10 செப்டம்பர், 2010


பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி 450 கிராம் பாணின் விலை 3 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதெனவும் சங்கம் தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நவீன கையடக்க கைத்துப்பாக்கி பொலிஸாரால் கண்டுப் பிடிப்பு




இலங்கையில் இது வரை கண்டெடுக்கப்படாத மிகச் சிறிய, நவீனரக கையடக்க கைத்துப்பாக்கி ஒன்றை அளவத்துகொடை பொலிஸார் கண்டு பிடித்துள்ளதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் எல்.ரி.ரி.ஈ அமைப்போ அல்லது ஜே.வி.பி. குழுக்களோ பாவிக்காத சுமார் 3 முதல் 4 அங்குல நீளத்தையுடைய இக் கைத்துப்பாக்கி தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக அளவத்து கொடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அளவதுகொடைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அக்குறணை - துனுவில என்ற இடத்தில் ஒருவரைக் கைது செய்த போது அவர் இடைத் தரகராகத் தொழிற்பட்டு கலகெதரையைச் சேர்ந்த ஒருவருக்கு 29 0000 ரூபாவிற்கு அதை விற்பனை செய்யதுள்ளமை தெரிய வந்துள்ளது.

கம்பஹா, நிட்டம்புவ பகுதியிலுள்ள ஒரு நபர் பாதாளக் குழுத்தலைவர் ஒருவருக்கூடாக இவ்வியாபாரத்தை மேற்கொண்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது பாதாளக் குழுக்களின் மறைமுகக் கொடுக்கல் வாங்களாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக் கின்றனர். மேலதிக விசாரனைகள் இடம் பெறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஐதேகவின் 25 உறுப்பினர்கள் சுயேச்சை ஆசனத்தில் அமர முடிவு

ஐக்கியத் தேசியக் கட்சியை சேர்ந்த 25 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர்காளாக அமரப் போவதாக அறிவித்துள்ளனர்.

கட்சிக்குள் நிலவும் சர்ச்சைகளுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு காணாவிட்டால் இந்நடவடிக்கையைத் தாம் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

'ஈதுல்பித்ர்' - முஸ்லிம்களின் ஈகைத்திருநாள் இன்று முஸ்லிம் மக்கள் இன்று தமது நோன்புப் பெருநானைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.










நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம் இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

'ஈதுல்பித்ர்' என்பது பொதுவாக நோன்புப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? முழு உலக முஸ்லிம்களும் ஒருமாத காலம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து கொண்டாடும் பெருநாள் இது எனக் கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(றமழான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை.

அந்தவகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.

பொதுவாக முஸ்லிம்களின் கலண்டர் அல்லது மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர்.

அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது.

இதிலும் ஒரு முக்கிய நிபந்தனை பின்பற்றப்படுகிறது. வெற்றுக் கண்ணால் ஆகக் குறைந்தது இரு ஆண்கள் (4 கண்கள்) பிறையைக் கண்டால் மட்டுமே அந்நாட்டு மக்கள் மாதம் பிறந்ததாக ஏற்பர்.

மாநாட்டில் அறிவிப்பு

இதன்காரணமாகவே பெரிய பள்ளிவாயலில் பிறை பார்ப்பது தொடர்பாக மாநாடு நடத்தப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே அது அறிவிக்கப்படுகிறது.

அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை சுமார் 4.45 மணிமுதல் மாலை சுமார் 6.15 மணிவரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பானமோ உட்கொள்ளாமல் தான் நோன்பு நோற்கப்படுகிறது. உணவுத்தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி நீரோ சென்றடைவதில்லை.

அதுமட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.

இந்நாளில் மனக்கட்டுப்பாடும் அத்தியாவசியமாகிறது. பாவமான விடயங்களை, மனோ இச்சை தரக் கூடிய விடயங்களை, மனதால் கூட நினையாதிருத்தல் அவசியமாகும்.

இப்படியாக அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து, ஒருமாதம் கடத்துவது என்பது நல்ல பயிற்சி இன்றேல் சிரமமான காரியமாகும். அத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். தான தர்மங்கள் செய்யப்பட வேண்டும்.

'சதகத்துல் பித்ரா'

ஒருவருக்கு சுமார் 2 கிலோ 300 கிராம் எடை கொண்ட தானியம் வீதம் (அரிசி) கட்டாயம் ஏழைகளுக்கு வழங்கவேண்டும். இதுகட்டாயக் கடமையாகும். இதனை 'சதகத்துல் பித்ரா' என்பர்.

இவ்வாறு பிறருக்கு கொடுப்பதை அதிகமதிகமாக்கிய காரணத்தால் அல்லது ஈகையை வழியுறுத்துவதால் அதனை அடுத்து வரும் பெருநாளை 'ஈகைத் திருநாள்' என்ற பொருளோடு 'ஈதுல் பித்ர்' கொண்டாடப்படுகிறது.

