16 செப்டம்பர், 2010

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அமெரிக்கா பயணம் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பு





ஐ.நா. சபையில் உச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிது. உலக நாட்டு தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேயும் பங்கேற்று பேச உள்ளார். இதற்காக ராஜபக்சே தலைமையிலான உயர் மட்டக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.

இலங்கையில் போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா.சபை 3 பேர் குழுவை அமைத்தது. இதற்கு ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஐ.நா.சபை ராஜபக்சே இடையே மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் ராஜபக்சே ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்நாட்டிலிருந்து தாய்நாடு திரும்பிய அகதிகள் கடற்படையினரால் மீட்பு

இந்தியாவுக்கு சென்ற இலங்கை அகதிகள் நாடு திரும்புகையில் மன்னார் பகுதியில் வைத்து 13 பேர் தங்களால் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதில் மூன்று சிறுவர்கள்,ஏழு ஆண்கள், மூன்று பெண்கள் அடங்குகின்றனர். ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்த இவர்கள் காப்பாற்றப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் யுத்த காலத்தின் போது வவுனியா, யாழ்பாணம், மன்னார் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள மண்டபம் முகாமிலிருந்து திரும்பியவர்கள் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. இலங்கையைச் சேர்ந்த 73 ஆயிரம் அகதிகள் தென்னிந்தியாவில் உள்ள 112 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 34 ஆயிரம் பேர் தமிழ் நாட்டுக்கு வெளியில் அமைந்துள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின் படி இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 852 பேர் தமிழ்நாட்டிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நடிகை சீதாவுக்கு 2ஆவது திருமணம்


ஆண்பாவம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சீதா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பார்த்திபன் கதாநாயகனாக நடித்து முதன்முதலாக இயக்கிய `புதிய பாதை' படத்தில், சீதா கதாநாயகியாக நடித்தார்.

அப்போது சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு சீதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் சீதா வீட்டைவிட்டு வெளியேறினார். சீதாவும், பார்த்திபனும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடைபெற்றது.

சீதா-பார்த்திபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.

திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த சில வருடங்களிலேயே சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் குடும்ப நல நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

விவாகரத்துக்குப்பின், சீதா பெற்றோர்களுடன் வாழ்ந்தார். அவருடன் மூத்த மகள் அபிநயா மட்டும் இருக்கிறார். இளைய மகள் கீர்த்தனாவும், வளர்ப்பு மகன் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனிடம் இருக்கிறார்கள். கதாநாயகி வாய்ப்பு போன பின் சீதா தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சீதாவுக்கும், டி.வி. நடிகர் சதீசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினார்கள். கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள், முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.

அதன்படி சீதாவும், சதீசும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். சென்னை சாலிகிராமத்தில் உள்ள சீதா வீட்டில், அவருடைய பெற்றோர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பற்றி நடிகை சீதா, கூறும் போது:

எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோஷப்படுகிறேன். அவரையே திருமணம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன்.

வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லை. என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்நாட்டு யுத்தத்தை தமிழர்கள் விரும்பவில்லை : தயா மாஸ்டர்


மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது வீணாக மனித உயிர்களை காவுகொண்டதெனவும் தமிழர்கள் அதனை விரும்பவில்லை எனவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியூடாக பிபிஸிக்கு அளித்த சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"யுத்தம் வீணானதொன்று. தமிழர்கள் அதனை விரும்பவில்லை. தமிழர்களின் முக்கிய நோக்கம் கல்வி. அது பணத்தினை வீண்விரயம் செய்தது எனக் கூறியுள்ள அவர் யாழ்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றில் கடமைபுரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

அதனோடு தான் இலங்கை அரசுடன் எவ்வித தொடர்பையும் பேண வில்லையெனவும் தான் கே.பியை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ஆவர்.

அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது சகா ஒருவருடன் இராணுவத்திடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் மீளக்குடியேற 150 சிங்கள குடும்பங்கள் விண்ணப்பம்

யாழ். குடா நாட்டில் மீளக்குடி யேறுவதற்கு 150 சிங்களக் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படையின் சிவில் விவகார பொதுசன அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த 150 குடும்பங்களின் உறுப்பினர்களும் இடம் பெயர்ந்து அனுராதபுரம், மிஹிந்தல போன்ற பல இடங்களில் நண்பர்கள், உறவினர்களின் இருப்பிடங்களில் தற்போது தங்கி இருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடா நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த இந்த சிங்களக் குடும்பங்களின் உறுப்பினர்களே திரும்பவும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கின்றார்கள். இவர்களில் பலர் திருநெல்வேலி, கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் வசித்துள்ளார்கள்.

