15 அக்டோபர், 2010

இலங்கை அகதிகள் குறித்து விவாதிக்கக் கனடாவில் குழு நியமனம்

கனடா சென்றுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் விவாதிப்பதற்காக, அந்நாட்டு வில்ஃபர்ட் லோரியா பல்கலைக்கழகம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.

இந்தக் குழு எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் திறந்த விவாதம் ஒன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருகை, வெளிநாட்டு நடவடிக்கை மற்றும் கனடாவின் பொறுப்பு என்ற தொனிப் பொருளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்போது அகதிகளால் ஏற்படுகின்ற தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், குடிவரவு சட்ட மீறல்கள், ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. குழுவில் 5 முக்கிய நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

கனேடிய அகதிகள் கொள்கை மற்றும் மாற்றங்கள் என்ற தொனிப்பொருளில், அரசியல்துறை பேராசிரியர் கிரிஷ் அன்டர்சன் கருத்து வெளியிடவுள்ளார்.

கனேடிய ஊடக பொறுப்புக்கள் என்பதன் கீழ் வில்ஃபர்ட் பல்கலைக் கழகத்தின் சமயக்கல்வி பேராசிரியர் அமர்நாத் அமரசிங்கம் கருத்துரை வழங்கவுள்ளார். தமிழ் காங்கிரஸின் சட்டத்தரணி கெரி ஆனந்தசாங்கரி, ரியர்சன் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் அபர்னா சுந்தர் மற்றும் எலிஸ்டர் எட்ஜர் என்ற ஐக்கிய நாடுகள் முறைமையின் பணிப்பாளர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அவர்கள் இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக அந்நாட்டு இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஐந்து வருடங்களில் 77, 000 ஈராக்கியர்கள் கொலை : அமெ. இராணுவம் தகவல்

ஈராக்கில் கடந்த 5 வருட காலத்தில் சுமார் 77, 000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் கணக்கிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்குகின்றனர்.

இதுவரை அமெரிக்க இராணுவத்தினால் வெளியிடப்பட்ட கணக்கெடுப்புக்களில் இது மிகவும் விரிவானதென தெரிவிக்கப்படுகின்றது.

இக்கணக்கெடுப்பு 2004 ஜனவரி முதல் 2008 ஆகஸ்ட் வரையுள்ள காலப்பகுதிக்குரியது எனக் கூறப்படுகிறது.

இதுவே ஈராக்கின் இருளடைந்த காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது.

ஆனால் ஈராக்கிய மனித உரிமைகள் அமைச்சு, கடந்த வருடம் வெளியிட்ட கணக்கெடுப்பில், 85,694 பேர் கொல்லப்பட்டார்கள் எனத் தெரிவித்திருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாண பணிகளில் சீனக் கைதிகள்:ஐ.தே.க

தலைநகரில் வாழும் 65 ஆயிரம் குடும்பங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இடம்பெயரச் செய்து அந்தக் குடும்பங்களுக்கு புறநகர்ப் பகுதியான ஹோமாகமையில் முகாம் வாழ்க்கையொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டு வருகின்ற அரசாங்கம் தலை நகரிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான 1,300 ஏக்கர் காணியை கையகப்படுத்தி அதனை சீனாவுக்குத் தாரைவார்க்கத் தீர்மானித்திருக்கின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தலைநகரின் சேரிப்புற மக்களின் மீது உண்மையாகவே அரசாங்கத்திற்கு அக்கறையிருக்குமானால் அவர்களது சொந்த நிலங்களிலேயே வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகளில் சீனக் கைதிகள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். இத்தகைய செயற்பாடு சீன ஆக்கிரமிப்பாகவே இருக்கின்றது என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்: கொழும்பு மாநகர சபையை ஒருபோதும் அரசாங்கத்தினால் வெற்றி கொள்ள முடியாது என்பதனாலேயே அதனை அதிகார சபையாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அது மட்டுமல்லாது தலைநகரிலே சேரிப்புறங்களில் வாழ்கின்ற மக்களை அப்புறப்படுத்தி நகரை அழகுபடுத்தப் போவதாகவும் கூறுகின்றது. அரசாங்கத்தின் இந்த முன்னோடித் திட்டமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்த போது அவரூடாகவே வெளிப்பட்டிருந்தது.அதன் பின்னர் பொருளியல் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்சவும் இது குறித்து ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் இந்த திட்டத்தை அறிந்து கொண்டமையால் தான் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம். இதனைக் கண்டு அரசாங்கம் தற்போது கலவரமடைந்துள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் கூறுவது போல எதுவும் இல்லையென்றும் அவர் அரசியல் இலாபம் கருதி இவ்வாறு பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலர் கூறுகிறார்.

உண்மையைக் கூறினால் தலைநகரில் சுமார் 60 முதல் 80 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற சேரிப் புறங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களை ஹோமாகமை போன்ற பிரதேசங்களில் குடியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. வேறு வகையில் கூறினால் அந்த மக்களை இன்னும் மூன்றே மாதங்களில் தலைநகரில் இருந்து இடம்பெயரச் செய்து அவர்களுக்கு ஹோமாகமையில் முகாம் வாழ்க்கையொன்றை ஏற்படுத்திக்கொடுக்க அரசு தயாராகி வருகின்றது என்பதே சரியாகும்.இந்த மக்களை இங்கிருந்து அகற்றுவதானது நகரை அழகுபடுத்துவதற்காகவே என்றும் அரசு கூறுகின்றது. இதன் பின்னணியில் அந்த மக்களின் நிலங்களைக் கைப்பற்றுவதும் அதனை சீனாவின் கம்பனிகளுக்கு தாரை வார்ப்பதுமே திட்டமாக இருக்கின்றது.

ஹிட்லர் காலத்திலும் இவ்வாறு தான் நகரை அழகுபடுத்துவதாகக் கூறி மக்களின் வாழ்விடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் தூர இடங்களில் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர். அதேபோன்றதொரு நிலைமையே இன்றைய அரசாங்கத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சேரிப்புற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும் அந்த மக்களின் சொந்த இடங்களிலேயே அதனை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.அதனை விடுத்து சொந்த நிலங்களை பறித்துக்கொண்டு வேறு பிரதேசங்களில் கொண்டு குடியேற்றுவதை நாம் ஏற்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலப்பகுதியில் நானும் அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத கட்டிடங்களை அப்புறப்படுத்தினோம். ஆனாலும் அந்த மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கவில்லை.

மாற்றுத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தோம். வனாத்தமுல்லையில் அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளையும் புறக்கோட்டையில் உலக சந்தை வியாபார மையத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். இவர்களை வேறு பிரதேசங்களுக்கு துரத்தி விடுவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. ஆனாலும் இன்று தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என்பதற்காகவே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை அறிவதற்கு மக்களின் அபிப்பிராயத்தை பெறவேண்டியது அவசியமாகும்.அந்த வகையில் தலைநகர் தொடர்பில் அரசின் திட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்திக் காட்டவேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம். மேலும் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளிலும் சீனக் கைதிகளை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது சீன ஆக்கிரமிப்பாகவும் இருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுமுன் சாட்சியமளிப்பதற்கு மூன்று மனித உரிமை அமைப்புக்கள் மறுப்பு

இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக்குழுக்களான சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடி விவகாரக்குழு ஆகியவை நிராகரித்துள்ளன.

இந்த ஆணைக்குழு சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற விசாரணை போன்ற விடயங்களில் சர்வதேச தரத்தில் இல்லை என்று அவை குற்றஞ்சாட்டியுள்ளன. அதனாலேயே தாம் அந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க முடியாது என்று அவை மூன்றும் ஒரு கூட்டு அறிக்கையில் நிராகரித்துள்ளன.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து உள்ளூரில் விசாரித்து அதற்கு உரியவர்களை பொறுப்புக்கூற வைக்கவும், அங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவசியம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் ஒருவர், ஆனால், இந்த ஆணைக்குழு அதற்கு தேவையான விடயங்களை சரியாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கைப் போரில், அதிலும் குறிப்பாக அதன் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனித நேய மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் குறித்து தமக்கு பல நம்பிக்கையான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகள், அதிகாரங்கள், ஒட்டுமொத்தக் கொலைகள், சித்திரவதைகள் மற்றும் சிவிலியின்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவை உள்ளடங்கிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க போதுமானவை அல்ல என்றும் கூறியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் ஆசனத்தை ஏற்கப் போவதில்லை : லக்ஷ்மன் நிபுன ஆராச்சி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ஆசனத்தை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பதில் செயலாளர்நாயகம் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரினால் லக்ஷ்மன் நிபுன ஆராச்சியின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளும் உத்தேசம் ஒருபோதும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்றிடமாகியுள்ள ஆசனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜே.வி.பி அறிவித்துள்ளது.

இராணுவ நீதிமன்றில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்கு மேல் தண்டனை அனுபவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிடமாகும் நாடாளுமன்ற ஆசனத்திற்கு அடுத்த அதிகூடிய விருப்பு வாக்கு பெற்ற கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவது வழமையான நடைமுறையாகும்.
மேலும் இங்கே தொடர்க...

அதிசய வாழ்வு பெற்ற சுரங்கத் தொழிலாளர்களுக்கு குவிகிறது பரிசுப் பொருட்கள்




சான்டியாகோ: சிலி நாட்டின் தங்கச் சுரங்கத்தில், கடந்த 10 வாரங்களாக சிக்கித் தவித்த 33 ஊழியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பரிசுப் பொருட்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் உள்ள தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கத்தில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 700 மீட்டர் ஆழத்தில் வேலை பார்த்த 33 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலச்சரிவில் இவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக முதலில் கருதப்பட்டது. 17 நாட்களுக்கு பிறகு, ஊழியர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்கு ஒரு துளை அமைத்து உணவு, தண்ணீர், பிராண வாயு உட்பட அனைத்தும் சப்ளை செய்யப்பட்டது. இதனால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் கடந்த 69 நாட்களாக உயிர் பிழைத்திருந்தனர். பல கோடி ரூபாய் செலவில் அதிநவீன இயந்திரம் கொண்டு வரப்பட்டு, சுரங்கம் துளையிடப்பட்டு, நவீன இயந்திரத்தின் கூண்டு வழியாக ஒவ்வொரு ஊழியர்கள் மேலே கொண்டு வரப்பட்டனர். இந்த கூண்டில் நின்றபடி அதலபாதாளத்தில் இருந்து வரும் போது, அந்த நபருக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தரவும், அதே சமயம் அவரது இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறியவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அதே போல அக்கூண்டு போன்ற கருவி பயணிக்கும் போது அதற்கு சுற்றுச் சுவரான பெரிய இரும்புக்கூண்டில் வழுவழுப்பாக மோதலின்றி பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. மேலும், கடந்த சில நாட்களாக சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவானது அவர்கள் உடல்நிலையை சீராக வைத்திருக்கும் படி அதிக கவனம் செலுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு சிலி அதிபர் செபாஸ்டியன் பைனீரா வந்து, மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனைக்கு சென்று மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையையும் பார்வையிட்டார். தொழிலாளர்களை மீட்க அவர் எடுத்து கொண்ட அக்கறையால் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களை அவரவர் வீடுகளிலும், ஊர்களிலும் கோலாகலமாக வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்ச ரூபாய் அளித்துள்ளார். பிரபல ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சமீபத்தில் தயாரிக்கப்பட்ட "ஐபாட்'களை வழங்கியுள்ளார். கிரீஸ் நாட்டு நிறுவனம் இந்த தொழிலாளர்களை சுற்றுலா தீவுக்கு அழைத்து செல்ல முன்வந்துள்ளது. ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இந்த தொழிலாளர்களை தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்களும், பிரமுகர்களும் மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பைலட் நடுவானில் மரணம்





தோகா:கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் பைலட் நடுவானில் மரணமடைந்ததால், அந்த விமானம் மலேசியாவிற்கு திருப்பிடவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து கத்தார் நாட்டிலுள்ள தோகா நகருக்கு, கத்தார் நாட்டு ஏர்வேஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பைலட்டிற்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார்.

இதுகுறித்து துணை விமானி அருகிலிருந்த கோலாலம்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். விமானத்தை தரையிறக்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து அந்த விமானத்தை துணை விமானி கோலாலம்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.விமானத்தில் மரணமடைந்த கேப்டன் இந்தியர் என்றும், அவருக்கு வயது 43 என்றும் கூறப்பட்டது. விமானியின் மரணத்திற்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம்: அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை

பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்காவின் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

÷அணு ஆயுதங்கள் பத்திரமாக உள்ளதாக பாகிஸ்தான் தொடர்ந்து உறுதிமொழி அளித்து வந்த போதிலும், பயங்கரவாதிகளிடம் சிக்குவதற்கான ஆபத்து உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இப்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆய்வறிக்கை அளிக்கும் அமைப்பு (சிஎஸ்ஆர்) இந்த அறிக்கையை அளித்துள்ளது.

÷பாகிஸ்தானில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக அந்நாட்டு அரசியல் தலைவர்கள் அளிக்கும் உறுதிமொழியின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கும் அபாயம் உள்ளது. பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களிடம் அணுசக்தி தொழில்நுட்பம் சென்றாலும் அதன் மூலம் பயங்கவாதிகளுக்கு அணு ஆயுதம் கிடைக்கும் அபாயம் உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

÷மொத்தம் 24 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பாகிஸ்தானிடம் 60 அணு குண்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. இதைவிட கூடுதல் எண்ணிக்கையில்தான் இருக்கக் கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் குள்ளமான மனிதராக தேர்வு செய்யப்பட்ட கஜேந்திர தாபா மகர்.

பொகாராஉலகின் மிகக் குறைந்த உயரம் கொண்ட குள்ளமான மனிதராக நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திர தாபா மகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 18 வயதான இவரது உயரம் 25.8 அங்குலம் (65.5 செ.மீ). இவரது எடை 5.5 கிலோவாகும்.

÷இதுவரையில் உலகின் மிகக் குறைந்த உயரம் கொண்ட குள்ள மனிதராக கொலம்பியாவின் எட்வர்ட் நினோ ஹெர்னான்டஸ் இருந்தார். 24 வயதாகும் நினோ, நேபாளத்தின் கஜேந்திர தாபா மகரை விட 2 அங்குலம் கூடுதல் உயரமானவர். அதாவது நினோவின் உயரம் 27.8 அங்குலமாகும்.

÷உலக சாதனை புத்தகமான கின்னஸில் கஜேந்திர தாபா இடம்பெற்றுள்ளார். இவரது உயரத்தை பரிசீலித்து கஜேந்திர தாபாவை குள்ளமான மனிதராக அறிவித்துள்ளது.

÷நேபாளத்தில் உள்ள கிராமத்தில் பழ வியாபாரியின் மகனாகப் பிறந்த கஜேந்திர தாபாவின் கனவு, திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் உலகை வலம் வரவேண்டும் என்பதுதான். உலகின் குள்ள மனிதருக்கான அங்கீகார சான்றிதழ் விரைவில் இவருக்குக் கிடைக்கும்.

÷நேபாள பிரதமரை பலமுறை சந்தித்துள்ள கஜேந்திர தாபா, நேபாள சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, அந்நாட்டு சுற்றுலாத்துறை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் நியூயார்க் மற்றும் லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

÷உலகின் குள்ளமான மனிதராக கஜேந்திர தாபா மகரை அறிவிக்கக் கோரி சில மாதங்களுக்கு முன்னர் இவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போது இவருக்கு 18 வயதாகவில்லை. எனவேதான் 18 வயது நிரம்பிய பிறகு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

÷கஜேந்திர தாபா உருவில் சிறியவராயினும், மிகப் பெரிய பெயரை எடுத்துள்ளார் என்று அவரது தந்தை ரூப் பகதூர் தாபா மகர் குறிப்பிட்டுள்ளார்.

÷சுற்றுலா பகுதியான பொகாராவுக்கு வரும் பயணிகள் தனது மகனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

விழிப்புலனற்றோருக்கான சுதந்திரத்தை உறுதி செய்வோம்!






வெள்ளைப் பிரம்பு...

சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல...

மனித சமுதாயத்தில் விழிப்புலனற்றவர்களைக் குறிக்கும் குறியீடாகவும் பயன்படுகிறது. விழிப்புலனற்றவர்களையும் அவர்களது சாதனைகளையும் கெளரவிக்கும் வகையிலே உலகளாவிய ரீதியில் வெள்ளைப் பிரம்பு தினம் கொண்டாப்படுகிறது. இன்றைய தினமாகிய ஒக்டோபர் 15 ஆம் நாள் வெள்ளைப் பிரம்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெள்ளைப் பிரம்பானது விழிப்புலனற்றவர்களுக்கான கருவியாக மட்டுமன்றி அவர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் குறியாகவும் மாறிவிட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக, விழிப்புலனற்றவர்களுக்கு ‘பிரம்பு’ துணையாக இருந்திருக்கிறது. ஆனால் முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர்தான் வெள்ளைப் பிரம்பு உலகுக்கு அறிமுகமாயிற்று.

1921 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிக்ஸ் என்ற புகைப்படக் கலைஞர் விபத்தொன்றிலே தமது விழிப்புலனை இழந்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலே அவர் வசித்தமையால் பயணிப்பதில் பெருஞ் சிரமங்களை எதிர்நோக்கினார். தான் வைத்திருந்த கைத்தடிக்கு வெள்ளை வர்ணத்தைப் பூசினார். அது மற்றோரின் பார்வைக்கு நன்றாகத் தெரியும் என ஊகித்தமையாலேயே அவர் அவ்வாறு செய்தார்.

1931 ஆம் ஆண்டு பிரான்சிலே விழிப்புலனற்றோருக்காக தேசிய வெள்ளைப் பிரம்பு இயக்கம் தொடக்கப்பட்டது. அவ்வியக்கத்தின் சார்பிலே விழிப்புலனற்றோருக்கு அடையாளமாக இரு வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன.

அந்நிகழ்வின் பின்னர், முதலாம் உலக மகா யுத்தத்தினால் விழிப்புலன் பாதிக்கப்பட்ட பிரான்சிய மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் ஏறத்தாழ 5000 வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன.

‘விழிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ளைப்பிரம்பொன்றை வழங்கவேண்டும்’ என 1931 ஆம் ஆண்டு பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது வானொலி ஒலிபரப்பிலே தெரிவித்திருந்தது. அப்போதுதான், (விழிப்புலனற்றோரை அடையாளங்காட்டும்)உலகளாவிய ரீதியிலே அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக வெள்ளைப் பிரம்பு மாறும் எனவும் அவ்வொலிபரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1931லேயே சர்வதேச லயன்ஸ் கழகம் விழிப்புலனற்றோருக்கு வெள்ளைப் பிரம்பை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது, விழிப்புலனற்றோர் வெள்ளைப் பிரம்பைக் குறிப்பிட்டளவு சாய்வாகப் பிடித்தபடி நடத்தலானது அவர்களது அடையாளமாகவே மாறியது.

1964 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியினால் ஒக்டோபர் 15 வெள்ளைப் பிரம்பு தினம் என சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அடிப்படையில் வெள்ளைப்பிரம்பு தினம் பற்றி அறிந்தவர்கள் மிகச் சிலரே. இத்தினத்திலே, விழிப்புலனற்றவர்களின் சாதனைகளைப் பாராட்டும் அதேவேளை அவர்களுக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்காக இரக்கப்படுவதனால் பயனேதும் கிடைத்துவிடப்போவதில்லை. ஆதலால் இரக்கப்படுவதைவிடுத்து அவர்களும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை ஒத்த வாழ்வை முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்யவேண்டும்.

விழிப்புலனை இழந்தவர்கள் தமது வாழ்வையே தொலைத்துவிட்டவர்களாக ஒருபோதும் அர்த்தப்பட மாட்டார்கள்.

சங்ககாலத்திலே போற்றப்பட்ட இரட்டைப் புலவர்களுள் ஒருவரிலிருந்து ஹெலன் கெல்லர் தொட்டு பல விழிப்புலனற்றோர் சாதனை படைத்திருக்கிறார்கள்.

கிரேக்க கலாசாரத்தின் அபிவிருத்தியில் ஆதிக்கம் செலுத்தியவராகக் கருதப்படும் கவிஞர் ஹோமரும் விழிப்புலனற்றவர் என்றே கூறப்படுகிறது. இலியட், ஒடிசி என்ற கிரேக்க மகா காவியங்களை அவரே இயற்றினார். இந்தியக் கவிஞரும் இசை வல்லுநருமான சூர்தாஸ் வானியலாளர் கலிலியோ கலிலி பிறெயில் முறைமையைக் கண்டுபிடித்த லூயிஸ் பிறெயில், போன்ற பலர் பல்துறைகளிலும் சாதனை படைத்திருக்கிறார்கள்.

இன்னும் பெயர் தெரியாத பலர் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் தாம் விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள் என ஒதுங்கியிருந்திருந்தால் பல அரிய படைப்புக்கள் எமக்குக்கிடைக்காமலே போயிருக்கும்.

விழிப்புலனற்றவர்களைப் பிரித்துப் பார்க்கும் மனப்பாங்கு எம்மவர் மத்தியிலே இன்னும் காணப்படுகிறது. ஆதலால்தான் எமது சமூகத்தில் விழிப்புலனற்றவர்களால் மேலெழுந்து பிரகாசிக்க முடியவில்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், சமூகத்தின் மனப்பாங்கு மாறும் வரை விழிப்புலனற்றவர்களுடன் கூடிய சமூகம் ஏகவினமான அலகுகளைக் கொண்டிருக்காது. ஆதலால் தான் விழிப்புலனற்றோரின் முன்னேற்றமும் விருத்தியும் தடைப்படுகிறது.

ஆனால் இந்தத் தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக்கி வாழ்க்கையில் முன்னேறிய பல விழிப்புலனற்றோர் எமது நாட்டிலே காணப்படுகிறார்கள் என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.

விழிப்புலனற்றவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கான இல்லங்கள் பலவும் காணப்படுகின்றன. அந்த வகையிலேயே ‘தரிசனம்’ என்ற விழிப்புலனற்றோருக்கான இல்லமும் அமைந்திருக்கிறது.

தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டவென அமைந்திருக்கும் இத்தகைய இல்லங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. அத்தகையதோர் நிலையில் ‘தரிசனம்’ ஆற்றும் சேவைகள் அளப்பரியவை.

‘தரிசனம்’ நிறுவனத்தின் செயலாளரான ரவீந்திரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் சில தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். கிழக்கிலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் நா. இதயராஜன் மற்றும் இலக்கியக் கலாநிதி ம. சிவசுப்பிரமணியம் போன்றோரின் பெருமுயற்சியால் 1992ஆம் ஆண்டு ‘தரிசனம்’ உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

‘தரிசனம்’ நிறுவனத்திற்கு மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரிக்குப் பின்னால் இருந்த காணி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டிலிருந்து அக்காணியிலே தனது சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

அதற்கு முன்னர், ஓய்வுபெற்ற மேலதிக அரச அதிபர் பூ. சங்காரவேல் தனக்குச் சொந்தமான கட்டடத்தில் ‘தரிசனம்’ இயங்க வழிசெய்திருந்தார்.

5 - 12 வயதுக்குட்பட்ட விழிப்புலன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் கல்வி கற்கும் காலத்தில் இடை வயதிலே தமது பார்வைப் பலனை இழந்தவர்களும் கூட வயதெல்லையைக் கருதாது சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

தற்போது அங்கே 13 ஆண் பிள்ளைகளும் 13 பெண் பிள்ளைகளும் தங்கியிருந்து கல்வி பயில்கின்றார்கள்.

ஆண் பிள்ளைகள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் பெண் பிள்ளைகள் கல்லடி விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயில்கின்றார்கள்.

ஏனைய மாணவர்களுடன் சேர்ந்தே கல்வி கற்கும் இம் மாணவர்கள் பிறெயில் முறையிலே குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். மதியம் 2 மணிக்குப் பின்னர் தரிசனத்திலே அவர்களுக்கான வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

பிறெயில் முறையிலே பயிற்றுவதற்காக 6 ஆசிரியர்கள் தரிசனத்திலே கடமை புரிகின்றனர். க. பொ.த. உயர்தரப் பாடத் திட்டத்தைக் கற்பிப்பதற்காக 5 வருகை தரு ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

சங்கீதத் துறையிலும் ‘தரிசனம்’ மாணவர்கள் பயிற்றப்படுகின்றனர். அத்துடன் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளையும் பயின்று வருகின்றனர்.

மதியம் 2 மணிக்குப் பிறகு வகுப்புக்கள் நடைபெறும் பாடசாலைக் கட்டடம் வட-கிழக்கு மாகாண சபையின் உதவியுடனும் மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்றின் உதவியுடனும் கட்டி முடிக்கப்பட்டன.

எதிர்காலத்தில் ‘தரிசனம்’ மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை அமைக்கும் திட்டமும் காணப்படுவதாக ரவீந்திரன் தெரிவித்தார்.

தரிசனத்திலிருந்து இதுவரை காலத்திலும் 13 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருக்கின்றனர். அவர்களுள் 8 பேர் தமது பட்டப்படிப்பை முடித்து வெளியேறிவிட்ட அதேசமயம் ஏனையோர் தமது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இங்கு மாணவர்கள் யாவரும் பிறெயில் முறையிலேயே கல்வி கற்கின்றனர். பரீட்சைகளைப் பொறுத்த வரையிலே, வினாத்தாள் பிறெயில் முறைமைக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு இம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவர்களின் விடைத்தாள் பிறெயிலிலேயே அமைந்திருக்கும். அது மீள மொழி மாற்றம் செய்யப்பட்டுத் திருத்தப்படும்.

முன்னைய காலங்களிலே, பிறவிக் குறைபாடு காரணமாகவும், நோய்த் தாக்கத்தாலும் விழிப்புலனை இழந்த அல்லது விழிப்புலன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் காணப்பட்டனர். ஆனால் தற்போது இணையும் மாணவர்களில் பெரும்பாலானோர் நடந்து முடிந்த யுத்தத்தினால் விழிப்புலனை இழந்தவர்களாகவோ அல்லது விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்களாகவோ காணப்படுகின்றனர்.

இங்கு சேர்க்கப்பட்ட பின்னர், விடுதியிலேயே தங்கிக் கல்வி கற்கும் மாணவர்கள் தவணை விடுமுறைகளுக்கு மட்டும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். அவசரத் தேவையொன்றின் நிமித்தம் தமது வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தால் பெற்றோர்/ பாதுகாவலரின் கோரிக்கைக் கடிதம் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் குறித்த தேவை முடிந்ததும் உடனே ‘தரிசனம்’ நிர்வாகத்தால் மீள அழைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

‘தரிசனம்’ நிறுவனத்தைப் பொறுத்த வரையிலே அது வழங்கும் சேவைகள் முற்றிலும் இலவசமானவையாகும். ‘தரிசனத்தை’ நிர்வகிப்பதற்கான நிதி உள்ளூர் நன்கொடைகள், வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களின் உதவிகள், கொடி தினத்தில் சேர்க்கப்படும் பணம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி முதலாய வழிகளிலே பெறப்படுகிறது.

நல்லுள்ளம் படைத்த அன்பர்களின் உதவியால் பிரச்சினைகள் இன்றி ‘தரிசனத்தை’ நிர்வகிக்கக் கூடியதாக இருப்பதாக செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார். ஆயினும் சில சமயங்களில் நிதி நிலைமையைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் வங்கியிலுள்ள சிறு நிலையான வைப்பின் மூலம் பெறப்படும் வட்டி பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தரிசனத்தை நிர்வகிக்கும் பொதுச் சபையிலே உயர்நிலைகளில் இருக்கும் கற்றோர் பலர் காணப்படுவதால் எந்தவித அதிகார, பதவிப் பிரச்சினைகளும் இன்றி ‘தரிசனம்’ நிர்வகிக்கப்படுவதாக ரவீந்திரன் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தரிசனத்தைப் பொறுத்த வரையிலே, அங்கு தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்கள் யாவருமே விழிப்புலன் பாதிப்பை உடையவர்கள். அவர்களை ஏகவினமான குடியலகுகளாகக் கருதமுடியும். அங்கு விழிப்புலன் பாதிப்பு/ இன்மை என்பது ஒரு குறையாக நோக்கப்படாது. ஆதலால் தான் தரிசன மாணவர்களால் ஏனையோரைப் போலவே தமது வாழ்வியலையும் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது

மாறாக பல பெற்றோர், விழிப்புலன் பாதிக்கப்பட்ட தமது பிள்ளையை விழிப்புலனற்றோர் இல்லங்களிலே சேர்ப்பதை கெளரவக் குறைவாகக் கருதுகின்றனர். அவர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்கவே முயல்கின்றனர். ஒரு எல்லைக்கு அப்பால் அம்முயற்சி சாத்தியப்படாது என்ற உண்மை அவர்களுக்கு விளங்குவதில்லை போலும்! அவ்வாறு வளர்க்கப்பட்ட பிள்ளைகள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப் பட்டவர்களாகவே வாழ்கின்றனர். சமூகத்துடன் இணைந்து வாழ்வதானது மனிதனுக்கே உரித்தான பண்பு. அப்படியிருக்க, அவர்கள் மட்டும் எதற்காக சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ வேண்டும்? என்பதே எம்முள் எழும் வினாவாக இருக்கிறது.

விழிப்புலனற்ற மாணவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை தரிசனத்தில் சேர்த்துவிடுங்கள்; அவர்களது வாழ்வை ஒளிபெறவையுங்கள் என்பதே ரவீந்திரன் எமது சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.

இத்தகைய இல்லங்களில் தமது பிள்ளை நெறிமுறைகள் பிறழாது வளர்க்கப்படுமா? என்றதொரு சந்தேகம் பல பெற்றோர் மத்தியில் எழத்தான் செய்கிறது. ஆனால், அத்தகையதொரு சந்தேகமே தேவையில்லையென நிரூபித்து நிற்கிறது தரிசனம்!

இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியில் விழிப்புலனற்ற மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு காணப்படுகிறது. ஆயினும் இம் மாணவர்கள் ஒரு போட்டிப் பரீட்சையில் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட்டு பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிவாகி வரும் ஒரு விடயமே தரிசனத்தின் செயற்றிறனை விபரிக்கப் போதுமானது.

சற்று வருத்தத்திற்குரிய விடயம் யாதெனில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய இந்த 8 மாணவர்களுக்கும் இதுவரை வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை என்பதாகும்.

அத்துடன், நல்லுள்ளம் கொண்ட அன்பர்களின் உதவியையும் தரிசனம் வேண்டி நிற்கிறது.

இன்று தரிசன மாணவர்களின் முக்கிய தேவைகளுள் ஒன்றாக இருப்பது பிறெயில் முறையில் அச்சிடும் கருவி (ஜிஙுடுடூசிலீஙு) ஆகும். கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும் மென்பிரதி வடிவிலான ஆவணங்களையும் நூல்களையும் இக்கருவி பிறெயில் முறையில் அமைந்தவையாக மாற்றி அச்சிட்டுத்தர உதவும். இக்கருவிக்கான செலவு ஏறத்தாழ 9 இலட்சம் ரூபாவாகும்.

தரிசனத்திலே பிறெயில் முறைமையிலான புத்தகங்களைக் கொண்ட நூலகமொன்றை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அச்சிடும் கருவி இல்லாததால் அப்பணியைத் துரிதமாக முன்னெடுக்க முடியவில்லையென ரவீந்திரன் மேலும் தெரிவித்தார்.

தரிசனத்தைப் பொறுத்தவரையிலே, கணக்கு வழக்குகள் யாவுமே வெளிப்படையானவையாகும். ஆதலால் அவை தொடர்பான ஆவணங்கள் எண்ணிக்கையில் அதிகமாகப் பிரதியிடப்படுகின்றன. ‘தரிசனம்’ நிறுவனத்திடம் ஆவணங்களைப் பிரதி செய்யும் இயந்திரம் சொந்தமாக இல்லாமையால் குறிப்பிட்டளவு தொகை பணம் அதற்காகச் செலவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தரிசனம்’ நிறுவனத்தினர் இம்முறை வெள்ளைப்பிரம்பு தினத்தை, பதுளை மத்தி லயன்ஸ் கழகத்துடன் இணைந்து பதுளையில் கொண்டாடவிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தரிசனம்’ அமைப்பைத் தொடர்பு கொள்ள விரும்புவோர் +94652223489 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது னீகீஹஙுடுஙூஹடூஹசீஸஹசிசிடுணீஹங்ச்ஹஃ ஙுச்ணீகூலீசிசீஹடுங்.ணீச்சீஎன்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தொடர்பு கொள்ள முடியும்.

இரண்டு கண்களும் நன்றாக அமைந்து நாம் விரும்பியபடி இப்பூவுலக வாழ்வின் இன்பங்களை எல்லாம் கண்டு களிக்கும் வாய்ப்பை இறைவன் எமக்கு அளித்திருக்கிறார். ஆனால் நாமோ அந்த வாய்ப்பைப் பொருட்படுத்துவது கூட இல்லை. தீயவைகளில் மனதைச் செலுத்துவதிலேயே பெரும்பாலான காலத்தைப் போக்கிவிடுகிறோம். நல்லபல விடயங்களைப் பொறுத்தவரையிலே கண்ணிருந்தும் குருடராகி விடுகிறோம்.

ஆனால் மாறாக விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள் தொழில் நுட்பத்தையும் முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையையும் கொண்டு தமது வாழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். தாம் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை தினம் தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே? இது நாம் சிந்திக்க வேண்டிய தருணம்!
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்க கைது! ஏமாற்றி பணமோசடி செய்ததாக ஆசிரியை குற்றச்சாட்டு


ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டே பிரதேசத்தில் வைத்து நேற்றுப் பிற்பகல் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்ட இவர், கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, பத்து இலட்சம் ரூபா வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இரகசிய பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த ஆசிரியை தன்னிடம் பெற்ற பணத்தை தருமாறு திரும்ப திரும்ப கேட்ட போதெல்லாம் இவர் அந்த ஆசிரியையை ஏமாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட ஆசிரியையை ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தியதால், அந்த ஆசிரியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றில் வழக் குத் தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன் போது ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிமன்றில் முன்பிணை கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தி னால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறி ப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருவ தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பை தூய நகரமாக்குவதில் அரசியல் நோக்கம் கிடையாது ‘குடிசை வாழ் மக்கள் உரிய இடங்களில் குடியேற்றப்படுவர்’


‘கொழும்பு நகரில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய சூழலில் வீட்டு வசதி அளிக்கப்படும். கொழும்பு நகரை தூய்மையான அழகிய நகரமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். கொழும்பிலுள்ள குடிசை வீடுகளை அகற்றுவதில் எதுவித அரசியல் நோக்கமும் கிடையாது’ என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (14) அரசாங்க தகவல் திணைக் களத்தில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள சுமார் 65 ஆயிரம் குடிசை வீடுகளை அகற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களை அரசாங்கம் வெளியேற்றப்போவதாக எதிர்க் கட்சிகள் தவறான பிரசாரம் முன்னெடுக்கின்றன. சுகாதாரமற்ற பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளுடன் கூடிய பொருத்தமான பகுதிகளில் குடியமர்த்தவே திட்டமிட்டுள்ளோம்.

அவர்களை எங்கு குடியேற்றுவது என்பது குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையே தீர்மானிக்கும். இவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது.

ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக கொழும்பு நகரம் மேலும் அழகுபடுத்தப்படும்.

கொழும்பு மாநகர சபையை ஐ. தே. க. நீண்ட காலம் ஆட்சி புரிந்த போதும் குடிசை மக்களின் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கொழும்பு நகரில் ஐ. தே. க. வுக்குள்ள பலத்தை குறைக்க மக்கள் அகற்றப்பட இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஐ. தே. க.வுக்கு எதுவித அதிகாரமும் இன்று இல்லை என்றார்.

வரவு செலவுத் திட்டம்

2011 வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டின் எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் கருத்திற் கொண்டதாக வரவு செலவுத் திட்டம் அமைக்கப்படும். அமைதியான சூழ்நிலையிலே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட உள்ளது என்றார்.

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து கூறிய அவர், இதற்கு முன்னரும் பல இராணுவ வீரர்களுக்கு இராணுவ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. சட்டத்தின் முன் சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி அனைவரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர். இராணுவ நீதிமன்றமும் ஏனைய நீதிமன்றங்கள் போன்றதே’ என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்களை பலாத்காரமாக அழைத்துச் செல்ல முயற்சி பேராதனை பல்கலையில் பதற்றம்

கொழும்பில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்களை பலாத்காரமாகக் கூட்டிச்செல்ல முயன்ற மாணவர்களுக்கும், விரிவுரை யாளருக்குமிடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக நேற்று மூன்று மணித் தியாலங்கள் பல்கலைக்கழக சூழலில் பதற்றம் நிலவியது.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் விஞ்ஞான பீடத்துக்கு வந்து அங்கு விரிவுரைக்காக வருகை தந்த மாணவர்களை கொழுப்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாடத்துக்காக அழைத்துச் செல்ல முயன்ற பொழுது அதனை தடுக்க முயன்ற விஞ்ஞான பீட விரிவுரையாளர் கலாநிதி ஜகட் குணதிலக்காவுக்கும் மாணவர் களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் காரணமாக விஞ்ஞான பீட உத்தியோகஸ்தர்கள் பொறியியல் பீட மாதவன் ஒருவரை பிடிக்க முயன்ற பொழுது மாணவன் ஓடித் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் தப்பியோடியவர் பிடிபடும்வரை வேறு பொறியியல்பீட மாணவன் ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டனர்.

இதனாலேயே இந்த பதற்றம் ஏற்பட்டது. தப்பிச் சென்ற மாணவன் பிடிபடாவிட்டால் இந்த மாணவனைப் பொலிஸில் ஒப்ப டைப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...