இறைவனின் (அல்லாஹ்வின்) அன்பையும் பொருத்தத்தையும் நாடி ஒருமாத காலம் தமது அனைத்து சுகபோகங்ளையும் துறந்து அல்லது தியாகம் செய்து வாழ்ந்தார்களோ அதற்கான மகத்தான கூலி அந்த இறைவனிடமிருந்து கிடைக்கும் நாள்தான் இந்த நோன்புப் பெருநாளாகும். அதாவது இறைவன் தன் நல்லடியார்க்கு நரக விடுதலை அல்லது சுவர்க்கம் வழங்கும் தினமுமாகும்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை உலகவாழ்க்கை போலியானது என்றும் உண்மை வாழ்வு மரணத்தின் பின் உள்ளது என்றும் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனவே மரணத்தின் பின் உள்ள வாழ்வு சுவர்க்கமாக இருக்க வேண்டும் என்பதனால் நோற்ற நோன்புக்குக் கூலி வழங்கும் இந்நாள் நிச்சயம் அது பெருநாளாகத்தான் இருக்குமல்லவா?

அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை நிலைகுறித்து அறியத் தருமாறு இந்தியாவிடம் அமெ. கோரிக்கை

நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மூன்று தினங்களுக்கு முன் விடுத்துள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அந்த அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

செஞ்சிலுவைச் சங்க மன்னார் அலுவலகத்தை மூட உத்தேசம்

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகம் எதிர்வரும் நவம்பர் மாதம் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வருட காலமாக மன்னார் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது, செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்குப் பெரிதும் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வவுனியாவிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து உதவி செய்து வருகின்றது.

இறுதிக் கட்ட போர் சூழலையடுத்து, மனிதாபிமானப் பணிகளில், சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உதவி வழங்கும் பிரிவு பெரும்பணியாற்றி வந்ததாக அதன் இலங்கைத் தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அகதிக் கப்பலில் சென்ற ஒருவர் தடுத்துவைப்பு

கனடா சென்ற அகதிக் கப்பல் எம்வி சன் சீயில் இருந்தவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலி இயக்க உறுப் பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தடுத்து வைக்குமாறு கனடிய குடிவரவு, அகதிகள் சபை உத்தரவிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேற்ற வாசி, விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டதாக குறிப்பிடும் பத்திரிகை அறிக்கை ஒன்றை கனடிய எல்லை சேவை நிலையத்தின் சட்ட ஆலோசகர் முன்வைத்து சுனாமி நிவாரணத்திற்கென 12 ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்காக அனுப்பப்பட்ட தூதுக்குழுவில் சந்தேகநபரும் அடங்கியிருந்ததாக மேற்படி பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆரம்ப அடையாளம்காணும் நேர்காணலில், சந்தேகநபர் தாம் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என்பதையோ எந்தவித தூதுக்குழுவிலும் இடம்பெற்றதையோ இலங்கைக்கு வெளியே பயணித்ததையோ நிராகரித்தார் என்று சட்ட ஆலோசகர் பிறிபேர்க் தெரிவித்தார்.

ஊடக அறிக்கையை சந்தேகநபருக்கு காண்பித்த போது தாம் ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றதை ஒப்புக்கொண்ட அவர், ஊடகக் குழு ஒன்றின் உறுப்பினராகவே தாம் அங்கு சென்றதாக கூறினார்.492 தமிழ் குடியேற்றவாசிகளில் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலாவது நபர் இவரே ஆவார்.

ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி அகதிக் கப்பல் அங்கு போய்ச் சேர்ந்ததிலிருந்து மூன்றாவது தடவையாக தடுப்புக் காவல் சோதனைக்கு உட்படுத்தப்படும் முதல் தொகுதியினர் மத்தியில் இவரும் ஒருவராவார். மேப்பிள் றிட்ஜிலுள்ள பிறேஸர் பிராந்திய சீர்திருத்த நிலையத்தில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விசாரணையின் போது சந்தேக நபர் பேசும்படி கோரப்படவில்லை. ஆனால், அவர் சார்பில் சட்ட ஆலோசகர் அன்ரியா ஷிராக் வாதாடினார். பத்திரிகை அறிக்கையில் சந்தேக நபர் இலங்கையர்களுடன் பயணித்தார் என்று இருக்கிறதே தவிர அவர் விடுதலைப்புலி உறுப்பினர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று செல்வி ஷிராக் எடுத்துக் கூறினார். 30 நாட்களில் மற்றமொரு விசாரணைக்காக அவரை தொடர்ந்து தடுத்து வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புதியதோர் தேசத்தை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்:ஜனாதிபதி

ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம், நிறைந்த புதியதோர் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன் என ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:இஸ்லாமிய நாட்காட்டியில் மேன்மைமிகு மாதமான றமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. புனித அல்குர் ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையை ஒரு மாத காலமாக நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்ளும் நாள் இதுவாகும்.

இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமயங்கள், இனங்களைச் சேர்ந்த சகோதரர்களோடு மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். பயங்கரவாத பிரச்சினையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் எதிர்வரும் காலங்களில் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முஸ்லிம் சமூகத்தினது பெறுமதியான பங்களிப்புக்களை இலங்கை பெற்றுக் கொள்ளும் என நான் நம்புகின்றேன்.

நாடெங்கிலும் வாழும் எல்லா முஸ்லிம்களும் இந்த பெருநாளை மிகவும் சந்தோசத்தோடு கொண்டாடும் வகையில் நாட்டில் இன்று அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத பிரச்சினைகளால் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட்டு வருகின்றனர். இது அவர்கள் தங்களது பாரம்பரிய, சமய நடவடிக்கைகளில் புத்துணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகின்றது.

இந்த விசேட சந்தர்ப்பத்தில் ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்வுதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் மகிழ்சிகரமான எனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
மேலும் இங்கே தொடர்க...