16 டிசம்பர், 2010

அவசரகால சட்டவிதிகள் தளர்த்தப்பட வேண்டும்: அமெரிக்கா கோரிக்கை

இலங்கையில் அவசரகாலச் சட்ட விதிகள் தளர்த்தப்படுவதுடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும். மிக முக்கியமான விடயமாக, வடக்கில் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைமுறை தலைவர்கள் உருவாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதகாக மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான வெளிவிவகார உதவிச் செயலர் ரொபர்ட் ஒ பிளேக் தெரிவித்தார்.

இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுடன் வாஷிங்டனில் இருந்து நேற்று மாலை நடத்திய தொலைமாநாட்டின் போது எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்கா இலங்கை மக்களின் நண்பனாகவே எப்போதும் திகழ்வதாக இலங்கை தொடர்பாக தனது அறிமுகத்தை வெளிப்படுத்திய ரொபர்ட் ஓ பிளேக், யுத்தத்திற்கு பிந்தியதான இலங்கை மக்களின் மாற்றத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகக் கூறினார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்துவருவதாகக் குறிப்பிட்ட பிளேக், அதன் பெறுபேறுகளுக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதன் பரிந்துரைகள் இலங்கையில் பொறுப்புக் கூறும் தன்மை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஆவன செய்யும் என எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் நிறைவின் பின்னர் சர்வதேசம், குறிப்பாக அமெரிக்கா இலங்கையில் நல்லிணக்கத்தின் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்ற நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்? இது தொடர்பாக அமெரிக்காவுக்குள்ள கரிசனைகள் எவை என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளிவிவகார உதவிச்செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், அமெரிக்கா இலங்கையின் நீண்டகால நண்பனான உள்ளது. இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இயன்ற வரையில் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து, அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கின்ற அதேவேளையில், மேலும் பல விடயங்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவுள்ளன.

இடம்பெயர்ந்தவர்களில் அநேகமானவர்கள் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களது ஏனைய தேவைகள் தொடர்பிலும் அவதா னம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

எஞ்சியுள்ளவர்கள் அனைவரதும் முழுமையான விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். தமது அன்புக்குரியவர்களின் கதியை மக்கள் அறிந்துகொள்வது முக்கியமானதாகும். யார் யார் முகாம்களில் உள்ளனர்? யார் யார் விடுவிக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன போன்ற விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதனைத் தவிர, மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்ட விதிகள் தளர்த்தப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும். மிக முக்கியமான விடயமாக, வடக்கில் மாகாண சபைக்கான புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலமாக புதிய தலை முறைத் தலைவர்கள் அவர்களிடையே உருவாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும். வடக்கை இலங்கையின் ஏனைய பாகங்களுடன் ஒன்றிணைக்கின்ற செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

இந்தத் தொலைமாநாட்டில் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதென உண்மையில் அமெரிக்கா கருதுகின்றதா? இதற்கான விசாரணைகளை வலியுறுத்துகின்றதா என முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரொபர்ட் ஓ பிளேக்.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அமெரிக்கா அவதானித்துக்கொண்டிருக்கின்றது. அந்தக் குழு தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...


நேபாளத்தில் விமான விபத்து: 22 பேர் பலி
நேபாளத்தில் நேற்று இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தொன்றில் அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சிறிய ரக பயணிகள் விமானமான 'டாரா எயார் டி.எச்.சி- 6 டுவின் ஒட்டர்' கிழக்கு நேபாள கிராமமான லமிடண்டாவிலிருந்து காத்மண்டுவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது மலைப்பாங்கான இடமொன்றில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று காணமல் போன இவ்விமானத்தைக் கண்டறிய பாரிய தேடுதல்கள் நடைபெற்றன.

