வடக்கு கிழக்கு பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள சர்வதேசம் அழுத்தத்தையும் பிரயோகித்து வருகின்றது. இந்தியா உட்பட உள்நாட்டு தமிழ் சிங்கள அரசியல் கட்சிகளும் இதே நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் இழுத்தடிப்புக்கள் பாரதூரமானதும், பயங்கரமானதுமான பிரச்சினைகளையே உருவாக்கப் போகின்றன என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்க் கட்சிகளுடனும் இந்தியாவுடனும் நடத்தப்படுகின்ற பேச்சுக்களின் உண்மைத்தன்மை என்னவென்று இதுவரையில் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ள அக்கட்சி அரசியல் தீர்வினை இழுத்தடித்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்திவிட முயற்சிக்காது அணுகுமுறைகளைக் கையாளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில்,
வெற்றி கொள்ளப்பட்ட யுத்தத்தை வைத்து அரசாங்கம் இன்று அரசியல் இலாபம் தேடிக் கொண்டிருக்கின்றது. எமது நாட்டில் உள்ள பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் விடயத்தில் உள்நாட்டில் ஒன்றும் சர்வதேசத்துக்கு வேறொன்றும் அரசாங்கத்தினால் கூறப்பட்டு வருகின்றது. தருஸ்மன் அறிக்கையைக் காரணம் காட்டி ஐ.நா.வுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கம் உண்ணாவிரதம் இருந்தும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.
நிலைமை இவ்வாறிருக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற ராஜித்த சேனாரத்ன தனது கூட்டமொன்றில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வருகின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது சாரத்தை உயர்த்திக் கொண்டு கத்துவதில் பயனில்லை என்றும் இவ்விடயத்தை மூளையைப் பாவித்து அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தனது செவ்வியொன்றில் கூறுகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கூட்டி மக்கள் மத்தியில் ஒருவித அச்சத் தன்மையைத் தோற்றுவித்துள்ள அரசாங்கம் நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றது என்று கூறியுள்ளார்.
உண்மையில் அவர் கூறியதுதான் உண்மை. இதனைத்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் கூறி வருகின்றது. எந்தவொரு இலங்கையரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான சட்டம் இல்லை. அதற்கான வழிவகைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இங்கு தருஸ்மன் அறிக்கையைக் காரணம் காட்டி பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
உண்மைத்தன்மை தெரியாது
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அங்கு உயர் மட்டத்துடன் பேச்சு நடத்தி பின்னர் கூட்டு இணக்கப்பாட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டதாக கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இந்த இணக்கப்பாட்டு அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி, அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இந்தியாவிடம் இலங்கையை தாரைவார்ப்பதற்கு அல்ல, இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பையே அதில் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இந்த இணக்கப்பாட்டு அறிக்கையின் உண்மைத் தன்மை என்னவென்று எவருக்கும் தெரியாது. இந்த அறிக்கை தொடர்பில் எமக்கு பாரிய கேள்வியாக இருக்கின்றது.
பேச்சுக்கள் இடம்பெறுகின்றன
தமிழர் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் வடக்கின் தமிழ்க் கட்சிகளுடன் பேசி வருகின்ற அதேவேளை இந்தியாவுடனும் பேச்சு நடத்தி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த இந்திய உயர் மட்ட தூதுக்குழுவுடன் அரசு பேச்சு நடத்தியது. உண்மையில் இந்த பேச்சுவார்த்தைகளில் வெளிப்படைத் தன்மை இல்லாதிருக்கின்றது.
13 பிளஸ் என்று முன்னர் கூறிய அரசாங்கம் தற்போது பொலிஸ் காணி அதிகாரம் இல்லையென்றும் இது தொடர்பில் சர்வ கட்சிக் குழுவொன்றினை அமைக்கப் போவதாகவும் கூறியிருக்கின்றது.
வீணடிக்கும் செயல்
அரசியல் தீர்வு விவகாரத்துக்காக இதற்கு முன்னரும் இவ்வாறு பல குழுக்கள் அமைத்து ஆராயப்பட்டன. இறுதியில் அவை ஒன்றுமில்லாமையாகிவிட்டன. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வை முன்வைக்கும் விடயத்துக்காக சர்வகட்சிக்குழு அமைக்கப்படும் திட்டமானது காலத்தை வீணடிக்கும் செயலாகும். இதில் நம்பிக்கை கொள்ள முடியாது. அவ்வாறு அமைக்கப்படுகின்ற குழு அர்த்தமுடையதாகவும் அமையாது.
அழுத்தம் அதிகரிப்பு
இதேவேளை, நியாயமான அரசியல் தீர்வினை முன்வைக்குமாறு வடக்கின் தமிழ்க் கட்சிகள் மட்டுமன்றி உள்நாட்டு அரசியல் கட்சிகளும் இந்தியாவும் சர்வதேசமும் தமது அழுத்தத்தை அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறு இந்த பிரச்சினையை இழுத்தடித்து வருவதானது எங்கு சென்று முடியும் என்று தெரியாதுள்ளது. அரசாங்கத்தின் இந்த போக்கு உள்நாட்டையும், உலக நாடுகளையும் ஏமாற்றுகின்ற செயற்பாடாகும்.
நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம்
இந்தியாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் இழுத்தடிப்புக்களையும் ஏமாற்றுக்களை மேற்கொண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது.
கடமையும் பொறுப்பும்
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கான அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் பாரிய வெற்றியை ஈட்டியிருக்கின்றோம். அதே போல் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். யுத்த வெற்றியை வைத்துக்கொண்டு அதில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என்றார்.