அவர்களது காணிக்கான உரிமைப் பத்திரங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிந்துள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் - கொள்ளை கோஷ்டி மோதல் துப்பாக்கி பிரயோகத்தில் 7 வயது சிறுவன் பலி

கொள்ளைக் கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவன் மரணமானதுடன் சிறுவனது தந்தை காயங்களுடன் நாகொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (15) பிற்பகல் 12.30 மணியளவில் பேருவளை காலி வீதி நகர சபைக்கருகே இடம்பெற்றுள்ளது.

அளுத்கம மொரகல்ல பகுதியைச் சேர்ந்த எஸ். சுதில் நில்புல் த சில்வா என்ற சிறுவனே இவ்வாறு மரணமானவராவார்.

இவர் தனது தந்தையுடன் பேருவளை நகருக்கு வந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அளுத்கமை பகுதியிலிருந்து கார் ஒன்றில் தப்பிச் சென்றுள்ள கொள்ளையர்களை பொலிஸார் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதன் போதே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்கள் அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

போதைவஸ்து குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வளிக்க தனியான சிறை

போதைப்பொருள் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட சிறைக் கைதிகளுக்குத் தனியான சிறைச்சாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளில் 40 வீதமானோர் போதைப் பொருள் பாவனையுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். அவர்களைத் தனியாகப் பிரித்து அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் சிறைச்சாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் 50 மலசலகூடங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் குழந்தைகளுடன் உள்ள பெண் சிறைக்கைதிகளுக்காக சகல வசதிகளையும் கொண்ட சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் வேலைத் திட்டங்கள் தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,

சிறைச்சாலைகள் கடந்த காலங்களில் வேறு ஒரு அமைச்சின் கீழ் இணைக் கப்பட்டு சிறியதாய் கண்ணோட்டத்திலேயே அவை பார்க்கப்பட்டன.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்கென தனியான அமைச்சொன்றை உருவாக்கி அதனை என்னிடம் கையளித்துள்ளார்.

அதற்கிணங்க சிறைச்சாலைகளை புனரமைக்கும் செயற்திட்டங்கள் பல தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறைக்கூடங்களுக்குள் இடம்பெறும் குற்றச்செயல்கள், தொலைபேசி பாவனைகள் பணப் புழக்கங்களைக் கட்டுப்படுத் துவதற்கான காத்திரமான வேலைத் திட்டங்களும் நதீமுறைப்படு த்தப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் இட நெருக்கடியே தற்போது பெரும் பிரச்சினையா கியுள்ளது.

11,000 பேரை வைக்கக்கூடிய இடத்தில் 23,000 பேரை அடைத்து வைக்கும் நிலை உள்ளது.

இந்த இடநெருக்கடி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி 14,500 பேரை குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பம்


யாழ். உயர் பாதுகாப்பு வலயமான வலிகாமம் வடக்கு பகுதியில் மீள் குடியேற்றத்துக்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டதாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

வலி வடக்கு பகுதியில் கீரிமலை, மாவட்டபுரம், கட்டுவன் பகுதியில் சுமார் 4146 குடும்பங்களைச் சேர்ந்த 14,500 பேரை மீளக்குடியமர்த்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். அரச அதிபர் தெரிவித்தார்.

இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். நகரில் பல்வேறு பகுதிகளில் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் பல வருடங்களாக தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்காக வலி வடக்கு பகுதிக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

திணைக்களங்கள், பொலிஸில் தாய்மொழியிலேயே கருமம்

இடைக்கால அறிக்கையில் நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சு



மோதல் நடைபெற்ற பிரதேச மக்கள் அரச திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் தமது அன்றாட செயற்பாடுகளை தமது தாய்மொழியிலேயே மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர் பான ஆணைக் குழு சிபார்சு செய்துள்ளது.

ஆணைக்குழு தமது இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. அவ்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் அதன் இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். அந்த இடைக்கால அறிக்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மோதல் இடம்பெற்ற பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் அப்பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விதந்துரைக்கப்பட்டுள்ளன.

தமது அன்றாட நடவடிக்கைகளை தமது தாய்மொழியிலேயே அம் மக்கள் மேற்கொள்வதுடன் குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை முன்வைக்கும்போது இந்நடைமுறையை கட்டாயமாக பின்பற்ற வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் மேற்படி ஆணைக்குழு அங்கத்தவர்களுக்குத் தெரிவித்துள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்படி நிர்வாக மாற்றங்கள் தொடர்பான சிபார்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், தனி நபர்கள் அமைப்புக்கள், உட்பட ஆணைக்குழு பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்களை ஆணைக்குழு விதந்துரைப்புச் செய்துள்ளது.

மேற்படி ஆணைக்குழு கொழும்பில் 14 அமர்வுகளையும் வவுனியாவில் 06 அமர்வுகளையும் நடாத்தியுள்ளதுடன் 16, 17, 18ம் திகதிகளில் கிளிநொச்சியிலும் அமர்வுகளை நடத்தவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...