ஆசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு வருகை-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வெளிநாட்டுக் கண்காணிப்புக்குழு இன்றுகாலை இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் ஆலோசகர் பந்துல குலதுங்க தெரிவித்துள்ளார். இதன்படி ஆசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல்களைக் கண்காணிக்கும் குழு ஆகியனவே இவ்வாறு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வருகை தந்துள்ள தேர்தல் கண்காணிப்புக் குழுவில் 50பேர் அடங்குவதாகவும் தேர்தல்கள் செயலக ஆலோசகர் பந்துல குலதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
பொலீஸ் உத்தியோகத்தரும் மனைவியும் பொலநறுவைப் பிரதேசத்தில் வைத்து கடத்தல்-
பொலன்நறுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அவரது மனைவியும் கடந்த 17ம் திகதி இரவு இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கதுருவெல பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.பி திஸாநாயக்க என்ற 38 வயதான பொலீஸ் கான்ஸ்டபிளும் அவரது மனைவியுமே கடத்தப்பட்டிருப்பதாக பொலன்னறுவை பொலீசார் தெரிவித்துள்ளனர். கதுருவெல, பெரகும் பிளேசிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் மூன்று முச்சக்கர வண்டிகளில் சென்ற 10பேர் அடங்கிய இனந்தெரியாத குழுவினர் இவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்திற்குப் பின்னர் வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லையெனத் தெரிவித்துள்ள பொலீசார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் விசேட பாதுகாப்பு-
வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வழிநடத்தலின் பேரிலேயே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வருகை தருகின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் அனுமதியற்ற நிலையில் வாடகை வாகன சாரதிகளாக, விமானநிலையத்திற்கு அருகாமையில் தொழிலாற்றுவதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தவிர மாதாந்தம் சுமார் 6ஆயிரம் வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு இலங்கை வருவதற்கான உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக பொலீசாரும் விமானநிலைய பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து பாதுகாப்புத் தொடர்பான புதிய வியூகமொன்றினை ஏற்படுத்தியுள்ளனர்.
ஓசியானிக் வைகிங் கப்பலில் இருந்தவர்களில் எஞ்சிய 13பேரையும் மீள்குடியமர்த்த நியூசிலாந்து இணக்கம்-
அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டின் அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியக் கப்பலான ஓஷியானிக் வைக்கிங் கப்பல்மூலம் இந்த குடியேறிகள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில், குறித்த 78பேரில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும், குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியிருந்த 13பேருக்கே நியூசிலாந்து குடியேற்ற அனுமதியை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா பிரதமருக்கும் நியூஸிலாந்து பிரதமருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணக்கத்தை நியூஸிலாந்து வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பிரஜையின் கடனட்டை இலகத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது-
புறக்கோட்டையில் வைத்து கடனட்டை மோசடியில் ஈடுபட்டுவந்த ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளனர். இவரை நேற்றையதினம் கைதுசெய்துள்ளதாக புறக்கோட்டைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அமெரிக்கப் பிரஜையொருவரின் கடனட்டையைப் பயன்படுத்தி 2லட்சத்துக்கும் அதிகமான பண மோசடியில் ஈடுபட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலீசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலிக் கடனட்டையைப் பயன்படுத்தி 1லட்சத்து 97ஆயிரத்து 500ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளொன்றையும் இவர் கொள்வனவு செய்துள்ளதுடன், இரவு ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக சந்தேகநபர் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாவை செலவிட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. வணிக வங்கியொன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையயே சந்தேகநபர் கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாங்கோக் ஐ.டீ.சி சிறையில் இலங்கை அகதிகளின் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதம்-
தாய்லாந்து பாங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு பகுதியிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் கடந்த 03வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் திட்டமிட்டபடி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் அனைவரும் நீர்ஆகாரம் ஏதுமின்றி இன்று 02வது நாளாகவும் தொடர்கின்றனர். தாய்லாந்து பாங்கொக் யூ.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தில் பதிவுசெய்து 3வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களால் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டு அனுப்பப்பட்ட 06கோரிக்கைகளுக்கு ஜ.நாவின் பொதுச்செயலர் பான் கீ மூனிடமிருந்தோ, யூ.என்.எச்.சீ.ஆர் தலைமை அலுவலகம் சுவிஸ் ஜெனீவாவிலிருந்தோ, தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகத்திலிருந்தோ பதில் கிடைக்காத நிலையில் எந்தவொரு மனிதஉரிமை மனிதநேய அமைப்புக்களோ இவர்களை சென்று பார்வையிடவில்லையென்றும் கூறப்படுகிறது.