற்றைய தினசரி யின்படி மிக முக்கியமான 6 சட்டமூலங்கள் விவாதத்துக்கு எடுத் துக்கொள்வதென பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்ற கட்டடத்தை சூழவுள்ள தியவன்னாஓயா பெருக்கெடுத்தது மட்டுமல்ல, பாராளுமன்ற கட்டட தொகுதியினுள் புகுந்து நீரில் மூழ்கிய சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சட்டமூலங்களில் 6 சட்டமூலங்களை விவாதம் இன்றி சபையில் நிறைவேற்றுவதற்கு நேற்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஐ.தே.கவும் பூரண ஆதரவை வழங்கியது. இதற்கென ஐ.தே.க வை சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா பாராட்டினார்.

ஆறாவது சட்டமூலம் பிரிதொரு நாளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இந்தவாரம், இன்று வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தபோதும் கடும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக சபை முதல்வர் சபையில் அறிவித்தார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, சரத் அமுனு கம, ரோஹன திஸாநாயக்கா, ஏ.எச். எம். அஸ்வர், மற்றும் தயாசிறி ஜயசேக்கர எம்.பி. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உட்பட பல இளம் எம்.பிக் களும் சபைக்கு வருகை தந்திருந் தனர்.

ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, கமலா ரணதுங்க எம்.பி. போன்றோர் இராணுவத்தினரால் செலுத்தப்பட்ட பஜரோ வாகனங்களில் சென்றனர்.

இராணுவத்தினர் களமுனையில் உபயோகிக்கும் யுனிகோன் கவச வாகனம் மற்றும் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய குளிரூட்டப்பட்ட கவச வாகனங்களும் பாராளுமன்ற ஊடகவியலாளர்கள், எம். பிக்களை அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பாராளுமன்றத்திற்குச் செல்லும் பிரதான பாதையின் இரு மருங்கிலும் காணப்படும் தியவன்னாஓயா பெருக்கெடுத்து பாராளுமன்ற விளையாட்டுத் திடல் வரை சென்றிருந்தது.

பாராளுமன்ற பிரதான வீதி சுமார் 4 அடி நீரில் மூழ்கிக் கிடந்தது. எது தியவன்னாஓயா, எது வீதி என்பதை கண்டறிய முடியாதவாறு எங்கும் வெள்ளநீர் நிறைந்து காணப்பட்டது.

நேற்றுக்காலை சுமார் 6.00 மணிக்கே பாராளுமன்ற ஊழியர்கள் ஓரிருவர் கடமைக்கு வந்துள்ளனர். கடும் மழை, வெள்ளம் காரணமாக கட்டடத்துள் நீர் புகலாம் என்ற சந்தேகத்தில் சில முன்னேற்பாடுகளை செய்யும் நோக்கில் வந்த இவர்கள், பாராளுமன்ற பொலிஸாரின் உதவியுடன் பாராளுமன்ற கீழ்த்தளத்திலுள்ள அறைகளில் பெறுமதிவாய்ந்த கணனிகள், புத்தகங்கள் போன்ற பொருட்களை பாதுகாப்பாக மேல் மாடிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். முன்னேற்பாடாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

கவச வாகனத்தில் சென்ற ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலினூடாக அழைத்துச் செல்லப்பட்டனர். சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் 4 மாடிகளையும் படிவரிசைகளில் ஏறியே கடக்க வேண்டி இருந்தது. கும்மியிருட்டுக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி படிகளில் ஏறிக்கொண்டிருந்த எமக்கு ஒவ்வொரு மாடியின் அருகிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ரீசார்ஜ் டோர்ச் விளக்குகளை வைத்து வழிகாட்டினர். ஊடகவியலாளர்கள் அனைவரும் தனது கையடக்க தொலைபேசியின் ஒளியையும் ஒளிரச் செய்தவாறு முன்னேறினர்.

சபை அமர்வுகள் சில நிமிடங் களே நடக்கவுள்ளதால் கையடக்க தொலைபேசியினுடனேயே பத்திரி கையின் கலரிக்கு செல்லவும் அனும திக்கப்பட்டனர். ஆனால் கையடக்க தொலைபேசிகளை செயலிழக்கச் செய்தே அனுப்பினர். பாராளு மன்றத்துக்கு முன்பாக கட்டடத்தை அழகுபடுத்துவதற்காக கட்டப்பட் டுள்ள நீர்தடாகமும், தியவன்னா ஓயாவுடன் சங்கமமாகி இருந்தது. பாதை எது என அறியாமல் சாரதி ஒருவர் பஜரோ வண்டியை நீர்த் தடாகத்துள் செலுத்தியதால் வாக னம் நீரில் மூழ்கி குடைசாய்ந்து கிடந்தது.

