பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
இலங்கையில் இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு டிசம்பருக்குள் மறு வாழ்வு அளிக்கப்பட்டு மறு குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்து இருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆனால் எனக்கு கிடைத்த தகவல்படி இப்போதும் 80 ஆயிரம் தமிழர்கள் இடம் பெயர்வு முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரசின் மறு வாழ்வு நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் மறுவாழ்வு பணிகள் மூலம் மறு குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள், நீதியின் அடைப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வுகள் அவசிய மாகிறது.
நீங்கள் இலங்கை அதிபரோடு நடத்த உள்ள சந்திப்பின் போது இந்த 2 பிரச்சினைகளையும் முக்கிய விஷயமாக எடுத்து வற்புறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
முகாம்களில் இருக்கும் தமிழர்கள் விரைவில் மறு குடியமர்த்தப்பட வேண்டியதின் அவசியம் பற்றியும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான மறு நிர்மான பணிகளை செய்வது குறித்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.