யாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் குறைபாடுகளை நிவர்த்திப்பதுடன் தாதியர் பற்றாக்குறை மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது யாழ். போதனா வைத்தியசாலைக்கென சிற்றூழியர்களை நியமித்தல், சுத்திகரிப்புச் சேவையின் குறைபாடுகள், சமையலறைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைப் பெற்றுக் கொள்ளல், சமையலறையில் விறகு உபயோகத்தைத் தவிர்த்து எரிவாயு பயன்படுத்துதல், பராமரிப்புப் பகுதி ஒன்றை ஏற்படுத்துதல், விடுதி எழுதுநர்களுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொள்ளல் வைத்தியசாலையின் பழைய பொருட்களை அகற்றுதல், தாதிய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை, வெளிநோயாளர் பகுதியை நோயாளர்களது வசதி கருதி விரிவாக்குதல், விடுதி வசதி, வைத்தியசாலையின் மேலதிகத் தேவைகளுக்காக காணி வசதியைப் பெற்றுக் கொள்ளல், அதிகாரிகளுக்கான வாகன வசதிகள், தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
போதனா வைத்தியசாலையின் பராமரிப்புச் செலவுக்கென 01 மில்லியன் ரூபாவை ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் விடுதி எழுதுநர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
கொழும்பிலிருந்து விசேட குழுவொன்றை அனுப்பி வைத்தியசாலைகளிலுள்ள பழைய பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதென்றும் தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர்களுக்கான விடுதி அமைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கும் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொண்டதன் பயனாகவும் அங்குள்ள பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடல்களின் மூலமும் மேற்படி தேவைகள் மற்றும் குறைபாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரிசிறி, சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி வைத்திய கலாநிதி ரவிராஜ், தாதியர் சங்கப் பிரதிநிதிகள், தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக