8 ஜூலை, 2010

பொன்சேகாவின் விடுதலைக்காக ஜ.தே.கூ மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு

ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி விரைவில் பொதுமக்களுடன் அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டணி இன்று அறிவித்தது.

அக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இதனை அறிவித்தார்.

“இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு 5 மாதங்களாகியும் விடுதலை செய்யவில்லை. அதனால் அவரை விடுதலை செய்வதற்காகப் போராட்டமொன்று இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும். அதனை யாராலும் தடுக்க முடியாது” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

'வெளி உலகைக் காட்டுங்கள்' - தமிழ் அரசியல் கைதிகள் -உருக்கமான கோரிக்கை

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விரைவில் விடுதலை செய்யுமாறு சமூக அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் “வெளி உலகைக் காட்டுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.தமது விடுதலை தொடர்பாக மெகசின் தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘1993 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை சிறைக் கம்பிகளுக்கிடையே 17 வருடங்கள் ஓடிவிட்டன. யாருமற்ற அநாதைகளாக இந்த சிறைக்குள் நித்தம் நித்தம் எமது உறவுகளை, எமது எதிர்காலத்தை நினைத்து நினைத்து வெந்துகொண்டிருக்கிறோம்.

எந்தவித விசாரணைளும் இன்றி எத்தனையோ பேர் எதிர்காலத்தையும் குடும்பங்களையும் தொலைத்து சித்திரவதைப்படுகின்றோம். அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வும் அபிவிருத்தியும் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு, கல்வித்திட்டம், திருமணம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அதை நினைத்து நாங்கள் சந்தோசமடைகிறோம். ஏனென்றால் எமக்கும் மாண்புமிகு ஜனாதிபதி இப்படியான சந்தர்ப்பத்தை வழங்குவார் என்று முழுநம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

இப்போது நாங்கள் உங்களிடம் கேட்பது என்னவென்றால் நீங்கள் மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்து எமக்கான சுதந்திரமான விடுதலையை பெற்றுத்தாருங்கள். நாங்கள் கடந்த காலங்களில் பல உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியிருந்தோம். எனினும் அவை பயனளிக்காமல் போய்விட்டன. அரசியல்வாதிகள் பலரும் எமக்காகக் குரல்கொடுத்திருந்தார்கள். அதிலும் பயன்கிடைக்கவில்லை.தற்போது நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம். விடுதலைக்காக உதவுங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தமிழரை கடத்தி கப்பம் பெற்றவர் சென்னையில் கைது

பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் ஒருவர் விடுமுறையில் சென்னை வந்தபோது அவரைக் கடத்திச் சென்று அவரது மனைவியிடம் ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்த குழுவினரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக சென்னை வந்திருந்த அவர், கடந்த யூன் மாதம் 22 ம் தேதி காரில் திருவல்லிக்கேணிக்கு சென்று கொண்டிருந்த போது, முற்சக்கர வண்டியில் வந்த சிலர் வழி மறித்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சண்முகவேல் என்பவரும் பாலா என்பவரும் இலங்கைத் தமிழர்கள் பிரித்தானிய விசா பெறுவதற்கு உதவும் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் இதற்காக தலா 7 லட்சம் ரூபா பணம் அறிவிட்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சண்முகவேலை கடத்தி ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் பல்லாவரத்தில் வைத்து சண்முகவேல் மனைவியிடம் இருந்து ரூ.17.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு அவரை விவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ராதிகா 17.5 லட்சம் கொடுத்ததையடுத்து சண்முகவேல் அண்ணாநகரில் வைத்து விடுதலை செய்யப்பட்டு;ள்ளார். இது தொடர்பாக சண்முகவேல் கொடுத்த புகாரின்பேரில் பொலிஸார் மேற்படி குழுவினரைக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள பாலா, சிவா ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தலைமை நீதிபதி சீனாவில் தூக்கிலிடப்பட்டார்


சீனாவில் உள்ள சோங்கிங் நகரின் முன்னாள் தலைமை நீதிபதி வென் கியாங் தூக்கிலிடப்பட்டார். இவர் நகர போலீஸ் துணை தலைவராகவும் இருந்ததால், குற்றவாளிகளை பாதுகாத்து வந்தார். குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்தார் என்றும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

போலீஸ்காரர்களாக இருந்து கொள்ளைக்காரர்களாக மாறியவர்களுக்கு இவர் பக்க பலமாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

வென் கியாங்கை பதவி நீக்கம் செய்து அவர் மீது வழக்கு தொடர காரணமாக இருந்த சோங்கிங் நகர கம்ïனிஸ்டு தலைவர் போ ஜிலாய் செல்வாக்கு இதனால் உயர்ந்தது.
மேலும் இங்கே தொடர்க...

டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு இந்தியர்களை வேலைக்கு அமர்த்த இங்கிலாந்து ஆஸ்பத்திரிகள் தீவிரம்

Vollbild anzeigen

இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்திய டாக்டர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான முயற்சியில் அந்த நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு உள்ளது. வேல்ஸ் பிரதேசத்தில் மட்டும் 400 டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியான டாக்டர்கள் கிடைக்காததால், பல இடங்களில் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் டாக்டர்கள் தேவையை நீண்டகாலமாக இந்தியா தான் தீர்த்து வந்தது. ஆனால் 2006-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய டாக்டர்களை வேலைக்கு அமர்த்துவது குறைக்கப்பட்டது. குடியேற்ற சட்டத்தில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய டாக்டர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது குறைந்தது.

வேல்ஸ் பகுதியில் கடும் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக 51 டாக்டர்கள் 2 ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்தியாவில் 2 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்போம் என்று வேலைக்கு டாக்டர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ள லியோனா வால்ஷ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காருக்கு தள்ளுபடி கோரிய ஹிட்லரின் கடிதம் ஏலம்


பெர்லின் :பென்ஸ் காரின் விலையில் தள்ளுபடி கோரி, சர்வாதிகாரி ஹிட்லர் எழுதிய கடிதம் அண்மையின் ஏலம் விடப்பட்டது.

சர்வாதிகாரி ஹிட்லர், அரசியல் புரட்சி காரணமாக, 1924ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள், ஜெர்மனியில் லேண்ட்ஸ்பெர்க் சிறையில் இருந்தார். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் சோர்வுற்றிருந்த அவர், பென்ஸ் கார் ஒன்றை தனது பயன்பாட்டுக்காக வாங்க விரும்பினார்.எனவே, காரின் விலையில் தனக்கு சலுகை அளிக்க வேண்டுமென்று, கார் டீலருக்கு கடிதம் எழுதியிருந்தார். தான் எழுதிய புத்தகத்தின் மூலம் வரும் தொகையை தான் எதிர் பார்த்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் பணத்தை செலுத்துவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.கடந்த 1924, செப்டம்பரில் எழுதப்பட்ட அந்த கடிதத்தின் ஒரு பகுதியை, "பில்ட்' என்ற நாளிதழ் வெளியிட்டது.

அந்த கடிதத்தில், ஹிட்லர் தனது பணிகளுக்கான ஊதியம் டிச., மாத இறுதியில் கிடைக்குமென்றும், இல்லையென்றால் கடன் வாங்கி காருக்கான முன்பணத்தை செலுத்துவதாகவும் எழுதியுள்ளார்.மேலும் தனக்கு காரின் விலையில் 1000 மார்க் (ஜெர்மனி நாணயம்) தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரியிருந்தார்.ஹிட்லர் எழுதிய கடித்தையும், அவர் சிறையின் பயன்படுத்திய பொருட்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை போர்க்குற்றத்தை அறியும் விசாரணை குழுவை கலைக்கமாட்டோம்: ஐ.நா. சபை அறிவிப்பு

கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிக் கட்ட போர் நடந்தது. அப்போது, இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. சரண் அடைந்த விடுதலைப்புலிகளையும் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது.

இதன் காரணமாக, “இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது. போர்க்குற்றம் புரிந்தது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியது. “இலங்கை தமிழர்களை நீண்ட நாட்கள் அகதிகளாக வைக்கக்கூடாது” என்றும் கூறியது.

இலங்கை அரசின் அத்து மீறல் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை ஐ.நா. சபை நியமித்தது. இதற்கான உத்தரவை ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் 2 வாரங்களுக்கு முன்பு பிறப்பித்தார்.

ஐ.நா.சபை நியமித்த விசாரணை குழு இலங்கை சென்று ராணுவ குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஐ.நா.சபை விசாரணை குழு இலங்கை சென்று விசாரணை நடத்தினால், இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்ட மனித உரிமை மீறல், ராணுவ விதிகளுக்கு மீறாக நடத்தப்பட்ட கொலை மற்றும் கொடூர சித்ரவதைகள் அம்பலமாகும். இதனால் உலக அரங்கில் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, ஐ.நா.சபை இலங்கையில் விசாரணை நடத்தக்கூடாது. அப்படி நடந்தால் அதன் மூலம் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று கூறி ஐ.நா. விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசின் மூத்த மந்திரி விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்றும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணை குழுவை கலைக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இலங்கை மந்திரியின் தலைமையில் ஐ.நா.சபைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு ஐ.நா. அதிகாரி பர்கான் ஹக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஐ.நா.சபைக்கு எதிராக இலங்கையின் மூத்த மந்திரி ஒருவரே தலைமை தாங்கி போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மந்திரியின் வேண்டுகோள் ஒருபோதும் ஏற்கப்படாது. ஐ.நா. விசாரணை குழு கண்டிப்பாக கலைக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா. குழு விசாரணை நடத்தினால் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் வெட்ட வெளிச்சமாகும். ராணுவத்தின் போர்க்குற்றங்களும் அம்பலமாகும். எனவே விசாரணையை போராட்டம் நடத்தி தடுக்கும் முயற்சியில் இலங்கை மந்திரி ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஐ.நா.வுக்கு விடுத்த கோரிக்கையில், “இலங்கை அரசின் நெருக்கடிக்கு பணியாமல் ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்தி மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்ப முடியாது” என்று கூறி உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலக பாதுகாப்பு குறித்து உயர்பட்ட குழுவினர் சந்திப்பு

கொழும்பிலுள்ள ஐ. நா சபையின் அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்து உறுதிமொழி வழங்குவது தொடர்பில் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் ஐ.நா உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கை அரசு தரப்பு உயர்மட்டச் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. அலுவலகம் முன்பாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் ஐ.நா. அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையிலேயே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உயர்மட்டச் சந்திப்பொன்றினை ஐ.நா. தலைமையகத்தில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா.வின் இணைப்பேச்சாளர் சோய் சோங்ஆ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தமது அலுவலகத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தொடர்ந்து கவனமெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனைத் தொடர்ந்து நிலைமைகள் சீராகும் பட்சத்தில் அதிகாரிகள் வெகுவிரைவில் கடமைக்குத் திரும்புவர் எனவும் சோங்ஆ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சுமுகமான முறையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஐ.நா.வின் செயற்திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்குமெனவும் குறிப்பிட்ட அவர், ஐ.நா.வானது இலங்கை வாழ் மக்களுக்கு உதவுவதற்காகவே அங்கு நிலைகொண்டுள்ளதென்பதை அரசாங்கம் கட்டாயமாக உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலந்தில் ஆதிகால மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஆதிகால ஐரோப்பிய மனிதர்களின் உடற்பாகங்கள் எனக் கருதப்படும் எச்சங்கள் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 8 லட்சம் ஆண்டுகள் பழைமையானவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் நகரிலிருந்து சுமார் 220 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எச்சங்கள் அகழ்வாராய்ச்சியின் முக்கிய பரிமாணங்கள் எனக் கருதப்படுகின்றன.