இந்நிலையிலேயே இன்றுகாலை காத்மண்டுவிற்கு சுமார் 150 கிலோமீற்றர் தொலைவில் விபத்துக்குள்ளான இவ்விமானத்தினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

19 பயணிகளுடனும் 3 விமானப்பணியாளர்களுடம் இவ்விமானம் பயணித்துள்ளது. இதில் ஒருவர் அமெரிக்கர் என்பதுடன் மற்றையவர்கள் நேபாளிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் இந்து யாத்திரிகர்கள் எனவும் இவர்கள் தங்களது புனித யாத்திரையின் பின்னர் திரும்பியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தீவிரவாதத்துக்கான ஆதரவை இங்கிலாந்து அரசு இல்லாதொழிக்க வேண்டும்: ஜனசெத பெரமுன

இங்கிலாந்து அரசாங்கம் தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி தீவிரவாத்தை ஒழிக்க வேண்டும் என ஜனசெத பெரமுன தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்கு எதிராக இன்று காலை 10 மணியளவில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனசெத பெரமுனவின் தலைவர் சோமனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் சமாதானம் நிலவுவதோடு, எமக்கு தேவையானவையும் உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரவாதத்தை ஒழித்தது போன்று நாட்டில் தற்போது உள்ள பொருளாதார பிரச்சினையும் தீர்த்து நாட்டில் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து, அதன் செயற்பாடுகளை இல்லாதொழிக்க வேண்டும். மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. எனவே பயங்கரவாத்துக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மத்திய வங்கியில் விமானப் படையினர் ஒத்திகை

இலங்கை மத்தியவங்கியின் மீது மீண்டுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்கொள்வது குறித்து இலங்கை விமானப்படையின் தீயணைப்புப் படைப்பிரிவினர் தற்போது ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள்.

விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் தீயணைப்புக் கருவிகளுடன் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் சற்றுமுன் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

சங்கானையில் வாள்வெட்டுக்கு இலக்காகிய குருக்கள் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சங்கானையில் கடந்த 11 ஆம் திகதி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குருக்கள்மார் மூவரில் ஒருவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சங்கானை இலுப்பைத் தாழ்வு முருகன் ஆலய பூசாரிகளான சி.நித்தியானந்தக் குருக்கள் (வயது - 57), அவரது மகன்களான ஜெகானந்தசர்மா (வயது - 26), சிவானந்த சர்மா (வயது-32) என்பவர்களே மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சி.நித்தியானந்தக் குருக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் வேலைக்குப் போவதாக கூறி சென்ற இளம் பெண்ணைக் காணவில்லை

வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இளம்பெண் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் வவுனியா பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

வவுனியா கச்சேரியில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜெயசீலன் ஜெயப்பிரவீணா (வயது 27) என்ற இளம் பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சைக்கிளில் இவர் புறப்பட்டுச் சென்றதாகவும் ஆயினும் அன்று காலை 9.30 மணியளவில் அவர் வேலைக்குச் சமுகமளிக்கவில்லை என கச்சேரியில் இருந்து தனக்குத் தகவல் கிடைத்ததையடுத்து தனது மகளைத் தேடிப்பார்த்ததாகவும் எனினும் அவர் எங்கு சென்றார்.

அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலிருப்பதாகவும் காணாமல் போயுள்ள இளம்பெண்ணின் தாயராகிய மகேந்திரராணி ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சேமமடுவைச் சொந்த இடமாகக் கொண்ட இவர்கள் வவுனியா குருமண்காட்டில் நீண்டகாலமாக வசித்து வருகின்றார்கள் என்பதும் காணாமல் போயுள்ளவர் கடந்த நான்கு வருடங்களாக வவுனியா கச்சேரியில் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்தவர்களினால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போன இளைஞனும் சேமமடுவைச் சேர்ந்தவர் என்றும் சேமமடு இரண்டாம் யுனிட்டில் முன்னர் வசித்து வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனும் யுவதியுமாகிய இவர்கள் இருவரும் இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து இங்குள்ள மக்கள் மத்தியில் ஒருவித பதற்ற நிலைமையும் இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பு மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வசிக்கமுடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேற முடியாது?

