22 மார்ச், 2010

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்-புளொட் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

















ஏதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடும் புளொட்-ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் பொது செயலரும் யாழ் மாவட்டத்தில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் மேற்படி கட்சிகளின் முதன்மை வேட்பாளருமான ஸ்ரீதரன் மற்றும் யாழ் மாவட்ட புளொட் முக்கியஸ்தர் நேசன் ஆகியோரால் இன்று திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது


மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மக்களுக்காக 3700 வீடுகள்


2 ஆயிரம் வீடுகளை புனரமைக்கவும் திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போருக்காக 3700 வீடுகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டி ருப்பதாக மாவட்ட செயலகத்தின் திட்ட மிடல் பணிப்பாளர் திருமதி செல்வராஜா தெரிவித்தார். இதேவேளை மோதல்களின் போது சேதமடைந்த 2 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவ ட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் இடம்பெயர்ந்தோருக்கு பல்வேறு உதவி களைச் செய்யவுமென முன்வந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் 15க்கு ஜனாதிபதி செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் யுஎன். ஹெபிட்டாட், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நர்ட் ஆகிய தன்னார்வு நிறுவனங்களே வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. ம. சு. முன்னணி நாடளாவிய ரீதியில் இதுவரை 10 ஆயிரம் பிரசாரக் கூட்டங்கள்






ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதுவரை பிரதான பிரசாரக் கூட்டங்கள் அடங்கலாக 10 ஆயிரம் கூட்டங்களை நாடளாவிய ரீதியில் நடத்தியுள்ளது. எதிர்த்தரப்பில் எதுவித போட்டி இல்லாத போதும் சிறப்பாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும கூறினார். ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (22) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தலைமையில் நாடுபூராவும் 26 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதோடு இதுவரை 6 கூட்டங்கள் நிறைவடைந்து ள்ளன. இதுதவிர கட்சித் தலைவர்கள் தலைமையிலான 12 பிரதான கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. வீட்டு மட்டத்தில் 30 ஆயிரம் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான கூட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன. வாக்குச்சாவடி மட்டத்தில் 3 ஆயிரம் கூட்டங்கள் நடந்துள்ளன. வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் நடவடிக்கை கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. 65 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த சக்திக்கும் தலைசாய்க்காத பலமான பாராளுமன்றத்தை வழங்குமாறே ஜனாதிபதி கோரியுள்ளார்.

நடந்து முடிந்த வடக்கு தவிர்ந்த 7 மாகாண சபைகளுக்குமான தேர்தலின்படி எமக்கு பாராளுமன்றத்தில் 143 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பிரகாரம் 133 ஆசனங்கள் கிடைக்கும். ஆனால் கடந்த தேர்தல்களை விட இன்று ஐ.ம.சு.முன்னணி பலமான நிலையில் உள்ளது.

எதிர்க்கட்சி மதங்களைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்கின்றன.

மீன்குடியேற்றம் குறித்து பேசிய அவர் வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்போவதாக ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால் இன்று கிழக்கில் மீள் குடியேற்றங்கள் பூர்த்தியடைந்துள்ளன. ஆனால் அங்கு வெளியாட்கள் ஒருவர் கூட மீள்குடியேற்றப்படவில்லை என்றார்.

பொன்சேகா குறித்து பேசிய அமைச்சர் ஏனையவர்களுக்கு இல்லாத சலுகைகள் வசதிகள் என்பன பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை அவர் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். அவருக்கு குளிரூட்டப்பட்ட அறை வழங்கப்படவேண்டுமென அவரின் மனைவி கூறியிருந்தார். குண்டுத் தாக்குதலினால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு பொன்சேகாவுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் இருக்குமாறே மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதாக அனோமா தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்களில் பேசிய பொன்சேகா தான் குளிரூட்டப்பட்ட அறைகளில் இன்றி வெய்யிலில் இருந்தே யுத்தம் செய்ததாக கூறியிருந்தார் என்றார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் கூறிவந்தன. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கை இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரகசிய ஒப்பந்தம் இருந்தது உறுதியாகிறது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சக்திகளை ஒழிக்கும் பலத்தை மக்கள் வழங்க வேண்டும்




பலமான ஆட்சியமைக்க ஆதரவு கோருகிறார் பிரதமர்
அரசாங்கத்தின் துரித அபிவிருத்திப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடும் தேசிய சர்வதேச சக்திகளை இல்லாதொழி ப்பதற்கான பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு வழங்க வேண்டுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார்.

பலமான பாராளுமன்றம் இல்லாவிட்டால் நிறைவேற்று ஜனாதிபதி முறையும் பயனற்றதே என தெரிவித்த பிரதமர் முக்கியமான சட்டமூலங்களை நிறைவேற்றமும் பாரிய மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தவும் மூன்றிலிரண்டு பெரும்பான் மையைக் கொண்ட பாராளுமன்ற பலத்தை அரசாங்கத்துக்குப் பெற்றுத்தர வேண்டுமெனவும் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக்கூட்டம் நேற்று சிலாபம் நகரில் நடைபெற்றது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இப் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் மில்றோய் பெர்னாண்டோ, நியோமல் பெரேரா உட்பட அமைச்சர்கள், வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:-

ஏப்ரல் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தேசிய சர்வதேச நீதியில் முக்கிய செய்தியைக் கூறும் தேர்தலாகும். தேசிய சர்வதேச ரீதியில் பல சுயாதீன அமைப்புக்கள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன.

கடந்த மாதங்களில் கோடிக்கணக்கான டொலர்கள் வந்து சேர்ந்துள்ளன. இவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது மோசமானதொரு செயலாகும். இதில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் தொடர்புபடுகின்றன.

நாட்டைக் காட்டிக்கொடுப்பதிலும், நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெறு வதாகக் கூறி மோசமான பிரசாரங்களில் ஈடுபடுவதிலும் இச்சக்திகள் முனைப்பாக செயற்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த போதிய பலத்தைப் பெற்றுத் தருவகையில் பொதுத் தேர்தல் வெற்றி அமைவது அவசியம்.

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டின் பலமான சக்திகள் தலையிடக்கூடாது என வியன்னா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற் கான பலமும் உரிமையும் போதியளவு எமக்குண்டு.

எமது விவகாரங்களில் தலையிட வேண்டாமென நாம் வெளிநாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம். சில ஐரோப்பிய நாடுகள் இன்னும் கூட இலங்கையை ஒரு அடிமை நாடாகவே நடத்தப்பார்க் கின்றன. இலங்கை தனித்துவமும் கெளரவமும் உரிமையுமுள்ள நாடு. சிறிய நாடாகவிருப் பினும் கலாசாரம் மற்றும் ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் நாடு இது.

முழுமையான உரிமைகொண்ட எமது நாட்டில் நாம் எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை ஐரோப்பிய நாடுகள் எமக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியம் கிடையாது. நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருவது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவந்து தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதே எமது நோக்கம் என்றார்.

ஏ. எச். எம். அஸ்வர்: (ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்)

ஆறு வருடகால ஆட்சியைப் பொறுப் பேற்று அதனை நான்கு வருடத்தில் நிறைவு செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்காலத்தில் மஹிந்த சிந்தனைத் திட்டம் மூலம் முழு நாட்டையும் பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்தியுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் கொழும்புக்கு அடுத்தபடியாக தமிழ், முஸ்லிம் மக்கள் பறந்து வாழ்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகவிருந்த அவர்கள் அனைவரும் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் உள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட விருந்த ராமின் பெயர் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் இதனால் அதிருப்தியடைந்துள்ளனர். கொழும்பு செட்டித்தெரு, பிரதான வீதி உட்பட பிரபல வர்த்தகர்கள் கொழும்பு வாழ் தமிழ் மக்களனைவருமே தற்போது ஜனாதிபதியுடன் உள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி வடமேல் மாகாணம் குறிப்பாக புத்தளம் மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் வெற்றிலைக்கு வாக்களித்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது உறுதி.

சரத் கோங்கஹகே: (சட்டத்தரணி)

சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவது இது முதற் தடவையல்ல. 1970ம் ஆண்டிலும் அவர் தாம் செய்த குற்றத்திற்காக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரைப் போடா என கொச்சைத் தமிழில் கூறினார்.

இன்று கலைஞர்களைத் தூற்றும் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோது அவர்களுக்காகத் துதிபாடியவர் என தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மில்றோய் பெர்னாண்டோ, அப்துல் பாயிஸ் நியோமல் பெரேரா உட்பட பதினொரு வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வருடாந்த பல்கலைக்கழக அனுமதியும் 4 ஆயிரத்தினால் அதிகரிப்பு





மொத்த ஆசிரியரில் கால்வாசி பகுதியினர் கடந்த நான்கு வருடங்களிலேயே நியமனம்தற்பொழுது ஒரு இலட்சத்து 87 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றனர். இதில் 35,700 ஆசிரியர்கள் கடந்த 4 வருட காலத்திலேயே நியமிக்கப்பட்டனர். கடந்த 4 வருட காலத்திலே தடைப்பட்டிருந்த அதிபர் சேவை பதவி உயர்வுகள் மீண்டும் வழங்கப்பட்டதோடு புதிதாக அதிபர்களும் நியமிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (22) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:- 2005 நவம்பர் மாதத்தின் பின்னர் 35,700 ஆசிரியர்கள் புதிதாக நியமிக் கப்பட்டனர்.

இதில் பட்டதாரி ஆசிரியர்கள் 21,000 பேர், கல்வி யியல் கல்லூ ரிகளினூடாக 9 ஆயிரம் பேர் நியமி க்கப்பட்டதோடு தோட்டப் பாட சாலைகளுக்கு 3715 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. தொண் டர் ஆசிரியர்கள் 4700 பேரை ஆசி ரிய உதவியாளர்களாக நியமித் தோம்.

ற்பொழுதுள்ள மொத்த ஆசிரியர் தொகையில் 1/4 பகுதியினர் கடந்த 4 வருட காலத்திலேயே நியமிக்கப் பட்டனர்.

கிழக்கு, வடமத்திய, சப் ரகமுவ மற்றும் ஊவா மாகாணங் களில் ஓரளவு ஆசிரியர் பற்றாக் குறை காணப்படுகிறது.

தேர்தலின் பின்னர் தேவைக்கேற்ப ஆசிரியர் இடமாற்றங்கள் செய்யப் படும்.

பல வருடங்கள் இடை நிறுத்த ப்பட்டிருந்த அதிபர் சேவை பதவி உயர்வு மீண்டும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு தகவல் தொழில் நுட்ப அறிவு வழங்கப்பட்டு வருகி றது.

இது வரை 85 ஆயிரம் ஆசிரி யர்களுக்கு இது தொடர்பான பயி ற்சி வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் 16 ஆயிரம் பேருக்கே பல்கலைக்கழக அனுமதி வழங்கப் பட்டது.

இதனை 20 ஆயிரமாக எமது அரசு அதிகரித்தது.

க. பொ. த. உயர்தர பெறுபேறும் அதிகரித்துள்ளது.

இது தவிர ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு மடிக் கணனி வழங்கும் திட்டமொன் றையும் ஆரம்பித்துள்ளோம்.

சீருடைகள், பாடப் புத்தகங்கள் என்பன உரிய நேரத்திற்கு வழங்க ப்படுகிறது என்றார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வருவது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

பல அத்தியாவசியப் பொருட் களின் வரிகள் நீக்கப்பட்டுள்ளது. சீனிக்கு ஒரு வீதம் மட்டுமே வரி அறவிடப்படுகிறது.

சமையல் எரிவாயுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரிசி விலை உயர்வாக இருந்தது.

ஆனால் நெல் அறுவடை ஆரம்ப மாகியுள்ளதால் அரிசி விலை குறை ந்து வருகிறது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியிலேயே அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வு




கடந்த நான்கு வருட காலத்தில் பொருளாதாரமும் துரித முன்னேற்றம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 4 வருட ஆட்சியிலேயே அரச ஊழியர்களுக்கு போதிய சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் பதவி உயர்வுகள் என்பன வழங்கப்பட்டன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த 4 வருடத்திலேயே பொருளாதாரம் அபிவிருத்தி கண்டுள்ளதுடன் நாடு சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது என அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் உறுதியளிக்கப் பட்டவாறு அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத்திட்டத்தில் சகல அரச ஊழியர்களுக்கும் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (22) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 4 வருட காலமே அரசாங்க ஊழியர்களின் பொற்காலமாகும்.

2005 நவம்பர் மாதம் முதல் நடைபெற்ற சகல தேர்தல்களிலும் அரசாங்க ஊழியர்கள் எமக்கே கூடுதலாக வாக்களித்தனர். ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்க அடங்கலான எதிர்க் கட்சிகள் அரசாங்க ஊழியர்கள் குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

இம்முறை தேர்தலில் சுமார் 4 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தல்களைப் போன்று எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தலிலும் அரசாங்க ஊழியர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிப்பர் என்பது உறுதி. ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்றம் கூட உள்ளது. 30 ஆம் திகதிக்கு முன்னர் புதிய வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்.

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் அவர்களின் சலுகைகளை வெட்டிவிடவும் நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்க இன்று அரச ஊழியர்கள் குறித்து கவலைப்படுவது கேலிக்குரியதாகும்.

ஐ.தே.க. ஆட்சியில் இருக்கும் காலங்களிலேயே நாட்டின் பொருளாதாரம் சுபீட்சமடைவதோடு வர்த்தகத்துறையும் மேம்படுவதாக ஐ.தே.க. வெறும் மாயையை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. ஆனால் இந்த கருத்தில் எதுவித உண்மையும் கிடையாது என்பது கடந்த கால ஆட்சிகளையும் மஹி ந்த ராஜபக்ஷவின் 4 வருட ஆட்சி யையும் ஒப்பிட்டால் புலனாகும். ஐ.தே.க.வின் 17 வருட ஆட்சியை மக்கள் சாபமாகவே கருதினர்.

2001 முதல் 2004 வரையான ஐ.தே.க. ஆட்சியில் வாழ்க்கைச் செலவு உயர் வடைந்ததோடு மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். ஐ.தே.க.வின் 17 வருட ஆட்சியில் 660 மெகாவோர்ட் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்களே ஆரம்பி க்கப்பட்டன. ஆனால் கடந்த 4 வருடத்தில் 1200 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

பிறப்பு, இறப்பு வீதம், அரச கடன், தொலைபேசி பாவிப்போர் தொகை, மின்சாரம் பாவிப்போர் தொகை, வெளி நாட்டுக் கையிரு ப்பு என எந்த அளவீட்டுடன் ஒப் பிட்டாலும் கடந்த 4 வருட ஆட்சியி லேயே நாடு சிறந்த நிலையை அடைந்துள்ளது.

தனது ஆட்சியில் ஒரு வாழைக் கன்று கூட நட்டியிராத ரணில் விவ சாயத்துறை குறித்து பேசி வருகி றார். முடிக்கு கறுப்பு சாயம் பூசுவ தன் மூலமோ முக அலங்காரம் செய் வதன் மூலமோ மட்டும் கட்சிக் கொள்கையை மாற்றி விட முடி யாது. யதார்த்தமாக கட்சிக் கொள் கையை ஐ.தே.க. மாற்ற வேண்டும்.

எனவே, எதிர்வரும் பாராளுமன் றத் தேர்தலில் மக்கள் தமது 4 வாக்குகளையும் பாவிக்க வேண்டும். முதல் விருப்பு வாக்கை ஜனாதிப திக்காக வெற்றிலைச் சின்னத்திற்கும் ஏனைய 3 விருப்பு வாக்குகளை விரும்பிய வேட்பாளர்களுக்கும் வழங்கு மாறு கோருகிறோம். விருப்பு வாக்கு முறையின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் ஜனாதிபதிக்கு நன்றிக்கடன் செலுத்த முடியாதவ ர்களுக்கு இம்முறை தேர்தலில் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அனோமா பொன்சேகா ஜனாதிபதிக்கு கடிதம்




இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து க்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டின் யுத்தத்தை வென்ற தளபதியை முட்டாள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள திருமதி அனோமா பொன்சேகா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பிவைத்துள்ளார்.