அதன் பின்னர் வாகனங்கள் ஒழுங்கான பாதையைக் கண்டுகொள்வதற்கு ஏதுவாக இராணுவத்தினரும், பொலிஸாரும் உதவி செய்தனர்.

பாராளுமன்றத்தின் கீழ்த்தளம் நீரில் மூழ்கியதால் குழு அறைகள் முழுவதும் நீரினால் நிரம்பி காணப்பட்டன.

எதிர்வரும் 16ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் என சபாநாயகர் அறிவித்தார். அதற்கு முன் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கும் ஊழியர்கள் கடுமையாக உழைக்க நேரிடும்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீனவர் சர்வதேச கடலில் மீன்பிடிக்க சட்டத்தில் திருத்தம் கடல் மைல் பரப்பு அதிகரிப்பு









இலங்கை மீனவர்கள் சர்வதேச கடலில் மீன்பிடிக்கும் வகையிலும் வேறு நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும் கடற்றொழில் நீரியல்வள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதவிர, வேறு நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும்.

இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பு 5 இலட்சத்து 17 ஆயிரம் கடல் மைல்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கைக் கடலில் மட்டுமன்றி சர்வதேச கடலிலும் இலங்கை மீனவர்களுக்கு மீன் பிடிக்க முடியும். புதிய சட்டத்தின் படி, மீன வர்களை பாதுகாக்கும் வகையில் படகுகளில் தொழில் நுட்ப உபகரணங்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படும். படகுகள் பதிவு செய்யப்பட உள்ளதோடு வேறு நாட்டு கடல் எல்லையில் மீன்பிடிப்பவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.

எமது கடற்பரப்பை பலப் படுத்துவதற்கு புதிய சட்டத் தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

32 தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது




ஒருகோடி எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 32 தங்க பிஸ்கட்டுகளை சிங்கப்பூரிற்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற இலங்கையர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று (11) அதிகாலை கைது செய்துள்ளனர்.

சுங்க அதிகாரிகளும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக, சுங்க அத்தியட்சகர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான விமானப் பயணியின் உள்ளாடையினுள் மறைத்து வைத்திருந்த 11 பிஸ்கட்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை பரீட்சிக்கும் இயந்திரங்களில் சிக்காதவாறு கறுப்புப் பொலித்தீன் இட்டு பொதி செய்யப்பட்டிருந்ததாகவும், மொத்த பிஸ்கட்களின் பாரம் மூன்று கிலோ கிராமைவிடவும் கூடுதலாக உள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுங்க அத்தியட்சகர்களான நரேந்து பெர்னாண்டோ பராக்கிரம பஸ்நாயக்க ஆகியோரது பணிப்பின்பேரில் உதவி சுங்க அத்தியட்சகர்களான ஏ. சாந்த, டீ. எம். ரீ. பீ. திஸாநாயக்க, யூ.மகீன், ஏ. ரம்சி, ஜகத் குணதிலக்க மற்றும் உதவி சுங்க அத்தியட்சகர் திலினி பெரேரா ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கிலுள்ள 9 நீதிமன்றங்களை புனரமைக்க ரூ. 890 மில்லியன்







ஆசிய அபிவிருத்தி வங்கியின் 890 மில்லியன் ரூபா கடனுதவியுடன் வடக்கிலுள்ள ஒன்பது நீதிமன்றங்களை மீளமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வேலணை, மாங்குளம், சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களுக்கு புதிதாக கட்டடங்கள் அமைக்கவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘கெயா’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதோடு அதன் ஒரு பகுதியாகவே இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊர்காவற்துறையில் 150 மில்லியன் ரூபா செலவில் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் நிர்மாணிக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

மைனா படத்துக்கு ரஜினி பெரும் புகழாரம்- நடிக்காமல் போனதற்காக ஏக்கம்





மைனா திரைப்படம் 'திராவிடர்களின் உண்மையான படம்' என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். 'இந்த மாதிரிப் படத்தில் ஒரு சின்ன காட்சியிலாவது நடிக்காமல் போய்விட்டேனே' என்றும் அவர் கூறியுள்ளார்.

மைனா படத்தின் ஆடியோ விழாவிலேயே அதை நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் பாலா உள்ளிட்டோரும் பெரும் வெற்றி பெறும் என்று பாராட்டி விட்டனர். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பாராட்டியுள்ளார்.

எந்த நல்ல விஷயத்தையும் முதலில், தாமாகவே முன்வந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரான ஒருவரை தேடினாலும் பார்க்க முடியாது.

சில நாட்கள் முன்பு 'மைனா' படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்து வெளியே வந்தவுடன் மைனாவின் இயக்குநர் பிரபு சாலமனை அழைத்து ஆதரவாக அணைத்து கன்னத்தில் முத்தமிட, ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார் பிரபு சாலமன்.

படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, 'இந்த காவிய படத்துல நான் ஒரு சிறிய பாத்திரத்திலாவது நடிக்காமப் போய்ட்டேனே' என்றும் கூறினார்.

பேச்சோடு விட்டு விடாமல் தன் வாழ்த்துகளை 'மைனா' படக்குழுவினருக்கு எழுத்து மூலமாகவும் தெரிவித்திருக்கிறார் ரஜினி. நல்ல படம் என்று பாராட்டுக்களைப் பெற்றாலும், வசூலில் மிகவும் சிரமப்படும் மைனாவுக்கு நிச்சயம் இந்த பாராட்டு ஒரு உற்சாக டானிக்தான்!

அவர் கைப்பட எழுதிய கடிதம்:

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பயங்கரமான, குரூரமான மி்ருகங்கள் ஒளிஞ்சி கிடக்கிறது. அதை சம்பிரதாயத்துக்கும் சமுதாயத்துக்கும் பயந்து அறிவுங்கற போர்வையில மூடி வச்சிருக்கோம். சில சமயங்கள்ல அறிவு மங்கிப் போய், சமுதாய, சம்பிரதாய போர்வையை கிழிச்சுக்கிட்டு அது வெளியே வந்திடும்.

அந்த மாதிரி மனிதர்கள் மத்தியில் நான் பொறந்து வளர்ந்தேங்கிறதால அதை நான் கண்டு உணர்ந்திருக்கேன். இப்போ அந்தப் பாத்திரங்களின் நடிப்பை படத்தில பார்த்து நான் பிரமிச்சுப் போயிட்டேன். அந்தப் படத்துல நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

மைனா மாதிரி படம், உண்மையான திராவிடர்களின் படம். எப்போதோ பூக்கும் குறிஞ்சிப் பூ இது.

இந்தப் படத்தை பிரமிக்க வைக்கும் வகையில் இயக்கும் பிரபு சாலமன் அவர்கள், காட்சிகளை கண்கொள்ளா காட்சிகளாக சித்தரித்து ஒளிப்பதிவு செய்த சுகுமார் அவர்கள், இசையமைத்த டி இமான் அவர்கள், அற்புதமாக நடித்த தம்பி ராமையா உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகையருக்கும், இந்தப் படத்தை தமிழ் மக்களுக்கு விருந்தாகத் தந்த படக்குழுவினருக்கும், படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ், கல்பாத்தி எஸ் அகோரம் மற்றும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் அன்பார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஒரு சின்ன வருத்தம்: இந்த காவிய படத்துல ரஜினிகாந்த் ஒரு சின்ன பாத்திரத்திலாவது நடிச்சிருக்கலாமேன்னு...!

ஜெய்ஹிந்த்... வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு!

- இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்நாளில் மறக்கமுடியாத விருது!- பிரபு சாலமன்

ரஜினியின் பாராட்டு குறித்து இயக்குநர் பிரபு சாலமன் கூறுகையில், 'என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாத விருது, ரஜினி சார் எனக்குத் தந்த முத்தமும், பாராட்டுக் கடிதமும்' என்றார், கண்கள் கலங்க.

மைனாவின் முக்கியப் பாத்திரத்தில் நடித்த இயக்குநர் தம்பி ராமையா கூறுகையில், "யாருக்கு சார் இந்த மனசு வரும்... ரஜினி சாரின் இந்தப் பாராட்டு நடிகராக எனக்கு கிடைச்ச மிகப் பெரிய அங்கீகாரம்... இதுபோதும்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...