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முன்னர் விரட்டப்பட்ட சிங்கள மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றவேண்டும்.

நாட்டில் எப் பகுதியிலும் எந்தவொரு மக்களும் வாழும் சூழல் ஏற்படவேண்டும்.

வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் குடியேற முடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேற முடியாது என்று வினவுகின்றோம் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் முன்கொண்டு செல்லும் வேலைத்திட்டங்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி முறைமை குறித்து சிந்தித்துக்கொண்டு இருக்கலாம்.

ஆனால் அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழ் மக்களை பொறுத்தவரை தற்போதைக்கு மீள்குடியேற்றம், கல்வி, நீர், போக்குவரத்து வசதி, உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவே தேவைப்படுகின்றன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை செய்துகொடுக்கும் நோக்கில் அரசாங்கம் பாரிய நிதியை செலவிட்டுவருகின்றது. எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சனம் செய்துகொண்டிருக்காமல் மக்களின் நல்வாழ்வுக்காக இவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து செயற்படவேண்டும்.

தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூறவேண்டும்.

இதேவேளை தமிழ் மக்களுடன் சிங்கள மக்கள் மிகவும் சுமுகமான உறவினையே பேணி வருகின்றனர். மக்கள் சமூகங்களுக்கு இடையில் ஒருபோதும் பிரிவினைகள் வந்ததில்லை. புலிகள் தான் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்தனர்.

வடக்கிலிருந்து முன்னர் விரட்டப்பட்ட சிங்கள மக்கள் முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களின் இடங்களில் மீள்குடியேற்றப்படவேண்டும். இல்லாவிட்டால் குழப்பங்கள் ஏற்படலாம். மேலும் யாரும் எந்த இடத்திலும் வசிக்கும் உரிமை இருக்கவேண்டியது அவசியமாகும்.

மேல் மாகாணத்தில் ஐந்து இலட்சம் தமிழ் மக்களினால் வசிக்க முடியுமானால் ஏன் வடக்கில் சிங்கள மக்களால் வசிக்கவோ குடியேறவோ முடியாது? எனவே யார் விரும்பினாலும் வடக்கில் குடியேறலாம். யார் வேண்டுமானாலும் தெற்கில் குடியேறலாம். வெள்ளவத்தையில் காலியில் மாத்தறையில் தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் பட்டப்பகலில் மூவர் மீது வாள்வெட்டு

யாழ். நகரின் மத்திய பகுதியில் இடம் பெற்ற கைகலப் பின்போது மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பஸ் நிலையப் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. யாழ் பஸ் நிலையப் பகுதியில் பிச்சையெடுத்துவரும் கணவனும் மனைவியும் மற்றும் மனைவியின் தாயாருக்கும் மேலும் சிலருக்குமிடையில் ஏற்பட்ட கருத்துமோதல்கள் முற்றி வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின்போரில் அவரின் மனைவியையும் அவரின் கைக்குழந்தையையும் தாயாரையும் கைதுசெய்தனர். மேலும் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு - அம்பாறை எல்லைப் பிரச்சினையை தீர்க்குமாறு செல்வராசா எம்.பி. கோரிக்கை

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரச்சினையை விரைவில் தீர்த்துவைத்த உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காராசாரமான விவாதங்களுடன் இந்த வருடத்துக்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான மகளிர் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா,

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரச்சினை மிக நீண்டகாலமாக தொன்று தொட்டு வருகின்றது. இதனை தீர்த்துவைக்க எந்தவிதமான நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட எல்லைக்கல் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ள துரதிர்ஸ்டவசமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இது இவ்வாறு நீண்டுகொண்டே செல்லுமானால் அது இரு கிராமத்துக்கிடையிலான முறுகல் நிலையை தோற்றுவிக்கும்.

