இடம்பெயர்ந்த வாக்காளர்கள், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கென கூடுதலானோர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலைவிட பொதுத் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை இரு மடங்காகுமென்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி பிதினகரனுபீக்குத் தெரிவித்தார்.
வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம் முதலான பிரதேசங்களில் வாழும் மக்களே இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க சுமார் 26 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஆனால், பொதுத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக மேலதிக ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை அமைப்பதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். வேட்பாளர் ஒருவர் மாவட்டமொன்றில் ஒரு மத்திய அலுவலகத்தையும் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஓர் அலுவலகம் வீதமும் அமைத்துச் செயற்பட முடியும். எனினும், இந்த அலுவலகங்களை தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் எட்டாந் திகதி நள்ளிரவு வரையே நடத்த முடியும். அதன்பின் மூடிவிட வேண்டும். கிளை அலுவலகங்கள் ஆறாந் திகதி நள்ளிரவு வரையே நடத்தப்பட முடியும். எனினும், வேட்பாளர் தனது இல்லத்தில் ஓர் அலுவலகத்தை ஆறாந் திகதி நள்ளிரவுக்கும் எட்டாந் திகதி நள்ளிரவுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் எந்தவொரு தேர்தல் பிரசார அலுவலகத்தையும் அமைக்கக் கூடாது என்பது சட்டமாகும்.
தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது