3 செப்டம்பர், 2009

அம்பாறையின் தமிழ் பிரதேசங்களில் ஜனநாயகவிரோதச் செயல்கள் தொடர்;வதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றச்சாட்டு-


அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ஜனநாயக விரோதச் செயல்கள் தொடர்;வதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைப் பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார். கிழக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிரதேசங்களில் மக்களின் வாழ்வுநிலை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாலும், அம்பாறை தமிழ்ப் பிரதேசங்களில் தொடரும் அரசியல் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இயல்புநிலைக்குத் தடையாகவுள்ளன. அரசியல் செல்வாக்குமிக்க சில குழுக்களால் தொடரும் வன்முறைகள் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதால் கிழக்குமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் தம் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதநிலையே ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்;கள் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது சந்தேகத்திற்குரிய நபர்கள் தம்மைப் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் இணைப்பு அலுவலகமொன்று அங்கு திறப்பதற்கு அக்குழுவினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மாகாணசபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா, தனது பாதுகாப்பின் நிமித்தம் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வீட்டில் தங்கியிருந்தவேளை, அவரது வீட்டுக்கு முன்பாகக் கூடிய குழுவொன்று வன்முறைகளில் ஈடுபட முற்பட்டு, அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துள்ளது. இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைத் தடுத்துநிறுத்தி, ஒரு சமாதான ஜனநாயக சூழலை ஏற்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும். இதன்மூலமே அப்பிரதேசங்களில் முழுமையான ஜனநாயகத்தையும் அமைதியான சூழலையும் உருவாக்க முடியும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த 07 பேரை மலேசியா அனுப்ப ஏற்பாடு-


புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த ஏழுபேரை மலேசியாவிற்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்களுக்கான கடவுச்சீட்டுக்கள் மற்றும் நுழைவு அனுமதிப் பத்திரங்கள் என்பன கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் கோவிலில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் அமைச்சர் மிலிந்த மொறகொட, பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் கருத்துரைத்த பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி, புலிகளின் சிறுவர் போராளிகளாக இருந்த ஏழு பேருக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வதற்கு இன்று ஏற்பாடு செய்துள்ளோம். இதற்குமுன் மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு இவ்வாறான 140பேருக்கு ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தோம். இந்நடவடிக்கைகள் எமது அமைச்சின் ஊடாக மேலும் தொடரவுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
முல்லை.மாவட்ட உயர்நிலை அதிகாரிகள் இருவர்
முகாமிலிருந்து வெளியேற அனுமதி


புல்மோட்டை இடைத்தங்கல்
முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2 உயர் மட்ட அதிகாரிகள், தமது குடும்பத்தினருடன் வெளியேற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஜி.வில்வராஜா, முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளர் வி.எஸ்.தெய்வேந்திரன் ஆகிய இருவரும் அவர்களுடன் இருந்த தமது குடும்பத்தினருடன் புதனன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புல்மோட்டை இடைத்தங்கல் முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளே இவர்களை அரச அதிபரிடம் ஒப்படைத்தனர்.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரத்தின் மனைவியும் மகளும் யுத்த மோதல்களின்போது கொல்லப்பட்டார்கள் என்பதும், அவர் தமது சகோதரியின் குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்து வந்து முகாமில் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான யுத்தச் சூழ்நிலையிலும் இறுதிவரை முல்லைத்தீவு பிரதேசங்களில் தங்கியிருந்து பணியாற்றியதன் பின்னர், இறுதி நேரத்தில் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 7 உயர்மட்ட அதிகாரிகளுக்கு முல்லைத்தீவு அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இதுவரை அரசாங்கம் முகாம்களில் இருந்து வெளியேற அனுமதி வழங்கியுள்ளது.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் உட்பட 5 உயரதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் தற்போது வவுனியா செயலகத் தொகுதியில் செயற்பட்டு வருகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் இணைப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார்கள்.