எனவே இந்த பிரச்சினையை மிக விரைவில் தீர்த்துவைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் இந்த விடயங்கள் குறித்து ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் இதனை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

அதற்கு முன்னோடியாக இரண்டு மாவட்ட செயலர்களும் இது தொடர்பில் சந்தித்து இந்த முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்தி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்று எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லையெனவும் அதுதொடர்பில் நில அளவைகளின் ஒத்துழைப்புடன் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

A(H1, N1) இன்புளுவென்ஸா வைரஸ் மீண்டும் தீவிரம்: தடுப்பு மருந்தை தாமதியாமல் வழங்க பணிப்புபுதிய இன்புளுவென்ஸா, ஏ (எச் 1 என்1) வைரஸ் நோய் நாடு முழுவது அதிகளவில் பரவிவருவதால் இந்நோய் தொற்றக்கூடிய அச்சுறுத்தலுக்குரிய வகையினருக்கு உடனடியாக தாமதியாமல் தடுப்பு மருந்தை பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சகல மாகாண சுகாதார அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) நோய் நாடெங்கிலும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற் காகவும், குறிப்பாக இந்நோயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கும் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை பெற்றுக் கொடுப்பது மிக அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நோயின் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்நோய்க்குரிய ஒரு தொகுதி தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத் துறை ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், துறைமுக மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சுற்றுலா கைத்தொழில் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று செல்வோர் நீரிழிவு, இருதய, சிறுநீரக, நுரையீரல், ஆஸ்துமா நோயாளர்கள், கர்ப்பிணிகள் உட்பட இந்நோயின் அச்சுறுத்தலை எதிர் கொண்டிருக்கும் சகலருக்கும் இந்நோயைத் தவிர்ப்பதற்கான தடுப்பு மருந்தை பெற் றுக்கொடுக்குமாறு அமைச்சர் அறி வுறுத்தியுள்ளார்.

இந்நடவடிக்கையைத் தாமதியாது பிரதேச மட்டத்திலுள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்திருப்பதாவது, புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) நோய் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றது.

தற்போது இலங்கையின் நாலாபுறமும் இந்நோய் பரவி இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒரு குறுகிய காலப் பகுதிக்குள் சுமார் 300 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இந்நோயின் பாதிப்பிலிருந்து தவிர்ந்துகொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவை பிரதேச மட்டத்தில் உள்ள மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இதேநேரம் அரசாங்க சுகாதாரத் துறை ஊழியர்கள் சகலருக்கும் இந்நோய் தொடர்பாக அறிவூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடிமன், காய்ச்சல், இருமல், உடல்வலி போன்றவாறான அறிகுறிகளை மூன்று நாட்களுக்கு மேல் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுவதும், வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுவதும் அவசியம் என்று நோய் பரவல் தடுப்பு பிரிவின் மருத்துவ நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரச அதிகாரிகளின் தீர்மானங்களில் அரசாங்கம் பக்கபலமாக இருக்கும்

“அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும்"

அரச அதிகாரிகள் மேற்கொள் ளும் நியாயமான தீர்மானங்களில் அரசாங்கம் எப்போதும் பக்க பலமாக இருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அரச நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி; சரியோ பிழையோ நியாயபூர்வமாக அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளின் பின்புலத்தில் முழு அரசாங்கமும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

“மக்கள் சேவை மகேசன் சேவை" என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி; வரலாற்றில் பதிவு செய்யப்படும் வகையில் அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் அதுவே நாட்டுக்கும் மக்களுக்குமான சேவையாகும் எனவும் தெரிவித்தார்.

அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 135 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், புதிய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான முதற்படியாக நிர்வாக சேவை உத்தியோகத்தர் பதவி அமைகிறது.

புதிதாக நியமனம் பெறுவோர் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனைவரை சுதந்திரமாக சென்று பணிபுரியும் வகையில் நாட்டில் சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இனம், மதம் என்ற பேதங்களைக் கடந்து நாட்டின் சகல மக்களுக்கும் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது புதிய உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.