சிங்கப்பூரின் “ஸ்ட்ரெய்ட் ரைம்ஸ்” பத்திரிகைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் பேட்டியொன்றை அளித்திருந்தார். அதில் தனது கணவரை முட்டாள் எனக் கூறியுள்ளமை எந்தவகையில் நியாயம் என அக்கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ராணுவ கோர்ட்டு விசாரணையா? இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் சரத் பொன்சேகா மனு







ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று 6 மாதங்கள் கழிந்த பிறகு, ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்துவதை தடை செய்ய கோரி இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் சரத் பொன்சேகா மனு தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, அவரை ராஜபக்சே அரசு கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, தன் மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்துவதை எதிர்த்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்தஸ்து குறைந்த அதிகாரிகள்

அந்த மனுவில், `இலங்கை ராணுவத்தில் இருந்து 2009-ம் ஆண்டு ஜுலை மாதத்திலேயே ஓய்வுபெற்று விட்டேன். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று 6 மாதங்களுக்கும் மேலான நிலையில், ராணுவ சட்டப்படி வருகிற மார்ச் மாதத்தில் என்னை ராணுவ கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாது' என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு கீழே பணி புரிந்த மேஜர் ஜெனரல்களான வீரதுங்கா, விஜேதுங்கா, ஜெயதிலகே ஆகியோருக்கு தன் மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்தும் உரிமை இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அரசு விளக்கம்

இந்த சூழ்நிலையில், சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு பதில் அளித்துள்ளது. ராஜபக்சே கட்சியை சேர்ந்தவரும், மூத்த மந்திரியுமான துல்லாஸ் கூறும்போது, "சரத் பொன்சேகா, நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய ராணுவ ஜெனரல். அவருக்கு நிகரான ராணுவ அதிகாரியோ அல்லது அவரை விட அந்தஸ்து உயர்ந்த அதிகாரியோ எங்களிடம் இல்லை. அந்தஸ்து குறைந்த அதிகாரிகளை விசாரணை அதிகாரிகளாக நியமிக்க ராணுவ சட்டத்தில் விதிகள் உள்ளன'' என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

தொடரும் சுதந்திர ஊடகங்களிற்கு எதிரான தாக்குதல்.



கொழும்பு, கொம்பனித் தெரு பிறேபுரூக் பிளேசிலுள்ள மகாராஜா நிறுவனத்தின் சிரச வலையமைப்பு (சக்தி தொலைக்காட்சி) தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கங்காராமை பக்கமிருந்து வந்த 100 பேர் கொண்ட பிரதி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் கற்களை வீசி இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஓர் கட்சி ஆதரவாளர்கள் எனப்படும் குண்டர்களால் வீசப்பட்ட கற்களால் அலுவலகக் கண்ணாடிகள், சொத்துக்கள் மட்டுமன்றி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன், சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.



அதேநேரம் தற்பாதுகாப்புக் கருதி சக்தி நிறுவன பாதுகாப்பு ஊழியர்கள் அதே கற்களினால் பதில் தாக்குதலொன்றை குண்டர்களை நோக்கி நடத்தியுள்ளனர்.


தாக்குதலை நடத்தியோரின் பின்னணியில் சண்டித்தனத்துக்குப்பெயர்போன பிரதி அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிரச தொலைக்கட்சி அலுவலகத்தில் சம்பவம் நடைபெற்ற சமயம் 250 பேர்வரை கடமையில் ஈடுபட்டிருந்ததாக அவ்வலையமைப்பு மேலும் தெரிவித்தது.



மகாராஜா நிறுவனம் 3 வானொலி நிலையங்களையும், 3 டெலிவிஷன் நிலையங்களையும் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் இவர்களின் ஓர் ஒலிபரப்பு நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்ப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



தாக்குதல் நடத்தியவர்கள் இந்நிறுவனத்தார் கடந்த வருடம் அரசாங்கத்தினால் முடக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற கோஷத்துடனேயே தாக்குதல் நடத்தியதாக அறியப்படும் நிலையில், இத் தாக்குதல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடைபெற்ற நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் ஊடகவியலாளர்கள் காணமல் போனமை, ஊடகங்க தடை செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நாங்கள் உயிருடன் பத்திரமாக இருக்கிறோம்: பிரபாகரன், பொட்டுஅம்மான் தமிழக தலைவருக்கு கடிதம்





மாலைமலர்

இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடி வந்த விடுதலைப்புலிகளுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பின்னடைவு ஏற்பட்டது. சிங்கள ராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீசி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மே மாதம் 18-ந்தேதி நடந்த சண்டையில் பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடலையும் சிங்கள வீரர்கள் முள்ளி வாய்க்காலில் இருந்து எடுத்து வந்து காண்பித்தனர்.

விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து காட்டிக் கொடுக்கும் வேலை செய்த கருணாவும், அந்த உடலை பார்த்து விட்டு, அது பிரபாகரன் என்றார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், தேசியத் தலைவர் பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவுத்தலைவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தொடக்கம் முதலே உறுதியாக தெரிய வந்தது. சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கலாம் என்று கூறினார்கள். பிரபாகரனுக்கு மரணச் சான்றிதழ் ஒன்றை தற்காலிகமாக தயாரித்துக் கொடுத்த சிங்கள அதிகாரிகளால், பொட்டு அம்மான் விஷயத்தில் அப்படி ஒரு தற்காலிக சான்றிதழைக் கூட கொடுக்க இயலவில்லை.

இந்திய உளவு அமைப்பான ராவும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். என்று கருதுகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச போலீஸ், பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளது.

விடுதலைப்புலி தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு சர்வதேச போலீசின் அறிவிப்பு தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள அவர்கள் பொட்டு அம்மான் போரின் கடைசி நாட்களில் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தகவலை பரப்பி வருகிறது.

ஆனால் இது சிங்கள உயர் அதிகாரிகள் நடத்தும் நாடகம் என்று உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்களுக்கு புரிந்தது. வழக்கம்போல சிங்கள அதிகாரிகள் தமிழர்கள் மனதை திசை திருப்புவதற்காக நடத்தும் ஒரு உளவியல் யுத்தம் என்பதை புரிந்து கொண்டனர். பொட்டு அம்மான் விஷயத்தில் தாங்கள் பரப்பிய தகவல் எடுபடாமல் போய் விட்டதே என்ற ஆதங்கம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கள அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப்புலி தலைவர்கள் கொடுத்துள்ளனர் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் கடிதம் எழுதி உலகம் முழுக்க வாழும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அனுப்பி உள்ளனர்.

அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் தளபதிகள் உயிருடன் இருப்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார்களா? களத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில் அதற்கு சாத்தியம் உள்ளதா? சிங்கள பேரினவாதத்தை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்த எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? என்றெல்லாம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் வல்லமை விடுதலைப்புலிகளிடம் இருப்பதாக சர்வதேச போர் நிபுணர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால் சொந்த நாட்டில் எல்லா உரிமையும் பெற்று வாழ கேட்கும் கோரிக்கையை தீவிரவாதம் என்று சிலர் முத்திரை குத்துவதை சாத்வீக முறையில் எதிர் கொள்ள விடுதலைப்புலிகள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. உலக வரலாற்றில் சொந்த மண்ணில் வாழா விட்டாலும் நாடு கடந்த அரசை உருவாக்கி பல இனம் வெற்றி பெற்றிருப்பது போல, ஒரு முயற்சியை தற்போது விடுதலைப்புலிகள் முன் எடுத்துள்ளனர்.

அதாவது நாடு கடந்த ஈழ அரசை விடுதலைப்புலிகள் உருவாக்கி வருகிறார்கள். இதற்கான நடடிவக்கைகளில் விடுதலைப்புலிகளின் சர்வ தேச பிரிவு ஈடுபட்டுள்ளது.

நாடு கடந்த ஈழ அரசுக்காக வரும் மே மாதம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி, நார்வே, தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், நியூசிலாந்து, சுவீடன், பின்லாந்து, மற்றும் அயர்லாந்து ஆகிய 16 நாடு
களில் இந்த வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

வாக்கெடுப்பு முடிந்த பிறகு 115 ஈழ பாராமன்ற உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஈழத்தமிழர்களுக்காக உலகம் முழுக்க இந்த 115 எம்.பி.க்களும் சேவை செய்வார்கள்.

இதன் மூலம் தமிழ் ஈழ அரசு உலக அளவில் ஒரு தன்னாட்சி பெற்ற நாடு போல செயல்படும். மற்ற நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஈழ அரசு அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கடந்த வாரம் முதல் இடம் பெற்று வந்த மாணவர்களின் பகிஸ்கரிப்புப் போராட்டம் இன்று அதிபரின் இடமாற்றத்தைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவாகள் அதிபருக்கு எதிராக வகுப்புப் பகிஸ்கரிப்புப் போராட்டதை; மேற்க்கொண்டு இருந்தார்கள்.

கடந்த 08ஆம் திகதி கல்வித் தினைக்களத்தில் இருந்து ஒரு உயர் அதிகாரி வந்து குறிப்பி;ட்ட மாணவாகளினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் சம்பந்தமாக விசாரனைகளை மேற்க்கொண்டு சரியான தீர்வொன்றை எடுக்கவில்லையென தெரிவித்து இம் மாணவர்களால் வகுப்பு பகிஸ்கரிப்புப் போராட்டம் ஆரம்பமாகியது.

இன்று காலையில் கல்வி அமைச்சில் இருந்து உடனடியாக அதிபரை உரிய பொறுப்புக்களை தற்போது உப அதிபராக கடமையாற்றுபவரிடம் கையளித்தவிட்டு யாழ்ப்பபாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆசிரிய வள நிலையளத்தில் கடமையாற்றும் படி பணிக்கப்பட்ட தொலை நகல் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பணிப்பாளர் மூலம் அதிபரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவாகள் தமது வகுப்பு பகிஸ்கரிப்பு நடவடிக்கையை கைவிட்டு வழமை போன்று வகுப்புகளுக்கு சமூகமளித்துள்ளார்கள்.

யாழ்பபாணம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் இன்று மாணவ ஆசிரியாகளுடனும் விரிவுரையாளர்களுடனும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் உலக நீர் தின விழா

உலக நீர்தின விழா இன்று திங்கட்கிழமை அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. மடு வலையகல்வி வலையத்துக்கு 11 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐரோப்பிய ஒனறியத்தின் அனுசரணையுடன் மன்னார் சேவலங்கா மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானி கைபிளாஸ்டன், மன்னார் அரசாங்க அதிபர் நிக்கொலாஸ் பிள்ளை, மடு வலய கல்வி பணிப்பாளர். செபஸ்ரியாம் பிள்ளை 215ஆவது படைபிரிவின் பிரிகேட் கொமாண்டர் விக்கும் லியானகே, மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரபாகர மூர்த்தி, மன்னார் சேவலங்கா மன்றத்தின் இனைப்பாளர் பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கும் பரிசில்கள் வழஙகப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

ஹெய்ட்டியில் நேற்றும் பாரிய நில நடுக்கம் : மூவர் பலி


நேற்றிரவு ஹெய்ட்டித் தீவின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு இந்த நில நடுக்கம் நிலைகொண்டிருந்தது.

இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கின. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இன்று காலை ஐ.நா. மீட்புக்குழு ஹெய்ட்டியில் முகாமிட்டு மீட்புப்பணியைத் தீவிரப்படுத்தியது. ஒரு கட்டிடத்தை அகற்றிய போது, அதற்குள் 3 பேர் உடல் நசுங்கி இறந்து கிடந்தமை தெரிய வந்தது.

ஐ.நா.அமைதிக்குழுவைச் சேர்ந்த படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

ஹெய்ட்டித் தீவில் சனிக்கிழமை இரவும் நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 3.7 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்பட வில்லை.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஹெய்ட்டிக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ராவண் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கப்பட்டுள்ளார்: மணிரத்தினம்




தொடர்பு கொண்டு எனது காட்சிகளை நீக்க வேண்டாம். எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம் ரஞ்சிதா. பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், மணிரத்னம் தனது படத்திலிருந்து நீக்கிவிட்டதையடுத்தே ரஞ்சிதா மேற்படி கேட்டுள்ளாராம்.

. விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்க, மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ரஞ்சிதா தொடர்பான காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றாலும், அவர் டப்பிங் பேச வேண்டியுள்ளது. சில 'பேட்ச் காட்சிகளுக்கும்' ரஞ்சிதா வரவேண்டியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ராவண் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.

ஆனால் அதற்குள் நித்யானந்தனுடன் அவர் புரிந்த செக்ஸ் லீலைகள், அதன் பின்னணிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. ரஞ்சிதாவும் தலைமறைவாக உள்ளார்.

சொன்னபடி வரவில்லையாம். இப்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறப்படுவதால், ரஞ்சிதாவின் பாத்திரத்துக்கு புதிதாக வேறு ஒரு நடிகையை வைத்து காட்சிகளை எடுக்கத் தீர்மானித்துள்ளார் மணிரத்னம். ரஞ்சிதா படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதையும் பத்திரிகைகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் மனைவி, அனோமாவிடம் வாக்குமூலம் பதிவு




இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவிடமிருந்து வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளதாக இரகசியப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் பேச்சாளரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குற்றப் புலனாய்வு விசாரணை அலுவலகத்திற்கு அனுரகுமார திஸாநாயக்கவை வரு மாறு கேட்டுகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

புது ரக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!



கப்பலில் இருந்து செங்குத்தாகச் சீறிச் சென்று எதிரி நாட்டு கப்பலை தாக்கி அழிக்கவல்ல சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.

ஒரிசாவின் வங்கக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 11.30 மணி அளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து உலகிலேயே சூப்பர்சானிக் ஏவுகணையை (ஒலி வேகத்தைவிட அதிகமாகச் செல்லும்) தம் வசம் வைத்துள்ள ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்தியா நடத்திய வான் பகுதி பாதுகாப்பு ஏவுகணை (ஏஏடி) சோதனை தோல்வியைத் தழுவியது. இது ஏவுகணை விஞ்ஞானிகள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக சோதிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை ரகங்கள் அனைத்தும் கிடைமட்டமாகச் சீறிச் சென்று எதிரி நாட்டு இலக்குகளை தாக்கவல்லவை. ஆனால் இந்த ஏவுகணை செங்குத்துப் பாதையில் சீறிச் சென்று எதிரி நாட்டு இலக்கை தாக்கவல்லது.

290 கிலோ மீட்டர் தொலைவு வரை சீறிச் சென்று தாக்கவல்ல இந்த ஏவுகணை, கப்பற்படை கப்பலான ரன்வீரில் இருந்து ஏவப்பட்டது. சீறிச் சென்ற இந்த ஏவுகணை இலக்காக நிர்ணயிக்கப்பட்ட கப்பலை நேர்த்தியாகத் தாக்கி முழுமையாக அழித்தது என்று பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவர் சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.

பிரதிபா பாட்டீல், ஏ.கே.அந்தோனி வாழ்த்து: சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் மனித உரிமை மீறல்:குழு அமைப்பதில் ஐ.நா., தீவிரம்




நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்வதற்காக, குழு அமைக்கும் நடவடிக்கையை ஐ.நா., தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, ஐ.நா., அதிகாரிகள் விரைவில் கொழும்பு வரவுள்ளனர்.இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது, மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேச அளவில் புகார் எழுந்தது. இந்த விஷயத்தில் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டின. இதையடுத்து, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்து, தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குழு ஒன்றை அமைக்கப் போவதாக ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார்.இதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது.



'இலங்கையின் உள்நாட்டு விஷயத்தில் தலையிடும் செயல்' என இலங்கை அரசும், அணி சேரா நாடுகள் அமைப்பும் தெரிவித்தன. இருந்தாலும், குழு அமைக்கும் விஷயத்தில் ஐ.நா., பொதுச் செயலர் உறுதியாக இருந்தார். இதற்கிடையே, மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவை அமைப்பதற்காக, ஐ.நா., உயரதிகாரிகள் விரைவில் கொழும்பு வரவுள்ளனர்.இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐ.நா., ஒருங்கிணைப்பாளர் நெய்ல் புனே கூறுகையில், 'குழுவின் செயல்பாடு தொடர்பான விஷயங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த ஆலோசனைகள் நியூயார்க்கில் தொடர்ந்து நடந்து வருகின்றன. குழு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய, ஐ.நா., உயரதிகாரிகள் அடுத்த மாதம் கொழும்பு வருகின்றனர்' என்றார்.இந்திய தூதர் பார்வை:இதற்கிடையே, இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே கந்தா, முல்லைத் தீவு, வவுனியா, ஓட்டுசுட்டான் ஆகிய பகுதிகளுக்கு சென்று, போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கேட்டதெல்லாம் நான் தருவேன்

தனித் தமிழீழம் என்று பிளிறிக் கொண்டிருந்த யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டு வருடம் ஒன்றாகப் போகிறது.பொடியள் எங்களுக்கெண்டு ஒரு நாடெல்லே எடுத்துத் தரப் போறாங்கள் " என்று பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன விழிகளுடன் புதைந்து போன மக்கள் ஆயிரம், ஆயிரம்.


சர்வதேச அரசியலைக் கணக்கெடுக்க வல்லமை அற்றவர்கள் உசுப்பேற்றி உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களின் மூலம் உக்கிரமான போரில் தம்மிடமிருந்த மீதமான தமிழ் நிலத்தையும் பறிகொடுத்து விட்டு மாயமாகிப் போன நிலை.


மக்களின் விடுதலை என்பதன் வரைவிலக்கணத்தை அறியாமல் பயாஸ்கோப்புப் போராட்டம் நடத்தி விட்டு, சரி இனிப் படம் முடிந்து விட்டது வீட்டுக்குப் போங்கள் என்று கூறுவதைப் போல அனைத்தையும் தொப்பென்று போட்டு விட்டுத் தலைதெறிக்க ஓடி விட்ட நிலை.


தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் தலைமையில் உங்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்னும் கனவில் கண்களைக் கட்டித் தமிழ்மக்களை அழைத்துச் சென்று பாதாளத்தில் தள்ளி விட்ட நிலை.


இவை நடந்து முடிந்தவை.


ஈழத்துத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது அரசியல் நிலை தெரிந்தோ தெரியாமலோ பிரபாகரனின் மறைவுக்கு முன், மறைவுக்குப் பின் என்று இரண்டு வெவ்வேறு காலக் கண்ணாடிகளினூடாக பார்க்கப்பட வேண்டிய துரதிருஷ்ட நிலை.


பிரபாகரன் இறந்து விட்டாரா ? இல்லையா ? என்ற ஆரய்ச்சிக்குரிய வேளையல்ல இது. எமது இனம் விடுதலை என்னும் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட பாதையின் சுவடுகளை அவதானமாக ஆராய வேண்டிய நிலை.


எமது இன்றைய நிலைக்கு பிரபாகரன் என்னும் தனி மனிதன் அன்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் தனிப்பட்ட இயக்கம் மட்டும் தான் காரணமா?


பிரபாகரனும் ஒர் தமிழன்னை ஈன்றெடுத்த பிள்ளை தான், கண்ணை மூடிக்கொண்டு மூளைச்சலவைகளினா;;ல் பிரபாகரனின் பின்னே அணிவகுத்துச் சென்று தம் அன்னை நாட்டுக்காக தமதுயிரை அர்ப்பணித்த இளம் தளிர்களும் எம் சகோதரர்கள் தான்.


பிரபாகரன் தன்னுடைய வசதியான வாழ்க்கைக்காக ஈழப் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் அவரையொத்த பல 17 வயது இளைஞர்கள் தமது வசதியான வாழ்க்கைக்குத் தேவையான வகையில் நாட்டை விட்டு வெளியேறி மிகவும் மகிழ்வாக வாழ்ந்திருக்கிறார்கள்.


ஓர் தூயஎண்ணத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்த பிரபாகரன் என்னும் 17 வயது இளைஞன் தன் தலையில் தானே மண்னை அள்ளிப் போட்டுக்கொள்லக்கூடிய ஓர் நிலைக்கு மாற்றம் அடைந்ததன் காரணம் என்ன?


நாமேதான் . . . .


இதை என்று நாம் உளமார ஏற்றுக்கொள்ளுகிறோமோ அன்றுதான் நாம் உண்மையான பாதையில் எமது பயணத்தை ஆரம்பிக்க முடியும்.


விடுதலைப் புலிகள் மட்டுமல்ல ஈழப்போராட்டத்தில் குதித்திருந்த அனைத்து இயக்கங்களுமே சுயவிமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதும், சுயவிமர்சனம் செய்தவர்கள் அவர்களின் உயிர்களை உட்கொலைகள் மூலம் இழந்தார்கள் என்பதுவும் மறுக்கப்படமுடியாத சரித்திர உண்மைகள்.


ஒரு விடுதலைப் போராட்டத்தில் அரசியல் அங்கம், அதன் துப்பாக்கி ஏந்தும் ஆயுத அங்கத்தை விட பலம் வாய்ந்ததாக அமையவேண்டும் என்பதைப் புலிகள் உணரவில்லை என்பதுவே உண்மை.


பிரபாகனுக்கு இருந்த சர்வதேச அரசியல் அறியாமையையும், தூய விடுதலை வேட்கையையும் அவரைச் சுற்றியிருந்த அரசியல் அறிவுமிக்க சுயநலவாதிகள் தவறாக வழிநடத்தி விட்டார்கள் என்பதுவே உண்மை.


ஒரு உதாரணத்திற்கு, கடவுள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துள்ள ஒருவன் ஒரு விரதம் பூண்டு தனது கண்களை கட்டிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைச் சுற்றியிருப்பவர்களிலேயே இரவையும், பகலையும், கால நிலையையும் அறிய வேண்டிய நிலையிலிருப்பவனுக்கு எப்போதும் பகல் என்றே சொல்லிக் கொண்டிருந்தல் எப்படி இருக்குமோ அப்படித்தான் பிரபாகரனினதும், அவரைச் சுற்றியிருந்தோரின் நிலையுமிருந்தது.


சரி பிரபாகரன் இப்போது ஈழம் என்னும் நாடகமேடையில் இருந்து மறையவில்லை விரட்டப்பட்டுவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் ராஜபக்சே தெரிவாகி விட்டார்.


அடுத்து இப்போ பாராளுமன்றத் தேர்தல் தலைதூக்குகிறது . தமிழ் ஊர்களிலெல்லாம் பிரச்சார மேடைகளில் " கேட்டதெல்லாம் நான் தருவேன் " என்னும் பிரச்சாரம் ஒலிப்பெருக்கிகளிலெல்லாம் ஓங்காரமாய் ஒலிக்கிறது.


அவசரம், அவசரமாகப் புலம் பெயர் தமிழ்ச் சகோதர சகோதரிகள் தமது ஊருக்குச் செல்லும் படலம் ஆரம்பமாகியுள்ளது.


