13 அக்டோபர், 2010

மீள்குடியேற்ற பகுதியில் மற்றொரு வயோதிபர் யானை தாக்கி பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் தனது உயிரை காட்டு யானைக்கு பலி கொடுத்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற 70 வயது விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார்.

இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் : பிரபாவுக்கு மனோ மீண்டும் காலக்கெடு

எமது கட்சயில் இருந்து எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.

இது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திருத்தி கொள்வதற்கு பிரபா கணேசன் எம்பிக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதுமானதாகும்.

இந்நிலையில் எமது கட்சியின் நிலைப்பாடுகளை உதாசீனம் செய்து தன்னிச்சையாக ஒழுங்கை மீறுபவர்கள் மீது உறுதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கட்சியை உதாசீனம் செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது.

இந்நிலையில் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முடிவின்படி கட்சி அங்கத்துவத்திலிருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டு பிரபா கணேசனுக்கு இன்று கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஷிராந்தி ராஜபக்ஷ - மலேஷிய ராணி நேற்று சந்திப்பு

இலங்கை முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று மலேஷிய ராணி டுவான்கு நுர் ஸஹிரனை நேற்று மாலை சந்தித்தார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாரா ராஜ மாளிகையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.

ஷிராந்தி ராஜபக்ஷ முதல் பெண்மணிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ள மலேஷியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் இலங்கையர் கைது : கனேடியத் தமிழர் பேரவை கவலை

தாய்லாந்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட 155 இலங்கையரின் நிலை தொடர்பாக கனேடியத் தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அகதிளுக்கான சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புத் தேவைப்படும் அகதிகள் என்றே நம்பப்படுகின்றது. மீண்டும் தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படின் அவர்கள் அங்கு துன்புறுத்தல்களுக்கு ஆளாகக் கூடும். இதே அச்சம் அவர்களுக்கும் உள்ளது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் வதைகளுக்கு எதிரான சட்டத்தின் பிரகாரம் கனடாவுக்கு உள்ள கடப்பாட்டை மீறுவதாக உள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்ததிலிருந்து பாதுகாப்புத் தேடி தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புகலிடம் கோரிய ஒரு நாடாக தாய்லாந்து இருந்து வந்தது. இவர்களில் கூடுதலான தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கைது தொடர்பான விபரங்கள் சரிவர வெளிவராத நிலையில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் கனேடியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு, தாய்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

"பன்னாட்டுப் பாதுகாப்பை வேண்டி நிற்கும் உண்மையான அகதிகளின் கைது தொடர்பான செய்தி எங்களுக்கு மிகவும் கவலை தருவதாக உள்ளது. இந்தக் கைதில் கனேடிய அரசாங்கத்தின் பங்கு இருக்குமாயின், நாம் மிகுந்த கவலையடைவோம் என்று குறிப்பிட்டார் கனேடியத் தமிழர் பேரவையின் தேசிய மட்டப் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை.

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் நியாயமாகவும், நீதியாகவும் நடத்தப்படுவதுடன் இலங்கைக்கு அனுப்பப்படுவதன் மூலம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடும் என்பதனால் அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதை உறுதி செய்வதற்காக பல்வேறு மனிதாபிமான நிறுவனங்களையும் கனேடியத் தமிழர் பேரவை தொடர்பு கொண்டுள்ளது.

கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள அகதிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் கனேடியத் தமிழர் பேரவை குரல் கொடுத்து வருகிறது.

மேலதிக விபரங்களுக்குஇ 416.240.0078 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்குக் கடல் அட்டை கடத்த முயன்ற இருவர் கீழக்கரையில் கைது

கீழக்கரை அருகே, இலங்கைக்குக் கடத்துவதற்காக, கடல் அட்டைகளைப் பதப்படுத்திய இருவரை, பொலிசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகளை, இலங்கைக்கு கடத்துவதற்காக, கீழக்கரை அருகே வண்ணாங்குண்டில் பதப்படுத்தி வருவதாக, ராமநாதபுரம் கியூபிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கென்னடி தலைமையில் பொலிசார், வண்ணாங்குண்டு மஹபூபா என்பவரது தோப்பில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மண்டபம் மீனவர்கள் அப்தாகீர்(48), அப்துல்லா(32) ஆகியோரை விசாரித்ததில், மண்டபத்தில் இருந்து கடல் அட்டைகளைக் கடத்தி வந்ததாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து 120 கிலோ கடல் அட்டை, பதப்படுத்தப் பயன்படுத்திய உபகரணங்களைப் பறிமுதல் செய்த பொலிசார், கீழக்கரை வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் செயல்களுக்கு மன்னிப்புக் கிடையாது:விஜித்த ஹேரத்




நாட்டில் அரசாங்கம் செய்யும் துரோகச் செயல்களுக்கு பொதுமக்களிடம் இருந்து ஒரு போதும் மன்னிப்பு கிடைக்காது. எனவே அரசாங்கம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை அதிகரிக்கும்போது அதற்கான பின் விளைவுகளை பொது மக்களிடமிருந்து சந்திக்க நேரிடும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவோ அவரது குடும்பத்தாரோ அல்லது கட்சி உறுப்பினர்களோ ஒரு போதும் அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. ஆனால் அரசாங்கத்தால் தொடர்ந்தும சரத் பொன்சேகாவை சிறையிலடைத்து வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்திய விஜித்த ஹேரத் எம்.பி. கூறுகையில்,.

"கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் நாட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளும் மனித உரிமை மீறல் சம்பவங்களும் மேலோங்கி காணப்பட்டன. யுத்தத்தின் பின்னரும் இந்நிலை மாற்றமடையவில்லை. நாடு தொடர்பாக அல்லது மக்கள் தொடர்பான சிந்தனைகளில் இருந்து விலகி சுயநல போக்குடனேயே அரசு செயற்பட்டது. இதனால் நாட்டில் பாரியளவிலான ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.

பொது மக்களுக்கு அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளாகி விட்டன. 2500 ரூபா சம்பள உயர்வு, பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை 6 மாதத்திற்குள் மீள் குடியமர்த்தல் உட்பட இன்னோரன்ன வாக்குறுதிகளை மறந்தும் மீறியும் அரசாங்கம் செயற்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சரத் பொன்சேகாவை சிறை வைத்து கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளதுடன் தான் எவ்விதமான தவறும் செய்யாத நிரபராதியைப் போல் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் தவறுகளைப் பட்டியலிட்டால் மன்னிப்பே வழங்க முடியாது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவானது வெறும் கண்துடைப்பாக அமைந்து விடக்கூடாது:த.தே.கூ

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெறுமனே கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது. எதிர்பார்ப்புகளுடன் சாட்சியமளிக்கின்ற மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வது அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவினால் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெரும்பாலான தமிழ் மக்கள் சாட்சியமளித்த அதேவேளை மனுக்களையும் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு இதற்கு முன்னரும் பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த ஆணைக்குழுக்களும் அதன் செயற்பாடுகளும் இறுதியில் புஸ்வாணமானதை நாம் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஆணைக்குழுக்களினூடாக மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை.

இந்நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கானது என்ற தொனியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தமும் நிறைவடைந்து மக்களும் இழப்புக்களைச் சந்தித்து நொந்து போயுள்ள நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவில் எமது மக்கள் பெரும் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மிகவும் ஆர்வமாக சாட்சியமளித்து வருகின்றனர். எனவே மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியமானது.

நமது உறவுகளைத் தொலைத்து நிற்கின்றவர்களின் நிலைமைகளை இவ்வாணைக்குழுவும் அரசாங்கமும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

எனவே முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போல் அல்லாது தற்போதைய கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். மாறாக இதுவும் ஒரு கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது என்பதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மஹிந்த சந்திக்க ஏற்பாடு



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நாளை இடம் பெறவுள்ளது. இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று மாலை ஜனாதிபதி புதுடில்லி நோக்கி பயணமாகவுள்ளார்.

இவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸும் செல்கின்றார். புதுடில்லியில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், வெளிநாட்டு இந்திய அலுவல்களுக்கான அமைச்சர் ஸ்ரீ வாயலர் ரவி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ ஆனந்த சர்மா, மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் ஸ்ரீ கபில் சிபால், உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை மறுதினம் புதுடில்லியில் உள்ள ஒக்சேவர் றிசேச் பவுண்டேசனில் தர்மஸ்தாபன நாள் எனும் தலைப்பிலும், அமைச்சர் பீரிஸ் உரையாற்றவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த மாதம் 19ஆம் திகதிக்குப் பின் புதிய அரசாங்கம் உருவாகும் : ஜனாதிபதி




இரண்டாம் தவணைக்காக தாம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி பதவியேற்க உள்ளதாகவும், அதன் பின்னர் புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த கட்டம் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிரண்டு ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...



காட்டுயானைகளால் பாதிக்கப் படு வோருக்கு நஷ்டஈடு வழங்கும் காப்புறுதி முறையொன்றையும், யானைகளுக்கான இயற்கை சரணாலயங்களை அறிமுகப்படு த்தும் திட்டமொன்றையும் வனவிலங்கு திணைக்களம் செயற்படுத்தவுள்ளது. இது தொடர்பான யோசனையொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைகள் மூலம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் போக்குக்கு முடிவு கட்டப்படுமென்றும் இரு தரப்பும் சுமுகமாக அண்டியிருப்பதற்கான வழி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

குறிப்பிட்ட காப்புறுதி திட்டம் மனிதர்கள், சொத்துக்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் அமையும். அத்துடன் யானைக ளுக்காக அமையவுள்ள இயற்கை சரணாலயங்கள், தற்போது லுனுகம்வெஹேரவில் உள்ளதைப் போல எல்லைகளை குறிப்பிடும் வகையிலும் அவற்றை பாதுகாக்கும் வகையிலும் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி: இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெளரவ அதிதி






இந்தியாவில் நடைபெறும் பொதுநல வாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெளரவ அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டில் தங்கியுள்ள காலத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸணும் பங்கேற்பார்.

அப்போது அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், அமைச்சர்கள் வயலார் ரவி, ஸ்ரீஆந்த்சர்மா ஸ்ரீகபில் சிபால் உட்பட இந்திய சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடனும் துறைசார்ந்த விடயங்கள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் 15ம் திகதி புதுடில்லியில் நடைபெறும் ஒப்சேவர் ரிசேர்ச் பவுண்டேஷன் நிகழ்விலும் அமைச்சர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

உலக முதற் பெண்களின் மாநாடு கோலாலம்பூரில் கோலாகல ஆரம்பம் இன்று ஷிரந்தி ராஜபக்ஷ உரையாற்றுகிறார்





உலக முதற் பெண்களின் மாநாடு மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூரில் செரி பெரடானா மண்டபத்தில் மலேஷிய பிரதமர் ஸ்ரீமொஹம்மட் நஜீப் துன் அப்துல் றஷாக்கின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (11) ஆரம்பமாகியது.

22 நாடுகளின் முதற் பெண்மணிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் தெற்காசிய வலயத்தை இலங்கையின் முதற் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இம்முறை மாநாடு, ‘இன்றைய சிறுவன் நாளைய தலைவன்’ என்ற தொனிப்பொருளில் அமைந்துள்ளது.

மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய மலேஷிய பிரதமர் ‘இன்றைய உலகம் எதிர்நோக்கியுள்ள பயங்கரவாதம், நிதி நெருக்கடி, எரிசக்தி பிரச்சினை, இயற்கை அழிவுகள், சிறுவர் மற்றும் பெண்கள் வன்முறை, உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு பெருமளவில் சிறுவர் மற்றும் பெண்களுக்கே முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

அவ்வாறான பிரச்சினைகளில் இருந்து சிறுவர் மற்றும் பெண்களை பாதுகாக்க உலக முதற் பெண்மணிகள் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டார்.

இலங்கையின் முதற்பெண் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (13) மாநாட்டில் உரையாற்றுகிறார்.

சிறுவர் மேம்பாடு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்க ஆகியோரும் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுடன் இந்த பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்திப் பணிகளில் மக்களின் முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு







அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப் படும் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது மக்களின் முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அபிவிருத்திச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தலில் தம்மை எவரும் எளிதில் ஏமாற்ற முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, தாம் இரண்டாவது தடவையாக மீளாய்வுக் கூட்டம் நடத்தும்போது அரை குறையாகவுள்ள சகல திட்டங்களும் நிறைவு செய்யப்பட்டு அதற்கான அறிக் கையையும் தமக்குச் சமர்ப்பிக்க வேண்டு மென அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

மாகாண ரீதியில் நடாத்தப்படும் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டங்களில் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதுடன் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டுமென்ற எதிர்பார்ப்புடனுள்ளனர். மக்கள் எதிர்பார் ப்பை நிறைவேற்றுவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை எந்த நிறுவனம் அல்லது திணைக்களம் பொறுப்பேற்றிருந் தாலும் அவற்றைத் தாமதமின்றி மக்கள் உபயோகத்துக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட் டுக்கொண்ட ஜனாதிபதி, ஒரு நிறுவனத் தினால் அதனை நிறைவு செய்ய முடியாது போனால் பல நிறுவனங்கள் இணைந்து அவற்றை நிறைவு செய்ய முன்வரவேண்டும். எவ்வாறெனினும் மக்களுக்கான தேவைகளை துரிதமாகப் பெற்றுக் கொடுப்பதில் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் கைதான 130 இலங்கையரையும் திருப்பியழைப்பதற்கு உதவ அரசு தயார்

புலிகளுடன் தொடர்புடையோர் உள்ளதாக தகவல் இல்லை



தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 130 பேரையும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கை திரும்ப விரும்பினால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யத் தயாரென்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இலங்கைக்குத் திரும்பிச் செல்லப்போவதில்லையென அவர்கள் மறுத்துவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தாய்லாந்து குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள பொலிஸார், குடியிருப்புத் தொகுதிகளைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தி குடிவரவுச் சட்டத்தை மீறியவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் இலங்கைத் தமிழர்கள் 130 பேர் அடங்குவர். இவர்களுள் பலர் வீசா காலாவதியாகி நான்கைந்து வருடம் இருந்துள்ளனர். இதில் 34 பேர் பெண்கள் என்றும் பாங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தூதரக அதிகாரிகள் தடுப்பு முகாமுக்குச் சென்று இலங்கைத் தமிழர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் வீசா சட்டத்தை மீறி உள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தூதரகத்திற்குத் தகவல் வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள், அவர்கள் வீசா சட்டத்தை மீறியிருப்பதாக கூறியுள்ளனர்.

அதேவேளை, புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிடவில்லை எனவும் பாங்கொக் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது தொடர்பில் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...