விடுதலைப்புலிகளிடமிருந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பிரதேசத்தில் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக முகாம்களில் உள்ள உயரதிகாரிகளை அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளுக்கமைய, வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ, வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரினதும், இடைத்தங்கல் முகாம்களுக்குப் பொறுப்பான இராணுவ உயரதிகாரியின் சிபாரிசின் பேரிலும் இந்த உயரதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...
லொறிகளின் ஏ-9 பாதையூடான போக்குவரத்து

அனுமதி ரத்து



- ஏ-9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் லொறிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ-9 வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு 854 லொறிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

ஜூன் மாதம் ஏ-9 வீதி திறக்கப்பட்டதன் பின்னர் இதுவரை குறித்த லொறிகள் எவ்வித போக்குவரத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு தடவை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு லொறி உரிமையாளர்கள், 100,000 ரூபாவினை கட்டணமாகக் கோருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, எவரும் இந்த லொறிகளை வாடகைக்கு அமர்த்த முன்வருவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
வவுனியாவில் அதிகரித்து வரும் சோதனை

நடவடிக்கைள்





வவுனியா நகரிலும், நகரைச் சூழ்ந்த பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நகர வீதிகளில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பன வீதித்தடை முகாம்களில் மறித்து சோதனையிடப்படுகின்றன. அத்துடன் சைக்கிள்களில் செல்வோரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், அந்த சைக்கிள்களின் இலக்கங்களும் பொலிசாரினால் சில வேளைகளில் பதிவு செய்யப்படுகின்றன.

சோதனைக்கு உள்ளாக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்படுவதுடன், மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்களும் சாரதி அனுமதிப்பத்திரமும் பொலிசாரினால் பரிசீலனை செய்யப்படுகின்றன.

நகரத்தின் முக்கிய வீதிகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகின்ற காலை, மாலை வேளைகளில் முக்கிய சந்திகளில் ஏராளமான போக்குவரத்துப் பிரிவுப் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் கண்காணிக்கப்படுகின்றன. அதேவேளை, பிரதான வீதிகளில் பத்தடிக்கு ஒரு பொலிசார் என்ற வீதத்தில் கடமையில் நிறுத்தப்படுகின்றார்கள்.

நகரத்தைச் சூழவுள்ள புறநகர்ப்பகுதி குடியிருப்புக்களிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பட்டுள்ளன. கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினரும் பொலிசாரும் வீடுகளுக்குச் சென்று, குடும்ப அட்டையைப் பெற்று, அதற்கமைய அங்கு குடும்பத்தினர் உள்ளனரா எனப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் மறைந்திருக்கின்றார்களா என்பதைக் கண்டறிவதற்காகவே வீடுகள் சோதனையிடப்படுவதாகக் கூறப்படுகின்றது.

எனினும் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் குறித்து பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை
மேலும் இங்கே தொடர்க...
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி

ஹெலிகாப்டர் விபத்தில்
ஆந்திர முதல்வர் பலி

ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி, தீப் பிடித்ததில், அவரும், பைலட் உள்ளிட்ட மற்ற நான்கு பேரும் அதே இடத்தில் கருகி உயிரிழந்திருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று காலை ஹைதராபாத்தில் இருந்து சித்தூருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தார் ராஜசேகர ரெட்டி. ஆனால், சுமார் 9.15 மணியளவில் அவரது ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நேற்று முதல் அந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்பட பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், தரைமார்க்கமாகவும் தேடும் பணி நடைபெற்றது.

இன்று காலை சுமார் எட்டரை மணியளவில், ஒரு மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பல பாகங்களாக உடைந்து கருகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அதைக் கண்டுபிடித்ததாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
கர்னூலில் இருந்து சித்தூருக்கு தெற்குத் திசையில் செல்ல வேண்டிய ஹெலிகாப்டர், கிழக்குத் திசையில் சென்று மலைப்பகுதியில் மோதியிருப்பதாக சிதம்பரம் தெரிவித்தார்.

கமாண்டோக்கள் அந்தப் பகுதியில் இறக்கப்பட்டு, சடலங்களைத் தேடியபோது, ஐந்து சடலங்கள் கருகிய நிலையில் கிடப்பது உறுதி செய்யப்பட்டதாக சிதம்பரம் தெரிவித்தார். முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன், அவரது தனிச் செயலர் சுப்ரமணியம், பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரு பைலட்டுகள் ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக சிதம்பரம் தெரிவித்தார்.