போய் வந்தவர்களின் கருத்துக்கள் இருவகையானவை 1) ஜய்யய்யோ தமிழீழம் என்னும் பேச்சையே இனி எடுக்க வேண்டாம் நாம் பட்டதெல்லாம் போதும் பட்டினத்தாரே என்று ஓலமிடுகிறார்கள் தமிழ் மக்கள் என்பது ஒருவகை 2) தமிழ் நிலங்களிலெல்லாம் சிங்களக் குடியேற்றம், தமிழ்ப் பாடசாலைகளில் பிக்குமார் சிங்களம் கற்பிக்கிறார்கள் போச்சுடா ! நம் நிலம் பறி போச்சுடா ! என்ற ஓலத்துடன் வரும் மக்கள் மறுவகை..


சிங்கள மக்கள் எமது நிலங்களில் அத்துமீறிக் குடியேறுகிறார்கள் என்று ஓலமிடும் அதே புலம்பெயர் மக்கள் அவசரம் அவசரமாக தமக்குச் சொந்தமான வடபகுதி நிலங்களை யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


வெறும் வாய்ப் பேச்சுக்காகவோ என்னவோ , மஹிந்தாவும், அவர் சார்ந்த அமைச்சர்களும் " புலம் பெயர் தமிழ் மக்களே ! வாருங்கள் வந்து உங்கள் வட,கிழக்குப் பகுதிகளை எம்முடன் சேர்த்து மீளக்கட்டியெழுப்பும் பணியில் இணையுங்கள் " என்று அறைகூவல் விடுத்தனர்.


இத்தனை காலமும் "போர், போர், . . . புலிகளே பொருதுங்கள் எமது மண்ணை சிவந்த மண் ஆக்குங்கள் " என்று கத்திக் களைத்து விட்ட நாம் இப்போது உண்மையான, நேர்மையான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாயிருந்தால் என்ன செய்யவேண்டும் ?


மகிந்தாவின் அழைப்பு போலியா ? அல்லது உண்மையா ? என்பதை பரீட்ச்சித்துப் பார்க்கும் மனவலிமை கொள்ள வேண்டும். எமது போர்ப்பசிக்குத் தம்மை இரையாக்கிய எமது இன்னுயிர் தொப்புள் உறவுகளின் சுபீட்சமே தற்போது எம்முன்னால் காத்திருக்கும் பணி என்பதை ஏற்று எமது பகுதிகளை மீளக் கட்டியமைப்பும் பணிகளில் ஈடுபட வேண்டும்.


ஆனால் இன்றும் புலம்பெயர் நாடுகளில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? கைகளில் விஸ்கிக் கிண்ணத்துடன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? அவர் எப்போது நம்முன்னே காட்சியளிக்கப் போகிறார் என்னும் வீண் விவாதங்களில் ஈடுப்பட்டுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் மற்றொரு வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிறோம்.


பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிந்து நின்று இன்னமும் எமது எஞ்சியுள்ள புலி விசுவாசத்துக்காய் எமது மக்களை பலியாக்க எத்தனிக்கிறோம்.


சமீபத்தில் இலங்கை வந்த நிருபமா ராவ் என்ன கூறினார் " அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஓரே கோரிக்கையை முன்வைப்பதுவே இந்திய அரசாங்கம் தீர்வை வலியுறுத்த நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான செய்கை " என்பதுவே.


அது மட்டுமா ?


சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளிக்கையில் மகிந்த என்ன கூறியிருக்கிறார் ? தமிழர்கள் பல அணிகளாக நின்று கொண்டிருக்கிறார்கள், வடக்கு-கிழக்கு இணைப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை. சமஸ்டி அமைப்பு என்பதை மொழிவது எனது அரசியல் தற்கொலைக்குச் சமானம் என்று கூறியிருக்கிறார்.


இதிலிருந்து எமக்கு என்ன தெரிகிறது ? அனவரும் ஈழத்தமிழர்களுடைய எமது சுயநலப் போக்கை நன்கு அறிந்திருக்கிறார்கள். பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்க எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு கேட்டதெல்லாம் தருவேன் என்ற மகிந்த இன்று ஓர் கடினமான நிலைப்பாட்டை எடுக்க என்ன காரணம் ?


ஈழத்தமிழர் என்றுமே ஒற்றுமையாக கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்பதை அவர் நிச்சயமாக அறிந்ததனாலேயே .


சுதந்திரம், சுபீட்சம், தனிமனித சுதந்திரம் இவையெல்லாம் முதலில் எம்மால் எமக்கு கொடுக்கப்படவேண்டும். தேர்தலில் பலர் குதித்திருப்பது இச்சுதந்திரத்தின் முதல் கட்டம், அதன் இரண்டாவது கட்டமாக வேறுபாடுகளைக் களைந்து எமது மக்களின் அமைதியான, கெளரவமான வாழ்க்கை என்னும் அடிப்படை கோரிக்கையில் அனைத்து தமிழ்ப்பிரிவினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்..


இதுவே இன்று எம் அனைவரின் முன்னால் உள்ள தலையாய கடமை. சுதந்திரமாக வாழத்துடிக்கும் எம் மக்களுக்கு அந்நிலை வரும் போது பிரபாகரன் தான் அவர்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்னும் எணத்தைக் கைவிடுங்கள்.


பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் எங்கிருந்தாலும் அங்கு அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்.


அதற்காக எமது மக்களின் வாழ்வில் மீண்டும் சூறாவளியை உருவாக்கும் முயற்சியில் மீண்டும் இறங்காதீர்கள். அமைதியையும், சந்தோஷத்தையும் இழந்து தமது இளம் சிறார்கள் பலரை கொடிய போருக்கு விலையாகக் கொடுத்த அவர்கள் நிம்மதியாக மூச்சு விட அவகாசம் கொடுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...