“காலநிலை மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் இக்காலப் பகுதியில் எச்சங்கள் மறையாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இருப்பினும் இவற்றை முக்கிய மாதிரிகளாகக் கொண்டு இனிவரும் காலங்களில் செயற்படுவோம்” என லண்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளரான சிமொன் பர்பிட் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வதி அம்மாள் எப்போது கோரிக்கை விடுத்தாலும் விசா வழங்க வேண்டும்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் எப்போது கோரிக்கை விடுத்தாலும் விசா வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் பொதுநலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறும் முடிவை தள்ளி வைத்திருக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பாலசுப்பிரமணியம் கந்தவேலு விஸ்வநாதன் ஆகியோர் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பார்வதி அம்மாளை சந்தித்து பேசினார்கள். அவர் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றும் அவருடைய மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்க முன்வந்திருக்கிறது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அவர் பேச முடியாத நிலைமையில் இருந்தார். அவருடன் இருந்த ஆர். சம்பந்தன் எம்.பி மறுநாள் அவர்களை சந்தித்து பேசினார். தற்சமயம் இந்தியா வந்து சிகிச்சை பெறும் முடிவை பார்வதி அம்மாள் தள்ளி வைத்திருக்கிறார் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று வரை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது என்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பார்வதி அம்மாள் எப்போது கோரிக்கை விடுத்தாலும் விசா வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்தியா உதவவேண்டும்


இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரசாங்கம் இராணுவத் தேவைக்காக எடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா தடுத்துநிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக் கூறிய தமிழ் கூட்டமைப்பினர், மக்களின் புனர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்க முன்வர வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர், நேற்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியபோதே, இக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கூட்டமைப்புக் குழுவினர் இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர், திங்களன்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவை சந்தித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே நேற்று உள்துறை அமைச்சரையும், நிதியமைச்சரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்துள்ள இந்தியாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியா வட பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் செய்யவிருப்பதாகவும், அவற்றுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுள்ளதாகவும் குழுவில் இடம்பெற்றுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார் தலைமன்னாருக்கான கப்பல் சேவையை இந்தியா ஆரம்பிக்கவுள்ளதுடன், வட பகுதியில் ரயில்வே பாதை அமைத்தல், காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைத் தல் உள்ளிட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இந்தியா வடக்கில் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்தச் சந்திப்புக்களின் போது, இந்திய அமைச்சர்கள் இருவரும் தங்களிடம் தெரிவித்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளுமாறு வெள்ளவத்தை மக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு

வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மீண்டும் தங்களைப் பொலிஸில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முச்சக்கர வண்டி மற்றும் பொலிஸ் வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்திக் கொண்டு பொலிஸார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

மேலிடத்தின் பணிப்புரையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயமாக பொலிஸில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாட்டின் சகஜ நிலை காரணமாக வெளிநாட்டிலிருந்தும் பெருமவிலானோர் வந்து விடுதிகள் மற்றும் லொட்ஜிகளில் தங்கியிருப்பதாகவும், இவர்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் இல்லை எனவும் கூறும் பொலிஸார் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை வெள்ளவத்தை பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களுக்கு மாத்திரமா அல்லது ஏனைய பகுதிகளுக்கும் பொருத்துமா? என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயகொடியிடம் வினவியபோது, மீண்டும் பொலிஸ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அறிவித்தல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதாகவும் கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த காலத்தில் இருந்து வந்த பொலிஸ் பதிவு முறைகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே வெள்ளவத்தை பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்திலிருந்தோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலிருந்தோ இதுவரையிலும் பொதுவான அறிவித்தலொன்று விடுக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு வேறு எந்த பொலிஸ் பிரிவிலும் இவ்வாறு பொது மக்கள் மீண்டும் பொலிஸில் பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

தனக்கு கல்லறையினை தெரிவுசெய்த மேர்வின்

பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று புகழ்பெற்ற பாடகர் எச்.ஆர்.ஜோதிபாலவின் 23ஆவது ஞாபகார்த்த தினத்தை நினைவு கூருவதற்காக பொரளை கனத்தை மயானத்திற்குச் சென்றபோது, தமது கல்லறையையும் ஒதுக்கிக் கொண்டார். காலம்சென்ற பாடகரின் கல்லறைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் சில்வா திடீரென அனைவரினதும் ஆச்சரியத்திற்கு மத்தியில், எதிர்காலத்தை பற்றி யாருமே நிர்ணயிக்க முடியாது என்று கூறிக் கொண்டே தமது கல்லறையை தாம் இப்போதே ஒதுக்கி கொள்வதாக கூறினார்.

இதன் பின்னர் காலஞ்சென்ற பாடகரின் கல்லறைக்கு சமீபமாக ஒரு வெற்றிடத்தை காண்பித்து அதனை தமக்கு ஒதுக்கப் போவதாக தெரிவித்த அமைச்சர் தமது செயலாளரிடம் கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமார் கமீலுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்குமாறு கூறினார். ஆணையாளர் கமீலுடன் சிறிது தூரத்தில் நின்று கொண்டு தொலைபேசியில் தனிப்பட்ட முறையில் பேசிய பின்னர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் திரும்பிய அமைச்சர் சில்வா தாம் ஒதுக்கிய கல்லறையை மாநகர சபைக்கு அறிவித்துவிட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆங்கில இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் மாநகர ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு அமைச்சர் சில்வா கூறியது பற்றி கேட்டபோது, அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் காலமான அவரது தாயார்பற்றிய விடயம் ஒன்று குறித்து தம்முடன் பேசியதாகவும் அமைச்சர் தம்மைப்பற்றி எதுவும் பேசவில்லை என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அங்கு குழுமி இருந்தவர்கள் மத்தியில் சமூகமளித்திருந்த மயானத்தின் பிரதம காவலரை அழைத்த அமைச்சர் சில்வா "மேர்வின் சில்வாவின் கல்லறையை ஞாபகத்தில் வைத்திருங்கள்' என்று கூறியதுடன் தமது மரணத்தின் பின்னர், குறிப்பிட்ட அதே இடத்தில்தான் தமது பூதவுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கூடி நின்றவர்களை மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் தொடர்ந்து பேசிய அமைச்சர், "முடியுமானால் இன்றைக்கே எனது பிரேதப் பெட்டியை நான் கொள்வனவு செய்திருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக அதனை வைத்திருப்பதற்கு எனது வீட்டில் இடவசதி போதாது' என்றும் கூறினார். எவருக்கும் ஒரு நாள் இறப்பு வரும். எதிர்காலத்தை எவருக்கும் நிர்ணயிக்க முடியாது. யாரும் பணம் வைத்திருக்கலாம். அதில் ஏதும் விசேடம் இல்லை. பணத்தினால் மரணத்தை தடுத்துவிட முடியாது. எனவே நானும் மரணத்திற்கு பயப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன் பின்னர் பிரதம காவலருடன் தமது கல்லறைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்ற அமைச்சர் அந்த இடத்தை குறித்து வைப்பித்ததோடு மயான தொழிலாளர்களைக் கொண்டு அவ்விடத்தை சுத்தம் செய்வித்துக் கொண்டார். இதன் பின்னர் அவ்விடத்தில் மேளவாத்தியத்துடன் நின்றவரை அழைத்து மயானத்திலிருந்து செல்ல முன்னர் ஜோதிபாலாவின் பாடல் ஒன்றை இசைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கருணாவின் போதை நடனம் அம்பலமானாதால் அதிகாரியின் பணி பறிப்பு

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஒளிப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து மீள் குடியேற்ற அமைச்சரின் ஊடகச் செயலாளராகச் செயற்பட்டவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் பணிப்பின் பேரிலேயே இந்தப் பதவிப் பறிப்பு இடம்பெற்றுள்ளது

. குறித்த அதிகாரியின் வீட்டுத் திருமண விழாவிலேயே இவ்விருவரும் மது போதையில் நடனமாடியிருந்தனர்.

இவர் மூலமாகவே இந்த ஒளிப்படம் ஊடகத்துறையினருக்குக் கிடைத்திருக்க வேண்டும் எனச் சந்தேகித்த அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...