சடலங்கள் இன்னும் விபத்து நடந்த இடத்தில் இருப்பதாகவும், விரைவில் அவை ஹைதராபாத் கொண்டுவரப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
கால்வாய் ஒன்றில் கவனிப்பாரற்ற பொதி

இருவர் காயம்; அச்சுவேலியில் சம்பவம்

கால்வாய் ஒன்றில் கவனிப்பாரற்ற நிலையில் கிடந்த பொதியை எடுத்து விளையாட முற்பட்ட போது அந்த பொதி வெடித்ததில் சிறுவன் கொல்லப்பட்டுள்ள துடன் மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 511 வது படைப்பிரிவின் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கர தெரிவித்தார்.

இந்தச்சம்பவத்தில் 11 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளது டன், ஒன்பது மற்றும் ஏழுவயதுடைய இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

அச்சுவேலி பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 511வது படைப் பிரிவினரின் விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள்

விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறு வர்கள் குழுவொன்று அங்குள்ள கால்வாயில் கவனிப் பாரற்ற நிலையில் காணப்பட்ட பொதி ஒன்றை கையில் எடுத்து விளையாட முற்பட்டுள்ளனர். இதன் போது அந்த பொதியில் இருந்த கைக்குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

பொதியை கையில் வைத்திருந்த சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த இரு சிறுவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா கவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
சிறைகளை கண்காணிக்க புலனாய்வு பாதுகாப்புப் பிரிவு



செப், 1 முதல் நடவடிக்கை ஆரம்பம்
45 சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பாடு
விசேட பிரிவுக்கு பூரண அதிகாரம்

சிறைச்சாலைகளுக்குள் இடம் பெறுவதாக கூற ப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப் படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறை ச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளரு மான கெனத் பெர்னாண்டோ, இந்த பிரிவுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

45 சிறைச்சாலை அதிகாரிகள், ஊழி யர்களைக் கொண்டு இந்தப் புலனா ய்வு பாதுகாப்பு பிரிவு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை வெகு விரைவில் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வாவின் வழிகாட்டலில் ஆணையாளர்களான ஹப்பு ஆராய்ச்சி மற்றும் லக்ஷ்மன் சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளி லும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. இந்தப் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்தவொரு சிறைச்சாலைக்கும் திடீரென விஜயம் செய்யவும் சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகளை சோதனையிடவும் அதிகா ரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசேட புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவை நாடளாவிய ரீதியில் நிறுவுவதற்கென ஆயிரம் சிறைச்சாலை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவ தாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் பாதாள உலக கோஷ்டியி னரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், சட்ட விரோத செயற்பாடுகள், கையடக்கத் தொலை பேசி மற்றும் போதைவஸ்துக்கள் கைமாறப்படு வதாகவும் குற்றஞ் சாட்டப்படுவதையடுத்தே இத னைக்கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த பிரிவு நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள் ளதுடன் தற்பொழுது இதன் பரீட்சார்த்த நட வடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறி ப்பிட்டார்.

இந்தப் பிரிவின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் இந்தப்புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவு அமைக் கப்பட்டு அதன் செயற்பாடுகளை விஸ்தரித்த பின்னர் கண்டி, காலி, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சேவையை முன்னெடுக்க முடியும் என்றும் கெனத் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் பிரிவின் செயற்பாடுகளின் மூலம் சிறைச்சாலைக்குள் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை இலகுவாகக்கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவிக்கையில், சிறைச்சாலையில்ஒழுங்கை கடைப்பிடிப்பதற்காக எதிர்காலத்தில் பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அண்மையில் கூட சிறைச்சாலைகளிலிருந்து 18 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியிருந்தோம். நியமிக்கப்பட்டுள்ள புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர முன்னெடுப்பார்களென்ற நம்பிக்கை உண்டு எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா நாட்டில் தற்போது 30 ஆயிரம் சிறைக்கைதிகள் இருப்பதாகவும் அவர்களுள் 50 சதவீதமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஏனையோரில் 251 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களெனவும் தெரிவித்தார்.

நாட்டில் 03 பிரதான சிறைச்சாலைகளும் 19 விளக்கமறியல்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இங்கே தொடர்க...
அன்பான இணையத்தள வாசகர்களே




அன்பான இணையத்தள வாசகர்களே எமது புதிய பாதை
இணையத்தை நீங்கள் எப்படி பார்வை இடுகிறீர்களோ
அதே போல் உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி
விடவும் நன்றி
மேலும் இங்கே தொடர்க...