பல்வேறு பிரச்சினைகளுடன் கண்ணீரோடு வரும் மக்களை மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும். எனது தந்தையார் அரசியலில் இருந்த காலத்தில் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அரசியல் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மக்களை தமது காரில் ஏற்றிச் சென்று சம்பந்தப்பட்டோரை நேரில் பார்த்து உடனடியாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தனர்.

அன்றைய அதிகாரிகள், தலைவர்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்டனர். மக்கள் சேவைக்கு இது மிக முக்கியமாகும். நீங்களும் மக்களை நெருங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குக் காலங்கடத்தாமல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அவசியம். மக்கள் மனதில் பதியக்கூடிய வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும்.

ஒரு கணிப்பீட்டின் படி 7 மணியும் 45 நிமிடங்களையும் கொண்ட நாளொன்றுக்கான சேவை நேரத்தில் 3 மணி 20 நிமிட சேவைதான் அரச அலுவலகங்களில் இப்போது நடைபெறுகிறது. இது நியாயமானதா என்பதை அரச உத்தியோகத்தர்களே மனதில் கையை வைத்துச் சொல்லட்டும்.

24 மணி நேரமும் மக்கள் சேவையில் தம்மைப் பிணைத்துக் கொண்டு உழைத்த பல அதிகாரிகளையும் இங்கு குறிப்பிட முடியும். சுனாமி வேளையில் மாத்தறை பகுதியில் ‘சோர்ட்ஸ்’ அணிந்து கொண்டு அரச அதிபர்கள் நேர காலம் பாராது நள்ளிரவிலும் செயற்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பிடிக்கும் வகையில் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வுபெற்ற பின்னரும் உங்கள் பெயர் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும்.

மக்களுக்காக நீங்கள் எடுக்கும் நியாயமான தீர்மானங்களுக்கு முழு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கும். உங்களைப் பாதுகாப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுக்கு உங்களால் கிடைக்க வேண்டிய சேவையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய உணர்வு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும், தேசிய கீதத்துக்கு கெளரவமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும். அதற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு சமூகம் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

தேசத்துரோக சக்திகள் உருவாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை - இராணுவத் தளபதி

சர்வதேச ரீதியில் எந்தவித சக்திகள் தலைதூக்கிய போதிலும் இலங்கைக்குள் மீண்டும் தேசத்துரோக சக்திகள் உருவாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை இராணுவ தளபதி என்ற வகையில் பொறுப்புடன் கூறிக் கொள்வதாக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கவச வாகனங்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ கவச படையின் 55வது ஆண்டு பூர்த்தி விழா மோதரையிலுள்ள இராணுவ கவச வாகன தலைமையகமான “ரொக் ஹவுஸ்" முகாமில் நேற்று இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு வழங்கப்பட்ட விசேட மரியாதை

அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட இராணுவத் தளபதி இங்கு கூடியிருந்த உயர் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் மத்தியில் மேலும் உரையாற்றுகையில், யுத்த நிலைமைக்கு பின்னர் நாட்டில் உள்ள அனைத்து இனத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அழிந்து போன மக்கள் வாழ்க்கையை நாம் காப்பாற்றிக் கொடுத்தது போன்று மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய நம்பிக்கை எழுந்துள்ளது.

மக்கள் மத்தியில் எழுந்து வரும் நம் பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டிய காலம் எழுந் துள்ளது. யுத்தம் முடிவுற்று முழு இலங் கையும் ஐக்கியப்பட்டுள்ள நிலை யில் எதிர்காலத்தில் முன்னரைவிட சவால்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நாட்டை கட்டியெ ழுப்புவதன் ஊடாக இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்று வதற்கு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவருக்கும் பாரிய பொறுப்புள்ளது என்பதை நான் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.

மனிதாபிமான நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்ததன் மூலம் பயங்கரவாதிகளிடம் சிக்கி பாதிக்கப் பட்ட மக்களை நாம் மீட்டெடு த்தோம். அந்த மக்களை பாதுகாப் பதுடன், அபிவிருத்திகளை உயர் மட்டத்திற்கு எடுத்தச் செல்வது அனை த்து படை வீரர்களினதும் கடமையாகும்.

தேசத்தை கட்டியெழுப்பும் அதே சமயத்தில், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு படை வீரர்களான நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண் டும். அதற்காக அனைத்து படைவீரர் களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக பாதுகாப் புச் செயலாளர் கோத்தாபய ராஜ பக்ஷவினால் வழங்கப்படும் வழி காட்டல் இராணுவத்திற்கு மாபெ ரும் சக்தியாகும்.

எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுக்க இராணுவம் மேலும் பலமடைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

இராணுவத்தை மேலும் பலப் படுத்தும் வகையில் ரஷ்யாவிலிருந்து நவீன கவச வாகனங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார் த்தை நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பலப்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கு கவச படை பிரிவைச் சேர்ந்த படை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது எனது எதிர்பார் ப்பாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரதமர் சிங், சிதம்பரம், கருணாநிதியை கொலை செய்ய புலிகள் திட்டம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வரவிருந்த நிலையில், புலிகள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியிரு ந்தனர் என தெரியவந்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதி வழியாக புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தமிழக காவல்துறையும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியிருந்ததாகவும் காவல்துறை மற்றும் உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமர் மட்டுமல்லாது வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் புலிகளின் கண்காணிப்பு வலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு டிஜிபி லத்தீகா சரண்; “இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
முன்னெச்சரிக் கையுடன் இருக்கிறோம்" என்றார்.

“இப்படியான செய்திகள் வருகிறதோ இல்லையோ அதிமுக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பை நாம் எப்போதும் பலப்படுத்தியே வைத்துள்ளோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க நாடு முழுவதிலும் பாதுகாப்பு கெமரா டிசம்பர் 21ல் ஆரம்பித்து வைப்பு

பாதாள
உலகக் குற்றவாளிகள், திருட்டுக் கும்பல், கப்பம் பெறுவோர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோரை மடக்கிப் பிடிப்பதற்கு கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இந்த முறைமை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க இலங்கையிலும் பயன்படுத்தப்படவுள்ளன.

தற்போது கொழும்பு நகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் பொருத்தப் பட்டுள்ள கெமராக்கள் எதிர்வரும் 21ம் திகதி பி.. 1.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக இயங்குவதற்கு ஏற்ற வகையில் ஆரம்பித்து வைக்கப்படும். இந்தப் பாதுகாப்பு கெமரா பொருத்தும் திட்டம் இதற்கு பல வருடங்களுக்கு முன்னர் முன் மொழியப்பட்ட போதிலும் அதற்காக செலவாகும் தொகை அதிகமாகக் காணப் பட்டமையால் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

எனினும், பல்வேறு குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும் நாட்டிலே குற்றச் செயல்கள் இடம்பெறு வதை முற்றாகத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வலியுறுத்துகின்றார். இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற எச்.எஸ்.பீ.சி. வங்கியில் 7 கோடி ரூபா கொள்ளை உட்பட நாட்டிலே நிகழ்ந்த பாரிய கொள்ளைகள் தொடர்பான சூத்திரதாரிகளை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கான காரணம் பாதுகாப்புத் துறையினரிடம் சிக்காது பல உபாயங்களை திருட்டுத்தனமாக பாவித்து செயற்படுவ தாகும். எனினும், பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட்டதன் பின்னர் நாள் முழுவதிலும் அனைத்து விடயங்களும் வீடியோவில் பதிவாகும்.

கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் திட்டமானது, அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதிற்கும் விஸ்தரிக்கப்படும். இந்த பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட்டதன் பின்னர் இதனை கண்காணிப்பதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...